என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழ்நாடு காங்கிரசில் எவ்வித கட்டுப்பாடுமற்று தொடரும் உட்கட்சிப் பிரச்சனைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது.
- ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
எந்த ஒரு அரசியல் கட்சியும், தனது கட்சி பாராளுமன்ற உறுப்பினரை, தேர்தல் நேரத்தில், தேர்தல் ஆணையத்திற்கு வாக்குச்சாவடி முகவர் பட்டியலை கொடுக்க விடாமல் முடக்க வேண்டும் என்று நினைக்காது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் அது நடக்கிறது.
தமிழ்நாடு காங்கிரசில் நடைபெறும் விஷயங்கள் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. கொள்கை நிலைப்பாடுகளை, அரசியல் செயல்பாடுகளை நீர்த்துப் போகச் செய்ய நடக்கும் முயற்சிகள் மிகுந்த வேதனை அளிக்கிறது . தினமும் தமிழ்நாடு காங்கிரஸ், மக்கள் பிரச்சனைகள் அல்லாத தவறான காரணங்களுக்காகவே செய்திகளில் அடிபடுகிறது.
தமிழ்நாடு எந்தக் காலத்திலும் இல்லாத, ஒரு பேராபத்தை, மதவாத, பிரிவினைவாத, வன்முறை சக்திகளிடமிருந்து எதிர்நோக்கி உள்ளது.
எதையாவது செய்து, மக்கள் உணர்வுகளைத் தூண்டி, ஆட்சி அதிகாரத்தைப் பிடித்து, பெருந்தலைவர் காமராசர், பெரியார் உள்ளிட்ட மாபெரும் தலைவர்களால் கட்டிக்காக்கப்பட்ட இம்மண்ணின் சமூக நீதி, சுயமரியாதை, மக்கள் நல அரசியல், வளர்ச்சியை குழிதோண்டிப் புதைக்க ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது.
இந்தச் சூழலில், எதிர்நோக்கியுள்ள தேர்தலை மிகக் கவனமாக கையாள வேண்டிய பொறுப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது.
ஆனால் காங்கிரஸ் கட்சி அந்த மாபெரும் பொறுப்பை சரியாக உணர்ந்துள்ளதா என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. 60 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத போதும் தொடர்ந்து காங்கிரஸ் கொடியை, ஒவ்வொரு ஊரிலும் பெருமையோடு கையில் ஏந்தியிருக்கும் காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளையும், மதவாத, பிரிவினைவாத சூழ்ச்சிக்கு அடிபணியாமல் சமூக நீதி, சுயமரியாதை, மாநில உரிமைகளுக்காகப் போராடுவதில் உறுதியோடு இருக்கும் நமது தமிழ்நாட்டு மக்களையும் நாம் கைவிட்டு விடக்கூடாது.
தமிழ்நாடு காங்கிரசில், எவ்வித கட்டுப்பாடுமற்று தொடரும் உட்கட்சிப் பிரச்சனைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. சித்தாந்த ரீதியான அரசியலை காத்திரமாக முன்னெடுக்காமல், மக்கள் பிரச்சனைகளைப் பற்றிப் பேசாமல், வெறும் கூட்டல் கழித்தல்களை மட்டுமே செய்து கொண்டு, ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்பதை உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் உணர வேண்டிய நேரம் இது.
தலைவர் ராகுல்காந்தி அவர்களின் தன்னலமற்ற, கொள்கைப் பிடிப்பு மிகுந்த, அச்சமற்ற அரசியலுக்கு நேர் எதிரான பாதையில் தமிழ்நாடு காங்கிரஸ் சென்று கொண்டிருக்கிறது. அவரது கடின உழைப்பிற்கும், ஒப்பற்ற தியாகத்திற்கும் நாம் துரோகம் செய்ய முடியாது.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் அடையாளம், மரியாதை என்பது பெருந்தலைவர் காமராசர் கட்டிக் காத்த பாரம்பரியத்திற்கும், நேரு காந்தி குடும்பத்தின் தியாகத்திற்குமான தமிழ்நாட்டு மக்களின், அன்பும், மரியாதையும் தான் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்னையில் 8-ம் நாளாக இன்றும் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- நீதி கேட்டு போராடும் ஆசிரியர்கள் மீது திமுக அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சமவேலைக்கு சம ஊதியம் கோரி சென்னையில் எட்டாம் நாளாக இன்றும் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் நேற்றைய போராட்டத்தின் போது ஆசிரியர்கள் சிலரை காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். நீதி கேட்டு போராடும் ஆசிரியர்கள் மீது திமுக அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது.
இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. 2009- மே மாதம் 31-ஆம் நாள் வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஜூன் 1-ஆம் தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையே அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 ஊதிய முரண்பாடு நிலவுகிறது. இதனால் 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ரூ.16 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை குறைவான ஊதியம் தான் கிடைக்கிறது. இந்த அநீதியை இழைத்தது திமுக அரசு தான். அது தான் இந்த அநீதியைப் போக்க வேண்டும்.
திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது இந்தக் கோரிக்கையை ஆதரித்தது. போராடிய ஆசிரியர்களை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்களே நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதன்பின் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்படும் என்று வாக்குறுதி (எண். 311) அளித்தார். ஆனால், இப்போது அதிகாரம் கிடைத்ததும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு பதிலாக அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகிறார்.
தங்களுக்கான நீதியைக் கேட்டு போராடும் ஆசிரியர்களை ஒவ்வொரு நாளும் கைது செய்து திமுக அரசு அலைக்கழிக்கிறது. கைது செய்யப்படும் போது பெண் ஆசிரியர்கள் மனிதநேயமின்றி கொடூரமாக நடத்தப்படுகின்றனர். சென்னையில் நேற்று போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட ஆசிரியர் சங்கத் தலைவர் வில்லியம் என்பவரை காவல்துறை அதிகாரி ஒருவர் பேருந்துக்குள் குண்டுக்கட்டாக தூக்கி வீசியதுடன் கன்னத்தில் அறையும் காணொலி சமூக வலைத்தலங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஜானகிராமன் என்ற ஆசிரியரின் கை உடைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இத்தகைய அடக்குமுறைகளை மன்னிக்க முடியாது. இத்தகைய அடக்குமுறைகளின் மூலம் போராட்டத்தை முடக்கிவிடவும் முடியாது. ஆசிரியர்களை தாக்கிய காவல்துறையினர் மீது தமிழக அரசு சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கற்றறிந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கு முக்கியப் பங்களிக்கும் ஆசிரியர்களை போராடும் நிலைக்கு தள்ளும் எந்த அரசும் நீடித்த வரலாறு இல்லை. திமுக அரசு அதையும் கடந்து ஆசிரியர்களைத் தாக்குதல் உள்ளிட்ட அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு வருகிறது. இதற்கான பாடத்தை திமுகவுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் புகட்டுவார்கள்.
- தமிழகம் மற்றும் புதுவையில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
- நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம் மற்றும் புதுவையில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம் மற்றும் புதுவையில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
4-ந்தேதி முதல் 8-ந்தேதிவரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம் மற்றும் புதுவையில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° குறைந்தபட்ச வெப்பநிலை 23" செல்சியஸை ஒட்டியும் செல்சியஸை ஒட்டியும், இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 6-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- காளைகளுக்கு கண், கொம்பு, திமில், பற்கள், உயரம் ஆகியவைகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்.
- ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் அவனியாபுரத்தில் முன்னேற்பாடுகளை மேற்கொள்ள ரூ.67 லட்சம் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.
மதுரை:
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையன்று நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை.
அதன்படி வருகிற 15-ந்தேதி பொங்கல் பண்டிகையன்று அவனியாபுரத்திலும், 16-ந்தேதி பாலமேட்டிலும், 17-ந்தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.
மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க செய்ய மாடு வளர்ப்போர் தங்களது காளைகளை தயார்படுத்தி வருகின்றனர். நீச்சல், மண் குத்துதல், ஓட்டம் உள்ளிட்ட பயிற்சிகளோடு, சத்தான தீவணங்களையும் வழங்கி வருகின்றனர். முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் அவனியாபுரத்தில் முன்னேற்பாடுகளை மேற்கொள்ள ரூ.67 லட்சம் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு உடல் பரிசோதனை இன்று தொடங்கியது. அவனியாபுரத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் இன்று காலை முதலே நூற்றுக்கணக்கானோர் தங்களது காளைகளை அழைத்து வந்திருந்தனர்.
காளைகளுக்கு கண், கொம்பு, திமில், பற்கள், உயரம் ஆகியவைகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளையுடன் காளையின் உரிமையாளர் மற்றும் உதவியாளர் அடங்கிய புகைப்படங்களையும் விண்ணப்பத்துடன் இணைத்து அவற்றுக்கு தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது.
கால்நடை மருத்துவர் உள்பட 3 பேர் கொண்ட குழுவினர், நாட்டு மாட்டு இனங்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெற வேண்டும் என்ற அடிப்படையில் பல சோதனைகளை செய்தனர். ஜல்லிக்கட்டு மாடுகளுக்கான உயரம் 120 சென்டி மீட்டர் இருக்க வேண்டும். கொம்பு கூர்மையாக இருக்க கூடாது. கண்பார்வை, கொம்பு இடைவெளி, உடற்தகுதி போன்றவை பரிசோதனை செய்யப்பட்டது.
- 6 கோவில்களுக்கு சொந்தமான 8 குளங்கள் ரூ.2.19 கோடி செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.
- ஒரு சில கோவில்களுக்கு வருமானம் இல்லாததையும் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
நாகர்கோவில்:
இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு சுசீந்திரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் குமரி மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 127 கோவில்கள் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. நீண்ட கோரிக்கைகளுக்கு பிறகு திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகமும், மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் ஏற்பட்ட தீவிபத்துக்கு பிறகு கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் அதிகளவில் தி.மு.க. ஆட்சியில் தான் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது என்பதை நாங்கள் பெருமையுடன் கூறுவோம். அதேபோல் 12 திருக்கோவில்களுக்கு சொந்தமான 20 திருத்தேர்கள் ரூ.1.85 கோடி செலவில் தேர்களுக்கான பாதுகாப்பு கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
6 கோவில்களுக்கு சொந்தமான 8 குளங்கள் ரூ.2.19 கோடி செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. சுசீந்திரம் கோவில் குளம் புனரமைக்கும் பணிகள் ரூ.34 லட்சம் செலவில் நடந்தபோது எதிர்பாராதவிதாக ஏற்பட்ட சரிவினால் அந்த பணிகளுக்கு மறுஒப்பந்தம் கோர ஆணையருக்கு அனுப்பட்டுள்ளது. ஆணையர் அனுமதி பெற்று இந்த மாத இறுதிக்குள் மீண்டும் பணிகள் தொடங்கும்.
தெப்பத்திருவிழாவை முன்னிட்டு சுசீந்திரம் குளத்தை செப்பனிடும் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியின்போது கடந்த 2021-ம் ஆண்டு குமரி மாவட்ட கோவில்களுக்கு மொத்தமாக ரூ.3 கோடி மானியம் அரசு வழங்கியது.
கோவில்களின் விழா செலவினங்கள், கோவில் பணியாளர்கள், தினமும் ஏற்படும் உற்சவங்கள் உள்ளிட்ட பல்வேறு செலவினங்களை அதிகம் ஆவதாவலும், ஒரு சில கோவில்களுக்கு வருமானம் இல்லாததையும் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் ஆண்டுக்கு ரூ.18 கோடியாக மானியமாக வழங்கப்படுகிறது. இதன்மூலம் 490 கோவில்களுக்கு இதுவரை ரூ.58 கோடியில் மானியம் தி.மு.க. அரசு வழங்கி உள்ளது. மேலும் 1000 ஆண்டு பழமையான கோவில்களுக்கு தொல்லியல் துறை மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு குடமுழுக்கு நடத்தப்படும்.
குறிப்பாக 12 ஆண்டுகளுக்குள் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க. ஆட்சியில் 3967 திருக்கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. வருகிற பிப்ரவரி மாதம் 4 ஆயிரம் கும்பாபிஷேகமாக சென்னையில் உள்ள ரவீஸ்வரன் கோவிலுக்கு நடக்க இருக்கிறது. தரையில் இருந்து 6 அடிக்கு கீழ் உள்ள ரவீஸ்வரன் கோவில் உள்பட 25 கோவில்கள் லிப்டிங் முறையில் உயர்த்தப்பட்டு வருகிறது.
இரணியல் கோட்டை பழைமை மாறாமல் கட்ட வேண்டும் என்பதற்காக ரூ.3 கோடியில் ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்டது. தற்போது ரூ.8 கோடி தேவை உள்ளது. அந்த பணிகள் விரைவில் முடிக்கப்படும். கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் கோபுரம் அமைப்பதற்கு பெரும் திட்ட வளாகம் பணிகள் எடுத்து இருக்கிறோம்.
ரூ.33 கோடி செலவில் அதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு, வடிவமைப்பு முடிந்து ஒப்பந்தம் விரைவில் கோரப்பட்டு விரைவில் பணிகள் தொடக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு பேச்சுவார்த்தை நடத்தினர்.
- ஆலோசனையின்போது பழைய ஓய்வூதிய திட்டம், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில் போட்டா ஜியோ, ஜாக்டோ-ஜியோ அமைப்பினருடன் அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தினர்.
போட்டா ஜியோ, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வரும் 6-ந்தேதி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆலோசனையின்போது பழைய ஓய்வூதிய திட்டம், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.
அமைச்சர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்து கோரிக்கை ஏற்கப்பட்டதாக போட்டா ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போட்டா ஜியோ நிர்வாகிகள் கூறுகையில்,
பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார் என்று தெரிவித்தனர்.
- சாதி, மத மோதல்களை உருவாக்கும் வகையில் பொறுப்புகளில் உள்ளவர்களே பேசுகிறார்கள்.
- கிறிஸ்துமஸ் விழாவின் போது நாட்டின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது.
திருச்சியல் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் அவர் விழாவில் பேசியதாவது:-
* இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப்பொருளை நாம் நிச்சயமாக ஒழிக்க வேண்டும்.
* போதையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
* போதைப்பொருளை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஓரளவு பலன் கிடைத்துள்ளது.
* போதைப்பொருள் பழக்கம் என்பது மிகப்பெரிய நெட்ஒர்க். மத்திய, மாநில அரசுகள் இணைந்துதான் ஒழிக்க முடியும்.
* நாட்டின் எல்லைகள் வழியாக போதைப்பொருள் நாட்டிற்குள் நுழைவதை மத்திய அரசு தடுக்க வேண்டும்.
* திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான போதைமாத்திரைகள் பிடிப்பட்டுள்ளது.
* போதை ஒழிப்பில் கலைத்துறையை சேர்ந்தவர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
* போதையை புகழ்வது போன்ற காட்சிகளை எடுப்பதை ஏற்க முடியாது.
* இளைஞர்கள் வழித்தவறி போகாமல் பெற்றோர், சகோதரர்கள் கண்காணிக்க வேண்டும்.
* பிள்ளைகளை பொறுப்புடன் வளர்க்க வேண்டும்.
* பிள்ளைகள் வழித்தவறி செல்லாமல் தடுக்க வேண்டும், பிள்ளைகளிடம் மனம் விட்டு பேசுங்கள்.
* சாதி, மத மோதல்களை உருவாக்கும் வகையில் பொறுப்புகளில் உள்ளவர்களே பேசுகிறார்கள்.
* கிறிஸ்துமஸ் விழாவின் போது நாட்டின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது.
* ஊரே ஒற்றுமையாக இருந்த காலம் போய், மத மோதல்களை உருவாக்க சிலர் திட்டம் தீட்டுகிறார்கள்.
* மது போதையையும், மத போதையையும் தமிழகத்திற்குள் நுழைவதை தடுக்க வேண்டும்.
* வைகோவின் நோக்கம் பெரிது என்றாலும், அவரது உடல் நிலை எங்களுக்கு பெரிது என்றார்.
- கலைஞர் கருணாநிதிக்கு அருகில் இருந்து அரசியல் கற்றுக்கொண்டவர் வைகோ.
- கலைஞர் கருணாநிதி நடைபயணம் மேற்கொண்ட போது அவருக்கு பாதுகாப்பாக நடந்தவர் வைகோ.
திருச்சியல் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் அவர் விழாவில் பேசியதாவது:-
* 2026-ம் ஆண்டில் நான் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இதுதான்.
* தனது பொதுவாழ்வில் தமிழ்நாட்டில் தனது காலடி படாத இடமே இல்லை என மக்கள் பிரச்சனைக்காக நடைபயணம் சென்றவர் வைகோ.
* வைகோவிற்கு 82 வயதா? 28 வயதா? என ஆச்சரியப்பட தோன்றுகிறது.
* வைகோவின் நெஞ்சுரத்தை பார்க்கும் போது அவரது வயதே நமக்கு கேள்வியாகிறது.
* தள்ளாத வயதிலும் தளராமல் தொண்டு செய்தவர் தந்தை பெரியார்.
* 83 வயதிலும் சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்களுடன் அரசியல் பேசியவர் கலைஞர்.
* கலைஞர் கருணாநிதிக்கு அருகில் இருந்து அரசியல் கற்றுக்கொண்டவர் வைகோ.
* கலைஞர் கருணாநிதி நடைபயணம் மேற்கொண்ட போது அவருக்கு பாதுகாப்பாக நடந்தவர் வைகோ.
* திராவிட இயக்க பல்கலைக் கழகத்தில் பயின்றவர்கள் நானும், வைகோவும்.
* இளைஞர்களுக்கு உரிய உத்வேகத்தை வைகோவிடம் பார்க்க முடிகிறது.
* சமத்துவ நடைபயணத்தில் பங்கேற்கும் ஒவ்வொருவரையும் வைகோ தேர்வு செய்து வந்துள்ளார்.
* முதுமையை முற்றிலும் தூக்கி எறிந்துவிட்டு நடைபயணத்தை வைகோ தொடங்கி உள்ளார்.
* நடைபயணத்தால் என்ன பயன் எனக்கேட்கிறார்கள், காந்தியின் நடைபயணம்தான் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
* இதுபோன்ற நடைபயணங்கள் தான் நமது கருத்தை எளிதாக மக்களிடம் கொண்டு செல்லும்.
* இளைஞர்களுக்கு நல்வழி காட்டிட இளைஞர்களுடன் சமத்துவ பயணம் மேற்கொள்ளும் வைகோவிற்கு வாழ்த்துகள், பாராட்டுகள் என்றார்.
- ஆண்டிபட்டியில் இருந்து நேற்று இரவு பாதயாத்திரையாக சபரிமலைக்கு புறப்பட்டனர்.
- விபத்தில் பலியான குமார் என்ற மாரிச்சாமி ஆண்டிபட்டியில் மருந்து கடை வைத்துள்ளார்.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மேலத்தெருவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வருடம் தோறும் அதே பகுதியை சேர்ந்த மாரிச்சாமி என்ற குருசாமி தலைமையில் சபரிமலைக்கு பாதயாத்திரையாக செல்வது வழக்கம். அதன்படி மாரிச்சாமி (வயது55) தலைமையில் ராம்கி (35) மற்றும் 7 பேருடன் ஆண்டிபட்டியில் இருந்து நேற்று இரவு பாதயாத்திரையாக சபரிமலைக்கு புறப்பட்டனர்.
இன்று அதிகாலை அவர்கள் சின்னமனூர் அருகில் உள்ள கோட்டூர்-சீலையம்பட்டி சத்தியா கார்டன் பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா மேலப்பாடியூரை சேர்ந்த சிவக்குமார் (34) என்பவர் வேனில் ஐயப்ப பக்தர்களுடன் சபரிமலைக்கு சென்று கொண்டிருந்தார். அதிகாலை 4.30 மணி அளவில் மற்றவர்கள் முன்னே சென்று விட மாரிச்சாமி, ராம்கி மட்டும் பின்னால் வந்துகொண்டிருந்தனர். இவர்கள் மீது அந்த வேன் பயங்கரமாக மோதியது. இதில் மாரிச்சாமி மற்றும் ராம்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதை பார்த்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சின்னமனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிரிழந்த 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சின்னமனூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஈஸ்வரன், மோகன்தாஸ், காந்தி ஆகியோர் வழக்குப்ப திவு செய்து விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் பலியான குமார் என்ற மாரிச்சாமி ஆண்டிபட்டியில் மருந்து கடை வைத்துள்ளார். இவரது மனைவி கல்பனாதேவி அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். மகள் கல்லூரியிலும், மகன் 12-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இதேபோல் விபத்தில் பலியான ராம்கி சலவை தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். ஒரு மகன் 3-ம் வகுப்பும் மற்றொரு மகன் 1-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
சபரிமலைக்கு சென்ற பக்தர்கள் மீது சபரிமலைக்கு சென்ற வேன் மோதியதில் 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
- கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 26 செ.மீ. மழை பதிவானது.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் ஜனவரி மாதம் 2-வது வாரம் வரை இருந்தாலும் பொதுவாக டிசம்பர் மாதத்திற்குள் அதிகபட்ச மழை பெற்று முடிந்து விடும். ஜனவரி மாதத்தில் படிப்படியாக குறைந்து பருவமழை விலகி விடும்.
ஆனால் இந்த வருடம் ஜனவரி மாதத்திலும் கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கையையொட்டி மேலடுக்கு காற்றழுத்த சுழற்சி உருவாகி இருப்பதால் தமிழகத்தில் இன்றும் நாளையும் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழையும் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.
இன்றும் நாளையும் இடியுடன் மழையும் அதன் பின்னர் மழை குறைந்து 10-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 26 செ.மீ. மழை பதிவானது. தென்காசி மாவட்டம் கடனாஅணை 24 செ.மீ., குன்னூர் 21 செ.மீ., சிவகிரி 17 (தென் காசி), வீரபாண்டி (தேனி) 12, கோத்தகிரி (11 செ.மீ., சேரன் மாதேவி 10 செ.மீ. மழை பெய்துள்ளது.
- இந்த பயணம் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்றும் அவர் கூறினார்.
- தினமும் 15 முதல் 17 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறார்.
திருச்சி:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒருசில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.
இதில் தி.மு.க. கூட்டணியில் தற்போது இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் மேலும் சில கட்சிகளை சேர்க்கவும் முயற்சிகள் நடந்து வருகிறது.
அதேபோல் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி உருவாகியுள்ள நிலையில் பொங்கலுக்கு பிறகு முக்கிய கட்சிகள் இணைந்து பலமான கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனு பெறும் பணியும் ஒருபுறம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் இருந்து மதுரை வரை 12 நாட்கள் சமத்துவ நடைபயணம் மேற்கொள்கிறார். போதைப்பொருளுக்கு மாணவர்கள், இளைஞர்கள் என பலரும் அடிமையாவதை தடுக்கவும், அதேபோன்று தற்போது சாதிய மோதல்கள், மத மோதல்களை தமிழகத்தில் உருவாக்க சிலர் பார்க்கிறார்கள்.
அதை தடுப்பதற்கு மக்க ளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி சகோதரர்களாக ஒருவருக்கொருவர் இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சி 2026 ஆண்டிலும் தொடரவும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் இந்த நடைபயணம் செல்வதாகவும் வைகோ அறிவித்து இருந்தார்.
மேலும் இந்த பயணம் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்றும் அவர் கூறினார். முன்னதாக திருச்சியில் இன்று நடைபெற்ற சமத்துவ நடைபயணத்தை தொடங்கி வைக்குமாறு தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை, வைகோ நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தார். அதேபோல் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை.வைகோ அழைப்பிதழ் வழங்கினார்.
அதன்படி வைகோவின் சமத்துவ நடைபயண தொடக்க விழா இன்று திருச்சி தென்னூர் உழவர்சந்தை அருகில் உள்ள மாநகராட்சி திடலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை திருச்சி வருகை தந்தார். விமான நிலையத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, மெய்யநாதன், சிவசங்கர், கோவி செழியன், கலெக்டர் சரவணன், மேயர் அன்பழகன், மாவட்ட செயலாளர்கள் வைரமணி, காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ., மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விமான நிலையத்தில் இருந்து நடைபயண தொடக்க விழா நடைபெற்ற தென்னூர் உழவர்சந்தை வரை ரோடு-ஷோ சென்று மக்களை சந்தித்தார். வழிநெடுகிலும் சாலையின் இருபுறமும் தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டு இருந்தன. அங்கு காலை முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு மு.க.ஸ்டாலினை உற்சாகமாக வரவேற்றனர். அவர்களிடம் கைகுலுக்கியும், செல்பியும் எடுத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின், கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.
9 கிலோ மீட்டர் தூரத்துக்கு காரில் பயணித்தும், நடந்து சென்றும் ரோடு-ஷோ நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்று 200 மீட்டர் தூரத்திற்கு ஒரு சிறிய மேடை அமைக்கப்பட்டு அதில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விழா நடைபெறும் மேடைக்கு வந்தார்.
இதையடுத்து நடைபெற்ற வைகோவின் சமத்துவ நடைபயண தொடக்க விழா நிகழ்ச்சிக்கு தி.மு.க. முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு தலைமை தாங்கினார். ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. வரவேற்றார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார்.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், மக்கள் நீதி மய்யம் சார்பில் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் அருணாசலம், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் மாவட்ட நிர்வாகிகள் கவுன்சிலர் சுரேஷ், சிவா, திராவிடர் கழகப் பொருளாளர் குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைகோ நடைபயணத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இதையடுத்து நடைபயணத்தை தொடங்கிய வைகோ, அங்கிருந்து அண்ணா நகர் கோர்ட்டு ரோடு, மேஜர் சரவணன் ரவுண்டானா, மத்திய பேருந்து நிலையம், அரிஸ்டோ மேம்பாலம், கிராப்பட்டி மேம்பாலம், எடமலைப்பட்டி புதூர் வழியாக பஞ்சப்பூர் சென்று முதல் நாள் பயணத்தை முடித்து அங்குள்ள தனியார் அரங்கில் தங்குகிறார்.
இந்த நடைபயணம் வருகிற 12-ந்தேதி மதுரையில் நிறைவு பெறுகிறது. தினமும் 15 முதல் 17 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறார். இந்த நடைபயணத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ம.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழகம் முழுவதிலும் இருந்து பல ஆயிரக்கணக்கான ம.தி.மு.க.வினர் வாகனங்களில் வந்து தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
- சாலையின் இருபுறங்களிலும் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
- கொட்டி தீர்த்த கனமழை காரணமாக குன்னூர் ரெய்லி காம்பவுண்ட் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாக உறைபனி காணப்பட்டது. இதனால் கடுமையான குளிரும் நிலவி வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு 11 மணிக்கு பிறகு கனமழை கொட்டி தீர்த்தது.
இரவு தொடங்கிய மழையானது இன்று காலை வரை விடிய, விடிய வெளுத்து வாங்கியது. இந்த மழை காரணமாக குன்னூர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
இந்த கனமழைக்கு குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் குறும்பாடி என்ற இடத்தில் மண்சரிவு ஏற்பட்டு மண் திட்டுகள் சாலையில் விழுந்தன.
அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று மண்சரிவில் சிக்கி கொண்டது. இதனால் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலையின் இருபுறங்களிலும் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மண் திட்டுகள் மற்றும் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
2 மணி நேரத்திற்கு பிறகு நள்ளிரவு 1 மணிக்கு அங்கு போக்குவரத்து சீரானது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் மேலும் 3 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.
இதேபோன்று குன்னூர்-கொலக்கெம்பை, சேலாஸ் செல்லும் சாலையில் 7 இடங்கள், குன்னூர்-ஊட்டி சாலையில் 4 இடங்களில் சிறிய அளவிலான மண்சரிவுகள் ஏற்பட்டது. இதனை நெடுஞ்சாலைத்துறையினர், தீயணைப்பு துறையினர் உடனடியாக அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
கனமழைக்கு குன்னூர் வேளாங்கண்ணி நகர் பகுதியில் ராட்சத மரம் முறிந்து விழுந்தது. இதேபோன்று குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொட்டி தீர்த்த கனமழை காரணமாக குன்னூர் ரெய்லி காம்பவுண்ட் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சாலையோரம் நின்றிருந்த 3 கார்கள் மீது மண் குவியல் விழுந்து கார்கள் சேதம் அடைந்தன.
மேலும் அப்பகுதியில் இருந்த 3 மின்கம்பங்கள் அடுத்தடுத்து முறிந்து விழுந்தன. அங்குள்ள டிரான்ஸ்பார்மரும் சேதமடைந்தது. இதனால் ரெய்லி காம்பவுண்ட் மற்றும் மாடல் அவுஸ் பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது.
மேலும் இரவு முதல் விடிய, விடிய பெய்த மழையால் குன்னூர் நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் இரவு முதல் இன்று காலை வரை மின்வினியோகம் தடைபட்டது.
இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தொடர்ந்து இன்று காலையும் மழை பெய்தது.
ஊட்டி, கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 21.5 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:
குன்னூர்-215, கோத்தகிரி-114, குன்னூர் புறநகர்-90, கீழ்கோத்தகிரி-73, கெத்தை-66, கிண்ணக்கொரை-63, பாலகொலா-60, கொடநாடு, குந்தா-51, பர்லியார்-46, ஊட்டி-37.4 அளவு மழை பெய்துள்ளது.






