என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தமிழக வெற்றிக் கழக முதல் பொதுக்குழுக் கூட்டத்தில் உண்மைக்கு புறம்பாக மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
    • மாநில அரசு சொல்லும் அதே கருத்துகளை விஜய் பிரதிபலித்திருப்பது தான் மேலும் வேடிக்கை என்றார்.

    சென்னை:

    பா.ஜ.க. பிரமுகரும், நடிகருமான சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழக வெற்றிக் கழக முதல் பொதுக்குழுக் கூட்டத்தில் உண்மைக்கு புறம்பாக மத்திய அரசை விமர்சித்து விஜய் பேசியது வினோதமாகவும், வேடிக்கையாகவும் இருந்தன.

    பிரதமருக்கு தமிழகம் என்றால் அலர்ஜி, தமிழக ஜி.எஸ்.டி. வருவாயை வாங்கிக் கொண்டு பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதியே ஒதுக்குவதில்லை, இருமொழிக் கொள்கையில் உறுதி, வக்பு சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறவேண்டும், தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை என்று மாநில அரசு சொல்லும் அதே கருத்துகளை விஜய் பிரதிபலித்திருப்பது தான் மேலும் வேடிக்கை.

    ஆளுங்கட்சிக்கு சாதகமாக பேசுவதாக எண்ணி, மத்தியிலே நடந்துகொண்டிருக்கின்ற சிறந்த ஆட்சியை, ஒரு இந்திய குடிமகனாக பாரதத்தை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்லும் பாரத தலைவரை, உலகம் போற்றுகின்ற ஒரு சாதனை மனிதரை, சாதாரண மனிதராக எண்ணிக் கொண்டு கேலியாக பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.

    இனி வருங்காலங்களில் இவை அனைத்தும் தவிர்த்து அனைத்து தரவுகளையும் ஆராய்ந்து உண்மையான கருத்துகளைப் பேசி ஆக்கப்பூர்வமான, நாகரிகமான அரசியலில் விஜய் ஈடுபடுவார் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

    • இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிக்கு முன்னாள் இந்திய அணி கேப்டன் ஐ.எம்.விஜயன் கேப்டனாக இருந்தார்.
    • பிரேசில் லெஜண்ட்ஸ் அணிக்கு ரொனால்டினோ கேப்டனாக இருந்தார்.

    சென்னை:

    பிரேசில் லெஜண்ட்ஸ், இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிகள் இடையேயான நட்சத்திர கால்பந்து போட்டி சென்னை ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.

    இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிக்கு முன்னாள் இந்திய அணி கேப்டன் ஐ.எம்.விஜயனும், பிரேசில் லெஜண்ட்ஸ் அணிக்கு ரொனால்டினோவும் கேப்டன்களாக இருந்தனர்.

    போட்டியின் முடிவில் பிரேசில் லெஜண்ட்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தியது.

    இந்தப் போட்டியைக் காண திரண்டு வந்த கால்பந்து ரசிகர்கள் மைதானத்தில் தங்கள் ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.

    பிபா கால்பந்து உலகக் கோப்பையை பிரேசில் அணி 5 முறை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகத்தில் கீழக்கரை, காரைக்கால் போன்ற பகுதிகளில் பிறை பார்க்கப்பட்டது.
    • ஷவ்வால் பிறை 31/03/2025 (திங்கள் கிழமை) ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தினமாகும்.

    ரம்ஜான் பண்டிகை வானில் தோன்றும் பிறையின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று தமிழகத்தில் பிறை தென்பட்டதை தொடர்ந்து நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழகத்தில் ரமலான் மாத பிறை தேட வேண்டிய நாளான 30-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் கீழக்கரை, காரைக்கால் போன்ற பகுதிகளில் பிறை பார்க்கப்பட்டது.

    நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டுதல் அடிப்படையில் ரமலான் மாதம் நிறைவுபெற்று 30/03/2025 ஞாயிற்றுக்கிழமை மக்ரிபிலிருந்து ஹிஜ்ரி 1446 ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை ஆரம்பானது என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம். ஷவ்வால் பிறை 31/03/2025 (திங்கள் கிழமை) ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தினமாகும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • எல்பிஜி டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
    • பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் எல்.பி.ஜி. டேங்கர் லாரி ஸ்டிரைக் தொடரும் என அறிவிக்கப்பட்டது.

    நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு தென்மண்டல எல்.பி.ஜி.டேங்கர் உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, உள்பட பல்வேறு மாநிலங்களை உள்ளடக்கிய இந்த சங்கத்தில் சுமார் 1500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக சுமார் 6 ஆயிரம் டேங்கர் லாரிகள் வாடகைக்கு இயக்கப்பட்டு வருகின்றது.

    குறிப்பாக பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் இந்த லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. வருகிற ஆகஸ்ட் மாதத்துடன் பழைய ஒப்பந்த காலம் முடிவடைகிறது. அடுத்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் 2025-ம் ஆண்டு முதல் 2030-ம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்தம் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கான விதிமுறைகளை மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து இருந்தது.

    அதில் பல்வேறு விதிமுறைகள் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு பாதகமாக இருப்பதாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

    இது தொடர்பாக சங்க உறுப்பினர்களுடன் தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டங்களை நடத்தி ஆலோசனை மேற்கொண்டனர். அதை தொடர்ந்து எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சில விதிமுறைகளை தளர்த்துமாறு சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது குறித்து விரைவில் உரிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். ஆனால் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

    இதனால், எல்பிஜி டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    தொடர்ந்து, கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவையில் ஐ.ஓ.சி, பி.பி.சி, எச்.பி.சி.எல் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

    ஆனால், எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் எல்.பி.ஜி. டேங்கர் லாரி ஸ்டிரைக் தொடரும் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், தென் மாநிலங்கள் முழுவதும் கடந்த 5 நாட்களாக நீடித்து வந்த எல்பிஜி டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

    எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட ஒப்பந்தத்தில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றதால் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

    • நான் தெளிவாக இருக்கின்றேன். என்னால் யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது.
    • பாஜக வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.

    அதிமுக உடன் கூட்டணி இல்லை என தெளிவாக இருக்கிறேன் என்றும் அவ்வாறு இருப்பின் ராஜிமானா செய்வேன் என்று கூறினீர்களே என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    எனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. எப்போதும் பேச்சை மாற்றி பேசுபவன் நான் இல்லை. வருங்காலத்தில் என்னை பார்ப்பீர்கள், எதையும் மாற்றி பேச மாட்டேன்.

    நான் தெளிவாக இருக்கின்றேன். என்னால் யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது.

    பாஜக வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சகோதரத்துவம் குறித்து எடுத்துரைத்துள்ளதை அனைவரும் பின்பற்றி வாழ்ந்திட வேண்டும்.
    • 'தூய்மையும், பக்தியும் உள்ளதாய், பாவங்களற்ற தாய், பொறாமை, அத்துமீறல் இல்லாத இதயமே பரிசுத்தமான இதயம்'.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    'பசித்தவர்களுக்கு உணவளியுங்கள்; பிணியுற்றவரைச் சென்று பாருங்கள்; துன்புறுத்தப்பட்டவர்களுக்கு உதவி புரியுங்கள்; அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள்'' என்று, நபிகள் நாயகம் அவர்கள் இஸ்லாமியப் பெருமக்களுக்கு ஆழ்ந்த சகோதரத்துவம் குறித்து எடுத்துரைத்துள்ளதை அனைவரும் பின்பற்றி வாழ்ந்திட வேண்டும்.

    'தூய்மையும், பக்தியும் உள்ளதாய், பாவங்களற்ற தாய், பொறாமை, அத்துமீறல் இல்லாத இதயமே பரிசுத்தமான இதயம்' என்று நபிகள் நாயகம் உலகிற்குப் பறைசாற்றி உள்ளதை அனைவரும் நினைவில் கொண்டு, தங்கள் கடமைகளைச் செவ்வனே மேற்கொண்டு வாழ வேண்டும் எனத் தெரிவித்து, பிறை கண்டு பெருநாள் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்களின் வாழ்வு, என்றென்றும் வளர்பிறையாக ஒளிர வேண்டும் என்று மனதார வாழ்த்தி, இந்த இனிய திருநாளில் என் அன்பிற்கினிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில், இதயம் நிறைந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, முன்னாள் எம்.பி. சு.திரு நாவுக்கரசர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலை வர் காதர் மொய்தீன் ஆகி யோரும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    • மாணவர்கள் நிலையான நீர் மேலாண்மை, பாதுகாப்பு நுட்பங்கள் மற்றும் சமூகம் சார்ந்த முயற்சிகள் குறித்து கிராமவாசிகளுடன் விவாதித்தனர்.
    • நிலையான நீர் நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வையும் அர்ப்பணிப்பையும் வலுப்படுத்துவதற்கான ஒரு தளமாக கிராம சபை செயல்பட்டது.

    எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உன்னத் பாரத் அபியான் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை இணைந்து உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மார்ச் 29, 2025 (நேற்று) அன்று மேட்டுப்பாளையத்தில் உள்ள சமூக மண்டபத்தில் நீர்ப் பாதுகாப்பை ஊக்குவிக்கும் பொருட்டு மாணவர்களையும் உள்ளூர்வாசிகளையும் ஒன்றிணைத்து கிராம சபை கூட்டத்தை நடத்தின.

    மாணவர்கள் நிலையான நீர் மேலாண்மை, பாதுகாப்பு நுட்பங்கள் மற்றும் சமூகம் சார்ந்த முயற்சிகள் குறித்து கிராமவாசிகளுடன் விவாதித்தனர். 

    மழைநீர் சேகரிப்பு, திறமையான நீர்ப்பாசன முறைகள் மற்றும் நீர் வீணாவதைக் குறைத்தல் உள்ளிட்ட நீர்ப் பாதுகாப்பிற்கான நடைமுறை நடவடிக்கைகளை வலியுறுத்தினர்.

    நிலையான நீர் நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வையும் அர்ப்பணிப்பையும் வலுப்படுத்துவதற்கான ஒரு தளமாக கிராம சபை செயல்பட்டது.

    எதிர்கால சந்ததியினருக்கு நீர் வளங்களைப் பாதுகாக்க சமூகம் தலைமையிலான நடவடிக்கைகளின் அவசியத்தை இந்த நிகழ்வு வலுப்படுத்தியது.

    • திரைமறைவில் யாரையும் சந்தித்து பேச வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை.
    • பாஜகவில் தொண்டராக பணியாற்றிக் கூட தயாராக இருக்கிறேன்.

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    கூட்டணி குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை. கூட்டணி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதை இறுதி முடிவாக எடுத்து கொள்ளுங்கள்.

    தமிழகத்தில் 4-ல் ஒருவர் தான் முதல்வருக்கு ஆதரவாக உள்ளனர். பாஜகவில் தொண்டராக பணியாற்றிக் கூட தயாராக இருக்கிறேன்.

    தொண்டராக இருக்கிறேன் என்பதன் கருத்தை நீங்கள் புரி்நது கொள்ளுங்கள். பாஜகவின் வளர்ச்சியே முக்கியம், என்னுடைய தனிப்பட்ட வளர்ச்சி முக்கியமல்ல. என்னுடைய நிலைபாட்டில் எந்த மாற்றமும் இல்லை.

    திரைமறைவில் யாரையும் சந்தித்து பேச வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொண்டிருக்கிறேன். ஏப்ரல் 6ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரம் வருகிறார்.

    காங்கிரஸ் போல டெல்லியில் அமர்ந்து கொண்டு தமிழக அரசியலை பாஜக கட்டுப்படுத்தாது. 

    விஜய்க்கான பாதுகாப்பு வேறு, அரசியல் என்பது வேறு. விஜய், செங்கோட்டையனுக்கு 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதில் அரசியல் காரணம் இல்லை.

    'Y' பிரிவு பாதுகாப்பு- பாஜகவுக்கு, விஜய், செங்கோட்டையனுக்கும் இடையே எந்த உறவும் இல்லை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஓரிரு இடங்களில் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கும் வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளது.
    • ஒட்டுமொத்த தமிழகத்திலுமே மழை பொழிவை எதிர்பார்க்கலாம்.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. தென் மாவட்டங்களில் கோடை மழை வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுத்தியுள்ள போதிலும் சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் அடுத்த 3 நாட்களும் கோடை வெயில் வாட்டி எடுக்கும் என்றும் அதன் பின்னர் 2 வாரங்களுக்கு கோடை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வாளரான டெல்டா ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

    நேற்று அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 40 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி உள்ளது. சேலத்தில் 39.8 டிகிரி செல்சியசும், வேலூரில் 39.7 டிகிரி செல்சியசும், ஈரோடடில் 39.6 டிகிரி செல்சியசும், சென்னை மீனம்பாக்கத்தில் 39.2 டிகிரி செல்சியசும், கரூர், பரமத்தி, தர்மபுரி பகுதிகளில் 39 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாகியுள்ளது.

    தமிழகத்தில் எந்த பகுதியிலும் நேற்று மழை பெய்யவில்லை.

    இன்று முதல் 3 நாட்களுக்கு (ஏப்ரல் 2-ந்தேதி வரையில்) கடலோர மாவட்டங்களில் 34 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளது.

    வேலூர், திருப்பத்தூர், கரூர், சேலம், தர்மபுரி, ஈரோடு போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கும் வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளது.

    ஏப்ரல் 3-ந்தேதி முதல் கோடை வெப்பச்சலன மழை படிப்படியாக மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் என ஒட்டுமொத்த தமிழகத்திலுமே மழை பொழிவை எதிர்பார்க்கலாம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • விஜய்யின் பேச்சில் தெளிவற்ற தன்மைதான் உள்ளது.
    • செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது ஏன் என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும்தான் போட்டி என்று பேசுகிறார். எதுகை மோனையில் வேண்டுமானால் அது சரியாக இருக்கலாம். ஆனால் நீங்கள் எதிரில் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

    எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கட்சியில் அடிப்படையிலேயே மிக தீவிரமாக மக்கள் பணியாற்றி முன்னுக்கு வந்தனர்.

    விஜய் முதலில் தி.மு.க.வுக்கான எதிர்ப்பை தீவிரப்படுத்த வேண்டும். அந்த காலத்து நடிகர்களின் படங்கள் தமிழ்நாட்டுக்குள்ளேயே இருந்தது. ஆனால் இன்று விஜய் படம் தெலுங்கானாவில் ஓஹோவென்று ஓடுகிறது. உங்களுக்கு பல மொழிகள் தேவைப்படும் போது குழந்தைகளுக்கும் இணைப்பு மொழி தேவைப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

    உங்கள் படத்திற்கு பல மொழிகள் வேண்டும். பாடத்திற்கு பல மொழிகள் வேண்டாம் என்று சொன்னால் எப்படி? விஜய்யின் பேச்சில் தெளிவற்ற தன்மைதான் உள்ளது.

    எங்களை தி.மு.க.வின் பி அணி என்று விஜய் சொல்கிறார். தி.மு.க. சொல்வதைத்தான் நீங்களும் சொல்கிறீர்கள். நீங்கள்தான் தி.மு.க.வின் பி அணி.

    பரந்தூர் விமான நிலையம் வேண்டாம் என்று விஜய் சொல்கிறார். உங்களுக்கு பனையூர் வேண்டும். நீங்கள் சாலிகிராமத்தில் எனது வீட்டு அருகில் தான் சிறிய வீட்டில் இருந்தீர்கள். உங்கள் வாழ்க்கை விரிவடைய விரிவடைய உங்களுக்கு பனையூர் தேவைப்படுகிறது. அப்படியென்றால் தமிழக மக்களின் வாழ்க்கை விரிவடைய விரிவடைய பரந்தூர் தேவைப்படுகிறது. தமிழக அரசு கொடுக்கும் இடத்தில்தான் மத்திய அரசு விமான நிலையம் அமைக்கும்.

    பிரதமர் மோடியை எதிர்த்து பேசும் தைரியும் இருப்பதாக கூறும் விஜய் தனது தயாரிப்பாளரை எதிர்த்து பேசி இருப்பாரா? உங்களுடைய டைரக்டரை எதிர்த்து பேசி இருப்பீர்களா?

    விஜய் இன்னும் கொஞ்சம் அழுத்தமாகவும், ஆழமாகவும் அரசியலை கற்றுக் கொண்டு பேச வேண்டும். செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது ஏன் என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 1 முதல் 5ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 9-ந்தேதி இறுதித்தேர்வு தொடங்கி 21-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
    • பெற்றோரின் வேண்டுகோளை அடுத்து முதலமைச்சர் உத்தரவின் பேரில் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெப்பம் சுட்டெரிப்பதால் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கான இறுதித்தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, ஏப்ரல் 9-ந்தேதி தொடங்குவதாக இருந்த இறுதித்தேர்வு முன்கூட்டியே ஏப்ரல் 7-ந்தேதி தொடங்குகிறது. தற்போது இறுதித்தேர்வை ஏப்ரல் 7-ந்தேதி தொடங்கி 17-ந்தேதி வரை நடத்தி முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெற்றோரின் வேண்டுகோளை அடுத்து முதலமைச்சர் உத்தரவின் பேரில் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    முன்னதாக 1 முதல் 5ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 9-ந்தேதி இறுதித்தேர்வு தொடங்கி 21-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • பாராளுமன்ற தேர்தலின் போது கூட்டணி முறிவால் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த தலைவர்கள் மாறி மாறி விமர்சித்துக் கொண்டனர்.
    • சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோற்பதற்கு முக்கிய காரணமாகி விட்டது என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பலர் தெரிவித்தனர்.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. தி.மு.க. கூட்டணியை வீழ்த்தி ஆட்சியில் அமர வேண்டும் என்பதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். இதற்காக பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி அமைப்பதற்கு அ.தி.மு.க. திட்டமிட்டு உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி. இது தமிழகத்தின் நலன்களை காப்பதற்கான சந்திப்பு என்றும் கூட்டணி பற்றி எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

    ஆனால் மத்திய மந்திரி அமித்ஷாவோ தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக வெளிப்படையாக அறிவித்து விட்டார். இதன் மூலம் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து, தேர்தலை சந்தித்த அ.தி.மு.க. பாராளுமன்ற தேர்தலின் போது கூட்டணியில் இருந்து வெளியேறியது. இதன் காரணமாக 2 கட்சிகளுமே தனித் தனி அணியை உருவாக்கி போட்டியிட்டு தோல்வியையே தழுவின. அது போன்ற நிலை அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் 2 கட்சி தலைவர்களும் உறுதியோடு உள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலின் போது கூட்டணி முறிவால் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த தலைவர்கள் மாறி மாறி விமர்சித்துக் கொண்டனர். பா.ஜ.க.வால் தான் சிறுபான்மையினர் ஓட்டுகளை பெற முடியாமல் போய் விட்டது. அதுவே சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோற்பதற்கு முக்கிய காரணமாகி விட்டது என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பலர் தெரிவித்தனர்.

    இதற்கு பா.ஜ.க. தலைவர்களும் பதிலடி கொடுத்திருந்தனர். இது போன்ற காரணங்களால் 2 கட்சி தலைவர்களிடையே மனக்கசப்பும் ஏற்பட்டது. தற்போது மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதால் அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே இணக்கமான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதே 2 கட்சிகளின் விருப்பமாக உள்ளது.

    இதற்காக தமிழக பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என டெல்லி பா.ஜ.க. தலைமை அறிவுறுத்தி உள்ளது. இதன்படி 2 கட்சிகளை சேர்ந்தவர்களும் கூட்டணி விஷயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்கக் கூடாது எனவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து முதல்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி உள்ளநிலையில் அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளையும் சுமூகமாக நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர்களிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதால் அதற்கான சூழலை உருவாக்குவதில் தமிழக தலைவர்கள் தீவிரமாக செயலாற்ற வேண்டும் என்றும் டெல்லி பா.ஜ.க. தலைமை தெரிவித்துள்ளது.

    இப்படி அ.தி.மு.க.-பா.ஜ.க. தலைவர்கள் இடையே இணக்கமான சூழலை உருவாக்கி விட்டு அதன் பிறகே 2-வது கட்ட கூட்டணி பேச்சுவார்த் தையை நேரடியாக நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளும் இடம்பெறும் பட்சத்தில் அது வலிமையான கூட்டணியாக நிச்சயம் மாறும் என்றே அ.தி.மு.க., பா.ஜ.க. தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    இப்படி அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரப்படுத்தப்பட்டு இருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    ×