நீர்பிடிப்பு பகுதியில் மழை- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக அதிகரிப்பு

கடந்த ஒரு வாரமாக பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. குண்டேரிப்பள்ளம், வரட்டுப்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
நீர்பிடிப்பு பகுதியில் மழை- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக அதிகரிப்பு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட ங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணையில் இருந்து தொடர்ந்து நீர்வரத்தை விட பாசனத்திற்காக அதிக அளவு நீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் சரிய தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90.09 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 7,222 கன அடியாக நீர் வருகிறது.

கீழ்பவானி வாய்க்கால் பாசனம், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனம், காலிங்கராயன் வாய்க்கால் பாசனம் போன்ற பாசனங்களுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதுபோல் குடிநீருக்காக பவானி ஆற்றுக்கும் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக மாவட்டத்திலுள்ள அணைகளின் நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குண்டேரிப்பள்ளம், வரட்டுப்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

இன்று காலை நிலவரப்படி குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 41.75 அடி யில் நீடிக்கிறது. இதேபோல் வரட்டுப்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 33.50 அடியில் தொடர்ந்து நீடிக்கிறது. 30 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.65 அடியை நெருங்கியுள்ளது.

தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com