என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து உழைக்க, மத்திய அரசு கட்டுப்பட்டுள்ளது.
    • தமிழுக்காகவும், எங்களது உரிமைகளுக்காகவும் போராடுவது உங்களுக்கு ஏளனத்திற்கு உரியதாக தோன்றுகிறதா?

    சென்னையில் நடைபெற்ற விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், 

    தமிழகத்தில் இருந்து வரிப்பணம் அதிகம் தருகிறோம். ஒரு ரூபாய் தந்தால், 7 பைசா தான் திரும்புகிறது என்கின்றனர். மற்ற சலுகைகள் எல்லாம் எங்கிருந்து வருகிறது. அனைத்துக்கும் முக்கியத்துவம் தந்து வருகிறோம். ஜனரஞ்சகமாக இவர்கள் விவாதிப்பதே தப்பு என்று கூறி உள்ளார்.

    இதற்கு பதிலடியாக தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    நீங்கள் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் ஏளனம் செய்வதைத்தான் இத்தனை காலமாய் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். வரலாற்றில் தமிழ் மக்களை பழித்தவர்களின் நிலை என்ன என்பதை அம்மையார் நிர்மலா சீதாராமன் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழுக்காகவும், எங்களது உரிமைகளுக்காகவும் போராடுவது உங்களுக்கு ஏளனத்திற்கு உரியதாக தோன்றுகிறதா?

    தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் மறுபடியும் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்!

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • தேசிய கல்வி கொள்கை திட்டத்தில் எந்த இடத்திலும் இந்தி கற்க வேண்டும் என்று இல்லை.
    • தனியார் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் வசதிகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் அரசியல் ஆதாயம தேடுவதற்காக தி.மு.க. மக்களின் உணர்வுகளை தூண்டி விடும் செயல்களில் இறங்கி உள்ளது. பி.எம். ஸ்ரீ திட்டத்தை ஒப்புக்கொண்டு பின்பு கையெழுத்து போட மாட்டோம் என்கிறார்கள். தேசிய கல்வி கொள்கை திட்டத்தில் எந்த இடத்திலும் இந்தி கற்க வேண்டும் என்று இல்லை.

    தாய் வழிக்கல்வியை தான் அது ஊக்குவிக்கிறது. அமித்ஷா கூட, மருத்துவ, என்ஜினீயரிங் படிப்புகளை தமிழ்மொழியில் கற்பிக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் இந்த விவகாரத்தை தி.மு.க. வணிக நோக்கத்தில் அணுகுகிறது. உண்மையில் அவர்களுக்கு தமிழ் மொழி மீது அக்கறை இல்லை.

    இவர்கள் மொழி பிரச்சனையை கிளப்புவதற்கு மற்றொரு காரணம், இந்தியா கூட்டணி உடைந்து விட்டது. உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், பீகார் என பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் தலைமையை ஏற்கவில்லை. கேரளாவும், காங்கிரசை தோற்கடிக்க கங்கணம் கட்டி கொண்டு இருக்கிறது.

    பி.எம். ஸ்ரீ திட்டத்தை அனைத்து மாநிலங்களும் அதனை ஏற்று கொண்டு விட்டார்கள். தமிழகம் மட்டும் தான் ஏற்றுக்கொள்ளவில்லை. தனியார் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் வசதிகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும்.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்து விட்டது. டெல்லி நிர்பயா, மேற்கு வங்காளத்தில் ஒரு மருத்துவ மாணவி கொலை ஆகியவை இந்தியா முழுவதும் பேசப்பட்டது. ஆனால் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சம்பவம், இங்கேயே அடக்கப்பட்டு, வெளியில் செல்லாமல் தடுக்கப்பட்டது.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்? உங்கள் கட்சியை சேர்ந்தவர் தானா என்பதனை சொல்ல வேண்டும். போதை பொருளில் முக்கிய நபர் சிக்கி உள்ளார். அதேபோல் டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்து உள்ளது. நிச்சயம் நான் சொல்கிறேன், தமிழகத்தில் மத்திய ஏஜென்சிகள் நடத்தும் வழக்குகளில் நிச்சயம் நடவடிக்கை இருக்கும்.

    இப்போது தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனையை கிளப்பி கொண்டு இருக்கிறார்கள். ஏற்கனவே பிரதமர் மோடி யாருக்கும் எந்த பாதிப்பும் வராது என்று தெரிவித்துவிட்டார். ஆனால் இவர்கள் வேண்டும் என்றே, பிரச்சனையை கிளப்புகிறார்கள். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தென்மாநிலங்கள் பாதிக்கும், வடமாநிலங்கள் பலன் அடைய தானே செய்யும் என்று கேட்கிறீர்கள்.

    மக்கள்தொகை மட்டும் அடிப்படை இல்லை என்பதனை தெளிவாக சொல்கிறேன். அப்படி செய்தால் லடாக் போன்று சிறு சிறு பகுதிகளுக்கு எம்..பி.க்கள். இருக்காது. தொகுதி மறுசீரமைப்புக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதன்பின் ஒரு தன்னதிகாரம் பெற்ற குழு அமைக்கப்பட்டு, அவர்கள் ஒவ்வொரு மாநிலமாக சென்று அதன்பின்தான் தொகுதி வரையறையை மேற்கொள்வார்கள். 2026-ம் ஆண்டுக்கு இந்த பணி முடிய சாத்தியமில்லை. எனவே 2026-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு காலக்கெடு முடிந்தாலும், தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படாது.

    ஏற்கனவே ராகுல்காந்தி, மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தொகுதி பிரிக்கப்படும் என்று பிரசாரம் செய்தார். இப்போது இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு இருப்பது வெடகக்கேடானது. இங்கு வந்திருக்கும் கேரள முதல்-மந்திரியிடம் முல்லைப்பெரியாறு நீர் குறித்து கேட்கலாம் அல்லவா? கர்நாடக துணை முதல்-மந்திரியிடம் காவிரி நீர் கேட்கலாம் அல்லவா? அதேபோல் எல்லோரிடமும் நீங்கள் கல்விக்கொள்கையை ஏற்று கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்கலாம்.

    இந்தியாவிலேயே தமிழகம் மட்டும் அரசியல் ஆதாயத்திற்காக மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடுகிறது. வங்கிகளில் தங்க கடனை திருப்பி விட்டு, பின்பு மீண்டும் தான் வைக்க வேண்டும் என்ற திட்டத்தால் பலரும் பாதிக்கப்படுவதாக கேட்கிறீர்கள்?. இது வங்கிகளின் நலனுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது.

    அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டு இருக்கிறோம். எனவே விரைவில் தீர்வு கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தாம்பரத்தில் இருந்து வரும் 28-ந்தேதி மாலை புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 8 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.
    • திருச்சியில் இருந்து வரும் 29, 30, 31 ஆகிய தேதிகளில் காலை புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில், அதேநாள் மதியம் தாம்பரம் வந்தடையும்.

    சென்னை:

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் தாம்பரம்-கன்னியாகுமரி, திருச்சி-தாம்பரம், இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    * தாம்பரத்தில் இருந்து வரும் 28-ந்தேதி மாலை 6 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06037), மறுநாள் காலை 8 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து வரும் 31-ந்தேதி இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06038), மறுநாள் காலை 8.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    * திருச்சியில் இருந்து வரும் 29, 30, 31 ஆகிய தேதிகளில் காலை 5.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06048), அதேநாள் மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து வரும் 29,30,31 ஆகிய தேதிகளில் மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும் சிறப்பு ரெயில் (06047), அதேநாள் இரவு 10.40 மணிக்கு திருச்சி சென்றடையும்.

    இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விருத்தாச்சலத்தில் ரெயில் பயணிகளிடம் நகை பறித்த சம்பவத்தில் சக்திவேல் போலீசாரிடம் சிக்கினார்.
    • 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைதாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    திண்டுக்கல்:

    மதுரை பொன்மேனி பகுதியை சேர்ந்தவர் சங்கரி. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இருந்து மதுரைக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றார். அப்போது திண்டுக்கல்லை அடுத்த அம்பாத்துரை பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற்றது. இதனால் ரெயில் அந்த பகுதியில் மெதுவாக சென்றது. அதை பயன்படுத்திக் கொண்ட ஒரு வாலிபர் சங்கரி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றார். உடனே சுதாரித்து கொண்ட சங்கரி சங்கிலியை பிடித்து கொண்டு சத்தம் போட்டார்.

    இருந்த போதும் பாதி அறுந்த சங்கிலியுடன் அந்த வாலிபர் ரெயிலில் இருந்து குதித்து தப்பியோடிவிட்டார். அதேபோல் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த செல்வி (வயது 55) 3 ஆண்டுகளுக்கு முன்பு வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் மதுரைக்கு சென்றார். அந்த ரெயில் அம்பாதுரை அருகே மெதுவாக சென்றபோது அவர் அணிந்து இருந்த 6 பவுன் சங்கிலியை ஒரு வாலிபர் பறித்து கொண்டு தப்பி சென்றார். இந்த சம்பவங்கள் தொடர்பாக இருவரும் கொடுத்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    இந்த 2 சம்பவங்களிலும் ஒரே நபர் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் அரியலூர் மாவட்டம் செந்துறையை சேர்ந்த சக்திவேல் பயணிகளிடம் நகை பறித்தது தெரியவந்தது. எனவே அவரை போலீசார் தேடிவந்தனர்.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விருத்தாச்சலத்தில் ரெயில் பயணிகளிடம் நகை பறித்த சம்பவத்தில் சக்திவேல் போலீசாரிடம் சிக்கினார். பின்னர் அவர் அரியலூர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் தலைமறைவானார். இதையடுத்து திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் அருணோதயம் ஆகியோர் சக்திவேலை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர் மீண்டும் அரியலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.இதன் மூலம் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைதாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • கடற்கரை-வேளச்சேரி வழித்தடத்தில் 3 சிறப்பு இரவு நேர மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது.
    • வேளச்சேரியில் இருந்து மேற்கண்ட தேதிகளில் இரவு 10.55 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இரவு 11.25 மணிக்கு சேப்பாக்கம் வந்தடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை), 28, ஏப்ரல் 11, 25, 30, மே 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை காண செல்லும் ரசிகர்களின் வசதிக்காக சென்னை கடற்கரை-வேளச்சேரி வழித்தடத்தில் 3 சிறப்பு இரவு நேர மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * சென்னை கடற்கரையில் இருந்து மேற்கண்ட தேதிகளில் இரவு 10 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இரவு 10.10 மணிக்கு சேப்பாக்கம் சென்றடையும். அங்கிருந்து புறப்பட்டு இரவு 10.45 மணிக்கு வேளச்சேரி சென்றடையும்.

    * வேளச்சேரியில் இருந்து மேற்கண்ட தேதிகளில் இரவு 10.55 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இரவு 11.25 மணிக்கு சேப்பாக்கம் வந்தடையும். அங்கிருந்து புறப்பட்டு இரவு 11.45 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும்.

    * சென்னை சேப்பாக்கத்தில் இருந்து மேற்கண்ட தேதிகளில் இரவு 11.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இரவு 12.05 மணிக்கு வேளச்சேரி சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பள்ளி மாணவர்கள் பாடம் படிக்கும்போது போக்குவரத்து தலைப்பில் ரெயில் மற்றும் விமானங்கள் பற்றி வந்திருந்தது.
    • பிள்ளைகள் நாங்கள் விமானத்தில் போக முடியுமா? ரெயிலில் போக முடியுமா? என கேள்வி எழுப்பினார்கள்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அருகே உள்ள பண்டாரம் பட்டியில் செயல்பட்டு வரும் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல அறக்கட்டளை பெயரில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ், பள்ளிக்கு தனது சொந்த செலவில் கட்டிடம் மற்றும் கணினி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செய்து இருந்த நிலையில், பள்ளியில் போக்குவரத்து பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருக்கும்போது ஒரு மாணவன் தலைக்கு மேலே பறக்கக்கூடிய விமானத்தில் நாம் என்று பறப்போமோ என்று ஆதங்கத்தோடு கேட்டுள்ளார்.

    அது மட்டுமல்லாமல் சொந்த ஊர் அருகே ரெயில்வே நிலையம் இருக்கிறது. ஆனால் ரெயிலில் கூட பயணித்ததில்லை எனக் கூறிய மாணவ-மாணவர்களின் ஆசையை நிறைவேற்றுவதற்கு முடிவு செய்தார் தலைமை ஆசிரியர் பொன்ராஜ்.

    மாணவர்களிடம் தன் சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் செல்வதாக கூறிய தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் 3 மாதங்களுக்கு முன்பே தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு முன்பதிவு செய்து அதன்படி இன்று காலை 18 மாணவ-மாணவிகளை விமானத்தில் அழைத்துச் சென்று சென்னையில் வண்டலூர் பூங்கா மற்றும் மெட்ரோ ரெயில் பூண்டவட்டில் அழைத்துச் சென்று பார்வையிட உள்ளனர். நாளை மாலை சென்னையில் இருந்து முத்துநகர் ரெயில் மூலம் தூத்துக்குடிக்கு வருகை தர இருக்கின்றனர்.

    மிகவும் வறுமையில் இருக்கக்கூடிய நிலையில் நாங்கள் விமானத்தில் பறப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறும் மாணவர்கள் எங்களால் விமானத்தில் பணம் கொடுத்து பயணம் செய்ய முடியாத நிலையில் எங்கள் ஆசிரியர் அவரது சொந்த செலவில் சென்னைக்கு அழைத்துச் சென்று உயிரியல் பூங்காக்களை பார்வையிட வைப்பது ரெயிலில் அழைத்துச் செல்வது போன்ற விஷயங்கள் தங்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்திருப்பதாகவும் நல்லாசிரியர் பொன்ராஜ்க்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் உருக்கமாக மாணவர்கள் கூறினர்.

    இதுகுறித்து தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் கூறுகையில், 2014-ம் ஆண்டு முதல் பண்டாரம் பட்டிக்கு தலைமை ஆசிரியராக பணியாற்றி வருவதாகவும், ஒவ்வொரு ஆண்டும் பாடம் சம்பந்தமாக மாணவர்களை எனது சொந்த செலவில் அழைத்துச் செல்வது வழக்கம், பள்ளி மாணவர்கள் பாடம் படிக்கும்போது போக்குவரத்து தலைப்பில் ரெயில் மற்றும் விமானங்கள் பற்றி வந்திருந்தது. பிள்ளைகள் நாங்கள் விமானத்தில் போக முடியுமா? ரெயிலில் போக முடியுமா? என கேள்வி எழுப்பினார்கள்.

    அது எனது மிகுந்த கஷ்டமாக இருந்தது. தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து 17 மாணவ-மாணவிகள் மற்றும் இரண்டு பெற்றோர்கள், தான் உட்பட 20 பேர் செல்கிறோம். இதற்கு சுமார் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் செலவு ஆகிறது என்றார். மேலும் மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது தனக்கு சந்தோஷமாக இருப்பதாக தெரிவித்தார்.

    • பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • காரை சாலையின் குறுக்கே நிறுத்தி மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வைக்கப்பட்ட பேனரை மர்மநபர்கள் கிழித்ததால் ஆத்திரமடைந்த அக்கட்சியினர் சாலையின் குறுக்கே காரை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காரை சாலையின் குறுக்கே நிறுத்தி வைத்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைவிட்டனர்.

    • துணை முதலமைச்சர் வருகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
    • 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    கோவை:

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாளை கோவை வருகிறார்.

    இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலமாக நாளை காலை 11 மணிக்கு கோவைக்கு வருகை தருகிறார்.

    கோவை விமான நிலையத்தில் அவருக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் அ.ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் தலைமையில் பல்லாயிரக்கணக்கான நிர்வாகிகள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    அதனை தொடர்ந்து அவர் கார் மூலமாக வடகோவையில் உள்ள தமிழ்நாடு வனக்கல்லூரிக்கு செல்கிறார்.

    அங்கு நடைபெறும் வனப்படை நவீனமயமாக்கல் மற்றும் ஆயுதங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்கும் அவர், வனக்காவலர்களுக்கு ஆயுதங்கள் வழங்குகிறார்.

    பின்னர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறுமுகை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பெத்திக்குட்டையில் ரூ.19.50 கோடி மதிப்பில் 20 ஹெக்டேர் பரப்பளவில் அதிநவீன வசதியுடன் கட்டப்பட்டுள்ள வன உயிரின மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தையும் திறந்து வைக்க உள்ளார்.

    அதனை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாக விளையாட்டு மைதானத்தில் ரூ.9.67 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் செயற்கை புல்வெளி தளத்துடன் அமைய உள்ள ஆக்கி மைதானத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    அத்துடன் கோவை மாவட்டத்தில் ரூ.38.08 கோடி மதிப்பில் 69 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, ரூ.61.15 கோடி மதிப்பில் 140 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அங்கு நடைபெறும் விழாவில் பங்கேற்று 40 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி, சுற்றுச்சூழல் மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர், கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், வனத்துறை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், வன உயிரின காப்பாளர், கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

    கோவையில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொள்ளும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை மாலை கோவை விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலமாக சென்னை புறப்பட்டு செல்கிறார்.

    ஆக்கி மைதானத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவையொட்டி ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மைதானத்தை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

    விழாவில் கோவை மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள், நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். இதற்காக விழா நடைபெறும் இடத்தில் மேடை அமைக்கும் பணி மற்றும் பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கைகள் போடும் பணியும் நடந்து வருகிறது. அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.

    துணை முதலமைச்சர் வருகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    • கூட்டுக்குழுவில் பங்கேற்று பேசிய அனைவரின் குரலும் ஒத்த கருத்துடையதாகவே இருந்தது.
    • அந்தந்த மாநிலங்களில் உள்ள கட்சிகளை அழைத்து அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட தீர்மானம் நிறைவேற்றம்.

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நிறைவடைந்தது.

    இதையடுத்து தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் அனைவரும் ஒத்தக்கருத்தை முன்வைத்துள்ளனர்.

    * கூட்டுக்குழுவில் பங்கேற்று பேசிய அனைவரின் குரலும் ஒத்த கருத்துடையதாகவே இருந்தது.

    * கூட்டு நடவடிக்கை குழுவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரவேற்பு கிடைத்துள்ளது.

    * முதலமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையறையை 25 ஆண்டுக்கு ஒத்திவைக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றம்.

    * 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக பாராளுமன்றத்தில் பிரதமர் மோடியே அறிவிக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றம்.

    * பாராளுமன்ற எம்.பி.க்கள் எண்ணிக்கை தற்போதைய நிலையிலேயே தொடர வேண்டும்.

    * அந்தந்த மாநிலங்களில் உள்ள கட்சிகளை அழைத்து அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட தீர்மானம் நிறைவேற்றம்.

    * தொகுதி மறுசீரமைப்பிற்கு பின்னர் தான் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிலுவைக்கு வரும்.

    * பாராளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை விரைவில் நடக்கும் என்று மத்திய அரசு கூறி உள்ளது.

    * தெளிவை ஏற்படுத்தாமல் குழப்பத்தை ஏற்படுத்துவதாக மத்திய அரசின் அறிவிப்பு உள்ளது.

    * அழைப்பு விடுத்ததில் திரிணாமுல் காங்கிரஸ் மட்டும் நேரில் பங்கேற்க முடியவில்லை, மற்ற அனைவரும் பங்கேற்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தொகுதி மறுசீரமைப்பு என்பது ஏற்கனவே கூறியது போல அது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி.
    • தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை கோவைக்கு வருகிறார்.

    கோவை:

    கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் போதுமான அளவு மின்சாரம் இருப்பு உள்ளது. புதிதாக 7000 தெர்மல் பிளான்ட் மூலம் மின்சாரம் உற்பத்தி, 14 ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி, 2000 பேட்டரி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. 2030-ம் ஆண்டு வரை பிரச்சனை இருக்காது.

    எங்காவது ஒரு சில இடங்களில் பழுது உள்ளிட்ட சில காரணங்களால் ஏற்பட்ட மின்தடை உடனே சரி செய்யப்பட்டு இருக்கும்.

    பொதுமக்கள் இதுகுறித்து உடனே புகார் கூறினால் மின்சார வாரிய ஊழியர்கள் வந்து நடவடிக்கை எடுத்து சரி செய்வார்கள். இதற்காக மின்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    சிலர் இந்த அரசு குறித்து ஏதையாவது தெரிவித்து, இவர்கள் கீழே விழமாட்டார்களா? என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அது நடக்காது. தமிழ்நாட்டில் மின்சாரம் தட்டுப்பாடு கிடையாது.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்காக புதிய திட்டங்களை செயல்படுத்த தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முதலமைச்சர் எடுத்து வரும் சீரிய திட்டங்களால் தமிழகம் விரைவில் மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாறும்.

    தொகுதி மறுசீரமைப்பு என்பது ஏற்கனவே கூறியது போல அது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி. இதை வெல்ல தமிழக முதலமைச்சர் மாநில முதல்-மந்திரிகள், அனைத்து கட்சி தலைவர்களுடனும் ஆலோசனை நடத்துகிறார். இதிலும் வெற்றி பெறுவோம்.

    மதுவிலக்கு பொறுத்தவரை ஒரு தலைவர் 2023-ம் ஆண்டில் கூறிய கருத்தையும், இப்போது அவர் கூறிய கருத்தையும் நாம் பார்த்து வருகிறோம். அடிக்கடி பேச்சை மாற்றிக் கொள்ளக் கூடாது.

    இன்று நடைபெறும் போராட்டம் குறித்து கேட்கிறீர்கள். கோமாளிகள் செயல்களுக்கு நான் பதில் கூற முடியாது. அரசு நிகழ்ச்சி இதில் அரசியல் பேச வேண்டாம்.

    தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை கோவைக்கு வருகிறார். கோவை வனத்துறை கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.108 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை தொடங்கி வைக்கிறார். ரூ.67 கோடி மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 39 ஆயிரத்து 494 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது கலெக்டர் பவன் குமார், மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிச்செல்வன், மற்றும் அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கூட்டாட்சி என்பது பரிசு அல்ல, உரிமை என்பதை மத்திய அரசுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
    • இந்த அநீதிக்கு எதிராகத் தென் மாநிலங்கள் குரல் கொடுக்காவிட்டால், வரலாறு நம்மை மன்னிக்காது.

    சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது

    தெலங்கானாவின் பி.ஆர்.எஸ். கட்சி சார்பில் அம்மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ராமாராவ்இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    * மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை, நமது மாநிலங்களுக்கான நிதி ஆதாரத்தைப் பெரிதும் பாதிக்கும்.

    * இந்த அநீதிக்கு எதிராகத் தென் மாநிலங்கள் குரல் கொடுக்காவிட்டால், வரலாறு நம்மை மன்னிக்காது.

    * கூட்டாட்சி என்பது பரிசு அல்ல, உரிமை என்பதை மத்திய அரசுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

    * தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மாநிலங்களின் குரலுக்கு செவிசாய்க்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க கூடாது.

    * உரிமைகளைக் காக்க போராடுவதற்கான இன்ஸ்பிரேசன் தான் தமிழ்நாடு

    * இந்த கூட்டத்தை நடத்தியதற்காக தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    என்று கூறினார். 

    • நிகழ்ச்சியில் 450-க்கும் மேற்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் பங்கேற்றனர்.
    • அழுக்கடைந்த கீறல் விழுந்த குடிநீர் கேன்களை பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டாம்.

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான உணர்திறன் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்ற இந்த மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி டாக்டர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் 450-க்கும் மேற்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் பங்கேற்றனர். அப்போது, அவர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் வழங்கப்பட்டன.

    குறிப்பாக, ஒரு குடிநீர் கேனை 50 முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. அழுக்கடைந்த கீறல் விழுந்த குடிநீர் கேன்களை பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதுமட்டுமன்றி நேரடியாக சூரிய ஒளியில் வைக்கப்பட்டு இருக்கும் குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் குடிநீரின் தரத்தை உறுதி செய்வது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டது.

    சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் செயல்படும் 450 குடிநீர் உற்பத்தி நிறுவனங்களில் அடுத்து வரும் வாரங்களில் ஆய்வு செய்ய இருப்பதாகவும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×