என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கடந்த 30-ந் தேதி வித்யா என்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
    • மர்ம மரணம் குறித்து காவல் நிலையத்தில் பெண்ணின் காதலன் புகார் செய்துள்ளார்.

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் என்ற கிராமத்தில் கடந்த மார்ச் 30-ந் தேதி தூங்கி கொண்டிருந்த வித்யா என்ற பெண் தலையில் பீரோ விழுந்ததாக கூறப்படுகிறது. அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ் உதவியை நாடியுள்ளனர். அதில் இருந்த மருத்துவர்கள் அவரை சோதித்து பார்த்ததில் அவர் இறந்து விட்டதாக கூறினர். இதனையடுத்து போலீசாருக்கு எந்த தகவலும் அளிக்காமல் அந்த பெண்ணை உறவினர்களே அடக்கம் செய்துள்ளனர்.

    முன்னதாக மரணமடைந்த வித்யா என்ற பெண்ணும் விஜயாபுரத்தை சேர்ந்த வெண்மணி என்ற இளைஞரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இளைஞர் பெண் கேட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். வெவ்வேறு ஜாதி காரணங்களாலோ, அல்லது தனிப்பட்ட காரணங்களாலோ திருமணம் முடித்து கொடுக்க பெண் வீட்டார் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் பெண் வீட்டில் அடிக்கடி தகராறு நடந்துள்ளது. அந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று அந்த பெண் மர்மமான முறையில் இறந்துள்ளார்.காதல் விவகாரம் தொடர்பாக பிரச்சனை இருந்த நிலையில் காதலி பலியானதால் காதலனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மர்ம மரணம் குறித்து காவல் நிலையத்தில் பெண்ணின் காதலன் புகார் செய்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை தோண்டும் பணியில் காவல் துறை ஈடுப்பட்டுள்ளது. மேலும் ஆணவக்கொலையா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • எம்புரான் திரைப்படம் மூலம் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு அற்றது என்று சித்தரித்து அணையை உடைக்க சதித்திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது.
    • எனவே இத்திரைப்படத்தில் முல்லை பெரியாறு அணை பற்றிய காட்சிகளும் வசனங்களும் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

    மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மோகன்லால் நடிப்பில் உருவான எம்புரான் திரைப்படம் கடந்த மாதம் 27ஆம் தேதி வெளியானது. மலையாளத்தில் எடுக்கப்பட்டு, அனைத்து மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு, திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

    நெடும்பள்ளி என்கிற இடத்தில் அணை இருப்பதாகவும், அந்த அணையை குண்டு வைத்து தகர்க்க வேண்டும் எனவும், அந்த அணையானது திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் வெள்ளையர்களால் மிரட்டி 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது எனவும் வசனம் இடம் பெற்றுள்ளது.

    திருவிதாங்கூர் மன்னர் போய்விட்டார், வெள்ளையர்கள் போய்விட்டார்கள், ஆனால் ஜனநாயகம் என்கிற பெயரில் அந்த அணை மட்டும் கேரளாவை காவு வாங்க காத்திருப்பது போன்ற வசனங்கள் நேரடியாகவே இந்த திரைப்படத்தில் நான்கு இடங்களில் முல்லைப் பெரியாறு அணையை பற்றி இடம்பெற்றுள்ளது.

    முல்லைப்பெரியாறு அணை இருக்கும் பகுதியை, ஆங்கிலேய அரசுக்குள் அடங்கி இருந்த திருவிதாங்கூர் மன்னர், 999 வருடங்களுக்கு இலவயமாக எழுதிக் கொடுத்தாராம். எழுதி வாங்கிய பிரிட்டீஷ்கார்கள் போய்விட்டனர். மன்னராட்சியும் போய் விட்டது; ஆனாலும் அந்த ஆபத்து மக்களை காவு வாங்க காத்து நிற்கிறது என்று ஒரு வசனம்.

    இரண்டு ஷட்டரை திறந்தாலே, மக்களை பலிவாங்குற அணையை, அதாவது முல்லைப்பெரியாறு அணையை, குண்டு வைத்து தகர்த்தால், கேரளம் மறுபடியும் தண்ணீருக்குள் மூழ்கும்னு ஒரு வசனம்.

    அணையை காப்பாற்ற செக் டேம் எனும் சுவர்களால் பயனில்லை, அணையே இல்லாமல் இருந்தால்தான் சரி என்று ஒரு வசனம்.

    இப்படி வசனங்கள் இடம் பெற செய்து காட்சி அமைப்புகளை சித்தரித்து முல்லைப் பெரியாறு அணையால் கேரள மக்களுக்கு ஆபத்து என்று எம்புரான் திரைப்படத்தில் திட்டமிட்டு கருத்து திணிக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

    முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு ஆய்வு செய்து அணையின் நீர்மட்டத்தை 152 அடி உயர்த்தினாலும் எந்த பாதிப்பும் வராது என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

    ஆனால் முல்லைப் பெரியாறு அணையை உடைத்து எறிவதற்கு திட்டமிட்டு கேரளாவில் திரைப்படங்கள் மூலம் அம்மாநில மக்களை பீதியில் ஆழ்த்துவதற்கு சில அக்கறை உள்ள சக்திகள் முயற்சித்து வருகின்றன.

    2011 நவம்பர் மாதம் டேம் 999 அதாவது அணை 999 என்று பெயரிடப்பட்ட ஒரு திரைப்படம், ஆங்கிலம், தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் திரையிடப்பட்டது.

    கேரளத்தைச் சேர்ந்த முன்னாள் கடற்படை மாலுமியான சோஹன் ராய் என்பவர் இந்தப் படத்தை இயக்கி இருந்தார்.

    ஒரு அணை உடைந்தால் எவ்வளவு பெரிய அழிவு ஏற்படும் என்பதுதான் இந்தப் படத்தின் மையக் கருத்து. ஏற்கனவே முல்லை பெரியாறு அணை குறித்து சர்ச்சை நிலவி வந்த சூழலில் இந்த படம் முல்லைப் பெரியாறு அணை ஆபத்தானது என்று சித்தரித்துக் காட்டியது.

    இது முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு மற்றும் கேரளத்தில் உள்ள செல்வந்தர்களால் செய்யப்படும் திட்டமிட்ட சதி என்றும் இந்தப் படத்தை எங்கும் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் நான் அறிக்கை தந்தேன்.

    படத்தின் சிறப்புக்காட்சி திரையிடப்படவிருந்த சென்னை தனியார் திரையரங்கில் நுழைந்து படப்பெட்டிகளையும் எடுத்துச் சென்ற மல்லை சத்யா உள்ளிட்ட கழக கண்ணின் மணிகள் 25 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்நிலையில் மீண்டும் எம்புரான் திரைப்படம் மூலம் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு அற்றது என்று சித்தரித்து அணையை உடைக்க சதித்திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது.

    எனவே இத்திரைப்படத்தில் முல்லை பெரியாறு அணை பற்றிய காட்சிகளும் வசனங்களும் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

    தமிழ்நாட்டில் எம்புரான் திரைப்படம் திரையிடலை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும்.

    • ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
    • பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 92,10,069 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளனர்.

    ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகளும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 07.03.2025 அன்று 3,45,862 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 9,81,849 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 9,492 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 280 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 39,65,992 பயணிகள் (Online QR 1,59,364; Paper QR 19,41,919; Static QR 2,89,959; Whatsapp - 5,84,041; Paytm 4,46,116; PhonePe – 3,60,001; ONDC – 1,84,592), சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 42,52,456 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), Whatsapp, Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம்.

    மெட்ரோ ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.

    இவ்வாறு மெட்ரோ ரெயில் நிர்வாகம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    • கடலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிதாக 4 சுற்றுலா மாளிகை கட்டப்படும்.
    • ஏற்காடு உள்பட 3 இடங்களில் புதிதாக 3 ஆய்வு மாளிகைகள் கட்டப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று பேசியதாவது:

    முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலுடன் பொதுப்பணித் துறை சார்பில் 7 புதிய அறிவிப்புகளை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

    கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ஓசூரில் புதியதாக 4 சுற்றுலா மாளிகைகள் ரூபாய் 21.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

    கடலூரில் புதியதாக 1 சுற்றுலா மாளிகை ரூபாய் 6 கோடி மதிப்பீட்டிலும், காஞ்சிபுரத்தில் புதியதாக 1 சுற்றுலா மாளிகை ரூபாய் 3 கோடி மதிப்பீட்டிலும், திருவள்ளூரில் புதியதாக 1 சுற்றுலா மாளிகை ரூபாய் 3 கோடி மதிப்பீட்டிலும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புதியதாக 1 சுற்றுலா மாளிகை ரூபாய் 9.90 கோடி மதிப்பீட்டிலும் கட்டப்படும்.

    கல்வராயன் மலை, ஏற்காடு மற்றும் பொள்ளாச்சி ஆகிய 3 இடங்களில் புதியதாக 3 ஆய்வு மாளிகைகள் ரூபாய் 9.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையில் புதியதாக 1 ஆய்வு மாளிகை ரூபாய் 2.50 கோடி மதிப்பீட்டிலும், சேலம் மாவட்டம், ஏற்காட்டில் புதியதாக 1 ஆய்வு மாளிகை ரூபாய் 5 கோடி மதிப்பீட்டிலும், கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் புதியதாக 1 ஆய்வு மாளிகை ரூபாய் 2 கோடி மதிப்பீட்டிலும் கட்டப்படும் என தெரிவித்தார்.

    • விமான போக்குவரத்து அமைச்சம் பரந்தூர் விமான நிலைய பணிக்கு அனுமதி அளித்ததும் கட்டுமான பணிகள் தொடங்கும் என்று தெரிகிறது.
    • பரந்தூர் விமான நிலைய கட்டுமான பணியை 4 கட்டமாக பிரித்து செயல்படுத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான அறிவிப்புகள் வெளியாகி நிலங்களை கையகப்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. புதிய விமான நிலைய திட்டத்திற்காக பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து 5,183 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். எனினும் புதிய விமான நிலையத்திற்கான அடுத்த கட்ட பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    சமீபத்தில் டெல்லியில் பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட உயர்மட்ட வழிகாட்டுதல் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் விமான போக்குவரத்து அமைச்சகம், விமான பாதுகாப்பு ஆணையம், பாதுகாப்பு அமைச்சகம், சுற்றுச்சூழல் ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பான பிரச்சனைகள் குறித்தும், கொள்கை அளவில் ஒப்புதலுக்காக விமானப் போக்கு வரத்து அமைச்சகத்திற்கு இந்தத் திட்டத்தைப் பரிந்துரைப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இது பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்திற்கான முறையான அனுமதி அறிவிப்புக்கு முந்தைய முக்கிய கட்டமாக கூறப்படுகிறது. விமான போக்குவரத்து அமைச்சம் பரந்தூர் விமான நிலைய பணிக்கு அனுமதி அளித்ததும் கட்டுமான பணிகள் தொடங்கும் என்று தெரிகிறது.

    ஏற்கனவே பரந்தூர் விமான நிலையகட்டுமான பணியை 4 கட்டமாக பிரித்து செயல்படுத்த திட்டமிடப்பட்டு இருந்தது. விமான போக்குவரத்து அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்தால் அடுத்த ஆண்டு(2026) முதல்கட்ட கட்டுமான பணிகள் தொடங்க வாய்ப்பு உள்ளது.

    • சர்வே எண்ணை சுற்றியுள்ள மதிப்பில் எது அதிகப்பட்சம் மதிப்பு உள்ளதோ அதன் அடிப்படையில் மதிப்பு நிர்ணயம் செய்துகொடுப்பது நடைமுறையில் உள்ளது.
    • தமிழக அரசு சொத்தின் மதிப்பை அடிக்கடி உயர்த்தும் முடிவை கைவிட்டு, மக்கள் பயனடையும் வகையில் செயல்பட வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் பதிவுத்துறையின் தொடர் நடவடிக்கையால் பாமர மக்களும், நடுத்தர மக்களும் தொடர்ந்து பணத்தாலும், மனத்தாலும் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். தமிழக அரசு கடந்த இரண்டு வருடங்களில் சொத்து மதிப்பை 50 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. புதிதாக உருவாக்கவுள்ள மனைப்பிரிவு மதிப்பு நிர்ணயம் செய்வதற்காக மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு மனு அனுப்பினால் மனைப்பிரிவிற்கு மதிப்பு நிர்ணயம் செய்ய உள்ள சர்வே எண்ணை சுற்றியுள்ள மதிப்பில் எது அதிகப்பட்சம் மதிப்பு உள்ளதோ அதன் அடிப்படையில் மதிப்பு நிர்ணயம் செய்துகொடுப்பது நடைமுறையில் உள்ளது.

    தமிழக அரசு சொத்து மதிப்பை அதிகப்படுத்தாமல் பதிவு கட்டணத்தை உயர்த்தினால் கூட தமிழ்நாடு அரசுக்கு வருமானம் வரும், மக்களும் பயனடைவார்கள். ஆனால் சொத்து மதிப்பை மீண்டும், மீண்டும் அதிகப்படுத்துவதால் பொதுமக்களுக்கும் வருமான வரி சுமை கூடுகிறது, பொது மக்களுக்கு எந்தவித நன்மையும் அடைவதில்லை. ஆகவே தமிழக அரசு சொத்தின் மதிப்பை அடிக்கடி உயர்த்தும் முடிவை கைவிட்டு, மக்கள் பயனடையும் வகையில் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • போதைப்பொருட்கள் இளைஞர்களை எவ்வளவு கொடூரமான வகையில் சீரழிக்கின்றன என்பதற்கு இந்த செய்தியே சாட்சி.
    • போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பதே சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கான முதல் படி என்பதை இந்த ஸ்டாலின் மாடல் அரசு உணர வேண்டும்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே போதை ஊசி போட்டுக்கொள்ள மறுத்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதலே நான் தொடர்ச்சியாக போதைப்பொருள் புழக்கம் குறித்து எச்சரித்து வருகிறேன்.

    ஆனால், இன்றைய நாள் வரை போதைப்பொருளை ஒழிக்க இந்த ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசு, ஆபரேஷன் 2.ஓ, 3.ஓ, 4.ஓ என ஓ போட்டதை தவிர ஆக்கப்பூர்வமாக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்பதையே இதுபோன்ற செய்திகள் உணர்த்துகின்றன.

    போதைப்பொருட்கள் இளைஞர்களை எவ்வளவு கொடூரமான வகையில் சீரழிக்கின்றன என்பதற்கு இந்த செய்தியே சாட்சி.

    விளம்பர ஷூட்டிங்கில் வந்து "போதையின் பாதையில் யாரும் செல்ல வேண்டாம்" என்று வசனம் பேசினால் மட்டும் போதாது முதல்வரே, போதைப்பொருள் புழங்குவதை ஒழிக்க வேண்டும்.

    போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பதே சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கான முதல் படி என்பதை இந்த ஸ்டாலின் மாடல் அரசு உணர வேண்டும்.

    இளைஞர் கொலையில் தொடர்புள்ளோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விஜய் உத்தரவுக்கிணங்க தமிழகம் முழுவதும் கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
    • தண்ணீர் பந்தல் அமைப்பது மட்டுமின்றி தினமும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் இருப்பதை நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும்.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் த.வெ.க. நிர்வாகிகளுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும் என கட்சி தலைவர் விஜய் உத்தரவிட்டு இருந்தார். அவரது உத்தரவுக்கிணங்க தமிழகம் முழுவதும் கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

    எனினும் பல இடங்களில் தண்ணீர் பந்தல் இல்லாமல் இருக்கிறது. அப்படிப்பட்ட இடங்களை நிர்வாகிகள் ஆய்வு செய்து 234 தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் முக்கிய சாலைகள் மட்டுமின்றி வீதி வீதியாகவும் தண்ணீர் பந்தல் கட்சி சார்பில் அமைக்க வேண்டும்.

    தண்ணீர் பந்தல் அமைப்பது மட்டுமின்றி தினமும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் இருப்பதை நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் தொண்டர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருக்கிறார்.

    • புகாரின் பேரில் கரூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து அருளை கைது செய்தனர்.
    • தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி ஏற்படும் போது, அதிகாரிகள் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும் என்றார்.

    கரூர்:

    கரூர் ஆண்டாங்கோவில் மேற்கு பஞ்சாயத்து கோவிந்தம்பாளையம் பகுதியில் வசிப்பவர் அருள் (வயது47). தாந்தோணி மேற்கு ஒன்றிய ஜெ.பேரவை துணை தலைவராக உள்ளார்.

    இவர் தனது வீட்டின் முன்பு இருந்த பள்ளத்தை சரிசெய்ய சவுடு மணலை கொட்டி உள்ளார்.

    இதனை பார்த்து அங்கு வந்த ஆண்டாங் கோவில் மேற்கு பஞ்சாயத்து ஊழியர் பழனிசாமி மணல் கொட்டியது குறித்து கேட்டுள்ளார்.

    இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து பஞ்சாயத்து ஊழியர் பழனிசாமி, அருள் மீது கரூர் நகர காவல் நிலையத்தில் தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் கரூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து அருளை கைது செய்தனர்.

    சம்பவம் குறித்து அறிந்து கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தலைமையில் பசுவைசிவசாமி மற்றும் அதிமுகவினர் கரூர் நகர காவல் நிலையத்தில் இரவு திரண்டனர்.

    கைது செய்யப்பட்ட அருளின் குடும்பத்தார், உறவினர்களும் காவல் நிலையத்தில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இது குறித்து மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜய பாஸ்கர் கூறும்போது:-

    அ.தி.மு.க. பிரமுகர் அருள், தனது வீட்டின் முன்பகுதியை சீர் செய்ய சவுடு மணல் வாங்கி கொட்டியதை அவர் அ.தி.மு.க.காரர் என்பதால் அவர் மீது பொய் வழக்கு போட்டு பஞ்சாயத்து ஊழியர்கள் மூலம் போலீசார் கைது சொய்துள்ளனர்.

    தற்போது சம்பந்தப்பட்ட அருள் ஜாமினில் வெளியே வந்துள்ளார். அருளின் மனைவியிடம் மிக மோசமாக பேசிய பஞ்சாயத்து ஊழியர் பழனிசாமி மீது கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம்.

    கரூர் மாவட்டத்தில் மணல் கடத்தல், கஞ்சா விற்பனை போன்றவை நடந்து வரும் நிலையில் அதைப்பற்றி கவலைப்படாமல் அ.தி.மு.க.வினர் மீது போலீசார் பொய் வழக்கு போடுகின்றனர். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி ஏற்படும் போது, அதிகாரிகள் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும் என்றார். 

    • மதுரை மரிக்கொழுந்து விளாச்சேரி களிமண் பொம்மை உட்பட பல்வேறு உணவு, வேளாண் மற்றும் பாரம்பரிய உற்பத்தி பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன.
    • வந்தவாசி கோரைப்பாய், ஜவ்வாது புளி, கொல்லிமலை மிளகுக்கு புவிசார் குறியீடு பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஒவ்வொரு வட்டார பகுதியில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு அதற்கான சட்டப் பாதுகாப்பு வழங்குவதற்காக புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தமிழகத்தில் திண்டுக்கல் பூட்டு, சேலம் சுங்குடி சேலை, காஞ்சிபுரம் பட்டு, மதுரை மல்லிகை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், பழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டு, மதுரை மரிக்கொழுந்து விளாச்சேரி களிமண் பொம்மை உட்பட பல்வேறு உணவு, வேளாண் மற்றும் பாரம்பரிய உற்பத்தி பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன

    இந்நிலையில் கும்பகோணம் வெற்றிலை, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

    இரு பொருட்களுக்கும் புவிசார் குறியீடு பெறப்பட்டிருப்பதாக வழக்கறிஞர் சஞ்சய் காந்தி அறிவித்துள்ளார். முதல்முறையாக விவசாய பொருளான கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் வந்தவாசி கோரைப்பாய், ஜவ்வாது புளி, கொல்லிமலை மிளகுக்கு புவிசார் குறியீடு பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    • நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம்-மணிமுத்தாறு அணைகளுக்கு இடையே மலைகள் உள்ளது.
    • சபாநாயகர் அப்பாவு, "இதற்கு வனத்துறையினரிடம் அனுமதி வாங்க வேண்டும்" என கூறினார்.

    சென்னை:

    சட்டசபையில் இன்று பா.ஜ.க. எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேசும்போது, "நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம்-மணிமுத்தாறு அணைகளுக்கு இடையே மலைகள் உள்ளது. எனவே இங்கு சுரங்க பாதைகள் அமைத்து இரு அணைகளையும் ஒன்றாக ஆக்கினால் நெல்லை மாவட்ட மக்களுக்கு மேலும் பயன் உள்ளதாக இருக்கும்" என கோரிக்கை விடுத்தார்.

    அவருக்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, "இதற்கு வனத்துறையினரிடம் அனுமதி வாங்க வேண்டும்" என கூறினார்.

    உடனே நயினார் நாகேந்திரன் அதற்கு "நான் அனுமதி வாங்கி தருகிறேன்" என்று தெரிவித்தார்.

    • சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதிகள் இணைந்து வருவதன் காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் வருகிற 4 மற்றும் 5-ந்தேதிகளில் கனமழைக்கு வாயப்புள்ளது.

    சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே நேரம் மதிய வேளையில் வெயின் தாக்கம் 35 டிகிரி செல்சியஸ் அளவிற்கு பதிவாகக் கூடும்

    தமிழகத்தில் இன்று முதல் வருகிற 5-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும். 

    ×