என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மற்ற கட்சிகளை விட பெரிய மரியாதை தருகிற கட்சி தி.மு.க. தான்.
- எதிர்க்கட்சிகளை திட்டுவது எங்கள் வேலை இல்லை. மக்கள் பணி தான் முக்கியம்.
சென்னை:
நடிகர் சத்யராஜ் மகளும் பிரபல ஊட்டசத்து நிபுணருமான திவ்யா சமீபத்தில் தி.மு.க.வில் சேர்ந்தார். அவர் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கிழக்கு கடற்கரை சாலையில் சமீபத்தில் தி.மு.க. கொடியுடன் சிலர் காரில் சென்ற பெண்களை விரட்டியதாக வீடியோ காட்சிகள் வெளியானது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு விசாரணை செய்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
அண்ணா பல்கலைக் கழக விவகாரத்திலும், சம்பந்தப்பட்ட நபரை கைது செய்துள்ளனர். அந்த நபர் தி.மு.க.காரர் என்று செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. பிரபலமானவர்களுடன் யார் வேண்டுமானாலும் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.
அப்படி புகைப்படம் எடுத்துக் கொண்டவர் தவறு செய்தால் பிரபலங்கள் பொறுப்பாக முடியுமா? அண்ணா பல்கலைக் கழகத்தில் ஒரு பெண்ணிற்கு நடந்தது பெரிய கொடுமையான விஷயம். ஆனால் தி.மு.க. அரசு தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
திமு.க. கட்சி கொடி எங்கும் கிடைக்கிறது. கடைகளில் தி.மு.க. கொடியை வாங்கிக் கொண்டு யாரும் தவறு செய்தால் அதற்கு தி.மு.க. எப்படி பொறுப்பாக முடியும். ஈ.சி.ஆர். சம்பவத்துக்கும் அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
எதிர்க்கட்சிக்காரர் சொல்லும் பொய்களுக்கும், புகார்களுக்கும் நாங்கள் பதில் சொல்ல அவசியம் கிடையாது. எதிர்க்கட்சிகள் இது பற்றி பேசுவதற்கு தகுதி கிடையாது என்று தான் நான் நினைக்கிறேன்.
முதலமைச்சர் ஸ்டாலின் பதவி ஏற்ற தருணம் கொரோனா உச்சத்தில் இருந்த தருணம். பதவி ஏற்றதும் கொரோனாவுக்கு தீவிர நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்தினர்.
பாரத பிரதமர் மோடி கொரோனாவுக்கு எல்லோரும் மாடியிலிருந்து விளக்கு பிடிக்க சொன்னார். விளக்கு பிடிக்க இதுவா நேரம்.
தி.மு.க. ஆட்சியில் இல்லை என்றால் கொரோனாவையும், வெள்ளத்தையும் சமாளித்திருக்கவே முடியாது. மற்ற கட்சிகளை விட பெண்களுக்கு பெரிய மரியாதை தருகிற கட்சி தி.மு.க. தான்.
அண்ணாமலை லண்டன் போய் விட்டு வந்து சவுக்கால் அடித்துக் கொண்டார். இதைப் பார்த்து, 'பக்கத்து வீட்டு பையன் சாக்லேட் கொடுக்கவில்லை என்றால் நான் சவுக்கால் அடித்துக் கொள்வேன்' என்கிறான்.
தி.மு.க. ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார். நீங்கள் கண்டிப்பாக செருப்பு அணிந்து கொள்ளுங்கள். ஏனெனில் உங்கள் காலில் முள் குத்தினால் கூட தி.மு.க. தான் காரணம் என்று சொல்வீர்கள்.
அ.தி.மு.க., பா.ஜ.க. பற்றி நாங்கள் பேசுவதற்கு நிறைய இருக்கிறது. எதிர்க்கட்சிகளை திட்டுவது எங்கள் வேலை இல்லை. மக்கள் பணிதான் முக்கியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த சில நாட்களாக பாசனத்திற்கான நீர் நிறுத்தப்பட்டு மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 45.60 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. பருவமழை கைகொடுத்ததால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக பாசனத்திற்கான நீர் நிறுத்தப்பட்டு மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை முதல் பாசனத்திற்கு 450 கனஅடி நீருடன் சேர்த்து 519 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 508 கனஅடி நீர் வருகிறது.
அணையின் நீர்மட்டம் 65.42 அடியாக உள்ளது. 4724 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 120.55 அடியாக உள்ளது. 104 கனஅடி நீர் வருகிறது. 556 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 2737 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 45.60 அடியாக உள்ளது. 21 கனஅடி நீர் வருகிறது. 75 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 107.58 அடியாக உள்ளது. 2.5 கனஅடி நீர் வருகிறது. 25 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 37.50 அடியாக உள்ளது. 6 கனஅடி நீர் வருகிறது. 14.47 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
போடி 0.4, உத்தமபாளையம் 0.8, கூடலூர் 1.2, சண்முகாநதி 3.4 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.
- அரசு ஊழியர்கள் ஊதியத்தை வாங்கிக் கொண்டு சிறை கைதிகளை வைத்து வேலை வாங்குவது எப்படி நியாயமாகும்?’ என்று கேள்வி எழுப்பினர்.
- மனுதாரர் கோதண்டனுக்கு 23 நாட்கள் விடுப்பு வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை:
குற்ற வழக்கில் தண்டனை பெற்ற கோதண்டன் என்பவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் தனக்கு 30 நாட்கள் விடுப்பு வேண்டும் என்று புழல் சிறைத்துறை அதிகாரியிடம் விண்ணப்பம் செய்தார். ஆனால் 3 ஆண்டுகள் தண்டனையை முடித்தால் மட்டுமே விடுப்பு வழங்க முடியும் என்று கூறி கோதண்டனின் விண்ணப்பத்தை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கோதண்டன் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் அக்ஷயா ஆஜராகி, 'மனுதாரர் சிறையில் ஒழுக்கமாக உள்ளார். அவர் சிறை துறையில் அதிகாரிகளுக்கு உதவியாக அலுவலக பணிகளையும் செய்து வருகிறார். அவர் மீது எந்தவித குற்றச்சாட்டும் சிறை அதிகாரிகள் சுமக்கவில்லை. அதனால் அவருக்கு விடுப்பு வழங்க வேண்டும்' என்று வாதிட்டார்.
அதற்கு நீதிபதிகள், 'பொதுவாக தண்டனை கைதிகளுக்கு சிறையில் பணி வழங்கப்படும். சமையல் உள்ளிட்ட பணிகளை அவர்கள் செய்வார்கள். ஆனால் கைதி கோதண்டன் அதிகாரிகள் செய்யும் அலுவல் பணியான நிர்வாக பணியை செய்வதாக கூறப்படுகிறது. அரசு ஊழியர்கள் ஊதியத்தை வாங்கிக் கொண்டு சிறை கைதிகளை வைத்து வேலை வாங்குவது எப்படி நியாயமாகும்?' என்று கேள்வி எழுப்பினர்.
அரசு தரப்பில், இது குறித்து விசாரித்து உறுதி செய்வதாக கூறப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, 'இதுபோன்ற செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. ஊதியம் வாங்கும் அரசு ஊழியர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை அவர்கள்தான் செய்ய வேண்டும். சிறையில் அலுவல் பணியை தண்டனை கைதியை கொண்டு செய்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. எனவே தண்டனை கைதிகளை கொண்டு சிறை நிர்வாகப் பணி மேற்கொள்ளப்படவில்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
இதன் பின்னரும் எதிர்காலத்தில் இதுபோன்ற புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரிக்கை செய்தனர். பின்னர் மனுதாரர் கோதண்டனுக்கு 23 நாட்கள் விடுப்பு வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
2-ந்தேதி தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
3-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
- இந்தியாவில் 15 சதவீதம் பேர், அதாவது 20 கோடிக்கு மேல் மக்கள் வறுமையில் இருக்கிறார்கள்.
- 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டு விட்டதாக ஏமாற்றுகிறார்கள்.
சென்னை:
மத்திய பட்ஜெட் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது:-
உலகில் 5 நாடுகளில் 20 கோடிக்கும் கீழாக மக்கள் தொகை உள்ளது. 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 15 சதவீதம் பேர், அதாவது 20 கோடிக்கு மேல் மக்கள் வறுமையில் இருக்கிறார்கள். அவர்களுக்கான எந்த திட்டமும் பட்ஜெட்டில் இல்லை. ஆனால் 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டு விட்டதாக ஏமாற்றுகிறார்கள். இந்த பட்ஜெட் கானல் நீரைப் போன்றது. தண்ணீர் இருக்கிறது என்று நினைத்து போனால் ஏமாந்து போய்விடுவார்கள். அதே போலத்தான் மக்களை ஏமாற வைத்துள்ளார்கள்.
பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நிதி எதுவும் கொடுக்காமல் மத்தியில் பிரிவினை வாதங்களை பேசி ஏமாற்றி அரசியல் செய்வது. இது தான் மோடி அரசு.
இவ்வாறு அவர் கூறினார்.
- பட்ஜெட்டில், தனிநபருக்கான வருமான வரி உச்சவரம்பு 7 லட்சத்தில் இருந்து 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை:
2025-26-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில், தனிநபருக்கான வருமான வரி உச்சவரம்பு 7 லட்சத்தில் இருந்து 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இனி மாதம் 1 லட்சம் வரை சம்பாதிப்பவர்கள் வரி கட்ட தேவையில்லை என்று அறிவித்தார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
புதிய வரி விதிப்பின் கீழ் ரூ.12 லட்சம் வருமானம் வரை "பூஜ்ஜிய வருமான வரி" அறிவித்ததற்காக, பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு தமிழக பாஜக மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் சார்பாக நன்றி தெரிவிக்கிறோம்.
நமது மத்திய அரசின் இந்த முடிவு நடுத்தர வர்க்கத்தினரின் சேமிப்பை அதிகரிக்கும் மற்றும் எண்ணற்ற குடும்பங்களுக்கு நிதி ஸ்திரத்தன்மையை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.
- வெள்ளியங்கிரி மலையேறுவதற்காக இன்று காலையிலேயே ஏராளமான பக்தர்கள் பூண்டி அடிவாரத்தில் குவிந்தனர்.
- மலையேற்றத்துக்காக வரும் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
வடவள்ளி:
கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பூண்டி அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வார்கள். மலைகோவில் அடிவாரத்தில் இருந்து சுமார் 6 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள 7-வது மலையில் சுயம்பு லிங்க சுவாமி உள்ளது.
7-வது மலையில் உள்ள சுயம்பு லிங்கத்தை வழிபட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவிலான பக்தர்கள் வருவது வழக்கம். இந்த மலைப்பாதையில் பக்தர்கள் ஏறுவதற்கு ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நடப்பாண்டில் இன்று முதல் மே மாதம் 31-ந் தேதி வரை வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வெள்ளியங்கிரி மலையேறுவதற்காக இன்று காலையிலேயே ஏராளமான பக்தர்கள் பூண்டி அடிவாரத்தில் குவிந்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
அவர்களுக்கு அடிவாரத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ பரிசோதனை முகாமில் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் வைத்திருந்த உடமைகளையும் வனத்துறையினர் சோதித்தனர்.
அவர்கள் பிளாஸ்டிக் பைகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் வைத்துள்ளனரா என கண்காணித்தனர். அப்படி பொருட்கள் இருந்தால் அதனை அவர்களிடம் வாங்கி விட்டு மலையேறுவதற்கு அனுமதித்தனர்.
பின்னர் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலையேற்ற பயணத்தை தொடங்கினர். அப்போது கைகளில் மூங்கில் குச்சிகள் மற்றும், தங்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் உள்ளிட்ட பொருட்கள் வைத்திருந்தனர்.
இன்று முதல் மே மாதம் 31-ந் தேதி வரை மலையேற அனுமதி உள்ளதால் வருகிற நாட்களில் இன்னும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே மலையேற்றத்துக்காக வரும் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் குழந்தைகள், உயர் ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு, சிறுநீரகக் கோளாறு, சர்க்கரை நோய், ரத்த சோகை உள்ளவர்கள் மலையேற்றப் பயணத்தின்போது கவனத்துடன் இருக்க வேண்டும்.
பக்தர்கள் தனியாக செல்லாமல் குழுவாக செல்ல வேண்டும். அத்தியாவசியமான பொருட்களான குடிநீர், உணவு, மருந்து பொருட்களை எடுத்து வர வேண்டும். மலையேற்ற பகுதிகளில் கடும் குளிர் நிலவுவதால் தேவையான பாதுகாப்பு உடைகளை எடுத்து வர வேண்டும். அடிவாரத்தில் உள்ள மருத்துவ முகாமில் பரிசோதனை செய்த பின்னர் மலையேற வேண்டும்.
மேலும் மலையேற்றத்தின்போது தலைவலி, நெஞ்சு வலி, தலைசுற்றுதல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டால் பயணத்தை தொடராமல் உடனடியாக மருத்துவக் குழுவினரை அணுக வேண்டும் என பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- ஆதவ் அர்ஜுனா மூலமாக மற்ற கட்சிகளும் விஜய்யுடன் கூட்டணி அமைப்பதற்காக முயற்சிக்கும்.
- அடுத்தடுத்த நகர்வுகள் வரும் காலங்களில் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை:
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ள நிலையில் அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணியை அமைப்பதற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார்.
இதற்கிடையே தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி அரசியல் களத்தில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளார்.
கட்சி தொடங்கிய பிறகு நடைபெற்ற முதல் மாநாட்டில் பேசிய விஜய் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாகவும், அது போன்று கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இவரது கருத்தையொட்டியே திருமாவளவனும் சில நாட்களுக்கு முன்பு கருத்துக்களை கூறி இருந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் அப்போது இருந்த ஆதவ் அர்ஜுனா ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்கிற கோஷத்தை வலுவாகவே எழுப்பினார். இது தி.மு.க.-விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே விரிசலை ஏற்படுத்துவது போன்ற சூழலையும் உருவாக்கியது.
இதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா தற்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். அவருக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் என்கிற புதிய பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில் தனது பழைய தலைவரான திருமாவளவனை அவர் சந்தித்து பேசினார். இது அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆதவ் அர்ஜுனா மூலமாக தமிழக அரசியலில் விஜய் கூட்டணி கணக்கை தொடங்குவதற்கு திட்டமிட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் அரசியல் ஆர்வலர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
ஆதவ் அர்ஜுனா மூலமாக மற்ற கட்சிகளும் விஜய்யுடன் கூட்டணி அமைப்பதற்காக முயற்சிக்கும். அடுத்தடுத்த நகர்வுகள் வரும் காலங்களில் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக அ.தி.மு.க.-தமிழக வெற்றி கழகம் இடையே எதிர்காலத்தில் கூட்டணி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜுனா சேர்ந்திருப்பது கூட்டணி ஆட்சி கோஷத்துக்கு மேலும் வலுசேர்க்கும் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாகவும் உள்ளது.
ஆனால் ஆதவ் அர்ஜுனா என்னை சந்தித்து பேசியதன் பின்னணியில் எந்த அரசியல் கணக்கும் இல்லை என்று திருமாவளவன் கூறி உள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-
தமிழக அரசியலில் புதிய அணுகுமுறையை ஆதவ் அர்ஜுனா தொடங்கி வைத்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வெளியேறி இன்னொரு கட்சியில் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றுள்ள நிலையில் எனது வாழ்த்தும் தேவை என்கிற எண்ணத்தில் அவர் தேடி வந்திருக்கும் இந்த அணுகுமுறையை தமிழக அரசியலில் கற்றுக் கொள்ள வேண்டும்.
கருத்தியல் ரீதியாக களத்தில் எதிர் எதிர் துருவங்களாக செயல்படக் கூடிய நிலை இருந்த போதும் இது போன்ற நட்புறவை பேணுவது நாகரீகமான அணுகு முறையாகும். ஆதவ் அர்ஜுனா என்னை சந்தித்ததில் எந்த அரசியல் கணக்கும் இல்லை. இதற்கு எந்தவித முடிச்சும் போட்டு பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- இன்று மத்தியதர வகுப்பினா் அவசரத் தேவைகளுக்கு விமானத்தில் பயணிக்கின்ற நிலை உருவாகியுள்ளது.
- கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மட்டும் ஒட்டுமொத்தமாக 18,43,337 பேர் சென்னை விமான நிலையம் வந்து சென்றுள்ளனர்.
திருச்சி:
ஒரு காலத்தில் விமானப் பயணம் என்பது பெரும் பணக்காரா்களுக்கே சாத்தியமானதாக இருந்தது. ஆனால், இன்று மத்தியதர வகுப்பினா் அவசரத் தேவைகளுக்கு விமானத்தில் பயணிக்கின்ற நிலை உருவாகியுள்ளது.
தொலைவில் உள்ள இடத்திற்கு குறைந்த நேரத்தில் அடைந்துவிட முடியும் என்பதாலும், ரெயில் பயணம், பஸ் பயணம் போன்றவை ஏற்படுத்தும் அலுப்பும் களைப்பும் விமானப் பயணத்தை தூண்டுகிறது, உள்நாட்டு நகரங்களுக்கிடையேயான விமானப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
நாட்டில் உள்நாட்டு விமான போக்குவரத்தில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் 793.48 லட்சம் பேர் பயணித்துள்ளனர். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 760.93 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விமானத்தில் பயணிப்போர் எண்ணிக்கை 4.28சதவீதம் அதிகரித்துள்ளது என்று விமான ஆணையரகம் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
மாதவாரியாக கணக்கிட்டால், ஒரு மாதத்துக்கு 5.76 சதவீதம் பயணிகள் அதிகரித்து வருகின்றனர்.
விமான பயணத்தில் பயணிகள் வருகை பதிவில் மற்ற விமான நிலையங்களை காட்டிலும் சென்னை பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மட்டும் ஒட்டுமொத்தமாக 18,43,337 பேர் சென்னை விமான நிலையம் வந்து சென்றுள்ளனர்.
சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் சர்வதேச விமான நிலையங்களில் திருச்சி முக்கிய இடத்தை வகிக்கிறது. திருச்சி விமான நிலையத்திற்கு கடந்த 11-ந் தேதி அதாவது ஒரு நாள் மட்டும் 7ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து சென்றுள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் இருந்து திருச்சி வந்த விமான பயணி ஒருவர் கூறும்போது,
திருச்சியில் உள்ள எனது மகனை பார்ப்பதற்காக கடந்த 26-ந் தேதி சென்னை விமான நிலையத்தில் இருந்து இரவு 8.40 மணி விமானத்தில் திருச்சி சென்றேன்.
பயணத்தின்போது விமானத்திற்குள் கடைப்பிடிக்க வேண்டியது குறித்தும், அவசர காலத்தில் மேற்கொள்ள வேண்டியது குறித்தும் மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கைகள் குறித்தும் அறிவிப்பு செய்தார்கள்.
ஆனால் அந்த அறிவிப்புகள் அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருந்தது. மேலும் இருக்கையில் ஒட்டியுள்ள அறிவிப்பு ஸ்டிக்கரிலும் தமிழ் இல்லை.
எனக்கு எதுவுமே புரியவில்லை. ஏனென்றால் தமிழை தவிர மற்ற மொழிகள் தெரியாது. அருகில் அமர்ந்திருந்தவரிடம் தயக்கத்துடன் கேட்டு தெரிந்து கொண்டேன். விமானத்தில் மட்டுமல்ல, விமான நிலையத்திலும் இதே நிலைமைதான் உள்ளது.
இந்தி, ஆங்கிலத்தில் செய்த அறிவிப்பை குறை சொல்லவில்லை. தமிழகத்திற்குள் இயக்கப்படும் விமானத்தில் தமிழில் அறிவிப்பு இருந்தால் என்னை போன்று பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இந்த அறிவிப்பை கேட்டுக் கொண்டே தினந்தோறும் விமானத்தில் பயணம் செய்யும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என் போன்றவர்களின் மனக்குமுறலை மனதில் வைத்து, தமிழகத்திற்குள் இயக்கப்படும் விமானங்களில் தமிழில் அறிவிப்பு செய்ய நடவடிக்கை எடுத்தால் பயனுள்ளதாக அமையும் என்றார்.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் 22-ந்தேதி சவரனுக்கு ரூ.60,200-க்கு விற்பனையாது. அன்று முதல் தங்கம் விலை சவரன் ரூ.60ஆயிரத்துக்கு கீழ் வரவில்லை. இதனை தொடர்ந்து இந்த வாரத்தில் தங்கம் விலை நேற்றுமுன்தினம் புதிய உச்சமாக சவரனுக்கு ரூ.60,760-க்கு விற்பனையானது. இதனை தங்கம் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் வார இறுதி நாளான இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,745-க்கும் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.61,960-க்கும் விற்பனையாகிறது.
இந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
31-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 61,840
30-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,880
29-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,760
28-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,080
27-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,320
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
31-01-2025- ஒரு கிராம் ரூ. 107
30-01-2025- ஒரு கிராம் ரூ. 106
29-01-2025- ஒரு கிராம் ரூ. 104
28-01-2025- ஒரு கிராம் ரூ. 104
27-01-2025- ஒரு கிராம் ரூ. 104
- காரில் வந்த பெண்களை, வீடு வரைக்கும் காரில் பின்தொடர்ந்து விரட்டிச்சென்று மிரட்டி உள்ளனர்.
- கைது செய்யப்பட்ட 4 பேருக்கு பிப்.14-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
சென்னையை அடுத்த முட்டுக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த 25-ந் தேதி இரவு இளம்பெண்கள் வந்த காரை, 2 கார்களில் வந்த 8 வாலிபர்கள் சாலையின் குறுக்கே காரை நிறுத்தி வழிமறித்து, அந்த பெண்களை, வீடு வரைக்கும் காரில் பின்தொடர்ந்து விரட்டிச்சென்று மிரட்டி உள்ளனர்.
இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கானத்தூர் போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, துணை கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தோஷ், தமிழரசு, அஸ்வின், விஸ்வேஸுக்கு பிப்.14-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான சந்துருவை தேடி வந்தநிலையில் அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும்.
சென்னை:
சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
திருவேற்காடு: கோலடி ரோடு, அன்பு நகர், மகாலட்சுமி நகர், தேவி கருமாரியம்மன் நகர், அன்னை அபிராமி நகர், தேரோடும் வீதி, கிருஷ்ணா நகர், சின்ன கோலடி, லட்சுமி நகர், செல்லியம்மன் நகர், தேவி நகர், செந்தில் நகர், சீனிவாசன் நகர்.
கொடுங்கையூர்: ஆண்டாள் நகர், அன்னைதெராசா நகர், ஐஸ்வர்யா நகர், சன்னதி மணலி சாலை, லட்சுமி அம்மன் நகர் 1 முதல் 3-வது தெரு, தென்றல் நகர் 1 முதல் 8வது தெரு, வேதாந்த முருகப்பன் தெரு, அன்னை அவென்யூ 1 முதல் 3-வது தெரு, எஸ்ஆர் நகர், விஜயலட்சுமி நகர், பத்ரகிரி நகர், ராகவேந்திரா நகர், கணேஷ் நகர், சுகந்தம்மாள் நகர், பாலாஜி நகர் மற்றும் சக்திநகர், கேஎம்ஏ கார்டனின் ஒரு பகுதி, டி.எச். சாலை, கேகேடி நகர் பிளாக் 1 முதல் 9 வரை, சிட்கோ நகர், இன்சி எஸ்டேட், கே.எம். நகர், தாமோதரன் நகர், கோல்டன் காம்ப்ளஸ், ஜெஜெஆர் நகர், எஸ்.எம். நகர் பிளாக் 25 முதல் 88, சாமந்திபூ காலனி, மல்லிகாபூ காலனி, ஆர்ஆர் நகர், கே.ஏ. 4வது தெரு, திருவள்ளுவர் நகர், வியாசர்பாடி புதுநகர், மேற்கு பிளாக், மேற்கு கிராஸ், சென்ட்ரல் கிராஸ் 1 முதல் 14-வது தெரு, 5 முதல் 9-வது கிராஸ் தெரு, சென்ட்ரல் அவென்யூ மற்றும் வெஸ்ட் அவென்யூ ரோடு, சிஎம்டபிள்யூஎஸ்எஸ்பி பம்பிங் ஸ்டேஷன், சென்ட்ரல் கிராஸ் ஸ்ட்ரீட் 10 முதல் 19-வது தெரு, 4வது மெயின் ரோடு, 7வது மெயின் ரோடு 8-வது மெயின் ரோடு, வடக்கு அவென்யூ சாலை மற்றும் பாரியர் கோட்டர்ஸ்.
முடிச்சூர்: லட்சுமி நகர் மேற்கு, கிழக்கு, தெற்கு, கக்கன் தெரு, பாலாஜி நகர், இ.பி.காலனி, ஈஸ்வரன் நகர், எம்.ஜி.ஆர்.நகர், லிங்கம் நகர்.
ராஜகீழ்பாக்கம்: வேளச்சேரி மெயின் ரோடு, மேத்தா நகர் மெயின் ரோடு, மகாலட்சுமி நகர் மெயின் ரோடு, மாருதி நகர், கோமதி நகர், ஐயப்பா நகர், விவேகந்தன் தெரு, ராசுகி தெரு, வேணுகோபால் தெரு, அண்ணா தெரு, பாரதியார் தெரு, திருமகள் நகர், கார்த்திக் அவென்யூ, பிரதீப் அவென்யூ, குருநாதர் தெரு, ரங்கா காலனி, வஉசி தெரு, நேதாஜி தெரு, பவானந்தியர் தெரு, மாரி அம்மன் கோவில் தெரு, சாம் அவென்யூ, செம்பாக்கம் மெயின் ரோடு, மகாசக்தி காலனி, ஐஓபி காலனி, கேம்ப் ரோடு, கர்ணம் தெரு, வேளச்சேரி மெயின் ரோடு, கண்ணன் நகர், அவ்வை நகர், பாரதி நகர், மாடம்பாக்கம் மெயின் ரோடு, பொன்னியம்மன் கோவில் தெரு, சின்மை காலனி, கம்பர் தெரு, மாணிக்கவாசகர் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, கனகராஜ் தெரு, அம்பேத்கர் தெரு, அண்ணா தெரு, ராஜீவ் காந்தி நகர், கலைஞர் கருணாநிதி நகர், துர்கா காலனி, வெங்கட்ரமணன் நகர், சிவகாமி நகர், முத்தமிழ் நகர், சித்தேலப்பாக்கம், மணவாள நகர் ஐயப்பா நகர், ஏரிக்கரை தெரு.
கோவூர்: புதுவேடு, அக்னீஸ்வரர் கோவில் தெரு, மூன்றாம் கட்டளை மெயின் ரோடு, திருமலை நகர், நான்கு ரோடு சந்திப்பு, ஏரிக்கரை ரோடு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






