என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கடந்த ஆண்டை காட்டிலும், நடப்பாண்டு, மொட்டுக்காளான் விலை ஏறுமுகமாகவே உள்ளது.
    • விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகிறது.

    அதற்கு கூடுதல் முதலீடு தேவை என்பதாலும், சந்தையில் போதிய விலை கிடைக்காதலும் விவசாயிகள் மாற்று விவசாயத்தில் அதிகளவில் ஈடுபடுகிறார்கள். அதன்படி கொய் மலர்கள் சாகுபடி, காளான் உற்பத்தி விவசாயத்தில் ஆர்வம் செலுத்தியுள்ளனர்.

    குறிப்பாக நீலகிரியில் மொட்டு காளான் வளர்ப்பு உற்பத்தி அதிகரித்து வருகிறது.

    வங்கிகளில் மானியம் பெற்று தங்கள் நிலத்தில் காளான் உற்பத்தியை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். குன்னூர், கேத்தி, குந்தா மற்றும் கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் அதிக பரப்பளவில் காளான் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதில் கடந்த ஆண்டை காட்டிலும், நடப்பாண்டு, மொட்டுக்காளான் விலை ஏறுமுகமாகவே உள்ளது. உள்ளூரில் ஓரளவு விலை குறைந்து இருந்தாலும் வெளியூர்களில், 10 கிலோ கொண்ட ஒரு 'பாக்ஸ்' குறைந்தபட்சம் ரூ.1500 வரை விற்பனையாகிறது.

    குன்னூர் பகுதியில் அறுவடை செய்யப்படும் மொட்டு காளான் நீலகிரி மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான கோவை, ஈரோடு மற்றும் சேலம், கரூர் திருச்சி உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்ட ங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மலை காய்கறி பயிரிடுவதை குறைத்து மொட்டு காளான் உற்பத்திக்கு விவசாயிகள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது மொட்டு காளான் விலை ரூ.180 முதல் ரூ.250 வரை விற்பனையாகி வருகிறது என்றனர்.

    • கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • மேட்டூர் அணையில் தற்போது 88.19 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 116.63 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 5 ஆயிரத்து 793 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று 6 ஆயிரத்து 140 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது.

    அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 1000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே தண்ணீர்திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையில் தற்போது 88.19 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • கடந்த 5 நாட்களாக அந்த வாகனங்கள் சோதனைச்சாவடியிலேயே நிறுத்தப்பட்டு இருந்தன.
    • தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தியும், அரசுக்கு கோரிக்கை விடுத்தும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளுக்காக கடந்த 4-ந் தேதி தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் 2 லாரிகளில் தளவாடப்பொருட்களை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் வல்லக்கடவு வழியாக சென்றனர்.

    அப்போது அங்குள்ள வனசோதனைச்சாவடியில் கேரள பெரியாறு புலிகள் காப்பக அதிகாரிகள் அந்த வாகனங்களை தடுத்து நிறுத்தினர். இது குறித்து கேரள நீர் பாசனத்துறை அதிகாரிகளுக்கும், இடுக்கி மாவட்ட கலெக்டருக்கும் தகவல் தெரிவித்து அனுமதி பெற்றுள்ளதாக கூறிய போதிலும் அந்த கடிதம் தங்களுக்கு வரவில்லை எனவும், வாகனங்களை உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது எனவும் கூறினர்.

    இதனால் கடந்த 5 நாட்களாக அந்த வாகனங்கள் சோதனைச்சாவடியிலேயே நிறுத்தப்பட்டு இருந்தன. இச்சம்பவத்தை கண்டித்து தமிழக விவசாயிகள் லோயர் கேம்ப் பகுதியில் போராட்டம் நடத்தினர். அப்போது விவசாயிகளை சமாதானப்படுத்திய அதிகாரிகள் விரைவில் வாகனங்களை உள்ளே அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

    ஆனால் 5 நாட்களாக அனுமதி கிடைக்காமல் தமிழக வாகனங்கள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டு இருந்தன. மைனர் இரிகேஷன் டிபார்ட்மெண்ட் அனுமதி கடிதம் தங்களுக்கு கிடைத்தால் மட்டுமே தமிழக வாகனங்களை அனுப்ப முடியும் என்று கேரள வனத்துறையினர் பிடிவாதமாக உள்ளனர்.

    இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தெரிவிக்கையில், தமிழகத்துக்கு எந்தவித நன்மையும் தராத கேரள அரசால் உருவாக்கப்பட்ட மைனர் இரிகேஷன் டிபார்ட்மெண்ட் என்ற அமைப்பை தடை செய்ய வேண்டும். உச்சநீதிமன்றம் அனுமதியின்படி அணை பராமரிப்புக்கு அனுமதி அளிக்காவிட்டால் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என தெரிவித்தார். ஆனால் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தியும், அரசுக்கு கோரிக்கை விடுத்தும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை.

    வல்லக்கடவு சோதனைச்சாவடியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு லாரியின் டயர் வெடித்தது. இதனால் அதன் டிரைவர் லாரியில் இருந்த தளவாடப்பொருட்களை சாலையிலேயே கொட்டி விட்டு திரும்பினார். அதன் பின் மற்றொரு டிரைவரும் எம்சாண்ட் மணல் உள்ளிட்ட பொருட்களை சோதனைச்சாவடியில் இருந்து 100 மீட்டர் முன்பாக சாலையோரம் கொட்டி விட்டு வேதனையுடன் திரும்பி வந்தார்.

    இது குறித்து விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கையில், முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்பு விஷயத்தில் தமிழக அரசு எந்தவித அழுத்தமும் கொடுக்காமல் மவுனமாக உள்ளது. இதனால் அணை பராமரிப்பு கேள்விக்குறியாக உள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு முல்லைப்பெரியாறு அணை பலவீனமடைந்ததாக கேரளா வாதத்தை வைக்க முடிவு செய்துள்ளது. தமிழக முதலமைச்சர் இந்த வாரம் கேரள மாநிலம் செல்ல உள்ள நிலையில் அங்குள்ள அதிகாரிகளிடம் இது குறித்து இப்பிரச்சனைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்றனர்.

    • நினைவிடம் பழமையானதால் தமிழக அரசு சார்பில் ரூ.8.5 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளது.
    • பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

    சென்னை:

    கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள வைக்கத்தில் கோயில் நுழைவுப் போராட்டம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் கடந்துள்ளது. தந்தை பெரியார் சமூகநீதி காக்க போராடிப் பெற்ற வெற்றியை நினைவுகூரும் வகையில், பெரியாருக்கு வைக்கத்தில் நினைவுச் சின்னம் அமைக்க உத்தரவிடப்பட்டு 1994-ம் ஆண்டு நினைவிடம் திறந்து வைக்கப்பட்டது.

    இந்த நினைவிடத்தை புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

    இதை தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு வைக்கம் சென்று பெரியார் நினைவகத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதை தொடர்ந்து புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போது அங்கு பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புகைப்படங்கள் அடங்கிய நிரந்தர புகைப்பட கண்காட்சிக் கூடம், நூலகம், பார்வையாளர் மாடம், சிறுவர் பூங்கா உள்ளிட்டவை அமைந்துள்ளது.

    மேலும் அமர்ந்த நிலையில் பெரியார் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களில் ஏற்பட்ட கரையான் அரிப்பு போன்றவற்றால் நினைவிடம் பழமையானதால் தமிழக அரசு சார்பில் ரூ.8.5 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளது.

    இதை திறந்து வைக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (புதன்கிழமை) கேரளா செல்ல உள்ளார்.

    கேரள மாநிலம் கோட்டயத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற உள்ளது. பெரியார் நினைவகம் மற்றும் பெரியார் நூலகம் திறப்பு விழாவுக்கு அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமை தாங்குகிறார்.

    பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

    • தமிழக அரசு பிஎம்ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் சில மாற்றங்களை கூறியது.
    • மத்திய அரசு மாற்றங்கள் இல்லாமல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழக அரசிடம் மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்து வருகிறது.

    சென்னை:

    நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியை உறுதி செய்வதற்கும், அவர்களுக்கு பாகுபாடின்றி தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் மத்திய அரசு சமக்ரா சிக்ஷா என்ற அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 8 வடகிழக்கு மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் மத்திய அரசின் பங்களிப்பு 60 சதவீதம் ஆகும். மாநில அரசு பங்களிப்பு 40 சதவீதம் ஆகும்.

    அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு கடந்த 2023-24-ம் ஆண்டில் ரூ.2,120.25 கோடி விடுவிக்க வேண்டும். ஆனால் அதில் ரூ.1,871.96 கோடி மட்டுமே விடுவித்தது. ரூ.248.29 கோடியை வழங்காமல் நிறுத்தி விட்டது. அதற்கு காரணம், தமிழக அரசு பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணையவில்லை என்று கூறியது.

    மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையின் அடிப்படையில் பிஎம்ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தினால், அது மத்திய அரசின் தேசிய கொள்கையை ஏற்று கொண்டது போல் ஆகிவிடும். மேலும் தமிழக அரசின் கொள்கையான 2 மொழி கொள்கைக்கு பதில் 3 மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டிய நிலை வந்துவிடும் என்றுகூறி எதிர்ப்பு தெரிவித்தது.

    எனவே தமிழக அரசு பிஎம்ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் சில மாற்றங்களை கூறியது. ஆனால் அதனை மத்திய அரசு எற்று கொள்ளவில்லை. எனவே மத்திய அரசு, 2023-24-ம் ஆண்டில் விடுவிக்க வேண்டிய அனைவருக்கும் கல்வி இயக்க நிதி ரூ.248.29 கோடியை விடுவிக்கவில்லை. அதுமட்டுமின்றி 2024-25-ம் ஆண்டுக்கான ரூ.2,151.59 கோடியை வழங்காமல் உள்ளது. ஆக மொத்த மத்திய அரசு ரூ.2,399.88 கோடி நிதி ஒதுக்க வேண்டி உள்ளது.

    இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார். ஆனால் மத்திய அரசு, பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணைந்தால் தான் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தை விடுவிக்க முடியும் என்று கூறியது.

    இந்த நிலையில் பாராளுமன்றத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய அனைவருக்கும் கல்வி இயக்கம் நிதி குறித்து தி.மு.க. எம்.பி. ஆ.ராசா கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய அரசு எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு 2024-25 கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பு பிஎம்ஸ்ரீ ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமது உறுதிமொழியை கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதி அளித்தது. அதன்பின், பள்ளி கல்வி மற்றும் எழுத்துத்திறன் துறை, தமிழக அரசுக்கு ஒரு ஒப்பந்த வரைவு அனுப்பியது. ஆனால் கடந்த ஜூலை 6-ந்தேதி தமிழக அரசு ஒரு திருத்தப்பட்ட ஒப்பந்தத்தை அனுப்பியது. அதில் தேசிய கல்வி கொள்கை 2020-ஐ முழுமையாக செயல்படுத்துவது தொடர்பான முக்கியமான பத்தி நீக்கப்பட்டிருந்தது.

    இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு மாற்றங்கள் இல்லாமல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழக அரசிடம் மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்து வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அதாவது தமிழக அரசு பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணைந்தால் மட்டுமே தமிழகத்திற்கான நிதியை விடுவிக்க முடியும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பது தெரியவருகிறது.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜூனாவை 6 மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
    • திருமா அணி மாறுவாரா என்று தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார்.

    தி.மு.க.வை விமர்சித்து பேசிய விவகாரத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவை 6 மாதம் இடைநீக்கம் செய்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    விசிக-விலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஆதவ் அர்ஜூனா 6 மாதங்களில் மனம் மாறுவாரா அல்லது திருமா அணி மாறுவாரா என கேள்வி எழுப்பி உள்ளார்.

    • வரும் 14-ந்தேதி முதல் மார்ச் 1-ந்தேதி வரையில் கூடுதலாக ஒரு 3-ம் வகுப்பு ஏ.சி.பெட்டியும், ஒரு படுக்கை வசதி பெட்டியும் இணைக்கப்பட உள்ளது.
    • வரும் 15-ந்தேதி முதல் மார்ச் 2-ந்தேதி வரையில் கூடுதலாக ஒரு 3-ம் வகுப்பு ஏ.சி.பெட்டியும், ஒரு படுக்கை வசதி பெட்டியும் இணைக்கப்பட உள்ளது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை எழும்பூர் வரும் சிறப்பு ரெயிலில் (வண்டி எண்.08557), வரும் 14-ந்தேதி முதல் மார்ச் 1-ந்தேதி வரையில் கூடுதலாக ஒரு 3-ம் வகுப்பு ஏ.சி.பெட்டியும், ஒரு படுக்கை வசதி பெட்டியும் இணைக்கப்பட உள்ளது.

    மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து விசாகப்பட்டினம் செல்லும் சிறப்பு ரெயில் (08558), வரும் 15-ந்தேதி முதல் மார்ச் 2-ந்தேதி வரையில் கூடுதலாக ஒரு 3-ம் வகுப்பு ஏ.சி.பெட்டியும், ஒரு படுக்கை வசதி பெட்டியும் இணைக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கத் தமிழ்நாடு அரசு முன்வரவில்லை.
    • அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கத் தமிழ்நாடு அரசு முன்வரவில்லை.

    சென்னை:

    டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மதுரை மக்களுக்கு அ.தி.மு.க. செய்த துரோகத்துக்கு பாராளுமன்ற ஆவணங்களே சாட்சி என்றும், முழு பூசணிக்காயை கட்டுச்சோற்றில் மறைக்க முடியாது எனவும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    மேலும் அவர் கூறியிருப்பதாவது:-

    மதுரை டங்ஸ்டன் விவகாரத்தில் பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. செய்த துரோகம் வீடியோ ஆதாரங்களுடன் அம்பலமானதும், "நான் மசோதாவைத்தான் ஆதரித்தேன், டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ஆதரிக்கவில்லை" என தம்பிதுரை மழுப்பி இருக்கிறார்.

    அ.தி.மு.க. ஆதரவில் நிறைவேறிய சட்டத் திருத்த மசோதாதான், டங்ஸ்டன் சுரங்கத்தை ஏலம் விடும் அதிகாரத்தை மாநில அரசிடம் இருந்து பிடுங்கி மோடி அரசிடம் கொடுக்கக் காரணமானது. அந்தச் சட்ட மசோதாவைத் தி.மு.க. எதிர்த்தது; அ.தி.மு.க. ஆதரித்தது.

    டங்ஸ்டன் உள்ளிட்ட சில அரிய கனிமங்களை ஒன்றிய அரசு மட்டுமே ஏலம் விட முடியும் என்கிற சட்டத் திருத்தத்தைத்தான் தம்பிதுரை ஆதரித்தார்.

    அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கத் தமிழ்நாடு அரசு முன்வரவில்லை. இதே நிலை பல மாநிலங்களில் நீடிப்பதால், ஒன்றிய அரசே ஏலம் விடுவதற்கான திருத்தச் சட்டத்தைத்தான் அ.தி.மு.க. ஆதரித்தது. இதன் அடிப்படையில்தான் அரிட்டாப்பட்டி சுரங்க ஏலத்தை ஒன்றிய அரசு மேற்கொண்டது.

    அ.தி.மு.க.வின் தொடர் துரோகத்தின் புதிய அத்தியாயம் அம்பலமாகி இருக்கிறது. டெல்லியில் எதிர்க்க வேண்டிய இடத்தில் ஆதரித்துவிட்டு, இங்கே நாடகமாடுவது எடுபடாது.

    தம்பிதுரை ஆதரித்தது எந்தத் திருத்தத்தை?

    மாநில உரிமையைப் பறித்து ஒன்றிய அரசுக்கே அதிகாரம் வழங்குவதை அ.தி.மு.க. ஆதரிப்பது பச்சைத் துரோகம் அல்லவா?

    இத்தனையும் செய்துவிட்டு, இங்கே நாடகமாடுவது யாரை ஏமாற்ற?

    கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பார்கள். பழனிசாமி அவர்களின் புளுகும் - புளுகுக்குப் புனுகு பூசும் நேர்த்தியும் எட்டு நொடிகூட நிலைப்பதில்லை. அவர் இனிமேலாவது உண்மைகளைப் பேசிப் பழக வேண்டும் என்று அக்கறையோடு கேட்டுக் கொள்கிறேன்.



    • 1948-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை ஏற்றுக்கொண்டது.
    • சிறுபான்மையினர் தங்கள் மத நம்பிக்கையை எந்தவித அச்சஉணர்வுமின்றி கடைபிடிக்கவும் வழி ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மனித உரிமைகள் என்ற உள்ளார்ந்த அடிப்படைக் கொள்கை உலகம் முழுவதும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். உலகில் படைக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் சமம் என்ற அடிப்படையிலும், மதிப்பு மற்றும் உரிமைகள் அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டும், அனைவரும் சகோதர மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் என்ற நோக்கிலும் சர்வதேச மனித உரிமைகள் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் 10-ந்தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    1948-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை ஏற்றுக்கொண்டது. மனித உரிமைகளை நடைமுறைப்படுத்துவதில் பல நாடுகள் அடைந்த முன்னேற்றத்தினால்தான், மக்கள் சுதந்திரத்தை முழு அளவில் அனுபவிப்பதைத் தடுக்கும் தடைகள் அகற்றப்பட்டுள்ளன. பல நாடுகளில் இனவெறிச் சட்டங்கள் அகற்றப்பட்டுவிட்டன. பெண்களை இரண்டாம் தர நிலைக்குத் தள்ளும் சட்டங்கள் மற்றும் சமூக நடைமுறைகள் ஒழிக்கப்பட்டுவிட்டன. சிறுபான்மையினர் தங்கள் மத நம்பிக்கையை எந்தவித அச்சஉணர்வுமின்றி கடைபிடிக்கவும் வழி ஏற்பட்டுள்ளது.

    1948-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை பன்னாட்டு மனித உரிமைகள் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டதில் இந்தியாவின் பங்கு மகத்தானது. அப்பிரகடனத்தின்படி, இந்தியாவில் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 28.9.1993 அன்று நிறைவேற்றப்பட்டது.

    இச்சட்டத்தின்படி இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டில், தி.மு.க. ஆட்சியில்தான் மனித உரிமை மீறல் நிகழ்வுகள் எங்கும் நிகழக்கூடாது எனும் எண்ணத்துடன் 17.4.1997 அன்று ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆணையம் மனித உரிமைகளுக்காக பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது.

    இந்த ஆண்டிற்கான மனித உரிமைகள் நாள் கருப்பொருளாக ஐக்கிய நாடுகள் சபையானது 'நமது உரிமை, நமது எதிர்காலம் இப்போது' என்பதை அறிவித்துள்ளது. எல்லோர்க்கும் எல்லாம் என்ற அடிப்படையில், அனைத்துத் தரப்பினருக்குமான உன்னதமான திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி வரும் எங்களது திராவிட மாடல் அரசு, மதம், இனம், மொழி, நிறம், அரசியல் பாகுபாடின்றி அனைத்து உரிமைகளும் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்திடுவதிலும் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை நிலைநாட்டிட, சுயமரியாதையைப் பாதுகாத்திட இந்த மனித உரிமைகள் நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஆரம்பத்தில் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
    • டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் விவசாயிகள் நலனை மத்திய அரசு காக்கும் என்பது உறுதி.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஆரம்பத்தில் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக மக்கள் போராடியதற்கு பின்பு எதிர்ப்பதை போல் தமிழ்நாடு அரசு நாடகமாடுகிறது.

    சுரங்கம் குறித்து தமிழக பாஜக கடிதம் எழுதியதும் சட்டமன்றத்தில் பெரிய நாடகத்தை முதலமைச்சர் அரங்கேற்றுகிறார். டங்ஸ்டன் விவகாரத்தில் ராஜினாமா செய்வேன் எனக்கூறும் முதலமைச்சர், டாஸ்மாக் விவகாரத்தில் ராஜினாமா செய்யலாம்.

    நானும், எல். முருகனும் 12-ந்தேதி டெல்லி சென்று மத்திய அமைச்சரை சந்தித்து பேச உள்ளோம். டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் விவசாயிகள் நலனை மத்திய அரசு காக்கும் என்பது உறுதி என்றார். 

    • கடந்த மாத இறுதி வரை 5 ஏரிகளில் மொத்தம் 46 சதவீதம் மட்டுமே தண்ணீர் நிரம்பி இருந்தது.
    • சென்னை குடிநீர் ஏரிகள் அடுத்த வாரத்தில் முழு கொள்ளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழை கொட்டியது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளிலும் தண்ணீர் இருப்பு 74.32 சதவீதம் உயர்ந்துள்ளது.

    இந்த ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.757 டி.எம்.சி. ஆகும். நேற்று காலை நிலவரப்படி குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 8.738 டி.எம்.சி. ஆக உள்ளது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் நீர் மட்டம் 33 அடி தாண்டி உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 3.231 டி.எம்.சி.யில் 2.573 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 1,530 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    புழல் ஏரியில் மொத்த கொள்ளளவு ஆன 3.300 டி.எம்.சி.யில் 2.755 டி.எம்.சி.யும், சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவு ஆன 1.081 டி.எம்.சி.யில் 228 மில்லியன் கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3.645 டி.எம்.சி.யில் 2.860 டி.எம்.சி. தண்ணீரும், கண்ணன் கோட்டை- தேர்வாய்கண்டிகை ஏரியில் 500 மில்லியன் கனஅடியில் 322 மில்லியன் கனஅடியும் தண்ணீர் நிரம்பியுள்ளது.

    கடந்த மாத இறுதி வரை 5 ஏரிகளில் மொத்தம் 46 சதவீதம் மட்டுமே தண்ணீர் நிரம்பி இருந்தது. ஃபெஞ்சல் புயலால் பெய்த கனமழையின் காரணமாக ஏரிகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதற்கிடையே வங்க கடலில் தற்போது மேலும் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 12-ந்தேதி தமிழகம் நோக்கி வர உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் வரும் 6 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் சென்னை குடிநீர் ஏரிகள் அடுத்த வாரத்தில் முழு கொள்ளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இது நேற்று வலுவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
    • அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைய வாய்ப்பு உள்ளது.

    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில், சில தினங்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நேற்று வலுவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    அடுத்த 24 மணி நேரத்தில் இது மேலும் வலுவடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி நகரலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. இது மேற்கு- வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைய வாய்ப்பு உள்ளது.

    இந்த நிலையில், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று (டிசம்பர் 10) காலை 10 மணிக்குள்ளாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ×