என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
- சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 4 ஆயிரம் கனஅடியாக வந்தது.
இதையடுத்து கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 3 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- 2-ந்தேதி தொடங்கும் பொதுத்தேர்வு 26-ந்தேதி வரை நடைபெறுகிறது.
- பிளஸ்-2 செய்முறை தேர்வு கடந்த 9-ந்தேதி தொடங்கி 14-ந்தேதி வரை நடைபெற்றது.
சென்னை:
சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் இறுதி அல்லது மே முதல் வாரத்தில் நடைபெற இருப்பதால் பொதுத்தேர்வுகளை முன் கூட்டியே நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு அதற்கான அட்டவணையை தேர்வு துறை வெளியிட்டது.
ஏப்ரல் மாதம் 2-வது வாரத்திற்குள் அனைத்து தேர்வுகளையும் முடிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு நாளை மறுநாள் 2-ந்தேதி தொடங்குகிறது.
2-ந்தேதி தொடங்கும் பொதுத்தேர்வு 26-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வினை 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் எழுதுகிறார்கள். பள்ளி மாணவ-மாணவிகள் 7 லட்சத்து 99 ஆயிரத்து 692 பேரும் தனித்தேர்வர்கள் 27,783 பேரும் எழுதுகின்றனர். 7545 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 3412 தேர்வு மையங்களில் இத்தேர்வினை எழுத உள்ளனர்.
தேர்வு எழுதும் மாணவர்களுக்காக பல்வேறு வசதிகளை அரசு செய்து உள்ளது. தேர்வு மையங்களில் மின்தடை ஏற்படாமல் இருப்பதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மின்சார வாரியம் எடுத்துள்ளது. பிளஸ்-2 செய்முறை தேர்வு கடந்த 9-ந்தேதி தொடங்கி 14-ந் தேதி வரை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வு தொடங்குவதால் அரசு தேர்வுத்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை பல்வேறு முன்னேற்பாடுகளை செய்துள்ளது.
தேர்வு மையத்தில் ஒழுங்கீனங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. ஆள் மாறாட்டம், விடைத்தாள் மாற்றுதல், காப்பி அடித்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டால் தேர்வு எழுதுவதற்கு 3 ஆண்டு காலம் தடை விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
பொதுத்தேர்வு தொடங்க இருப்பதால் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 11-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 6-ந்தேதி முடிகிறது. கடந்த ஆண்டு பிளஸ்-1 தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு மார்ச் 3-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி வரை பொதுத்தேர்வு நடக்கிறது.
பிளஸ்-2 பொதுத்தேர்வினை 4540 பறக்கும் படையினர் கண்காணிக்கிறார்கள். 44 ஆயிரத்து 624 பேர் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
- நேற்று தங்கம் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- இரண்டாவது நாளாக நேற்றும் வெள்ளி விலையில் மாற்றமில்லை.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் தங்கம் வாங்க நினைப்போருக்கு பெரும் அதிர்ச்சி அளித்து வருகிறது. அந்த வகையில் வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு 1,440 ரூபாய், செவ்வாய்கிழமை 240 ரூபாய், புதன்கிழமை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,19,440-க்கு விற்பனையானது. அதனை தொடர்ந்து நேற்றுமுன்தினம் தங்கம் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.ரூ.1,19,360-க்கும் நேற்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், வார இறுதி நாளான இன்றும் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 300 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,200-க்கும் சவரனுக்கு 2400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,21,600-க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தைப்போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
27-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200
26-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,360
25-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,440
24-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,120
23-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,880
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
27-02-2026- ஒரு கிராம் ரூ.295
26-02-2026- ஒரு கிராம் ரூ.295
25-02-2026- ஒரு கிராம் ரூ.295
24-02-2026- ஒரு கிராம் ரூ.290
23-02-2026- ஒரு கிராம் ரூ.300
- மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
- பிரதமர் மோடி செல்லும் பகுதி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.
மதுரை மண்டேலா நகர் சுற்றுச்சாலை பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நாளை மாலை நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி தலைமையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறர்கள். இதற்காக 120 ஏக்கர் இடத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதி மற்றும் பிரதமர் மோடி செல்லும் பகுதி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்கிடையே திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். மதுரை விமான நிலையத்தில் நடக்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்று திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். இதையொட்டி விமான நிலையத்திலும், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மதுரை மாவட்ட எல்லைக்குள் நாளை டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான் 3 வழி வாகனங்கள் பறக்க பாதுகாப்பு காரணங்களுக்காக தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பிரவீன்குமார் எச்சரித்துள்ளார்.
- சிறுவர்கள் கூட அதில் என்னதான் இருக்கிறது? என்று ருசி பார்க்கும் அளவுக்கு மது கலாசாரம் பெருகிவிட்டது.
- இந்தியர்களின் குடிப்பழக்கம் முன்பைவிட நிதானமாகவும், ஆரோக்கியம் சார்ந்து மாறி வருவதாகவும் சொல்லப்பட்டு உள்ளது.
சென்னை:
உலகளவில் "ஜென்-சி" இளைஞர்களில் 36 சதவீதம் பேர் மட்டுமே மதுவை முற்றிலும் தவிர்ப்பதாக சமீபத்திய ஆய்வறிக்கையில் புதிய தகவல் வெளியாகி உள்ளது.
"மது வீட்டுக்கும் கேடு நாட்டுக்கும் கேடு". "மது நாட்டுக்கும், வீட்டுக்கும். உயிருக்கும் கேடு", "மது அருந்துதல் உடல்நலத்திற்கு கேடு, பாதுகாப்பாக இருப்பீர்" என்பது போன்ற பல விழிப்புணர்வு வாசகங்களை பெரும்பாலான இடங்களில் பார்க்கிறோம். இவ்வளவு விழிப்புணர்வு செய்தாலும், மது குடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
சிறுவர்கள் கூட அதில் என்னதான் இருக்கிறது? என்று ருசி பார்க்கும் அளவுக்கு மது கலாசாரம் பெருகிவிட்டது. இப்படி இருக்கும் சூழலில் "யூரோமானிடர் இன்டர்நேஷனல்" என்ற சந்தை ஆய்வு மற்றும் நுகர்வோர் நுண்ணறிவு நிறுவனம் 'மதுபானங்களுக்கான உலக சந்தை' மற்றும் 'நுகர்வோரின் குரல்' என்ற தலைப்பில் ஆய்வறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டு உள்ளது.
இந்த ஆய்வறிக்கை பல விஷயங்களை இந்த உலகத்துக்கு எடுத்துச் சொல்லியுள்ளது. அதிலும் இன்றைய இளம் தலைமுறையினர் மதுவுக்கு அடிமையாகி இருக்கிறார்களா? என்பதற்கான விடையையும் கொடுத்திருக்கிறது.
இந்தியா, அமெரிக்கா, சீனா, பிரேசில், பிரிட்டன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட முக்கிய நாடுகளில் இருக்கும் மதுபான சந்தைகளில் இந்த தகவல்கள் திரட்டப்பட்டிருக்கின்றன. அந்த ஆய்வறிக்கையில், உலகளவில் சட்டப்பூர்வமாக மது அருந்தும் வயதை எட்டியுள்ள 'ஜென்-சி' இளைஞர்களில் 36 சதவீதம் பேர் மதுவை அறவே தவிர்க்கிறார்கள். மதுவை தொட்டுக்கூட பார்த்தது இல்லை. மீதமுள்ள 64 சதவீதம் பேர் ஏதாவது ஒரு வகையில் மதுவை ருசிபார்த்தவர்களாகவே இருக்கிறார்கள். மது அருந்துபவர்களில் 53 சதவீதம் பேர் தாங்கள் வாங்கி பருகும் மதுவின் நுகர்வை குறைக்க முயற்சிக்கிறார்கள்.
இதுமட்டுமல்லாமல், மதுவையும், மதுவற்ற குளிர்பானங்களையும் மாறி, மாறி குடிக்கும் 'ஜீப்ரா ஸ்டிரைபிங்' என்ற கலாசாரத்தை இன்றைய இளைஞர்கள் கையில் எடுத்து இருக்கின்றனர். சமூக ஊடகங்களில் தங்களை பற்றிய பிம்பம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 85 சதவீதம் இளைஞர்கள் பொது இடங்களில் மது குடிப்பதை தவிர்த்து வருகின்றனர்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுமட்டுமல்லாமல், வாரம் ஒருமுறை மது குடிப்பவர்களின் எண்ணிக்கை 2020-ல் 23 சதவீதமாக இருந்த நிலையில், 2025-ல் அது 17 சதவீதமாக குறைந்திருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. மதுவை தவிர்ப்பவர்களில் 87 சதவீதம் பேர் நீண்டகால உடல்நல அபாயங்களை தவிர்க்க மதுவை அறவே தவிர்ப்பதாகவும், சேமிப்புக்காக 30 சதவீதம் பேர் அதனை தவிர்ப்பதாகவும் கூறியுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, ஆல்கஹால் இல்லாத பீர் மற்றும் பானங்களின் விற்பனை உலக சந்தையில் ஆண்டுக்கு 15 முதல் 20 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்து வருவதாக புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது.
இந்த ஆய்வறிக்கை உலகளவில் மதுபானங்களை பயன்படுத்துவோரின் சந்தை எண்ணிக்கை குறைந்து வருவதை சுட்டிக்காட்டினாலும், இந்தியாவில் அதன் பாதிப்பு உடனடியாக தெரியவில்லை. ஆனால் இந்தியர்களின் குடிப்பழக்கம் முன்பைவிட நிதானமாகவும், ஆரோக்கியம் சார்ந்து மாறி வருவதாகவும் சொல்லப்பட்டு உள்ளது.
- அரசு உறுதி அளித்தபடி தலா 2 சென்ட் வீட்டு மனை வழங்குவதற்கு கலெக்டரிடம் மனு அளிக்க வேண்டும்.
- மனுதாரர்களுக்கு வீடு கட்டித்தர உரிய நிதியை ஒதுக்கீடு செய்ய மதுரை மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும்.
மதுரை:
மதுரை விமானநிலையத்துக்கு கையகப்படுத்திய நிலத்தில் இருந்து மக் கள் 2 வாரத்தில் வெளியேற வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை அவனியாபுரம் சின்ன உடைப்பு பகுதியை சேர்ந்த சந்திரா உள்ளிட்ட 130 பேர், மதுரை ஐகோர்ட்டில் 2024-ம் ஆண்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எங்கள் பகுதியில் மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கான இழப்பீடும் வழங்கினார்கள். ஆனால் விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு நடவடிக்கையை எடுப்பது அரசின் கடமை.
இதற்காக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையே எங்களை வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எங்களுக்கு மறுவாழ்வு, மறுகுடியமர்வு வசதிகளை செய்து தர உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, சின்ன உடைப்பு மக்களை அங்கிருந்து வெளியேற்ற தடை விதித்து உத்தரவிட்டு இருந்தது.
ஆனால் 2008-ம் ஆண்டிலேயே விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கி, பயனாளிகளுக்கு இழப்பீடு உள்ளிட்டவை வழங்கப்பட்டுவிட்டன. தற்போது 64 பயனாளிகளுக்கு கருணை அடிப்படையில் வீட்டுமனைகள் வழங்கி அதில் வீடுகள் கட்டித்தரப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மதுரை விமானநிலைய விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் இருந்து சின்ன உடைப்பு மக்கள் (அதாவது இந்த வழக்கு தொடர்ந்தவர்கள்) 2 வாரத்தில் வெளியேற வேண்டும். தவறும்பட்சத்தில் அவர்களை வெளியேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவர்களுக்கு ஏற்கனவே அரசு உறுதி அளித்தபடி தலா 2 சென்ட் வீட்டு மனை வழங்குவதற்கு கலெக்டரிடம் மனு அளிக்க வேண்டும். அதன்பேரில் மனுதாரர்களுக்கு வீடு கட்டித்தர உரிய நிதியை ஒதுக்கீடு செய்ய மதுரை மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- தி.மு.க. தரப்பில் ஏற்கனவே வழங்கப்பட்ட 25 தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் என்று தி.மு.க. வட்டாரங்களில் அறியப்படுகிறது.
- தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று காலை 10.30 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்படைந்து வருகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஆளும் தி.மு.க. கூட்டணியில் பிரதான கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று (சனிக்கிழமை) காலை 10.30 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.
இதில், தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான 7 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழுவும், தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இதில், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், தேசிய செயலாளர் நிவேதித் ஆல்வா ஆகிய 4 பேர் மட்டும் கலந்து கொள்ள உள்ளனர்.
தேசிய செயலாளர் சூரஜ் ஹெக்டே உடல்நலக் குறைவால் பெங்களூரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பங்கேற்கவில்லை என்று தெரிகிறது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு. அதிக எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை காங்கிரஸ் முன்னிறுத்தி வரும் நிலையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ள தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் தரப்பில் பேச இருக்கும் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் குறைந்தபட்சம் 35 தொகுதிகளாவது வேண்டும் என்று கேட்பார் என்று கூறப்படுகிறது.
தி.மு.க. தரப்பில் ஏற்கனவே வழங்கப்பட்ட 25 தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் என்று தி.மு.க. வட்டாரங்களில் அறியப்படுகிறது. எனவே, இந்த பேச்சுவார்த்தை இன்றுடன் எளிதாக முடியுமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
- ஓ.பி.எஸ் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார்.
- ஐயப்பன் எம்.எல்.ஏ.வும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
சென்னை அண்ணா அறிவாலயம் சென்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார். அவருடன் அவரது மகன் ரவீந்தரநாத், எம்.எல்.ஏ. ஐயப்பன் உள்ளிட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
இதை தொடர்ந்து அவர் தலைமை செயலகம் சென்று சட்டசபை செயலாளரிடம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து கடிதம் வழங்கினார். இவருடன் ஐயப்பன் எம்.எல்.ஏ.வும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்த நிலையில், அவரது காரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படமும், காரின் முன்பகுதியில் திமுக கொடியும் பொருத்தப்பட்டுள்ளது.
- தங்களுக்கு ஒதுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் ரூ. 200 தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.
குரூப்-2 மற்றும் குரூப் 2ஏ முதன்மை தேர்வுக்கான கட்டணம் செலுத்தாத சில தேர்வர்களுக்கு வரும் மார்ச் 5ம் தேதி வரை தேர்வு கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
முதன்மைத் தேர்விற்குத் தகுதி பெற்றவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் ரூ. 200 தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
இந்நிலையில், தேர்வுக்கான கட்டணத்தைச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொண்ட விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.
எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் தேர்வர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு கூடுதல் அவகாசம் என்பதால், கடைசி நேரத் தொழில்நுட்பக் கோளாறுகளைத் தவிர்க்க முன்கூட்டியே பணிகளை முடிப்பது நல்லது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அனைவரும் 200 சதவீதம் தேர்தல் வெற்றியை உறுதி செய்துள்ளனர்.
- விசைத்தறி 100 யூனிட் மின்சாரம் நிறைவேற்றியுள்ளோம்.
கோவை மாவட்டம் நீலாம்பூரில் நடைபெறும் மேற்கு மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பாசக்கார கோவை மக்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். சந்தித்த அனைவரும் நாம் தான் வெற்றி பெறுவோம் என கூறினார்.
நான் இன்று சந்தித்த கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் 200 சதவீதம் தேர்தல் வெற்றியை உறுதி செய்துள்ளனர்.
செந்தில் பாலாஜியின் ஆற்றல் தான் எதிரிகளின் தூக்கத்தை கெடுக்கிறது. இவர் எதிராளிகளுக்கு சிம்மசொப்பனம்.
நெருக்கடிகளுக்கு அடிபணியாமல் நெஞ்சுரத்துடன் கட்சிக்கும் நாட்டிற்கும் செந்தில் பாலாஜி பணியாற்றுகிறார்.
நான் இங்கு வந்தது உங்களை உற்சாகப்படுத்த மட்டுமல்ல உங்களை பார்த்து நான் உற்சாகமடையத்தான்.
திமுக கூட்டணி வெற்றி பெற்றது என வாக்கு எண்ணிக்கை நாளில் Flash News வரவேண்டும்.
பல்வேறு இடர்பாடுகளை கடந்து அத்திக்கடவு- அவினாசி திட்டம், அவினாசி சாலை மேம்பாலம், விசைத்தறி 100 யூனிட் மின்சாரம் நிறைவேற்றியுள்ளோம்.
கடந்த தேர்தலில் மேற்கு மண்டலத்தில் நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை, அதனை இம்முறை மாற்றிக்காட்ட வேண்டும்.
உலகத்தரத்தில் கிரிக்கெட் ஸ்டேடியம், தொல்லியல் ஆய்வு, தோழி விடுதி, புதிய இ-பஸ் திட்டங்கள் வரவிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை :
சென்ன வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று தென் தமிழகம், மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நாளை முதல் 5-ந்தேதி வரை மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இதற்கிடையே நாளை முதல் 1-ந்தேதி வரை தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.
- வரும் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என உற்சாகமாக கூறினர்.
போடி:
தமிழகம் முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தினுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து எதிர்பார்ப்பு இன்று நிறைவுக்கு வந்தது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை போடியில் கொண்டாடிய ஓ.பன்னீர்செல்வம் பத்திரிகையாளர் சந்திப்பில் சுமார் ஒரு மணி நேரம் தனது அரசியல் களம்குறித்து மனம் திறந்து பேட்டியளித்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் தி.மு.க.வில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சில நாட்கள் இதுகுறித்து எதுவும் தகவல் தெரிவிக்காத நிலையில் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.
கடந்த சில நாட்களாகவே ஓ.பி.எஸ். நடவடிக்கையில் அதிருப்தியடைந்த அ.தி.மு.க.வினர் தற்போது அவர் தி.மு.க.வில் இணைந்ததை கொண்டாடி வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான போடி பஸ் நிலையம் தேவர் சிலை அருகில் அவர் கட்சியை விட்டு விலகியதை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இதுவரை அ.தி.மு.க.வை பிடித்திருந்த தீய சக்தி ஒழிந்தது. துரோகி பன்னீர்செல்வம் ஒழிக, போய்க்கோ போய்க்கோ என்று கோசமிட்டபடி பட்டாசு வெடித்து அவ்வழியாக சென்ற பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில் சாதாரண தொண்டனாக இருந்த ஓ.பி.எஸ்.சை 3 முறை முதலமைச்சராக அமரவைத்து அழகு பார்த்தது அ.தி.மு.க. ஆனால் அவர் அதற்கு விசுவாசமாக இல்லாமல் தி.மு.க.விற்கு சென்று விட்டார். அவர் எந்த இடத்திலும் விசுவாசமாக இருக்க மாட்டார். எனவே அ.தி.மு.க.வை பிடித்த தீயசக்தி ஒழிந்து விட்டது. இதனால் வரும் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என உற்சாகமாக கூறினர்.






