என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. நிர்வாகி கைது: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் போலீஸ் நிலையம் முற்றுகை
- புகாரின் பேரில் கரூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து அருளை கைது செய்தனர்.
- தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி ஏற்படும் போது, அதிகாரிகள் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும் என்றார்.
கரூர்:
கரூர் ஆண்டாங்கோவில் மேற்கு பஞ்சாயத்து கோவிந்தம்பாளையம் பகுதியில் வசிப்பவர் அருள் (வயது47). தாந்தோணி மேற்கு ஒன்றிய ஜெ.பேரவை துணை தலைவராக உள்ளார்.
இவர் தனது வீட்டின் முன்பு இருந்த பள்ளத்தை சரிசெய்ய சவுடு மணலை கொட்டி உள்ளார்.
இதனை பார்த்து அங்கு வந்த ஆண்டாங் கோவில் மேற்கு பஞ்சாயத்து ஊழியர் பழனிசாமி மணல் கொட்டியது குறித்து கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து பஞ்சாயத்து ஊழியர் பழனிசாமி, அருள் மீது கரூர் நகர காவல் நிலையத்தில் தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார் அளித்தார்.
புகாரின் பேரில் கரூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து அருளை கைது செய்தனர்.
சம்பவம் குறித்து அறிந்து கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தலைமையில் பசுவைசிவசாமி மற்றும் அதிமுகவினர் கரூர் நகர காவல் நிலையத்தில் இரவு திரண்டனர்.
கைது செய்யப்பட்ட அருளின் குடும்பத்தார், உறவினர்களும் காவல் நிலையத்தில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இது குறித்து மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜய பாஸ்கர் கூறும்போது:-
அ.தி.மு.க. பிரமுகர் அருள், தனது வீட்டின் முன்பகுதியை சீர் செய்ய சவுடு மணல் வாங்கி கொட்டியதை அவர் அ.தி.மு.க.காரர் என்பதால் அவர் மீது பொய் வழக்கு போட்டு பஞ்சாயத்து ஊழியர்கள் மூலம் போலீசார் கைது சொய்துள்ளனர்.
தற்போது சம்பந்தப்பட்ட அருள் ஜாமினில் வெளியே வந்துள்ளார். அருளின் மனைவியிடம் மிக மோசமாக பேசிய பஞ்சாயத்து ஊழியர் பழனிசாமி மீது கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம்.
கரூர் மாவட்டத்தில் மணல் கடத்தல், கஞ்சா விற்பனை போன்றவை நடந்து வரும் நிலையில் அதைப்பற்றி கவலைப்படாமல் அ.தி.மு.க.வினர் மீது போலீசார் பொய் வழக்கு போடுகின்றனர். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி ஏற்படும் போது, அதிகாரிகள் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும் என்றார்.






