தொடர் மழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16,196 கன அடியாக அதிகரிப்பு

நீர்வரத்து இன்று காலை 16,196 கன அடியாக அதிகரித்துள்ளது.இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 92 அடியாக உயர்ந்தது.
தொடர் மழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16,196 கன அடியாக அதிகரிப்பு
Published on

மேட்டூர்:

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிந்து அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் தண்ணீர் போதுமான அளவு நிரம்பிய பிறகே உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்படுகிறது.

இந்த உபரி நீர் காவிரி ஆறு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்தடைகிறது.

தற்போது கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

அதுேபால் கர்நாடக-தமிழக எல்லையில் வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. நேற்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 15,531 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 16,196 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து தமிழக காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வந்தது. தற்போது தொடர் மழை பெய்து வருவதால் நீர் திறப்பு 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

அதுபோல் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 500 கன அடியில் இருந்து நீர் திறப்பு 300 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 92 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 54.96 டி.எம்.சி. உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com