என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பள்ளி கிணற்றில் மாணவர் மர்ம சாவு- உடலை வாங்க 2-வது நாளாக பெற்றோர் மறுப்பு
- முகிலன் திருப்பத்தூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-1 படித்து வந்தார்.
- த.வெ.க, பா.ஜ.க மற்றும் இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே கொத்தூரை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மனைவி நளினி. இவர்களுக்கு முகிலன் என்ற மகனும், 4 மகள்களும் உள்ளனர்.
முகிலன் திருப்பத்தூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-1 படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காணாமல் போனதாக முகிலன் தேடப்பட்டு வந்தார். பள்ளியில் உள்ள கிணற்றில் முகிலன் இறந்து மிதந்து கிடந்தார். இதை பார்த்த அவரது பெற்றோர் கதறி அழுதனர். அப்போது மாணவனின் தந்தை சின்னத்தம்பி கிணற்றில் குறித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதை அடுத்து திருப்பத்தூர் தாசில்தான் நவநீதம் முன்னிலையில் போலீசார் முகிலனின் பிணத்தை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் போலீசார் அதிக அளவில் போலீஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது.
மேலும், முகிலனின் சொந்த ஊரான கொத்தூரில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் வாகனங்கள் மூலமாக திருப்பத்தூர் நோக்கி வந்தனர். அவர்களை போலீசார் அங்கேயே தடுத்து நிறுத்தினர் தொடர்ந்து, மர்மமான முறையில் இறந்த மாணவன் முகிலனின் இறப்புக்கான உண்மை காரணத்தை கண்டறிய வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி டவுன் போலீஸ் நிலையம் அருகே திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி சாலையில் மாணவனின் உறவினர்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து. த.வெ.க, பா.ஜ.க மற்றும் இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் கலந்து கொண்டனர்.
அப்போது போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர்.
போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் மறியலில் ஈடுபட்டவர்கள் பிடி கொடுக்காமல் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
ஒரு மணி நேரம் நடந்த போராட்டத்திற்குப் பிறகு போலீசார் மாணவனின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகள் 4 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர். அதன் பிறகு ஓரளவு கூட்டம் அங்கிருந்து கலந்து சென்றது.
இதற்கிடையே மாணவனின் அக்கா வக்கீல் சத்யா கூறுகையில்,
வெள்ளிக்கிழமை மதியம் ஒரு மணிக்கு பள்ளி நிர்வாகம் முகிலனை காணவில்லை என தகவல் கொடுத்தது. இதனால் நாங்கள் பள்ளிக்கு சென்றோம். முறையான பதில் கூறவில்லை. கண்காணிப்பு கேமரா பதிவை காண்பிக்க சொல்லி கேட்டதற்கு அவர்கள் மறுத்தனர். அதன் பிறகு போலீஸ் முன்னிலையில் கண்காணிப்பு கேமரா ஆய்வு செய்தபோது முகிலன் பள்ளியில் இருந்து வெளியே செல்லவில்லை என்பது உறுதியானது.
பள்ளிக்குள் இருக்கும் கிணற்றை பார்க்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்திடம் கேட்டதற்கு பள்ளி கிணற்றின் மேற்பரப்பில் இரும்பு வளையம் போடப்பட்டுள்ளது. கிணற்றில் யாரும் இறங்க முடியாது என்றனர்.
பள்ளி கிணற்றின் மேற்பரப்பில் இரும்பு வளையம் பூட்டப்பட்டிருக்கும் நிலையில் கிணற்றுக்கு எப்படி விழுந்து இறந்தான் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் மாணவனின் தலையில் வட்ட வடிவில் முடி பிடுங்கப்பட்டு இருக்கிறது. அது மட்டும் இன்றி நெற்றி, முதுகுப்பகுதி உள்ளிட்ட இடங்களில் ரத்த காயங்கள் உள்ளது. இதனால் முகிலனின் இறப்பில் சந்தேகம் உள்ளது. இதை சி.பி.சி.ஐ.டி விசாரணை மாற்ற வேண்டும் என்றார்.
மாணவன் இறந்த விவகாரத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க இன்று சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.
மேலும் பள்ளியை சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் 2-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதுமட்டுமின்றி மாணவன் இறப்பிற்கான காரணம் தெரிய வரும் வரை முகிலனின் உடலை வாங்க மாட்டோம் என அவரது பெற்றோர் கூறி வருகின்றனர். இதனால் அந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






