என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பவானி சாகரில் ஐயா ஈஸ்வரன் நினைவு அரங்கம் திறக்கப்பட்டுள்ளது.
    • திருப்பூர் குமரன் நினைவை போற்றும் வகையில் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படும்.

    ஈரோடு:

    ஈரோட்டில் ரூ.951 கோடி மதிப்பில் 559 முடிவுற்ற திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    ஈரோடு தமிழகத்தில் புதிய வரலாற்றிற்கான தொடக்கம். வளர்ச்சி நிறைந்த தமிழகத்திற்கு காரணமான பெரியார், அண்ணா, கலைஞரை தந்த மண் ஈரோடு. வைக்கம் போராட்டத்தில் பெரியார் போட்ட அடித்தளத்தால் கேரள மக்கள் தமிழகத்தை பாராட்டுகின்றனர்.

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நம்மை விட்டு பிரிந்த சோகம் எனக்குள் இருக்கிறது. தந்தை பெரியாரின் பேரசன் இளங்கோவனின் இழப்பு தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய இழப்பு.

    பரபரப்பு, ஆர்ப்பாட்டம் இல்லாமல் நினைத்த செயலை வெற்றிகரமாக நிகழ்த்தக் கூடியவர் அமைச்சர் முத்துசாமி.

    ஈரோடு மாவட்டத்திற்கு தமிழக அரசு செய்துள்ள பணிகள் மிக பெரியது. அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி வைத்தோம்.

    தந்தை பெரியார் மருத்துவமனையில் பல்நோக்கு மலுத்துவமனை கட்டடம் திறக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் விரைவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட உள்ளது.

    பவானி சாகரில் ஐயா ஈஸ்வரன் நினைவு அரங்கம் திறக்கப்பட்டுள்ளது. திருப்பூர் குமரன் நினைவை போற்றும் வகையில் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படும்.

    பால்வள தந்தை பரமசிவத்தின் முழு உருவ சிலை பால் பண்ணையில் நிறுவப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • இரு தரப்பினரையும் காலை போலீஸ் நிலையம் அழைத்து விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
    • இரு தரப்பினர் புகாரின் பேரில் மயிலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ் இடையாளம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் இவருக்கு இன்று பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் என்கின்ற ஜெயசந்திரன், சந்தோஷ் மற்றும் அவரது நண்பர்கள் அதே பகுதியில் உள்ள விடுதலை சிறுத்கதைகள் ட்சி கொடி கம்பத்தின் அருகே பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்.

    இந்த நிலையில் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை ஆட்டி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பகுதிக்கு வந்த ராவணன், சுபாஷ், கன்னியப்பன் ஆகியோர் ஏன் கட்சி கொடி கம்பத்தை இதுபோல் செய்து உள்ளீர்கள் என கேட்டு உள்ளனர்.

    ஆனால் அதற்கு லட்சுமணன் தரப்பினர் தாங்கள் அந்த கொடியை சேதப்படுத்தவில்லை என கூறியுள்ளனர். இதனையடுத்து இவர்களுக்குள் மோதல் உருவாகும் சூழலை கண்ட அந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் ஒன்று கூடி இருதரப்பினரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    அப்போது திடீரென ராவணன் தரப்பினர் லட்சுமணன் மற்றும் அவரது நண்பர்களை தாக்கியதாக கூறப்படுகிறது . இதனால் இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தால் அந்த இடமே போர்க்களம் போல மாறியது. இதில் எதிர்தரப்பை சேர்ந்த பா.ம.க. கட்சியில் உள்ள லட்சுமணன் தரப்பினருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தை அறிந்த மயிலம் போலீசார் இரு தரப்பினையும் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு அசம்பாவிதம் நிகழாமல் இருப்பதற்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இரு தரப்பையும் விசாரணைக்காக போலீசார் அழைத்துச் செல்ல வந்துள்ளனர். அப்பொழுது லட்சுமணன் உறவினர்கள் மற்றும் பா.ம.கவினர் ஒரு தரப்பினரை மட்டுமே போலீஸ் விசாரிப்பதாக கூறி திடீரென லட்சுமணன் தரப்பினர் சென்ற காரை வழிமறித்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    திடீரென பா.ம.க.வினர் மற்றும் பொதுமக்கள் திண்டிவனம் ஜக்காம் பேட்டையில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த போலீசார் சமாதானம் பேசி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இரு தரப்பினரையும் காலை போலீஸ் நிலையம் அழைத்து விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்துசாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் பா.ம.க.வினர் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர். இரு தரப்பினர் புகாரின் பேரில் மயிலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரவு 10:45 மணிக்கு மேல் கடைசி இண்டிகோ விமானம் சென்னைக்கு புறப்பட்டுச் செல்லும்.
    • 24 மணி நேர சேவையின் முதல் கட்டமாக பார்க்கப்படுகிறது.

    மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர விமான சேவையின் தொடக்கமாக மதுரை – சென்னைக்கு இரவு 10.45 மணிக்கு இயக்கப்படுகிறது என விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மதுரை விமான நிலையம் கடந்த அக்டோபர் 1-ந் தேதி 24 மணி நேரமும் செயல்படும் என இந்திய விமான நிலையம் அறிவித்தது. இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    முதல் கட்டமாக இன்று முதல் மதுரையில் இருந்து இரவு 10:45 மணிக்கு மேல் கடைசி இண்டிகோ விமானம் சென்னைக்கு புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    ஏற்கெனவே சென்னையில் இருந்து 8.45 மணிக்கு வந்து மீண்டும் மதுரையிலிருந்து 9 மணிக்கு கடைசி விமானம் சென்றது. 24 மணிநேர சேவைக்கு பிறகு முதல் விமானமாக சென்னையிலிருந்து 9.25 மணிக்கு புறப்பட்டு இரவு 10.20 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறது.

    பின்னர் மீண்டும் பயணிகளுடன் 10.45-க்கு மேல் மதுரை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு 12.05 மணிக்கு சென்னையை சென்றடைகிறது. இதன்பின், இரவு சுமார் 2.15 மணிக்கு மேல் பினாங்கிற்கு புறப்பட்டு செல்கிறது.

    இதற்கு முன்பு இரவு 9.05 மணிக்கு மேல் மதுரையில் இருந்து விமான சேவை இல்லை என்றும், 24 மணி நேர சேவையின் முதல் கட்டமாக பார்க்கப்படுகிறது எனவும் விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

    • பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.
    • முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியம் வருகிறார்.

    ஈரோடு:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியம் வருகிறார்.

    மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.

    அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பயணமாக ஈரோடு மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ஈரோடு மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் கீழ் 2-வது கோடி பயனாளியான நஞ்சனாபுரத்தைச் சேர்ந்த சுந்தரம்பாள் என்ப வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சந்தித்து மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகத்தை வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 2 கோடியே ஒன்னாவது பயனாளியான வசந்தா என்பவர் வீட்டுக்கு நேரடியாக சென்று அவருக்கு வழங்கப்படும் இயன்முறை சிகிச்சை முறைகளை பார்வையிட்டு விவரங்களை கேட்டு அறிந்தார்.

    இதைத்தொடர்ந்து காளிங்கராயன் விருந்தினர் மாளிகைக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.

    தொடர்ந்து விருந்தினர் மாளிகையில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வரும் வளர்ச்சித்திட்ட பணிகள், சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் மீது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள், திட்டங்களின் தற்போதைய நிலை ஆகியவை குறித்து ஆய்வு கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி, அந்தியூர் செல்வராஜ் எம்.பி., கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, மாநகராட்சி ஆணையாளர் மனிஷ் மற்றும் அரசு உயர்அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து பொதுமக்களை சந்தித்து பேசினார். அப்போது பொதுமக்கள் முதல்-அமைச்சருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.


    பின்னர் ஈரோடு மேட்டுக்கடை பகுதியில் உள்ள தங்கம் மஹாலில் நடந்த தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

    கூட்டத்தில் பங்கேற்பதற்காக வழங்கப்பட்ட அடையாள அட்டை இருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலும் நிர்வாகிகள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

    கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும், அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    நிர்வாகிகள் கூட்டத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக முத்து மஹாலில் நடைபெற்ற மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி.சந்திர குமார் இல்ல திருமண வர வேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

    இந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, முத்து சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு காளிங்கராயன் விருந்தினர் மாளிகை சென்று இரவில் ஓய்வெடுத்தார்.

    அதை தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு காளிங்கராயன் விருந்தினர் மாளிகையில் இருந்து கிளம்பிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சோலார் புதிய பஸ் நிலையம் வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க சென்றார். அவருக்கு சாலை இருபுறங்களிலும் இருந்து மக்கள் வரவேற்பு கொடுத்தனர்.

    அரசு விழாவில் பங்கேற்ற முதல்-அமைச்சர் ஈரோடு மாவட்டம் சென்னி மலை ஊராட்சி ஒன்றியத்தில் 434 கிராமங்கள் குடிநீர் பெறும் வகையில் ரூ.482 கோடியில் நிறைவேற்றப்பட்டு உள்ள கூட்டு குடிநீர் திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.

    இதேபோல் தமிழ்நாடு வீட்டு வசதித்துறை சார்பில் ரூ.25 கோடி மதிப்பில் சூரம்பட்டி நால் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அலுவலகம், கடைகள் மற்றும் வீடுகளை திறந்து வைத்தார்.

    நகர்ப்புற வாழ்விட குடியிருப்பு திட்டத்தில் கோபி, சத்திய மங்கலம், பவானி உள்ளிட்ட 4 இடங்களில் ரூ.10.4 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய அடுக்குமாடி குடியி ருப்புகள், ரூ.59.60 கோடியில் 4 வழிச்சாலையாக விரி வாக்கம் செய்யப்பட்ட ஈரோடு ரிங் ரோடு, ரூ.20 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள கரூர் ரோடு, ஈரோடு பஸ் நிலைய புதிய வணிக வளாகம், பவானிசாகரில் தியாகி எம்.ஏ.ஈஸ்வரன் மணிமண்டபம் மற்றும் ஊர்வசி சிலை என மாவட்ட முழுவதும் ரூ.951 கோடியே 20 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 559 பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.


    இதேபோல் சோலார் ஒருங்கிணைந்த காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை சந்தை, தியாகி பொல்லான் அரங்கம் மற்றும் சிலை உள்பட மாவட்ட முழுவதும் ரூ.133 கோடியே 41 லட்சம் மதிப்பில் 222 புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    மேலும் விழாவில் 50 ஆயிரத்து 88 பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.284 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்வாறு ஒரே நாளில் ஈரோடு மாவட்டத்திற்கு ரூ.1,368 கோடியே 88 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    • நெல்லை நீதிமன்ற வளாகத்தில் கொலை சம்பவம் அரங்கேறியதால் பரபரப்பு.
    • கொலை செய்த கும்பல் காரில் தப்பியோட்டம்.

    நெல்லை நீதிமன்ற வாசலில் மாயாண்டி endraஇளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இளைஞரை அரிவாளால் வெட்டிய நான்கு பேர் கும்பல் அவரது முகத்தை சிதைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

    ஊராட்சி மன்ற துணை தலைவர் கொலை வழக்கில் ஆஜராக சென்ற போது மாயாண்டியை நான்கு பேர் கொண்ட கும்பல் மக்கள் நடமாட்டம் கொண்ட பகுதியில் வைத்தே வெட்டிக் கொன்றது. இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த மாயாண்டியை கொலை செய்ய ஏற்கனவே இரண்டு முறை முயற்சி நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நீதிமன்ற வளாகத்திலேயே கொலை சம்பவம் அரங்கேறிய நிலையில், நான்கு பேர் கும்பல் காரில் ஏறி தப்பியோடியது. வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் வந்த நிலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் வெட்ட வெளிச்சத்தில் படுகொலை சம்பவம் அரங்கேறியது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

    • சந்தியாவின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு ஆம்புலன்ஸில் உடலை வைத்தபடியே முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உறவினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த துவரங்குறிச்சியை சேர்ந்தவர் பிரவீன். இவரது மனைவி சந்தியா (வயது 32). இந்த தம்பதிக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் பெங்களுருரில் வசித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் சந்தியா 2-வது முறையாக கர்ப்பம் அடைந்தார். இதைத் தொடர்ந்து பிரசவத்திற்காக சந்தியாவும், அவரது கணவரும் சொந்த ஊருக்கு வந்தனர். இந்நிலையில் சந்தியாவுக்கு பிரசவவலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் பிரசவத்திற்காக பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்நிலையில் அவருக்கு ஆண்குழந்தை இறந்து பிறந்தது. மேலும் அவருக்கு ரத்தபோக்கு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஆம்புலன்சில் சந்தியாவை சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அப்போது செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த சந்தியாவின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு ஆம்புலன்ஸில் உடலை வைத்தபடியே முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இறந்த பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதில் சிலர் ஆவேசமடைந்து மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்து அடித்து உடைக்க தொடங்கினர். சிலர் மருத்துவமனை மீது கல்வீசி தாக்கினர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உறவினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    • வெள்ளி விலை இன்றும் குறைந்துள்ளது.
    • பார் வெள்ளி ரூ.98,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து கடந்த 8-ந்தேதி வரை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. கடந்த 9-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து, 13, 14-ந்தேதிகளில் சற்று சரிந்தது.

    அதனைத்தொடர்ந்து 15 மற்றும் 16-ந்தேதிகளில் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில், கடந்த 17-ந்தேதி கொஞ்சம் அதிகரித்து, நேற்று முன்தினம் மீண்டும் குறைந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் அதன் விலை இறங்குமுகத்தில் காணப்பட்டது.

    இந்த நிலையில், இன்று மூன்றாவது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ. 56,320-க்கும் கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.7,040-க்கும் விற்பனையாகிறது. 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



    வெள்ளி விலை இன்று இரண்டாவது நாளாக குறைந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 98 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ரூ.98,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    19-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,560

    18-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,200

    17-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,080

    16-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,120

    15-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,120

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    19-12-2024- ஒரு கிராம் ரூ. 99

    18-12-2024- ஒரு கிராம் ரூ. 100

    17-12-2024- ஒரு கிராம் ரூ. 100

    16-12-2024- ஒரு கிராம் ரூ. 100

    15-12-2024- ஒரு கிராம் ரூ. 100

    14-12-2024- ஒரு கிராம் ரூ. 100

    • ஹெலிகாப்டரை மேக கூட்டத்தின் நடுவே செலுத்தினார்.
    • நிலைதடுமாறி நிலத்தில் விழுந்து ஹெலிகாப்டர் நொறுங்கியது.

    குன்னூர்:

    குன்னூரில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முன்னாள் முப்படை தளபதி பிபின்ராவத் உள்பட 14 பேர் பலியானார்கள்.

    இந்த விபத்திற்கு மனிதப் பிழையே காரணம் என விமானப்படை அறிக்கை அளித்துள்ளது. இதுதொடர்பான தகவல்கள் பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் தாக்கலான பாதுகாப்புக்கான நிலைக்குழு அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

    அதில் 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 34 விமானப்படை விமானங்கள் விபத்தில் சிக்கியுள்ளது. இதில் 2021-ம் ஆண்டு டிசம்பர் 8-ந் தேதி முன்னாள் முப்படை தளபதி பிபின் ராவத் விபத்தில் சிக்கி இறந்த ஹெலிகாப்டர் விபத்தும் அடங்கும்.

    இந்த விபத்திற்கு விமானியின் தவறே காரணம். வானிலை மாற்றம் காரணமாக தடுமாறிய விமானி, ஹெலிகாப்டரை மேக கூட்டத்தின் நடுவே செலுத்தினார். பின்னர் நிலைதடுமாறி நிலத்தில் விழுந்து ஹெலிகாப்டர் நொறுங்கியது.

    ஹெலிகாப்டரில் இருந்த ரிகார்டரில் பதிவான விபரங்களின் அடிப்படையிலேயே, பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதற்கு மனித பிழையே காரணம் என விமானப்படை அறிக்கை அளித்துள்ளது.

    • கேரளா கழிவுகள் தமிழ்நாட்டிற்குள் நுழைவது பெருமளவு தடுக்கப்பட்டு வருகிறது.
    • கேரளா எல்லைப்பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

    கேரளா மாநில மருத்துவக் கழிவுகள் மற்றும் இறைச்சிக் கழிவுகள் தமிழக மாவட்டங்களில் கொட்டப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நெல்லை மாவட்டத்தை ஒட்டிய கிராமங்களில் கேரள கழிவுகள் கொட்டப்பட்டன.

    இந்த விவகாரம் பூதாகாரமாக வெடித்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார். இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு நிதித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், "கடந்த பத்தாண்டுகால அடிமை அதிமுக ஆட்சியில் தான், கோவை, தேனி , திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட தமிழ்நாடு கேரளா எல்லையோர பகுதிகளில், கேரளாவில் இருந்து சட்டவிரோதமாக கழிவுகளை கொண்டுவந்து கொட்டி தமிழ்நாடே கேரளாவின் குப்பைத்தொட்டியாகி கிடந்தது. 2016 ஆம் ஆண்டு "மருத்துவக் கழிவுகள் அபாயம்: இன்னும் விழித்துக்கொள்ளாத தமிழகம்!" என்று விகடன் தனி கட்டுரையே வெளியிட்டது. 2019 ஆம் ஆண்டில் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே உள்ள இனாம் கரிசல்குளம் கிராமத்தில் கேரளாவில் இருந்து குப்பைகளை லாரி லாரியாக கொண்டுவந்து கொட்டிய லாரிகளை மக்களே சிறைபிடித்த நிகழ்வு என பல்வேறு உதாரணங்களை எடுத்துக்கூற முடியும்.

    மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி அமைந்தவுடனே தமிழ்நாடு - கேரளா எல்லை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு கேரளா கழிவுகள் தமிழ்நாட்டிற்குள் நுழைவது பெருமளவு தடுக்கப்பட்டு வருகிறது. கழிவுகளை கொட்டுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதிர்பாரா விதமாக நடக்கும் ஓரிரு நிகழ்வுகள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்பட்டு வருகின்றனர்.

    சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் கல்லூர் பகுதிகளில் சட்டவிரோதமாக கேரளாவில் இருந்து கழிவுகள் கொண்டுவந்து கொட்டப்படுகிறது என புகார் வந்தவுடன் விரைந்து நடவடிக்கை எடுத்ததன் பேரில், கழிவுகளை கொட்டிய சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்த மனோகரன், மாயாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாட்டில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கேரள மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு இதுகுறித்து உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறும் ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    மாண்புமிகு முதலமைச்சர் உத்தரவின் பேரில் தமிழ்நாடு - கேரளா எல்லைப்பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதுபோல் எதிலாவது அரசியல் செய்து பேர் எடுக்கத் துடித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • அணையின் பாதுகாப்பு கருதி 120 அடிவரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்படும்.
    • அணைக்கு நேற்று வினாடிக்கு 4266 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 3 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    சேலம்:

    தமிழக, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் தீவிரத்தை பொறுத்து மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நீர்வரத்து கணிசமாக அதிகரித்து காணப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் மெதுவாக உயர்ந்து வருகிறது.

    மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124 அடியாகும். ஆனால் அணையின் பாதுகாப்பு கருதி 120 அடிவரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு ஏற்கனவே அணை 2 முறை நிரம்பியது. இந்த நிலையில் நீர்வரத்து தொடர்ந்து கணிசமாக வந்து கொண்டு இருப்பதால் அணையின் நீர்மட்டம் இன்று காலை 119 அடியை எட்டியது. எனவே இந்த ஆண்டில் 3-வது முறையாக அணை நிரம்புமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    அணைக்கு நேற்று வினாடிக்கு 4266 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 3 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    மேலும் டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 300 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 91.91 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • இன்றைய முக்கியச் செய்திகள்
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

    • கும்மிடிப்பூண்டி நோக்கி செல்லும் ரெயில்கள் எண்ணூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    • ரெயில் சேவை பாதிப்பால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

    சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி செல்லும் மார்க்கத்தில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. எண்ணூர்- அத்திப்பட்டு புதுநகர் ரெயில் நிலையம் அருகே உயரழுத்த மின்கம்பியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி செல்லும் ரெயில்கள் எண்ணூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரெயில் சேவை பாதிப்பால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

    மின்கம்பியில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 

    ×