என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நேற்று பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, இன்று காலை 5.30 மணி அளவில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்று, காலை 8.30 மணி அளவில் அதே பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இது மேலும் அதற்கடுத்த இரு தினங்களில் வடமேற்கு திசையில் தமிழகம்- இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

    இன்று கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நாளை கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள், புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    26-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    27-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    28-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    29-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    30-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

    அதிகபட்ச வெப்பநிலை 30 °-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30°- 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இன்று தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, மீனவர்கள் ஆழ்கடல் பகுதிகளில் மீன் பிடிக்க செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • ஜானகி அம்மையாரின் உருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை
    • திரையுலகினரின் வாழ்த்து காணொலி திரையிடப்பட்டது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் மனைவியும் தமிழகத்தின் முதல் பெண் முதல்-அமைச்சருமான ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா அ.தி.மு.க. சார்பில் இன்று கொண்டாடப்பட்டது.

    சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழா நாதகான சிகாமணிகளான சகோதரர்கள் தி.ச. பாண்டியன் தி.ச. சேதுராம் குழுவினரின் மங்கள இசையுடன் தொடங்கியது. முன்னாள் அமைச்சர் பொன்னையன் வரவேற்று பேசினார்.

    அ.தி.மு.க. பொதுச் செய லாளர் எடப்பாடி பழனிசாமி விழா மேடையில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் ஜானகி அம்மையாரின் உருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்னர் குத்து விளக்கு ஏற்றி வைத்து ஜானகி அம்மை யாரின் உருவப் படத்தை திறந்து வைத்தார். இந்த படம் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட இருக்கிறது.

    இதன் தொடர்ச்சியாக நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு, ஜானகி அம்மையாருடன் பயணித்த நடிகைகள் வெண்ணிற ஆடை நிர்மலா, சச்சு, குட்டி பத்மினி, உள்ளிட்ட வர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகளையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.


    அ.தி.மு.க. வரலாறு மற்றும் ஜானகி அம்மையாரின் வாழ்க்கை வரலாறுடன் இணைந்த குறும்படம் திரையிடப்பட்டது. இதன் பின்னர் சினிமா புகழ் அபிநயா நாட்டியக் குழுவினரின் வரவேற்பு நடனம் நடைபெற்றது. இந்த நடனம் முடிந்ததும் நடிகர் தம்பி ராமையா மேடையில் பேசினார்.

    அதனை தொடர்ந்து நடந்த கவியரங்கில் , மக்கள் திலகத்தின் மனையரசி என்ற தலைப்பில் மரபின் மைந்தன் முத்தையா பேசினார். மனங்களை கவர்ந்த மாதரசி, என்ற தலைப்பில் திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் நந்தலாலா, மக்கள் தொண்டில் சிறந்த பேரரசி என்ற தலைப்பில் கவிஞர் ஆதிரா முல்லை ஆகியோரும் ஜானகி அம்மையாரின் பெருமைகளை பேசினார்கள். இதன் பிறகு லட்சுமன் ஸ்ருதி குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது

    ஜானகி அம்மையார் கற்றுக்கொண்டது தாய்மைப் பாசமா? தலைமை பண்பா? என்ற தலைப்பில் பட்டிமன்றமும், சினிமா புகழ் நாட்டுப்புற இணையர் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி குழுவினரின் கிரா மிய இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    தொடர்ந்து திரையுலகினரின் வாழ்த்து காணொலி திரையிடப்பட்டது. இதில் நடிகர் ரஜினிகாந்தின் வாழ்த்து செய்தியும் இடம் பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர். பேசும் குறும்படம் திரையிடப்பட்டது.

    முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். முன்னதாக ஸ்ரீவாரு மண்டப வளாகத்தில் நடைபெற்ற ஜானகி எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சியையும் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    மாலை 5 மணி அளவில் அவர், தலைமை எழுச்சி உரையாற்றுகிறார். இறுதியாக முன்னாள் அமைச்சர் வளர்மதி நன்றி கூறுகிறார்.

    ஜானகி அம்மையார் நூற்றாண்டு விழாவையொட்டி மண்டபத்தை சுற்றியுள்ள பகுதி விழாக்கோலம் பூண்டிருந்தது. அ.தி.முக் கொடிகள் கட்டப்பட்டு வாழை தோரணங்களால் சாலையின் இரு புறமும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

    இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமி வரவேற்று அழைத்துச் சென்றனர்.

    • பல்வேறு கோவில்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொள்கின்றனர்.
    • மலைக்கோவிலில் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம் என வருடத்தின் பெரும்பாலான மாதங்கள் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. மேலும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தற்போது சபரிமலை சீசன் தொடங்கிய நிலையில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர்.

    தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே மாலை அணிந்து விரதம் கடைபிடித்து வரும் பக்தர்கள் சபரிமலைக்கு வர தொடங்கியதால் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்கள் பழனி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்பட பல்வேறு கோவில்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொள்கின்றனர்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பழனியில் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. பஸ் நிலையம், அடிவாரம், கிரிவீதி, ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில் நிலையம், யானைப்பாதை, படிப்பாதை உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    மேலும் மலைக்கோவிலில் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இனிவரும் காலங்களிலும் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    • மகாராஷ்டிரா தேர்தலில் பா.ஜ.க. அதிகப்படியான வெற்றி பெற்று உள்ளது.
    • தேர்தல் நேரத்தில் மக்களுக்கு இலவசங்கள் வழங்கக் கூடாது என்று பா.ஜ.க. தெரிவித்தது.

    மதுரை:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் மதுரை மாநகர் சார்பில் 24-வது மாநாடு மார்க்சிஸ்டு மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மகாராஷ்டிரா தேர்தலில் பா.ஜ.க. அதிகப்படியான வெற்றி பெற்று உள்ளது. இது அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது. எவ்வாறு நடந்தது என்று பல கோணங்களில் ஆய்வு செய்து வருகின்றனர். தேர்தல் நேரத்தில் மக்களுக்கு இலவசங்கள் வழங்கக் கூடாது என்று பா.ஜ.க. தெரிவித்தது. ஆனால், அதே பா.ஜ.க. தான், மகாராஷ்டிரா தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை கொடுப்பது போல், இலவசங்களை அறிவித்துள்ளது. மற்றவர்களுக்கு ஒரு நியாயம் பா.ஜ.க.விற்கு ஒரு நியாயம், பா.ஜ.க. தேர்தல் வெற்றிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும்.

    வரக்கூடிய பாராளுமன்ற கூட்டம் மோடி அரசாங்கம் மகாராஷ்டிரா வெற்றியை அடிப்படையாகக் கொண்டு மோசமான சட்டங்களை இயற்ற பா.ஜ.க. முற்படும். அரசியல் சாசனத்திற்கு சமாதி கட்டுகின்ற ஏற்பாடாக தான் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இருக்கும். இந்தத் திட்டத்தை எதற்கும் வகையில் நாங்கள் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம். பேசி குடியுரிமை சட்ட திட்டத்தை அமலாக்குவது, ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற மோசமான திட்டத்தை பா.ஜ.க. அமல்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது.

    உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் பொருள் விலை குறையும்போது பெட்ரோல் விலையை மோடி அரசு குறைக்க மறுக்கிறது. கடந்த ஒரு வருடமாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது. பிரதமர் மோடி இஸ்ரேல், ரஷியா போன்ற நாடுகளுக்கு செல்கிறார். சொந்த நாட்டில் மணிப்பூர் கலவர பூமியாக மாறி உள்ளது. அந்த மாநிலத்திற்கு பிரதமர் மோடி செல்லாமல் இருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. இவர்களே கலவரத்தை தூண்டிவிட்டு அதை முடித்து வைக்க முடியாமல் அவஸ்தப்படுகிறார்கள்.

    உச்சநீதிமன்றத்தில் சென்று இலவசங்களை கொடுக்கக் கூடாது என பா.ஜ.க. வழக்கு போட்டார்கள். மகாராஷ்டிராவில் மாதந்தோறும் மகளிர்க்கு உரிமை தொகை கொடுக்க உள்ளோம் என்று தெரிவிக்கிறார்கள். பா.ஜ.க.விற்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு கொள்கையா? தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருநாளன்று மத்திய அரசு தேர்வை அறிவிக்கிறார்கள். வேண்டுமென்றே பொங்கல் தினத்தில் தேர்வை அறிவித்து மாணவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கும் விரோதமான அணுகு முறையாக நாங்கள் இதை பார்க்கிறோம்.

    எங்களைப் பொறுத்த வரை கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பதை வேற மாதிரி வைத்திருக்கிறோம். அமைச்சர் பதவி வாங்குவது மட்டும் அதிகார பகிர்வு கிடையாது. கொள்கைரீதியான திட்டத்தை உருவாக்கி அந்தத் திட்டத்தின் அடிப்படையில் கூட்டணியில் வெற்றி பெற்று, ஆட்சிக்கு வரும்போது அந்த திட்டத்தை செயல்படுத்துகிற கூட்டணி அமைய வேண்டும். அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். மதுரை அரிட்டாப்பட்டியில் கனிம வளங்களை கொள்ளை அடிக்க திட்டமிட்டிருக்கும் பா.ஜ.க. அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாதத்தில் 2 வது முறையாக நட்சத்திர விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
    • வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ஆலந்தூர்:

    கிண்டியில் பிரபல நட்சத்திர விடுதி உள்ளது.நேற்று இந்த விடுதியின் இ-மெயில் முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் தகவல் வந்தது. சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிந்தது.

    இதுகுறித்து கிண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த மாதத்தில் 2 வது முறையாக நட்சத்திர விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இதேபோல் மிரட்டல் வந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த 3 பெண்கள் கைது.
    • குழந்தைகளையும் போலீசார் பறிமுதல் செய்தார்கள்.

    தாம்பரம்:

    சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் செல்லும் மின்சார ரெயில்களில் பிச்சை எடுக்கும் பல பெண்களை காணலாம். அவர்கள் பெரும்பாலும் வடமாநில பெண்களாக இருப்பார்கள். கையில் கைக் குழந்தை ஒன்றை வைத்து இருப்பார்கள்.

    அந்த குழந்தைகள் சரியான உணவு, பராமரிப்பு இல்லாமல் பரிதாபமாக இருக்கும். அதேபோல் அந்த பெண்களும் இளம் வயதினராக இருப்பார்கள்.

    அவர்களும் சரியான உணவு கிடைக்காமல் கந்தலான உடையில் பார்க்க பரிதாபமாக இருப்பார்கள். இந்த மாதிரி வரும் பெண்கள் ஓடும் ரெயில்கள், மக்கள் கூடும் இடங்கள், சிக்னல்களில் நின்று பொதுமக்களிடம் 'அய்யா பசிக்குதுய்யா.... ஏதாவது குடுங்கய்யா...' என்று கையேந்துவார்கள்.

    அவர்களின் நிலைமையை பார்த்து இரக்க மனம் கொண்ட பலர் பணம் கொடுத்து உதவுகிறார்கள். இந்த மாதிரி நடமாடும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்த மாதிரி பிச்சை எடுத்து வரும் பெண்களை தாம்பரம் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் கண்காணித்து சிலரை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் வைத்து இருந்தது அவர்களின் குழந்தைகள் அல்ல என்பதும் அவர்கள் திருடிய குழந்தைகள் என்பதும் தெரிய வந்தது.

    இதையடுத்து சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த 3 பெண்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்தது குழந்தைகளையும் பறிமுதல் செய்தார்கள்.

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 7 பச்சிளம் குழந்தைகள் மீட்கப்பட்டு செங்கல்பட்டு நலவாழ்வு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. முகாம்களில் இருக்கும் குழந்தைகளை மீட்க எந்த பெண்ணும் ஆர்வம் காட்டவில்லை.

    இதன் மூலம் அவர்கள் பெற்றெடுக்காத குழந்தைகள் என்பது மேலும் உறுதி செய்யப்பட்டது. குழந்தைகள் அனைத்தும் பச்சிளம் குழந்தைகள் என்பதால் அவர்களால் எந்த தகவலும் சொல்ல முடியவில்லை. அவர்களின் பெற்றோர் யார் என்பதை கண்டு பிடிக்கவும் முடியவில்லை.

    இதையடுத்து போலீசார் பொதுமக்களை உஷார்படுத்தி இருக்கிறார்கள். குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், இந்த மாதிரி பிச்சை எடுக்கும் பெண்களை ஊக்குவிக்க வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

    மேலும் இந்த மாதிரி குழந்தைகளுடன் பிச்சை எடுக்கும் பெண்களை ரெயில்களிலோ, பொது இடங்களிலோ பார்க்க நேர்ந்தால் உடனடியாக போலீஸ் உதவி எண். 139-ல் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று கூறி இருக்கிறார்கள்.

    • மருதநாட்டு இளவரசி படத்தில் நடித்த போது எம்.ஜி.ஆர். உடன் காதல் ஏற்பட்டு ஜானகி அம்மாள் அவரை திருமணம் செய்து கொண்டார்.
    • கட்சி மற்றும் மக்கள் நலனுக்காக கட்சியை விட்டுக் கொடுத்தவர் ஜானகி அம்மாள்.

    ஜானகி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அவரை பாராட்டும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் காணொலியில் பேசி இருந்தார். அவரது பேச்சு வருமாறு:-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மறைந்த புரட்சி தலைவர் எம்ஜிஆரின் துணைவியாரும் தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் ஆன ஜானகி அம்மாள் நூற்றாண்டு விழா நடைபெறுவது மகிழ்ச்சியை அளிக்கிறது. இங்கு வந்துள்ள அனைவருக்கும் எனது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த விழாவில் பங்கேற்க வேண்டும் என்று கடம்பூர் ராஜூ என்னை நேரில் அழைத்தார் அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மருதநாட்டு இளவரசி படத்தில் நடித்த போது எம்.ஜி.ஆர். உடன் காதல் ஏற்பட்டு ஜானகி அம்மாள் அவரை திருமணம் செய்து கொண்டார்.

    எம்.ஜி.ஆர். சாதாரண மனிதர் அல்ல என்று அப்போதே அவர் கணித்திருந்தார். திரை உலகில் புகழின் உச்சியில் இருந்த போது தனது திரை வாழ்க்கையை தியாகம் செய்துவிட்டு எம்.ஜி.ஆரை அவர் மணந்து கொண்டார். எம்.ஜி.ஆரை மிகவும் சந்தோசமாக வைத்துக்கொண்டதுடன் அவரை பாதுகாக்கவும் செய்தார்.

    கடைசி வரை எம்.ஜி.ஆருக்கு உறுதுணையாக இருந்தார். ராமாவரம் தோட்டத்துக்கு யார் சென்றாலும் வயிறு நிறைய விருந்து வைத்து உபசரித்தார். சாப்பாடு என்றால் சாதாரண சாப்பாடு கிடையாது. சைவ, அசைவ சாப்பாடுகளும் நல்ல முறையில் போடப்பட்டன. தினமும் 300 பேருக்காவது எம்.ஜி.ஆரின் வீட்டில் ஜானகி அம்மாள் சாப்பாடு போட்டு விடுவார்.

    கட்சி மற்றும் மக்கள் நலனுக்காக கட்சியை விட்டுக் கொடுத்தவர் ஜானகி அம்மாள். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு அவர் ஜெயலலிதாவிடம் கட்சியை ஒப்படைத்ததை அனைவருமே அறிவார்கள்.

    நான் மூன்று முறை அவரை நேரில் சந்தித்து உள்ளேன். ராகவேந்திரா படத்தின் போது அவரை சந்தித்தேன். இரண்டாவது முறை அவர் முதலமைச்சராக இருந்த போது சந்தித்தேன். மூன்றாவது முறை நான் படப்பிடிப்பு தளத்தில் இருந்த போது என்னை அழைத்து சந்தித்தார். அவர் கையால் காபி போட்டுக் கொடுத்து உபசரித்தார். படங்களில் நான் புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என ஜானகி ராமச்சந்திரனிடம் எம்.ஜி.ஆர். சொன்னதாக அவர் என்னிடம் சொன்னார்.

    அவர் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து தான்... கட்சி இரண்டாக பிளவுபட்ட போது, அவர் எடுத்த முடிவு... ஜெயலலிதா அம்மையாரிடம் கட்சியை ஒப்படைத்தது அவரின் நல்ல குணம்.. பக்குவத்தை உணர்த்தியது. இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.வின் பிரம்மாஸ்திரமாக திகழ்ந்துக் கொண்டிருக்கிறது

    இன்று அவருக்கு நூற்றாண்டு விழா எடுத்துள்ள அ.தி.மு.க.வுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

    தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா பேசும் போது, விஜயகாந்துடன் திருமணம் முடிந்ததும் ராமாவரம் தோட்டத்துக்கு நேரில் சென்று எம்.ஜி.ஆர்., ஜானகி அம்மாள் இருவரிடமும் வாழ்த்து பெற்றோம். இருவரும் மறையும் வரையில் எங்கள் மீது அன்பு செலுத்தினார்கள்.

    அமெரிக்கா சென்று திரும்பிய போது எனக்கு ஜானகி அம்மாள் வாட்ச் வாங்கி வந்து கொடுத்ததை மறக்க முடியாது. எம்.ஜி.ஆர். நினைவாக எங்களுக்கு அளிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் கோட், அவரது பிரசார வாகனம் ஆகியவற்றை இப்போதும் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறோம் என்றார்.

    • குட்கா, புகையிலை பொருட்களை பதுக்கி விற்று வந்தது தெரிய வந்தது.
    • கைதானவர்களிடம் இருந்து ஏராளமான புகையிலை, குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். மண்ணூர் கிராமம் மாதா கோவில் தெரு பகுதியில் கடையில் சோதனை செய்தபோது அங்கு குட்கா, புகையிலை பொருட்களை பதுக்கி விற்று வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து வியாபாரி மணியை போலீசார் கைது செய்தனர். இதேபோல் மண்ணூர் பகுதியில் தீபா என்பவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் ஏராளமான புகையிலை, குட்கா பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது. தீபாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதானவர்களிடம் இருந்து ஏராளமான புகையிலை, குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

    • போராட்டத்திற்கு மருந்து வணிகர்கள் சங்கம் உள்பட 46 வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
    • பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நாமக்கல் நகருக்குள் வரும் வெளியூர் பஸ்கள் பழைய பஸ் நிலையத்திற்குள் வராமல் மெயின் ரோட்டில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டு செல்கிறது. பஸ்கள் பழைய பஸ் நிலையத்திற்குள் வராததால், பஸ் நிலையத்தில் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் கடைகளில் வியாபாரம் இல்லை. மேலும் மெயின் ரோட்டில் பொதுமக்கள் கூடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் , பஸ் நிலைய கடை வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே நகருக்குள் வந்து செல்லும் அனைத்து பஸ்களும் பழைய பஸ் நிலையத்திற்குள் வந்து பயணிகளை ஏற்றி செல்லவேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி பொதுமக்களுடன் இணைந்து நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை (25-ந்தேதி) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நாமக்கல் நகரம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இந்த போராட்டத்திற்கு மருந்து வணிகர்கள் சங்கம் உள்பட 46 வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    நாமக்கல் நகரில் மளிகை கடைகள், மருந்து கடைகள், எலக்ட்ரிக்கல் கடை உள்பட 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மருந்து வணிகர்கள் சங்கத்தினர் மருந்து கடைகளை நாளை காலை 6 மணிமுதல் மதியம் 2 மணி வரை கடையடைப்பு செய்வதாகவும், பிற வணிக நிறுவனங்கள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு செய்வதாகவும் தெரிவித்துள்ளதால் நாளை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக நாளை அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாத நிலை உள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள் நோட்டு, புத்தகங்கள் வாங்க முடியாத நிலை, அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள், கூலி தொழிலாளர்கள் தங்கள் தொழில்களுக்கு தேவையான பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    • பழவேற்காடு மீன் மார்க்கெட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
    • தொழிற்சங்க நிர்வாகிகள் குமார், ரமேஷ், கதிர்வேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    திருவள்ளூர் மாவட்ட மீன் பிடி தொழிற்சங்கத்தின் சி.ஐ.டி.யூ. சார்பில் பழவேற்காடு பஜாரில் மாவட்ட செயலாளர் நித்யானந்தம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மீனவர்களின் வாழ்வாதாரங்களை அழித்து குடியிருப்பு பகுதி மீனவர்களை அப்புறபடுத்தும் மத்திய அரசு திட்டங்களை கைவிட கோரியும் விண்வெளிக்கு ராக்கெட் ஏவும்போது மீன் பிடிக்க தடை செய்யப்படும் நாளுக்கு ரூ.1000 வழங்க வேண்டும் பழவேற்காடு மீன் மார்க்கெட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் குமார், விஜயன், விநாயகமூர்த்தி, ரமேஷ், கதிர்வேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • இரண்டு அடுக்கு ‘பார்க்கிங்’ வசதியும் வடிவமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
    • புதிய பஸ்நிலையம் கட்டும் பணி முடியும் நிலையில் உள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் வெளியூர் செல்லும் பஸ்கள் கிளாம்பாக்கம், மாதவரம் பஸ் நிலையங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளது. மாதவரத்தில் இருந்து ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதைத்தொடர்ந்து கேரளா, கர்நாடகா, மாநிலங்களில் இருந்து வரும் பஸ்களை திருமழிசை அடுத்த குத்தம்பாக்கத்தில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டு அங்கு புதிய பஸ்நிலையம் கட்ட திட்டமிடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து திருமழிசை துணை நகர திட்டத்தில் இருந்து, 24.8 ஏக்கர் நிலம் பெறப்பட்டு பஸ்நிலையம் கட்டும்பணி கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.

    கழிப்பறை வசதி மற்றும் பஸ் நிலைய பணியாளர்கள் ஓய்வறை, பஸ்களை நிறுத்தும் நடைமேடை உட்பட நவீன கூடுதல் வசதிகளுடன் ரூ.427 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகிறது.


    புதிய பஸ்நிலையம் 2 மாடி கட்டிடத்தில் 70 புறநகர் பஸ்கள், 30 ஆம்னி பஸ்கள் 36 மாநகர பஸ்கள் வந்து செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது. மேலும் 48 புறநகர் பஸ்கள், 27 ஆம்னி பஸ்கள் என மொத்தம் 163 பஸ்களை நிறுத்தி வைக்க முடியும். பஸ் நிலையத்தின் கீழ்தளத்தில் 1,800 இருசக்கர வாகனங்கள், 235 நான்குசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில், இரண்டு அடுக்கு 'பார்க்கிங்' வசதியும் வடிவமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன

    தினமும் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் இரவு, பகலாக பணிகள் வேகம் எடுத்து சுமார் 85 சதவீத பணிகள் முடிந்து உள்ளது. இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திருமழிசை புதிய பஸ்நிலையம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் கூறும்போது, திருமழிசை அடுத்த குத்தம்பாக்கத்தில் புதிய பஸ்நிலையம் கட்டும் பணி முடியும் நிலையில் உள்ளது. இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு பஸ்நிலையம் திறந்து வைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மற்ற பஸ் நிலையத்தில் விடுபட்ட அனைத்து நவீன வசதிகளுடனும் இந்த பஸ்நிலைய பணிகள் நடந்து வருகிறது என்றார்.

    • 182 வட்டங்களிலும் ஒவ்வொரு நாள் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.
    • கூட்டத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சி அடுத்த மாதம் 27-ந்தேதி 194 மற்றும் 147 ஆகிய வட்டங்களில் நடக்கிறது.

    சென்னை:

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 47-வது பிறந்த நாள் வருகிற 27-ந்தேதி (புதன்) கொண்டாடப்படுகிறது. இந்த பிறந்த நாள் விழாவை 'உதயநிதி உதயநாள் விழா' என்ற பெயரில் ஒரு மாத காலம் கொண்டாட சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் ஏற்பாடு செய்துள்ளார்.

    இந்த மாவட்டத்தில் மொத்தம் 182 வட்டங்கள் உள்ளன. இந்த 182 வட்டங்களிலும் ஒவ்வொரு நாள் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.

    அந்தந்த வட்ட நிர்வாகிகள் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கழகத்தின் மூத்த பேச்சாளர்கள் 182 பேர் பங்கேற்கிறார்கள். மேலும் 'என் உயிரினும் மேலான' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் பங்கேற்றவர்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 182 பேச்சாளர்களும் பங்கேற்கிறார்கள்.

    முதல் நாளான 27-ந் தேதி 142-அ வட்டத்தில் கே.பி.கோயில் தெருவில் வீடியோ எஸ்.எழில் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் தாயகம் எம்.எல்.ஏ., எபினா மேரி ஆகியோரும் 127-வது வட்டம் கோயம்பேடு பஜனை கோவில் தெருவில் பொன்.வர லோகு தலைமையில் நடக்கும் கூட்டத்தில் புதுக்கோட்டை விஜயா, அஜித்குமார் ஆகியோரும் பேசுகிறார்கள்.

    இதே போல் 173-அ வட்டம் இந்திரா நகரில் மு.ப. நடராஜன் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் ஈரோடு இறைவன், செ.தமிழரசன், 182-வது வட்டம் கந்தன் சாவடியில் ஆறுமுகம் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் வி.பி.ராஜன், விஜயகுமார், 91-வது வட்டம் முகப்பேர் மேற்கில் அண்ணதாசன் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் நெல்லிக்குப்பம் புகழேந்தி, மாறன், கோவிலம்பாக்கம் ஊராட்சியில் சீனிவாசன் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் சைதை சாதிக், எஸ்.விக்டோரியா ஆகியோரும் பேசுகிறார்கள்.

    30 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்தக் கூட்டத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சி அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந்தேதி 194 மற்றும் 147 ஆகிய வட்டங்களில் நடக்கிறது.

    ×