என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பட்டதாரி இளம்பெண் எரித்துக் கொலை- காதலன் மரணத்துக்கு காரணமானதாக கூறி கொல்லப்பட்டதாக பரபரப்பு
    X

    கொலை செய்யப்பட்ட மீரா ஜாஸ்மினின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்ட காட்சி. (உள்படம்: மீரா ஜாஸ்மின்)

    பட்டதாரி இளம்பெண் எரித்துக் கொலை- காதலன் மரணத்துக்கு காரணமானதாக கூறி கொல்லப்பட்டதாக பரபரப்பு

    • ஒரு கட்டத்தில் மீராஜாஸ்மின் அவரை பிரிந்தார்.
    • கொலை செய்யப்பட்ட மீராஜாஸ்மின் செல்போனை கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    திருச்சி:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மனைவி கலாவதி. இந்த தம்பதியருக்கு மீராஜாஸ்மின் (வயது 22)என்ற மகளும், 2 மகன்களும் உள்ளனர். குழந்தைகளின் கல்விக்காக அந்தோணிசாமி திருச்சி வயலூர் சாலை சீனிவாச நகர் 5-வது குறுக்கு பிரதான சாலை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

    தற்போது அந்தோணிசாமி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். மீரா ஜாஸ்மின் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 தேர்வில் கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றார். அதன் பின்னர் திருச்சியில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் எம்.எஸ்.சி முடித்தார். பல்கலைக்கழக தேர்விலும் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.

    நேற்று முன்தினம் தனது தாயாரிடம் வேலை தேடிச் செல்வதாக கூறி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. மகள் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் தாயார் கலாவதி அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டார்.

    முழுமையாக ரிங்க் போய் கட் ஆனது. ஆனால் போனை யாரும் எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கலாவதி திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் மகளை காணவில்லை என புகார் அளித்தார்.

    இதற்கிடையே திருச்சி மணச்சநல்லூர் அருகே உள்ள சிறுகனூர் சனமங்கலம் காப்புக்காடு பகுதியில் இளம்பெண் ஒருவர் உடல் பாதி எரிந்த நிலையில் பிணமாக கிடக்கும் தகவல் வெளியானது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் பிணமாக கிடந்தவர் மீரா ஜாஸ்மின் என்பது தெரியவந்தது.

    உடலின் அருகே அவரது கைப்பை, செல்போன், காலணிகள் கிடந்தன. பீர் பாட்டில்களும் கிடந்தன. உடல் பாதி நிர்வாண நிலையில் கிடந்தது. கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் கழுத்தை நெரித்து கொன்று உடலை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக கூறப்பட்டது.

    கொலை செய்யப்பட்ட மீரா ஜாஸ்மின் கல்லூரியில் படித்த போது அவருடன் ஒன்றாக படித்த தோழியின் அண்ணன் ஒருவரை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். பின்னர் ஒரு கட்டத்தில் மீராஜாஸ்மின் அவரை பிரிந்தார். இதனால் விரக்தி அடைந்த தோழியின் அண்ணன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதன் காரணமாக பழிக்கு பழியாக காதலனின் உறவினர்கள் அவரை கடத்திச் சென்று கொலை செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட மீராஜாஸ்மின் செல்போனை கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். மாயமான பட்டதாரி இளம்பெண் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சி மற்றும் சிறுகனூர் பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பட்டதாரி மாணவி மீரா ஜாஸ்மின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது பற்றி அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர்.

    மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் திரண்டு மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது பி.சி.ஆர். சட்டத்தின் கீழ் வழக்கு தொடரவும் இறப்புக்கு உரிய இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுத்தனர்.

    அப்போது போலீஸ் அதிகாரிகள் இப்போது போராட்டக்காரர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் ஒரு மணி நேரத்தில் புலன் விசாரணை முடிவுகள் தங்களுக்கு தெரிவிக்கப்படும் என கூறினர் அதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்தப் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தில்லை நகர் உறையூர் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.

    Next Story
    ×