என் மலர்
உள்ளூர் செய்திகள்
- 2 இணை இயக்குனர்கள் கொண்ட விசாரணை குழுவை அமைத்துள்ளது.
- 2 நாட்களில் விசாரணை அறிக்கை சமர்பிக்கவும் அதிரடி உத்தரவு.
புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி. நகரைச் சேர்ந்த ஹேமசந்திரன் (26), உடல் பருமன் காரணமாக சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர்.
அவர் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக இறந்ததாக குறிப்பிட்டனர்.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் சென்னை பம்மல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
2 இணை இயக்குனர்கள் கொண்ட விசாரணை குழுவை அமைத்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
2 நாட்களில் விசாரணை அறிக்கை சமர்பிக்கவும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்குழு அமைக்கப்படும் என பெற்றோருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- தினமும் 60 ஆயிரம் பெட்டிகள் விற்பனையான நிலையில் இப்போது ஒரு லட்சம் பெட்டிகள் விற்பனையாகிறது.
- வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து முழுக்க முழுக்க கோதுமையால் தயார் செய்யப்படும் பீரை இறக்குமதி செய்ய உள்ளனர்.
சென்னை:
வெயில் சுட்டெரிக்கிறது. அதில் இருந்து தப்பிப்பது எப்படி? சமாளிப்பது எப்படி? என்று ஒவ்வொரு வரும் ஒவ்வொரு கோணத்தில் யோசிக்கிறார்கள்.
குடிமகன்களுக்கு 'தண்ணி' தாராளமாக வேண்டும். அதாவது பீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வேண்டும். பீர் குடித்தால் வெயிலோடு விளையாடலாம் என்பது அவர்களின் எண்ணம்.
ஆனால் அதுவும் ஆல்கஹால்தான் என்பதை அவர்கள் கண்டு கொள்வதில்லை. அதிலும் 10 சதவீதம் வரை ஆல்கஹால் கலக்கப்படுகிறது. குடிமகன்கள் ஆர்வத்தை பூர்த்தி செய்வதற்காக தட்டுப்பாடு இல்லாமல் பீர் சப்ளை செய்ய டாஸ்மாக் நிர்வாகமும் தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தினமும் 60 ஆயிரம் பெட்டிகள் விற்பனையான நிலையில் இப்போது ஒரு லட்சம் பெட்டிகள் விற்பனையாகிறது. தற்போது 10 லட்சம் பெட்டிகள் கையிருப்பில் உள்ளன.
தற்போது டிராபிக்கல் நிறுவனத்திடம் இருந்தும் தண்டர் போல்டு, காட்பாதர் ஆகிய இருவகை பீர்கள் கொள்முதல் செய்யப்படுவதால் தட்டுப்பாட்டை சமாளிக்க முடிகிறதாம்.
இந்த நிலையில் இப்போது காப்பர் போல்டு என்ற வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து முழுக்க முழுக்க கோதுமையால் தயார் செய்யப்படும் பீரை இறக்குமதி செய்ய உள்ளனர். இந்த பீர் ரூ.190 விலைக்கு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுபற்றி மதுவகை ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது:-
பீர் வகைகள் எல்லாமே ஏதாவது ஒரு தானியத்தில் இருந்துதான் தயாராகிறது. இதில் கலக்கப்படும் வேதிப்பொருட்கள் அனைத்துமே உடலுக்கு தீங்கானதுதான்.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யவிருக்கும் கோதுமை தயாரிப்பான பீர் உற்பத்தி செய்ய கூடுதல் நாட்கள் ஆகும். டிராபிக்கல் பீர் விலையே ரூ.170 முதல் ரூ.180 ஆக இருக்கும் போது இறக்குமதி செய்யப்படும். பீர் விலை ரூ.230-க்கு மேல் இருப்பதற்கு வாய்ப்பு அதிகம் என்றார்.
- குடிநீர் வினியோகம் இன்று இரவு 9 மணி முதல் வருகிற 27-ந்தேதி இரவு 9 மணி வரை 2 நாட்கள் நிறுத்தப்படுகிறது.
- பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னை:
சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சார்பில், மவுண்ட் பூந்தமல்லி சாலையில் (போரூர் சந்திப்பு) குடிநீர் பிரதான குழாய் மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளபட உள்ளது. இதன்காரணமாக, சென்னையில் 7 மண்டலங்களில் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் இன்று (வியாழக்கிழமை) இரவு 9 மணி முதல் வருகிற 27-ந்தேதி இரவு 9 மணி வரை 2 நாட்கள் நிறுத்தப்படுகிறது.
அதன்படி, அம்பத்தூர் மண்டலத்தில் அத்திப்பட்டு, பாடி, பார்க்ரோடு, டி.எஸ்.கிருஷ்ணா நகர், முகப்பேர் மேற்கு, முகப்பேர் கிழக்கு, அண்ணாநகர் மண்டலத்தை பொறுத்தவரையில் அரும்பாக்கம், அமைந்தகரை, சூளைமேடு ஆகிய பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும்.
தேனாம்பேட்டை மண்டலத்தில் திருவல்லிகேணி, ராயப்பேட்டை, ஐஸ் ஹவுஸ், மயிலாப்பூர் பகுதிகளிலும், கோடம்பாக்கம் மண்டலத்தில் கோயம்பேடு, விருகம்பாக்கம், சாலிகிராமம், வடபழனி பகுதிகளிலும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும். வளசரவாக்கம் மற்றும் ஆலந்தூர் மண்டலத்தில் அனைத்து பகுதிகளிலும், அடையாறு மண்டலத்தில் ஆர்.ஏ.புரம், அடையாறு, வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர் பகுதிகளிலும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும்.
பொது மக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ள https://cmwssb.tn.gov.in/என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளில், தொட்டிகள் மற்றும் தெரு நடைகள் மூலம் லாரிகள் குடிநீர் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 044-45674567 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாரியம்மன் சூலத்தேவர் திருக்கல்யாண வைபவம் நேற்று நடந்தது.
- தேரோட்டம் இன்று மாலை 4.15 மணிக்கு தொடங்குகிறது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று மாலை விமரிசையாக நடைபெறுகிறது.
கடந்த 9-ந்தேதி பூச்சொரிதல் மற்றும் நோம்பு சாட்டுதலுடன் தொடங்கிய இந்த விழாவில் அடுத்தடுத்த நிகழ்வுகளாக கொடியேற்றம், பூவோடு, மாவிளக்கு எடுத்தல், அலகு குத்துதல், கண்மலர் செலுத்துதல், பறவை காவடி தீர்த்தம், பால்குடம் எடுத்தல் நடைபெற்றது.
பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து பயபக்தியுடன் நேர்த்திக் கடன்களை மாரியம்மனுக்கு செலுத்தினார்கள்.
நாள்தோறும் இரவு 7 மணி அளவில் மாரியம்மன் சூலத் தேவருடன் வெவ்வேறு வாகனங்களில் உடுமலை நகருக்குள் உலா வந்து பக்தர்களுக்கு அருள் புரிந்தார். தேரோட்டத்திற்கு முந்தைய முக்கிய நிகழ்வாக மாரியம்மன் சூலத்தேவர் திருக்கல்யாண வைபவம் நேற்று கோவில் வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (வியாழக்கிழமை) மாலை 4.15 மணியளவில் கோவில் வளாகத்தில் தொடங்குகிறது. தேரானாது உடுமலை-பொள்ளாச்சி சாலை, தளிரோடு, சதாசிவம் வீதி, தலைகொண்ட அம்மன் கோவில், தங்கம்மாள் ஓடை வழியாக பொள்ளாச்சி-உடுமலையை சாலையை அடைந்து கோவிலை வந்தடைகிறது.
தேரோட்டத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்து ள்ளனர். இதை யடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
- நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது.
- நயினார் நாகேந்திரன் உள்பட 3 பேரை கைது செய்து, நிபந்தனை ஜாமீனில் விடுவிப்பு.
பாராளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது.
பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நயினார் நாகேந்திரன் உள்பட 3 பேரை கைது செய்து, நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் தாம்பரம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.
வழக்கு விசாரணைக்கு நேற்று முன்தினம் நயினார் நாகேந்திரன் ஆஜராக வேண்டி இருந்த நிலையில், 10 நாள் அவகாசம் கேட்டு கடிதம் அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராக 2-வது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதில், மே 2ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நயினார் நாகேந்திரன் கூறுகையில், " மே 2ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளனர். என்னை முழுவதுமாக குறி வைத்துள்ளனர்.
அரசியல் சூழ்ச்சியாகவே இதை பார்க்கிறேன். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர்.
ரூ.4 கோடியை மட்டும் குறிவைத்து பேசுபொருளாக்கி வருகின்றனர். பிடிபட்ட பணத்திற்கும், எனக்கும் தொடர்பில்லை. பலமுறை கூறிவிட்டேன்.
போலீசார் கடமையை செய்கின்றனர். என் தரப்பில் முழு ஒத்துழைப்பு தருவேன்.
- அருணகிரிநாதருக்கு, முருகப்பெருமான் பாத தரிசனம் அருளிய தலம்.
- தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும். இங்கு பிரபவ முதல் அட்சய முடியவுள்ள 60 தமிழ் வருட தேவதைகள் 60 படிக்கட்டுகளாக அமையப்பெற்ற சிறப்பு வாய்ந்த தலமாகும். மேலும், தந்தை சிவனுக்கு 'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தை குருவாக இருந்து உபதேசித்த பெருமை பெற்றதுமாகும். அருணகிரிநாதருக்கு, முருகப்பெருமான் பாத தரிசனம் அருளிய தலமும் இதுவே.
இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் தேரில் எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா.. அரோகரா... பக்தி கோஷம் விண்ணதிர தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
தேரானது அசைந்தாடியபடி 4 ரத வீதிகளிலும் உலா வந்து நிலையை வந்தடைய உள்ளது. பாதுகாப்பு பணியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து, நாளை (வெள்ளிக்கிழமை) வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்று, காவிரியில் தீர்த்தவாரியுடன் முடிவடைகிறது.
- வசந்த உற்சவம் நிறைவாக மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெற்றது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். சித்திரை மாதத்தில் சித்திரை வசந்த உற்சவ விழா நடைபெறும். இந்த விழா 10 நாட்கள் நடைபெறும்.
இந்த ஆண்டிற்கான சித்திரை வசந்த உற்சவம் கடந்த 14-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் மகிழ மரத்தை வலம் வந்த உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரருக்கு பொம்மை பூ கொட்டும் நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் நிறைவாக நேற்று முன்தினம் அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோபால விநாயகர் கோவிலில் இரவு மண்டக படி நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து கோவிலுக்குள் வந்த அருணாசலேஸ்வரர் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க வலம் வந்து தங்க கொடிமரம் அருகே உள்ள சபா மண்டபத்தில் எழுந்தருளினார்.
இதையடுத்து அருணாசலேஸ்வரர் ஆழ்ந்த தியானத்தில் சென்றுவிட்டார். தொடர்ந்து தன் மீது அம்பு எய்த மன்மதனை அருணாசலேஸ்வரர் எரிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
20 அடி உயர பொம்மை
சிவபெருமான் ஆழ்நிலை தியானத்தில் இருக்கும் போது உலகில் உள்ள அனைத்து நிகழ்வுகளும் நின்று இருள் சூழ்ந்து விடுவதால் அந்த தியானத்தை கலைப்பதற்காக தேவர்கள் மன்மதனை சாமி மீது அம்பு விட அனுப்பி வைக்கின்றனர்.
மன்மதன் அருணாசலேஸ்வரர் மீது பானம் தொடுத்த நேரத்தில் அருணாசலேஸ்வரரின் தியானம் கலைந்து எதிரே இருந்த மன்மதனை தீப்பிழம்பால் சுட்டு அழித்தார். இந்த நிகழ்வையே மன்மத தகனம் என்று கூறப்படுகிறது.
இதற்காக 20 அடி உயரம் கொண்ட மன்மதன் பொம்மை கையில் வில்லோடு அருணாசலேஸ்வரர் முன்பு நிறுத்தப்பட்டது. அப்போது மன்மதனை அருணாசலேஸ்வரர் தன் நெற்றிக்கண்ணால் சுட்டெரிக்கும் நிகழ்வு நடந்தேரியது.
அருணாசலேஸ்வரர் முன்பிருந்து சீறி பாய்ந்து வந்த தீ மன்மதன் மீது பட்டு கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் மன்மதன் உருவம் முழுவதும் எரிந்து சாம்பலானது.
அங்கிருந்தவர்கள் தங்களுடைய கர்ம வினைகள் போவதற்கும், பில்லி சூனியம் தங்களை அண்டாமல் இருப்பதற்கும், வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு கண் திருஷ்டிக்காக எரிந்த சாம்பலை எடுத்து சென்றார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மட்டும் மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெறுவது சிறப்பு வாய்ந்ததாகும்.
- சித்திரை மாதத்தில் சூரிய ஒளி நேரடியாக சிவ லிங்கம் மீது விழும்.
- பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த நெல்லிக்குப்பம் அருகே உள்ள திருக்கண்டேஸ்வரத்தில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற நடனபாதேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் தொடர்ந்து ஒரு வாரம் சூரிய ஒளி நேரடியாக சிவ லிங்கம் மீது விழும். அந்த வகையில் நேற்று மாலை 6 மணிக்கு சூரிய ஒளி நேரடி யாக சிவலிங்கம் மீது விழுந்தது. தொடர்ந்து 10 நிமிடம் நீடித்த இந்த அதிசய நிகழ்வின்போது சிவலிங்ககத்துக்கு சிறப்பு பூஜை செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அப்போது பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சேனாதிபதி குருக்கள், கோவில் கணக்கர் சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.
- துணை வேந்தரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுத்துள்ளதன் காரணமாக தலைமையில்லாமல் பல்கலைக்கழகங்கள் இயங்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
- எது எப்படியோ, தி.மு.க. அரசின் மோதல் போக்கு, மாணவ, மாணவியரின் கல்வியை கடுமையாக பாதித்துள்ளது.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் போன்றவை துணை வேந்தர்கள் இல்லாத பல்கலைக்கழகங்களாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இதற்குக் காரணம், ஆட்சியில் இருக்கும்போது ஒரு கொள்கை, ஆட்சியில் இல்லாதபோது ஒரு கொள்கை என இரட்டை நிலைப்பாட்டினை தி.மு.க. எடுத்திருப்பதுதான். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் முரண்பாடுகளில் மொத்த உருவமாக தி.மு.க. விளங்குகிறது. தி.மு.க. அரசின் இந்தச் செயல்பாடு காரணமாக கல்வி பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. எனவே, பல்கலைக்கழக மானியக் குழு விதிக்கும் நிபந்தனைகளை பின்பற்றுவது அவசியம். இதனைப் பின்பற்றாமல், துணை வேந்தரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுத்துள்ளதன் காரணமாக தலைமையில்லாமல் பல்கலைக்கழகங்கள் இயங்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
எது எப்படியோ, தி.மு.க. அரசின் மோதல் போக்கு, மாணவ, மாணவியரின் கல்வியை கடுமையாக பாதித்துள்ளது.
தமிழ்நாட்டு மாணவ, மாணவியரின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு, தற்போதுள்ள நடைமுறைகளின்படி பல்கலைகழகங்களின் துணை வேந்தர் நியமனத்தை மேற்கொள்ள உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- குருபகவான் தவக்கோலத்தில் சுயம்புவாக எழுந்தருளி உள்ளார்.
- லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் குருப்பெயர்ச்சி விழா தொடங்குகிறது.
சோழவந்தான்:
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு சித்திர ரத வல்லபபெருமாளை நோக்கி குருபகவான் தவக்கோலத்தில் சுயம்புவாக எழுந்தருளி உள்ளார். அருகில் சக்கரத்தாழ்வார் உள்ளார்.
இங்கு குருப்பெயர்ச்சி விழா 3 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு வருகிற 29-ந்தேதி காலை 9.30 மணிக்கு லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் குருப்பெயர்ச்சி விழா தொடங்குகிறது.
1-ந்தேதி (புதன்கிழமை) பிற்பகல் 12 மணி வரை தொடர்ந்து 3 நாட்கள் லட்சார்ச்சனை நடைபெறும்.அன்று மதியம் 3 மணி அளவில் யாகசாலை தொடங்கி 5.21 மணிக்குள் பரிகார மகாயாகம், மகா பூர்ணாகுதி, திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்
குருப்பெயர்ச்சியை முன்னிட்டு பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கு பரிகாரம் செய்யவேண்டும். குருப்பெயர்ச்சியை முன்னிட்டு லட்சார்ச்சனை மற்றும் பரிகாரம் செய்ய விரும்பும் ராசிக்காரர்கள் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வாடிப்பட்டி தாசில்தார் மூர்த்தி, சமயநல்லூர் துணை கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் மற்றும் சுகாதாரத்துறையினர் குருப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு வருகிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் கார்த்திகை செல்வி, கோவில் பணியாளர்கள் நாகராஜன், மணி, நித்தியா, ஜனார்த்தனன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு அன்று இரவு 10 மணி வரை தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினசரி காலை 8 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், பகல் 3.30 மணி முதல் மாலை 6 மணி வரையும், வியாழக்கிழமை அன்று காலை 7.30 மணி முதல் பகல் 2 மணி வரையும், பகல் 3.30 மணி முதல் இரவு 7 மணி வரையும் பக்தர்களுடைய வசதிக்காக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- முருகப்பெருமான் தனது இருப்பிடமான திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்டார்.
- பவளக்கனிவாய் பெருமாளும் திருப்பரங்குன்றம் புறப்பட்டார்.
திருப்பரங்குன்றம்:
மதுரையில் மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்திற்கு சென்ற திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பூப்பல்லக்கில் ஊர் திரும்பினார். தங்கை மீனாட்சிக்கு, சுந்தரேசுவரருக்கு தாரை வார்த்துக் கொடுத்த பவளக்கனி வாய்பெருமாளும் தன் இருப்பிடம் வந்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 12-ந்தேதி முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வந்தது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கடந்த 21-ந் தேதி மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபோகம் வெகு விமரிசையாக நடந்தது. அதில் மீனாட்சி அம்மனின் அண்ணனாக பவளக்கனிவாய் பெருமாள் இருந்து சுந்தரேசுவரருக்கு மீனாட்சி அம்மனை தாரை வார்த்து கொடுத்தார்.
இதனையொட்டி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து கடந்த 20-ந்தேதி மாலை 5 மணியளவில் மேள தாளங்கள் முழங்க பல்லக்கில் பவளக்கனிவாய் பெருமாள் புறப்பட்டு மதுரைக்கு வந்தார்.
இதேவேளையில் முருகப்பெருமான் தனது தாய், தந்தை (மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்திற்காக) புறப்பட்டு மதுரைக்கு வந்தார்.
பின்னர் 21-ந் தேதி நடைபெற்ற திருக்கல்யாணம் வைபவத்தில் பங்கேற்று அருள்பாலித்தனர். நேற்று மாலை 5 மணி வரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தங்கி இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் மதுரை நகைக்கடை வீதியில் இருந்து மேள தாளங்கள் முழங்க வாசனை கமழும் வண்ண மலர்களான பூப்பல்லக்கில் தெய்வானையுடன் முருகப்பெருமான் தனது இருப்பிடமான திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்டார்.
இதே வேளையில் பல்லக்கில் பவளக்கனிவாய் பெருமாளும் திருப்பரங்குன்றம் புறப்பட்டார். மீனாட்சி பள்ளம், ஜெய்ஹிந்த்புரம், பழங்காநத்தம், பைக்கரா பசுமலை வழியாக வழிநெடுகிலுமாக அமைக்கப்பட்டு இருந்த திருக்கண் மற்றும் மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தப்படியே இரவில் திருப்பரங்குன்றம் வந்தடைந்து தன் இருப்பிடம் சென்றார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து இருந்தது.
- பெற்றோருடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி திருச்சி அருகேயுள்ள கல்லணைக்கு பேருந்தில் சென்று, அங்கிருந்த பூங்காவில் சுற்றித் திரிந்துள்ளார்.
- சிறுமியிடம் பணத்தை கொடுத்து அவரை திருச்சி செல்லுமாறு கூறிவிட்டு சென்றுவிட்டார்.
திருச்சி:
திருச்சியை சேர்ந்த சிறுமி அடுத்தடுத்து 2 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் உறையூர் போலீசில் புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரரைண நடத்தினர்.
மணப்பாறையை சேர்ந்த முருகேசன் (வயது 45) என்பவருடன் மணப்பாறையில் உள்ள ஒரு லாட்ஜியில் சிறுமி இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து விரைந்து சென்ற போலீசார் சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினர்.
பெற்றோருடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி, திருச்சி அருகேயுள்ள கல்லணைக்கு பேருந்தில் சென்று, அங்கிருந்த பூங்காவில் சுற்றித் திரிந்துள்ளார். இரவு வெகு நேரமானதால் அங்கிருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.
அப்போது அடையாளம் தெரியாத நபர் அவரிடம் பேச்சுக்கொடுத்துள்ளார். வீட்டை விட்டு வெளியேறி வந்ததை தெரிந்து கொண்ட அவர், சிறுமியை மத்திய பேருந்து நிலையத்திற்கு அழைத்து வந்து அங்கிருந்து கோவைக்கு அழைத்து சென்று அங்கு ஒரு விடுதியில் தங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
அதன் பின் சிறுமியிடம் பணத்தை கொடுத்து அவரை திருச்சி செல்லுமாறு கூறிவிட்டு சென்றுவிட்டார். இதையடுத்து அந்த சிறுமி மறுநாள் திருச்சி வந்தார். வீட்டுக்கு செல்ல விரும்பாத அச்சிறுமி, மணப்பாறை பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல முடிவு செய்து, பேருந்தில் ஏறி மணப்பாறை வந்துள்ளார். மணப்பாறை பேருந்து நிலையத்தில் வந்து இறங்கிய சிறுமியிடம் அங்கிருந்த ஒரு நபர் பேச்சுக் கொடுத்துள்ளார்.
சிறுமி தனது உறவினர் வீட்டுக்கு செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார். இதையடுத்து அந்த நபர் சிறுமிக்கு உடைகள், காலணி உள்ளிட்டவற்றை வாங்கி கொடுத்து, சிறுமியை ஒரு விடுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து முருகேசனை போக்சோவில் கைது செய்தனர்.
மேலும் சிறுமியை கோவைக்கு அழைத்து சென்ற மர்மநபர் குறித்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் பதிவை ஆராய்ந்து விசாரணை நடத்தி அவரை தனிப்படை போலீசார் தேடிவருகின்றனர்.






