search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "oru kal oru kannadi"

    சினிமாவை குறைத்துக்கொண்டு அரசியலில் அதிக கவனம் செலுத்த இருப்பதாக நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #UdhayanidhiStalin
    சென்னை:

    நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது சினிமா, அரசியல் பயணம் குறித்து அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    கேள்வி:- சீரியசான படங்களிலும் நடிக்க தொடங்கி விட்டீர்களே?

    பதில்:- ஆமாம். எனது சினிமா வாழ்க்கையை மனிதன் படத்துக்கு முன், பின் என இரண்டாக பிரிக்கலாம்.

    ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வெற்றிக்கு பின் நான் காமெடி படங்களிலேயே நடித்தேன். மனிதன் படம் தான் எல்லா வகையான படங்களிலும் என்னால் நடிக்க முடியும் என்ற நம்பிக்கையை அளித்தது. சீரியசான படங்கள் மட்டுமல்ல நல்ல காமெடி படங்களிலும் கூட நடிப்பேன்.

    கே:- மிஷ்கினுடன் இணையும் படம் பற்றி?

    ப:- யுத்தம் செய் படத்தில் அவர் இயக்கத்தில் தான் நடிகராக அறிமுகமாகி இருக்கவேண்டும். முகமூடி கதையையும் என்னிடம் தான் சொன்னார். 2 படங்களிலும் இணைய முடியாமல் போய்விட்டது. இப்போது இணைந்து இருக்கிறோம். மனிதன் படத்துக்கு பின் தான் அவர் படங்களில் நடிக்கும் நம்பிக்கை வந்தது.


    கே:- கண்ணே கலை மானே படம் பற்றி?

    ப:- சீனு ராமசாமி படங்கள் மனிதநேயம் பேசும் படங்களாக தான் இருக்கும். கண்ணே கலை மானே படத்தில் மனித நேயத்துடன் விவசாயிகளின் பிரச்சனைகள், நீட், இயற்கை விவசாயம் என பல வி‌ஷயங்கள் அடங்கிய கதை இது.

    கே:- சினிமாவா... அரசியலா... எது உங்கள் பாதை?

    ப:- இனி ஆண்டுக்கு ஒரு படம் என்று சினிமாவை குறைத்துக்கொண்டு அரசியலில் அதிக கவனம் செலுத்த இருக்கிறேன்.

    கே:- வரும் தேர்தலில் போட்டியிடப் போவதாக வெளியான தகவல் செய்தி உண்மைதானா?


    ப:- கடந்த தேர்தலில் அப்பா (மு.க.ஸ்டாலின்) கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார் என்றதுமே அவரது தொகுதியான ஆயிரம் விளக்கு தொகுதியில் நான் போட்டியிட போவதாக செய்திகள் வந்தன. அது வெறும் வதந்தி என்று உறுதியானது. இப்போது மீண்டும் இதுபோன்ற வதந்தி கிளப்பப்படுகிறது. எனக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை.

    நான் தேர்தலில் நிற்பதை பற்றி யோசிப்பதற்கான நேரம் இது இல்லை. கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்பட காரணம் நடிகராக இருப்பதும் கட்சியின் செய்தித்தாளுக்கு மேலாளராக இருப்பதும் தான். ஒரு கட்சி உறுப்பினராக தான் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறேன். படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் மட்டும்தான் போராட்டங்களில் கலந்து கொள்கிறேன்.

    எந்த சூழ்நிலையிலும் எம்.எல்.ஏ. சீட்டோ வேறு எந்த பதவியோ கேட்க மாட்டேன்.

    கே:- சீனியர் தலைவர்களோடு உங்களை ஒப்பிட்டு கிண்டலடிக்கப்படுகிறதே?

    ப:- உண்மை தெரியாமல் கிண்டல் செய்பவர்களை என்ன சொல்வது? ஒரு சாதாரண அடிமட்ட உறுப்பினராக இருப்பதை தவிர நான் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை.

    சில தொண்டர்கள் என் மீதான அளவு கடந்த பிரியத்தால் இதுபோன்று செய்துவிடுகிறார்கள். தவிர்க்குமாறு பல முறை சொல்லிவிட்டேன். போஸ்டர் அடிப்பதற்கு எல்லாம் நான் ஒன்றும் செய்ய முடியாது. எல்லா போஸ்டர்களையும் கிழித்துக்கொண்டா இருக்க முடியும்?

    இவ்வாறு அவர் கூறினார். #UdhayanidhiStalin #KanneKalaimaane #Psycho

    ×