என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருமாவளவன் அழைப்பை ஏற்று விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் அ.தி.மு.க. பங்கேற்க முடிவு?
- தி.மு.க. அரசுக்கு கோரிக்கை விடுத்தே விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டை நடத்துவதால் நிச்சயம் தி.மு.க. அதில் பங்கேற்க வாய்ப்பு இல்லை.
- அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி கருத்துக்களை கேட்டு ஆலோசனை நடத்தி வருவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.
தி.முக. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க. உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணி பலமான கூட்டணியாகவே உள்ளது.
அதே சமயத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க.வை தவிர 2-வது பெரிய கட்சிகள் எதுவும் இடம் பெறவில்லை. இதனால் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் மேலும் பல கட்சிகளை சேர்ப்பதற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார்.
இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளன் தங்களது கட்சி சார்பில் நடத்தப்படும் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அ.தி.மு.க.வுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது அரசியல் களத்தில் சூட்டை கிளப்பியுள்ளது.
காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ந்தேதி கள்ளக்குறிச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உள்ள பெண்களால் நடத்தப்படும் மது ஒழிப்பு மாநாடு தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் தான் திருமாவளவன, எதிர் அணியில் உள்ள பிரதான கட்சியான அ.தி.மு.க.வை அழைத்திருந்தார்.
இது தி.மு.க. கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கூட்டணி மாற்றங்கள் நிகழுமா? என்கிற எதிர்பார்ப்புகளும் ஏற்பட்டு உள்ளன.
இதைத் தொடர்ந்து திருமாவளவனின் அழைப்பை ஏற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க. பங்கேற்க முடிவு செய்திருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி கருத்துக்களை கேட்டு ஆலோசனை நடத்தி வருவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதுபற்றி அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க.வுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்திருப்பதை வரவேற்கிறோம். அ.தி.மு.க. மது விலக்கு கொள்கையுடன் செயல்பட்டு வரும் கட்சி என்கிற அடிப்படையில் திருமாவளவன் எங்களையும் அழைத்துள்ளார்.
அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது 500 மதுக்கடைகளை மூடினார். எடப்பாடி பழனிசாமியும் அவர் வழியில் செயல்பட்டு 500 கடைகளை மூடினார்.
அ.தி.மு.க. ஆட்சியின் போது மதுக்கடைகளுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் கடுமையாக பேசி வந்தார். தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு அதுபற்றி பேசுவது இல்லை. இது போன்ற சூழலில்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி மது ஒழிப்பு மாநாட்டை நடத்துகிறது. எனவே மக்கள் நலன் கருதி இந்த மாநாட்டில் அ.தி.மு.க. பங்கேற்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. இது எதிர்காலத்தில் கூட்டணிக்கு அச்சாரமாக அமைந்தால் மகிழ்ச்சிதான்.
தி.மு.க. அரசுக்கு கோரிக்கை விடுத்தே விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டை நடத்துவதால் நிச்சயம் தி.மு.க. அதில் பங்கேற்க வாய்ப்பு இல்லை. எனவே அ.தி.மு.க. கலந்து கொள்வதில் எந்தவித தடையும் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் பங்கேற்க அ.தி.மு.க.வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது தொடர்பாகவும், மாநாட்டில் பங்கேற்பது பற்றியும் அ.தி.மு.க. தலைமை விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் அனைத்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் பங்கேற்கும் சூழலே உள்ளது. இப்படி தி.மு.க.வை தவிர கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் மாநாட்டில் அ.தி.மு.க. பங்கேற்பதன் மூலம் தி.மு.க. கூட்டணி கட்சிகளோடு அ.தி.மு.க. கை கோர்க்கும் சூழல் ஏற்பட்டிருப்பதாலேயே திருமாவளவனின் அழைப்பு அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.






