என் மலர்
உள்ளூர் செய்திகள்
- நாடு முழுவதும் 102 தொகுதிகளிலும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்தால் 2 ஆண்டு சிறை தண்டனை என எச்சரிக்கை.
நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக வரும் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் கட்டமாக தமிழகம்- புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் (19-ந் தேதி) தேர்தல் நடைபெறுகிறது.
நாடு முழுவதும் மொத்தம் 21 மாநிலங்களுக்கு உட்பட்ட 102 தொகுதிகள் முதல்கட்ட தேர்தலை சந்திக்கின்றன. இந்த 102 தொகுதிகளிலும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான அணியில் தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன.
அ.தி.மு.க. தலைமையிலான அணியில் அ.தி.மு.க., தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ. மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.
பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., த.மா.கா, அ.ம.மு.க., முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. தொண்டர் உரிமை மீட்புக்குழு, புதிய நீதிக்கட்சி, ஐ.ஜே.கே., தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் களம் காண்கின்றன.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.கடந்த 4 வாரங்களாக நடைபெற்று வரும் அனல் பறக்கும் பிரசாரம் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணியுடன் ஓய்கிறது.
இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைய உள்ளநிலையில் விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்தால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- கோவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெளியிட்டார்.
- கோவை ரைசிங் என்ற தலைப்பில் தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
கோவை:
தி.மு.க. சார்பில் கோவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கோவை ரைசிங் என்ற தலைப்பில் கோவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெளியிட்டார்.
தி.மு.க. வேட்பாளரின் தேர்தல் அறிக்கையின் முக்கியம் அம்சங்கள் பின்வருமாறு:
கோவையில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் நீர் மாசு கட்டுப்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், ஏரிகளில் கழிவு நீர் கலப்பதும் தடுக்கப்படும்.
கோவை மாவட்டத்தில் பன்னோக்கு சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டப்படும்.
கோவை மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து மேற்கொள்ளப்படும். முதல் கட்ட பணிகள் உரிய கால நேரத்திற்குள் தொடங்கி முடிவடையும். சிறுவாணி, பில்லூர் ஆறுகள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவை விமான நிலையம் மேம்படுத்தப்படும். புதிய பசுமை தொழில் பூங்காக்கள் நிறுவப்படும்.
நகை தொழில் புத்துயிர் பெறவும், கிரில் உற்பத்தியாளர்களுக்காகவும் கோவையில் சிட்கோ பூங்கா நிறுவப்படும்.
விசைத்தறி வளர்ச்சி கவுன்சில் உருவாக்கப்பட்டு மின்சார செலவு உள்ளிட்ட அனைத்துப் பிரச்சனைகளும் கவனித்துத் தீர்க்கப்படும்.
பம்புசெட் மற்றும் உதிரிபாகத் தொழில்களில் உள்ள ஜிஎஸ்டி பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.
கோழிப்பண்ணை விவசாயிகளின் தீவனம், மின்சாரம் மற்றும் இதர பிரச்சனைகள் குறிப்பிட்ட கால வரையறைக்குள் தீர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கிருஷ்ணகிரி வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து ராஜ்நாத் சிங் பிரசாரம் செய்தார்.
- நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றவர் பிரதமர் மோடி என்றார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் மத்திய பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங் பேசியதாவது:
ஆலயங்களின் மாநிலமான தமிழகம் வரும்போது மனம் அமைதி கொள்கிறது.
பார்லிமென்டில் செங்கோல் வைத்ததன் மூலம் தமிழ் கலாசாரம் பெருமைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் என்று பேசப்படும் போது நம் நினைவுக்கு வருவது செங்கோல் தான்.
இன்டர்நெட்டில் ஏற்பட்ட புரட்சியால் யுபிஐ சேவை தற்போது அதிகரித்துள்ளது.
2014-ம் ஆண்டுக்கு பிறகு மருத்துவ வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. நாடுமுழுவதும் புதிதாக 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன.
பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் முதல் 25 நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.
ஐக்கிய நாடுகள் அவையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் எனக்கூறி தமிழின் பெருமையை மோடி உயர்த்தியுள்ளார்.
நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றவர் பிரதமர் மோடி.
நாடு முழுவதும் தமிழ் மொழியைக் கொண்டு செல்ல பிரதமர் மோடி பாடுபடுகிறார் என தெரிவித்தார்.
- திமுக-வுக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பலை வீசுவதாக பிரதமர் மோடி நேற்று பேசியுள்ளார்.
- இதைப் பார்த்து சிரிப்பதா அல்லது அவரின் பகல் கனவைப் பார்த்து பரிதாபப்படுவதா என தெரியவில்லை.
காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர்களை ஆதரித்து காஞ்சிபுரம் படப்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
திமுக-வுக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பலை வீசுவதாக பிரதமர் மோடி நேற்று பேசியுள்ளார். இதைப் பார்த்து சிரிப்பதா அல்லது அவரின் பகல் கனவைப் பார்த்து பரிதாபப்படுவதா என தெரியவில்லை. தமிழ்நாட்டில் பாஜக ஜெயிக்கும் என பிரதமரை யாரோ ஏமாற்றியுள்ளனர்.
முதலமைச்சராக இருந்த மோடிக்கு பிரதமரானதும் மாநிலங்களைக் கண்டாலே பிடிக்கவில்லை. மோடி ஆட்சியில் மக்கள் வாழ்வதே போராட்டமாக இருக்கிறது. மிகவும் மலிவான பிரிவினைவாத அரசியல் செய்து வருகிறார்.
ஜவுளி ஏற்றுமதியில் நம்பர் 1, ரெடிமேட் ஏற்றுமதியில் நம்பர் 1, தோல் பொருள் ஏற்றுமதியில் நம்பர் 1, ஏற்றுமதி ஆயத்த நிலைக் குறியீட்டில் நம்பர் 1, எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் நம்பர் 1, கர்ப்பிணி சுகாதாரக் குறியீட்டில் நம்பர் 1, மகப்பேறுக்கு பிந்தைய கவனிப்பில் நம்பர் 1, 50 சிறப்பு பொருளாதார மண்டலங்களுடன் நாட்டிலேயே நம்பர் 1
பழனிசாமி அவர்களே இதெல்லாமே நாங்கள் சொன்னவை அல்ல, ஒன்றிய அரசின் புள்ளி விபரங்கள். அதிமுக ஆட்சியில் தொழில் செய்ய உகந்த மாநிலங்கள் தரவரிசையில் 14-வது இடத்தில் இருந்த தமிழ்நாட்டை, திமுக ஆட்சியமைந்ததும் மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றியுள்ளோம்.
"நான் ஒன்றிய அரசிடம் விருது வாங்கியுள்ளேன். நீங்கள் ஏதாவது விருது வாங்கினீர்களா? என எடப்பாடி பழனிசாமி நம்மிடம் கேட்கிறார். 'நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்' என்ற படத்திற்கேற்ப, பாஜக அரசு உங்களுக்கு விருது வழங்கியிருக்கும்
பழனிசாமி அவர்களே நாங்கள் மக்களிடம் விருது வாங்கியுள்ளோம். அது எல்லாவற்றையும் விட பெரியது. இன்னொரு விருது, ஜூன் 4ம்தேதி 40-க்கு 40 என்ற விருது கிடைக்கும் பழனிசாமி அவர்களே Wait and See..!"
எல்லோருக்கும் எல்லாம், அனைத்து மாவட்டங்களுக்கும் சீரான வளர்ச்சி என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம். சட்டப்பேரவை தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்படாத, நான் முதல்வன் திட்டத்தால் ஏராளமான மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். பல ஆயிரம் மாணவர்களின் கனவுகள், நிஜமாக மாறியுள்ளது.
இன்னொரு தேர்தல் வாக்குறுதி அல்லாத திட்டம்தான் காலை உணவுத் திட்டம். சுமார் 16 லட்சம் மாணவர்கள் இத்திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர்.
இவ்வாறு மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- தேர்தல் பாஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது என்றால், அந்த கட்சியின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
- அதிமுக-வுக்கு வாக்களித்தது வேஸ்ட் என அன்புமணி தெரிவித்துள்ளார். அதிமுக-வுக்கு வாக்களித்து நான் வெற்றி பெற்றதனால்தான் நீங்கள் எம்.பி.யாக இருக்கிறீர்கள்.
தருமபுரி அதிமுக வேட்பாளர் டாக்டர் அசோகனை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்த வேனில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசும்போது அவர் கூறியதாவது:-
தருமபுரியில் மும்முனை போட்டி நிலவுகிறது. அதிமுக, திமுக, பாஜனதா கூட்டணியில் பாமக ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.
பாட்டாளி மக்கள் கட்சி நமது கூட்டணியில் 2-வது இடம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தது. தற்போது 3-வது இடமல்ல. ஐந்தாவது இடத்திற்கு போய்விட்டார்கள். 2019 தேர்தலில் அதிமுக கூட்டணியில் 2-வது இடத்தில் பாமக இருந்தது. 3-வது இடத்தில்தான் பா.ஜனதா இருந்தது.
இந்த தேர்தல் பாஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது என்றால், அந்த கட்சியின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதிமுக-வுக்கு வாக்களித்தது வேஸ்ட் என அன்புமணி தெரிவித்துள்ளார்.
அதிமுக-வுக்கு வாக்களித்து நான் வெற்றி பெற்றதனால்தான் நீங்கள் எம்.பி.யாக இருக்கிறீர்கள். ஒரு எம்எல்ஏ கூட இல்லாத நிலையில் மக்கள் அதிமுக எம்.எல்.ஏ.-க்களை தேர்ந்தெடுத்ததன் மூலம் நாங்கள் உங்களை எம்.பி.யாக தேர்ந்தெடுத்தோம்.
எங்களிடம் பிரதமர் வேட்பாளர் யார் எனக் கேட்கிறார். அவர் மத்திய அமைச்சரவையில் இருந்தபோது ஒரு திட்டத்தையாவது இந்த பகுதிக்கு கொண்டு வந்தாரா?. தமிழக மக்கள் பயன்படும் வகையில் பாராளுமன்றத்தில் பேசினாரா?. பிரதமரை வைத்து என்ன செய்யப்போகிறீர்கள். அடிமையாக இருக்க பார்க்கிறீர்கள்.
மத்தியில் யார் என்பது எங்களுக்கு தேவையில்லை. மக்கள்தான் தேவை. மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். தனித்து போட்டியிட்டால்தான் பாராளுமன்றத்தில் மக்களின் பிரச்சனைகளை பேச முடியும். உங்களுக்கு பதவி வேண்டும். அதனால் கூட்டணி அமைத்துள்ளீர்கள். பாமக அடிக்கடி கூட்டணி மாறிக்கொண்டே இருக்கும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
- பாலகணபதி பேசும் போது, கடந்த முறை வெற்றி பெற்றவர் தொகுதிக்கு எந்த திட்டமும் செயல்படுத்த வில்லை.
- கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் சென்று ஆதரவு திரட்டினர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர் பொன்.வி.பாலகணபதி காக்களுர், கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தொடுகாடு, மப்பேடு, கூவம், பேரம்பாக்கம் உட்பட பல்வேறு கிராமங்களுக்கு சுட்டெரிக்கும் வெயிலில் வீதி வீதியாக சென்று தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது காக்களுர் பகுதியில் உள்ள டீக்கடையில் பொது மக்களுக்கு டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின் போது வேட்பாளர் பொன்.வி.பாலகணபதி பேசும் போது, கடந்த முறை வெற்றி பெற்றவர் தொகுதிக்கு எந்த திட்டமும் செயல்படுத்த வில்லை.
வளா்ச்சி திட்ட பணியும் மேற்கொள்ளவில்லை. எனவே எனக்கு ஒருமுறை வாய்ப்பு அளித்தால் தொகுதி மக்களோடு இருந்து மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பேன். எனவே எனக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
வேட்பாளருடன் மாவட்ட பொது செயலாளர் கருணாகரன், ஆர்யா சீனிவாசன், மண்டல் தலைவர் ராஜேந்திரன், தரவு மேலாண்மை மாநில செயலாளர் ரகு, கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் லட்சுமி காந்தன், காக்களூர் மோகன், அமமுக மாவட்ட செயலாளர் ஏழுமலை, ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் சீனன், மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் தியாகு, முன்னாள் ஒன்றிய செயலாளர் விநாயகம், வன்னியர் சங்க ஒன்றிய செயலாளர் பலராமன், கிளை செயலாளர் பார்த்திபன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் சென்று ஆதரவு திரட்டினர்.
- தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- வெள்ளிக்கிழமை அன்று அனைவரும் வாக்களிக்க ஏதுவாக பொதுவிடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்து இருந்தார்.
வண்டலூர்:
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படுகிறது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து, வாக்குப்பதிவு நடைபெறும் வெள்ளிக்கிழமை அன்று அனைவரும் வாக்களிக்க ஏதுவாக பொதுவிடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் வெள்ளிக்கிழமை அன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயங்காது என நிர்வாகம் அறிவித்துள்ளது.
- அறையின் சுவா்களையொட்டி மருந்துகளை வைக்காமல், அதிலிருந்து சற்று தள்ளி வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
- பொது மக்கள், சுகாதாரத்துறை களப்பணியாளா்களுக்கும் அது உகந்த நேரமாக இருக்கும்.
சென்னை:
பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வவிநாயகம் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான மருந்துகளை சேமித்து வைத்திருக்கும் குளிா் பதனக் கிடங்குகள், மருந்தகங்கள், சேமிப்பு கிடங்குகளில் உரிய காற்றோட்ட வசதி இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அறையின் சுவா்களையொட்டி மருந்துகளை வைக்காமல், அதிலிருந்து சற்று தள்ளி வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
அதேபோன்று, சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வழக்கமான நேரத்தைக் காட்டிலும் முன்னதாகவே தொடங்கி காலை 11 மணிக்குள் நிறைவு செய்ய வேண்டும்.
இதன் மூலம் வெப்ப அலையால் தடுப்பூசியின் வீரியம் குறையாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும். அதனுடன், பொது மக்கள், சுகாதாரத்துறை களப்பணியாளா்களுக்கும் அது உகந்த நேரமாக இருக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.
- தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதளங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது.
சென்னை:
தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த பின் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
பிரசாரம் நிறைவடைந்த பின், தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக் கூடாது.
தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதளங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக் கூடாது.
தேர்தல் விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறை, அபராதம் விதிக்கப்படும்.
வாக்காளர் அல்லாதவர்கள் நாளை மாலை 6 மணிக்குள் தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும்.
தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் உள்ளிட்ட இடங்களில் வெளியாட்கள் யாரும் தங்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.
- பழவேற்காடு பகுதியில் சிறிய துறைமுகம் அமைக்கப்படும் என்றார்.
- கவிதா மனோகரன், உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் சென்று கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர் .
திருவள்ளூர்:
திருவள்ளூர் (தனி) தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட பெரிய மாங்கோடு, சின்ன மாங்கோடு, புதுகுப்பம், கோட்டைக்குப்பம், ரெட்டி பாளையம், கம்மார்பாளையம், பெரும்பேடு, சோம்பட்டு, கொல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று கை சின்னத்துக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர்.
அப்போது பேசிய வேட்பாளர் சசிகாந்த் செந்தில், மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு, ஏழை குடும்ப பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி, பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ பயின்றவர்களுக்கு தொழில் பயிற்சியுடன் ரூ.1 லட்சம் உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுப்பேன். ஊரக வேலை திட்டத்தை போல, நகர்ப்புற வேலை உறுதி திட்டம் அமல்படுத்த முயற்சி செய்வேன். மீனவ குடும்பத்தினருக்கு அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும், மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு மீன் பிடிப்பதற்கு படகுகள், வலைகள், இன்ஜின்கள் மானிய விலையில் வழங்கப்படும்.
பழவேற்காடு பகுதியில் சிறிய துறைமுகம் அமைக்கப்படும் என்றார். வேட்பாளருடன் எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகர், டி .ஜே. கோவிந்தராஜன், மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி, துணை தலைவர், பரிமேலழகர், தமிழ்ச்செல்வி பூமிநாதன், காங்கிரஸ் மாநில செயலாளர் சம்பத் வட்டார தலைவர் ஜெயசீலன், புருஷோத்தமன், பழவை ஜெயராமன், கடல் தமிழ்வாணன், ரவி, தி.மு.க நிர்வாகிகள் அவை தலைவர் பகலவன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சம்பத், மாவட்ட துணை அமைப்பாளர் முரளி, கவுன்சிலர் வெற்றி, அன்பு, தமின்சா, ரமேஷ் பழவேற்காடு அலவி,பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணி, தலைவர் கவிதா மனோகரன், உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் சென்று கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர் .
- புதூர் உத்தமனூர் மற்றும் தச்சன் குறிச்சி கிராமத்திலும், பெருவளநல்லூர் கிராமத்திலும் டாக்டர் பாரிவேந்தர் தாமரை சின்னத்திற்கு பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார்.
- தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் இப்பகுதிக்கு வந்து, பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றித் தருவேன் என உறுதி அளித்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில், இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தர், தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சூறவாளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். அந்த வகையில், இன்று லால்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மகிழம்பாடி வடக்கு ஊராட்சியில் டாக்டர் பாரிவேந்தர் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அங்கு குழுமியிருந்த மக்களிடையே உரையாற்றிய அவர். தமிழகத்தில் குடும்ப ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதனைத்தொடர்ந்து, புதூர் உத்தமனூர் மற்றும் தச்சன் குறிச்சி கிராமத்திலும், பெருவளநல்லூர் கிராமத்திலும் டாக்டர் பாரிவேந்தர் தாமரை சின்னத்திற்கு பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார்.
பின்னர் குமுளூர் கிராமத்திற்கு வருகை தந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், கும்ப மரியாதை வழங்கியும், ஆரத்தி எடுத்தும் டாக்டர் பாரிவேந்தரை பொதுமக்களும், கூட்டணிக் கட்சியினரும் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அப்போது பேசிய அவர், நன்றியுள்ள இந்த ஊருக்கும், பொதுமக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார். குமுளூர் கிராமத்தில், 5 மாணவர்கள் இலவச உயர் கல்வி திட்டத்தின்கீழ் கல்வி பயின்று வருவதாக டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, புஞ்சை சங்கேந்தி பகுதியில் டாக்டர் பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து, வெங்கடாஜலபுரம் பகுதிக்கு வருகை தந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, விவசாய சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நெற்கதிர்கள், செங்கரும்பு வழங்கியும், பூரண கும்ப மரியாதையுடன் ஆரத்தி எடுத்தும் பொதுமக்கள் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். உழவு மாடுகளை ஏர் பூட்டி, டாக்டர் பாரிவேந்தர் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் இப்பகுதிக்கு வந்து, பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றித் தருவேன் என உறுதி அளித்தார்.
இ.வெள்ளனூர் மற்றும் நஞ்சை சங்கேந்தி உள்ளிட்ட பகுதிகளில் டாக்டர் பாரிவேந்தர் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதனைத்தொடர்ந்து, பூவாளூர் பகுதியில் ஆதரவு திரட்டிய அவர், நல்லவர்கள் யார்? ஊழல்வாதிகள் யார்? என்பதை
அறிந்து வாக்களியுங்கள் என்றும், மறந்தும் சூரியனுக்கு வாக்களிக்காதீர்கள் எனவும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து லால்குடிக்கு வருகை தந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, தேசிய ஜனநாயக கூட்டணியினர் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்தும், ஆரத்தி எடுத்து
மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பொதுமக்களிடையே பேசிய அவர், மத்திய அரசு வழங்கிய தொகுதி மேம்பாட்டு நிதியான 17 கோடி ரூபாயை, முழுமையாக செலவு செய்து, மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்ததாக தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் தாம் செய்த பணிகள், அமைச்சர்களை சந்தித்தது உள்ளிட்டவைகள் குறித்து, புத்தகமாக வழங்கியிருப்பதாக டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
- பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் IJK வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
- மருதூர் கிராமத்திற்கு சென்ற பாரிவேந்தர், காவிரி நீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் IJK வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர், தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சூறவாளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். அந்த வகையில், லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். டாக்டர் பாரிவேந்தருக்கு தேசிய ஜனநாயக கூட்டணியினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாடக்குடி கிராமத்தில் பொதுமக்களிடையே பேசிய டாக்டர் பாரிவேந்தர், ஆயிரத்து 200 ஏழை மாணவர்களுக்கு இலவச உயர் கல்வியும், ஆயிரத்து 500 ஏழை குடும்பங்களுக்கு இலவச உயர் சிகிச்சை வழங்கப்படும் என உறுதி அளித்தார். பள்ளி விடை - பை பாஸ் சாலையில் சப்வே பாலம் கட்டி தரப்படும் என அவர் உறுதி அளித்தார்.
இதனைத்தொடந்து, V. துறையூர் கிராமத்தில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த பாரிவேநத்ர், தமிழ்நாட்டில் உள்ள 38 திமுக எம்பிகள் 75 சதவீதம் மத்திய அரசு வழங்கிய நிதியை செலவு செய்யாமல் மீண்டும் திருப்பி அனுப்பியதாகவும், ஆனால் MP நிதியை தொகுதி மக்களுக்கு, தாம் முழுமையாக செலவு செய்ததாகவும் தெரிவித்தார்.
பின்னர் ரெத்தினங்குடி கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க வந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, மருதூர் கிராமத்திற்கு சென்ற பாரிவேந்தர், காவிரி நீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
இதனைத்தொடர்ந்து, மேல பெருங்காவூர் கிராமத்திலும், கீழப்பெருங்காவூர் கிராமத்திலும் டாக்டர் பாரிவேந்தர், பொதுமக்களிடம் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
நகர் கிராமத்திற்கு வருகை தந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் மாலை, பரிவட்டம் வழங்கப்பட்டது. டாக்டர் பாரிவேந்தருக்கு ஆதரவாக, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், தேர்தல் வாக்குறுதி நோட்டீஸ் வழங்கி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார், "ஜெயிக்கிறார் ஜெயிக்கிறார்" பாரிவேந்தர் ஜெயிக்கிறார்" என்று முழக்கமிட்டு வாக்கு சேகரித்தார்.
இதனைத்தொடர்ந்து நகர் கிராமத்தில் பொதுமக்களிடையே பேசிய டாக்டர் பாரிவேந்தர், 2019 தேர்தல் வாக்குறுதியின்படி, 118 கோடி ரூபாய் செலவில், ஆயிரத்து 200 மாணவர்களை பட்டதாரியாக்கியதாகவும், அந்தத் திட்டம் மீண்டும் தொடரும் எனவும் தெரிவித்தார். மேலும், ஆயிரத்து 500 ஏழை குடும்பங்களுக்கு இலவச உயர் சிகிச்சை அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும் எனவும், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்த பாரிவேந்தர், இப்பகுதி மக்களின் கோரிக்கையான தடுப்பணை மற்றும் மயானப் பாதை அமைத்து தரப்படும் என உறுதி அளித்தார்.
இதனைத்தொடர்ந்து, நெய்க்குப்பை ஊரில் பரப்புரை மேற்கொண்ட டாக்டர் பாரிவேந்தர், நாடு உயர, வளர தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். கடந்த தேர்தலில் MP-ஆக செய்த பணிகள் குறித்து புத்தகமாக வெளியிட்டதாகவும், மக்களுக்கு உதவி செய்யவே மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்தார். ஏழை மக்களுக்கு தேடி தேடி உதவ வேண்டும் என்பதே தனது நோக்கம் எனக் கூறிய பாரிவேந்தர், மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி,118 கோடி ரூபாய் செலவில் ஆயிரத்து 200 மாணவர்களை பட்டதாரியாக்கியதாக பெருமிதம் தெரிவித்தார். ஜனநாயகம் காக்க குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்த அவர், தமிழகத்தில் உள்ள எல்லா அமைச்சர்களும் ஊழல்வாதிகள் என்றும், அவர்கள் சிறைக்கு செல்வார்கள் என்றும் தெரிவித்தார். ஆன்மீகத்திற்கு விவேகானந்தர். அரசியலுக்கு மோடி என புகழராம் சூட்டிய பாரிவேந்தர், உலக நாடுகள் மோடியை பார்த்து Boss என்று அழைக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.






