என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பிளாட்பாரம் வழியாக ரெயிலில் ஏறாமல் தண்டவாளப் பகுதியில் இருந்து செந்தில் குமார் ஏறினார்.
- செந்தில் குமார் ரெயில் சக்கரத்தில் சிக்கியதால் அவருடைய கால்கள் துண்டானது.
வேலூர்:
சென்னை அண்ணாநகர் போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 54). இவர் சென்னையில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
வேலூர் காட்பாடி வந்திருந்த இவர் இன்று அதிகாலை மங்களூர் எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு செல்வதற்காக வந்தார்.
2-வது நடைமேடையில் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து நின்றது. பிளாட்பாரம் வழியாக ரெயிலில் ஏறாமல் தண்டவாளப் பகுதியில் இருந்து செந்தில் குமார் ஏறினார்.
அப்போது ரெயில் திடீரென புறப்பட்டது. இதில் நிலை தடுமாறி செந்தில்குமார் கீழே விழுந்தார். அவர் ரெயில் சக்கரத்தில் சிக்கியதால் அவருடைய கால்கள் துண்டானது.
ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனைக் கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
காட்பாடி ரெயில்வே போலீசார் செந்தில்குமார் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் அடையாள அட்டை மூலம் இறந்தவர் செந்தில்குமார் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.
அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய வருகின்றனர்.
இந்த சம்பவம் இன்று காலை காட்பாடி ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
- இன்று அதிகாலை சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்தது.
கன்னியாகுமரி:
தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று முதல் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. வாரத்தின் கடைசி விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் தீபாவளி பண்டிகையையொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாலும் இந்த 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக நேற்று முதல் கன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இன்றும் கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
குறிப்பாக கேரளா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மழைமேகம் காரணமாக தெரியாமல் இருந்த சூரியன் உதயமாகும் காட்சி 3 நாட்களுக்கு பிறகு இன்று அதிகாலை சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்தது.
அதனை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்தனர். அதேபோல விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர்.
வழக்கம்போல் இன்று காலை 8 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.
இதைத்தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்துநின்று படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு திரும்பினர்.
133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் மண்டபத்துக்கும் இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடக்கவில்லை.
இதனால் சுற்றுலாப் பயணிகள் திருவள்ளுவர் சிலையை பார்வையிட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
இதனால் திருவள்ளுவர் சிலையை படகில் பயணம் செய்யும் போதும் கடற்கரையில் நின்ற படியும் சுற்றுலா பயணிகள் தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்துச்செல்கின்றனர்.
மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக பெருஞ்சுவர், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா, மருந்துவாழ் மலை, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி இயக்கப்படவில்லை. சுற்றுலாப் பயணிகள் வருகை "திடீர்" என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- ஊருக்கு செல்பவர்கள் முதலில் பயணிக்க விரும்புவது ரெயிலில் தான்.
- ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட் முன்பதிவு கால அவகாசம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை, கோவை உள்பட பெரு நகரங்களில் தங்கியிருக்கும் பெரும்பாலானோர் தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை உள்ளிட்ட விசேஷ நாட்களுக்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அவ்வாறு செல்பவர்கள் முதலில் பயணிக்க விரும்புவது ரெயிலில் தான். இதற்காக ரெயிலில் முன்பதிவு செய்து விடுவார்கள்.
இப்படி ஊருக்கு செல்வதற்கு ரெயிலில் முன்பதிவு செய்ய வேண்டும் என்றால் 120 நாட்களுக்கு முன்பே அதாவது 4 மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்து இருக்க வேண்டும். அப்படி செய்தால் தான் பயணிக்க முடியும் நிலை இருந்தது. பயணிகளும் 4 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து, பயணித்து வந்தனர்.
ரெயில் பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது.
இந்த நடைமுறை நவம்பர் 1-ந்தேதியான இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என ரெயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.
- நாங்க கேட்குற டிமாண்ட்-லாம் பேசி, நிபந்தனையெல்லாம் உத்தரவாதப்படுத்தி அதுக்கப்பறம் அறிவித்தால் வெற்றிக்கரமாக நடத்த முடியும்.
- அதிமுக போன்ற கட்சிகள் முன்கூட்டியே சொன்னால் கூட அதுக்கு மதிப்பு இருக்கு.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தி முடித்துள்ளார்.
த.வெ.க. மாநாட்டில் கூடிய இளைஞர்கள் கூட்டம் தமிழகத்தின் அரசியல் கட்சிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. மாநாட்டில் பேசிய விஜய் கூட்டணியை வரவேற்று அதிகாரத்தில் பங்கு தரப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழக அரசியல் கட்சிகள் இடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் பலரும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற விஷயத்தை விஜய் அவசரப்பட்டு அறிவித்திருக்க வேண்டாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது:- உதாரணத்திற்கு விசிக, தவெக-வுடன் இணைவது என்றால் அதை நான் தான் ப்ரோபோஸ் பண்ணணும். அது டிமாண்ட். நாங்கள் உங்களுடன் வருவது என்றால் எத்தனை இடங்களை தருவீர்கள், என்ன மாதிரியான அதிகாரத்தை பகிர்ந்த கொள்ள முடியும். அப்போ நான் கேட்கலாம். எனக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுங்க. 4 பேருக்கு நல்ல அதிகாரம் உள்ள பதவி கொடுங்க. எங்களுக்கு 25 இடமாவது தாங்க. இதெல்லாம் தான் டிமாண்ட். நாங்க கேட்குற டிமாண்ட்-லாம் பேசி, நிபந்தனையெல்லாம் உத்தரவாதப்படுத்தி அதுக்கப்பறம் அறிவித்தால் வெற்றிக்கரமாக நடத்த முடியும்.
அடுத்து, ஏற்கனவே 25 சதவீத ஓட்டை வைத்துக்கொண்டு இருக்கும் அதிமுக போன்ற கட்சிகள் முன்கூட்டியே சொன்னால் கூட அதுக்கு மதிப்பு இருக்கு. விஜய் பூஜ்ஜியத்தில் இருந்து தான் தொடங்கணும். அவர் இன்னும் களத்தில் வரலை. இதில் என்ன தெரிகிறது என்றால் நாம் ஆட்சிக்கு வரபோறதில்லை. சும்மா சொல்லிவைப்போம். சலசலப்பை ஏற்படுத்துவதற்கான அறிவிப்பு. அவரே சொல்றாரு தனியா ஜெயிப்போம்... ஆட்சிக்கு வருவோம் என்கிறார். அது அவருடைய நம்பிக்கை. அந்த நம்பிக்கையை வாழ்த்தணும். மக்கள் தான் அதை முடிவு பண்ணப்போறாங்க. ஓபன் அஜண்டாவை சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலம் இருக்கும் போதே முன் கூட்டியே அறிவிக்கும்போது சுமார் 75 வருட அரசிய களத்தில் அனுபவம் பெற்ற அதிமுக, திமுகவும் எப்படி டீல் பண்ணும், கலைச்சி விடணும்-ங்கறது தெரியும்ல... என்றார்.
- மாமன்னன் ராஜராஜசோழனின் 1039-வது சதய விழா வரும் 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெறுகிறது.
- விழாவில் சதய நட்சத்திர நாளான 10-ம் தேதி ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவிக்கப்படும்.
தஞ்சாவூா்:
உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்தநாளை, அவர் பிறந்த நட்சத்திரமான ஐப்பசி சதய நாளன்று சதயவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு முதல் அரசு விழாவாக சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு மாமன்னன் ராஜராஜசோழனின் 1039-வது சதய விழா வரும் 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெறுகிறது.
இதனையொட்டி, பெரியகோவிலில் இன்று காலை பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பந்தக்காலுக்கு பால், மஞ்சள், தயிர், திரவிய பொடி உள்பட பல்வேறு வகையான மங்களப்பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு பந்தக்கால் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சதய விழாக் குழுத் தலைவர் செல்வம், துணைத்தலைவர் மேத்தா, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் மாதவன், தமிழர் வெற்றி பேரவை செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் சதய நட்சத்திர நாளான 10-ம் தேதி ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவிக்கப்படும். மேலும் பல்வேறு கட்சி, இயக்கம், அமைப்புகள் சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
இந்த 2 நாள் விழாவில் பட்டிமன்றம், நாட்டிய நாடகம், திருமுறை அரங்கம், கருத்தரங்கம், கவியரங்கம், நாட்டிய நிகழ்ச்சி உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், பெருவுடையார், பெரியநாயகிக்கு சிறப்புப் பூஜைகளும், அலங்காரமும் நடைபெறவுள்ளன.
- 29-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது.
- மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் உள்ளன. இங்கு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். பண்டிகை காலங்களில் அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
இந்தநிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பனியன் நிறுவனங்கள் கடந்த 29-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது.
இதன் காரணமாக பனியன் நிறுவன தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதனால் பரபரப்பாக காணப்படும் திருப்பூர் மாநகரம் தற்போது அதிக மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

குறிப்பாக ஆடை விற்பனைக்கு பெயர் போன இடமான காதர்பேட்டையில் 1000-க்கும் மேற்பட்ட சில்லரை மற்றும் மொத்த ஆடை விற்பனை கடைகள் உள்ளன. இந்த கடைகள் தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக மூடப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் நடமாட்டம் குறைந்ததால் குமரன் ரோடு, பல்லடம் ரோடு பி.என்.ரோடு போன்ற முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்தும் பெருமளவில் குறைந்து ள்ளது.
அதேபோல் சொந்த ஊருக்கு செல்லும் தொழி லாளர்கள் தங்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலைய வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு ஊருக்கு செல்வது வழக்கம்.
தற்போது தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்ற தொழி லாளர்கள் தங்கள் வாகனங்களை வாகன நிறுத்து மிடங்களில் நிறுத்திவிட்டு சென்றுள்ளனர்.

இதன்காரணமாக வாகன நிறுத்தங்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களால் நிரம்பி வழிகிறது. பண்டிகை முடிந்து தொழிலாளர்கள் திரும்பும்போதுதான் வாகன நிறுத்தங்களில் இருந்து வாகனங்கள் எண்ணிக்கை குறையும்.
திருப்பூரில் இருந்து சொந்த ஊர் சென்ற தொழிலாளர்கள் 1.50 லட்சம் பேர் இன்னும் 10 நாட்களுக்கு பிறகே திருப்பூர் திரும்புவார்கள். அதன்பிறகே திருப்பூர் மாநகரம் மீண்டும் பரபரப்பாக இயங்கத் தொடங்கும்.
- பசுமை பட்டாசுகள் அதிகளவில் தற்போது விற்பனை செய்தாலும் கூட காற்று மாசும் அதிகளவில் ஏற்பட்டுள்ளது.
- பெருங்குடியில் பஸ் டெப்போ 230 மற்றும் வேளச்சேரி குடியிருப்பு பகுதியில் 226 ஆகவும் பதிவானது.
சென்னை:
தீபாவளி கொண்டாட்டத்தின் உச்சகட்ட மகிழ்ச்சி பட்டாசு வெடித்து பரவசம் அடைவது. சென்னையில் இந்த ஆண்டு வழக்கத்தை விட பட்டாசு அதிகளவில் விற்பனை ஆகியது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலமாக பட்டாசு வெடித்து மகிழ்ந்ததில் சென்னை மாநகரம் புகை மண்டலமாக நேற்றிரவு காட்சி அளித்தது.
பசுமை பட்டாசுகள் அதிகளவில் தற்போது விற்பனை செய்தாலும் கூட காற்று மாசும் அதிகளவில் ஏற்பட்டுள்ளது. வானத்திற்கு சீறிப்பாய்ந்து. சென்று அழகிய பூக்கள், நட்சத்திரங்கள் போன்று வெடித்து சிதறும் பட்டாசுகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டன. 10 நிமிடம், 20 நிமிடம் வெடிக்கக்கூடிய அதிரடி வெடிகள் புகையை கக்கின. சரவெடிகள் நகரின் பல பகுதிகளிலும் வெடித்ததில் புகை மண்டலமானது. இதனால் பகலிலும், இரவிலும் பட்டாசு புகை வானில் பரவலாக சூழ்ந்தது.
பட்டாசு வெடித்ததில் அதிகளவில் மாசு ஏற்பட்ட பகுதியாக பெருங்குடி பதிவாகி உள்ளது. காற்றின் தரக்குறியீடு ஆலந்தூரில் 246 ஆகவும், அடுத்ததாக பெருங்குடியில் பஸ் டெப்போ 230 மற்றும் வேளச்சேரி குடியிருப்பு பகுதியில் 226 ஆகவும் பதிவானது.
சென்னையில் இந்த 3 இடங்களில் காற்று மாசு அதிகளவில் இருந்துள்ளது. அரும்பாக்கம் 163, மணலி 113, கொடுங்கையூர் 107, மணலியில் 133, ராயபுரம் 74 ஆக பதிவாகி உள்ளது.
சென்னை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தனது இணையதளத்தில் இதனை தெரிவித்துள்ளது.
- தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.
- வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர் பகுதியில் இன்று அதிகாலை பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.
இந்தநிலையில் திருப்பூர் காங்கேயம்பாளையம் ஏ.டி. காலனி பகுதியை சேர்ந்த பனியன் தொழிலாளியான குமார் என்பவர் வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. அதிகாலை நேரம் என்பதால் வீட்டி ற்குள் குமார் மற்றும் அவரது மனைவி சசிகலா, மகன் கிஷோர், மகள் கீர்த்தனா ஆகியோர் தூங்கி கொண்டிருந்தனர்.

வீடு இடிந்ததால் இடிபாடுகளுக்கிடையே சிக்கி காயமடைந்து போராடினர். அவர்களின் சத்தத்தை கேட்டு அதிர்ச்சி யடைந்த அக்கம்பக்கத்தினர் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்று 4பேரையும் மீட்டனர். பின்னர் காய மடைந்த அவர்களை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்ப த்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 40 வீடுகளை சூழ்ந்த தண்ணீர்

மேலும் பலத்த மழை காரணமாக திருப்பூர் மங்களம் சாலை கே. வி .ஆர். நகர் , தந்தை பெரியார் நகர் பகுதியில் தாழ்வான பகுதியில் இருந்த 40க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதில் வீட்டின் கீழ் பகுதியில் வைக்கப்பட்டிருந்த மளிகை பொருட்கள், பீரோ உள்ளிட்ட பொருட்கள் தண்ணீரில் சேதம் அடைந்தது.
வீட்டிற்குள் புகுந்த மழை நீரை பொதுமக்களே அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அப்பகுதி கவுன்சிலர் அன்பகம் திருப்பதி மற்றும் விஏஓ.,ஆகியோர் பாதி க்கப்பட்ட பகுதியை நேரில் ஆய்வு செய்து தண்ணீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை பணிகளை மேற்கொண்டனர்.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு காலை உணவு வழங்கவும், மளிகை பொருட்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்க ப்பட்டது.
கோவை, திருப்பூரில் பெய்த மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வழக்கத்தை விட அதிக அளவு தண்ணீர் பெரு க்கெடுத்து ஓடுகிறது. தண்ணீர் பெருக்கெடுக்கும் வாய்ப்பு ஏற்பட்டால் கரை யோரம் வசிக்கும் மக்களை அருகில் உள்ள பள்ளிகளில் தங்க வைக்க அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-
திருப்பூர் வடக்கு-44, திருப்பூர் கலெக்டர் முகாம் அலுவலகம் -51.60, திருப்பூர் தெற்கு -48, கலெக்டர் அலுவலகம் -32, அவி னாசி-2, ஊத்துக்குளி-11, பல்லடம் -38, மூலனூர்-7, உப்பாறு அணை -4, காங்கயம்-1.80, உடுமலை -42, அமராவதி அணை -9, திருமூர்த்தி அணை -8, ஐ.பி.,-6, மடத்துக்குளம்-27. மாவட்டம் முழுவதும் மொத்தம் 331.40 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.
- தெற்கிலும் வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள்.
- எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளில் போற்றி வணங்குகிறேன்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தெற்கிலும் வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள், நவம்பர் 1!
தமிழர் வாழும், தமிழ் பேசப்படும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காகப் போராடிய அனைவரையும் எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளில் போற்றி வணங்குகிறேன்! என்று தெரிவித்துள்ளார்.
- சிறப்பு மின்சார ரெயில்களை சென்னை ரெயில்வே கோட்டம் இயக்க உள்ளது.
- பயணிகள் வசதிக்காக அதிகாலை 4 மணி முதல் காலை 6.20 வரை கூடுதலாக மின்சார ரெயில்கள்
சென்னை:
தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் 3-ந் தேதி சென்னைக்கு புறப்படுவார்கள்.
தென் மாவட்டங்கள் மற்றும் இதர பகுதியில் இருந்து புறப்பட்டு வரும் அரசு, தனியார் ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் நிறுத்தப்படுவதால் அங்கிருந்து சென்னையில் பல்வேறு இடங்களுக்கு செல்ல வசதியாக சிறப்பு மின்சார ரெயில்களை சென்னை ரெயில்வே கோட்டம் இயக்க உள்ளது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட நிலையங்களில் இருந்து 2 நாட்களில் 4 லட்சம் பேர் வெளியூர் சென்றுள்ளனர். இது தவிர அரசு பஸ்களிலும் லட்சக் கணக்கானவர்கள் சென்று இருப்பதால் 4-ந் தேதி அதிகாலையில் இருந்து மக்கள் சென்னைக்கு திரும்புவதால் காட்டாங்கொளத்தூர்-தாம்பரம் இடையே சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் வசதிக்காக அதிகாலை 4 மணி முதல் காலை 6.20 வரை கூடுதலாக மின்சார ரெயில்கள் இயக்கப்படும்.
4.30 மணி, 5 மணி, 5.45 மணி 6.20 மணிக்கு காட்டாங்கொளத் தூரில் இருந்து தாம்பரத்திற்கு புறப்படும் மின்சார ரெயில் பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், பெருங்களத்தூர் ஆகிய நிலையங்களில் இருந்து மின்சார ரெயில் நின்று செல்லும்... அதே போல தாம்பரத்தில் அதிகாலை 5.05 மணி மற்றும் 5.40 மணிக்கு இரண்டு சிறப்பு மின்சார ரெயில் காட்டாங்கொளத்தூருக்கு இயக்கப்பட உள்ளது.
- நேற்று வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் கழிவுகளை அகற்றும் பணியில் இன்று தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பட்டாசு குப்பைகள் குறைவாக உள்ளது.
தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பட்டாசு வெடித்து தீபாவளியை மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை முதல் இரவு வரை வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் கழிவுகளை அகற்றும் பணியில் இன்று தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள 15 மண்டலங்கள், 200 வார்டுகள் உள்ளன. 200 வார்டுகளிலும் பட்டாசு குப்பைகளை பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.

சென்னை மெரினா, பட்டினப்பாக்கம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் சுற்று வட்டார பகுதியில் உள்ள பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மைப்பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக தூய்மைப்பணியாளர் ஒருவர் கூறுகையில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பட்டாசு குப்பைகள் குறைவாக உள்ளது. திட, திரவ கழிவுகள், பட்டாசு குப்பைகள், கம்பிகள் என தரம் பிரித்து கொண்டு சேர்ப்போம். இந்த பகுதியில் காலையில் தெரு முழுவதும் குப்பைகள் அதிகமாக இருந்தது. இன்னும் 2 மணி நேரத்தில் திருவல்லிக்கேணி முழுவதும் சுத்தமாகி விடும் என்று தெரிவித்தார்.
- விபத்தில் காரை ஓட்டி வந்த லித்திஷ் மற்றும் நண்பர்கள் பலத்த காயம் அடைந்தனர்.
- தீபாவளி பண்டிகை நாளில் சின்னத்திரை நடிகர் மகன் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னத்திரை நடிகர் கார்த்திக். அவரது மகன் லித்திஷ் தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் லித்திஷ் தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு நேற்று மாலை தனது நண்பர்களுடன் ஓ.எம்.ஆரில் உள்ள விளையாட்டு திடலுக்கு விளையாட சென்றுள்ளார்.
அங்கு சென்றுவிட்டு நண்பர்களுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வேளச்சேரி பகுதியில் வந்து கொண்டிருந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் இருந்த தடுப்புச் சுவரில் மோதியது.
இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த லித்திஷ் மற்றும் நண்பர்கள் பலத்த காயம் அடைந்தனர். காயங்களுடன் சிக்கி தவித்தவர்களை பொதுமக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவமனையில் லித்திசை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
தீபாவளி பண்டிகை நாளில் சின்னத்திரை நடிகர் மகன் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






