என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது.
    • 2 கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று காலை முதல் மாலை வரை வெயில் அடித்த நிலையில் மாலை 6 மணிக்கு பிறகு மழை பெய்ய தொடங்கியது.

    6 மணிக்கு தொடங்கிய மழையானது இரவு 9 மணியை தாண்டியும் நீடித்தது. பலத்த இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த இந்த மழையால் கோவையில் உள்ள முக்கிய சாலைகளான திருச்சி சாலை, சத்தி சாலை, அவினாசி சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

    அவினாசி சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தில் இருந்து தண்ணீர் அருவி போன்று கொட்டியது. அதில் வாகன ஓட்டிகள் நனைந்தவாறு வாகனங்களை இயக்கி சென்றனர்.

    பணிமுடிந்து வீடு திரும்பும் நேரத்தில் கனமழை பெய்ததால் ஏராளமானோர் குறிப்பிட்ட நேரத்திற்குள் வீடு செல்ல முடியாமல் தவித்தனர். மழையில் இருந்து தப்பிக்க பலர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.

    குறிப்பாக அவினாசி சாலையில் சென்றவர்கள், அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்திற்கு அடியில் மழைக்கு ஒதுங்கினர். எல்.ஐ.சி சந்திப்பு பகுதியில் ஏராளமானார் தங்களது மோட்டார் சைக்கிளுடன் ஒதுங்கியதாலும், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த சாலையில் சென்ற வாகனங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக ஊர்ந்து சென்றன.

    இதுதவிர லங்கா கார்னர் ரெயில்வே பாலம், அவினாசி ரோடு பழைய மேம்பாலத்தின் கீழ் பகுதி, வடகோவை மேம்பாலம், சிவானந்தா காலனி ரெயில்வே மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    இதையடுத்து அந்த வழியாக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

    மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து தண்ணீரை அகற்றினர். இதனை தொடர்ந்து இன்று காலை முதல் இந்த பகுதிகளில் போக்குவரத்து சீரானது. வழக்கம் போல வாகனங்கள் பாலத்தின் கீழ் வழியாக செல்வதை காண முடிந்தது.

    புறநகர் பகுதிகளான பெரிய நாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, சூலூர், தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

    பாலமலை பகுதியில் கொட்டி தீர்த்த மழை காரணமாக மலையில் இருந்து உற்பத்தியாகி பெரிய நாயக்கன்பாளையம், மத்தம்பாளையம், கோட்டைப்பிரிவு வழியாக செல்லும் ஏழு எருமைப் பள்ளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    மத்தப்பாளையத்தில் இருந்து ஒன்னிப்பாளையம் வழியாக செல்லும் இந்த சாலையில் ஓடையின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது.

    மழையால் இந்த பாலத்தில் 4 அடிக்கும் மேல் தண்ணீர் சென்று கொண்டிருந்தது. அப்போது மின்தடை ஏற்பட்டதால் தண்ணீர் செல்வது தெரியவில்லை. அப்போது அந்த வழியாக வந்த 2 கார்களில் வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டன.

    இதனால் அதிர்ச்சியான காரில் இருந்தவர்கள் உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கி உயிர் தப்பினர். 2 கார்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

    இன்று காலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்களை தீயணைப்புத்துறையினர் தேடி வருகிறார்கள்.

    தொண்டாமுத்தூர் பகுதியில் பலத்த இடி, மின்னலுடன் பெய்த மழைக்கு புதுப்பாளையம் என்ற இடத்தில் தோட்டத்தில் உள்ள ஒரு தென்னை மரத்தின் மீது மின்னல் தாக்கி தீ பிடித்து எரிந்தது.

    மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் மேட்டுப்பாளையத்தில் உள்ள முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    வாகனங்களில் சாலையில் ஊர்ந்தபடியே சென்றன. பல இடங்களில் வெள்ளநீருடன் சாக்கடை நீரும் கலந்தது. மழையால் மேட்டுப்பாளையம்-காரமடை சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. போக்குவரத்து மட்டும் பாதிக்கப்பட்டது.

    அதேபோல் ராஜீவ்காந்தி நகர் உள்ளிட்ட பல்வேறு தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது.

    மழையால் அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டது. இதனால் வயதானவர்கள், குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    கோவையில் பெய்த கனமழையால் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக பீளமேடு விமான நிலையம் பகுதியில் 8 செ.மீ மழையும், கோவை தெற்கு தாலுகாவில் 7 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

    மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம் மி.மீட்டரில் வருமாறு:-

    விமான நிலையம்-87.60, வால்பாறை பி.ஏ.பி-74, சோலையார்-72, வால்பாறை தாலுகா-71, கோவை தெற்கு-70, பெரியநாயக்கன் பாளையம்-58, வேளாண் பல்கலைக்கழகம்-47, மேட்டுப்பாளையம-31, மாக்கினாம்பட்டி-39.

    • மாநாட்டு திடலில் 900 கொடி கம்பங்கள் நடும் பணி நடைபெற்று வருகிறது.
    • போலீசார் மட்டும் அவ்வப்போது மாநாட்டு திடலினுள் சென்று பணிகளை பார்வையிட்டு வருகின்றனர்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டு பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து, இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வருகிற 27-ந் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ளது

    மாநாட்டிற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், மாநாட்டு ஏற்பாடுகளில் ஒப்பந்ததாரர்கள் பம்பரமாக சுழன்று இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். நேற்று மாநாட்டு முகப்பு வாயிலில் இருந்து மாநாட்டு திடல் வரை வழியில் இருபுறமும் 35 அடி உயரத்தில் 500 கொடி கம்பங்கள் நட்டு அதில் 15 அடி நீளம், 3 அடி அகலம் கொண்ட வெல்வெட் துணியிலான கட்சி கொடியை பறக்க விட்டுள்ளனர்.

    இதேபோன்று, மாநாட்டு திடலில் 900 கொடி கம்பங்கள் நடும் பணி நடைபெற்று வருகிறது. மாநாட்டு பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். மாநாட்டு பணிகளை பார்வையிட வரும் கட்சி மற்றும் தொண்டர்கள் பொதுமக்களை நுழைவு வாயிலில் உள்ள தனியார் நிறுவன பவுன்சர்கள், உள்ளே விட மறுத்து திருப்பி அனுப்பி வருகின்றனர். போலீசார் மட்டும் அவ்வப்போது மாநாட்டு திடலினுள் சென்று பணிகளை பார்வையிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையோரம் மாநாடு நடத்த அனுமதியும், சாலை பாதுகாப்பு மேம்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்க வேண்டி கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், 'நகாய்' திட்ட இயக்குனர் வரதராஜனிடம் கேட்டுக் கொண்டார். அதன்பேரில், சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை டோல்பிளாசா மேலாளர் சதீஷ்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தண்டபாணி, பாதுகாப்பு மேலாளர் மனோஜ்குமார் ஆகியோர் நேற்று மாநாட்டு திடலை பார்வையிட்டு சென்றனர்.

    இந்நிலையில், நேற்று இரவு விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க், டி.ஐ.ஜி., திஷா மித்தல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதில் விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு தீபக்சிவாச், கடலுார் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி, விழுப்புரம் ஏ.டி.எஸ்.பி.க்கள் திருமால், தினகரன் மற்றும் டி.எஸ்.பி.க்கள் பங்கேற்றனர். த.வெ.க., மாநாட்டிற்கான இடவசதிகள், பார்க்கிங் வசதிகள், போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில், கூட்டத்தை கண்காணித்தல், நெரிசல் ஏற்பட்டால், மாநாடு தொடங்கியதும் தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம், திண்டிவனத்தில் வாகனங்களை திருப்பி, மாற்று சாலையில் அனுப்புவது போன்றவை குறித்து ஆலோசனை நடத்தினர்.

    • தங்கம் விலை ரூ.58 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சியை கொடுத்துவிட்டது.
    • வெள்ளி விலை உயர்ந்து உள்ளது.

    தங்கம் விலை கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வந்தது.

    தங்கம் விலை மார்ச் மாதம் சவரனுக்கு ரூ.50 ஆயிரத்தை கடந்த நிலையில், 2 மாத இடைவெளியில், அதாவது மே மாதத்தில் ரூ.55 ஆயிரம் என்ற நிலையையும் கடந்து புதிய உச்சத்தை தொட்டது.

    தங்கம் விலை ஏறுமுகத்தில் காணப்பட்டு, ரூ.56 ஆயிரம் என்ற நிலையையும் கடந்தது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ரூ.56 ஆயிரம் முதல் ரூ.57 ஆயிரம் வரையில் ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வந்தது.

    இந்த ஏற்ற, இறக்கத்துக்கு கடந்த 16-ந் தேதி ஒரு முற்றுப்புள்ளி வைத்தது போல, ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்தை கடந்தது. ரூ.57 ஆயிரத்தை கடந்த 3-வது நாளில் ரூ.58 ஆயிரத்தையும் தங்கம் விலை தாண்டி அதிர்ச்சியை கொடுத்துவிட்டது.

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று சவரன் ரூ.58 ஆயிரத்து 400-க்கு விற்பனையானது.

    இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.58 ஆயிரத்து 720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,340-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் இன்று உயர்ந்து உள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.112-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    22-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,400

    21-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,400

    20-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,240

    19-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,240

    18-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,௯௨௦

     

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    22-10-2024- ஒரு கிராம் ரூ. 110

    21-10-2024- ஒரு கிராம் ரூ. 109

    20-10-2024- ஒரு கிராம் ரூ. 107

    19-10-2024- ஒரு கிராம் ரூ. 107

    18-10-2024- ஒரு கிராம் ரூ. 105

    • கடந்த ஒரு வாரமாக பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • குண்டேரிப்பள்ளம், வரட்டுப்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட ங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணையில் இருந்து தொடர்ந்து நீர்வரத்தை விட பாசனத்திற்காக அதிக அளவு நீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் சரிய தொடங்கியுள்ளது.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90.09 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 7,222 கன அடியாக நீர் வருகிறது.

    கீழ்பவானி வாய்க்கால் பாசனம், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனம், காலிங்கராயன் வாய்க்கால் பாசனம் போன்ற பாசனங்களுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதுபோல் குடிநீருக்காக பவானி ஆற்றுக்கும் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களாக மாவட்டத்திலுள்ள அணைகளின் நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குண்டேரிப்பள்ளம், வரட்டுப்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

    இன்று காலை நிலவரப்படி குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 41.75 அடி யில் நீடிக்கிறது. இதேபோல் வரட்டுப்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 33.50 அடியில் தொடர்ந்து நீடிக்கிறது. 30 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.65 அடியை நெருங்கியுள்ளது.

    தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
    • டானா புயல் 24-ந்தேதி அதிகாலையில் வடமேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெறும்

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15-ந்தேதி தொடங்கியது. தற்போது, தமிழகத்தில் உள்மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, அனேக இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதற்கிடையே வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

    இந்தநிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவாகி டானா புயலாக உருவெடுத்துள்ளது.

    டானா புயல் 24-ந்தேதி அதிகாலையில் வடமேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    • அம்ரித் பாரத் ரெயில்கள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
    • இலகுரக ரெயில் பெட்டிகள் கொண்ட பாதுகாப்பு அம்சமும் இதில் இடம்பெற்று உள்ளது.

    சென்னை:

    இந்தியாவில் நீண்ட தூர பயணம் என்றாலே பயணிகளின் முதல் தேர்வாக ரெயில் பயணம் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் குறைந்த செலவில் பல்வேறு வசதிகளுடன் நீண்ட தூரம் பயணம் செய்து கொள்வது தான். பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரெயில்வே துறையும் பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.

    அந்த வகையில் குளிர்சாதன வசதி இல்லாத முன்பதிவு பெட்டிகள் மற்றும் பொதுப்பெட்டிகளுடன் கூடிய அம்ரித் பாரத் ரெயில்கள் இந்தியாவில் உத்தரபிரதேசம், பீகார், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இயக்கப்பட்டு வருகிறது. அம்ரித் பாரத் ரெயில்கள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

    இதனால் இந்த ஆண்டு இறுதிக்குள் 26 அம்ரித் பாரத் ரெயில்களை கூடுதலாக இயக்க மத்திய ரெயில்வே வாரியம் திட்டமிட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக, நெல்லை - மேற்கு வங்க மாநிலம் சாலிமர் மற்றும் தாம்பரம் - மேற்குவங்க மாநிலம் சந்திரகாச்சி இடையே புதிய அம்ரித் பாரத் ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் திட்டமிட்டு உள்ளது. நெல்லை - சாலிமர் வழித்தடத்தில் இயங்கும் ரெயில், நெல்லையில் இருந்து புறப்பட்டு விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, விழுப்புரம் வழியாக செல்லும். அதேபோல, சென்னை தாம்பரம் - சந்திரகாச்சி வழித்தடத்தில் இயங்கும் ரெயில் ஆந்திர மாநிலம் நெல்லூர், விஜயவாடா, விசாகப்பட்டினம் வழியாக செல்லும்.

    அம்ரித் பாரத் ரெயில்கள் 12 முன்பதிவு மற்றும் 8 முன்பதிவில்லா பெட்டிகள் உள்பட, மொத்தம் 22 பெட்டிகளை கொண்டது. அனைத்து பெட்டிகளிலும் கண்காணிப்பு கேமரா, நவீன இருக்கை வசதி, டிஜிட்டல் திரை மற்றும் அடுத்த ரெயில் நிலையத்தை அறிவிக்கும் வசதி உள்ளது. இலகுரக ரெயில் பெட்டிகள் கொண்ட பாதுகாப்பு அம்சமும் இதில் இடம்பெற்று உள்ளது.

    அம்ரித் பாரத் ரெயில் குறுகிய நேரத்தில் அதிக வேகத்தை எட்டும் திறனை கொண்டது. மேலும் இந்த ரெயில்கள் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும். புதிதாக வர இருக்கும் அம்ரித் பாரத் ரெயில்கள் மீது பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

    அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மற்றும் சென்னை சென்ட்ரல்-ஜோலார்பேட்டை, சூலூர்பேட்டை ஆகிய 3 வழித்தடத்தில் உள்ள 16 ரெயில் நிலையங்களை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது.

    எழும்பூர், மாம்பலம், கிண்டி, தாம்பரம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, அம்பத்தூர், திருவள்ளூர், திருத்தணி, சூலூர்பேட்டை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் பல்வேறு பணிகள் நடக்கின்றன. இந்த பணிகள் 70 முதல் 90 சதவீதம் வரை நிறைவு பெற்றுள்ளன.

    • புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
    • சென்னை தி.நகரில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மகனுக்கு சொந்தமான அலுவலகம் உள்ளது

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம். இவர் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஆவார். கடந்த சட்டசபை தேர்தலில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார்.

    கடந்த 2011 முதல் 2016-ம் ஆண்டு காலக்கட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

    சென்னை பெருங்களத்தூரில் தனியாருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனம் 57.94 ஏக்கர் நிலத்தில் 24 பிளாக்குகளாக 1,453 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கு திட்ட அனுமதி கேட்டு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் கடந்த 2013-ம் ஆண்டு விண்ணப்பித்தது. ஆனால் அந்த திட்டத்துக்கு 3 ஆண்டுகளாக அனுமதி வழங்காத நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு திடீரென அனுமதி வழங்கப்பட்டது. அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு திட்ட அனுமதி வழங்கியதற்கு அப்போது அமைச்சராக இருந்த வைத்திலிங்கத்துக்கு ரூ.27.90 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாக, அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டது.

    அதில், லஞ்ச பணம் வைத்திலிங்கத்தின் மகன்கள் பிரபு, சண்முகபிரபு ஆகியோர் இயக்குனர்களாக இருக்கும் நிறுவனத்துக்கு கடனாக வழங்கப்பட்டது போல கணக்கு காட்டப்பட்டுள்ளது. அந்த பணத்தில் வைத்திலிங்கமும், அவரது மகன்களும் திருச்சியில் உள்ள பாப்பாக்குறிச்சியில் ரூ.24 கோடி மதிப்புள்ள 4.5 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளனர் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினார்கள். முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அவரது மகன்கள் பிரபு, சண்முகபிரபு, தனியார் நிறுவனங்களை சேர்ந்த பன்னீர்செல்வம், ரமேஷ் உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்பட 11 பேரிடமும் லஞ்ச ஒழிப்பு துறையினர் விரைவில் விசாரணை நடத்த உள்ளனர்.

    இந்த நிலையில் அமலாக்கத்துறையினர் இன்று, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்ளிட்ட 11 பேர் மீதும் அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை பதிவு செய்திருந்தது.

    இதையடுத்து இன்று காலையில் இருந்தே அமலாக்கத்துறை அதிகாரிகள் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினார்கள். சென்னை, ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முற்றுகையிட்டு சோதனையில் ஈடுபட்டனர்.

    சென்னையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் வைத்திலிங்கம் அறையில் சோதனை நடத்துவதற்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலையிலேயே விரைந்தனர். அங்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் 6 பேர் சோதனையில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உறந்தைராயன் குடிகாடு பகுதியில் உள்ள வைத்திலிங்கம் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலையில் இருந்தே சோதனையில் ஈடுபட்டனர். இன்று காலை 6 மணிக்கு அங்கு 11 அதிகாரிகள் கொண்ட குழுவினர் வந்தனர். அவர்கள் வைத்திலிங்கம் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    சென்னை தி.நகரில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மகனுக்கு சொந்தமான அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்திலும் இன்று காலையில் இருந்தே அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    மேலும் சென்னை ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி சாலையில் உள்ள தனியார் நிதி நிறுவன அலுவலகம், கோடம்பாக்கத்தில் உள்ள நிதி நிறுவன ஊழியரின் வீடு, திருவேற்காடு பகுதியில் உள்ள கட்டுமான நிறுவன ஊழியரின் வீடு ஆகிய இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது. அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

    • தாம்பரம்-கன்னியாகுமரி, கொச்சுவேலி-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
    • சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்றுகாலை தொடங்கவுள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சென்னை சென்ட்ரல்-கன்னியாகுமரி, சென்ட்ரல்-செங்கோட்டை, சென்ட்ரல்-மங்களூரு, தாம்பரம்-கன்னியாகுமரி, கொச்சுவேலி-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    * சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 29 மற்றும் நவம்பர் 5 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்.06001), மறுநாள் மதியம் 12.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து வரும் 30 மற்றும் நவம்பர் 6 ஆகிய தேதிகளில் மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06002), மறுநாள் காலை 3.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த ரெயில் சென்னை எழும்பூரில் நிறுத்தப்படும்.

    * சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 30 மற்றும் நவம்பர் 6 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு புறப்படும் செங்கோட்டை சிறப்பு ரெயில் (06005), மறுநாள் காலை 9.20 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமாா்க்கமாக, செங்கோட்டையில் இருந்து வரும் 31 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் இரவு 7.30 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரெயில் (06006), மறுநாள் காலை 9.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

    * சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் நவம்பர் 2-ந் தேதி இரவு 11.50 மணிக்கு புறப்படும் கர்நாடக மாநிலம் மங்களூரு சிறப்பு ரெயில் (06037), மறுநாள் மாலை 4 மணிக்கு மங்களூரு சென்றடையும். மறுமார்க்கமாக, மங்களூருவில் இருந்து வரும் நவம்பர் 3-ந் தேதி மாலை 6 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரெயில் (06038), மறுநாள் காலை 11.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

    * தாம்பரத்தில் இருந்து வரும் 29 மற்றும் நவம்பர் 5, 12 ஆகிய தேதிகளில் இரவு 12.35 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி சிறப்பு ரெயில் (060499), அதேநாள் மதியம் 12.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து வரும் 29 மற்றும் நவம்பர் 5, 12 ஆகிய தேதிகளில் மாலை 3.35 மணிக்கு புறப்படும் தாம்பரம் சிறப்பு ரெயில் (060509, மறுநாள் காலை 4.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    * கேரள மாநிலம் கொச்சுவேலியிலிருந்து வரும் நவம்பர் 4-ந் தேதி மாலை 6.05 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு, திருப்பூர், ஈரோடு, கோவை, சேலம் வழியாக பெங்களூரு செல்லும் சிறப்பு ரெயில் (06039), மறுநாள் காலை 10.55 மணிக்கு பெங்களூரு சென்றடையும். மறுமார்க்கமாக, பெங்களூருவில் இருந்து வரும் நவம்பர் 5-ந் தேதி மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு அதே வழித்தடத்தில் கொச்சுவேலி செல்லும் சிறப்பு ரெயில் (06040), மறுநாள் காலை 5 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்.

    இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (23-ந் தேதி) காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒரே நாடு ஒரே தேர்தலால் மாநில சுயாட்சி பறிக்கப்படும்.
    • திமுக கூட்டணி அதிமுக கூட்டணி போல் அடிமை கூட்டணி இல்லை.

    மதுரை:

    மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் 2025-ம் ஆண்டு ஏப்ரல் 2 முதல் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் மோசமான நடவடிக்கைகளை எதிர்த்து நாடு தழுவிய கண்டன இயக்கத்தை ஒரு வாரம் நடத்த உள்ளோம். ஒரே நாடு ஒரே தேர்தலால் மாநில சுயாட்சி பறிக்கப்படும்; கூட்டாட்சி தத்துவம் சிதைக்கப்படும்.

    கவர்னர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் முடிந்த பின்பும் மத்திய அரசு இன்னும் புதிய கவர்னரை நியமிக்கவில்லை; மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் நபரை மத்திய அரசு கவர்னராக நியமிக்க வேண்டும். சிபிஎம்ஐ பொறுத்தவரை கவர்னர் பதவி தேவை இல்லை. தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    திமுக கூட்டணி அதிமுக கூட்டணி போல் அடிமை கூட்டணி இல்லை. அதிமுக பாஜக கூட்டணியின்போது தமிழ்நாட்டின் உரிமைகளை எடப்பாடி பழனிசாமி காவு கொடுத்தார். எடப்பாடி பழனிசாமி கூறுவது போல திமுக கூட்டணியில் குழப்பம் எதுவுமில்லை, கோரிக்கையை நிறைவேற்ற சொல்வதில் என்ன குழப்பம். மத்திய அரசை எதிர்த்து உறுதியாக போராடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மழை நீரை அகற்றும் பணியில் கோவில் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.

    தென்காசி:

    வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

    இது புயலாக மாறுவதால் இதற்கு 'டானா' புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த டானா புயல் வடக்கு மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து சென்று ஒடிசா மாநிலம் பூரி-மேற்குவங்க மாநிலம் சாகர் தீவுகளுக்கு இடையே நாளை நள்ளிரவு தீவிர புயலாகி மாறி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால், சங்கரநாராயண சுவாமி கோவிலுக்குள் மழை நீர் புகுந்தது.

    மழை நீரை அகற்றும் பணியில் கோவில் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    சங்கரன்கோவில், சிவகிரி, வாசுதேவநல்லூர், சேர்ந்தமரம், வீரசிகாமணி, புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.

    • தமிழகத்தில் ஓருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.
    • கனமழை காரணமாக குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது.

    கோவை:

    வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

    இது புயலாக மாறுவதால் இதற்கு 'டானா' புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த டானா புயல் வடக்கு மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து சென்று ஒடிசா மாநிலம் பூரி-மேற்குவங்க மாநிலம் சாகர் தீவுகளுக்கு இடையே தீவிர புயலாகி மாறி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். அதேபோல், கனமழையால் ஒன்னிபாளையம் செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே பாலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் கார்கள் அடித்து செல்லப்பட்டன.

    • கடந்த 17-ந்தேதி ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
    • புதிய பாலத்தை சரக்கு ரெயில் கடந்து சென்றது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கடலுக்குள் சுமார் 2 கி.மீ. தூரம் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் மையப் பகுதியில் 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான திறந்து மூடும் தூக்குப்பாலம் உள்ளது.


    இந்த நிலையில், புதிய பாம்பன் பாலத்தில் கடந்த 17-ந்தேதி ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. மண்டபம் முதல் ராமேஸ்வரம் வரை 14 பெட்டிகளுடன் சரக்கு ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அப்போது 90 கி.மீ. வேகத்தில் புதிய பாலத்தை சரக்கு ரெயில் கடந்து சென்றது.

    இந்த நிலையில், புதிய பாம்பன் பாலத்தில் நடைபெற்று வரும் பணிகளை தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.எம்.சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த புதிய பாலத்தில் வரும் நவம்பர் மாதத்திற்குள், மண்டபத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


    ×