என் மலர்
உள்ளூர் செய்திகள்
- உதவியாளா்கள் உள்பட அமைச்சுப் பணியில் காலியாக உள்ள இடங்கள் குரூப் 2ஏ பிரிவில் உள்ளன.
- ஒவ்வொரு தோ்வு மையத்துக்கும் ஆய்வு அலுவலா் ஒருவரும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:
தமிழ்நாடு முழுவதும் இன்று குரூப்-2 தேர்வு தொடங்கியது.
துணை வணிகவரி அதிகாரி, தொழிலாளா் நலத் துறை உதவி ஆய்வாளா், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலா், சாா்-பதிவாளா் உள்ளிட்ட பதவியிடங்கள் குரூப் 2 பிரிவில் வருகின்றன.
இதேபோன்று, உதவியாளா்கள் உள்பட அமைச்சுப் பணியில் காலியாக உள்ள இடங்கள் குரூப் 2ஏ பிரிவில் உள்ளன. 2 பிரிவுகளிலும் சோ்த்து மொத்தமாக 2,327 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு அறிவிக்கையை அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டது.
இந்த பணியிடங்களுக்கான குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வை 38 மாவட்டங்களில் 2,763 தேர்வு மையங்களில் 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 போ் எழுதுகின்றனர்.
ஒவ்வொரு தோ்வு மையத்துக்கும் ஆய்வு அலுவலா் ஒருவரும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தமுள்ள 2,763 தோ்வு மையங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளா்கள், கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
- 17 நாட்கள் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் உலகில் 18 முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
- அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளவை மத்திய அரசு நடத்திய விதம் வெட்கப்பட வேண்டியது.
அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாக சென்று தமிழகத்துக்கு ரூ.7,616 கோடி முதலீட்டுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார்.
தமிழகம் திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள் வரவேற்றனர்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அனைவருக்கும் வணக்கம். நீங்க எல்லாம் நல்லா இருக்கீங்களா...
அமெரிக்கா சென்ற அரசு முறை சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து சென்னை திரும்பி இருக்கிறேன். அமெரிக்க பயணம் வெற்றிகரமான பயணமாகவும், சாதனை பயணமாகவும் அமைந்திருக்கிறது. தனிப்பட்ட எனக்கு அல்ல. தமிழ்நாட்டு மக்களுக்கான சாதனை பயணமாக இது அமைந்திருக்கிறது.
17 நாட்கள் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் உலகில் 18 முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
உலகின் புகழ்பெற்ற 25 நிறுவனங்களுடன் சந்திப்பை நடத்தி உள்ளேன். அமெரிக்க பயணத்தின்போது 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. பல நிறுவனங்கள் தமிழகத்திற்கு வர விருப்பம் தெரிவித்துள்ளன.
சென்னையில் ஃபோர்டு நிறுவனம் மீண்டும் உற்பத்தியை தொடங்க உள்ளது. ஃபோர்டு நிறுவனம் உற்பத்தியை தொடங்க அனைத்து உதவிகளையும் செய்ய உத்தரவிட்டுள்ளேன். ஒப்பந்தங்கள் செய்துள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் நன்றி.
முதலீடுகள் தொடர்பாக சட்டசபையில் எடுத்து கூறி உள்ளோம். சட்டசபையில் பேசியவற்றை இபிஎஸ் படித்து பார்க்க வேண்டும்.
அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளவை மத்திய அரசு நடத்திய விதம் வெட்கப்பட வேண்டியது.
முதலீடுகள் குறைவு என கூறுவது அரசியல் நோக்கத்துடன் கூறப்படும் குற்றச்சாட்டுகள் என்று அவர் கூறினார்.
- பாஸ்போர்ட் விண்ணப்பித்து பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
- அதிக பாஸ்போர்ட் வினியோகிக்கப்பட்ட மாநிலங்களில் கேரளா முதல் இடத்தில் உள்ளது.
சென்னை:
ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு செல்வதற்கு பாஸ்போர்ட் அவசியம் ஆகும். பாஸ்போர்ட் இல்லாமல் செல்பவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்படுகிறார்கள். வேலை, படிப்பு மற்றும் சுற்றுலா என பல்வேறு தேவைகளுக்காக இந்தியர்கள் நமது நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு பறந்து வருகிறார்கள்.
இதனால் பாஸ்போர்ட் விண்ணப்பித்து பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்தவகையில், கடந்த 2023-ம் ஆண்டு மட்டும் 3 கோடியே 8 லட்சத்து 93 ஆயிரத்து 577 பெண்கள், 5 கோடியே 73 லட்சத்து 77 ஆயிரத்து 716 ஆண்கள் என மொத்தம் 8 கோடியே 82 லட்சத்து 71 ஆயிரத்து 293 பேர் பாஸ்போர்ட் பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதிக பாஸ்போர்ட் வினியோகிக்கப்பட்ட மாநிலங்களில் கேரளா முதல் இடத்தில் உள்ளது. அங்கு 42 லட்சத்து 17 ஆயிரத்து 661 பெண்கள், 56 லட்சத்து 75 ஆயிரத்து 179 ஆண்கள் என 98 லட்சத்து 92 ஆயிரத்து 840 பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரத்தில் 40 லட்சத்து 75 ஆயிரத்து 512 பெண்கள், 57 லட்சத்து 35 ஆயிரத்து 854 ஆண்கள் என 98 லட்சத்து 11 ஆயிரத்து 366 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 17 லட்சத்து 27 ஆயிரத்து 89 பெண்கள், 70 லட்சத்து 58 ஆயிரத்து 703 ஆண்கள் என 87 லட்சத்து 85 ஆயிரத்து 792 பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
அதிக பாஸ்போர்ட் வினியோகிக்கப்பட்ட பட்டியலில் தமிழகம் 4-ம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 28 லட்சத்து 7 ஆயிரத்து 509 பெண்கள், 55 லட்சத்து 47 ஆயிரத்து 383 ஆண்கள் என 83 லட்சத்து 54 ஆயிரத்து 892 பேர் பாஸ்போர்ட் பெற்றிருக்கிறார்கள்.
- நாட்டின் சிறந்த கல்லூரிகளில் முதல் 20 இடங்களை தமிழகத்தைச் சேர்ந்த 28 கல்வி நிறுவனங்கள் தொடர்ச்சியாக பெற்று வருவது பெருமைக்குரியது.
- ஒருசில கல்வி நிறுவனங்களில் மட்டுமே பி.எச்.டி.க்கான கல்வி தரம் சிறப்பாக உள்ளது.
சென்னை:
தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு-2024 (என்.ஐ.ஆர்.எப்.) தரவரிசையில் தமிழ்நாட்டில் சிறந்து விளங்கிய கல்வி நிறுவனங்களுக்கு பாராட்டு விழாவும், தமிழ்நாட்டின் உயர் கல்வி சிறப்பு குறித்த கருத்தரங்கமும் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கவர்னர் ஆர்.என்.ரவி, சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி, பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், பதிவாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டில், என்.ஐ.ஆர்.எப். தரவரிசையில் முன்னிலையில் இருந்த 11 உயர் கல்வி நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகளை கவர்னர் ஆர்.என்.ரவி கவுரவித்தார்.
பின்னர், நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
நாட்டின் சிறந்த கல்லூரிகளில் முதல் 20 இடங்களை தமிழகத்தைச் சேர்ந்த 28 கல்வி நிறுவனங்கள் தொடர்ச்சியாக பெற்று வருவது பெருமைக்குரியது. இந்த நிகழ்ச்சி தற்போது 3-வது முறையாக நடைபெறுகிறது. இதன் நோக்கம் மாநிலத்தில் இருக்கும் கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மற்ற கல்வி நிறுவனங்களுடன் கலந்து பணியாற்றாமல் தனியாக செயல்படுவதை மாற்றி, மற்ற கல்லூரிகளுடன் இணைந்து செயல்படுவதற்கு ஊக்குவிப்பதாகும்.
தமிழகத்தில் ஆராய்ச்சி (பி.எச்.டி) படிப்புக்கான கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும். பி.எச்.டி. முடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால், அதன் தரம் திருப்திகரமாக இல்லை. ஒருசில கல்வி நிறுவனங்களில் மட்டுமே பி.எச்.டி.க்கான கல்வி தரம் சிறப்பாக உள்ளது.
எனவே, அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பி.எச்.டி. கல்வியின் தரம் உயர்த்தப்பட வேண்டும். முதுநிலை படிக்கும் போதே இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை (ஜெ.ஆர்.எப்) மற்றும் 'நெட்' தேர்வுகளுக்கு தயாராக வேண்டும்.
ஒரு நாடு வளர வேண்டும் என்றால், அந்த நாடு அறிவுசார் சொத்துகளை அமைத்துக்கொள்ள வேண்டும். உலகின் அறிவுசார் சொத்துகளில் சீனா 46 சதவீதம் பெற்றுள்ளது. அதை மனதில் கொண்டு நம் நாட்டின் அறிவுசார் சொத்துகளை உயர்த்துவதற்கு அதிக தரம் கொண்ட பி.எச்.டி. படிப்புகளை கொண்டுவர வேண்டும்.
கடந்த 2 ஆண்டுகளில் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் உயர்ந்துள்ளது. மேலும், அறிவுசார் சொத்துகளையும் உருவாக்கி உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல் ஆனது.
- மன்னிப்பு வீடியோவிற்கு பின் பெரிய கூட்டமே உள்ளது.
ஜிஎஸ்டி குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்த அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோவில் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்ட காட்சிகள் பதிவாகி உள்ளன.
இந்நிலையில் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் தொடர்பாக கோவை எம்.பி. காட்டமான கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய கோவை எம்.பி. கணபதி ராஜ்குமார், "உணவக உரிமையாளர் சீனிவாசனை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். யாரும் கேள்வி கேட்க கூடாது என்றால், எதற்காக கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். பொதுமக்கள் வந்து செல்லும் இடத்தில், யார் என்ன சாப்பிடுகிறார்கள் என தெரியாதா?"
"மன்னிப்பு வீடியோவிற்கு பின் பெரிய கூட்டமே உள்ளது. உணவக உரிமையாளர் சீனிவாசனை கேவலப்படுத்துவது, கோவை மக்களை கேவலப்படுத்துவதற்கு சமம்" என்று தெரிவித்துள்ளார்.
- வழக்கில் சிலர் விடுவிக்கப்பட்டும், வழக்கு ரத்து செய்யப்பட்டும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
- குற்றச்சாட்டு பதிவுக்காக வரும் 30ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரியான ஜாபர் சேட்டின் மனைவி பர்வீன் உள்ளிட்ட சிலருக்கு 2008-ஆம் ஆண்டு சென்னை திருவான்மியூரில் 3 ஆயிரத்து 457 சதுர அடி மற்றும் 4 ஆயிரத்து 763 சதுர அடி கொண்ட வீட்டுமனைகளை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது.
இந்த நிலங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டி கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்ததாக அப்போது வீட்டு வசதித் துறை அமைச்சராக பதவி வகித்த ஐ.பெரியசாமி, ஜாபர் சேட், அவரது மனைவி பர்வீன், க.முருகையா, ராஜமாணிக்கம், துர்கா, சங்கர் ஆகிய 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் 2013-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் சிலர் விடுவிக்கப்பட்டும், வழக்கு ரத்து செய்யப்பட்டும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், வீட்டு மனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, குற்றச்சாட்டு பதிவுக்காக வரும் 30ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் உத்தரவிட்டுள்ளார்.
- கோயம்புத்தூர் மக்கள் பாசத்தில் மட்டுமல்ல ரோசத்திலும் அதிகமானவர்கள் தான்!
- இனி எந்த காலத்திலும் தமிழ்நாட்டிலும் கோவையிலும் மக்கள் பாஜக-வை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்!
கோவை கொடிசியாவில் நேற்று முன்தினம் தொழில் முனைவோர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் நிர்மலா சீதாராமனிடம், ஜிஎஸ்டி வரிகள் குறித்து கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, ஜி.எஸ்.டி. குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்த அன்னபூர்ணா சீனிவாசன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இதற்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் செயல்பட்டாளர் சுந்தரராஜன், கேரள காங்கிரசார் மற்றும் பலர் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதற்கு கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
அதிகார மமதையில் ஆளும் பாசிச பாஜக அரசு!
மத்திய நிதி அமைச்சர் பங்குபெற்ற கூட்டத்தில் பேசிய அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் எந்தவிதத்திலும் தவறாக பேசவில்லை.
தங்கள் தொழிலில் சந்திக்கும் சில பிரச்சினைகளை கோரிக்கையாக முன் வைத்தார்.
அதற்காக அவரை அழைத்து மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்திருப்பது தமிழ்நாட்டு மக்களையே கேவலப்படுத்தும் செயல்!
அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டிருப்பது பாசிசத்தின் உச்சம்!
கோயம்புத்தூர் மக்கள் பாசத்தில் மட்டுமல்ல ரோசத்திலும் அதிகமானவர்கள் தான்!
இனி எந்த காலத்திலும் தமிழ்நாட்டிலும் கோவையிலும் மக்கள் பாஜக-வை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்!
இந்த செயலால் இன்னுமொரு நூறாண்டு ஆனாலும் பாஜக இதற்காக வருந்தும்!
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- இருவருக்கும் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:
சேலம் மாவட்டம் செல்வ நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது54). இவர் அதே பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார்.
இவரது நண்பரான சேலம் மாவட்டம் மணியனூர் பகுதியைச் சேர்ந்த அங்குஸ் (39) என்பவருடன் காரில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கோவிலுக்கு புறப்பட்டனர். பின்னர் அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு நேற்று காரில் ஊர் திரும்பினர். காரை சேலம் மாவட்டம் சின்னநாயக்கர்பட்டி பகுதியைச் சேர்ந்த சான்பாட்சா (36) ஓட்டிவந்தார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வழியாக வந்து கொண்டிருந்தபோது சேத்தூரை அடுத்த கொல்லம் தேசிய நெடுஞ்சாலை அசையாமணி விலக்கு அருகே கார் திடீரென எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. காரில் பயணித்த செல்வம், அங்குஸ், டிரைவர் சான்பாட்சா ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சில் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் செல்வம் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரித்தனர். மற்ற இருவருக்கும் முதலுதவிஅளித்து மேல் சிகிச்சைக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பந்தப்பட்ட கார் ஓட்டுனரிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த காரால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே வெலக்கல்நாத்தம் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.
இந்நிலையில், அந்த காரில் கட்டுக்கட்டாக இருந்த ரூ.2,000 நோட்டுகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து, சம்பந்தப்பட்ட கார் ஓட்டுனரிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், காரில் கட்டுக்கட்டாக இருந்தது போலி ரூ.2000 நோட்டுகள் என தெரியவந்துள்ளது.
மேலும், தான் சினிமா தயாரிப்பாளர் எனவும், படப்பிடிப்பிற்காக கொண்டு சென்றதாகவும் வாகன ஓட்டி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த காரால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
- அமெரிக்காவில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் மூலம் ரூ.25,000 கோடி முதலீடுகள் ஈர்க்க உறுதி பெற்று வந்துள்ளனர்.
- தமிழ்நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக பல்வேறு நாடுகளில் இருந்து தொழில் முதலீடுகள் ஈர்க்கப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணம் தோல்வி அடைந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
17 நாள்கள், 18 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்,
வெறும் ரூ.7,616 கோடி மட்டுமே முதலீடு:
முதல்வரின் அமெரிக்கப் பயணம் தோல்வி!
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் 17 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினர், 18 நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி ரூ.7,616 கோடி முதலீட்டை ஈர்ப்பதற்கான உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ளனர். ஒப்பீட்டளவில் பார்க்கும் போது இது மிக மிக குறைவு ஆகும்.
தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக தமிழக அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள நிறுவனங்களில் பெரும்பாலானவை ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்பட்டு வருபவை தான். அந்த நிறுவனங்கள், குறிப்பாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான மையங்களை அமைப்பதற்காகவே முதலீடு செய்ய முன்வந்திருக்கின்றன.
உலகில் நான்காம் தலைமுறை தொழில்புரட்சி நடைபெற்று வரும் நிலையில், இத்தகைய ஆய்வு மையங்கள் அமைக்கப்படுவதும், அதற்காக முதலீடு செய்யப்படுவதும் இயல்பாக நடக்கக் கூடியவை. ஒருவேளை இதற்கான முதலீடுகளை ஈர்ப்பதாக இருந்தாலும் கூட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் தகவல்தொழில்நுட்ப அமைச்சரும், செயலாளரும் பேச்சு நடத்தி சாதித்திருக்கலாம். இதற்காக முதலமைச்சர் அவர்கள் தம்மை வருத்திக் கொண்டு அமெரிக்கா சென்றிருக்கத் தேவையில்லை.
தெலுங்கானா முதலமைச்சராக கடந்த ஆண்டு பொறுப்பேற்ற ரேவந்த் ரெட்டி கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை 8 நாள்கள் மட்டுமே அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டு, ரூ.31,500 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து வந்திருக்கிறார். மொத்தம் 19 நிறுவனங்களுடன் தெலுங்கானா அரசு செய்து கொண்ட ஒப்பந்தங்களின் மூலம் அம்மாநிலத்திற்கு கிடைக்க இருப்பவை தரமான முதலீடுகள் ஆகும்.
அதேபோல், கர்நாடகத்தில் கடந்த ஆண்டு புதிதாக பொறுப்பேற்ற சித்தராமையா தலைமையிலான அரசின் சார்பில் அம்மாநில தொழில்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தலைமையிலான குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்காவில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் மூலம் ரூ.25,000 கோடி முதலீடுகள் ஈர்க்க உறுதி பெற்று வந்துள்ளனர்.
சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார அமைப்பின் 54-ஆம் மாநாட்டின் போது மராட்டிய முதலமைச்சர் ஷிண்டே தலைமையிலான குழு மொத்தம் ரூ.3.53 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. அவற்றின் பெரும்பாலானவை அமெரிக்க முதலீடுகள் ஆகும். இந்த மாநிலங்களுடன் ஒப்பிடும் போது அமெரிக்காவில் தமிழகம் ஈர்த்த முதலீடுகளின் மதிப்பு மிகவும் குறைவு ஆகும். அந்த வகையில் தமிழக முதலமைச்சரின் அமெரிக்கப் பயணம் தோல்வியடைந்துள்ளது.
தமிழ்நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக பல்வேறு நாடுகளில் இருந்து தொழில் முதலீடுகள் ஈர்க்கப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது. அதற்கான சிறந்த வழி தமிழ்நாட்டில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும், தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சாதகமான சூழலை ஏற்படுத்துவதும் தான். இதை செய்தால் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் தானாக குவியும். எனவே, வீண் விளம்பரங்களை விடுத்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழலை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (13.09.2024 மற்றும் 14.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2°-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- இந்திய சந்தையில் மீண்டும் கவனம் செலுத்துவதற்கு போர்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
- தமிழ்நாட்டில் மீண்டும் ஆலையை அமைக்க மாநில அரசிடம் கடிதத்தை சமர்ப்பிப்பு.
தமிழகத்தில் போர்ட் மோட்டார் நிறுவனம் மீண்டும் ஏற்றுமதிக்கான உற்பத்தி ஆலையை அமைக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் போர்டு கார் தொழிற்சாலையின் உயர் அதிகாரிகளை சந்தித்து சென்னையில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
அப்போது, போர்ட் உடனான 30 ஆண்டுகால கூட்டணியை மீண்டும் புதுப்பிக்கும் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அந்த வேண்டுகோளை ஏற்று போர்டு கார் நிறுவனம் மீண்டும் சென்னை அருகே கார் உற்பத்தியை தொடங்க உள்ளதாக தமிழக அரசிடம் கடிதம் வழங்கி உள்ளது. அதன்படி, மீண்டும் இந்திய சந்தையில் கவனம் செலுத்துவதற்கு அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதற்கான முறையான அறிவிப்பு சில தினங்களில் வெளியாகும் என தெரிகிறது. இந்நிலையில், மின்சார வாகன விற்பனையுடன் இந்தியாவில் நுழைவதற்கான முயற்சிகளை போர்ட் நிறுவனம் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமாக போர்ட் நிறுவனம், கடந்த 2021ம் ஆண்டில் இந்தியாவில் தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டது.
சென்னை மறைமலைநகர், குஜராத்தின் சனந்த் பகுதிகளில் செயல்பட்டு வந்த போர்ட் ஆலைகள் 2021ல் மூடப்பட்டன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் மீண்டும் ஆலையை அமைக்க மாநில அரசிடம் கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக போர்ட் நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






