என் மலர்
உள்ளூர் செய்திகள்
- நீலகிரி தொகுதியில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து சீல் வைக்கப்பட்டன
- இந்த கல்லூரி சுற்றி 163 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றது
நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கடந்த 20 ஆம் தேதி உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து சீல் வைக்கப்பட்டன.
இந்த கல்லூரியை சுற்றி துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கல்லூரி சுற்றியும் 163 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், கட்சி பிரமுகர்கள் காணக்கூடிய அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட நிர்வாகத்தின் தொழிட்நுட்ப கோளாறு வல்லுநர்கள் சிசிடிவி காட்சிகளை சரிசெய்தனர்.
காட்சி திரையில் மட்டும் கோளாறு ஏற்பட்டதாகவும், அதில் பதிவானது அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக நீலகிரி ஆட்சியர் அருணா விளக்கம் அளித்துள்ளார். அதில்,
"அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் கண்காணிப்பு கேமராக்கள் செயல் இழந்துவிட்டன. மாலை 6.17 முதல் 6.43 வரை 20 நிமிடங்கள் 173 கண்காணிப்பு கேமராக்களும் செயல்படவில்லை. அந்த குறிப்பிட்ட 20 நிமிடங்களுக்கு எந்தவித கண்காணிப்பு கேமரா பதிவுகளும் இல்லை. உடனடியாக தொழில்நுட்ப பணியாளர்கள் மூலம் கூலர்ஸ் வைக்கப்பட்டு சரி செய்யப்பட்டது.
இன்று அரசியல் கட்சி வேட்பாளர்கள் வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட வருகின்றனர். எனவே பாதுகாப்பு குறைபாடுக்கு 200 சதவீதம் வாய்ப்பு இல்லை. மேலும் எதிர்காலத்தில் இதுபோல் எந்த பிரச்சினைகளும் ஏற்படாமல் இருக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியுள்ள தனியாருக்கு தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
- மிளகு சாகுபடி குறித்த கருத்தரங்கை காவேரி கூக்குரல் இயக்கம் ஒரே நாளில் தமிழ்நாட்டில் நான்கு இடங்களில் நடத்தியது.
- கருத்தரங்க நிறைவுக்கு பின் பண்ணை பார்வையிடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஈஷாவின் காவேரி கூக்குரல் சார்பில் 'லட்சங்களை அள்ளித்தரும் சமவெளியில் மிளகு சாத்தியமே' எனும் மாபெரும் கருத்தரங்கு புதுக்கோட்டை மற்றும் மயிலாடுதுறையில் இன்று (28-04-2024) நடைபெற்றது. இக்கருத்தரங்கை தொடங்கி வைத்து சுற்றுச்சுழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு. வீ. மெய்யநாதன் விவசாயிகளே இயற்கையை காக்கும் மருத்துவர்கள் என்று பெருமிதத்துடன் கூறினார்.
மலை சார்ந்த இடங்களில் மட்டுமே விளையும் என்று அனைவராலும் அறியப்பட்ட மசாலா பயிர் வகையான மிளகு, சமவெளியிலும் சிறப்பாக விளையும் என்பதை அனைத்து விவசாயிகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் மிளகு சாகுபடி குறித்த கருத்தரங்கை காவேரி கூக்குரல் இயக்கம் ஒரே நாளில் தமிழ்நாட்டில் நான்கு இடங்களில் நடத்தியது.
இக்கருத்தரங்கு புதுக்கோட்டையில் ஆலங்குடி தாலுக்கா, அனவயலில் அமைந்துள்ள முன்னோடி மிளகு விவசாயி திரு. ராஜாகண்ணு அவர்களின் பண்ணையிலும், மயிலாடுதுறையில் அரையபுரம் பகுதியில் அமைந்துள்ள ஆசிரியர் வீரமணி அவர்களின் தோட்டத்திலும் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் அமைச்சரை வரவேற்றுப் பேசிய காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் அவர்கள் "தற்சமயம் தமிழ்நாட்டில் மூன்று மாவட்டங்களில் மட்டுமே தோட்டக்கலை துறை சார்பாக, விவசாயிகளுக்கு மிளகு கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது சம வெளியிலும் மிளகு சாகுபடி சாத்தியம் என்று நிருபிக்கபட்டுள்ளதால், தமிழக அரசு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் மிளகு கன்றகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என்ற கோரிக்கையை முன் வைத்தார்.
கருத்தரங்கை துவக்கி வைத்த சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு. மெய்யநாதன் அவர்கள் பேசுகையில் "2018 கஜா புயலுக்கு பின் புதுக்கோட்டையில் பாதிக்கப்பட்டிருந்த நிலங்களை இந்த பகுதி விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்தின் மூலம் கடந்த 5 - 6 ஆண்டுகளில் மீட்டெடுத்து, பசுமை பரப்பை அதிகரித்துள்ளனர். இயற்கையை பாதுகாக்கும் விவசாயிகளே இயற்கையை காக்கும் மருத்துவர்கள் என பெருமிதத்துடன் கூறினார்.
அத்துடன் பூமியை பாதுகாக்க மரங்களை நடவு செய்வோம், மிளகின் மூலம் கூடுதல் வருவாய் பெறுவோம். மேலும் காவேரி கூக்குரல் சார்பில் வைக்கப்பட்ட அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் மிளகு கன்றுகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் " என உறுதியளித்தார்.
இந்த மிளகு சாகுபடி கருத்தரங்குகளில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் புதிய ரக மிளகை கண்டுபிடித்து காப்புரிமை பெற்றவர்கள் பங்கேற்று மிளகு ரகங்களை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, அதை நட்டு பராமரிக்கும் வழிமுறைகள், அறுவடை செய்யும் முறைகள், விற்பனை மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் என பல்வேறு தகவல்களை விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டனர்.

குறிப்பாக மிளகு சாகுபடியில் முன்னோடி விவசாயியான ஆசிரியர் திரு. ராஜாகண்ணு அவர்கள் பேசுகையில் " மிளகு என்பது மனிதர்களின் உணவில் தவிர்க்க முடியாத அருமருந்து, அது மலை பிரதேசங்களில் மட்டுமே கிடைக்கும் என்ற நிலை மாறி இன்று சமவெளியிலும் சாத்தியப்படுத்தி இருக்கிறோம். இரண்டு தலைமுறை பயிர் என்றழைக்கப்படும் மிளகை பயிர் செய்த 6 வருடங்களுக்கு பிறகு ஒரு செடியில் இருந்து 3 - 5 கிலோ வரை மகசூல் எடுக்க முடியும். மேலும் ஒரு ஏக்கரில் 500 - 1000 கிலோ வரை காய்ந்த மிளகை எடுக்கலாம். எனவே சரியான பராமரிப்பு முறைகளை பின்பற்றினால் நல்ல மகசூலுக்கான வாய்ப்பு சமவெளியிலும் உண்டு" என தெரிவித்தார்.
மேலும் இக்கருத்தரங்கில் இந்திய நறுமணப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானிகள் டாக்டர். கண்டிஅண்ணன் மற்றும் டாக்டர் . முகமது பைசல் அவர்கள் மிளகு சாகுபடி குறித்தும், அதில் ஏற்படும் நோய்கள் மற்றும் தீர்வுகள் குறித்தும் பேசினர். இவர்களோடு இந்திய நறுமண பயிர்கள் வாரியத்தின் துணை இயக்குனர் ந. சிமந்தா சைக்கியா அவர்கள் மிளகு ஏற்றுமதி குறித்து விளக்கினார்.
மேலும், சமவெளியில் மிளகு சாகுபடி மூலம் வெற்றி கண்டிருக்கும் முன்னோடி விவசாயிகளான திரு. பாலுசாமி, திரு. ராஜாகண்ணு, திரு. செந்தமிழ் செல்வன், திரு. பாக்கியராஜ், வளர்மதி மற்றும் தனித்தன்மை வாய்ந்த பெப்பர் தெக்கன்-1 மிளகு, காப்புரிமை பெற்ற 50 வருட அனுபவ விவசாயி திரு. டி.டி. தாமஸ் உள்ளிட்டோர் தங்கள் அனுபவங்களை விளக்கி கூறினர்.

இதைத் தொடர்ந்து மயிலாடுதுறையில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று பேசிய முன்னோடி விவசாயி, ஆசிரியர் ந.வீரமணி அவர்கள் சரியான சூழலை ஏற்படுத்தினால் டெல்டாவிலும் மிளகு விவசாயம் சாத்தியம் என்பதை தன் அனுபவத்தில் இருந்து பகிர்ந்து கொண்டார்.
இது மட்டுமின்றி, கருத்தரங்க நிறைவுக்கு பின் பண்ணை பார்வையிடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் மூலம் விவசாயிகள் தங்களுக்கிருந்த பல்வேறு சந்தேகங்களை நேரில் பார்த்து கேட்டு தெரிந்து கொண்டனர்.
- பல்வேறு பிரிவுகளில் சாகசங்களை செய்து 32 முறை சாதனை புத்தக பட்டியலில் இடம் பெற்று உள்ளார்.
- அதிக எண்ணிக்கையில் எரியும் சிமெண்ட் கான்கிரீட் கற்களை உடைத்த முதல் வீரர் என்ற பெருமையை விஜய் நாராயணன் பெற்றுள்ளார்.
மதுரை:
மதுரை சின்ன சொக்கி குளத்தை சேர்ந்தவர் விஜய் நாராயணன். ஐ.டி. ஊழியரான இவர் கடந்த சில ஆண்டு களாக டேக் வாண்டோ என்ற கொரிய தற்காப்பு கலையை கற்று தேர்ச்சி பெற்றார். இதனை தொடர்ந்து அவர் டேக் வாண்டோ மூலம் கற்களை குறைந்த நிமிடத்தில் கை யால் உடைப்பது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சாகசங்களை செய்து 32 முறை சாதனை புத்தக பட்டியலில் இடம் பெற்று உள்ளார்.
இந்நிலையில் புதிய முயற்சியாக விஜய் நாராயணன் தனது வீட்டின் மாடியில் எரியும் 29 சிமெண்ட் கான்கிரீட் கற்களை 30 விநாடிகளில் அடுத்தடுத்து உடைத்து சாதனை படைத்து உள்ளார். இவரது சாதனையை கின்னஸ் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கி உள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் குறைந்த வினாடியில் அதிக எண்ணிக்கையில் எரியும் சிமெண்ட் கான்கிரீட் கற்களை உடைத்த முதல் வீரர் என்ற பெருமையை விஜய் நாராயணன் பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு இந்த சாதனையை பாகிஸ்தானை சேர்ந்த முகமது இம்ரான் 25 எரியும் கான்கிரீட் கற்களை உடைத்து சாதனை செய்திருந்தார். தற்போது விஜய் நாராயணன் மூலம் அந்த சாதனை முறியடிக்கப்பட்டு உள்ளது.
- வினித் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது கையில் வைத்திருந்த 5 ரூபாய் நாணயம் எதிர்பாராத விதமாக முழுங்கியுள்ளார்.
- தொண்டை பகுதியில் சிக்கிக்கொண்டதால் அறுவை சிகிச்சை செய்யாமல் அப்புறப்படுத்த முயற்சி செய்தனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் மிட்டப்பள்ளி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த சிவா-விஜய பிரியா தம்பதியரின் 10 வயது குழந்தை வினித் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது கையில் வைத்திருந்த 5 ரூபாய் நாணயம் எதிர்பாராத விதமாக முழுங்கியுள்ளார்.
இதனை கண்ட அவரது உறவினர்கள் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது தொண்டை பகுதியில் 5 ரூபாய் நாணயம் சிக்கி இருந்தது உறுதி செய்தனர்.
தொண்டை பகுதியில் சிக்கிக்கொண்டதால் அறுவை சிகிச்சை செய்யாமல் அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். இதையடுத்து குறித்த நேரத்தில் சிறுவன் முழுங்கிய நாணயத்தை அப்புறப்படுத்தினார்.
இந்த சிகிச்சையில் மருத்துவர்கள் மதன்குமார், காது மூக்கு, தொண்டை மருத்துவர் செந்தில், மயக்கவியல் நிபுணர் மருத்துவர் சதீஷ்குமார் ஆகியோருக்கு சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் பொதுமக்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
- குற்றப்பத்திரிகையில் கோவையில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கைதான உமர் பாரூக் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஐ.எஸ். ஆதரவாளர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளித்துள்ளார்.
கோவை:
கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் முன்பு கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
இந்த சம்பவத்தில் காரில் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் என்ற வாலிபர் பலியானார். தீபாவளிக்கு முந்தைய நாள் மக்கள் கூட்டத்தில் கார் குண்டை வெடிக்கச் செய்து பெரும் சேதத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இருந்த நிலையில் அந்த சதியில் சிக்கி ஜமேஷா முபின் பலியானார். இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் (தேசிய புலனாய்வு முகமை) விசாரித்து வருகிறார்கள்.
இதுவரை இந்த வழக்கு தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே இந்த வழக்கில் 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில் முபின் மற்றும் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய ஆதரவாளரான உமர்பாரூக்கின் நெருங்கிய கூட்டாளியான கோவை போத்தனூர் திருமலை நகர் பகுதியைச் சேர்ந்த தாஹா நசீர் என்பவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த நவம்பர் மாதம் கைது செய்திருந்தனர். 14-வது குற்றவாளியாக கைது செய்யப்பட்ட தாஹாநசீருக்கு எதிராக பூந்தமல்லி என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் தற்போது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த குற்றப்பத்திரிகையில் கோவையில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த முகமது அசாருதீன் என்பவர் ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவரை ஜெயிலில் அடைத்ததற்கு பழிவாங்கும் நோக்கில் கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்த முபின் மற்றும் அவரது கூட்டாளிகள் திட்டமிட்டு இருந்ததாகவும், அதிர்ஷ்டவசமாக கார் குண்டு முன்கூட்டியே வெடித்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கைதான உமர் பாரூக் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஐ.எஸ். ஆதரவாளர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளித்துள்ளார். அவருடன் தாஹாநசீரும் இணைந்து சதி வேலைகளில் ஈடுபட்டுள்ளார். குண்டுவெடிப்புக்கு ஒரு வாரத்துக்கு முன்பு கூட முபின் வீட்டுக்கு தாஹாநசீர் சென்று சதிச்செயலுக்கு திட்டமிட்டுள்ளார்.
இதன் மூலம் நாட்டின் அமைதியை சீர்குலைத்து, ஒருமைப்பாட்டுக்கும், மத நல்லிணக்கத்துக்கும் ஊறுவிளைக்கும் நோக்கில் இந்த கும்பல் செயல்பட்டு வந்துள்ளதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே பலமுறை கோவையில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் கிடைக்கும் தகவல்களை கொண்டு அடுத்தடுத்து குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளனர். குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக மொத்தம் 3 முறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் மாவட்டந்தோறும் கோடை கால பயிற்சி முகாம் நடைபெறும்.
- சென்னையில் 500 ரூபாயும், இதர மாவட்டங்களில் 200 ரூபாயும் கட்டவேண்டும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் செய்தி வெளியிட்டுள்ளனர்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் தமிழக மாணவ, மாணவிகள் எந்த விளையாட்டுப் பிரிவில் சிறந்து விளங்குகிறார்கள் என்பதைக் கண்டறிந்து, அவ்விளையாட்டுக்களில், மாணாக்கர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கி விளையாட்டுத் திறனை ஊக்கு விக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ கத்தில் மாவட்டந்தோறும் கோடை கால பயிற்சி முகாம் நடைபெறும்.
இவ்விளையாட்டுப் பயிற்சி முகாமில் 18 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். அதன்படி இந்தாண்டு 29.4.2024 முதல் 13.5.2024 வரை கால்பந்து, வாலிபால், கபாடி, கூடை பந்து உள்ளிட்ட பல விளையாட்டுகளுக்கு கோடை கால சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என்றும், அதற்காக இந்த ஆண்டு கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிக் கட்டணமாக சென்னையில் 500 ரூபாயும், இதர மாவட்டங்களில் 200 ரூபாயும் கட்டவேண்டும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் செய்தி வெளியிட்டுள்ளனர்.
கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களில் பெரும்பாலானோர் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படித்து வருபவர்கள். அவர்களிடம் பயிற்சிக்கு கட்டணம் வசூலிக்க ஆணையம் கூறுவதற்கு விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
அம்மா அரசில், மாணவர்களின் விளையாட்டுப் பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில், கோடை கால பயிற்சி முகாமிற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்காமல், பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் இப்பயிற்சி முகாமில் பங்கேற்று தமிழகத்தில் விளையாட்டுத் துறையில் தங்களது திறமைகளை நிரூபித்து வந்தனர்.
மாவட்டந்தோறும் விளையாட்டு மைதானங்கள் (ஸ்டேடியம்) அமைக்கப்படும் என்றும், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை பிரதம மந்திரியை வைத்து ஆரம்பித்து வைத்தோம் என்றும், உலக செஸ் போட்டியை தமிழகத்தில் நடத்திவிட்டோம் என்றும் சுய தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தி.மு.க. அரசின் பொம்மை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாரிசு அமைச்சரின் கீழ் செயல்படும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, எந்த ஆண்டும் இல்லாத புதுமையாக இந்த ஆண்டு கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்களிடம் இருந்து பயிற்சிக் கட்டணமாக 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரா ஒலிம்பிக் உலகப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றேன் என்று கடையில் வாங்கிய கோப்பையுடன் வந்த நபரை உச்சி முகர்ந்து அவரோடு படம் எடுத்தது மட்டுமின்றி, தன் முதல்-அமைச்சர் தந்தையுடன் நிற்க வைத்து புகைப்படம் எடுத்து வெற்று விளம்பரம் தேடிய அதிபுத்தி சாலி மந்திரியிடம் இதை விடப் பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது.
எனவே பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டுமென்றும், கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்றும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 3 ஆண்டுகளாக துபாயில் இருந்து வந்த ராஜேஷ் நேற்று சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார்.
- ராஜேஷ் கைது செய்யப்பட்டதையடுத்து வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவரது மகன் காசி (வயது 29). இவர் மீது கடந்த 2020-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை மற்றும் பண மோசடி புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் குமரி மாவட்ட போலீசார் காசியை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ஏராளமான இளம்பெண்களை குறி வைத்து அவர்களோடு நெருக்கமாக இருந்த காட்சிகளை வைத்து காசி மிரட்டி பணம் பறித்தது அம்பலமானது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக 8 வழக்குகள் பதிவு செய்யப் பட்டது. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு காசிக்கு உதவியதாக அவரது தந்தை தங்க பாண்டியனை கைது செய்தனர். அவரது நண்பர்கள் டைசன் ஜினோ, தினேஷ் கவுதம் ஆகியோரும் கைது செய்யப்பட்டு ஜாமீ னில் விடுதலை ஆனார்கள்.
இதையடுத்து காசி மீது தொடரப்பட்ட ஒரு பாலியல் வழக்கில் காசிக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதனால் காசி தொடர்ந்து ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். காசி மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதுவரை 7 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த வழக்கில் காசியுடன் அவரது நண்பர் நாகர்கோவில் ராமன்புதூரை சேர்ந்த ராஜேஷ் என்ற ராஜேஷ்சிங் (43) என்பவர் மீதும் பாலியல் துன்புறுத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர் வெளிநாட்டில் இருந்து வந்தார்.
இதையடுத்து அவரை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இது தொடர்பாக விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. 3 ஆண்டுகளாக துபாயில் இருந்து வந்த ராஜேஷ் நேற்று சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார். சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவரை சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ராஜேஷை நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தனர். அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. 3 மணி நேரத்திற்கு மேலாக ராஜேஷிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரை ஜெயிலில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பின்னர் ராஜேஷ் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். ராஜேஷ் கைது செய்யப்பட்டதையடுத்து இந்த வழக்கிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். விரைவில் இந்த வழக்கிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.
- பெருமழை, வெள்ள பாதிப்புக்காக ரூ.160.61 கோடியும் ஆக மொத்தம் ரூ.276 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
- கர்நாடக மாநிலத்திற்கு வறட்சி பாதிப்புக்காக மோடி தலைமையிலான மத்திய அரசு ரூ.3498.82 கோடி அளித்திருக்கிறது.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட இயற்கை பேரிடர், மிச்சாங் புயல் மற்றும் மழை வெள்ளப் பாதிப்புகளுக்காக தமிழ்நாட்டிற்கு ரூ.37,907 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிச்சாங் புயல் பாதிப்புக்காக ரூ.115.49 கோடியும், அதே மாதம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த பெருமழை, வெள்ள பாதிப்புக்காக ரூ.160.61 கோடியும் ஆக மொத்தம் ரூ.276 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு கேட்ட நிதியில், ஒன்றிய அரசு ஒரு சதவீதத்திற்கு கீழே அதாவது 0.78 சதவீதம் மட்டுமே இயற்கை பேரிடர் பாதிப்புகளுக்காக தமிழ்நாட்டிற்கு வழங்கி இருக்கிறது.
ஆனால் கர்நாடக மாநிலத்திற்கு வறட்சி பாதிப்புக்காக மோடி தலைமையிலான மத்திய அரசு ரூ.3498.82 கோடி அளித்திருக்கிறது.
அதிக வரி அளிக்கும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு பா.ஜ.க. அரசு நிதி பகிர்வில் பச்சைத் துரோகம் இழைத்து வருவது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நீலகிரி மாவட்டத்தில் தற்போது சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.
- தெப்பக்காடு யானைகள் முகாமில் சுற்றுலா பயணிகள், அங்கு வளர்க்கப்படும் யானைகளை ரசிக்கலாம்.
ஊட்டி:
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கோடை அனல் வெயில் வாட்டி வதைப்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளுகுளு சீசன் நிலவும் நீலகிரி மாவட்டத்துக்கு படையெடுத்து வந்திருந்து அங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவித்து வருகின்றனர்.
மேலும் அவர்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்றும் பார்வையிட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதாலும், சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்கள் என்பதாலும், நீலகிரி மாவட்டத்தில் தற்போது சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடை சீசனை முன்னிட்டு கண்ணாடி மாளிகையில் மலர்ச்செடிகளை அடுக்கி வைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு இரண்டரை டன் வண்ண கூழாங்கற்களை கொண்டு வனவிலங்குகளின் உருவத்தை வடிவமைக்கும் பணி முதல் முறையாக தொடங்கப்பட்டு உள்ளது. ஊட்டி தாவரவியல் பூங்கா மட்டுமின்றி ரோஜா பூங்காவிலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதேபோல முதுமலை புலிகள் சரணாலயத்தையும் காணவும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி அங்கும் குவிந்து வருகிறார்கள். கட்டணம் செலுத்தும் சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் பாதுகாப்பு நிறைந்த தங்கள் வாகனங்களில் அழைத்துச் செல்வர். அந்த வாகனம் வனப்பகுதியை சுற்றி வரும். அப்போது யானை, மான், புலி என ஏராளமான வனவிலங்குகள் காட்டில் சுற்றித்திரிவதை நேரில் பார்க்கலாம்.
அதேபோல தெப்பக்காடு யானைகள் முகாமுக்கும் சென்று சுற்றுலா பயணிகள், அங்கு வளர்க்கப்படும் யானைகளை ரசிக்கலாம். காலை மற்றும் மாலை வேளைகளில் யானைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்வு நடைபெறும். இதனை காண சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் முதுமலை முகாம் மற்றும் தெப்பக்காடு முகாமில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.
- சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் ஆவணங்கள் ஒப்படைப்பு.
- கைது செய்யப்பட்டவர்களின் 4 செல்போன்களும் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு.
சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில், ஆவணங்களை தாம்பரம் போலீசார் ஒப்படைத்தனர்.
சிபிசிஐடி டிஎஸ்பி சசிதரன் முன்னிலையில், விசாரணை அதிகாரியான சிபிசிஐடி காவல் ஆய்வாளர் லோகநாதனிடம் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தாம்பரம் போலீசார் இதுவரை 15 பேரிடம் விசாரணை நடத்தி, 350 பக்க விசாரணை அறிக்கையை தயார் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
350 பக்க விசாரணை அறிக்கையை தாம்பரம் காவல் ஆய்வாளர் பாலமுரளி சுந்தரம், சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்டவர்களின் 4 செல்போன்களும் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் வாக்காளர்களின் பெயர்கள் பல இடங்களில் விடுபட்டுள்ளது.
- வாக்குப்பதிவு இ.வி.எம். எந்திரத்தில் எதுவும் முறைகேடு செய்ய முடியாது என்பதை தெள்ளத்தெளிவாக பலமுறை விளக்கி இருக்கிறார்கள்.
கோவை:
மத்திய மந்திரி எல்.முருகன் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
நீலகிரி தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் கேமரா காட்சிகள் நேற்று திரையில் தெரியாமல் போய் உள்ளது. அதற்கு தொழில்நுட்ப கோளாறு என்று சொல்கிறார்கள். இவ்வாறு தொழில்நுட்ப கோளாறு வராமல் பார்த்துக் கொள்வது தேர்தல் ஆணையத்தின் முறையான பணியாக இருக்க வேண்டும்.
கண்காணிப்பு கேமரா காட்சிகள் தெரியாமல் போனதற்கு காரணம் கால சூழ்நிலை, கடும் வெயில் என்றெல்லாம் சொல்கிறார்கள். நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் அடிக்கும் வெயிலை போன்று ஊட்டியில் வெயில் தாக்கம் இருப்பதில்லை. எனவே எதாவது காரணம் சொல்வதை விட்டுவிட்டு முறையாக தொழில்நுட்பத்தை சரிசெய்து 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்க வேண்டும். எந்தவித சந்தேகத்துக்கும் இடம் கொடுக்காமல் தேர்தல் ஆணையம் முறையான பணி செய்ய வேண்டும்.
தமிழகத்தில் வாக்காளர்களின் பெயர்கள் பல இடங்களில் விடுபட்டுள்ளது. குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியினர் அல்லது பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பவர்கள் வாக்குகள் எல்லாமே விடுபட்டுள்ளது. நீலகிரி, கோவை, தென்சென்னை என தமிழகம் முழுவதுமே வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வினர் தோல்வியை மறைப்பதற்காக அவர்கள் எங்களுடைய வாக்காளர்களை நீக்கி உள்ளனர்.
வாக்குப்பதிவு இ.வி.எம். எந்திரத்தில் எதுவும் முறைகேடு செய்ய முடியாது என்பதை தெள்ளத்தெளிவாக பலமுறை விளக்கி இருக்கிறார்கள். தேர்தல் ஆணையமும் விளக்கி உள்ளது. தோல்வி பயத்தில் காங்கிரசும், இந்தியா கூட்டணி கட்சியினரும் இதனை கையில் எடுத்துள்ளனர்.
அயோத்தி ராமர் கோவில் மக்களின் ஒவ்வொருவரின் எண்ணம். இந்தியர்கள் ஒவ்வொருவரின் கனவு இன்று நிறைவேறி உள்ளது. அனைவரும் சென்று வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ராகுல்காந்தி அங்கு செல்லவில்லை என்பது அவர் ராமரை வெறுக்கிறாரா, அல்லது கடவுளை வெறுக்கிறாரா அல்லது இந்து மதத்தை வெறுக்கிறாரா என்பது தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- அமராவதி அணையிலும் நீா் இருப்பு குறைந்து காணப்படுவதால், யானைகள் அவதியடைந்து வருகின்றன.
- தண்ணீா் கிடைக்காமல் யானைகள் அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
உடுமலை:
திருப்பூா் மாவட்டம், உடுமலை மற்றும் அமராவதி வனப் பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருவதால், யானைகள் குடிநீருக்காக அலையும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.
இந்நிலையில் கோடைக் காலம் தொடங்கியுள்ளதால் வனப் பகுதியில் உள்ள ஓடைகள், ஆறுகள் வறண்டு போயுள்ளன. மேலும், புற்கள் காய்ந்து வன விலங்குகளுக்கு உணவு கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் உணவு, குடிநீா் தேடி வன விலங்குகள் வனத்தைவிட்டு கூட்டம் கூட்டமாக வெளி யேறத் தொடங்கியுள்ளன.
அதன்படி தமிழக எல்லைக்குட்பட்ட காமனூத்து, பூங்கன் ஓடை, சரக்குப்பட்டி, ஏழுமலையான் கோவில் வளைவு உள்ளிட்ட பகுதிகளுக்கு யானைகள் வரத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, குடிநீா்த் தேவைக்காக உடுமலை-மூணாறு சாலையைக் கடந்து அமராவதி அணையை நோக்கி யானைகள் படையெடுத்து வருகின்றன. ஆனால், அமராவதி அணையிலும் நீா் இருப்பு குறைந்து காணப்படுவதால், யானைகள் அவதியடைந்து வருகின்றன.
உடுமலை மற்றும் அமராவதி வனப்பகுதியில் வனத்துறையினரால் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகளும் வறண்டு காணப்படுகின்றன. இதனால், தண்ணீா் கிடைக்காமல் யானைகள் அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து உடுமலை மற்றும் அமராவதி வனச் சரக அதிகாரிகள் கூறியதாவது:- வனப்பகுதியில் தற்போது கடுமையான வறட்சி நிலவி வருகிறது. தடுப்பணைகளும் வறண்டு போனதால் யானைகள் வனத்தைவிட்டு வெளியே சுற்றி வருகின்றன. தற்போது, அமராவதி அணையை நோக்கி யானைகள் கூட்டம்கூட்டமாக வருகின்றன. அங்கும் நீா்ப் பற்றாக்குறை உள்ளது. மழை பெய்தால் மட்டுமே இதற்குத் தீா்வு கிடைக்கும் என்றனா்.






