என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெரியார், அம்பேத்கர் பெயரைப் பயன்படுத்த தகுதியில்லாத கூட்டம் என்று பத்திரிகையாளர்களும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
    • கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தொகுதி வேட்பாளர் மாற்றப்படுவாரா?

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்தது. அதன்படி தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் தலா 2 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, ம.தி.மு.க., கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலா ஒரு தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

    இந்நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தொகுதி வேட்பாளராக சூரியமூர்த்தி (51) அறிவிக்கப்பட்டுள்ளார். இத்தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.

    இந்நிலையில், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சூரியமூர்த்தி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது ஆணவப்படுகொலை செய்வேன் என்றும், தாயோடு சேர்த்து குழந்தையையும் கருவறுப்போம் என்றும், வருகின்ற காலத்தில் கொங்கு நாட்டில் பல்வேறு கொலைகள் விழும் என்று உளவுத்துறைக்கே சவால் விட்டார். பழைய வீடியோ தான் என்றாலும் கூட, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது மீண்டும் பரவுவதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


    ஈரோடு அருகே கவுண்டர் சாதிப் பெண்ணை திருமணம் செய்த பட்டியிலினப் பையனை கொலை செய்ய அந்தப் பெண்ணின் தந்தை செய்த முயற்சியில் அந்தப் பையனின் 15 வயது சகோதரி கொல்லப்பட்டாள். சூரியமூர்த்தியின் சாதி வெறியால் அந்த கொலை நடந்தேறியதாகவும், அத்தகைய நபரை நாமக்கல் தொகுதி வேட்பாளராக எப்படி ஏற்றுக் கொள்ளலாம் என்று சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. சமூக நீதி குறித்து பேசும் தி.மு.க.வுக்கு இதெல்லாம் கண்ணுக்குத் தெரியாதா என்றும், அரசியலில் வெற்றி பெற எதையும் கண்டு கொள்ளமாட்டீர்கள் என்றால், தி.மு.க.-வுக்கும், பா.ஜ.க.-வுக்கும் என்ன வேறுபாடு? பெரியார், அம்பேத்கர் பெயரைப் பயன்படுத்த தகுதியில்லாத கூட்டம் என்று பத்திரிகையாளர்களும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.

    எனவே, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தொகுதி வேட்பாளர் மாற்றப்படுவாரா, அதற்கு தி.மு.க.-வும் அழுத்தம் கொடுக்குமா என்று கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

    • என்னால் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறது.
    • பாஜக, கூட்டணி வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

    சேலம்:

    பா.ஜ.க.வின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியதாவது:

    * தேசிய ஜனநாயக கூட்டணி நாட்டில் 2 பாதுகாப்பு வளாகத்தை உருவாக்குகிறது.

    * 2 பாதுகாப்பு வளாகங்களில் ஒன்று தமிழ்நாட்டில் அமைகிறது.

    * தமிழ்நாட்டில் ஒரு ஜவுளி பூங்கா உருவாக்கப்பட்டு வருகிறது.

    * சேலம் பகுதியில் ரெயில்வே கட்டமைப்புக்கு ரூ.260 கோடி செலவிடப்பட்டுள்ளது.

    * பாஜக கூட்டணியில் இணைந்திருக்கின்ற கூட்டணி தலைவர்களை நான் வணங்குகிறேன்.

    * உங்கள் ஆதரவோடு தமிழகத்தை புதிய உயரத்திற்கு நாங்கள் எடுத்து செல்வோம்.

    * இது எங்கள் அனைவரின் உத்தரவாதம்.

    * தமிழ் மொழி இந்தியாவின் மிகவும் பழமையான மொழி.

    * எந்த நாட்டில் உலகின் பழமையான மொழி இருக்கிறதோ அந்த நாடு பெருமையுடன் மார்தட்டி கொள்ளும்.

    * என்னால் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறது.

    * நமோ இன் தமிழ் செயலியை அனைவரும் பயன்படுத்துங்கள்.

    * தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நான் தமிழில் பேச தொடங்கி உள்ளேன்.

    * அடுத்த 5 ஆண்டுகளில் ஊழலை எதிர்த்து நமது போராட்டம் அமையும்.

    * பாஜக, கூட்டணி வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கூறினார்.

    • மாரிமுத்துவுடன் வேலை பார்த்த சாத்தான்குளத்தை சேர்ந்த சாலமோன் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
    • ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் சுங்கான் கடையில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்தவர் மாரிமுத்து (வயது 33).

    விருதுநகரைச் சேர்ந்த இவர், இங்கேயே தங்கி வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாரிமுத்து திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

    அவரை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாரிமுத்து பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவர் மது குடித்ததில் கீழே விழுந்ததாகவும் அதனால் தான் இறந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் திடீர் திருப்பமாக மாரிமுத்து உடலில் காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதனால் தாக்குதலில் தான் அவர் இறந்திருக்கலாம் என போலீசார் கருதினர். அதன்அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் மாரிமுத்துவுடன் வேலை பார்த்த சாத்தான்குளத்தை சேர்ந்த சாலமோன் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரணை நடத்தியபோது, முன்னுக்குப்பின் முரணாக பேசிய அவர், பின்னர் தான் தாக்கியதில் தான் மாரிமுத்து கீழே விழுந்ததாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் சாலமோனை கைது செய்தனர். பின்னர் அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

    நானும் மாரிமுத்துவும் மது அருந்தியபோது அவர் என்னிடம் ரூ.200 கடன் வாங்கினார். நீண்ட நாட்களாகியும் அதனை அவர் திருப்பித் தரவில்லை. இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    சம்பவத்தன்று மது அருந்தும் போதும் கடனை கேட்டேன். இதுதொடர்பாக இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நான், மாரி முத்துவை கீழே தள்ளிவிட்டேன். இதில் அவர் காயம் அடைந்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இறந்து விட்டார்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    இதனை தொடர்ந்து போலீசார் சாலமோனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

    • இந்த தேர்தல் களம் ஜனநாயக சக்திகளுக்கும், பாசிச சக்திகளுக்கும் இடையிலான சித்தாந்த போராட்டமாகும்
    • தேர்தலில் போட்டியிடுவதா? தேர்தல் அரசியலை முன்னிறுத்தும் ஜனநாயகத்தை பாதுகாப்பதா? என்ற நிலையில் இரண்டாவதை தேர்ந்தெடுத்திருக்கிறோம்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அளிக்கையில், "இந்த தேர்தல் களத்தை ஜனநாயக சக்திகளுக்கும், பாசிச சக்திகளுக்கும் இடையிலான சித்தாந்த போராட்டமாக மனிதநேய ஜனநாயக கட்சி கருதுகிறது.

    நாட்டின் பன்மை கலாச்சாரத்தையும், ஜனநாயக மாண்புகளையும் பாதுகாப்பது அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையாக மாறியுள்ளதை கவனத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    தேர்தலில் போட்டியிடுவதா? தேர்தல் அரசியலை முன்னிறுத்தும் ஜனநாயகத்தை பாதுகாப்பதா? என்ற நிலையில் இரண்டாவதை தேர்ந்தெடுத்திருக்கிறோம்.

    கடந்த இரண்டு வாரங்களாக சான்றோர்கள், அறிஞர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டோரின் நல்லெண்ண கருத்துகளை உள்வாங்கி, 18.03.2024 அன்று நடைபெற்ற கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    தேசத்தை காக்கும் அறப்போரில் கட்டுமரத்தில் பயணிப்பதா? போர் கப்பலில் பயணிப்பதா? என்ற நிலையில், I.N.D.I.A கூட்டணி என்ற போர் கப்பலில் ஏறியுள்ளோம்.

    தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான I.N.D.I A கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் 39 பாராளுமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் இக்கூட்டணியின் வெற்றிக்காக களமிறங்கி பணியாற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • தூய்மைப் பணியாளர் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் முக்காணி அருகே உள்ள மஞ்ச நீர் காயல் பகுதியை சேர்ந்தவர் ஐகோர்ட் மகாராஜா. இவரது மனைவி கனகா(வயது 31). இவர் தூத்துக்குடி மாநகராட்சியில் தெற்கு மண்டலத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்.

    இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் தனது 3 குழந்தைகளுடன் கனகா மஞ்சள் நீர் காயலில் வசித்து வந்தபடி தூத்துக்குடியில் தூய்மை பணியாளராக வேலைக்கு சென்று வந்தார். அப்போது அவருக்கும், பசுவந்தனையை சேர்ந்த ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை கனகா வழக்கம்போல் வீட்டில் இருந்து பணிக்கு புறப்பட்டார். தொடர்ந்து தனியார் பஸ்சில் மஞ்சநீர் காயலில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த கனகா, தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் உள்ள ஒரு கல்லூரி பஸ் நிறுத்தத்தில் இறங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த ஒருவர் கனகா அருகே வந்தார். திடீரென தனது கையில் வைத்திருந்த அரிவாளால் கனகாவின் கழுத்தில் வெட்டி விட்டு தப்பிச் சென்றார்.

    இதில் கனகா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அந்த பகுதியில் நின்ற பயணிகள் கனகாவை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு எப்போதும் வென்றான் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த ஒரு பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், ஒரே வாரத்தில் தற்போது 2-வதாக பஸ் நிறுத்தத்தில் வைத்து தூய்மைப் பணியாளர் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பிரியதர்ஷினி பெரியகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
    • வீட்டில் தனது தந்தையின் உடல் வைக்கப்பட்டு இருந்த போதிலும் மாணவி உயிரியல் தேர்வை எழுதி விட்டு திரும்பினார்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள காவேரியம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 42). விவசாயி. இவருக்கு பிரியதர்ஷினி (வயது 15), சுரபிகா (8), ராஜேஸ்குமார் (7) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

    இவர்களில் பிரியதர்ஷினி பெரியகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டுக்கு வெளியே கருப்பசாமி தூங்கிக் கொண்டு இருந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

    நேற்று நடந்த பிளஸ்-1 தேர்வுக்காக மாணவி பிரியதர்ஷினி படித்துக் கொண்டு இருந்தார். தனது தந்தையின் மரணச் செய்தி கேட்டதும் கதறி அழுதார். அவரது வகுப்பு ஆசிரியர் கண்ணபிரான் மாணவிக்கு ஆறுதல் கூறி தைரியமாக தேர்வு எழுத செல்லுமாறு கூறினார்.

    வீட்டில் தனது தந்தையின் உடல் வைக்கப்பட்டு இருந்த போதிலும் மாணவி பிரியதர்ஷினி உயிரியல் தேர்வை எழுதி விட்டு திரும்பினார். இது அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • திமுகவின் பெண்கள் விரோத நடவடிக்கைக்கு எதிராக ஏப்ரல் 19ல் பெண்கள் வாக்களிக்க வேண்டும்.
    • மத்திய அரசு வழங்கும் நிதியை திமுக அரசு வீணடிக்கிறது.

    சேலம்:

    பா.ஜ.க.வின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியதாவது:

    * உங்களுடைய சேவகனான இந்த மோடி, பெண்களின் நலனுக்காக பல நல திட்டங்களை கொண்டு வந்துள்ளேன்.

    * தமிழ்நாட்டில் 3.65 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் கிடைக்கிறது.

    * தமிழ்நாட்டில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

    * இன்று பெண்கள் சக்தி மோடியின் பாதுகாப்பு கவசமாக இருக்கிறது.

    * அடுத்த 5 ஆண்டுகளில் இந்த நலத்திட்டங்கள் இன்னும் வேகமாக பெண்களுக்கு வந்து சேரும்.

    * ஜெயலலிதாவை திமுகவினர் எந்தவிதமாக நடத்தினார்கள் என்பது உங்களுக்கு தெரியும்.

    * திமுகவின் பெண்கள் விரோத நடவடிக்கைக்கு எதிராக ஏப்ரல் 19ல் பெண்கள் வாக்களிக்க வேண்டும்.

    * ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் திமுக, காங்கிரஸ்.

    * திமுக, காங்கிரஸ் என்றால் ஊழல், குடும்ப ஆட்சி.

    * திமுக, காங்கிரசின் ஊழலை பற்றி பேசினால் ஒரு நாள் போதாது.

    * தமிழகத்தின் வளர்ச்சிக்காக லட்சக்கணக்கான கோடி நிதி வழங்கப்படுகிறது.

    * மத்திய அரசு வழங்கும் நிதியை திமுக அரசு வீணடிக்கிறது.

    * மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனாரை இந்த நேரத்தில் நினைவுகூர்கிறேன்.

    * பெருந்தலைவர் காமராஜரை போன்ற மாபெரும் தலைவரை தந்த மண் இந்த தமிழக மண்.

    * மதிய உணவு திட்டம் கொண்டு வந்து தமிழகத்தில் கல்வியை வளர்த்தவர் காமராஜர்.

    * பாஜகவும், தேசிய ஜனநாயக கூட்டணியும் பெரிய கனவுகளை காண்கிறது. அந்த கனவுகளை நிச்சயம் அடைந்தே தீர்வோம் என்று கூறினார்.

    • இந்து மதத்தில் சக்தியை நாம் எப்படி வழிபடுகிறோம் என்பது தமிழ் மக்களுக்கு நன்றாக தெரியும்.
    • வேறு எந்த மதத்தையும் இந்தியா கூட்டணி எப்போதும் குற்றம் சொன்னதில்லை.

    சேலம்:

    சேலம் பொதுக்கூட்டத்தில் தொடர்ந்து பேசி வரும் பிரதமர் மோடி,

    * சேலம் வந்ததும், தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்த்த லட்சுமணன் என் நினைவுக்கு வருகிறார்.

    * ஆடிட்டர் ரமேஷ் பா.ஜ.க.வுக்காக கடினமாக உழைத்தவர், அவரை கொன்று விட்டனர்.

    * இந்தியா கூட்டணி மும்பையில் இந்து தர்மத்தின் சக்தியை அழிக்க வேண்டும் என்று பிரகடனம்

    * இந்து மதத்தில் சக்தியை நாம் எப்படி வழிபடுகிறோம் என்பது தமிழ் மக்களுக்கு நன்றாக தெரியும்.

    * காங்கிரஸ், திமுக கூட்டணி சக்தியை அழித்துவிடுவோம் என்று கூறுவதை அனுமதிக்க முடியுமா?

    * இந்தியா கூட்டணி பலமுறை இந்து தர்மத்தை அவமதித்துள்ளது.

    * வேறு எந்த மதத்தையும் இந்தியா கூட்டணி எப்போதும் குற்றம் சொன்னதில்லை.

    * பிற மதங்களை பற்றி இந்தியா கூட்டணி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை.

    * ஆனால் இந்து மதம் குறித்து பேச இந்தியா கூட்டணி ஒரு விநாடி கூட தயங்கியதில்லை.

    * பாராளுமன்றத்தில் செங்கோல் வைத்ததை இவர்கள் அவமதித்தார்கள்.

    * செங்கோல் இங்கிருக்கும் இந்து சமய மடங்களை குறிக்கிறது என்பதால் அதனை அவமதித்தார்கள்.

    * சக்தியை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து விடுவார்கள்.

    * பாரதியார் சக்தியின் வடிவில் இந்திய அன்னையை பாடினார்.

    * சக்தியை அழிக்க நினைப்பவர்களுக்கு தமிழ்நாடு பாடம் புகட்டும். இது மோடியின் உத்தரவாதம் என்றார்.

    மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்டி, கன்னியாகுமரி பகவதி அம்மன், சேலம் கோட்டை மாரியம்மன் ஆகியவற்றை சுட்டிக்காட்டி சக்தியின் பெருமையை பிரதமர் மோடி விளக்கினார்.


    • தமிழ்நாட்டில் இதுவரை, 1,91,491 அரசு அலுவலகங்களின் முன் வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளது.
    • பாராளுமன்றத் தேர்தலுக்காக தொகுதி வாரியாக நாளை முதல் வாக்கு எந்திரங்கள் பிரிக்கப்படும்.

    சென்னை:

    தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் நேற்று நடத்திய ஆலோசனைக்கு பிறகு 176 கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. எனவே மொத்த வாக்குச்சாவடிகள் 68,320-ஆக உயர்ந்துள்ளது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் உணவுப் பொருட்கள் விலை வித்தியாசப்படுவதால் தேர்தல் செலவினத்துக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ள விலை பட்டியலை மீண்டும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் இதுவரை, 1,91,491 அரசு அலுவலகங்களின் முன் வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளது. 52,938 தனியார் கட்டிடங்கள் முன் வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களும் அகற்றப்பட்டுள்ளது.

    20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வீடு வீடாக சென்று படிவம் 12 டி வழங்கப்படும்.

    அதில் அவர்கள் விரும்பும் பட்சத்தில் தபால் வாக்களிக்கலாம். சிவிஜில் செயலி மூலம் மொத்தம் இதுவரை 282 புகார்கள் பெறப்பட்டுள்ளது.

    ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது குறித்து இந்திய தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்கும்.

    பாராளுமன்றத் தேர்தலுக்காக தொகுதி வாரியாக நாளை முதல் வாக்கு எந்திரங்கள் பிரிக்கப்படும். இந்த தேர்தலில் அதிகளவில் ஆசிரியர்களே பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    சுமார் 4 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • காரின் பின்புறம் மூட்டை மூட்டையாக சில்வர் டிபன் பாக்ஸ்கள் நூற்றுக்கணக்கில் இருந்துள்ளன.

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த நெடுங்குணம் பகுதியில் அமைந்துள்ள போளூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேளாண் அலுவலர் வசந்த் குமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் சென்னையிலிருந்து போளூரை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது அதனை நிறுத்தி சோதனையில் ஈடுபடும் பொழுது காருக்குள் இருந்த பொருட்களால் தேர்தல் பறக்கும் படையினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    காரின் பின்புறம் மூட்டை மூட்டையாக சில்வர் டிபன் பாக்ஸ்கள் நூற்றுக்கணக்கில் இருந்துள்ளன இதனால் அதிர்ச்சி அடைந்த தேர்தல் பறக்கும் படையினர் இது குறித்து விசாரித்துள்ளனர் காரில் பயணம் செய்தவர்கள் தங்கள் குடும்பத்தில் மஞ்சள் நீராட்டு விழா எனவும் அவற்றிற்கு வருபவர்களுக்கு பரிசு அளிக்க சென்னையிலிருந்து குறைந்த விலையில் வாங்கி வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் அதற்கு உண்டான ரசீதையும் தேர்தல் பறக்கும் படையினரிடம் காண்பித்தனர்.

    இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

    இந்நிகழ்வின் போது காவலர்கள் வேண்டா, சரவணன், சிவா, ஒளிப்பதிவாளர் சேட்டு உள்ளிட்டோர் இருந்தனர்.

    • தமிழ்நாட்டின் வளர்ச்சியே தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய நோக்கம்.
    • தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ராமதாஸ், அன்புமணி பா.ஜ.க.வுடன் இணைந்துள்ளனர்.

    சேலம்:

    பா.ஜ.க.வின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, என் அன்பார்ந்த தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம் என தமிழில் பேச்சை தொடங்கினார்.

    முதலில் சேலம் கோட்டை மாரியம்மனை வணங்குகிறேன் என்றார்.

    அதன்பின் தொடர்ந்து பேச தொடங்கிய பிரதமர் மோடி,

    * தமிழகத்தில் எனக்கு கிடைத்திருக்கும் மக்கள் ஆதரவை நாடே ஆச்சரியமாக பார்க்கிறது.

    * பா.ஜ.க.வுக்கு பெருகும் ஆதரவு தி.மு.க.வின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

    * வளர்ச்சியடைந்த பாரதத்திற்காக 400-க்கும் அதிகமான இடங்களை பெற வேண்டும்.

    * தமிழகம் வளர்ச்சியடைய 400-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்ல வேண்டும்.

    * தமிழ்நாட்டின் வளர்ச்சியே தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய நோக்கம்.

    * தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ராமதாஸ், அன்புமணி பா.ஜ.க.வுடன் இணைந்துள்ளனர்.

    * சேலத்திற்கு பலமுறை வந்துள்ளேன். இன்று பழைய நினைவுகள் எனக்கு வருகின்றன.

    * சேலத்தை சேர்ந்த ரத்தினவேல் எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்தார்.

    * ரத்தினவேல் இன்று நம்மிடையே இல்லை, அவரின் நினைவு மட்டுமே உள்ளது.

    * சேலம் வந்ததும், தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்த்த லட்சுமணன் என் நினைவுக்கு வருகிறார்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசி வருகிறார்.

    இதனிடையே ஆடிட்டர் ரமேஷ் மரணம் குறித்து பேசும் போது பிரதமர் மோடி கண் கலங்கினார்.


    • பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர்.
    • உதவி தேர்தல் அலுவலர் முருகன் மற்றும் தேர்தல் தாசில்தார் வேண்டா ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

    ஒடுகத்தூர்:

    வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா சோதனை சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக சந்தேகிக்கும் வகையில் வந்த லோடு ஆட்டோவை மடக்கி விசாரணை நடத்தினர். அவர் சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியைச் சேர்ந்த விஜயன், மாடுவியாபாரி என்பதும் வேலூர் பொய்கையில் நடந்த மாட்டுச் சந்தைக்கு மாடுகள் வாங்க உரிய ஆவணம் இல்லாமல், ரூ.5 லட்சத்து 89 ஆயிரத்து 500 எடுத்து சென்றது தெரியவந்தது.

    பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர். உதவி தேர்தல் அலுவலர் முருகன் மற்றும் தேர்தல் தாசில்தார் வேண்டா ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

    ×