என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஒருவரின் தனி உரிமையை மீறி ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்டால், விசாரணை நீதிமன்றம் அவற்றை ஏற்றுக் கொள்ளக் கூடாது.
    • தமிழகத்தில் இந்த வல்லுநா்கள் எந்த மாவட்டத்திலும் நியமிக்கப்படவில்லை.

    பரமக்குடியை சேர்ந்த பெண் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அம்மனுவில், எனக்கும், எனது கணவருக்கும் கடந்த 2003- ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில், எனது கணவர் விவாகரத்து கோரி பரமக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் எனது கைப்பேசியில் நான் யாரிடமெல்லாம் பேசினேன் என்ற ஆவணத்தை நீதிமன்றத்தில் அவா் ஒப்படைத்தார். இந்த ஆவணத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது என விசாரணை நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவர் மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற மதுரை நீதிபதி தான் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் மனைவி பயன்படுத்திய கைப்பேசி ஆவணங்களை பெற சம்பந்தப்பட்ட கைப்பேசி நிறுவனத்துக்கு இணையதளம் மூலம் கணவர் வேண்டுகோள் விடுக்க வேண்டும். அப்போது, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் எண் (ஓடிபி) வரும். இதைப் பயன்படுத்தி ஆவணங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

    ஆனால், இந்த வழக்கில் மனைவிக்குத் தெரியாமல் அவரது கைப்பேசியை எடுத்து ஓடிபி எண்ணைப் பெற்று ஆவணங்களை கணவர் பதிவிறக்கம் செய்துள்ளார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. திருமணம் என்பது ஒருவரையொருவா் நம்ப வேண்டும். ஒருவரது தனி உரிமையில் மற்றவர் தலையிடுவது முறையாக இருக்காது. தனது டைரியை கணவா் பார்க்கக் கூடாது என மனைவி நினைப்பது சரியே. இது கைபேசிக்கும் பொருந்தும்.

    ஒருவரின் தனி உரிமையை மீறி ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்டால், விசாரணை நீதிமன்றம் அவற்றை ஏற்றுக் கொள்ளக் கூடாது. இந்த வழக்கில் மனைவியின் மனுவைத் தள்ளுபடி செய்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பாரதிய சாக்சிய ஆதினிய சட்டப்படியும், தகவல் தொழில்நுட்ப சட்டப்படியும் மின்னணு தொடா்பான ஆவணங்களை சமா்ப்பிக்கும் போது வல்லுநா் சான்றளிக்க வேண்டும். இந்தச் சட்டம், கடந்த ஆண்டு அமலுக்கு வந்தது.

    ஆனால், தமிழகத்தில் இந்த வல்லுநா்கள் எந்த மாவட்டத்திலும் நியமிக்கப்படவில்லை. எனவே, அனைத்து மாவட்டங்களிலும் மின்னணு தொடா்பான ஆவணங்களை ஆய்வு செய்து சான்றளிக்க வல்லுநா்களை மூன்று மாதங்களில் நியமிக்க மத்திய தொழில்நுட்ப அமைச்சகச் செயலா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

    • நம்முடைய மாநிலம் நிலப்பரப்பு அளவில், தனி மாநிலமாக உருவெடுத்த தினமே நவம்பர் 1.
    • போராட்டம் நடத்திய எல்லைப் போராளிகளின் தியாகங்களையும் இன்னாளில் நினைவு கூருவோம்.

    தமிழ்நாடு நாள் முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    1956இல் மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்பட்டதன் மூலம், நம்முடைய மாநிலம் நிலப்பரப்பு அளவில், தனி மாநிலமாக உருவெடுத்த தினமே நவம்பர் 1.

    மதராஸ் மாகாணமாக இருந்த நமது மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி, தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிரும் துறந்தார். இதைத் தன் இதயத்தில் தாங்கிய, கனிவின் திருவுருவம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா, தான் ஆட்சிக்கு வந்ததும் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி, தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழர் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கப் போராட்டம் நடத்திய எல்லைப் போராளிகளின் தியாகங்களையும் இன்னாளில் நினைவு கூருவோம்.

    தியாகப் பெரும் பின்னணியில் தமிழர்களுக்கு என்று ஒரு தனி மாநிலம் பிறந்த இந்த நாளை (நவம்பர் 1) வரலாற்று நினைவுகளுடன் தமிழ்நாடு தினமாகப் போற்றி மகிழ்வோம்.

    இவ்வாறு அவர் கறிப்பிட்டுள்ளார்.

    • இரவு 8 மணிக்கு மேல் பட்டாசு கடை வைத்து பட்டாசு விற்பனை செய்தவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    • நீதிமன்ற உத்தரவை மீறி நேரம் கடந்து பட்டாசு வெடித்த 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    தருமபுரி;

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பட்டாசு வெடிக்க கால நிர்ணயம் வகுத்து உத்தரவிட்டது. காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 8 மணி வரையும் ஒதுக்கப்பட்டது.

    அதனை மீறி தருமபுரி மாவட்டத்தில் பட்டாசு வெடித்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதில் தருமபுரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தருமபுரி பஸ் நிலையம், ஆறுமுக ஆச்சாரி தெரு, முகமது அலி கிளப் ரோடு, தருமபுரி நான்கு ரோடு ஆகிய பகுதிகளில், பட்டாசு வெடித்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    அதேபோல் தொப்பூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட கோம்பை செல்லும் பாளையம்புதூர் ஜங்ஷன் செல்லும் வழியில் அதிக சத்தத்துடன் பட்டாசு வெடித்த ஒருவர் மீதும், மொரப்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மொரப்பூர் ரெயில் நிலையம் செல்லும் வழியில் இரவு 8 மணிக்கு மேல் பட்டாசு கடை வைத்து பட்டாசு விற்பனை செய்தவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    அதேபோல் பாப்பாரப்பட்டி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகிலும், பென்னாகரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பென்னாகரம் கடைவீதி பகுதியிலும், ஏரியூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஏரியூர் நிப்பான் பெயிண்ட் கடை அருகிலும், நீதிமன்ற உத்தரவை மீறி நேரம் கடந்து பட்டாசு வெடித்த 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த மாதம் 27-ந் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது.
    • விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் லட்சக்கணக்கான மக்கள் அந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த மாதம் 27-ந் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் லட்சக்கணக்கான மக்கள் அந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

    இதனையடுத்து மாநாட்டில் விஜய் பேசி கொண்டிருந்த போது, மேடை அருகில் இருந்த ரசிகர்கள் திடீரென "கடவுளே - அஜித்தே" என கோஷமிட ஆரமித்தனர். இதை சற்றும் எதிர்பாராத விஜய் உடனே பேச்சை நிறுத்தி விட்டு அமைதி அமைதி என்பது போல கையை அசைத்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சமீப காலங்களில் அஜித் ரசிகர்கள் கூடும் இடங்களில் "கடவுளே - அஜித்தே" என்று கூறி வருகின்றனர். 

    • மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவிக்கு வந்திருந்தனர்.
    • அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த வாரம் மழை வெளுத்து வாங்கிய நிலையில் கடந்த 2 நாட்களாக மழை குறைந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. தக்கலை, மாம்பழத்துறையாறு, ஆணை கிடங்கு பகுதியில் நேற்று மதியத்துக்கு பிறகு சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக கன மழை கொட்டி தீர்த்தது.

    தக்கலையில் அதிகபட்சமாக 85.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மயிலாடி, கன்னிமார், பூதப்பாண்டி, இரணியல், ஆணைக்கிடங்கு, குழித்துறை, சுருளோடு, முள்ளங்கினாவிளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தால் அங்கு ரம்மியமான சூழல் நிலவியது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் கனமழை கொட்டி தீர்த்தது.

    மலையோரப் பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. பேச்சிப்பாறை, சிற்றாறு-1, மாம்பழத்துறையாறு அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் கோதை ஆறு, குழித்துறை ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. கரையோர பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவிக்கு வந்திருந்தனர். அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42.71 அடியாக உள்ளது. அணைக்கு 404 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து மதகுகள் வழியாக 506 கன அடி தண்ணீரும், உபரிநீராக 492 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 67.16 அடியாக உள்ளது. அணைக்கு 422 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 510 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 14.04 அடியாக உள்ளது. அணைக்கு 66 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. இதையடுத்து அணையிலிருந்து 62 கன அடி உபரிநீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    மாவட்டம் முழுதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 7, பெருச்சாணி 23.6, சிற்றார் 1-9.6, சிற்றார் 2-3.8, மயிலாடி 5.2, பூதப்பாண்டி 8.2, முக்கடல் 39.2, பாலமோர் 14.4, தக்கலை 85.4, குளச்சல் 8, இரணியல் 24, அடையாமடை 61.6, குருந்தன்கோடு 6, கோழிப்போர்விளை 10.8, மாம்பழத்துறையாறு 83, ஆனைக்கிடங்கு 82.2, களியல் 5.8, குழித்துறை 8, சுருளோடு 7.2, புத்தன் அணை 22.2, திற்பரப்பு 47.2, முள்ளங்கினாவிளை 8.6. 

    • தமிழ்நாடு நாளாக கொண்டாடுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு 2019-ம் ஆண்டு அக்டோபர் 25-ந்தேதி அன்று வெளியிட்டது.
    • தமிழ்நாடு தினம் ஜூலை 18-ம் தேதி கொண்டாடப்படும் நிலையில் மொழி வாரியாக பிரிக்கப்பட்ட பொழுது நவம்பர் 1-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது.

    தமிழ்நாடு நாள் (Tamilnadu Day) என்பது தமிழருக்கென்று தனித் தாயகம் அல்லது மாநிலம் உருவான நாளைக் குறிப்பிடும் நாளாகும். இந்திய விடுதலைக்குப் பிறகு மொழிவழியில் மாநிலங்கள் பிரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவந்த நிலையில் அதை இந்திய ஒன்றிய அரசு ஏற்க மறுத்து வந்தது.

    ஆனால் இக்கோரிக்கை முதலில் ஆந்திர மக்களால் கடுமையாக முன்னெடுக்கப்பட்டது. கலவரங்களும் ஏற்பட்டன. இதனால் இந்திய ஒன்றிய அரசு வேறு வழியின்றி 1 நவம்பர் 1956-இல் இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாகப் பிரித்தது.

    இதன்படி, சென்னை மாநிலத்திலிருந்த மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசிய பகுதிகளைக் கொண்டு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், மைசூர் மாநிலங்கள் நிறுவப்பட்டன. சென்னை மாகாணத்தின் எஞ்சிய பகுதிகளும், திருவிதாங்கூரின் தமிழ் பகுதிகளும் இணைக்கப்பட்டு சென்னை மாகாணம் பிரிக்கப்பட்டது.

    சென்னை மாநிலத்தை மொழிவாரியாக பிரித்த நாளான நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு 2019-ம் ஆண்டு அக்டோபர் 25-ந்தேதி அன்று வெளியிட்டது.

    இந்நிலையில் 2021-ம் ஆண்டு புதியதாக பொறுபேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சென்னை மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்ற சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு நாள் விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்தது.

    ஆனால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாடு நாள் நவ.01 என்று வருட வருடம் சிறப்பாக பெருந்திரளான மக்களை கூட்டி நடத்தி வருகிறார்.

    தமிழ்நாடு தினம் ஜூலை 18-ம் தேதி கொண்டாடப்படும் நிலையில் மொழி வாரியாக பிரிக்கப்பட்ட பொழுது நவம்பர் 1-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆந்திர மாநிலத்தில் இருந்து தனி மாநிலமாக தெலுங்கானா மாநிலம் பிரிந்ததால் தெலுங்கானா மாநிலம் ஜூன் 2 ஆம் தேதி தனது மாநில தினத்தை கொண்டாடி வருகின்றது.

    • எங்களை பொறுத்தவரை கூட்டணி முடிவை எடுக்க வேண்டியது அகில இந்திய தலைமை தான்.
    • இந்தியா கூட்டணியில் எந்த சலனமும், சங்கடமும் இல்லை.

    சென்னை:

    சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்று மாலை முதல் நாளை மறுநாள் வரை வயநாட்டில் பிரியங்கா காந்தியை ஆதரித்து தமிழக காங்கிரஸ் சார்பில் வாக்கு சேகரிக்க உள்ளோம். இதில், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். தமிழ்நாட்டில் காங்கிரசின் கட்டமைப்பை வலுப்படுத்த வருகிற 5 ஆம் தேதி முதல் கிராம கமிட்டிகள் சீரமைப்பு பணிகள் தொடங்குகிறது.

    இந்த பணிகள் டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் முடிவையும். அதைத் தொடர்ந்து கிராம தரிசனம் என்ற பெயரில் கிராமங்கள் நோக்கி செல்கிறோம். எங்கள் தலைவர் கிராம மக்களுடன் தங்கி பணியாற்றுவார்கள். கட்சி வலிமையாக இருந்தால், கிராமங்களில் உயிரோட்டமாக இருந்தால் தான் பிற கட்சிகள் எங்களை தேடி வரும். தற்போது, ஆட்சியில் பங்கு, அதிகாரப்பகிர்வு எழுந்துள்ளது.

    இதை நாங்கள் வரவேற்கிறோம். எங்களை பொறுத்தவரை கூட்டணி முடிவை எடுக்க வேண்டியது அகில இந்திய தலைமை தான்.

    இப்போது நாங்கள் இந்தியா கூட்டணியில் இருக்கிறோம். 2006 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க ஆட்சி அமைப்பதற்கு, சோனியா காந்தி பெருந்தன்மையுடன் விட்டு கொடுத்தார்.

    எங்களை பொறுத்தவரை தொண்டர்களின் உணர்வுகளை கட்சி தலைமைக்கு கொண்டு செல்வோம். த.வெ.க தலைவர் விஜயின், அதிகார பகிர்வு பற்றி பேசியதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. விஜய் அரசியல் வருகை இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதற்கு மிகவும் லாபகரமாக இருக்கும். தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜர் கட்சி உருவாக்க வேண்டும் என்பதை நோக்கிதான் எங்கள் பயணம் இருக்கும். தமிழகத்தில் வருங்காலங்களில் ஆட்சியில் பங்கு அளிப்பது குறித்து மக்கள் தான் முடிவு செய்வார்கள்.

    இந்தியா கூட்டணியில் எந்த சலனமும், சங்கடமும் இல்லை. தமிழகத்தில் தை பிறந்தவுடன் காங்கிரஸ் கட்சிக்கு வழிபிறக்கும். ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை ஒன்றிய அரசு அமல்படுத்தினால் நாட்டில் புரட்சி ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது, காங்கிரஸ் துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன், பொதுச் செயலாளர்கள் எஸ்.ஏ.வாசு, அருள் பெத்தையா, பி.வி.தமிழ்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • பகலை விட இரவில் தான் பட்டாசு அதிகளவில் வெடிக்கப்பட்டன.
    • சென்னையில் 34 ஆயிரம் தெருக்கள் உள்ளன.

    சென்னை:

    சென்னையில் தீபாவளி கொண்டாட்டம் உற்சாகமாக நடந்து முடிந்தது. மழை பாதிப்பு இல்லாததால் பட்டாசு, துணிமணிகள், இனிப்பு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

    தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினாலும் பட்டாசு வெடிப்பதில் கட்டுப்பாடுகள் வழங்கப்பட்டிருந்தன. காலையிலும், மாலையிலும் 2 மணி நேரம் ஒதுக்கப்பட்டது. ஆனாலும் அதனை பின்பற்றவில்லை.

    நேற்று முன் தினத்தை விட நேற்று இரவு 7 மணியில் இருந்து பட்டாசு சத்தம் அதிரச் செய்தது. ஒவ்வொரு வரும் குடும்பம் குடும்பமாக வீதிகளுக்கு வந்து பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சி அடைந்தனர்.

    சிறுவர்கள் புத்தாடை அணிந்து விதவிதமான பட்டாசுகளை கொளுத்தி பரவசம் அடைந்தனர். வானில் வெடித்து சிதறி வண்ணமயமாக பூக்களாக சிதறும் பட்டாசுகள் இந்த ஆண்டு அதிகளவில் மக்கள் பயன்படுத்தினார்கள். பகலை விட இரவில் தான் பட்டாசு அதிகளவில் வெடிக்கப்பட்டன. சென்னை மாநகரம் முழுவதும் வெடித்து சிதறிய பட்டாசு கழிவுகள் வீதிகளில் மலைபோல் தேங்கின. ஒவ்வொரு வீடுகளின் முன்பு வெடித்த பட்டாசுகளை பெருக்கி குவித்து வைத்திருந்தனர்.

     

    சென்னையில் 34 ஆயிரம் தெருக்கள் உள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தெருக்களில் மக்கள் வெடித்த பட்டாசு குப்பைகளை அகற்ற மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் காலையிலேயே ஈடுபட்டனர். 5 ஆயிரம் பேர் குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டு வண்டியில் ஏற்றினர். தாங்கள் வழக்கமாக கொண்டு வரும் பேட்டரி வாகனம் உடனே நிரம்பி விட்டதால் அருகில் உள்ள மையங்களில் கொட்டி விட்டு மீண்டும் வந்து அள்ளினார்கள்.

    ஒவ்வொரு தெருக்களில் பட்டாசு குப்பைகள் மலை போல் தேங்கியதை ஊழியர்கள் அள்ள முடியாமல் திணறினார்கள். சென்னையில் வழக்கமாக 5500 மெட்ரிக் டன் குப்பைகள் வீடு களில் இருந்து சேகரிக்கப்படும். பட்டாசு வெடித்ததின் மூலம் கூடுதலாக 10 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் தேங்கியது. மொத்தம் 15 ஆயிரம் மெட்ரிக் டன்னுக்கு மேலாக குப்பைகள் குவிந்ததாக கூறப்படுகிறது. ஒவ்வொரு மண்டபத்திலும் எவ்வளவு குப்பைகள் சேகரிக்கப்பட்டன என்ற விவரம் முழுமையாக கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. குப்பைகள் அள்ளும் பணி பகல் 2 மணி வரை நடைபெற்றதால் முழு விவரம் தெரியவில்லை. பட்டாசு குப்பைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு கொடுங்கையூர், பெருங்குடி கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    • போலீசார் 150 கிலோ கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
    • தப்பியோடிய ராகுல் என்பவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    அறந்தாங்கி:

    தீபாவளி பண்டிகையையொட்டி காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அறந்தாங்கி புதுக்கோட்டை சாலையில் குரும்பூர் மேடு அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது.

    அப்போது சந்தேகத்திற்கிடமான காரை நிறுத்தி சோதனையிட்ட போது, அந்த காரில் 150 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரிய வந்துள்ளது.

    அதனை தொடர்ந்து 150 கிலோ கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்த காவல்துறையினர் காரில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்திருப்பதும்,அதனை இலங்கைக்கு கொண்டு செல்ல முயன்றிருப்பதும் தெரிய வந்தது.

    இதற்கிடையில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரில் ஒருவர் தப்பியோடி விட்டார். காரிலிருந்த நாகராஜ் (வயது 20), தவமுருகன் (வயது 26), ஸ்டாலின் (வயது 36) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் தப்பியோடிய ராகுல் என்பவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். பண்டிகை நேரத்தில் காரில் கடத்தி வரப்பட்ட 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தண்டவாளத்தின் நடுவே 10 கிலோ எடை கொண்ட பெரிய பாறாங்கல் வைக்கப்பட்டிருந்தது.
    • போலீசார் தண்டவாளங்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு தினமும் பொதிகை எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் தினமும் மாலை 6.30 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படுகிறது. பின்னர் கடையநல்லூர், பாம்புகோவில், ஸ்ரீவில்லி புத்தூர் வழியாக சென்னைக்கு சென்றடைகிறது.

    நேற்று மாலை வழக்கம்போல் செங்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது. 6.50 மணிக்கு கடையநல்லூர் ரெயில் நிலையத்திற்கு வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் அங்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் புறப்பட்டது.

    இந்த ரெயில் கடையநல்லூர்-பாம்புகோவில் ரெயில் நிலையங்களுக்கு இடையே போகநல்லூர் பகுதியில் சென்றபோது அங்கு தண்டவாளத்தின் நடுவே சுமார் 10 கிலோ எடை கொண்ட பெரிய அளவிலான பாறாங்கல் வைக்கப்பட்டிருந்தது.

    இதனைப்பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் சுதாரித்துக்கொண்டு ரெயிலை மெதுவாக இயக்கியவாறு அதனை நிறுத்தினார். தகவல் அறிந்ததும் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று தண்டவாளத்தில் இருந்த பாறாங்கற்களை அகற்றினர். பின்னர் மீண்டும் அங்கிருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது.

    ஏற்கனவே கடந்த மாதமும் சங்கனாப்பேரி பகுதியில் தண்டவாளத்தில் பாறாங்கல் வைக்கப்பட்ட சம்பவத்தில் வடமாநில தொழிலாளர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். 'ரீல்ஸ்' வீடியோ எடுப்பதற்காக அவர்கள் தண்டவாளத்தில் பாறாங்கல் வைத்தது தெரிய வந்தது.

    கடந்த ஒரு மாதமாக ரெயில்வே போலீசார் கடையநல்லூரில் இருந்து பாம்பு கோவில் சந்தை வரை தண்டவாளங்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    இந்நிலையில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னுக்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்கு சென்றனர். இந்த நிலையில் தான் நேற்று இந்த சம்பவம் நடந்துள்ளது.

    எனவே தண்டவாளத்தில் பாறாங்கல் வைத்து ரெயிலை கவிழ்க்க சதி நடந்ததா? என ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தது.
    • யானைகள் நள்ளிரவில் உலா வருவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

    வடவள்ளி:

    கோவை, மருதமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து உணவு தேடும் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.

    இந்தநிலையில் நேற்று நள்ளிரவு கோவை மருதமலை ஐ.ஓ.பி. காலனியில் யானை ஒன்று தனது குட்டியுடன் புகுந்தது. அங்குள்ள ஒரு வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தது. பின்னர் அங்கிருந்த அலங்கார தாவரங்களை ருசித்து சாப்பிட்டது.

    பின்னர் வீட்டின் மெயின் கதவை உடைத்து உள்பக்கமாக தும்பிக்கையை விட்டு உணவு தேடியது.

    சத்தம் கேட்டு அந்த வீட்டில் வசித்தவர்கள் அலறி அடித்து மாடிக்கு சென்று கதவை பூட்டிக் கொண்டனர். சிறிது நேரம் வாசலில் நின்ற யானைகள் உணவு எதுவும் கிடைக்காததால் அங்கிருந்து வெளியேறிச் சென்றன.

    யானைகள் வந்து சென்ற வீடியோக்கள் வீட்டில் இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தன. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    மருதமலை ஐ.ஓ.பி காலனி பகுதியில் அவ்வப்போது யானைகள் நள்ளிரவில் உலா வருவதால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு யானைகள் வருவதை தடுத்து, யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.
    • போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ள தால் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்தது.

    இந்நிலையில் இன்று காலையில் குற்றால மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தற்போது தீபாவளி விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மெயின் அருவி பகுதிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்து பாதுகாப்பு ஆர்ச்சை தாண்டி தண்ணீர் விழுந்து வரும் நிலையில் போலீசார் அருவிப் பகுதிகளில் கயிறுகள் கட்டி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பழைய குற்றால அருவியில் தண்ணீர் வரத்து சீரானதையடுத்து இன்று காலை முதல் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள தால் தீபாவளி விடுமுறையையொட்டி அருவிகளில் குளித்து மகிழ வந்த சுற்றுலாப் பயணிகள் பழைய குற்றால அருவியை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

    காலையில் மழை பொழிவு குறைந்து தண்ணீர் வரத்தும் மற்ற அருவிகளிலும் சீராகும் பட்சத்தில் அங்கும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    ×