என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • குரூப்-2, 2 ஏ பணியிடங்களுக்கு 2327 பேரை தேர்வு செய்வதற்கு பதிலாக 2540 பேரை தேர்வு செய்ய டி.என்.பி.எஸ்.சி. முடிவு.
    • இதன் மூலம் கூடுதலாக 213 பேர் குரூப்-2, 2 ஏ பணியிடங்களில் சேருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலமாக குரூப்-2, 2ஏ பதவிகளுக்கு 2327 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான முதல் நிலை தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 14-ந்தேதி நடைபெற்றது. இதில் நேர்முக தேர்வு அடங்கிய 507 பணியிடங்களும், நேர்முக தேர்வு அல்லாத 1820 பணியிடங்களும் அடங்கும்.

    இந்த தேர்வை 5 லட்சத்து 81 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். இதில் தேர்ச்சி பெறுப வர்களுக்கு முதன்மை தேர்வு நடத்தப்பட்டு அரசுப் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

    இந்த தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவை எதிர்பார்த்து லட்சக்கணக்கானோர் காத்திருக்கிறார்கள்.

    இந்த நிலையில் குரூப்-2, 2 ஏ பணியிடங்களுக்கு 2327 பேரை தேர்வு செய்வதற்கு பதிலாக 2540 பேரை தேர்வு செய்ய டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர், சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர், உதவி பிரிவு அலுவலர், வனவர், முழு நேர விடுதி காப்பாளர், முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், இளநிலை கண்காணிப்பாளர், பேரூராட்சி செயல் அலுவலர்கள், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர், நேர்முக எழுத்தாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் குரூப்-2 தேர்வுகள் மூலமாகவே நிரப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • தகவலை அறிந்த அன்பழகன், உடனடியாக கடையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • பணம் கொடுப்பதில் ஏற்பட்ட தாமதத்திற்காக தொழிலதிபரை காரில் கும்பல் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள குருசாமிபுரத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் உதயகுமார்(வயது 32). தொழிலதிபர். இவர் கடையம் அருகே உள்ள வெங்கடாம்பட்டியில் அரிசி ஆலை நடத்தி வருகிறார்.

    இவர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சிலரிடம் நெல் கொள்முதல் செய்துள்ளார். சுமார் ரூ.98 லட்சத்திற்கு நெல் கொள்முதல் செய்த அவர், வாங்கிய நெல் மூட்டைகளை அரிசியாக்கி விற்றுள்ளார். அதில் ரூ.70 லட்சம் வரையிலான நெல்லுக்கான தொகையை திருப்பி ஒப்படைத்து விட்டதாக கூறப்படுகிறது.

    மீதி தொகையை நெல் கொடுத்தவர்களிடம் ஒப்படைக்க தாமதித்து வந்துள்ளார். நெல் மூட்டைகள் அரிசியாக மாற்றி வைக்கப்பட்டுள்ள நிலையில் அவை விற்கப்பட்ட உடனே தொகைகளை ஒப்படைப்பதாக உதயகுமார் தெரிவித்துள்ளார்.

    ஆனால் கால தாமதம் ஏற்படவே, நேற்று கடலூரில் இருந்து நெல் கொடுத்தவர்களான அரிகிருஷ்ணன், சூரியகுமார், சுரேஷ், புதுக்கோட்டையை சேர்ந்த பிரதீபன் ஆகிய 4 பேரும் வெங்கடாம்பட்டியில் இருக்கும் உதயகுமாரின் ரைஸ்மில்லுக்கு வந்துள்ளனர்.

    அங்கு உதயகுமாரிடம் பணத்தை கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரம் அடைந்த கும்பல், உதயகுமாரை அவரது காரில் ஏற்றியது. பின்னர் அங்கிருந்து கடலூர் நோக்கி கடத்தி சென்றது. இந்த தகவலை அறிந்த அன்பழகன், உடனடியாக கடையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா கடத்தல் வழக்குப்பதிவு செய்து 4 பேர் கும்பலை தேடினார்.

    உதயகுமாரின் செல்போன் சிக்னலை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், சிக்னல் பெரம்பலூர் பகுதியை காண்பித்தது. உடனடியாக தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு விடுதி பகுதியில் உதயகுமாரின் கார் நின்றது. அதில் அவரை அந்த கும்பல் கடத்தி வைத்திருந்தது.

    இதையடுத்து உதயகுமாரை மீட்ட போலீசார், அவரை கடத்தியதாக கடலூரை சேர்ந்த அரிகிருஷ்ணன், சூரியகுமார், சுரேஷ், புதுக்கோட்டையை சேர்ந்த பிரதீபன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். பின்னர் கடையத்திற்கு அழைத்து வரப்பட்ட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    பணம் கொடுப்பதில் ஏற்பட்ட தாமதத்திற்காக தொழிலதிபரை காரில் கும்பல் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாணவர்களை புத்தகம் வாசிக்க வைத்து கற்றல் திறனை கண்டறிந்தார்.
    • கொள்கையை விட்டுக் கொடுத்து மத்திய அரசிடம் பணம் பெற அவசியம் இல்லை.

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த பெருமூச்சி கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் இன்று காலை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது மாணவர்களை புத்தகம் வாசிக்க வைத்து கற்றல் திறனை கண்டறிந்தார்.

    பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்து வருகிறோம்.

    பெருமூச்சி அரசு நடுநிலைப் பள்ளிக்கு ஆய்வு மேற்கொண்டபோது மாணவர்கள் திறமையுடன் பதில் அளித்தனர். இதனை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். மாணவர்களின் கல்வி தரம் உயர்ந்துள்ளது.

    கல்வித்துறைக்கு சட்டசபை வரலாற்றிலேயே அதிக நிதியை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார். வருகிற 2026-ம் ஆண்டுக்குள் பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் சரி செய்யப்படும்.

    ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். ஒரு பள்ளிக்கு தலைமை ஆசிரியர் மிக முக்கியம். அவர் கப்பலின் கேப்டனை போல. ஆசிரியர்கள் அவருடன் இருந்து சிறப்பாக பணியாற்றுவதால் அந்த பள்ளி சிறப்பாக செயல்படுகிறது.

    கொள்கையை விட்டுக் கொடுத்து மத்திய அரசிடம் பணம் பெற அவசியம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கு முன்னதாக அந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டம், சமையல் கூடத்தையும் பார்வையிட்டார்.

    • தஞ்சை பெரிய கோவிலில் இன்று மதியம் நடிகை வனிதா விஜயகுமார் சாமி தரிசனம் செய்தார்.
    • நல்ல தமிழகம் அமைவதற்கு யார் வந்தாலும் நான் ஆதரிப்பேன்.

    தஞ்சாவூா்:

    உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் இன்று மதியம் நடிகை வனிதா விஜயகுமார் சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    முதல் முறையாக தஞ்சாவூா் பெரிய கோவிலுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அரசியலுக்கு வந்துள்ள விஜய்க்கு நான் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலில் புதிய பரிமாணம் எடுத்துள்ளார். விஜய் பெரிய வெற்றி அடைய வேண்டும்.

    விஜயும்-உதயநிதியும் அரசியலில் எதிரி என்பது சரிதான். விஜய்-உதயநிதி இருவருமே எனக்கு நண்பர்கள். நல்ல தமிழகம் அமைவதற்கு யார் வந்தாலும் நான் ஆதரிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 20 நாட்களாக சாக்கடை நீர் நிரம்பி இருக்கிறது.
    • பொதுப்பணி துறைக்கு ரூ.11 கோடி ஒதுக்கும் முதலமைச்சர் ஏன் முன்பே செய்யவில்லை.

    மதுரை:

    மதுரை மாநகராட்சி செல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளை ஆய்வு மேற்கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ஏன் பணிகள் மந்தமாக நடைபெறுகிறது என்று அதிகாரிகளை கடிந்து கொண்டார்.

    இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

    நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சொல்லி இருக்கிறது என்றால் உயர்நீதிமன்றம் முல்லை நகருக்கு மட்டும் சொல்லவில்லை. மதுரையில் இருக்கும் எல்லா இடங்களுக்கும் தான் சொல்லி இருக்கிறது.

    அப்படி செய்ய வேண்டும் என்றால் முதலில் உயர்நீதிமன்றத்தை தான் அகற்ற வேண்டும். அதுவும் நீர்நிலையில் தான் இருக்கிறது.

    20 நாட்களாக சாக்கடை நீர் நிரம்பி இருக்கிறது. ஏன் அமைச்சர்கள் வந்து பார்க்கக்கூடாதா?

    இந்த பகுதியில் தொற்று நோய் பரவி வருகிறது. எல்லோரும் எளிய மக்கள்.

    இப்போது பொதுப்பணி துறைக்கு ரூ.11 கோடி ஒதுக்கும் முதலமைச்சர் ஏன் முன்பே செய்யவில்லை.

    முதல்வர் ஆய்வு கூட்டம் நடத்தி இருப்பார். மதுரையில் அதிகம் பாதிக்கப்படக்கூடிய இடங்களை சொல்லி இருப்பார்கள். அதற்காக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இந்த அரசாங்கம் வெறும் பெயரளவுக்குதான். கூட்டணி பலம் இருக்கிறது.

    என்ன கூட்டணியாக இருந்தாலும் இந்த அரசாங்கத்தின் மீது உள்ள வெறுப்புணர்ச்சி காரணமாக இந்த கூட்டணியில் சேரும் கட்சிகள் எல்லாமே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்போகிறார்கள். இதுதான் நடக்கப்போகிறது என்று கூறினார்.

    • டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராகி இருப்பது இந்தியாவுக்கு சாதகமானதாக கருதப்படுகிறது.
    • டிரம்ப்பை பொறுத்தவரை போரை விரும்பாதவர்.

    திருப்பூர்:

    டொனால்டு டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராகி உள்ளதால் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் சாதகமான சூழல் நிலவும் என திருப்பூர் பின்னலாடை துறையினர் நம்பிக்கை கொண்டுள்ளனர். 2-வது முறையாக மீண்டும் டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராகி இருப்பது இந்தியாவுக்கு சாதகமானதாக கருதப்படுகிறது.

    டிரம்ப்பின் சீன எதிர்ப்பு கொள்கை, நம் பிரதமருடன் அவர் கொண்டுள்ள நட்பு , பைடன் காலத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள வரியில்லாத வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை உயிர்ப்பிக்கப்பட வாய்ப்பு உள்ளிட்ட காரணங்கள் திருப்பூர் பின்னலாடைத்துறைக்கும் சாதகமானதாக அமையும் என்ற எதிர்பார்ப்பு தொழில் துறையினரிடம் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து பின்னலாடை துறை ஆலோசகர் சபரி கிரீஷ் கூறியதாவது:-

    அமெரிக்காவில் ஜனநாயக கட்சியை விட, குடியரசு கட்சி ஆட்சி அமையும்போது அண்டை நாடுகளுடன் இணக்கமான போக்கு கடைபிடிக்கப்படுகிறது. டிரம்ப்பை பொறுத்தவரை போரை விரும்பாதவர்.

    உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதனால் உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த போர் நின்றால், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை பெறும். ஐரோப்பாவுக்கான இந்திய ஏற்றுமதி வர்த்தகம் எழுச்சி பெறும்.

    சீன எதிர்ப்பு கொள்கை கொண்டவர் டிரம்ப். ஏற்கனவே இவரது பதவி காலத்தில்தான், சீனப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டது. ஜோ பைடன் ஆட்சி காலத்தில் கிடப்பில் போடப்பட்ட அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தப் பேச்சு வார்த்தை டிரம்ப்பின் வருகையால் நிறைவேற வாய்ப்பு உள்ளது. இதனால் அமெரிக்காவுக்கான இந்திய பொருட்கள் ஏற்றுமதி அதிகரிக்கும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது.

    டாலருக்கு மாற்றாக பொதுவான கரன்சியை கொண்டு வர இந்தியா உள்பட பிரிக்ஸ் நாடுகள் முயற்சித்து வருகின்றன. இதனால் டாலர் ஸ்திரத்தன்மை இழப்பதை டிரம்ப் விரும்பமாட்டார். இந்தியாவில் சில அமெரிக்க பொருட்களுக்கான வரியை குறைக்க அழுத்தம் கொடுப்பார். இது போன்ற ஒரு சில பாதகங்களும் உள்ளன.

    சாதக, பாதகங்கள் இருந்தாலும் ஒட்டு மொத்தத்தில் டிரம்ப்பின் வெற்றி இந்தியாவுக்கு நன்மை தருவதாகவே அமையும். நம் நாட்டுடன் குறிப்பாக பிரதமர் மோடியுடன் நல்ல நட்பு கொண்டுள்ளார். அதனால் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையில் இந்தியாவுக்கு பாதகமான அம்சங்கள் விலகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மூக்கில் இருந்து ரத்தம் வந்தபோது கூட பயிற்சியை கைவிடாமல் தொடர்ந்தேன்.
    • முறையான பயிற்சி, மருத்துவர்களின் அறிவுரை இல்லாமல் யாரும் தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க முயற்சிக்க வேண்டாம்.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முகவூர் பகுதியை சேர்ந்தவர்கள் பாப்பையா-சுப்புலட்சுமி தம்பதியின் மகன் அருண்குமார். இவர் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

    சிறுவயது முதலே ஏதாவது சாதனை படைத்து பலரை திரும்பி பார்க்க வைக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர் அருண்குமார்.

    தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் உன்னால முடியாது என்று சொல்வது இவருக்கு ஏதோ தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஏன் இதை கின்னஸ் சாதனையாக செய்ய கூடாது என்ற எண்ணம் அவருக்கு தோன்றி உள்ளது.

    இதுதொடர்பாக அருண்குமார் கூறுகையில்,

    தினமும் தலைகீழாக நின்று பயிற்சி செய்தேன். அதன்பிறகு ஒரு கையை ஊன்றி தண்ணீர் குடிக்க பயிற்சி எடுத்தேன்.

    தண்ணீர் குடித்தால் முதலில் சிரசில் அடித்து விடும். பிரஷர் தாங்காமல் மூக்கில் இருந்து ரத்தம் கூட வந்து இருக்கிறது. ஒரு கையை ஊன்றி தண்ணீர் குடிப்பது சிரமமாக இருந்தது.

    தலைகீழாக நின்று கொண்டு 1 டம்ளர் தண்ணீர் குடிக்க பயிற்சி எடுத்தேன். பின்னர் 2 டம்ளர் தண்ணீர், 3 டம்ளர் தண்ணீர் என பயிற்சி எடுத்தேன்.

    மூக்கில் இருந்து ரத்தம் வந்தபோது கூட பயிற்சியை கைவிடாமல் தொடர்ந்தேன்.

     

    இந்த பயிற்சிக்குப்பின்னர் தலைகீழாக நின்று 25.01 வினாடியில் ஒரு லிட்டர் தண்ணீரை குடித்து அருண்குமார் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

    பலர் ஏன் இந்த தேவையில்லாத விஷப்பரீட்சை என்று கூறினாலும் எனது அம்மா, சகோதரர்கள், நண்பர்கள் உன்னால் முடியும் என்று கூறியதால் தான் என்னால் சாதிக்க முடிந்தது.

    முறையான பயிற்சி, மருத்துவர்களின் அறிவுரை இல்லாமல் யாரும் தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க முயற்சிக்க வேண்டாம்.

    என்னதான் அத்தனை பேரும் ஊக்கப்படுத்தினாலும், 'வலிமை' படத்தில் நடிகர் அஜித்தின் பைக் ஸ்டண்ட் பார்த்து தான் முடிந்தால் முடியாதது எதுவும் இல்லை என்ற தன்னம்பிக்கையே வந்ததாக அருண்குமார் கூறினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற வேண்டும் என்பதே எனது ஆசை என்று அருண்குமார் தெரிவித்துள்ளார்.

    விளையாட்டுத்துறையில் உள்ளவர்களை ஊக்குவிப்பது போன்று சாதனை படைத்தவர்களையும் அரசு ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • வனத்துறையினரும் யானைகள் வராமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • வீட்டின் வளாகத்திற்குள் 2 காட்டு யானைகள் நின்றிருந்தன.

    கவுண்டம்பாளையம்:

    கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான ஆனைக்கட்டி, மாங்கரை, தடாகம், நஞ்சுண்டாபுரம், கணுவாய் போன்ற பகுதிகளில் யானைகள் தொடர்ந்து ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகின்றது. வனத்துறையினரும் யானைகள் வராமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    துடியலூரில் இருந்து பன்னிமடை செல்லும் பகுதியில் கதிர்நாயக்கன் பாளையம் சாலையில் லட்சுமி நகர் பேஸ் 3-பகுதியை சேர்ந்தவர் மணி.

    இவருக்கு அந்த பகுதியில் சொந்தமாக தோட்டம் உள்ளது. அங்குள்ள தோட்டத்து வீட்டில் அவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இதுதவிர அங்கு மாடுகளையும் வளர்த்து வருகிறார்.

    நேற்றிரவு வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானைகள், இந்த தோட்டத்து வீட்டிற்குள் புகுந்தன. யானைகள் வந்ததை பார்த்ததும் நாய்கள் குரைத்தன. நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு, வீட்டில் இருந்தவர்கள் கதவை திறந்து பார்த்தனர்.

    அப்போது வீட்டின் வளாகத்திற்குள் 2 காட்டு யானைகள் நின்றிருந்தன. மேலும் அங்கு கால்நடைகளுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த உணவு பொருட்களை யானைகள் தின்று ருசித்தன.

    இதை பார்த்து அதிர்ச்சியான வீட்டில் இருந்தவர்கள் சம்பவம் குறித்து உடடினயாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    இதனால் நேற்று இரவு முழுவதும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மீண்டும் யானைகள் ஊருக்குள் வந்து சேதத்தை ஏற்படுத்தி விடுமா? என்று அச்சத்தில் இருந்தனர்.

    • வீட்டின் கதவு கடந்த சில நாட்களாக பூட்டியே கிடந்தது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மிட்டாதார்குளம் பகுதியை சேர்ந்தவர் மார்ட்டின் (வயது 38). இவர் பி.எம்.சி. மார்க்கெட்டில் செல்போன் கடை நடத்தி வந்தார்.

    இதற்காக மணலிவிளை எம்.ஜி.ஆர். நகர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள வீட்டில் வசித்து வந்தார். இவரது வீட்டின் கதவு கடந்த சில நாட்களாக பூட்டியே கிடந்தது. இந்த வீட்டில் இருந்து பிணவாடை வீசுவதாக அப்பகுதி மக்கள் திசையன்விளை போலீசாருக்கு புகார் தெரிவித்தனர்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு தரையில் அழுகிய நிலையில் மார்ட்டின் பிணமாக கிடந்தார். அவர் இறந்து 4 நாட்களுக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இவரது மனைவி பியூலா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அதில் ஒரு குழந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    பியூலா ஆஸ்பத்திரியில் தங்கி மகளை கவனித்து வருகிறார். இதனால் மார்ட்டின் திசையன்விளையில் தனியாக வசித்து வந்தார்.

    அவருக்கும் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவசாயிகள் பல்வேறு பயிர்கள் பயிரிட்டு வருகிறார்கள்.
    • வனப்பகுதியில் இருந்து வரும் இந்த வனவிலங்குகளை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் யானைகள், காட்டு பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதியையொட்டி பகுதிகளில் விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு விவசாயிகள் பல்வேறு பயிர்கள் பயிரிட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் அந்தியூர் அடுத்த மலை கருப்பு சாமி கோவில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கரடிக்கல் பாறை என்ற இடத்தின் அருகே ஜானகி சரவணன் என்பவரின் 8 ஏக்கர் தோட்டம் உள்ளது. இங்கு அவர் விவசாயம் செய்து வருகின்றார். இதில் வாழை, சோளப்பயிர், பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிட்டுள்ளார்.

    இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து கூட்டமாக காட்டுப்பன்றிகள் வெளியேறியது. இதையடுத்து காட்டு பன்றிகள் ஜானகி சரவணன் விவசாய தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்தது.

    தொடர்ந்து அறுவடைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் உள்ள மக்காச்சோள பயிர்களை அந்த காட்டு பன்றிகள் சேதப்படுத்தியது. அங்கு 1.50 ஏக்கர் அளவில் பயிரிட்டுள்ள பயிர்களில் 75 சென்ட் பயிர்களை முற்றிலும் சேதப்படுத்திஉள்ளது. இதன் மதிப்பு ரூ.30 ஆயிரம் இருக்கும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    மேலும் வனப்பகுதியில் இருந்து வரும் இந்த வனவிலங்குகளை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வன விலங்குகள் தோடங்களில் புகாமல் இருக்க விவசாயிகளுக்கு உதவ வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் வனத்துறையினருக்கு வேதனையுடன் கோரிக்கை விடுக்கின்றனர்

    மேலும் அறுவடைக்கு சில தினங்களில் இருக்கும் நிலையில் பயிர்கள் சேதம் அடைந்ததை கண்டு விவ சாயிகள் வேதனை அடைந்தனர்.

    • சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 6 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாகி உள்ளன.
    • நடப்பாண்டில் அந்த இடங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதல் சுற்று மற்றும் இரண்டாம் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த பிறகு, மீதமுள்ள இடங்களை நிரப்ப இறுதி சுற்று கலந்தாய்வு நடத்தப்பட்டது.

    இந்நிலையில், அதில் பங்கேற்று கலந்தாய்வில் இடங்கள் பெற்றவா்களில் சிலா் கல்லூரிகளில் சேராமல் படிப்பை கைவிட்டனா். இதனால், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 6 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாகி உள்ளன.

    இதேபோன்று, கடலூா் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 4 பி.டி.எஸ். இடங்கள், சுயநிதி கல்லூரிகளில் 24 பி.டி.எஸ். இடங்கள் என 28 பல் மருத்துவ இடங்கள் நிரம்பாமல் உள்ளன. மருத்துவ மாணவா் சேர்க்கைக்கு தேசிய மருத்துவ ஆணையம் வழங்கிய அவகாசம் நிறைவடைந்த நிலையில், அந்த இடங்களை இனி நிரப்ப முடியாது.

    இதனால் நடப்பாண்டில் அந்த இடங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இறுதிச் சுற்று கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைப் பெற்றவா்களில் எம்.பி.பி.எஸ். ஒதுக்கீடு பெற்ற 4 பேரும், பி.டி.எஸ். ஒதுக்கீடு பெற்ற 16 பேரும் கல்லூரிகளில் சேரவில்லை. இதையடுத்து அவா்களுக்கு அபராதம் மற்றும் ஓராண்டு மருத்துவக் கல்வியில் சேருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சில மாணவா்கள் முந்தைய சுற்று கலந்தாய்வின்போதே கல்லூரிகளில் இருந்து விலகுவதற்கான அபராதத்தை செலுத்தியதால் அவா்கள் அடுத்த ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்கத் தடையில்லை என்று மருத்துவக் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • மதச்சார்பின்மை, சமத்துவம் ஆகியவற்றில் தாங்கள் கொண்டுள்ள பிடிப்பானது முற்போக்கான பீகாரைத் தொடர்ந்து ஊக்குவிக்கட்டும்.
    • ஓர் எதிர்காலத்துக்காகப் பணியாற்றி வரும் தாங்கள் வலிமையோடும் வெற்றியோடும் திகழ வாழ்த்துகிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    பீகார் மாநிலத்தின் துடிப்புமிக்க இளம் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.


    சமூகநீதி, மதச்சார்பின்மை, சமத்துவம் ஆகியவற்றில் தாங்கள் கொண்டுள்ள பிடிப்பானது முற்போக்கான பீகாரைத் தொடர்ந்து ஊக்குவிக்கட்டும். நியாயமான, அனைவரையும் அரவணைத்துப் போற்றும் ஓர் எதிர்காலத்துக்காகப் பணியாற்றி வரும் தாங்கள் வலிமையோடும் வெற்றியோடும் திகழ வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×