என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கடந்த மாத இறுதி வரை 5 ஏரிகளில் மொத்தம் 46 சதவீதம் மட்டுமே தண்ணீர் நிரம்பி இருந்தது.
    • சென்னை குடிநீர் ஏரிகள் அடுத்த வாரத்தில் முழு கொள்ளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழை கொட்டியது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளிலும் தண்ணீர் இருப்பு 74.32 சதவீதம் உயர்ந்துள்ளது.

    இந்த ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.757 டி.எம்.சி. ஆகும். நேற்று காலை நிலவரப்படி குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 8.738 டி.எம்.சி. ஆக உள்ளது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் நீர் மட்டம் 33 அடி தாண்டி உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 3.231 டி.எம்.சி.யில் 2.573 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 1,530 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    புழல் ஏரியில் மொத்த கொள்ளளவு ஆன 3.300 டி.எம்.சி.யில் 2.755 டி.எம்.சி.யும், சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவு ஆன 1.081 டி.எம்.சி.யில் 228 மில்லியன் கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3.645 டி.எம்.சி.யில் 2.860 டி.எம்.சி. தண்ணீரும், கண்ணன் கோட்டை- தேர்வாய்கண்டிகை ஏரியில் 500 மில்லியன் கனஅடியில் 322 மில்லியன் கனஅடியும் தண்ணீர் நிரம்பியுள்ளது.

    கடந்த மாத இறுதி வரை 5 ஏரிகளில் மொத்தம் 46 சதவீதம் மட்டுமே தண்ணீர் நிரம்பி இருந்தது. ஃபெஞ்சல் புயலால் பெய்த கனமழையின் காரணமாக ஏரிகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதற்கிடையே வங்க கடலில் தற்போது மேலும் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 12-ந்தேதி தமிழகம் நோக்கி வர உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் வரும் 6 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் சென்னை குடிநீர் ஏரிகள் அடுத்த வாரத்தில் முழு கொள்ளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இது நேற்று வலுவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
    • அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைய வாய்ப்பு உள்ளது.

    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில், சில தினங்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நேற்று வலுவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    அடுத்த 24 மணி நேரத்தில் இது மேலும் வலுவடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி நகரலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. இது மேற்கு- வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைய வாய்ப்பு உள்ளது.

    இந்த நிலையில், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று (டிசம்பர் 10) காலை 10 மணிக்குள்ளாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
    • வசந்தம் நகர் மற்றும் திருமஞ்சன கோபுர வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்படுகிறது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

    இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான கார்த்திகை தீபத்திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் வருகிற 13-ந் தேதி மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள்.

    இந்த நிலையில், திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி, நகரப் பகுதிக்கு அருகாமையில் உள்ள மதுக்கடைகளை 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மணலூர் பேட்டை சாலை, வசந்தம் நகர் மற்றும் திருமஞ்சன கோபுர வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்படுகிறது.

    • கொலை சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரை தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை:

    சென்னை, மயிலாப்பூரில் பறக்கும் ரெயில் மேம்பாலத்தில் இருவருக்கிடையே மோதல் ஏற்பட்டது.

    மோதல் முற்றியதில் மேம்பாலத்தில் இருந்து ஒருவர் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

    பட்டினம்பாக்கத்தை சேர்ந்த லூயிஸ் பத்தியால் என்பவர் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

    கொலை சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேம்பாலத்தில் இருந்து ஒருவரை தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
    • அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    சென்னை:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி மலைப்பகுதியில் இருந்து சுற்றி உள்ள 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கு இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்த அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி முல்லை பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த 29-ந் தேதி மேலூரில் கண்டன ஆர்ப்பாட்டம், கடையடைப்பு நடந்தது. மேலும் தொடர்ந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில், தமிழ்நாடு சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது. அப்போது மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தனித் தீர்மானம் மீது சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றது. இதையடுத்து தனித்தீர்மானம், பரபரப்பான விவாதங்களுக்குப் பிறகு அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.


    இதையடுத்து டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலத்தை ரத்து செய்யும் அரசின் தீர்மானம் முதலமைச்சர் ஒப்புதலோடு தலைமைச் செயலருக்கு அனுப்பப்பட்டது. தலைமைச் செயலருக்கு அனுப்பப்பட்ட தீர்மானம் இன்று இரவுக்குள் அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி, மதுரை டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சுரங்கத் துறை செயலாளரிடம் இருந்து தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    • பக்தர்கள் நான்கு கோபுரங்களுக்கு முன்போ, கிரிவலப்பாதையிலோ எங்கும் கற்பூரம் ஏற்றுதல் கூடாது.
    • கிரிவலம் செல்லும் பக்தர்கள் தங்களது குழந்தைகளையும் வயதானவர்களையும், பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

    திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபத்தை ஒட்டி வழிகாட்டு நெறிமுறைகளை அம்மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.

    இதுகுறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபத்தை முன்னிட்டு 12.12.2024 முதல் 15.12.2024 வரை போக்குவரத்து நெரிசல் ஏதுமின்றி பக்தர்கள் வந்து கிரிவலம் செல்ல ஏதுவாக 25 தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் 116 கார் பார்க்கிங் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை மக்கள் அறிந்து, அவற்றை முறையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

    "பக்தர்கள் தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் கார் பார்க்கிங் இடங்கள் தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை WhatsApp உதவி எண். 9363622330-ற்கு Message மூலம் தொடர்பு கொண்டு Google Map Link - ஐ பெற்று Google Map உதவியுடன் அந்தந்த கார் பார்க்கிங் வசதிகளுக்கு செல்லலாம்."

    1. பக்தர்களுக்கு நீர்மோர் வழங்குதல், திலகமிடுதல், ஆசிர்வதித்தல் என்ற போர்வையில் ஏமாற்றியும் மற்றும் மிரட்டியும் பக்தர்களிடமிருந்து பணம் வசூலிப்பது குற்றமாகும். அக்குற்றச் செயல்களை கண்காணிக்க கிரிவலப்பாதையில் பிரத்யேகமாக காவல் அதிவிரைவுப் படைகள் (QRT) ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அக்குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் உடனடியாக கைது செய்யப்பட்டு கடும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என எச்சரிக்கப்படுகிறது.

    2. பக்தர்கள் நான்கு கோபுரங்களுக்கு முன்போ, கிரிவலப்பாதையிலோ எங்கும் கற்பூரம் ஏற்றுதல் கூடாது.

    3. கால்நடைகளின் உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறாக உலாவ விடக்கூடாது. பக்தர்களும் கால்நடைகளுக்கு அகத்திக்கீரை உள்ளிட்டவற்றை வழங்குவதை தவிர்க்கவும்.

    4. உரிய அனுமதியின்றி அன்னதானம் வழங்குவது தடைசெய்யப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் அன்னதானம் வழங்க அறிவுறுத்தப்படுகிறது.

    5. கிரிவலம் செல்லும் பக்தர்கள் தங்களது குழந்தைகளையும் வயதானவர்களையும், பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

    6. பக்தர்கள் தங்களது செல்போன், ஆபரணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் ஆகியவற்றை தாங்களே பாதுகாத்து கொள்ள வேண்டும். யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். சந்தேகத்திற்கிடமான நபர்களையோ அல்லது பொருட்களையோ கண்டால் உடனடியாக அருகில் உள்ள காவல்துறை அலுவலரிடம் தெரிவிக்கவும்.

    7. பக்தர்கள் உதவிக்கு அருகிலுள்ள May I Help You Booth / காவல் உதவி மையத்தை அணுகலாம். கீழ்காணும் அலைபேசி எண்களுக்கும் தொடர்பு கொள்ளலாம். இந்த உதவி எண்கள் 12.12.2024 (07:00 AM) முதல் 15.12.2024 (06:00 PM) வரை 24 மணி நேரமும் செயல்படும்.

    8. பக்தர்கள், கிரிவலப்பாதையை ஒட்டியுள்ள நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்கவும்.

    9. கிரிவலப்பாதையில் நிறுவப்பட்டுள்ள தற்காலிக கழிப்பிடங்களை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.

    10. குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தவும்.

    11. பக்தர்கள், தங்களது காலணிகளை 4 கோபுரங்களுக்கு முன்பும், மாடவீதிகளிலும் விடுவதை தவிர்க்கவும். கடைகள் அல்லது காலணி பாதுகாப்பகங்களில் விட அறிவுறுத்தப்படுகிறது.

    12. கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறாக தற்காலிக கடைகள் அமைக்க தடை செய்யப்பட்டுள்ளது. மீறும்பட்சத்தில் சட்டபடி நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

    13. கிரிவலப்பாதை மற்றும் மாடவீதிகளில் பக்தர்களுக்கு தொல்லை கொடுக்கும் விதமாக அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களான பீபீ உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதும், பயன்படுத்துவதும் குற்றமாகும்.

    14. பக்தர்களுக்கு இடையூறாக கிரிவலப்பாதை மற்றும் மாட வீதிகளில் உள்ள நிரந்தர கடைகளில் அதிக ஒலியுடன் கூடிய விளம்பர ஆடியோக்கள் ஒலிபரப்ப தடை செய்யப்பட்டுள்ளது.

    15. கிரிவலப்பாதையில் தற்காலிகமாக கடைகள் அமைத்தோ, தங்கியோ கேஸ் சிலிண்டர் பயன்படுத்தி சமையல் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது மீறினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சமையல் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும்.

    16. அனுமதியின்றி வனப்பகுதியில் பிரவேசிப்பதும் மலையின் மீது ஏற முயற்சிப்பதும் குற்றமாகும். அந்நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    17. ஏதேனும் உடல் நலக்குறைவு ஏற்படின் அருகில் உள்ள மருத்துவ முகாம்களின் மூலம் மருத்துவ உதவி பெறலாம் உதவிக்கு அருகில் உள்ள காவல் உதவி மையத்தையும் (May I Help You Booth) அணுகலாம்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் விடுவதைப்பற்றி தம்பிதுரை நாடாளுமன்றத்தில் எவ்வித கருத்தையும் பேசவில்லை.
    • உண்மையை மறைத்து, என்னைப்பற்றி இப்படி தவறான தகவலை மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    UPA அரசில் திமுக அங்கம் வகித்த போது, கனிம வளங்களை ஏலம் விடாமல், தனியாருக்கு தாரை வார்த்து கொள்ளை அடிக்கப்பட்டது மற்றும் UPA அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது கனிமச் சுரங்கங்களை அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு உரிமம் வழங்கினார்கள்.

    NDA ஆட்சியில் கனிம வள உரிமங்கள் ஏலமுறையில் விடப்படும் என்ற சட்டத்திருத்தம் கொண்டு வந்து, கனிம வள ஊழலை தடுக்க ஏலமுறையை ஆதரித்துதான் திரு. தம்பிதுரை அவர்கள் பேசி உள்ளார். தமிழகத்தில் டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் விடுவதைப்பற்றி

    தம்பிதுரை நாடாளுமன்றத்தில் எவ்வித கருத்தையும் பேசவில்லை. இந்த கனிம வள திருத்தச் சட்டம் 2023 நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த போது, திமுக M.P-க்கள் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.

    உண்மையை மறைத்து, என்னைப்பற்றி இப்படி தவறான தகவலை மு.க. ஸ்டாலின் 'X' வலைதளத்தில் வெளியிட்டு கீழ்தரமான அரசியல் ஆதாயம் தேடுவது வெட்கக்கேடானது. கேவலமானது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டால் நான் முதலமைச்சர் பதவியில் இருக்க மாட்டேன் என்றார்.

    தமிழக சட்டசபையில் மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அப்போது, சட்டசபையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டால் நான் முதலமைச்சர் பதவியில் இருக்க மாட்டேன் என்றார்.

    இந்நிலையில், டங்ஸ்டன் திட்டத்தை அனுமதிக்க மாட்டேன் என முதல்வரின் நிலைப்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கனிமொழி தனது எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதோடு, தான் முதலமைச்சராக இருக்கும் வரையில் இந்தத் திட்டத்தை அனுமதிக்க மாட்டேன் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திட்டவட்டமாக அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

    இந்த விவகாரத்தில் தற்போது மக்களோடு நிற்பது போல் நாடகமாடும் அதிமுக, நாடாளுமன்றத்தில் "சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் திருத்த மசோதா 2023" -க்கு ஆதரவளித்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது. இதன் மூலம் அதிமுக - வின் இரட்டை வேடம் மக்களிடத்தில் அம்பலமாகியுள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • திருமாவளவனின் வரிகளும் சுட்டிக்காட்டி ஆதவ் அர்ஜூரா பதிவு வெளியிட்டுள்ளார்.
    • விசிகவில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜூனா அதிரடியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜூனா அதிரடியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், திருமாவளவனின் வரிகளும் சுட்டிக்காட்டி ஆதவ் அர்ஜூரா பதிவு வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஆயிரம் கைகள் மறைத்தாலும்…!

    'அதிகாரத்தை அடைவோம்' என்று எழுச்சித் தமிழர் எந்த முழக்கத்தோடு இந்த கட்சியைக் கட்டமைத்தாரோ அந்த அதிகாரத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடனே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் எனது பயணத்தைக் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பித்தேன். எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பினை உணர்ந்து கொள்கை உறுதிப்பாட்டுடன் கட்சியை அடுத்தகட்டத்திற்கு வளர்த்தெடுக்கும் பணியினையே நான் முழுமையாக மேற்கொண்டேன். கட்சியின் பிரச்சார வியூகத்தையும் கொள்கை வழியிலேயே கட்டமைத்தேன். நான் கட்சியில் என்ன பணி செய்தேன் என்பதை அடிமட்ட தொண்டர்களாய் களமாடும் தோழர்கள் நன்கு அறிந்திருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அந்த தொண்டர்களின் குரலாக நான் எப்போதும் இருப்பேன்.

    தலைவரின் கையெழுத்திட்ட துணைப் பொதுச்செயலாளர் என்கிற பொறுப்பு கடிதம் கிடைக்கப்பெற்ற போது என்ன மனநிலையில் இருந்தேனோ, அதே மனநிலையில் இப்போது தலைவரின் கையெழுத்துடன் வெளியாகியுள்ள எனது இடைநீக்கம் குறித்த கடிதத்தையும் எதிர்கொள்கிறேன்.

    தலித் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான 'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்ற முழக்கத்தை அந்த மக்களுக்கான அதிகாரம் கிடைக்கும் வரை தொடர்ந்து முழங்கிக்கொண்டு இருப்பதே நேர்மையான மக்கள் அரசியலாக இருக்கும் என்ற எனது உள்ளார்ந்த எண்ணத்தை தோழர்கள் மத்தியில் இப்போதும் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன். குறிப்பாக, 'ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கும் மனநிலைதான் மன்னர் பரம்பரைக்கான மனநிலை' என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த மக்களுக்கான அதிகாரத்தைத் தட்டிப்பறிக்கும் அந்த மனநிலையை எதிர்காலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் உடைத்தெறிந்து, ஜனநாயக வழியில் அதைப் பெறும் போராட்டத்தில் பங்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுவேன். கருத்தியல் வழியாகத் தோன்றும் தலைவர்களே மக்களுக்கான ஆட்சியாளர்களாக விளங்க முடியுமே தவிர, பிறப்பால் அல்ல என்ற கொள்கையில் உறுதியாகப் பயணிக்கிறேன். மக்களே ஜனநாயகத்தின் நீதிபதிகள்.

    கருத்தியல் பேசிக்கொண்டு ஊழலை உருவாக்கும் போலி கருத்தியல்வாதிகளை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்திக் காட்டுவோம். மத பெரும்பான்மைவாதம், சாதி ஆதிக்கம், பெண்ணடிமைத்தனம், சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல், எளிய மக்களுக்கு எதிரான ஆதிக்க மனநிலை என இந்த சமூகத்தில் தொடர்ந்து நடந்துவரும் அநீதிகளுக்கு எதிரான என்னுடைய குரல் சமரசமில்லாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

    புரட்சியாளர் அம்பேத்கர், பெரியார், அண்ணா ஆகியோரின் கருத்துக்களை உள்வாங்கி அரசியல் பயணத்தைத் துவங்கினேன். அந்த கொள்கைகளின் வழியில் எனது பயணம் எப்போதும் தொடரும். புரட்சியாளர் அம்பேத்கர் சுட்டிக்காட்டியது போல், 'சிந்திப்பதற்கான சுதந்திரமே, உண்மையான சுதந்திரம்' என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டு புதிய ஜனநாயகத்தை உருவாக்குவோம். எனது சிறுவயதிலிருந்து ஏமாற்றம், தோல்விகள், இழப்புகள் எனக் காலம் தந்த நெருக்கடிகளே என்னை உத்வேகத்துடன் பயணிக்கச் செய்தன. கட்சித் தலைமையின் இந்த நடவடிக்கையினையும் அந்த காலத்தின் கரங்களில் ஒப்படைக்கிறேன்.

    ஆயிரம் கைகள் மறைத்தாலும்…

    ஆதவ(ன்) மறைவதில்லை!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சட்டசபையில் திமுக, அதிமுக இடையே இந்த விவகாரம் தொடர்பாக காரசார விவாதம் நடந்தது.
    • தமிழக அரசின் தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.

    தமிழக சட்டசபையில் மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.

    இதற்கிடையே, திமுக, அதிமுக இடையே இந்த விவகாரம் தொடர்பாக காரசார விவாதம் நடந்தது. இறுதியில் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    முன்னதாக, மத்திய அரசின் சுரங்கம் மற்றும் கனிம திருத்தச் சட்ட மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில், திமுக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என சட்டசபையில் இன்று இபிஎஸ் கடும் குற்றச்சாட்டை பதிவு செய்த நிலையில், மாநிலங்களவையில் அதிமுக அம்மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தது.

    கடந்த, 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிமுக எம்.பி. தம்பிதுரை, இம்மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து அவையில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், அதிமுகவின் இரட்டை நிலைப்பாடு தற்போது வெளிவந்துள்ளது.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சுரங்கம் மற்றும் கனிமத் திருத்தச் சட்ட வரைவிற்கு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்துவிட்டு, இப்போது சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் நலனுக்காகப் பேசுவதுபோல் நடிக்கும் திரு. பழனிசாமி அவர்கள், அவதூறுகளைப் பரப்பி உயிர்வாழும் அ.தி.மு.க.வின் துரோக வரலாற்றுக்கு அடையாளமாய் இருக்கிறார்.

    சட்டப்பேரவையில் சொன்னதை மீண்டும் சொல்கிறேன்…

    தமிழ்நாட்டுக்கு ஊறு விளைவிக்கும் எந்தத் திட்டத்தையும் திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்த புள்ளி கோரப்பட்டபோது தமிழக அரசு அமைதியாக இருந்தது.
    • 10 மாதங்கள் மாநில அரசு அமைதியாக இருந்தது என்று அவர் குற்றம்சாட்டினார்.

    தமிழக சட்டசபையில் மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தீர்மானத்தின் மீது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * டங்ஸ்டன் சுரங்கம் குறித்த முழு தகவல்களும் தீர்மானத்தில் இல்லை.

    * பாராளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் செயல்பட்டிருக்க வேண்டும்.

    * தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை திமுக எம்.பி.க்கள் தடுத்து நிறுத்த வேண்டும்.

    * மாநில உரிமை பறிபோகும்போது பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

    * டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்த புள்ளி கோரப்பட்டபோது தமிழக அரசு அமைதியாக இருந்தது.

    * 10 மாதங்கள் மாநில அரசு அமைதியாக இருந்தது என்று அவர் குற்றம்சாட்டினார்.

    இதற்கிடையே, குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகன் எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., போல் ஆவேசமாக மிமிக்ரி செய்து பேசினார். இது, ஆளும் கட்சியினர் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

    அப்போது இபிஎஸ் போன்று ஆக்ரோஷமாக பேசிய அமைச்சர் துரைமுருகன், ''எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., உரக்கப்பேசுகிறார். நானும் பேசிவிடுவேன். ஏற்கனவே இந்த திட்டத்துக்கு எல்லா முயற்சியும் எடுத்து, மத்திய அரசுக்கு தெரிவித்த பிறகு தான் தீர்மானத்தை கொண்டு வந்து இருக்கிறோம்" என்றார்.

    அவரது பேச்சும், குரலும், ஆளும் கட்சியினர் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

    இதைக்கண்ட எதிர்க்கட்சித்தலைவர் இ.பி.எஸ்., ''பேரவை தலைவர் அவர்களே ஒன்னும் சாதிக்க முடியவில்லை என்றால் இப்படி தான் பேசி ஆகணும். வேற என்ன பேச முடியும்? சரக்கு இருந்தால் தான பேச முடியும். இப்படி பேசினால் என்ன அர்த்தம். ஆ ஊன்னா என்ன? சட்டமன்றம் தான? மூத்த உறுப்பினர் மக்களுக்கு வழி காட்டியாக இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு, ஆ ஊன்னா என்ன? இதுக்கு எல்லாம் பயப்பட மாட்டேன். மக்களுடைய பிரச்னை உயிரை கொடுத்தும் காப்பாத்துவோம்,'' என்றார்.

    • விசிக தலைவர் திருமாவளவன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார்.
    • மேடையில் அரசியல் எதுவும் பேச வேண்டாம் என ஆதவிடம் முன்னரே தெரிவித்தேன்.

    இன்றைக்கு கூடிய தமிழக சட்டப் பேரவை கூட்டத்தைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்திற்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.

    முன்னதாக சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறியதாகக் குற்றம்சாட்டப்பட்ட விசிக துணை பொதுச் செயலாளலர் ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் இருந்து ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார்.

    இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது:-

    தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. நிவாரணம் வழங்காமல் மத்திய அரசு வழக்கம்போல் தமிழக மக்களை வஞ்சித்துள்ளது. புயல் நிவாரண நிதியாக நாங்கள் [விடுதலை சிறுத்தைகள்] ரூ.10 கோடி வழங்கியுள்ளோம்.

    பல முறை ஆதவ் அர்ஜுனாவுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. அவரின் அண்மை பேச்சு கட்சியின் நம்பகத்தன்மைக்கு ஊரு விளைவிக்கும் வகையில் இருந்தது. எனது அறிவுறுத்தலை மீறி ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார். மேடையில் அரசியல் எதுவும் பேச வேண்டாம் என அவரிடம் முன்னரே தெரிவித்தேன்.

    நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்காதது எனது தனிப்பட்ட முடிவு. வி.சி.க.,வுக்கும், தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கும் எந்த மோதலும் இல்லை. விஜயயோடு எங்களுக்கு எந்த சர்ச்சையோடு, சிக்கலோ ஏற்பட்டது இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×