என் மலர்
உள்ளூர் செய்திகள்
- நாய், வீட்டு வளாகத்தில் நின்றிருந்த ஜெகதீஷ் மீது பாய்ந்தது. அவரை 12 இடங்களில் கடித்து குதறியது.
- புகாரின்பேரில் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாயை ஏவி கடிக்க வைத்த பிரியாவை கைது செய்தனர்.
கோவை:
கோவை அருகே உள்ள வெள்ளலூர் மகாகணபதி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32), தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி தர்ஷனா என்ற பிரியா(29). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 2020-ம் ஆண்டு மணிகண்டன் ரூ.6½ லட்சத்துக்கு புதிதாக கார் வாங்கினார். அதற்கு முன்பணமாக ரூ.2 லட்சம் செலுத்தினார். மீதமுள்ள பணத்துக்கு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கினார். அதற்கு மாதம் தோறும் ரூ.6 ஆயிரத்துக்கும் மேல் தவணை தொகை செலுத்த வேண்டும்.
ஆனால் அந்த தவணை தொகையை மணிகண்டன் முறையாக செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. அவர் 20 மாதத்துக்கும் மேல் தவணை தொகையை செலுத்தாமல் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து நிதி நிறுவன ஊழியர்கள், தவணை தொகையை செலுத்தவில்லை என்றால் காரை பறிமுதல் செய்வோம் என்று கூறினர்.
இதன்படி அந்த நிதிநிறுவனத்தில் வேலை செய்து வரும் ஜெகதீஷ்(45), சுரேஷ், கதிரவன் ஆகிய 3 பேரும் மணிகண்டனின் வீட்டுக்கு சென்றனர். அப்போது மணிகண்டனும், அவரது மனைவியும் தங்களிடம் பணம் இல்லை என்றனர்.
இதனால் நிதி நிறுவன ஊழியர்கள் 3 பேரும் தங்களிடம் இருந்த சாவியை வைத்து அந்த காரை எடுக்க சென்றனர். அப்போது அங்கு ஓடிவந்த மணிகண்டன் திடீரென காரை ஸ்டார்ட் செய்து, அங்கிருந்து ஓட்டிச்சென்றார். ஜெகதீஷ் உள்பட நிதி நிறுவன ஊழியர்கள் 3 பேரும் காரை நிறுத்துங்கள்... நிறுத்துங்கள்... என்று கூறியபடி பின்னால் ஓடினர். இருந்தாலும் மணிகண்டன் நிறுத்தாமல் காரை ஓட்டிச்சென்று விட்டார்.
அப்போது அங்கு நின்றிருந்த பிரியா, தான் வளர்த்து வரும் ஜெர்மன் ஷெப்பர்டு வகையை சேர்ந்த நாயை அவிழ்த்து விட்டதுடன், ஜெகதீஷ் உள்பட 3 பேரை பார்த்து அவர்களை விடாதே, கடி.. கடி.. என்று கூறினார். உடனே அந்த நாய், வீட்டு வளாகத்தில் நின்றிருந்த ஜெகதீஷ் மீது பாய்ந்தது. அவரை 12 இடங்களில் கடித்து குதறியது.
நாய் கடித்ததில் படுகாயம் அடைந்த ஜெகதீசை அவர்கள் மீட்டு, அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாயை ஏவி கடிக்க வைத்த பிரியாவை கைது செய்தனர்.
- பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் 2 பயணிகள் ரெயில் (மெமு) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
- ஜோலார்பேட்டையில் இருந்து இன்று மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு காட்பாடி வரும் பயணிகள் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
வேலூர்:
அரக்கோணம்-ஜோலார்பேட்டை வழித்தடத்தில் வளத்தூர்-மேல்பட்டி இடையே இன்று காலை 10.55 மணி முதல் மதியம் 2.55 மணி வரை பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் 2 பயணிகள் ரெயில் (மெமு) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
காட்பாடியில் இருந்து இன்று காலை 9.30 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும், மறுமார்க்கமாக, ஜோலார்பேட்டையில் இருந்து இன்று மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு காட்பாடி வரும் பயணிகள் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பெஞ்சல் புயலில் விழுப்புரம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
- வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தபோது சேறு வீசப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இருவேல்பட்டு பகுதியில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தபோது அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த போலீசார் இருவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பா.ஜ.க. பிரமுகர் விஜயரானி மற்றும் அவரது உறவினர் ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருவரும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.
முன்னதாக,
பெஞ்சல் புயலால் வரலாறு காணாத மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்த பின்னரும் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம் வடியவில்லை. இதனால் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்கவில்லை என்று கூறி பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 3-ந்தேதி இருவேல்பட்டு பகுதியில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வுக்கு சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் ஆவேசமாக இருந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்டது. அவருடன் ஆய்வுக்கு சென்ற கௌதம சிகாமணி, ஆட்சியர் மீதும் சேற்றை வீசியதால் பாதியில் புறப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- தொடர்ச்சியாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
- அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மீட்பு பணிகள் நடைபெறுவதை ஒட்டி விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 10 ஆம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
- வீடியோக்களில் கமென்ட் செய்து வருகின்றனர்.
- இந்தப் படம் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் சா.மு. நாசர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிகராக இருந்த போது வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தை புகழ்ந்து பேசியுள்ளார்.
இது குறித்து பேசும் போது, "அவருக்கும் கல்லுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பல பேர் பல படங்களை எடுத்தார்கள். பல ஜாம்பவான்கள் படங்களை எடுத்தார்கள். அந்த படங்கள் எல்லாம் தோல்வி அடைந்துள்ளது. ஒரு சில படங்கள் பெரிய வசூல் செய்துள்ளது. ஆனால் ஒரு கல் ஒரு கண்ணாடி என்று ஒரு படம் எடுத்தார். மகத்தான, மாபெரும், மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. அதிலும் பார்த்தீர்கள் என்றால் கல் தான்," என்று கூறினார்.
உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா மோத்வானி, சந்தானம் மற்றும் பலர் நடித்து வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் வெளியாகி 12 ஆண்டுகள் முடிந்து விட்டது. இந்தப் படம் நகைச்சுவை கலந்த காதல் கதையம்சம் கொண்டிருந்தது.
இந்த நிலையில், ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் புரட்சியை ஏற்படுத்தியதாக அமைச்சர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பலர், இது தொடர்பான வீடியோக்களில் கமென்ட் செய்து வருகின்றனர்.
- சிறு வணிக கடனுக்கான சிறப்பு முகாம் நாளை முதல் டிச. 12 வரை நடைபெறுகிறது.
- விழுப்புரம், கடலூரில் தகுதியானவர்களுக்கு 1 லட்சம் வரை சிறு வணிகக் கடன்.
தமிழகத்தில் கடந்த மாதம் 30ம் தேதி முதல் வீசத் தொடங்கிய ஃபெஞ்சல் புயலின் காரணமாக பரவலான மற்றும் கடுமையான மழைப்பொழிவு தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் இருந்தது.
குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழையின் அளவு வழக்கத்தைவிட மிக அதிகமாக இருந்தது.
இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் மழைப்பொழிவு ஏற்பட்டு, பொது மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதோடு, தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் பெரும் பகுதி விளைநிலங்களை வெள்ளத்தில் மூழ்கடித்து உள்ளது.
இதைதொடர்ந்து, அதி கனமழையின் காரணமாக கடுமையான மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சிறப்பு கடன் வழங்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.
அதன்படி, முதற்கட்டமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணா.மலை, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரியில் சிறு வணிக கடனுக்கான சிறப்பு முகாம் நாளை முதல் டிச. 12 வரை நடைபெறுகிறது.
விழுப்புரம், கடலூரில் தகுதியானவர்களுக்கு 1 லட்சம் வரை சிறு வணிகக் கடன் தரப்படுகிறது என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
- தொடர்ச்சியாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
- பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நாளை மற்றும் அடுத்து வரும் சனி, ஞாயிறு கிழமைகளிலும் மீட்பு பணிகள் நடைபெறும் என்பதால், திங்கள் கிழமை (டிசம்பர் 09) முதள் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 9ம் தேதி முதல் சிஐடியு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
- சிஐடியு தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் செய்தனர்.
சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் ஊதிய உயர்வு, புதிய தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 9ம் தேதி முதல் சிஐடியு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
பலதரப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து, சிஐடியு தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் செய்தனர். சிஐடியுவின் முடிவிற்கு சாம்சங் இந்தியா வரவேற்றது.
இதற்கிடையே, சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், தங்களது சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்ய கோரி தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கும் விண்ணப்பம் செய்தனர். ஆனால், இந்த கோரிக்கையை ஏற்கப்படவில்லை.
இதையடுத்து, தங்களது சங்கத்தை பதிவு செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு கடந்த செப்டம்பர் மாதம் 30-ந்தேதி நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கிற்கு தமிழ்நாடு அரசும், தொழிற்சங்கங்கள் பதிவாளர், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் ஆகியோர் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு இருந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவில், தங்கள் விண்ணப்பத்தை பரிசீலித்து தொழிற்சங்கத்தை பதிவு செய்து சான்று வழங்கும்படி சிஐடியு மனு தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில், சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக்கோரும் மனு மீது 6 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று பதிவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- வாத்தலை அருகே மனப்பாளையம், வேப்பந்துறை என 2 குக்கிராமங்கள் உள்ளன.
- வயல்வெளியில் தண்ணீர் சூழ்ந்து ஏராளமான ஏக்கரில் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
மண்ணச்சநல்லூர்:
மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள வாத்தலை கிராமத்தில் அய்யன் வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்கால் முகொம்பு காவேரி ஆற்றில் இருந்து காவேரி, கொள்ளிடம் மற்றும் பாசனத்திற்காக புள்ளம்பாடி, அய்யன் என 2 பாசன வாய்க்காலாக பிரிகிறது.
வாத்தலை அருகே மனப்பாளையம், வேப்பந்துறை என 2 குக்கிராமங்கள் உள்ளன. இந்த 2 கிராமங்களை இணைக்கும் வகையில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் கிராம மக்கள் பயன்பாட்டிற்காக அய்யன் வாய்க்கால் குறுக்கே தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டு அதனை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
மேலும் தற்போது சில நாட்களாகவே பெய்ந்து வரும் மழையால் தரைபாலத்தில் சிறிது மழை நீர் தேங்கி இருந்தது. இந்த நிலையில் கொல்லிமலையில் கனமழை பெய்தது. இதனால் நீர்வரத்து அதிகரித்ததை அய்யன் வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன்காரணமாக மக்கள் பயன்பாட்டிற்கு இருந்த தற்காலிக தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.
இதனால் 2 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. அங்கு வசிக்கும் பொதுமக்கள் 7 கி.மீ தொலைவு வரை சுற்றி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் அய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அருகில் உள்ள வயல்வெளியில் தண்ணீர் சூழ்ந்து ஏராளமான ஏக்கரில் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பல்வேறு கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலைகள் முழுவதும் சிதைந்து கடும் சேதமடைந்து உள்ளது.
- தென்பெண்ணை ஆறு குறுக்கே சிறிய பாலம் உள்ளது.
கடலூர்:
தென்பெண்ணையாற்றில் வரலாறு காணாத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு. பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தென்பெண்ணையாறு கரையோரம் இருந்த ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் நிலங்கள் கடும் பாதிப்படைந்தது.
கடலூர் அருகே அழகிய நத்தம் பகுதியில் தென்பெண்ணை ஆறு குறுக்கே சிறிய பாலம் உள்ளது. இந்த பாலத்தில் ரஜினி நடித்த ஜெய்லர் படக்காட்சிகள் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் கரையோரத்தில் சிமெண்ட் மற்றும் இரும்பு கட்டிடத்தில் போலீஸ் சோதனை சாவடி இருந்து வந்தது.
இந்த நிலையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்போது தண்ணீர் வடிந்துள்ள நிலையில் சோதனை சாவடி கட்டிடங்கள் இருந்த சுவடு இல்லாமல் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது தெரிய வந்துள்ளது.
ஆற்றின் அழகிய நத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலைகள் முழுவதும் சிதைந்து கடும் சேதமடைந்து உள்ளது.
பல்வேறு கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலை சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதியடைந்து உள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
- தொழில்நுட்பம் கோளாறு காரணமாக ப்ரோபா 3 செய்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் இன்று ஒத்திவைக்கப்பட்டது.
- பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் இன்று மாலை 4.12 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் 'புரோபா-3' என்று பெயரிடப்பட்ட இணை செயற்கைகோளை (2 செயற்கைகோள்கள்) உருவாக்கி உள்ளது. இந்த செயற்கைகோள்கள் சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆய்வு செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
550 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ஏவுதளமான, ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று மாலை 4.08-க்கு மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த 2 செயற்கை கோள்களையும், முதலில் குறைந்தபட்சம் 600 கிலோ மீட்டர் தூரத்திலும், அதிகப்பட்சம் 60 ஆயிரத்து 530 கிலோ மீட்டர் உயரமுள்ள நீள்வட்ட சுற்றுவட்ட பாதையிலும் நிலை நிறுத்தி, பின்னர் இணை சுற்றுவட்ட பாதையில் இஸ்ரோ நிலை நிறுத்தும்.
ராக்கெட்டுக்கான எரிபொருட்கள் நிரப்பப்பட்ட நிலையில், இறுதிக்கட்டப் பணியான கவுண்ட்டவுன் 25 மணி நேரம் நிர்ணயம் செய்யப்பட்டது.
இது கடந்த செவ்வாய்க்கிழமை) பகல் 3.08 மணிக்கு தொடங்கியது. இதனை முடித்துக்கொண்டு இன்று(புதன்கிழமை) மாலை 4.08 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாயும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தொழில்நுட்பம் கோளாறு காரணமாக ப்ரோபா 3 செய்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் இன்று ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி, பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் இன்று மாலை 4.12 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.
- விமான நிலையத்துக்குள் நுழையும் அனைத்து பயணிகளும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
- கோவையில் நாளை சில அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளன.
கோவை:
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நாளை (6-ந் தேதி) நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டத்திலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் எண்ணிக்கையில் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள்.
கோவை காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், அன்னூர், வால்
பாறை உள்ளிட்ட இடங்களில் உள்ள பஸ்நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இதேபோல ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
ரெயில் நிலைய நுழைவு வாயில்களில் உள்ள மெட்டல் டிடெக்டர் வாயில் வழியாக பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. ரெயில்களிலும், ரெயில் தண்டவாளங்களிலும் போலீசார் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனையில் ஈடுபடுகிறார்கள். ரெயில்களில் வரும் பார்சல்களை மோப்பநாய் கொண்டு போலீசார் சோதிக்கிறார்கள். விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
விமான நிலையத்துக்குள் நுழையும் அனைத்து பயணிகளும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
மேலும் முக்கிய கோவில்கள், பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் முன்பும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர். இதற்கிடையே பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் நாளை சில அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளன. அங்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட உள்ளது.






