என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வெளிநாட்டு விமான சேவை குறைவு, ஆட்கள் பற்றாக்குறையால் தற்போது நேரக்கட்டுப்பாடு உள்ளது.
    • இரவு நேர சேவையை தொடங்க முன்வருமாறு விமான நிலையங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் தற்போது காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளிநாட்டு விமான சேவை குறைவு, ஆட்கள் பற்றாக்குறையால் தற்போது நேரக்கட்டுப்பாடு உள்ளது.

    இந்நிலையில் இரவு நேர சேவையை தொடங்க முன்வருமாறு விமான நிலையங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    இதையடுத்து மதுரை விமான நிலையத்தில் அக்டோபர் முதல் 24 மணி நேர விமான சேவை தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவை வழங்க விமான நிறுவனங்களுக்கு விமான நிலைய ஆணையரகம் அழைப்பு விடுத்துள்ளது.

    தற்போது மதுரை விமான நிலையத்தில் இரவு நேர சேவை இல்லாத நிலையில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    • படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் பொதுப்பெட்டிகளாக மாற்றப்பட உள்ளன.
    • பயணிகளின் வசதிக்காக தெற்கு ரெயில்வே புதிய அறிவிப்பு.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    பயணிகளின் வசதிக்காக தெற்கு ரெயில்வேயில் இயக்கப்படும் முக்கிய விரைவு ரெயில்களின் சில படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் பொதுப்பெட்டிகளாக மாற்றப்பட உள்ளன.

    அதன்படி சென்னை சென்ட்ரல்-ஈரோடு ஏற்காடு விரைவு ரெயில், சென்னை சென்ட்ரல்-ஐதராபாத் விரைவு ரெயில் (எண் 12603) 12 படுக்கை வசதி பெட்டிகள், 3 பொதுப்பெட்டிகள் கொண்டு இயக்கப்பட்ட நிலையில் ஜனவரி 20-ந் தேதி முதல் 11 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள் கொண்டு இயக்கப்படும்.


    புதுச்சேரி-மங்களூா் விரைவு ரெயில் (16855) ஜனவரி 16-ந் தேதி முதலும், சென்னை சென்ட்ரல்-நாகா்கோவில் விரைவு ரெயில் (எண் 12689) ஜன.17-ந் தேதி முதலும், எா்ணாகுளம்-வேளாங்கண்ணி விரைவு ரெயில் (16361) ஜன.18-ந் தேதி முதலும், கொச்சுவேலி-நிலாம்பூா் ராஜ்ய ராணி விரைவு ரெயில் ஜன.19-ந் தேதி முதலும் 4 பொதுப்பெட்டிகள் கொண்டு இயக்கப்படும்.

    இதேபோல் சென்னை சென்ட்ரல்-ஆலப்புழா விரைவு ரெயில் (22639), திருவனந்தபுரம்-மதுரை அமிா்தா விரைவு ரெயில், சென்னை சென்ட்ரல்-மைசூரு காவேரி விரைவு ரெயில், சென்னை சென்ட்ரல்-பாலக்காடு விரைவு ரெயில் (22651) ஜனவரி 20-ந் தேதி முதல் 4 முன்பதிவில்லா பெட்டிகள் கொண்டு இயக்கப்படும்.

    மேலும், விழுப்புரம்-கோரக்பூா் விரைவு ரெயில் (22604) ஜனவரி 21-ந் தேதி முதலும், சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் விரைவு ரெயில் (12695), திருநெல்வேலி-புருலியா விரைவு ரெயில் ஜனவரி 22 முதலும், புதுச்சேரி-கன்னியாகுமரி விரைவு ரெயில் ஜனவரி 26-ந் தேதி முதலும் 4 பொதுப்பெட்டிகள் கொண்டு இயக்கப்படும்.

    இவ்வாறு தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    • சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் சொத்துக்களின் மதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது.
    • உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே பல சொத்துகள் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்படுகின்றன.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சொத்துகள் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், அந்த வழக்குகளில் நீதிமன்றங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், அந்த சொத்துகளை பத்திரப்பதிவு செய்யலாம் என்று சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பத்திரப்பதிவுத்துறை ஆணையிட்டிருக்கிறது. பத்திரப்பதிவுத்துறையின் இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தானது.

    வழக்குகளில் சிக்கியுள்ள சொத்துகளையும் பத்திரப்பதிவு செய்யலாம் என்பதற்காக பத்திரப்பதிவுத்துறை கூறியுள்ள காரணங்கள் ஏற்க முடியாதவை.

    பத்திரப்பதிவுத்துறைக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக சர்ச்சைக்குரிய, நீதிமன்ற வழக்குகளில் சிக்கியுள்ள சொத்துகளையெல்லாம் பதிவு செய்தால், அதனால் ஏற்படும் விளைவுகளை நினைத்துப்பார்க்கவே அச்சமாக உள்ளது.

    சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் சொத்துகளின் மதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. அதைப்போலவே பிறருடைய சொத்துகள் அபகரிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. இத்தகைய தருணத்தில் பத்திரப்பதிவுகள் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் செய்யப்பட வேண்டும். வருவாயை மட்டுமே முதன்மை நோக்கமாகக் கொண்டு பத்திரப்பதிவுத்துறை செயல்படக்கூடாது.

    உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே பல சொத்துகள் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்படுகின்றன. அவ்வாறு அபகரித்த சொத்துகளை ஒருவர் இன்னொருவருக்கு விற்க முயலும் போது, அதை எதிர்த்து சொத்தின் உண்மையான உரிமையாளர் வழக்கு தொடரும் நிலையில், அந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை சொத்தை பதிவு செய்யாமல் இருப்பது தான் சரியானத் தீர்வு ஆகும். மாறாக, அந்த சொத்து தொடர்பான வழக்கில் நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கவில்லை என்பதற்காக சொத்து பத்திரப்பதிவு செய்யப்பட்டால், மோசடி செய்தவர் பெரும் லாபத்துடன் தப்பி விடுவார். சொத்தின் உரிமையாளரும், அதை வாங்கியவரும், வாங்குவதற்கு கடன் கொடுத்த வங்கிகளும் தான் பாதிக்கப்படுவார்கள். இதை பத்திரப்பதிவுத்துறை உணர வேண்டும்.

    வழக்குகளில் சிக்கிய வில்லங்க சொத்துகளை பதிவு செய்ய பத்திரப்பதிவுத்துறை அனுமதித்தால், அது சொத்துகளை அபகரிக்கும் செயலை ஊக்குவிப்பதாகவே அமையும். அத்தகைய அநீதிக்கு தமிழக அரசும், பத்திரப் பதிவுத்துறையும் துணைபோகக் கூடாது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • இரவு ஆஸ்பத்திரியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர் ஒருவருக்கு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது.
    • இன்று காலை நீண்ட நேரத்திற்கு பின்னர் போதை தெளிந்ததும் அந்த டாக்டர் புறப்பட்டு சென்று உள்ளார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிசிக்சைபெற்று வருகிறார்கள். 150-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று இரவு ஆஸ்பத்திரியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர் ஒருவருக்கு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. பணிக்கு வந்த அந்த டாக்டர் அதிக மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. அவர் நோயாளிகளுடன் உடன் இருந்த உறவினர்களை ஒருமையில் பேசி திட்டி வெளியே அனுப்பி உள்ளார்.

    மேலும் அவர் மதுபோதை மயக்கத்தில் ஆஸ்பத்திரி வெளியே உள்ள திண்ணையில் படுத்து தூங்கினார். இதனை கண்டு ஆஸ்பத்திரி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை ஆஸ்பத்திரி உள்ளே செல்லுமாறு தெரிவித்தனர். ஆனால் போதை மயக்கத்தில் இருந்த அந்த டாக்டர் ஆஸ்பத்திரிக்குள் செல்ல மறுத்து ரகளையில் ஈடுபட்டார்.

    இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த ஊழியர்கள், போதை டாக்டரை காவலாளிகள் தங்கும் அறையில் படுக்க வைத்தனர். இன்று காலை நீண்ட நேரத்திற்கு பின்னர் போதை தெளிந்ததும் அந்த டாக்டர் புறப்பட்டு சென்று உள்ளார்.

    அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த டாக்டர் மதுபோதையில் தூங்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப்பட்ட டாக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இந்நிலையில் டாக்டர் நல்லதம்பி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டீன் ரேவதி உறுதி அளித்துள்ளார்.

    • தி.மு.க. அரசுக்கு கோரிக்கை விடுத்தே விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டை நடத்துவதால் நிச்சயம் தி.மு.க. அதில் பங்கேற்க வாய்ப்பு இல்லை.
    • அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி கருத்துக்களை கேட்டு ஆலோசனை நடத்தி வருவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.

    தி.முக. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க. உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணி பலமான கூட்டணியாகவே உள்ளது.

    அதே சமயத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க.வை தவிர 2-வது பெரிய கட்சிகள் எதுவும் இடம் பெறவில்லை. இதனால் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் மேலும் பல கட்சிகளை சேர்ப்பதற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார்.

    இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளன் தங்களது கட்சி சார்பில் நடத்தப்படும் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அ.தி.மு.க.வுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது அரசியல் களத்தில் சூட்டை கிளப்பியுள்ளது.

    காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ந்தேதி கள்ளக்குறிச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உள்ள பெண்களால் நடத்தப்படும் மது ஒழிப்பு மாநாடு தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் தான் திருமாவளவன, எதிர் அணியில் உள்ள பிரதான கட்சியான அ.தி.மு.க.வை அழைத்திருந்தார்.

    இது தி.மு.க. கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கூட்டணி மாற்றங்கள் நிகழுமா? என்கிற எதிர்பார்ப்புகளும் ஏற்பட்டு உள்ளன.

    இதைத் தொடர்ந்து திருமாவளவனின் அழைப்பை ஏற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க. பங்கேற்க முடிவு செய்திருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இது தொடர்பாக அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி கருத்துக்களை கேட்டு ஆலோசனை நடத்தி வருவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதுபற்றி அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க.வுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்திருப்பதை வரவேற்கிறோம். அ.தி.மு.க. மது விலக்கு கொள்கையுடன் செயல்பட்டு வரும் கட்சி என்கிற அடிப்படையில் திருமாவளவன் எங்களையும் அழைத்துள்ளார்.

    அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது 500 மதுக்கடைகளை மூடினார். எடப்பாடி பழனிசாமியும் அவர் வழியில் செயல்பட்டு 500 கடைகளை மூடினார்.

    அ.தி.மு.க. ஆட்சியின் போது மதுக்கடைகளுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் கடுமையாக பேசி வந்தார். தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு அதுபற்றி பேசுவது இல்லை. இது போன்ற சூழலில்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி மது ஒழிப்பு மாநாட்டை நடத்துகிறது. எனவே மக்கள் நலன் கருதி இந்த மாநாட்டில் அ.தி.மு.க. பங்கேற்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. இது எதிர்காலத்தில் கூட்டணிக்கு அச்சாரமாக அமைந்தால் மகிழ்ச்சிதான்.

    தி.மு.க. அரசுக்கு கோரிக்கை விடுத்தே விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டை நடத்துவதால் நிச்சயம் தி.மு.க. அதில் பங்கேற்க வாய்ப்பு இல்லை. எனவே அ.தி.மு.க. கலந்து கொள்வதில் எந்தவித தடையும் இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் பங்கேற்க அ.தி.மு.க.வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது தொடர்பாகவும், மாநாட்டில் பங்கேற்பது பற்றியும் அ.தி.மு.க. தலைமை விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் அனைத்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் பங்கேற்கும் சூழலே உள்ளது. இப்படி தி.மு.க.வை தவிர கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் மாநாட்டில் அ.தி.மு.க. பங்கேற்பதன் மூலம் தி.மு.க. கூட்டணி கட்சிகளோடு அ.தி.மு.க. கை கோர்க்கும் சூழல் ஏற்பட்டிருப்பதாலேயே திருமாவளவனின் அழைப்பு அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    • 2026-வது ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிறுத்தி இல்லை. அரசியல் வேறு மது ஒழிப்பு என்பது வேறு.
    • சாராயக்கடைகளை மூடினாலே நல்லது நடக்கும் என பொதுமக்கள் நம்புகிறார்கள்.

    விழுப்புரம்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விழுப்புரத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சாதி ஒழிப்பு போராளி இமானுவேல் சேகரன் நினைவுநாளை முன்னிட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அமைக்க சட்டமன்றத்தில் வலியுறுத்தப்பட்டதில் மணிமண்டபம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன்.

    மது, போதை பொருள்களை ஒழிக்க காலங்காலமாக போராடி வருகிறோம். பவுத்தத்தை தழுவியர்கள் 22 கொள்கைகளில் மதுவை தொட கூடாது என்பது ஒன்று. மது ஒழிப்பு போராட்டம் என்பது தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

    மதுவை ஒழிக்க மகளிரின் குரல் ஒலிக்க வேண்டுமென்பதால் மது போதை ஒழிப்பு மாநாடு நடத்துகிறோம். கட்சி அரசியல் என்பது வேறு சமூகம் மக்கள் நலன் சார்ந்த அரசியல் வேறு. மதுவை ஒழிக்க அனைவரும் எங்களுடன் போராட வேண்டும். மக்கள் நலன் சார்ந்து செயல்பட வேண்டியுள்ளது. தி.மு.க.விற்கும், அ.தி.மு.க.விற்கும் மதுவை ஒழிக்க வேண்டும் என்ற கருத்துள்ள போது படிப்படியாக ஏன் தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டு வரஇயலாது. இந்தி திணிப்பு, நீட் எதிர்ப்பு போன்றவைகளில் தமிழகம் முதன்மையானவையாக இருக்கும் போது தமிழகம் ஏன் மது ஒழிப்பில் முதன்மையானவையாக இருக்க கூடாது.

    மது ஒழிப்பிற்கு அறை கூவல் விடுப்பது மதுவை ஒழிக்க மட்டுமே. இது 2026-வது ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிறுத்தி இல்லை. அரசியல் வேறு மது ஒழிப்பு என்பது வேறு. சாராயக்கடைகளை மூடினாலே நல்லது நடக்கும் என பொதுமக்கள் நம்புகிறார்கள்.

    கூட்டணியில் இருந்தாலும் நல்ல பிரச்சனைகள் இருந்தால் எதிர்த்து போராடுவோம். அதன்படி அ.தி.மு.க. மது ஒழிப்பு மாநாட்டிற்கு வந்து மேடையில் பேசலாம்.

    பா.ஜ.க, பா.ம.க.விற்கு தான் நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை. அவர்கள் மதவாத, சாதியவாத கட்சி என்பதால் அவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. எப்போதும் அவர்களுடன் இணைய மாட்டோம். தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கியுள்ள விஜய்யும் இந்த மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ளலாம். மதுக்கடைகளை வைத்து கொண்டு அதன் மூலம் வருமானத்தை கொண்டு அரசு ஆட்சி நடத்துவது என்பது ஏற்புடையதல்ல. மக்களுடைய கோரிக்கையை தான் முன் வைக்கிறோம். அது ஒரு கட்சியின் கோரிக்கையாக பார்க்க வேண்டாம். எல்லோரும் கை கோர்த்தால் தான் முடிவு எட்டப்படும். கள்ளச்சாராயம் புழக்கம் இன்னும் இருக்கிறது. பள்ளி வரை போதை பொருள் பழக்கம் உள்ளது.

    பெண்களுக்கெதிரான குற்றங்கள் அனைத்தும் போதை பொருட்களில் அடிமையானவர்களால் நடைபெற்றுள்ளது. போதை என்பது அமைதியாக நடைபெறுகிற பேரழிவு. தமிழகம் கல்வி கொள்கையில் சிறந்து விளங்குவதாக மத்திய மந்திரியே தெரிவிப்பதால் கல்வி சிறப்பாக இருப்பது தான் காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் பா.ஜ.க அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்து வருகிறது.
    • தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

    கோவை:

    கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் மதுவை ஒழிக்க வலியுறுத்தி பா.ஜ.க பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் மாநாடுகளை நடத்தி உள்ளது. கோவையில் கூட டாஸ்மாக் கடைகளை மூட தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியுள்ளோம்.

    திருமாவளனுக்கு தி.மு.க. கூட்டணியில் என்ன பிரச்சனை? என்று தெரியவில்லை. வேங்கைவயல் சம்பவம் மற்றும் பட்டியலினத்தவர்கள் மீது தாக்குதல், குறிப்பாக மாணவர்கள் மீதான தாக்குதல் என்பது தமிழகத்தில் அதிகரித்துள்ளது.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் திருமாவளவன் தனது கட்சி சார்பில் நடக்கும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இப்படி அழைப்பு விடுத்துள்ளதன் மூலம் தான் ஒரு புதிய அரசியல் சக்தி என்பதை நிரூபிக்கவோ அல்லது தி.மு.கவுக்கு இந்த மாநாட்டின் மூலம் ஏதோ சொல்ல வருகிறார் என்று தான் நினைக்கிறேன்.

    முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் என்பது தமிழகத்திற்கு நல்லது கொடுத்தால் அதனை நாங்கள் நிச்சயமாக வரவேற்கிறோம். கொங்கு மண்டல வளர்ச்சிக்கு பா.ஜ.கவும், மத்திய அரசும் மிகவும் உறுதுணையாக இருந்து வருகிறது. கொங்கு மண்டலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்து வருகிறோம்.

    தமிழகத்தில் பா.ஜ.க அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்து வருகிறது. தற்போது பா.ஜ.கவில் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இளைஞர்களும், பெண்களும் பா.ஜ.கவில் அதிகளவில் சேர்ந்து வருகிறார்கள்.

    கார் பந்தயத்தை மாநில அரசு ஊக்கப்படுத்துவதில் தவறில்லை. ஆனால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பு ஏற்பாடுத்தாத வகையில் அது அமைய வேண்டும். கோவைக்கு எந்த நல்ல திட்டத்தை கொண்டு வந்தாலும் நாங்கள் அதனை வரவேற்போம். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

    மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து தெரிவிப்பதில்லை. தற்போது வந்த விநாயகர் சதுர்த்திக்கு கூட வாழ்த்து தெரிவிக்கவில்லை.

    வாக்குவங்கிக்காக ஒரு மத பண்டிகைக்கு வாழ்த்து சொல்வது, இன்னொரு மதத்திற்கு வாழ்த்து சொல்லாமல் இருப்பது. இதுதான் சமூகநீதியா. ஒரு மாநில முதல்வர் என்பவர் மாநிலத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும்.

    ராகுல்காந்தி இந்தியாவில் இருந்தாலும், அமெரிக்காவில் இருந்தாலும் ஏதாவது சம்பந்தமில்லாமல் தான் பேசி கொண்டிருப்பார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 114.14 அடியாக இருந்தது.
    • அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் வெளியேற்றப்பட்டு வருவதால் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    சேலம்:

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 114.14 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு நேற்று 10 ஆயிரத்து 706 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 10 ஆயிரத்து 642 கனஅடியாக குறைந்து காணப்பட்டது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 700 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் வெளியேற்றப்பட்டு வருவதால் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    • ஈரோடு சோலாரில் ஒரு விளையாட்டு அரங்கம் உருவாக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ஒப்புதல் தந்துள்ளார்.
    • உச்ச நீதிமன்றம் அங்கீகரிக்கப்படாத மனைகள் மற்றும் கட்டிடங்களை வரைமுறைப்படுத்த சில நிபந்தனை விதித்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் வரும் 24-ந் தேதி வரை 5 பிரிவுகளின் கீழ் நடைபெறுகின்றது. போட்டியில் தமிழகம் முழுவதும் 11.56 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் 21,626 பேர் பதிவு செய்துள்ளனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கையில் போட்டிகளை தொடங்கி வைத்துள்ளார். முதலமைச்சர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர்.

    ஈரோடு சோலாரில் ஒரு விளையாட்டு அரங்கம் உருவாக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ஒப்புதல் தந்துள்ளார். அதற்கான பணிகள் தொடக்கப்பட்டுள்ளன. சி.என்.சி. கலை அறிவியல் கல்லூரியில் ஒரு உள் விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விளையாட்டு துறை அமைச்சர் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஒரு விளையாட்டு அரங்கம் அமைக்க திட்டமிட்டுள்ளார்.

    மதுவிலக்கை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஒரு மாநாட்டை நடத்துகிறார். மதுவிலக்கு கொள்கை தளர்த்தப்பட்டது. இந்த அரசு காலத்தில் அல்ல அது பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இதனால் கூட்டணியில் இருந்து கொண்டு அவர் தி.மு.க.வை எதிர்ப்பதாக கருதக்கூடாது.

    அவர் அவரது கருத்தை, கோரிக்கைகளை தெரிவிக்க மாநாட்டை நடத்துகிறார். மதுவிலக்கு பிரசாரத்திற்கு 5 கோடி ரூபாய் இந்த அரசு ஒதுக்கி உள்ளது. இது படிப்படியாக தேவையான அளவிற்கு நிதி ஒதுக்கப்படும்.

    உச்ச நீதிமன்றம் அங்கீகரிக்கப்படாத மனைகள் மற்றும் கட்டிடங்களை வரைமுறைப்படுத்த சில நிபந்தனை விதித்துள்ளது. அதன்படி விண்ணப்பங்கள் மட்டும் தற்போது பெற உத்தரவிட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத மனை பிரிவுகள், கட்டிடங்கள் குறித்து கண்டறிய மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கீகரிக்கப்படாத பள்ளி கட்டிடங்கள் வரைமுறைப்படுத்த இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த பாராளுமன்ற தேர்தலில் நடிகை ராதிகா விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார். அவரும் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
    • திரை நட்சத்திரங்களிடையே தங்களுக்கு கட்சியில் உரிய பதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை என்ற ஆதங்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    தமிழக பாரதிய ஜனதாவில் நடிகை குஷ்பு, ராதிகா, நமீதா, நடிகர்கள் சரத்குமார், ராதாரவி, செந்தில், இசையமைப்பாளர் கங்கை அமரன் என பல திரை பிரலபலங்கள் இருக்கிறார்கள்.

    இவர்களில் நடிகை குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மாநில அளவில் கட்சி பணியாற்ற வந்துள்ளார்.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

    அதேபோல் கடந்த பாராளுமன்ற தேர்தலில் நடிகை ராதிகா விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார். அவரும் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

    திரை நட்சத்திரங்களிடையே தங்களுக்கு கட்சியில் உரிய பதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை என்ற ஆதங்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதையறிந்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு அவர்களை இழுக்க முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. இதற்காக ரகசிய தூதும் விட்டு வருவதாக கூறப்படுகிறது.

    ஆனால் இதற்கு இன்னும் சாதகமான பதில்கள் கிடைக்காததால் தொடர்ந்து பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இது தொடர்பாக நடிகை நமீதாவை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:-

    மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் பாரதிய ஜனதாவில் சேர்ந்தேன். கட்சியில் நல்ல மரியாதை கிடைக்கிறது. மிக நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள்.

    பிரதமர் மோடியின் ஆட்சியில் நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. எனவே பாரதிய ஜனதாவில் இருப்பதை பெருமையாக நினைக்கிறேன். எனக்கு வழங்கப்படும் வேலைகளை செய்து வருகிறேன். வேறு எங்கும் செல்லும் எந்த எண்ணமும் இல்லை.

    இவ்வாறு நமீதா கூறினார்.

    நடிகை குஷ்புவிடம் கேட்டபோது, வேலை வெட்டி இல்லாதவர்களால் கிளப்பி விடப்படும் வதந்திகள் இது. இந்த மாதிரி வதந்திகளுக்கு பதில் சொல்லி என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றார்.

    • பீகாரிலும், குஜராத்திலும் மதுவிலக்கு அமலில் இருக்கும்போது ஏன் தமிழகத்தில் இருக்கக்கூடாது.
    • திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

    விழுப்புரம்:

    தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அவரது குடும்பத்தினர், செல்லூர் கிராம மக்கள், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிலையில் விழுப்புரத்தில் தியாகி இமானுவேல் சேகரனாருக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் மது விலக்கை ஆதரிக்கின்றன.

    * பீகாரிலும், குஜராத்திலும் மதுவிலக்கு அமலில் இருக்கும்போது ஏன் தமிழகத்தில் இருக்கக்கூடாது.

    * மதுவிலக்கில் தமிழகம் ஏன் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கக்கூடாது.

    * மதுவிலக்கு என்ற குரலுக்கு எல்லா கட்சியினரும் ஆதரவு தர வேண்டும்.

    * மதுவிலக்கு கோரிக்கையை தமிழகத்தை ஆளும் திமுக அரசு கனிவோடு பரிசீலிக்க வேண்டும்.

    * திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

    * அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்கும்போது மதுக்கடைகளை மூடுவதில் என்ன தயக்கம்?

    * மதுவிலக்கு என்பது திமுகவிற்கும் உடன்பாடான கருத்துதான்.

    * மதுவிலக்கு விவகாரத்தில் உடனடியாக முடிவு எடுக்க முடியாது என்பதை நாங்கள் அறிவோம்.

    * திமுகவுக்கு முரணான கருத்தை நாங்கள் சொல்லவில்லை. மக்களின் கோரிக்கையை தான் முன்வைக்கிறோம் என்று கூறினார்.

    • அரசியல் கட்சியினர் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி.
    • ராமநாதபுரம் முழுவதும் போக்குவரத்தில் மாற்றம்.

    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் 67-வது நினைவு தினத்தை யொட்டி இன்று அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    தி.மு.க சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டு இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ராஜலட்சுமி, அன்வர் ராஜா, மணிகண்டன் உள்பட அ.தி.மு.க நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    அ.தி.மு.க தொண்டர்கள் மீட்பு குழு சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தர்மர் எம்.பி உட்பட நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    அதே போல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் டி.டி.வி தினகரன் தலைமையில் அஞ்சலி செலுத்தினர். தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் அஞ்சலி செலுத்தினர்.

    நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அஞ்சலி செலுத்தினர். தே.மு.தி.க சார்பில் விஜய பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    தொடர்ந்து ம.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், சமுதாய அமைப்பினரும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி டேவிட் சன் தேவ ஆசீர்வாதம் மேற் பார்வையில் தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் தலைமையில் 3 டி.ஐ.ஜி, 19 எஸ்.பி, 61 டி.எஸ்.பி. உள்பட சுமார் 7 ஆயிரம் போலீசார் பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பரமக்குடி நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 150 நவீன சி.சி.டி.வி. காமிராக்கள் மற்றும் டிரோன் காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் கமுதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு 163 (1) தடை உத்தரவு கலெக்டர் உத்தரவில் அமல்படுத்தப் பட்டுள்ளது.

    மேலும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு அந்தந்த வழித்தடங்களில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.

    ×