என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • திருச்சி மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரிக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • சம்பந்தப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரியில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

    நாடு முழுவதும் விமானங்கள் மற்றும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் சோதனையிடும் போது அது புரளி என தெரியவருகிறது.

    இந்த நிலையில், திருச்சி மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரிக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருச்சியில் மகாத்மா காந்தி நூற்றாண்டு மேல்நிலைப்பள்ளி, ராஜாஜி வித்யாலயா, சந்தானம் வித்யாலயா, ராஜம் கிருஷ்ணமூர்த்தி மேல்நிலைப்பள்ளி மற்றும் ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    சம்பந்தப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரியில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். 

    • விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரியில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் விளையாட்டு உபகரணங்களை வழங்குகிறார்.
    • விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில் செஞ்சி வட்டத்தில் 60 பஞ்சாயத்துகளில் 70 விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகிறது.

    விழுப்புரம்:

    தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், பொதுமக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வரும் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்டம் வாரியாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    ஏற்கனவே கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு பணிகளை முடித்துள்ளார்.

    அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளின் நிலை குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாளை (புதன்கிழமை) ஆய்வு செய்கிறார். இதற்காக அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் சென்னையில் இருந்து காரில் புறப்படுகிறார்.

    மாலை 4 மணியளவில் விழுப்புரம் மாவட்டத்தின் எல்லையான ஓங்கூர் மற்றும் திண்டிவனம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொன்முடி, தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் பொன்.கவுதமசிகாமணி ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    இதையடுத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அங்கிருந்து திருவெண்ணெய்நல்லூர் செல்கிறார். அங்கு மரகதம் கந்தசாமி மண்டபத்தின் முன்பு புதியதாக நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 3 அடி உயரமுள்ள வெண்கல சிலையை திறந்து வைத்து பேசுகிறார்.

    அதன் பின்னர் விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரியில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் விளையாட்டு உபகரணங்களை வழங்குகிறார்.

    விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில் செஞ்சி வட்டத்தில் 60 பஞ்சாயத்துகளில் 70 விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகிறது.

    காணை வட்டத்தில் 50 பஞ்சாயத்துகளில் 60 விளையாட்டு உபகரணங்களும், கண்டமங்கலம் வட்டத்தில் 46 பஞ்சாயத்துகளில் 63 விளையாட்டு உபகரணங்களும், கோலியனூர் வட்டத்தில் 42 பஞ்சாயத்துகளில் 54 உபகரணங்களும் வழங்கப்படுகிறது.

    மேலும் மயிலம் வட்டத்தில் 47 பஞ்சாயத்துகளில் 58 விளையாட்டு உபகரணங்களும், மரக்காணம் வட்டத்தில் 56 பஞ்சாயத்துகளில் 66 விளையாட்டு உபகரணங்களும், மேல்மலையனூர் வட்டத்தில் 55 பஞ்சாயத்துகளில் 65 விளையாட்டு உபகரணங்களும், முகையூர் வட்டத்தில் 48 பஞ்சாயத்துகளில் 65 விளையாட்டு உபகரணங்களும், ஒலக்கூர் வட்டத்தில் 52 பஞ்சாயத்துகளில் 55 விளையாட்டு உபகரணங்களும், திருவெண்ணைநல்லூர் வட்டத்தில் 50 பஞ்சாயத்துகளில் 61 விளையாட்டு உபகரணங்களும், வல்லம் வட்டத்தில் 66 பஞ்சாயத்துகளில் 68 விளையாட்டு உபகரணங்களும், வானூர் வட்டத்தில் 65 பஞ்சாயத்துகளில் 76 விளையாட்டு உபகரணங்களும், விக்கிரவாண்டி வட்டத்தில் 51 பஞ்சாயத்துகளில் 62 விளையாட்டு உபகரணங்களும் என மொத்தம் 688 பஞ்சாயத்துகளில் 825 விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகிறது.

    இந்நிகழ்ச்சிகளை முடித்து விட்டு இரவில் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் தங்குகிறார்.

    இதையடுத்து நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணியளவில் விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் எம்.ஆர்.ஐ.சி. ஆர்.சி. பள்ளியின் எதிரே விழுப்புரம் சட்டமன்ற தொகுதி இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு விழா நூலகத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    அதனைத் தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசின் அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று, விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்துத்துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள், அதன் முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்கிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

    • 42 கோடி ரூபாய் செலவில் முடிச்சூரில் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
    • 120 பேருந்துகள் ஒரே நேரத்தில் நின்று செல்ல முடியும்.

    அரசு பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையம் சென்னை கோயம்பேட்டில் இயங்கி வந்தன. அரசு பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது. ஆம்னி பேருந்துகளுக்கு பிரத்யேகமாக முடிச்சூரில் 42 கோடி ரூபாய் செலவில் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு நீண்ட நாட்கள் ஆகியும் முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. கிளாம்பாக்கத்திற்குள் வந்துதான் ஆம்னி பேருந்துகள் செல்கின்றன. கோயம்பேட்டில் இருந்து புறப்பட்ட செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    ஆயுதபூஜை மற்றும் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் கிளாம்பாக்கத்தில் அரசு பேருந்து பயணிகள் மற்றும் ஆம்னி பேருந்து பயணிகள் குவிந்ததால் பேருந்து நிலையம் ஸ்தம்பித்தது. கடும் கூட்டல் நெரிசல் ஏற்பட்டது.

    இந்த நிலையில் 42 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டள்ள முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

    இங்கு 120 பேருந்துகள் ஒரே நேரத்தில் நின்று செல்லும் வகையில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் தங்குவதற்காக 2 Dormitory-கள், உணவகங்கள் என அனைத்து நவீன வசதிகளும் இடம் பெற்றுள்ளன. இது திறக்கப்பட்டபின் கிளாம்பாக்கத்தில் சற்று நெரிசல் குறையும் என அமைச்சர் சேகர்பாபு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    • கடந்த 3 நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனையானது.
    • வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) 31-ந் தேதி வரை விலை அதிகரித்து வந்தது. அன்றைய தினம் ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 455-க்கும், ஒரு பவுன் ரூ.59 ஆயிரத்து 640-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சமாக இது பார்க்கப்பட்டது.

    மேலும் விலை அதிகரித்து ரூ.60 ஆயிரத்தையும் தாண்டிவிடுமோ? என்று நினைத்த நேரத்தில், தங்கம் விலை குறைந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினமும் தங்கம் விலை குறைந்தது. ஒரு சவரன் தங்கம் ரூ.59 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

    இதைத்தொடர்ந்து கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனையானது.

    இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.58 ஆயிரத்து 840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.7,355-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.105-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    04-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,960

    03-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,960

    02-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,960

    01-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 59,080

    31-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 59,640

     கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    04-11-2024- ஒரு கிராம் ரூ. 106

    03-11-2024- ஒரு கிராம் ரூ. 106

    02-11-2024- ஒரு கிராம் ரூ. 106

    01-11-2024- ஒரு கிராம் ரூ. 106

    31-10-2024- ஒரு கிராம் ரூ. 109

    • யாரையும் தரக்குறைவாக விமர்சனம் செய்யக்கூடாது என்று தொண்டர்களுக்கு கண்டிப்புடன் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
    • ரஜினி-விஜய், விஜய்-அஜித் ரசிகர்கள் மோதல் என்பது குறைந்தபாடியில்லை.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள விஜய், அதே விறுவிறுப்புடன் கட்சியின் முதல் செயற்குழு கூட்டத்தையும் நடத்தி முடித்துள்ளார்.

    கன கச்சிதமாக அரசியலில் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கும் விஜய், அடுத்தக்கட்டமாக மக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்த இருக்கிறார். திரையுலகை தாண்டி, அரசியலுக்கு வந்துள்ள விஜய் அனைத்து தரப்பினரின் ஆதரவையும் தனதாக்கிக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில்தான், யாரையும் தரக்குறைவாக விமர்சனம் செய்யக்கூடாது என்று தொண்டர்களுக்கு கண்டிப்புடன் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

    நேற்று முன்தினம் நடந்த செயற்குழு கூட்டத்திலும் விஜய் இதை கண்டிப்புடன் வலியுறுத்தி இருக்கிறார். அரசியல் கட்சி தலைவர்களை மட்டுமல்ல, திரையுலகில் முன்னணியில் இருக்கும் ரஜினி, அஜித் உள்ளிட்டோர்களையும் எந்த வகையிலும் சமூக வலைத்தளத்தில் விமர்சனம் செய்யாதீர்கள் கூறியிருக்கிறார்.

    ரஜினி, அஜித் படங்கள் வெளியாகும்போது விஜய் ரசிகர்களும், விஜய் படங்கள் வெளியாகும்போது ரஜினி, அஜித் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் கருத்தியல் ரீதியாக மோதிக்கொள்வது வழக்கமான ஒன்று. வார்த்தை போரில் தெறிக்க விடுவார்கள்.

    திரைப்படங்கள் தொடர்பாக தனது ரசிகர்களுக்கும், அஜித் ரசிகர்களுக்கும் உள்ள மோதலை, அன்பு என்னும் புள்ளியில் இணைக்கும் வகையிலும், காலம், காலமாக நடந்து வரும் தல-தளபதி போட்டிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்தான், சமீபத்தில் கோட் படத்தில் அஜித் ரசிகர்களை மகிழ்ச்சி அடையும் வகையில் காட்சி ஒன்றும் அமைக்கப்பட்டது. அதேபோல் ரஜினிகாந்த் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தபோது, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நலம் பெற விழைகிறேன் என்று எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்.

    இருப்பினும் வலைத்தளத்தில் ரஜினி-விஜய், விஜய்-அஜித் ரசிகர்கள் மோதல் என்பது குறைந்தபாடியில்லை. இதற்கிடையில் அரசியல் சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் இருந்து வந்த நடிகர் ரஜினிகாந்திடம், விஜய் மாநாடு குறித்து கேட்கப்பட்டபோது, , விஜய் வெற்றிகரமாக மாநாட்டை நடத்தியிருக்கிறார், அவருக்கு என் வாழ்த்துகள் என்று தெரிவித்தார். இதை தனது கட்சி செயற்குழு கூட்டத்தில் விஜய் கூறி நெகிழ்ந்திருக்கிறார்.

    இதற்கிடையே திரையுலகில் தான் நிறைவாக ஒப்புக்கொண்டுள்ள எச்.வினோத் இயக்கும் படத்திற்கான படப்பிடிப்பில் விஜய் விரைவில் இணைய உள்ளார். இந்த படத்தின் மூலம் அனைத்து நடிகர்களையும் மனங்களையும் வெல்லும் அளவுக்கு காட்சி அமைப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அரசியலில் தனது பாதைக்கான முன்னோட்டமாக அந்த படம் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

    சினிமாத்துறையில் தனக்கு போட்டியாளர்களாக இருப்பவர்களின் ரசிகர்களை தன் அன்பு பிடியில் கொண்டு வருவதற்கான விஜய்யின் அரசியல் வியூகம், அரசியல் கணக்கு எந்த அளவுக்கு கைகூடும் என்பது போக, போகத்தான் தெரியும்.

    • கடந்த மாதம் 26-ந் தேதி இந்த ஆய்வுக்கூடத்தில் இருந்து ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது.
    • தீபாவளி விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது.

    சென்னை திருவொற்றியூர் கிராமத்தெருவில் தனியாருக்கு சொந்தமான விக்டரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 1500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளி கட்டிடத்தின் 3-வது தளத்தில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். அதற்கு எதிர் தளத்தில் ஆய்வுக்கூடமும் உள்ளது.

    கடந்த மாதம் 26-ந் தேதி இந்த ஆய்வுக்கூடத்தில் இருந்து ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் வகுப்பறையில் இருந்த 45 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தொண்டை எரிச்சல் ஏற்பட்டது. சில மாணவிகள் வாந்தி ஏற்பட்டு மயங்கி விழுந்ததால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    இதனால் கடந்த 1 வாரமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பள்ளியில் உள்ள ஆய்வுக்கூடத்தை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆனால் தற்போது வரை ஆய்வுக்கூடத்தில் ரசாயன வாயுகசிவு ஏற்பட்டுள்ளதை கண்டுபிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

    தீபாவளி விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது. ஆனால் ரசாயன வாயுகசிவு குறித்து மாவட்ட கல்வி துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறையிடமிருந்து எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகம் ஏதும் கூறவில்லை என்று கூறி பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் பள்ளியை முற்றுகையிட்டு பள்ளி நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் பள்ளியில் எதற்கெடுத்தாலும் அபராதம் விதிக்கின்றனர், கல்வி கட்டணம் அதிகம் வசூலிக்கின்றனர். பள்ளி வகுப்பறையில் காற்று வசதி இல்லை. போதிய கட்டமைப்பு இல்லை. விளையாட்டு மைதானம் கிடையாது. மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் அடிக்கின்றனர். பெற்றோர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஆசிரியர்கள் பதில் கூறுவதில்லை என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினர்.

    அப்போது திடீரென்று 9 மாணவிகள் மயக்கம் அடைந்தனர். மீண்டும் பள்ளியில் ரசாயன வாயு கசிவு ஏற்பட்டதால் மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர்கள் அலறி அடித்துக்கொண்டு தங்கள் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றனர். மயக்கம் ஏற்பட்ட மாணவிகளை ஆம்புலன்ஸ் மூலம் எல்லையம்மன் கோவில் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர், தாசில்தார் சகாயராணி, திருவொற்றியூர் மண்டல அதிகாரி புருஷோத்தமன், மருத்துவத்துறை அதிகாரிகள் உடனடியாக பள்ளிக்கு வந்தனர். மாநகராட்சி வடக்கு வட்டாரத் துணை கமிஷனர் ரவிகட்டா தேஜா அதிகாரிகளுடன் பள்ளியை ஆய்வு செய்தனர்.

    இந்நிலையில் தனியார் பள்ளியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொடர்ந்து இன்று 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

    காற்றில் இருக்கக்கூடிய நச்சுத்தன்மை, வாயுக்களின் தரம் அறியும் இயந்திரம் கொண்டு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சோதனை நடத்தி வருகிறது.

    • கோவைக்கு வரும் அவர் இன்றும், நாளையும் என 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
    • 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை வழங்குகிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நலத்திட்ட பணிகள் மக்களை முழுமையாக சென்றடைகிறதா? என மாவட்ட வாரியாக சென்று கள ஆய்வு செய்ய உள்ளார்.

    இந்த கள ஆய்வுப்பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று கோவையில் இருந்து தொடங்குகிறார். இதற்காக கோவைக்கு வரும் அவர் இன்றும், நாளையும் என 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். அவருக்கு, கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள்.

    காலை 11.30 மணிக்கு விளாங்குறிச்சியில் எல்காட் நிறுவனம் சார்பில் தகவல் தொழில் நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் ரூ.114.16 கோடி மதிப்பில் 8 தளங்களுடன் 3.94 ஏக்கரில் கட்டப்பட்ட புதிய தகவல் தொழிநுட்ப பூங்கா கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    பின்னர் மதியம் 12 மணிக்கு சுகுணா திருமண மண்டபத்தில் கள ஆய்வு பணியின் ஒரு அங்கமாக, முதலமைச்சர் முன்னெடுப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் நில எடுப்பில் இருந்து நிலங்கள் விடுவிக்கப்பட்டதற்கான ஆணைகளை அந்த நில உரிமையாளர்களுக்கு வழங்குகிறார்.

    இதைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு போத்தனூர் பி.வி.ஜி. திருமண மண்டபத்தில் நடைபெறும் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். அப்போது அவர், 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை வழங்குகிறார்.

    இரவு அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

    நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு கோவை சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்று வரும் செம்மொழி பூங்கா கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். இதையடுத்து அவர், திறந்தவெளி சிறைச்சாலையின் ஒரு பகுதியில் ரூ.300 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலக கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    அதைத்தொடர்ந்து அவர் மதியம் கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி கோவை மாவட்ட தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்து உள்ளனர். கலைஞர் நூலக அடிக்கல் நாட்டு விழாவில் தி.மு.க.வினர் மற்றும் பொது மக்கள் திரளாக பங்கேற்க உள்ளனர். இதற்காக பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    முதலமைச்சர் வருகையையொட்டி கோவையில் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இதற்காக உள்ளூர் போலீசார் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    • மோட்டார் சைக்கிளோடு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ, பெண் போலீஸ் நித்யா ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.
    • பலியான பெண் போலீஸ்காரர் நித்யாவின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் கொசவபட்டி கிராமம் ஆகும்.

    செங்கல்பட்டு:

    சென்னை புளியந்தோப்பு காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் ஜெயஸ்ரீ (வயது 38). இவர் ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட மாதவரம் பால் பண்ணை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவர் அதே போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்த நித்யா (33) என்பரை அழைத்து கொண்டு நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் மேல்மருவத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சிறுநாகலூர் என்ற இடத்தில் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, திருவண்ணாமலை நோக்கி அதிவேகமாக சென்ற கார் ஒன்று திடீரென இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளின் பின்னால் எதிர்பாராத வகையில் மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளோடு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ, பெண் போலீஸ் நித்யா ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஜெயஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த காரும் கவிழ்ந்து சாலையில் உருண்டது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்றவர்கள் மேல்மருவத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து காவலர் நித்யா, கார் டிரைவர் அன்பழகன் ஆகியோரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காவலர் நித்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

    திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அருகே உள்ள குள்ளக்குப்பம் கிராமத்தை சேர்ந்த அன்பழகன் அதிவேகமாக காரை ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்ததையடுத்து, அவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் பலியான சப்-இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீயின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் கூடல்புதூர் ஆகும். இவரது கணவர் ஜான். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 10-ம் வகுப்பு படிக்கும் விகாஷ் என்ற மகனும். 6-ம் வகுப்பு படித்து வரும் விக்க்ஷிதா என்ற மகளும் உள்ளனர்.

    பலியான பெண் போலீஸ்காரர் நித்யாவின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் கொசவபட்டி கிராமம் ஆகும். சப்-இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீயும், நித்யாவும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் இவர்கள் இருவரும் ஒரே இடத்தில் பணிபுரிந்து வந்ததால் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் விபத்தில் போலீஸ்காரர்கள் இருவரும் பலியான சம்பவம் போலீஸ் அதிகாரிகளிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தென்தமிழகம் மற்றும் அதனைஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    • இதன் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு என ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் விழுப்புரம், கடலூர், திண்டுக்கல், திருப்பூர் ஆகிய நான்கு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது.

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி

    தென்தமிழகம் மற்றும் அதனைஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என ஏற்கனவே வானிலை மையம் அறிவித்திருந்தது.

    8-ந்தேதி 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    8-ந்தேதி செங்கல்பட்டு, விழுப்புரும், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

    • கார்த்திகை தீபத் திருவிழா வருகிற டிசம்பர் மாதம் 1-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
    • தீபத்திருவிழாவின்போது கோவிலுக்குள் இதய மருத்துவர் உள்பட 5 மருத்துவ குழுவினர் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற உள்ள கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று மாலை கோவிலில் உள்ள உள்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில் இணை ஆணையர் ஜோதி வரவேற்றார்.

    இதில் இந்து சமய அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட அரசு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. துறைவாரியாக மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்து அலுவலர்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.


     

    கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தபோது எடுத்த படம்.

    கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தபோது எடுத்த படம்.



    பின்னர் அவர் கூறியதாவது:-

    கார்த்திகை தீபத் திருவிழா வருகிற டிசம்பர் மாதம் 1-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 4-ந் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சியும், 13-ந் தேதி பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. தீபத் திருவிழாவின்போது கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழாவின் போது சுமார் 35 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகள், அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை வசதிகள், உணவு வசதிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. திருவிழாவின்போது மாட வீதிகள் மற்றும் கிரிவல பாதையில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டங்களும், கள ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.

    கடந்த ஆண்டு மேற்கொண்ட சிரமங்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டு பக்தர்களுக்கு தேவையான விரிவான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும். பரணி தீபத்தின்போது கோவிலுக்குள் 7,050 பக்தர்களும், மகா தீபத்தின்போது 11,500 பக்தர்களும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் மலை ஏறுவதற்கு 2000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மலையேறும் பாதையில் மருத்துவ குழுவினர் மூலம் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அவர்கள் மலையேர அனுமதிக்கப்படுவார்கள். மகா தீபத்தன்று கோவிலில் தேவையான அளவு போலீசார் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

    தீபத்திருவிழாவின்போது கோவிலுக்குள் இதய மருத்துவர் உள்பட 5 மருத்துவ குழுவினர் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளனர். தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் மருத்துவ குழுவினரும் ஏற்பாடு செய்யப்படும். மேலும் கோவில் மற்றும் கிரிவலப்பாதை என ஒட்டுமொத்தமாக 85 மருத்துவ குழுவினர் தீபத்திருவிழாவின் போது பணியாற்ற உள்ளனர்.

    வருகிற 8-ந் தேதி அருணாசலேஸ்வரர் தேர் வெள்ளோட்டம் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    108 ஆம்புலன்ஸ் மற்றும் சுகாதார துறையினர் தயார் நிலையில் உள்ளனர். அன்றைய தினமும், தீபத் திருவிழாவின்போது பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெறும் அன்றும் மாட வீதியில் மின் இணைப்புகள் துண்டிக்கப்படும். தங்கும் விடுதிகளில் வழக்கமான கட்டணத்தை விட அதிகமாக கட்டணம் வசூலிக்கப்பட்டால் புகார் கொடுக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட விடுதியின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுகுறித்து விடுதி உரிமையாளர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு அவர்களுக்கு அறிவுரை வழங்கப்படும்.

    பரணி தீபத்தின்போது 500 ஆன்லைன் அனுமதி சீட்டும், மகாதீபத்தின் போது 1100 ஆன்லைன் அனுமதி சீட்டும் வழங்கப்பட உள்ளது.

    அவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மீனாட்சிசுந்தரம், ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அரசு அதிகாரிகள் அலட்சியமாக எதிர்கொள்வதே இது போன்ற மோசடிகள் அதிகரிக்க முக்கிய காரணம் என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
    • அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

    சென்னை:

    நூறு நாள் வேலைத் திட்டத்தில் போலியான கணக்குகளை காட்டி மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

    நூறு நாள் வேலைத்திட்டத்தின்கீழ் நடைபெற்ற மோசடிகள் குறித்து மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் தணிக்கைக் குழு நடத்திய ஆய்வின் படி 2023-24ம் நிதியாண்டில் நடைபெற்ற மொத்த மோசடியான 35 கோடி ரூபாயில், 34 கோடி ரூபாய் தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் மட்டுமே நடைபெற்றிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

    நூறு நாள் வேலைத்திட்டத்தில் இறந்தவர்கள், கிராமத்தில் இல்லாதவர்கள், வெளியூர் வாசிகள், வடமாநிலத்தவர்கள் என வேலைக்கு சம்பந்தமில்லாதவர்களின் பெயர்களை கணக்கு காட்டி மோசடி நடைபெறுவதாக அடிக்கடி ஏற்படும் புகார்களை அரசு அதிகாரிகள் அலட்சியமாக எதிர்கொள்வதே இது போன்ற மோசடிகள் அதிகரிக்க முக்கிய காரணம் என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    எனவே, நூறு நாள் வேலைத் திட்டத்தில் போலியான கணக்குகளை காட்டி மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனி வரும் காலங்களில் அத்திட்டத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்தி முறைகேடுகளை தவிர்ப்பதோடு தகுதியான பயனாளிகள் பயன்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • உணவுத்தளம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை இந்த படிப்பகம் உள்ளடக்கியுள்ளது.
    • ஒரே நேரத்தில் 51 பேர் படிக்கின்ற அளவுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை கொளத்தூர் தொகுதியில் ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 'முதல்வர் படைப்பகத்தை' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். படிப்பு தளம், பணியாற்றும் தளம் மற்றும் உணவுத்தளம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை இந்த படிப்பகம் உள்ளடக்கியுள்ளது. ஒரே நேரத்தில் 51 பேர் படிக்கின்ற அளவுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த நிலையில், இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

    "முதல்வர் படைப்பகம்"... பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்தாலும், வீட்டில் இருந்து பணிபுரிவதுபோல், அலுவலகங்களுக்கு வெளியே இருந்து பணிபுரியும் இளைஞர்களது வேலைக்கு ஏற்றாற்போல், வைபை (WiFi) உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய பகிர்ந்த பணியிட மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் தயாராகும் மாணவர்கள் கவனச் சிதறல்களின்றிப் பயில ஏதுவாகப் படிப்பகம் ஆகியவற்றைக் கொளத்தூர் தொகுதியில் உருவாக்கியுள்ளோம்.

    இதுபோன்ற மையங்களைச் சென்னையின் பிற தொகுதிகளிலும் உருவாக்கிட வேண்டும் என அமைச்சர்களிடமும் அதிகாரிகளிடமும் அறிவுறுத்தியுள்ளேன். இத்தகைய வாய்ப்புகளைச் சீரிய முறையில் இளைஞர்களும், மாணவர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; வாழ்வில் முன்னோக்கி நடைபோட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×