என் மலர்
உள்ளூர் செய்திகள்
- நேற்று முன்தினம் இரவு முதலே கனமழை பெய்து வருகிறது.
- அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவிப்பு.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு பகுதியில் நகர்ந்து தெற்கு வங்கக்கடல் மத்திய பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதலே கனமழை பெய்து வருகிறது.
இன்றும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழை காரணமாக அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "நேற்று அதிக அளவில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன."
"தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன."
"இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை - எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும்," என குறிப்பிட்டுள்ளார்.
- ராட்சத அலைகள் 10 முதல் 15 அடி வரை உயரத்திற்கு எழும்பின.
- வீட்டின் வாசலில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்தனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கள்ளக் கடல் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் குமரி மாவட்டத்தில் உள்ள மீனவர் கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடல் சீற்றமாக காணப்படும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடற்கரை பகுதிக்கு யாரும் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு மாவட்டம் முழுவதும் கடல் சீற்றமாக காணப்பட்டது.

ராஜாக்கமங்கலம் அருகே அழிக்கால், பிள்ளை தோப்பு பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. ராட்சத அலைகள் 10 முதல் 15 அடி வரை உயரத்திற்கு எழும்பின. இதனால் கடற்கரையையொட்டி உள்ள வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது.
அந்த பகுதியில் உள்ள தெருக்களில் கடல் நீர் புகுந்ததுடன் வீடுகளுக்குள்ளும் புகுந்ததால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள்.

சுமார் 150-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்ததையடுத்து அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். சிலர் வீட்டின் மாடியில் அமர்ந்திருந்தனர்.
மேலும் சிலர் கடல் நீர் வீட்டிற்குள் செல்லாமல் இருக்கும் வகையில் வீட்டின் வாசலில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்தனர்.

கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் மீனவர்கள் விடிய விடிய தூங்காமல் தவித்தனர். இன்று காலையிலும் அழிக்கால் பிள்ளை தோப்பு பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. லெமூர் கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. ராட்சத அலைகள் கடற்கரை ஓரத்தில் இருந்த தற்காலிக கடைகள் வரை வந்து சென்றன. இதனால் அங்குள்ள கடைகள் முற்றிலுமாக சேதம் அடைந்தன.
கடல் சீற்றம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அந்த பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. அந்த பகுதியில் உள்ள நுழைவாயில் மூடப்பட்டிருந்ததுடன் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. போலீசாரும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் அங்கு வந்த சுற்றுலாப் பயணிகளை திருப்பி அனுப்பி வைத்தனர்.
தேங்காய் பட்டினம், இரவிபுத்தன் துறை, வள்ளவிளை, பூத்துறை, தூத்தூர் பகுதிகளிலும் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. ராட்சத அலைகள் கடற்கரையை ஓட்டியுள்ள வீடுகள் வரை வந்து சென்றன. அந்த பகுதியில் உள்ள கடல் அரிப்பு தடுப்பு சுவர்கள் மீதும் வேகமாக மோதியது. இதனால் கடற்கரையில் உள்ள மக்கள் அச்சத்துடன் காணப்பட்டனர்.

கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டதால் சொத்தவிளை, கன்னியாகுமரி, முட்டம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- சிங்காநல்லூர், புலியகுளம் பகுதிகளில் உள்ள 2 மருத்துவமனைகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
- டார், வி.பி.என் போன்ற தேடுபொறி தளங்களை பயன்படுத்தும்போது எங்கிருந்து அனுப்புகின்றனர் என்பதை உறுதி செய்ய முடியாது.
கோவை:
கோவையில் கடந்த சில நாட்களாக தனியார் பள்ளிகள், ஓட்டல்கள், கல்லூரிகளை குறிவைத்து மர்மநபர்கள் இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
ஈச்சனாரி அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லூரி முதல்வருக்கு வந்த மெயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.
செட்டிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை செய்தனர். சோதனையின் முடிவில் அது புரளி என்பது தெரியவந்தது.
இதேபோல் சிங்காநல்லூர், புலியகுளம் பகுதிகளில் உள்ள 2 மருத்துவமனைகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதுகுறித்து அந்தந்த பகுதி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் வந்த மெயில் முகவரியை வைத்து எங்கிருந்து மிரட்டல் வந்தது. அதனை விடுத்தது யார்? என விசாரித்து வருகின்றனர்.
கோவையில் தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகள், ஓட்டல்கள், ஆஸ்பத்திரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள சம்பவம் கோவை மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
மிரட்டல் விடுக்கும் நபர்கள் யார் என்பதை கண்டறிவதில் போலீசாருக்கு கடும் சவால் ஏற்பட்டுள்ளது. தற்போது போலீசார் தொழில் நுட்ப உதவியுடன், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்கள் யார் என்பதை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிந்த நபர்களே இதுபோன்ற மிரட்டல்கள் விடுத்து வருகின்றனர். டார் எனப்படும் பிரவுசரை பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் மிரட்டல் விடுத்து இ-மெயில் அனுப்புகிறார்கள்.
டார், வி.பி.என் போன்ற தேடுபொறி தளங்களை பயன்படுத்தும்போது எங்கிருந்து அனுப்புகின்றனர் என்பதை உறுதி செய்ய முடியாது.
உள்ளூரில் இருந்து அனுப்பினாலும் வெளிநாட்டில் இருப்பது போலவே முகவரி காட்டும். இதுபோன்ற மிரட்டல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிய தொழில்நுட்ப உதவியுடன் தீவிர விசாரணை செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கால்வாய்களை முறையாக தூர்வாராததால் மழைநீர் சூழ்ந்தது.
- மழைநீர் வடிகால்களை அமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
ஊட்டி:
தமிழக பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
சென்னையில் கடந்த ஆண்டு பெய்த கனமழையின் போது மழைநீர் வடிகால் கால்வாய்களை முறையாக தூர்வாராததால் மழைநீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
அப்போது தமிழக அரசு மழை நீர் வடிகால்களை அமைக்க ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு 90 சதவீத பணி முடிந்ததாக கூறியது. அதன்பின்னர் 40 சதவீத பணிகள் முடிந்ததாக கூறினர்.
தற்போது சென்னையில் மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட அதே நிலைமை தான் தற்போதும் அங்கு ஏற்பட்டுள்ளது.
எனவே தமிழக அரசு மெத்தனபோக்கு காட்டாமல், மக்களின் நலனை கருத்தில் கொண்டு மழைநீர் வடிகால்களை அமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
ஏனென்றால் சென்னையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்தனர். 250-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்தாண்டு இதேபோன்று உத்தரபிரதேசத்தில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால் அங்கு இதுபோன்ற எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை.
மத்திய அரசுக்கு எதிராக தவறான கருத்துக்களை கூறினால் தான் மக்கள் துணை முதல்வர் என ஏற்றுக்கொள்வார்கள் என உதயநிதி ஸ்டாலின் நினைக்கிறார்.
சென்னை கவரப்பேட்டையில் நடைபெற்ற ரெயில் விபத்தில் மனித தவறா அல்லது தொழில்நுட்ப கோளாறா என விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் சதி வேலைகளுக்கும் வாய்ப்பு இருக்கிறது. இது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.
துணை முதல்வராக பொறுப்பேற்ற பின்பு உதயநிதி, மத்திய ரெயில்வே மந்திரி பற்றியும், அவர் மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு தான் கூடுதலாக ரெயில் விபத்துக்கள் நடப்பது மாதிரியும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது மாதிரியும் பேசுகிறார்.
அவர் அரசியலை பற்றி தெரியாமல் ஒரு விளையாட்டு மந்திரியாக, விளையாட்டுத் தனமாக, அரசியல் அனுபவமின்றி பேசி வருகிறார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று சவரன் ரூ.56 ஆயிரத்துக்கு 760-க்கு விற்பனையானது.
- வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
சென்னை:
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க நினைப்போர் கவலை அடைந்துள்ளனர். தங்கம் விலை நேற்று குறைந்து இருந்தது.
இந்த நிலையில் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று இதுவரை காணாத அளவிற்கு உச்சம் தொட்டது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று சவரன் ரூ.56 ஆயிரத்துக்கு 760-க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.57 ஆயிரத்து 120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.7,140-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.103-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
15-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,760
14-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,960
13-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,960
12-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,960
11-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,760

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
15-10-2024- ஒரு கிராம் ரூ. 103
14-10-2024- ஒரு கிராம் ரூ. 103
13-10-2024- ஒரு பவுன் ரூ. 103
12-10-2024- ஒரு பவுன் ரூ. 103
11-10-2024- ஒரு பவுன் ரூ. 102
- நீர்வரத்து இன்று காலை 16,196 கன அடியாக அதிகரித்துள்ளது.
- இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 92 அடியாக உயர்ந்தது.
மேட்டூர்:
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிந்து அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் தண்ணீர் போதுமான அளவு நிரம்பிய பிறகே உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்படுகிறது.
இந்த உபரி நீர் காவிரி ஆறு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்தடைகிறது.
தற்போது கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
அதுேபால் கர்நாடக-தமிழக எல்லையில் வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. நேற்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 15,531 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 16,196 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து தமிழக காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வந்தது. தற்போது தொடர் மழை பெய்து வருவதால் நீர் திறப்பு 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
அதுபோல் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 500 கன அடியில் இருந்து நீர் திறப்பு 300 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 92 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 54.96 டி.எம்.சி. உள்ளது.
- காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டியில் இருந்து பாலக்கோட்டிற்கு நேற்று அரசு பஸ் சென்றது.
- பஸ்சில் பயணம் செய்த மாணவ-மாணவிகள், பெண்கள் குடை பிடித்தபடி பஸ்சில் சென்றனர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 1 வாரத்திற்கும் மேலாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கருமேகங்கள் திரண்டன. பின்னர் மிதமான மழை பெய்தது. இந்த மழை காரணமாக நேற்று பகலில் தர்மபுரி மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான மழை பெய்தது. இதன் காரணமாக நேற்று பகல் நேரத்திலேயே குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. மாலை 4 மணிக்கு மேல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டியில் இருந்து பாலக்கோட்டிற்கு நேற்று அரசு பஸ் சென்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சென்றனர். அப்போது காரிமங்கலம் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் மழைநீர் பஸ்சின் மேற்கூரையில் இருந்து உள்ளே விழுந்தது. இதன் காரணமாக பஸ்சில் பயணம் செய்த மாணவ-மாணவிகள், பெண்கள் குடை பிடித்தபடி பஸ்சில் சென்றனர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
- தொடர்ந்து மேற்கு வடமேற்கு நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 360 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
புதுச்சேரியிலிருந்து கிழக்கே 390 கி.மீ. தொலைவிலும், நெல்லூரிலிருந்து தென்கிழக்கு திசையில் 450 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. தொடர்ந்து மேற்கு வடமேற்கு நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது.
வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திர கடற்கரையோரம் புதுச்சேரிக்கும் - நல்லூருக்கும் இடையே நாளை காலை கரையை கடக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
- நேற்று பெய்த கனமழை காரணமாக சில விமானங்களின் சேவை ரத்தானது.
- காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா நோக்கி நகர்வதால் சென்னைக்கு ஆபத்து இல்லை.
சென்னை:
வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாகவும், சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு இன்று (புதன்கிழமை) அதி கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் இன்று அரசு பொதுவிடுமுறை அறிவித்துள்ளது. இதனிடையே நேற்று பெய்த கனமழை காரணமாக சில விமானங்களின் சேவை ரத்தானது.
இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா நோக்கி நகர்வதால் சென்னைக்கு ஆபத்து இல்லை என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விமான பயணிகளுக்கு சென்னை விமான நிலையம் ஓர் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதாவது, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் கனமழை எச்சரிக்கை எதிரொலியாக, பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களிடம் சேவைப்பற்றி சரிபார்த்து அதற்கேற்ப தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
- குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக 277 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
- வீராணம் ஏரிக்கு வரும் 1,423 கன அடியில் 502 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதல் மழை வெளுத்து வாங்கியது. சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
இதனால் பூண்டி, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறக்கப்பட்ட நீரில் 410 கன அடியுடன், வரத்து கால்வாய் மூலம் 240 கன அடி மழை நீர் உட்பட 650 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதில் குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக 277 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
அதேபோல், சோழவரம் ஏரிக்கு வரும் 160 கன அடிநீரில் 21 கன அடி நீரும், புழல் ஏரிக்கு வரும் 277 கன அடியில் 219 கன அடியும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகைக்கு 60 கன அடியில் 25 கன அடியும், செம்பரம்பாக்கத்திற்கு வரும் 260 கன அடியில் 134 கன அடியும், வீராணம் ஏரிக்கு வரும் 1,423 கன அடியில் 502 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
செம்பரம்பாக்கத்தை பொறுத்தவரையில் நேற்று மாலை 1380 கன அடி நீர் வர தொடங்கியது. ஏரிகளுக்கு வரும் நீர்வரத்தை நீர்வளத்துறை அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.
- மேச்சேரியில் நெசவாளர்களை சந்தித்து பேசியது மறக்க முடியாத அனுபவமாக அமைந்துள்ளது.
- கைத்தறி நெசவாளர்களின் திறமை மிகவும் வியப்பளிக்கிறது.
சேலம்:
சேலம் மாவட்டம் மேச்சேரியில் நெசவாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அங்கு கவர்னர் ஆர்.என்.ரவி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மேச்சேரியில் நெசவாளர்களை சந்தித்து பேசியது மறக்க முடியாத அனுபவமாக அமைந்துள்ளது. நெசவாளர்கள் மீது பிரதமர் மோடி மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். நெசவாளர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு காணப்படும். கைத்தறி நெசவாளர்களின் திறமை மிகவும் வியப்பளிக்கிறது. வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கு ஏற்ற வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக செய்துள்ளது.
எதிர்பார்த்ததைப் போல அடுத்த 2 நாட்களுக்கு மழைப்பொழிவு இருக்கும் என நினைக்கிறேன். மழை பாதிப்புகளை அரசு உரிய முறையில் கையாளும் என நம்புகிறேன்.
இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
- தங்கள் பகுதியில் உள்ள கழகத் தன்னார்வலர்களை எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
- இந்த செயலற்ற விடியா திமுக அரசைப் போல் அன்றி மக்கள் மீது அக்கறையோடு என்றைக்கும் அ.தி.மு.க. உழைக்கும்!
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மழை வெள்ளத்தால் தலைநகர் சென்னை தத்தளித்ததையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த விடியா திமுக அரசு மக்களை கைவிட்ட அவலத்தையும் சென்ற ஆண்டே பார்த்தோம். எனவே தான், உதவ அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் #RapidReponseTeam அமைத்து, #களத்தில்_அஇஅதிமுக பாதிக்கப்பட்ட மக்களுடன் தோளோடு தோள்நின்றது.
தற்போது தலைநகர் சென்னையில் கனமழை பெய்துவரும் நிலையில், எனது அறிவுறுத்தலின்படி, அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் மீண்டும் #RapidResponseTeam அமைக்கப்பட்டுள்ளது.
சென்னைவாழ் பொதுமக்கள் இந்த கடுமையான தருணத்தில் தங்களுக்கு தேவையான உதவிகளைப் பெற தங்கள் பகுதியில் உள்ள கழகத் தன்னார்வலர்களை எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
இந்த செயலற்ற விடியா திமுக அரசைப் போல் அன்றி மக்கள் மீது அக்கறையோடு என்றைக்கும் அ.தி.மு.க. உழைக்கும்!
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.






