என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி இயற்கையாக அமைந்த கூட்டணி, உறுதியான கூட்டணி.
- கூட்டணி பேச்சுவார்த்தை வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.
சென்னை அறிவாலயத்தில் தி.மு.க. - காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. தி.மு.க. உடனான பேச்சுவார்த்தைக்கு பின் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி இயற்கையாக அமைந்த கூட்டணி, உறுதியான கூட்டணி.
* தி.மு.க.வுடன் மட்டும் தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
* தி.மு.க. தவிர வேறு யாருடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
* காங்கிரசுக்கு ஒரு மாநிலங்களவை சீட் கொடுப்பதாக முதலமைச்சர் கூறி உள்ளார்.
* தி.மு.க.வுடன் காங்கிரஸ் நடத்திய முதற்கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.
* கூட்டணி பேச்சுவார்த்தை வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பைக் நேருக்கு நேர் மோதியதில் தூக்கி வீசப்பட்டு இருவரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
- விபத்து குறித்து அதியமான் கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தருமபுரி:
தருமபுரி அருகேயுள்ள அங்கனாம்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் வினோத் (வயது29). இவர் தருமபுரி நகர் அன்னசாகரம் பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வந்தார்.
இவர் நேற்றிரவு வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கனாம் புதூர் என்ற இடத்தில் வந்தபோது எதிரே எம்.ரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் என்பவரது மகன் ஹரிகிருஷ்ணன் (23) ஓட்டி பைக் நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு இருவரும் பலத்த காயம் அடைந்து துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து அதியமான் கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் இறந்த வினோத், ஹரிகிருஷ்ணன் ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தி.மு.க. கூட்டணியில் பிரதான கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது.
- டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவுடன், கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழு பேச்சுவார்த்தையை தொடங்கியது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்படைந்து வருகிறது.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆளும் தி.மு.க. கூட்டணியில் பிரதான கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது.
இதில், தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான 7 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழுவும், தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தையை தொடங்கியது.
இந்நிலையில் கூடுதல் தொகுதி விவகாரத்தில் இருதரப்பும் விடாபிடியாக இருப்பதால் இழுபறி என தகவல்வெளியாகி உள்ளது.
39 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்துவதாகவும், தி.மு.க. தரப்பில் 22 சீட்கள் மட்டுமே தர முடியும் என உறுதியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- விஜய் ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட்டாக்கி வருகிறார்கள்.
- காரசார விவாதமும் நடைபெற்று வருகிறது.
பிரபல நடிகர் விஜய். இவர் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிலையில் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவுக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக தகவல் பரவி வந்தது. இருவரும் பிரிந்து தனித்தனியாக வசித்து வருவதாகவும் கூறப்பட்டது. மேலும் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை.
நடிகர் விஜய்யும் அரசியல், பொது நிகழ்ச்சிகள், திருமண நிகழ்ச்சிகளுக்கு தனியாகவே சென்று வருகிறார். இந்த நிலையில் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட கோர்ட்டில் சங்கீதா தாக்கல் செய்த மனுவில் விஜய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். இது சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது அவரின் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விஜய்- சங்கீதா விவாகரத்து தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு வித தகவல்கள், கருத்துகள் பரவி வரும் நிலையில், விஜயின் அரசியல் பயணத்தின் ஒவ்வொரு திருப்பமும் ஒரே தேதியில் நடைபெறுவது தற்செயலா அல்லது திட்டமிட்ட உத்தியா என்ற விவாதமும் நடைபெற்று வருகிறது. இதற்கு ஒருவர் வெளியிட்ட பதிவே காரணம். அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-
27-ந்தேதியானால் விஜய்க்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்து விடுகிறது. அதில் ஒரு சில நல்ல விஷயங்கள் நடந்துள்ளதாக கூறியுள்ள போஸ்டில் "27th Timeline - Coincidence?" என்று தொடங்கி கடந்த ஆறு மாத நிகழ்வுகளை பட்டியலிட்டுள்ளார்.
அதில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற த.வெ.க. பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
அதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் 27-ந்தேதி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அவர்களது வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறாமல் அவர்களை மாமல்லபுரம் அழைத்து வந்து சந்தித்தது.

நவம்பர் 27-ந்தேதி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தது. (செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் இணைப்பால் தவெகவுக்கு நன்மைதான்).
டிசம்பர் 27-ந்தேதி எச்.வினேத் இயக்கத்தில் விஜய் நடித்த கடைசி படமான 'ஜனநாயகன்' ஆடியோ வெளியிட்டு விழா, மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
ஜனவரி 27-ந்தேதி 'ஜன நாயகன்' பட சென்ஸார் தொடர்பான வழக்கு மீண்டும் புதிய விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது.
பிப் 27-ந்தேதி விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த செய்தி வெளியானது.
இப்படியாக பட்டியலிட்டு போஸ்ட்டின் இறுதியில் "Mar 27- Be Ready Guys" என்று கூறப்பட்டுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட்டாக்கி வருகிறார்கள். மேலும் இதுதொடர்பாக காரசார விவாதமும் நடைபெற்று வருகிறது.
- பொங்கல் தினத்தை முன்னிட்டு கிராம பூசாரிகளுக்கு புத்தாடை வழங்கப்படும்.
- பூசாரிகளின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகை உயர்த்தப்படும்.
சென்னை மயிலாப்பூரில் நடைபெறும் கிராமக்கோவில் பூசாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூசாரிகளின் நலனுக்காக புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
* பொங்கல் தினத்தை முன்னிட்டு கிராம பூசாரிகளுக்கு புத்தாடை வழங்கப்படும்.
* பூசாரிகள் மரணமடைந்தால் வழங்கப்படும் வாரிசுதாரர் தொகை ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
* கிராம கோவில் பூசாரிகளுக்கான ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.1.25 லட்சமாக உயர்த்தப்படும்.
* இயற்கை எய்தும் கிராம பூசாரிகளின் ஈம சடங்கிற்கான தொகை ரூ.10,000 ஆக உயர்த்தப்படும்.
* ஆண்டுதோறும் 500 பூசாரிகளுக்கு பயிற்சி வழங்கப்படும்.
* பூசாரிகளின் மகன் மற்றும் மகளுக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகை மேலும் ரூ.1000 உயர்த்தப்படும்.
* பூசாரிகளின் மகன் மற்றும் மகளுக்கு வழங்கப்படும் கல்வி நிதி ரூ.1,000 உயர்த்தி வழங்கப்படும்.
* பூசாரிகளின் பிள்ளைகளின் இளநிலை, முதுநிலை படிப்பிற்கான நிதியுதவி மேலும் ரூ.2000 உயர்த்தி வழங்கப்படும்.
* பூசாரிகளின் பிள்ளைகளுக்கு தொழில் சார்ந்த பட்டப்படிப்பு உதவித்தொகை ரூ.2,000 உயர்த்தி வழங்கப்படும்.
* பூசாரிகளின் பிள்ளைகளுக்கு தொழில் பயிற்சி நிலையத்தில் பயில ஆண்டுக்கு ரூ.1000 உயர்த்தி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எம்.ஜி.ஆருக்கும் சோதனைகள் ஏற்பட்டது.
- அநாகரிகமான அரசியல் செய்பவன் நான் அல்ல.
சென்னை:
நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படும் இந்த விவகாரம் பற்றி முன்னாள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-
நடிகர் விஜய்யின் மனைவி விவாகரத்து கோரி கடந்த டிசம்பர் மாதமே செங்கல்பட்டு கோர்ட்டில் மனு கொடுத்துள்ளார். இந்த விவகாரத்தை பொறுத்தவரை விஜய், அவரது மனைவி சங்கீதா, நீதித்துறை ஆகிய 3 பேருக்கும் சம்பந்தப்பட்டது. அதுவும் தனிப்பட்ட மனிதருக்கான, தனிப்பட்ட வாழ்க்கை விஷயம்.
விஜய்யின் அரசியல் பற்றி கருத்து கேட்டால் எப்போதும் நான் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். ஆனால் இது அவரது தனிப்பட்ட வாழ்க்கை. மனைவி, கணவர் ஆகிய இருவரும் எங்கிருந்தாலும் அவர்களுக்குள் சந்தோசம் நிலைக்கட்டும். அவர்களுக்கு அமைதி கிடைக்கட்டும்.
அரசியல் ரீதியாக இதுபற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. நான் ஏற்கனவே சொன்னது போல் இந்த விவகாரம் விஜய்க்கும், அவரது மனைவிக்கும் நீதித்துறைக்கும் இடையேயான பிரச்சனையாகத்தான் பார்க்கிறேன்.
எப்போதுமே அரசியலுக்கு வந்துவிட்டால் தீப்பந்தத்துக்குள் நுழைந்து வெளியே வருவது மாதிரி தான். அதுவரை தோண்டப்படாத தனிப்பட்ட வாழ்க்கையையும் தோண்டுவார்கள். இது விஜய்க்கு மட்டுமல்ல, எல்லா தலைவர்களுக்கும் இருந்ததுதான்.
அரசியலுக்கு வரும் போதே இதை விஜய்யும் உணர்ந்தே வந்திருப்பார் என்று நினைக்கிறேன். இதையும் கடந்துதான் அவர் போக வேண்டும். இதையும் தாண்டிதான் அவரது அரசியல் இருக்கிறது. இவற்றை எல்லாம் பார்த்து மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? ஏற்றுக்கொள்ள மாட்டார்களா? என்பது எல்லாம் தேர்தலில்தான் தெரிய வரும்.
விஜய்யை பொறுத்தவரை இது அவருக்கு தீயை எதிர்கொள்ளும் சோதனையை போன்றதுதான். அரசியலுக்கு வராமல் நிம்மதியாக வீட்டில் இருந்து இருக்கலாம். நட்சத்திர அந்தஸ்துடன் இருந்து இருக்கலாம். நான் கையை தூக்கினால் 1 லட்சம் பேர் ஆரவாரம் செய்வார்கள் என்றெல்லாம் நினைக்கலாம்.
சிரஞ்சீவிக்கு ஏற்பட்ட நிலைதான். எத்தனையோ பெரிய நடிகர்கள் அரசியலுக்கு வந்த பிறகு இதைப் போன்ற அழுத்தங்களையும், சோதனைகளையும் தாண்டியே வந்து இருக்கிறார்கள். எம்.ஜி.ஆருக்கும் சோதனைகள் ஏற்பட்டது. எனவே இதில் பாசிட்டிவ், நெகட்டிவ் பற்றி நான் சொல்ல விரும்பவில்லை.
விஜய் இதை எல்லாம் கடந்துதான் சென்றாக வேண்டும். இதற்கான விலையை அவர் கொடுக்க வேண்டும். நியாய தர்மங்களை தாண்டிதான் அவர் பயணம் செய்ய வேண்டும். என்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட ஒருவருடைய வாழ்க்கையாகவே பார்க்கிறேன். தனிப்பட்ட மனிதனைப் பற்றி விமர்சனம் செய்து அநாகரிகமான அரசியல் செய்பவன் நான் அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
- அ.தி.மு.க. ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சர் யார் என்பது யாருக்கும் தெரியாது.
- தி.மு.க. ஆட்சியில் 4,335 கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் நடைபெறும் கிராமக்கோவில் பூசாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. அதற்கு உதாரணம் தான் இந்த விழா.
* கோவிலுக்குள் அனைவரும் வரலாம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற நிலைக்கு மாற்றி உள்ளோம்.
* கோவில்கள் கொடியவர்களின் கூடாரமாகி விடக்கூடாது என கூறியிருக்கிறார் கலைஞர் கருணாநிதி.
* அ.தி.மு.க. ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சர் யார் என்பது யாருக்கும் தெரியாது.
* இறைப்பற்றை பொறுத்தவரை ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பேரறிஞர் அண்ணா சொன்னதுதான்.
* நான் அதிகமாக கலந்துகொண்ட துறை நிகழ்ச்சி என்றால் அது அறநிலையத்துறையின் நிகழ்ச்சி தான்.
* தி.மு.க. ஆட்சியில் 4,335 கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
* அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் 29 அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
* அறநிலையத்துறையில் 900-க்கும் அதிகமானவர்களுக்கு பணி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
* 11 பெண்கள் உட்பட 41 ஓதுவார்களை நியமனம் செய்துள்ளோம்.
* கிராம கோவில் பூசாரிகளுக்கான ஓய்வூதியம் ரூ.4000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
* 8 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
* ஆன்மிக பற்றாளர்கள் விரும்பக்கூடிய அரசு தான் தி.மு.க. அரசு.
இவ்வாறு அவர் கூறினார்.
- சட்டசபை தேர்தலை முன்னிட்டு மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து வருகிறார் விஜய்.
- கடந்த 23-ந்தேதி வேலூரில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்தினார்.
தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 23-ந்தேதி வேலூரில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்தினார். இதனை தொடர்ந்து அடுத்த கூட்டம் தஞ்சாவூரில் நடைபெறும் என தகவல் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில், த.வெ.க. தலைவர் விஜயின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் வரும் 4-ந்தேதி தஞ்சாவூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து வரும் விஜய் வருகிற புதன்கிழமை தஞ்சாவூரில் நிர்வாகிகளை சந்திக்கிறார்.
இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அனுமதி கோரி த.வெ.க. நிர்வாகிகள் தரப்பில் காவல்துறையிடம் இன்று மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- மத்திய, மாநில உளவு பிரிவு போலீசார், சுங்கத் துறையினரின் சோதனைக்குப் பிறகு பக்தர்கள் படகில் செல்ல அனுமதித்தனர்.
- சிலுவை பாதை நிகழ்ச்சியில் இரு நாட்டு பக்தர்களும் சிலுவையை சுமந்து ஆலயத்தை வலம் வந்தனர்.
ராமேசுவரம்:
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 2 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். தமிழக மற்றும் இலங்கையைச் சேர்ந்த பக்தர்கள் இணைந்து இந்த விழாவை நடத்துகின்றனர். இதன்படி, இந்தாண்டு விழா நேற்று தொடங்கியது.
இதற்காக ராமேசுவரத்தில் இருந்து 90 விசைப்படகுகள் மற்றும் 26 நாட்டுப்படகுகளில் மொத்தம் 3500 பேர் கச்சத்தீவு திருவிழாவிற்கு புறப்பட்டுச் சென்றனர். இவர்களை ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அதிகாரி சங்கர நாராயணன், உதவி போலீஸ் சூப்பிரண்டு மீரா ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
மத்திய, மாநில உளவு பிரிவு போலீசார், சுங்கத் துறையினரின் சோதனைக்குப் பிறகு பக்தர்கள் படகில் செல்ல அனுமதித்தனர். அவர்கள் நேற்று மதியம் கச்சத்தீவை சென்றடைந்தனர். இலங்கை சார்பில் இந்த விழாவிற்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், நேற்று மாலை 5 மணிக்கு அந்தோணியார் ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
இதில் இலங்கையின் நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநாதன் அந்தோணியார் உருவம் பொறித்த கொடியை ஏற்றினார். தொடர்ந்து ராமேசுவரம் வேர்க்கோடு ஆலய பங்குத் தந்தை தாமஸ் பரிபாலன் தலைமையில் முதல் நாள் திருவிழா நடைபெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற சிலுவை பாதை நிகழ்ச்சியில் இரு நாட்டு பக்தர்களும் சிலுவையை சுமந்து ஆலயத்தை வலம் வந்தனர். சிறப்பு ஆராதனைக்கு பிறகு கிறிஸ்தவ பக்தர்களுக்கு நன்மை வழங்கப்பட்டது. இரவு 8 மணிக்கு தேர்பவனி நடைபெற்றது. இதில் நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநாதன், யாழ் மாவட்ட குரு முதல்வர் ஜெபரத்னம் உள்ளிட்ட பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவிழாவின் 2-ம் நாளான இன்று காலை சிறப்பு திருப்பலி, கூட்டு பிராத்தனை யாழ்ப்பாணம் மறைமாவட்ட பிஷப் தலைமையில் நடந்தது. முதலில் தமிழிலும், பின்னர் சிங்களத்திலும் திருப்பலி நடைபெற்றது.
இதில் இரு நாட்டு பக்தர்களும் உற்சாகமாக கலந்து கொண்டனர். கூட்டுத்திருப்பலியைத் தொடர்ந்து கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது. தொடர்ந்து தமிழகத்தில் இருந்து வந்த பக்தர்கள் இலங்கை கடற்படையின் சோதனைக்கு பிறகு விசைப்படகுகள் மற்றும் நாட்டு படகுகள் மூலம் தமிழக பக்தர்கள் தாயகம் திரும்பினர்.
கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்ற தமிழக பக்தர்களை நடுக்கடலில், இந்திய கடலோர காவல் படையினர் சோதனை நடத்தினர்.
ஆண்டுக்கொரு முறை நடைபெறும் திருவிழா என்பதால் இரு நாட்டு பக்தர்களும் உற்சாகமாக கலந்து கொண்டனர். மேலும், இரவு நேரங்களில் இரு நாட்டு பக்தர்களும் தங்களது மகிழ்ச்சி மற்றும் சோகத்தை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டனர். இதனால் அங்கு ஒருவித நெகிழ்ச்சியான சூழல் நிலவியது.
- 2-வது கட்டமாக நாளை புதுச்சேரி, மதுரை என 2 இடங்களில் நடைபெறுகிறது.
- பிரதமர் மோடி தலைமையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறர்கள்.
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அரசியல் கட்சியினர் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்டவற்றில் மும்முரம் காட்டி வருகின்றனர். அதன்படி தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார கூட்டம் மதுராந்தகத்தில் ஜனவரி மாதம் நடைபெற்றது. தற்போது 2-வது கட்டமாக நாளை புதுச்சேரி, மதுரை என 2 இடங்களில் நடைபெறுகிறது.
மதுரை மண்டேலா நகர் சுற்றுச்சாலை பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நாளை மாலை நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி தலைமையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறர்கள்.
இந்நிலையில் மதுரையில் இன்று இரவு அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பா.ஜ.க. தேர்தல் தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயலுடன் அ.தி.மு.க. சார்பில் எஸ்.பி.வேலுமணி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் எனவும் தெரிய வந்துள்ளது. இன்றைய பேச்சின் தொடர்ச்சியாக நாளை இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்பு உள்ளது.
தி.மு.க. அறிவிப்பதற்கு முன்பாக தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து அறிவிக்க அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- தற்போது விருப்ப மனுக்களைப் பொறுத்தவரையில் 234 தொகுதிகளுக்கும் பெறப்படுகிறது.
- விருப்ப மனு விநியோகம் வருகிற மார்ச் 2-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனு விநியோகம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 20-ந்தேதி தொடங்கியது.
9-வது நாளாக இன்று தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் ஆர்வமுடன் விருப்ப மனுக்களைப் பெற்றனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க. இடம் பெற்றுள்ளது. தொடர்ந்து கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க. தொகுதிப் பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் விநியோகம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 20-ந்தேதி தொடங்கியது.
9-வது நாளான இன்று அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்களை தலைமை நிலையச் செயலாளர்கள் பூச்சிமுருகன், துறைமுகம் காஜா, கழக அமைப்பு துணை செயலாளர் ஆஸ்மன், அண்ணா அறிவாலய மேலாளர் பத்மநாபன் ஆகியோர் பெற்றனர். அப்போது கழகத்தினர் ஏராளமானோர் விருப்ப மனுக்களை அளித்தனர்.
தற்போது விருப்ப மனுக்களைப் பொறுத்தவரையில் 234 தொகுதிகளுக்கும் பெறப்படுகிறது. இதே போன்று, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக வந்து திரண்டு விருப்ப மனுக்களை வாங்கிச் செல்கின்றனர்.
தி.மு.க.வில் போட்டியிட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து கொடுத்து உள்ளனர். இதனால் அண்ணா அறிவாலயத்தில் திருவிழா போல் கூட்டம் காணப்படுகிறது. விருப்ப மனு விநியோகம் வருகிற மார்ச் 2-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
- கோவை விமான நிலையத்தில் ஜனவரி மாதத்தில் மொத்தம் 1,871 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.
- கடந்தாண்டு ஜனவரி மாதத்தை காட்டிலும் 8.3 சதவீதம் குறைவாகும்.
கோவை:
கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஐதராபாத், புனே, கோவா ஆகிய உள்நாட்டு பகுதிகளுக்கும், சிங்கப்பூர், ஷார்ஜா, அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே கோவை விமான நிலையத்தில் விமானங்கள் இயக்கம், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற விமான போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து குறித்த விவரங்களை விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதன்படி கோவை விமான நிலையத்தில் ஜனவரி மாதத்தில் மொத்தம் 1,871 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இது கடந்தாண்டு ஜனவரி மாதத்தை காட்டிலும் 8.3 சதவீதம் குறைவாகும்.
இந்த மாதத்தில் கோவை விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டு நகரங்களுக்கு 26 ஆயிரத்து 733 பேர் பயணம் செய்துள்ளனர். இது கடந்தாண்டை விட 9.3 சதவீதம் குறைவாகும். அதேசமயம் உள்நாட்டு நகரங்களுக்கு 2 லட்சத்து 82 ஆயிரத்து 731 பேர் பயணம் செய்துள்ளனர். இது கடந்தாண்டை விட 7.4 சதவீதம் அதிகமாகும்.
ஜனவரி மாதத்தில் மொத்தம் 3 லட்சத்து 9 ஆயிரத்து 464 பேர் பயணம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 5.7 சதவீதம் அதிகமாகும். விமான இயக்கங்களின் எண்ணிக்கை குறைந்து இருந்தாலும், விமான பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
இதேபோன்று கோவை விமான நிலையத்தில் வெளிநாட்டு நகரங்களுக்கு 130.5 மெட்ரிக் டன் சரக்குகளும், உள்நாட்டு நகரங்களுக்கு 830 மெட்ரிக் டன் சரக்குகளும் என மொத்தம் 960.5 மெட்ரிக் டன் சரக்குகளும் கையாளப்பட்டுள்ளது.






