என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dhoti sarees"

    • தி.மு.க. ஆட்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
    • தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வதால், பட்டுச் சேலைகளின் விலையும் உயர்ந்துள்ளது.

    சென்னை:

    காஞ்சிபுரத்தில் 30-க்கும் மேற்பட்ட பட்டுப்புடவை உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வரும் நிலையில் அவற்றில் முக்கியமான ஒன்றான முருகன் கூட்டுறவு சங்கம் அதன் விற்பனை நிலையத்தை எண்ணைக்கார தெருவில் உள்ள சொந்த இடத்தில் புதுப்பொலிவுடன் புனரமைத்துள்ளது. இந்த விற்பனை நிலையத்தை அமைச்சர் காந்தி திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் எம்.பி. செல்வம் மற்றும் சி.வி.எம்.பி. எழிலரசன் எம்.எல்.ஏ., முருகன் பட்டு கூட்டுறவு சங்க தலைவர் முத்துச்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் காந்தி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகள் மிகவும் தரமாக இருப்பதால் அனைவரும் அணிந்து மகிழ்கிறார்கள்.

    மேலும், இந்த ஆண்டுக்கான பொங்கல் வேட்டி, சேலைகள் நவம்பர் 15-ந் தேதி முதல் வினியோகிக்கப்பட உள்ளது.

    தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வதால், பட்டுச் சேலைகளின் விலையும் உயர்ந்துள்ளது. எனவே, புடவைகளில் சேர்க்கப்படும் ஜரிகையில் தங்கம் மற்றும் வெள்ளியைக் குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மழை காரணமாக இதுவரை நெசவாளர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. தி.மு.க. ஆட்சியில் நெசவுத் தொழிலாளர்களின் கூலி உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு ரூ.800 கூலி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது நெசவாளர்களுக்கு ரூ.800 முதல் ரூ.1500 வரை கூலி கிடைக்கிறது.

    கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் அ.தி.மு.க. ஆட்சியில் பத்தாண்டுகளில் 9 ஆண்டுகள் நஷ்டத்தில் இயங்கிய நிலையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகுமுதல் ஆண்டிலேயே ரூ.9 கோடி லாபம் ஈட்டியது, 58 சொசைட்டிகள் நவீனமயமாக்கப்பட்டு வியாபாரம் அதிகரித்து கூட்டுறவு சங்கங்கள் லாபத்தில் இயங்கத் தொடங்கி உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் காந்தி கூறினார்.

    பொங்கல் பண்டிகைக்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்கான விலையில்லா வேட்டி- சேலைகள் லாரிகளில் திருச்சிக்கு வந்து சேர்ந்தன.
    திருச்சி:

    தமிழகத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக கடந்த 1983-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த போது இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விலையில்லா வேட்டி-சேலை வழங்குவதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.

    இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து எல்லா மாவட்டங்களுக்கும் வேட்டி-சேலைகள் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன. திருச்சி மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட வேட்டி-சேலைகள் அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு வந்து சேர்ந்து உள்ளன. திருச்சி மேற்கு தாலுகாவில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டிய வேட்டி-சேலைகள் நேற்று காலை வந்தன. வேட்டி-சேலை மூட்டைகளை லாரியில் இருந்து இறக்கிய தொழிலாளர்கள் அதனை தனி அறைக்கு கொண்டு சென்று அடுக்கி வைத்தனர்.

    திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 தாலுகாக்களிலும் சுமார் 7 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவற்றில் அரிசி பெற தகுதி உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி, சேலைகள் மற்றும் பச்சரிசி, முந்திரி பருப்பு, சர்க்கரை, கரும்பு துண்டு உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் வழங்கப்பட இருக்கிறது. ஜனவரி முதல் வாரம் அந்தந்த ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட இருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. 
    ×