என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஆளுங்கட்சி தலைவர்கள் விசாரணையில் தலையிட்டுள்ளதால் சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்.
- சிபிஐ விசாரணை கேட்ட மனுவை ஏற்கக் கூடாது என அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 5-ந்தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக்கோரி ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மனுத்தாக்கல் செய்து உள்ளார்.
மனுவில், ஆளுங்கட்சி தலைவர்கள் விசாரணையில் தலையிட்டுள்ளதால் சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, சிபிஐ விசாரணை கேட்ட இந்த மனுவை ஏற்கக் கூடாது என அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தாக்கல் செய்த மனு குறித்து அக்.20-ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
- போலீசார் பஸ் கண்ணாடியை உடைத்தாக ஒருவரை போலீஸ் நிலையம் அழைத்து செல்ல முயன்றனர்.
- பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் இருந்து இன்று காைல அரசு பஸ் ஒன்று விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என ஏராளமானோர் பயணம் செய்தனர். இதனால் பஸ்சில் கூட்டம் அலை மோதியது.
இந்த நிலையில் அந்த பஸ் காலை 7.30 மணியளவில் விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டி அருகே வந்த போது அங்குள்ள பஸ் நிறுத்ததில் நிற்காமல் சென்றது. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருந்த மாணவர்கள் பஸ்சின் மீது கல்லை கொண்டு ஏறிந்தனர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு வந்த விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் பஸ் கண்ணாடியை உடைத்தாக ஒருவரை போலீஸ் நிலையம் அழைத்து செல்ல முயன்றனர்.
அப்போது அங்கிருந்த பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதனைதொடர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- தூத்துக்குடியில் 250 ஏக்கரில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும்.
- தூத்துக்குடி, நெல்லையில் முருங்கை ஏற்றுமதி புது மையம் ரூ.5.55 கோடியில் அமைக்கப்படும்.
தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு 4 புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தூத்துக்குடியில் 250 ஏக்கரில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும்.
* நெல்லையில் உணவு பதப்படுத்தும் மண்டலம் அமைக்கப்படும்.
* தூத்துக்குடி, நெல்லையில் முருங்கை ஏற்றுமதி புது மையம் ரூ.5.55 கோடியில் அமைக்கப்படும்.
* கப்பல் தொழில் வளர்ச்சிக்கு தேவையான கட்டுமான தளம் தூத்துக்குடியில் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாட்டில் முதலீட்டாளர்களுக்கான கட்டமைப்பை திராவிட மாடல் அரசு சிறப்பாக உருவாக்கி உள்ளது.
- சொன்னதை செய்வோம் என்பது தான் திமுக அரசின் குறிக்கோள்.
தூத்துக்குடியில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 41 ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* தென் தமிழ்நாடு பற்றி கலைஞர் கண்ட கனவை தற்போது நனவாக்கி வருகிறோம்.
* தமிழ்நாட்டில் முதலீட்டாளர்களுக்கான கட்டமைப்பை திராவிட மாடல் அரசு சிறப்பாக உருவாக்கி உள்ளது.
* முத்துநகரான தூத்துக்குடியில் 2-வது முறையாக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது.
* தென்கிழக்கு ஆசியாவில் இருந்து வரும் கப்பல்களுக்கு நுழைவு வாயில் தூத்துக்குடி.
* செமி கண்டக்டர், மின் வாகனம், பசுமை ஹட்ரஜன் உற்பத்தி போன்ற பல்வேறு துறைகளின் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்தப்படுகிறது.
* வரும் 2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக தமிழ்நாட்டை மாற்றுவோம்.
* சொன்னதை செய்வோம் என்பது தான் திமுக அரசின் குறிக்கோள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தண்ணீர் பற்றாக்குறையால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
- போலீசார் மறியலில் ஈடுபட்டவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
பென்னாகரம்:
தருமபுரி மாவட்டம், ஏரியூர் அடுத்த நாகமரை மேல்காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது. இந்த தொட்டிக்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் வருவதில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் கடும் சிரமம் அடைந்தனர். மேலும் குடிநீர் தேவைக்கு அருகில் உள்ள பகுதிக்கு சென்று தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். தண்ணீர் பற்றாக்குறையால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை 50-க்கும் மேற்பட்டோர் நாகமரை சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த ஏரியூர் போலீஸ் சப்-இன்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அப்போது குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- முகிலன் திருப்பத்தூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-1 படித்து வந்தார்.
- த.வெ.க, பா.ஜ.க மற்றும் இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே கொத்தூரை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மனைவி நளினி. இவர்களுக்கு முகிலன் என்ற மகனும், 4 மகள்களும் உள்ளனர்.
முகிலன் திருப்பத்தூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-1 படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காணாமல் போனதாக முகிலன் தேடப்பட்டு வந்தார். பள்ளியில் உள்ள கிணற்றில் முகிலன் இறந்து மிதந்து கிடந்தார். இதை பார்த்த அவரது பெற்றோர் கதறி அழுதனர். அப்போது மாணவனின் தந்தை சின்னத்தம்பி கிணற்றில் குறித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதை அடுத்து திருப்பத்தூர் தாசில்தான் நவநீதம் முன்னிலையில் போலீசார் முகிலனின் பிணத்தை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் போலீசார் அதிக அளவில் போலீஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது.
மேலும், முகிலனின் சொந்த ஊரான கொத்தூரில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் வாகனங்கள் மூலமாக திருப்பத்தூர் நோக்கி வந்தனர். அவர்களை போலீசார் அங்கேயே தடுத்து நிறுத்தினர் தொடர்ந்து, மர்மமான முறையில் இறந்த மாணவன் முகிலனின் இறப்புக்கான உண்மை காரணத்தை கண்டறிய வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி டவுன் போலீஸ் நிலையம் அருகே திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி சாலையில் மாணவனின் உறவினர்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து. த.வெ.க, பா.ஜ.க மற்றும் இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் கலந்து கொண்டனர்.
அப்போது போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர்.
போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் மறியலில் ஈடுபட்டவர்கள் பிடி கொடுக்காமல் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
ஒரு மணி நேரம் நடந்த போராட்டத்திற்குப் பிறகு போலீசார் மாணவனின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகள் 4 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர். அதன் பிறகு ஓரளவு கூட்டம் அங்கிருந்து கலந்து சென்றது.
இதற்கிடையே மாணவனின் அக்கா வக்கீல் சத்யா கூறுகையில்,
வெள்ளிக்கிழமை மதியம் ஒரு மணிக்கு பள்ளி நிர்வாகம் முகிலனை காணவில்லை என தகவல் கொடுத்தது. இதனால் நாங்கள் பள்ளிக்கு சென்றோம். முறையான பதில் கூறவில்லை. கண்காணிப்பு கேமரா பதிவை காண்பிக்க சொல்லி கேட்டதற்கு அவர்கள் மறுத்தனர். அதன் பிறகு போலீஸ் முன்னிலையில் கண்காணிப்பு கேமரா ஆய்வு செய்தபோது முகிலன் பள்ளியில் இருந்து வெளியே செல்லவில்லை என்பது உறுதியானது.
பள்ளிக்குள் இருக்கும் கிணற்றை பார்க்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்திடம் கேட்டதற்கு பள்ளி கிணற்றின் மேற்பரப்பில் இரும்பு வளையம் போடப்பட்டுள்ளது. கிணற்றில் யாரும் இறங்க முடியாது என்றனர்.
பள்ளி கிணற்றின் மேற்பரப்பில் இரும்பு வளையம் பூட்டப்பட்டிருக்கும் நிலையில் கிணற்றுக்கு எப்படி விழுந்து இறந்தான் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் மாணவனின் தலையில் வட்ட வடிவில் முடி பிடுங்கப்பட்டு இருக்கிறது. அது மட்டும் இன்றி நெற்றி, முதுகுப்பகுதி உள்ளிட்ட இடங்களில் ரத்த காயங்கள் உள்ளது. இதனால் முகிலனின் இறப்பில் சந்தேகம் உள்ளது. இதை சி.பி.சி.ஐ.டி விசாரணை மாற்ற வேண்டும் என்றார்.
மாணவன் இறந்த விவகாரத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க இன்று சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.
மேலும் பள்ளியை சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் 2-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதுமட்டுமின்றி மாணவன் இறப்பிற்கான காரணம் தெரிய வரும் வரை முகிலனின் உடலை வாங்க மாட்டோம் என அவரது பெற்றோர் கூறி வருகின்றனர். இதனால் அந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- இடுப்பளவு தண்ணீருக்குள் இறங்கி பெண்கள் கோஷம் எழுப்பினார்கள்.
- விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஏராளமான சலவை தொழிலாளர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.
திருச்சி:
கொள்ளிடம் அழகிரிபுரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் கடந்த ஆண்டு ரூ.7 கோடியில் கட்டிய தடுப்பணை சேதம் அடைந்தது. இதனால் அந்த பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக சலவை தொழில் செய்து வந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து சலவை தொழிலாளர்களுக்கு தடுப்பு சுவர், படித்துறை கட்டி தர கோரியும், காவிரியுடன் அய்யாற்றை இணைக்க வலியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக் கண்ணு தலைமையில் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தப்பட்டது.
இடுப்பளவு தண்ணீருக்குள் இறங்கி பெண்கள் கோஷம் எழுப்பினார்கள். இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஏராளமான சலவை தொழிலாளர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
- பிரதமர் மோடியிடம் தான் முறையிட்ட பிறகே சிபில் ஸ்கோர் முறை ரத்துசெய்யப்பட்டது.
- அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் நெல் கொள்முதல் தொகை விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
நெல்லையில் விவசாயிகள், கட்டடத் தொழிலாளர்கள், வியாபாரிகளுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:
* பிரதமர் மோடியிடம் தான் முறையிட்ட பிறகே சிபில் ஸ்கோர் முறை ரத்துசெய்யப்பட்டது.
* தற்போது ஷிப்ட் முறைப்படி விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது.
* சொட்டு நீர் பாசனத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு, அதிக மானியம் பெற்றுக் கொடுத்தோம்.
* அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.
* அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் நெல் கொள்முதல் தொகை விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வின்பாஸ்ட் நிறுவனம் தனது முதலீட்டிற்காக தமிழ்நாட்டை தேர்வு செய்ததை பெருமையாக கருதுகிறேன்.
- எளிமையாக தொழில் தொடங்க உகந்த மாநிலம் என்பதற்கு இதுவே சான்று.
தூத்துக்குடியில் வின்பாஸ்ட் கார் ஆலையை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுக்கு வின்பாஸ்ட் அதிகாரிகளை வரவேற்கிறேன்.
* வின்பாஸ்ட் நிறுவனம் தனது முதலீட்டிற்காக தமிழ்நாட்டை தேர்வு செய்ததை பெருமையாக கருதுகிறேன்.
* இந்த பெருமையில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு பங்கு உண்டு.
* வின்பாஸ்ட் நிறுவனம் தமிழ்நாட்டின் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி.
* இந்தியாவின் மொத்த மின்சார கார்கள் உற்பத்தியில் தமிழ்நாடு 40%.
* மின்சார கார்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.
* வின்பாஸ்ட் நிறுவனம் ஒப்பந்தம் போடப்பட்ட 17 மாதங்களில் ஆலையில் உற்பத்தி தொடங்கி உள்ளது.
* எளிமையாக தொழில் தொடங்க உகந்த மாநிலம் என்பதற்கு இதுவே சான்று.
* இந்தியாவிலேயே தூத்துக்குடியில் தான் முழுமையான மின்சார கார் உற்பத்தி ஆலை தொடங்கப்பட்டுள்ளது.
* சென்னை, காஞ்சி, கோவை, ஓசூரை தொடர்ந்து மோட்டார் வாகன தொழிற்கூடமாக உருவெடுக்கும் தூத்துக்குடி.
* * ஹூண்டாய், நிசான் , டாடா, பிஎம்டபிள்யூ, ஓலா போன்ற நிறுவனங்கள் மின் வாகன உற்பத்தியை தொடங்கின.
* கல்வி, மருத்துவம், தகவல் தொழில்நுட்பத்திலும் வின்பாஸ்ட் முதலீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பல்வேறு வடிவமைப்புடன் கூடிய போர்வைகள் தயாரிக்கப்படுகிறது.
- கைத்தறி மூலம் சுதந்திர போராட்ட வீரர்களின் படங்களை போர்வையில் நெய்யப்பட்டது.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் கைத்தறி மூலம் தயாரிக்கப்படும் போர்வை உலக அளவில் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது.
கைத்தறி மூலம் பல்வேறு வடிவமைப்புடன் கூடிய போர்வைகள் தயாரிக்கப்படுகிறது. கைத்தறி மூலம் காந்தி, கிரிக்கெட் வீரர் டோனி மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் படங்களை போர்வையில் நெய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னிமலையின் பாரம்பரியத்தின் அடையாளமான கைத்தறி போர்வையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம், மேஜர் முகுந்த் வரதராஜனின் படமும் இணைந்து கைத்தறி நெசவாளர் அப்புசாமி என்பவரால் நெய்யப்பட்டது.
இந்த போர்வையை சென்னிமலை ஒன்றிய தலைமை சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தின் சார்பிலும், நெசவாளர்கள் அப்புசாமி இணைந்து நடிகர் சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்து கைத்தறி போர்வையை பரிசாக வழங்கினர்.
- வின்பாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலை திறப்பு விழா இன்று நடைபெற்றது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மின்சார காரில் முதல் பயணம் செய்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் வியட்நாம் நாட்டை சேர்ந்த 'வின்பாஸ்ட்' நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடியில் ஆண்டுக்கு 1½ லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆண்டு இந்த தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார்.
முதல் கட்டமாக ரூ.1,119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 2 பணிமனைகள், 2 குடோன்கள், கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த தொழிற்சாலையில் கார் உற்பத்திக்கான பணிகள் நிறைவடைந்த நிலையில் 'வி.எப்-6, வி.எப்-7' ஆகிய 2 வகை கார்களை விற்பனைக்கு வழங்குவதற்கு வின்பாஸ்ட் நிறுவனம் தயாரானது.
இந்நிலையில் வின்பாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அவருக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதாராதாகிருஷ்ணன் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அங்கிருந்து வின்பாஸ்ட் ஆலைக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நடைபெற்ற விழாவில் ஆலையை திறந்து வைத்து கார் விற்பனையை தொடங்கி வைத்தார்.
முதல் கார் விற்பனையை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்.பி. கனிமொழியுடன் சேர்ந்து மின்சார காரில் முதல் பயணம் செய்தார்.
- வழிபாடு தலத்திற்கு வரக்கூடிய பக்தர்களிடம் ராம் சேது யாத்திரை பணியாளர்கள் பணம் வசூலிக்க கூடாது என உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
- கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே கோதண்டராமர் கோவில் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருவது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில் கோதண்டராமர் கோவில் அருகே உள்ள கடற்கரை பகுதியில் இலங்கைக்கு ராமர் செல்லும்போது கடல் நடுவே பாலம் அமைத்து சென்றதாகவும், அதற்கு பயன்படுத்திய தண்ணீரில் மிதக்கும் கல்லை வைத்து வழிபாட்டு தலம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வரும் பக்தர்களிடம் ராமாயணக் கதைகளை கூறி மிதக்கும் கல்லின் அதிசயத்தையும் எடுத்துரைத்து வரக்கூடிய பக்தர்களிடம் ரூ.20 பணம் வசூல் செய்து சுமார் 85 ராம் சேது யாத்திரை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் ராமநாத சாமி கோவில் இணை ஆணை யர் செல்லதுரை, கோதண்ட ராமர் கோவில் அருகே அமைக்கப்பட்ட வழிபாடு தலத்திற்கு வரக்கூடிய பக்தர்களிடம் ராம் சேது யாத்திரை பணியாளர்கள் பணம் வசூலிக்க கூடாது என உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
இதனை எதிர்த்து ராம் சேது பணியாளர்கள் சுமார் 85 பேர் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்டோர் கோதண்ட ராமர் கோவில் அருகே, தனுஷ்கோடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.






