என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க.வை குறை சொல்ல எந்த கட்சிக்கும் தகுதி இல்லை- சத்யராஜ் மகள் திவ்யா பேட்டி
- மற்ற கட்சிகளை விட பெரிய மரியாதை தருகிற கட்சி தி.மு.க. தான்.
- எதிர்க்கட்சிகளை திட்டுவது எங்கள் வேலை இல்லை. மக்கள் பணி தான் முக்கியம்.
சென்னை:
நடிகர் சத்யராஜ் மகளும் பிரபல ஊட்டசத்து நிபுணருமான திவ்யா சமீபத்தில் தி.மு.க.வில் சேர்ந்தார். அவர் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கிழக்கு கடற்கரை சாலையில் சமீபத்தில் தி.மு.க. கொடியுடன் சிலர் காரில் சென்ற பெண்களை விரட்டியதாக வீடியோ காட்சிகள் வெளியானது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு விசாரணை செய்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
அண்ணா பல்கலைக் கழக விவகாரத்திலும், சம்பந்தப்பட்ட நபரை கைது செய்துள்ளனர். அந்த நபர் தி.மு.க.காரர் என்று செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. பிரபலமானவர்களுடன் யார் வேண்டுமானாலும் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.
அப்படி புகைப்படம் எடுத்துக் கொண்டவர் தவறு செய்தால் பிரபலங்கள் பொறுப்பாக முடியுமா? அண்ணா பல்கலைக் கழகத்தில் ஒரு பெண்ணிற்கு நடந்தது பெரிய கொடுமையான விஷயம். ஆனால் தி.மு.க. அரசு தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
திமு.க. கட்சி கொடி எங்கும் கிடைக்கிறது. கடைகளில் தி.மு.க. கொடியை வாங்கிக் கொண்டு யாரும் தவறு செய்தால் அதற்கு தி.மு.க. எப்படி பொறுப்பாக முடியும். ஈ.சி.ஆர். சம்பவத்துக்கும் அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
எதிர்க்கட்சிக்காரர் சொல்லும் பொய்களுக்கும், புகார்களுக்கும் நாங்கள் பதில் சொல்ல அவசியம் கிடையாது. எதிர்க்கட்சிகள் இது பற்றி பேசுவதற்கு தகுதி கிடையாது என்று தான் நான் நினைக்கிறேன்.
முதலமைச்சர் ஸ்டாலின் பதவி ஏற்ற தருணம் கொரோனா உச்சத்தில் இருந்த தருணம். பதவி ஏற்றதும் கொரோனாவுக்கு தீவிர நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்தினர்.
பாரத பிரதமர் மோடி கொரோனாவுக்கு எல்லோரும் மாடியிலிருந்து விளக்கு பிடிக்க சொன்னார். விளக்கு பிடிக்க இதுவா நேரம்.
தி.மு.க. ஆட்சியில் இல்லை என்றால் கொரோனாவையும், வெள்ளத்தையும் சமாளித்திருக்கவே முடியாது. மற்ற கட்சிகளை விட பெண்களுக்கு பெரிய மரியாதை தருகிற கட்சி தி.மு.க. தான்.
அண்ணாமலை லண்டன் போய் விட்டு வந்து சவுக்கால் அடித்துக் கொண்டார். இதைப் பார்த்து, 'பக்கத்து வீட்டு பையன் சாக்லேட் கொடுக்கவில்லை என்றால் நான் சவுக்கால் அடித்துக் கொள்வேன்' என்கிறான்.
தி.மு.க. ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார். நீங்கள் கண்டிப்பாக செருப்பு அணிந்து கொள்ளுங்கள். ஏனெனில் உங்கள் காலில் முள் குத்தினால் கூட தி.மு.க. தான் காரணம் என்று சொல்வீர்கள்.
அ.தி.மு.க., பா.ஜ.க. பற்றி நாங்கள் பேசுவதற்கு நிறைய இருக்கிறது. எதிர்க்கட்சிகளை திட்டுவது எங்கள் வேலை இல்லை. மக்கள் பணிதான் முக்கியம்.
இவ்வாறு அவர் கூறினார்.






