என் மலர்
உள்ளூர் செய்திகள்
- யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த விழாவை முன்னெடுத்து சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.
- வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.
திருப்பூர் கலைஞர் மத்திய பேருந்து நிலையம் முன்பு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும் பல்லடம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான எம் .எஸ். எம். ஆனந்தன் பங்கேற்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த விழாவை முன்னெடுத்து சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.
அதன் இடையிலே யார் வேண்டுமானாலும் வருவார்கள் , போவார்கள். கட்சிக்கு விரோதமாக செயல்படுபவர்களை கட்சியை விட்டு நீக்கும் உரிமை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளாட்சி துறையில் ரூ.800 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக சொல்கிறார்கள்.
- அரசியல் பாகுபாடு இல்லாமல் கொடுத்தால் முதலமைச்சரை நானே பாராட்டுவேன்.
'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற தலைப்பில் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்று காலை கும்பகோணத்திற்கு வருகை தந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழையால் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மணிகள் பாதிப்பு உள்ளானது தி.மு.க. ஆட்சியின் நிர்வாக திறமையின்மைக்கு ஒரு சான்று. ஆய்வு என்ற பெயரில் துணை முதலமைச்சர் தஞ்சை ரெயில் நிலையத்திற்கு வந்து பார்த்துவிட்டு புறப்பட்டு சென்றுவிட்டார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து செங்கோட்டையனை நீக்கியது, அவர்களது உட்கட்சி பிரச்சினை. இதில் நான் தலையிட விரும்பவில்லை. அமைச்சர் சேகர் பாபு முதலில் கோவில் பிரச்சினையை சரி செய்யட்டும். அதன் பிறகு, கட்சி பிரச்சினையை பார்க்கட்டும்.
ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், செங்கோட்டையன் ஆகியோரை சந்தித்து பா.ஜ.க.-விற்கு ஆதரவு கேட்பீர்களா? என்ற கேள்விக்கு மற்றொரு நாள் பதில் அளிப்பதாக கூறி ஒற்றை வரியில் முடித்தார். வடக்கு, தெற்கு எனவும், மொழிவாரியாக திரித்து பேசுவதும், தமிழகத்தில் வன்மத்தை ஏற்படுத்துவதும், கருணாநிதி காலத்தில் இருந்து தொன்று தொட்டு செய்து கொண்டு இருக்கிறார்கள்.
நானும் டெல்டாகாரன் என சொல்லிக் கொள்ளும் முதலமைச்சர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். அதனை அரசியல் பாகுபாடு இல்லாமல் கொடுத்தால் முதலமைச்சரை நானே பாராட்டுவேன்.
உள்ளாட்சி துறையில் ரூ.800 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக சொல்கிறார்கள். விசாரணையின் முடிவில் உண்மை தெரியவரும் என்றார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. ஆட்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
- தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வதால், பட்டுச் சேலைகளின் விலையும் உயர்ந்துள்ளது.
சென்னை:
காஞ்சிபுரத்தில் 30-க்கும் மேற்பட்ட பட்டுப்புடவை உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வரும் நிலையில் அவற்றில் முக்கியமான ஒன்றான முருகன் கூட்டுறவு சங்கம் அதன் விற்பனை நிலையத்தை எண்ணைக்கார தெருவில் உள்ள சொந்த இடத்தில் புதுப்பொலிவுடன் புனரமைத்துள்ளது. இந்த விற்பனை நிலையத்தை அமைச்சர் காந்தி திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் எம்.பி. செல்வம் மற்றும் சி.வி.எம்.பி. எழிலரசன் எம்.எல்.ஏ., முருகன் பட்டு கூட்டுறவு சங்க தலைவர் முத்துச்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் காந்தி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகள் மிகவும் தரமாக இருப்பதால் அனைவரும் அணிந்து மகிழ்கிறார்கள்.
மேலும், இந்த ஆண்டுக்கான பொங்கல் வேட்டி, சேலைகள் நவம்பர் 15-ந் தேதி முதல் வினியோகிக்கப்பட உள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வதால், பட்டுச் சேலைகளின் விலையும் உயர்ந்துள்ளது. எனவே, புடவைகளில் சேர்க்கப்படும் ஜரிகையில் தங்கம் மற்றும் வெள்ளியைக் குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மழை காரணமாக இதுவரை நெசவாளர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. தி.மு.க. ஆட்சியில் நெசவுத் தொழிலாளர்களின் கூலி உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு ரூ.800 கூலி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது நெசவாளர்களுக்கு ரூ.800 முதல் ரூ.1500 வரை கூலி கிடைக்கிறது.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் அ.தி.மு.க. ஆட்சியில் பத்தாண்டுகளில் 9 ஆண்டுகள் நஷ்டத்தில் இயங்கிய நிலையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகுமுதல் ஆண்டிலேயே ரூ.9 கோடி லாபம் ஈட்டியது, 58 சொசைட்டிகள் நவீனமயமாக்கப்பட்டு வியாபாரம் அதிகரித்து கூட்டுறவு சங்கங்கள் லாபத்தில் இயங்கத் தொடங்கி உள்ளது.
இவ்வாறு அமைச்சர் காந்தி கூறினார்.
- வருகிற 6-ந்தேதி பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
- திருப்பூரில் தங்கி இருந்த தொழிலாளர்களும் தற்போது தங்கள் மாநில தேர்தலில் வாக்களிக்க சொந்த மாநிலத்திற்கு செல்ல முனைப்பு காட்டி வருகின்றனர்.
திருப்பூர்:
தொழில் நகரமான திருப்பூரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும், வடமாநிலங்களை சேர்ந்தவர்களும் பணியாற்றி வருகின்றனர்.
இதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திருப்பூரில் தங்கி இருந்து பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் சென்ற நிலையில் வருகிற 6-ந்தேதி பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திரும்பி வராமல் அங்கேயே தங்கியுள்ளனர். மேலும் திருப்பூரில் தங்கி இருந்த தொழிலாளர்களும் தற்போது தங்கள் மாநில தேர்தலில் வாக்களிக்க சொந்த மாநிலத்திற்கு செல்ல முனைப்பு காட்டி வருகின்றனர்.
இதன் காரணமாக திருப்பூர் ரெயில் நிலையம் வழியாக பீகார் செல்லும் ரெயில்களில் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.
- செங்கோட்டையனை விட வயதில் சிறியவரானாலும் எடப்பாடி பழனிசாமிக்கு அனைத்து தகுதியும் உள்ளது.
- ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட துரோகி தான் டி.டி.வி. தினகரன்.
மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* இ.பி.எஸ்.-ஐ விட செங்கோட்டையன் வயதில் மூத்தவர் அவ்வளவு தான்.
* ராகுல் காந்தி கூட தான் வயதில் சிறியவர், ஆனால் தலைவர்கள் அவர் பின்னால் இருக்கிறார்கள்.
* செங்கோட்டையனை விட வயதில் சிறியவரானாலும் எடப்பாடி பழனிசாமிக்கு அனைத்து தகுதியும் உள்ளது.
* கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி A1 குற்றவாளி என்றால் சிறையில் தள்ளி விடலாமே?
* ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட துரோகி தான் டி.டி.வி. தினகரன்.
* டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வத்திற்கு நடுவில் செங்கோட்டையன் மாட்டிக்கொண்டார்.
* இங்கு ராஜாவாக இருந்த செங்கோட்டையன் அங்கு கூஜா தூக்குவது போல் ஆகிவிட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தஞ்சை மாநகர் முழுவதும் வண்ண விளக்குகள் ஒளிர, சதய விழா கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
- தமிழர்களின் பெருமையாக ராஜராஜ சோழன் நமக்காக விட்டுச் சென்றுள்ள பங்களிப்புகளை நினைவுகூர்வோம்.
உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழர்களின் கலைத்திறன், போர்த்திறன், கப்பற்கலை, பாசனமுறை என அனைத்தின் உச்சமாக ஆட்சிசெய்து மங்காப் புகழொளியைத் தமதாக்கிக் கொண்ட மாமன்னர் இராசராச சோழனின் 1040-ஆவது சதய விழா இன்று!
தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு, நேற்றுமுதல் பல்வேறு நிகழ்ச்சிகளுடன், தஞ்சை மாநகர் முழுவதும் வண்ண விளக்குகள் ஒளிர, சதய விழா கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழர்களின் பெருமையாக அவர் நமக்காக விட்டுச் சென்றுள்ள பங்களிப்புகளை நினைவுகூர்ந்து, பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் சொல்லி, மாமன்னர் இராசராச சோழன் புகழ் போற்றுவோம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஒரு கட்டத்தில் மீராஜாஸ்மின் அவரை பிரிந்தார்.
- கொலை செய்யப்பட்ட மீராஜாஸ்மின் செல்போனை கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
திருச்சி:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மனைவி கலாவதி. இந்த தம்பதியருக்கு மீராஜாஸ்மின் (வயது 22)என்ற மகளும், 2 மகன்களும் உள்ளனர். குழந்தைகளின் கல்விக்காக அந்தோணிசாமி திருச்சி வயலூர் சாலை சீனிவாச நகர் 5-வது குறுக்கு பிரதான சாலை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
தற்போது அந்தோணிசாமி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். மீரா ஜாஸ்மின் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 தேர்வில் கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றார். அதன் பின்னர் திருச்சியில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் எம்.எஸ்.சி முடித்தார். பல்கலைக்கழக தேர்விலும் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.
நேற்று முன்தினம் தனது தாயாரிடம் வேலை தேடிச் செல்வதாக கூறி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. மகள் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் தாயார் கலாவதி அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டார்.
முழுமையாக ரிங்க் போய் கட் ஆனது. ஆனால் போனை யாரும் எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கலாவதி திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் மகளை காணவில்லை என புகார் அளித்தார்.
இதற்கிடையே திருச்சி மணச்சநல்லூர் அருகே உள்ள சிறுகனூர் சனமங்கலம் காப்புக்காடு பகுதியில் இளம்பெண் ஒருவர் உடல் பாதி எரிந்த நிலையில் பிணமாக கிடக்கும் தகவல் வெளியானது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் பிணமாக கிடந்தவர் மீரா ஜாஸ்மின் என்பது தெரியவந்தது.
உடலின் அருகே அவரது கைப்பை, செல்போன், காலணிகள் கிடந்தன. பீர் பாட்டில்களும் கிடந்தன. உடல் பாதி நிர்வாண நிலையில் கிடந்தது. கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் கழுத்தை நெரித்து கொன்று உடலை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக கூறப்பட்டது.
கொலை செய்யப்பட்ட மீரா ஜாஸ்மின் கல்லூரியில் படித்த போது அவருடன் ஒன்றாக படித்த தோழியின் அண்ணன் ஒருவரை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். பின்னர் ஒரு கட்டத்தில் மீராஜாஸ்மின் அவரை பிரிந்தார். இதனால் விரக்தி அடைந்த தோழியின் அண்ணன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதன் காரணமாக பழிக்கு பழியாக காதலனின் உறவினர்கள் அவரை கடத்திச் சென்று கொலை செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட மீராஜாஸ்மின் செல்போனை கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். மாயமான பட்டதாரி இளம்பெண் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சி மற்றும் சிறுகனூர் பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டதாரி மாணவி மீரா ஜாஸ்மின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது பற்றி அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர்.
மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் திரண்டு மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது பி.சி.ஆர். சட்டத்தின் கீழ் வழக்கு தொடரவும் இறப்புக்கு உரிய இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுத்தனர்.
அப்போது போலீஸ் அதிகாரிகள் இப்போது போராட்டக்காரர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் ஒரு மணி நேரத்தில் புலன் விசாரணை முடிவுகள் தங்களுக்கு தெரிவிக்கப்படும் என கூறினர் அதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்தப் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தில்லை நகர் உறையூர் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.
- இரட்டை இலை பலவீனப்பட்டாலும் பரவாயில்லை என கட்சி பதவியை பிடித்துக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
- தி.மு.க.வின் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த நான் துரோகியா?
அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* 2026 தேர்தலில் தென்மாவட்ட மக்கள் மிக மோசமான தோல்வியை எடப்பாடி பழனிசாமிக்கு பரிசாக அளிப்பர்.
* பசும்பொன்னுக்கு வந்த செங்கோட்டையனை நீக்கிய இ.பி.எஸ். முடிவை தென்மாவட்ட மக்கள் அவமானமாக கருதுவார்கள்.
* ஹிட்லரை போல செயல்பட்டுக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி கட்சியின் அடிப்படை விதியை மாற்றி விட்டார்.
* இரட்டை இலை பலவீனப்பட்டாலும் பரவாயில்லை என கட்சி பதவியை பிடித்துக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
* தி.மு.க.வின் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த நான் துரோகியா?
* கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு காரணமான இ.பி.எஸ்.தான் தி.மு.க.வின் பி டீம்.
* தகுதியே இல்லாத எடப்பாடி பழனிசாமி வரும் 2026-ம் ஆண்டு தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்திக்க போகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாபநாசம், மணிமுத்தாறு அணையை இணைப்பதற்கான ஆய்வு நடத்தி திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- பணி நியமனத்தில் எந்த தவறும் நடைபெறவில்லை.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கல்லிடைகுறிச்சி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட புறவழிச்சாலையை திறந்து வைத்த பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக எந்த கடிதமும் அ.தி.மு.க சார்பில் சட்டமன்ற பேரவைக்கு கொடுக்கப்படவில்லை. அவ்வாறு கடிதம் அளிக்கும் பட்சத்தில் மனு மீது பரிசீலனை நடத்தப்படும். அ.தி.மு.க. அளிக்கும் ஆவணத்தின் அடிப்படையில் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமர் உயர் பதவியில் இருந்து கொண்டு தமிழகம் குறித்து இந்த வார்த்தைகளை பயன்படுத்தி இருக்க வேண்டாம். பா.ஜ.க. கூட்டணியில் உள்ள நிதீஷ் குமார் செய்யும் துன்பத்தால் தான் அங்கிருந்து புலம்பெயர்ந்து அங்கு உள்ளவர்கள் தமிழகம் வந்துள்ளனர். தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் துன்பமாக இல்லை. இன்பமாக இருக்கின்றனர்.
வட மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் வசிப்பவர்களும் இலவச பஸ் பயணம், படிப்பில் உதவித்தொகை உள்ளிட்ட தமிழக அரசின் திட்டங்களால் பயன்பெற்று வருகின்றனர்.
பாபநாசம், மணிமுத்தாறு அணையை இணைப்பதற்கான ஆய்வு நடத்தி திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் வனத்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் சில சிக்கல்கள் இருக்கிறது. எனினும் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் அந்த சிக்கல்களை தீர்த்து அணைகளை இணைக்க நடவடிக்கை எடுத்து விடுவார்.
நகராட்சி நிர்வாகத்துறையில் 2,538 பணி இடங்களை நேர்மையாக வெளிப்படை தன்மையோடு அண்ணா பல்கலைக்கழக உதவியுடன் அமைச்சர் நேரு நியமனம் செய்துள்ளார். பணி நியமனத்தில் எந்த தவறும் நடைபெறவில்லை.
அமலாக்கத்துறை தமிழக டி.ஜி.பி.க்கு பணி நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாக விசாரணை நடத்த கடிதம் அனுப்பி உள்ளது. இந்த கடிதம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். உறுதிப்படுத்தப்படாத ஆவணங்கள் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை அல்லது விசாரணை ஆகியவையை அனுமதிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மணல் ஊழல், டாஸ்மாக் ஊழல் என உறுதிப்படுத்தப்படாத தகவல்களை வைத்து தேர்தல் நேரத்தில் தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்ற நோக்கத்தில் இது போன்று அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது. தமிழக கவர்னர் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய பாதி மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார். மீதி மசோதா அவரிடமே கிடப்பில் உள்ளது என்றார்.
- நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், கிழக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 05.30 மணி அளவில் மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்து, காலை 08.30 மணி அளவில், அதே பகுதிகளில் நிலவுகிறது.
இது, அடுத்த 24 மணி நேரத்திற்கு, மேலும், கிழக்கு-வடகிழக்கு திசையில், வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் வழியாக, தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு மகாராஷ்டிரா கடலோரப்பகுதிகளை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறையக்கூடும்.
தெற்கு மியான்மார் கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் 7-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் இன்று மற்றும் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- ஆலோசனைக் கூட்டத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள், முக்கிய அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
- நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாகவும், என்ன மாதிரியான வழிகாட்டுதல்களைப் பின்பற்றலாம், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகின்றன.
சென்னை:
தமிழ்நாட்டில் அரசியல் கட்சி கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனைக் கூட்டத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள், முக்கிய அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாகவும், என்ன மாதிரியான வழிகாட்டுதல்களைப் பின்பற்றலாம், கூட்ட நெரிசலைத் தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகின்றன.
- செங்கோட்டையன் பசும்பொன்னுக்கு வந்தது அரசியல் நிகழ்ச்சி அல்ல.
- முதலமைச்சராக்கிய சசிகலாவை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கிய துரோகி எடப்பாடி பழனிசாமி.
அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* நிகழ்ச்சி ஏற்பாடுகளை செங்கோட்டையன் பார்வையிட்ட பின்னரே ஜெயலலிதா ஒப்புதல் அளிப்பார்.
* செங்கோட்டையன் பசும்பொன்னுக்கு வந்தது அரசியல் நிகழ்ச்சி அல்ல.
* அ.தி.மு.க.விற்கு எதிரான எந்த நடவடிக்கையிலும் செங்கோட்டையன் ஈடுபடவில்லை.
* முதலமைச்சராக்கிய சசிகலாவை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கிய துரோகி எடப்பாடி பழனிசாமி.
* செங்கோட்டையனை தகுதியே இல்லாத எடப்பாடி பழனிசாமி நீக்கியது கொள்ளிக்கட்டையால் தலையை சொறிவதற்கு சமம்.
* ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் என்னைப் பார்த்து துரோகி என எடப்பாடி பழனிசாமி பேசுவது சிரிப்பாக உள்ளது.
* யாரையும் துரோகி என சொல்லுவதற்கு கூட எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியே இல்லை.
* செங்கோட்டையன் சொன்னதுபோல துரோகத்திற்கு நோபல் பரிசு பெறும் தகுதி இ.பி.எஸ்.-க்கு தான் உள்ளது.
* அ.தி.மு.கவிலிருந்து செங்கோட்டையனை நீக்கும் அளவுக்கு எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியில்லை. அவர் அழிவை தேடிக்கொள்கிறார்.
* தகுதியில்லாத எடப்பாடி பழனிசாமி மூத்த நிர்வாகியான செங்கோட்டையனை நீக்குவதா?
இவ்வாறு அவர் கூறினார்.






