என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • இன்று காலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்தது.
    • மதியம் சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்தது.

    2025-26-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்தது. பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுபோன்ற அறிவிப்பு ஏதும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. இதனால் இன்று மதியம் 2-வது முறையாகவும் தங்கம் விலை உயர்ந்தது.

    மதியம் சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்துள்ளது. இன்று சவரனுக்கு மொத்தமாக 480 ரூபாய் உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் ஒரு சவரன் தங்கம் 62,320 ரூபாய்க்கும், ஒரு கிராம் 7,790 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • வேங்கைவயலை சேர்ந்த 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு அவர்களது பெயர் இடம் பெற்றுள்ளது.
    • புகார்தாரரை சரியாக விசாரிக்காமல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என வழக்கு.

    புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து முதலில் வேங்கை வயல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வழக்கில் குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்து உள்ளனர்.

    இதில் வேங்கைவயலை சேர்ந்த 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு அவர்களது பெயர் இடம் பெற்றுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். மேலும் உண்மை குற்றவாளிகளை கண்டறியவும், சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரியும் வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    வேங்கைவயல் வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்து உள்ள குற்றப்பத்திரிகையை ஏற்கக்கூடாது என புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    குற்றம் சாட்டப்பட்டுள்ள முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் மூவர் சார்பில் இந்த மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், புகார்தாரரை சரியாக விசாரிக்காமல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை நகல் வேண்டும். குற்றப்பத்திரிகையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கின் விசாரணையை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தது. அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வேங்கைவயல் சம்பவம் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடு தடுப்பு சட்டத்தின் கீழ் வராது என சிபிசிஐடி வாதம் செய்தது. அதனைத் தொடர்ந்து வருகிற திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார்.

    • 2025- 26ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்.
    • பட்ஜெட் குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விமர்சித்துள்ளார்.

    பாராளுமன்றத்தில் இன்று 2025- 26ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    இந்நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விமர்சித்துள்ளார்.அதில் மேலும் அவர், " மத்திய பட்ஜெட் ஏமாற்றமளிப்பதாக" குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இந்தியாவுக்கு முக்கியமான ஒரு திட்டமாக இருப்பது நதிகள் இணைப்பு திட்டம், புல்லட் ரயில் திட்டம், GST வரியை குறைத்து அறிவிக்காதது ஏமாற்றத்தை அளிக்கிறது.

    அதேபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகப்படியாக வேலை வாய்ப்புகளுக்கான எந்த ஒரு அறிவிப்பு திட்டம் இல்லை, மேலும் விலைவாசி உயர்வு குறைப்பதைப் பற்றிய அறிவிப்பும் இல்லை, இந்தியா முழுவதும் சுங்கச்சாவடி (TOLLGATE) ரத்து அறிவிப்பு இல்லாதது, இந்தியாவின் பழமை வாய்ந்த தமிழ் மொழியை இன்னும் ஊக்கப்படுத்துவதற்கு தனியாக பட்ஜெட் ஒதுக்கவில்லை, மாநிலங்களுக்கு உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ரூபாய் 1.50 லட்சம் கோடி வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், தமிழகத்தில் உள்கட்டமைப்பு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

    இதில் தேசிய நெடுஞ்சாலையாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு மாநில சாலைகளாக இருந்தாலும் சரி, மாநிலங்களில் உள்ள சாலைகள் அனைத்தும் உலகத் தரத்திற்கு இணையாக அறிவிக்காதது, தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நிவாரணம் அறிவிக்காதது ஏமாற்றத்தை தருகிறது.

    மேலும் அசாமில் யூரியா தொழிற்சாலை அமைக்கப்படும் என்று அறிவித்தது போல, தமிழ்நாட்டிலும் யூரியா மற்றும் மற்ற தொழிற்சாலைகள் வேலை வாய்ப்பை உருவாக்க அறிவிப்பு இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.

    இந்தியா முழுவதும் பருத்தி உற்பத்தியை அதிகரிக்கப் படுத்துவது, சிறு, குறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதம் ரூபாய் 20 கோடியாக அதிகரிக்கப்பட்டது, மேலும் மாநிலங்களுடன் இணைந்து நூறு மாவட்டங்களில் ரூபாய் 1.7 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் அறிவித்தது, கிராமங்களில் இருந்து பணிக்காக இடம் பெயர்வதை தடுக்க திட்டம். பொம்மை தயாரிப்பு, துவரை, உளுந்து, பருப்பு வகைகளை அதிகமாக உற்பத்தி செய்து, தானிய உற்பத்தியில் இந்தியா பத்து ஆண்டுகளில் தன்னிறைவு பெற்றுள்ளது.

    வேளாண் உற்பத்தியை பெருக்க திட்டங்கள் வகுப்பது, தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு ஐந்து லட்சம் பேருக்கு இரண்டு கோடி கடன் வழங்கப்படும் என்பது, எல்லோருக்கும் உணவு கிடைக்கும் வகையில் மாநிலங்களுடன் இணைந்து திட்டம் செயல்படுத்துவது, நாடு முழுவதும் 23 ஐஐடிகள் மேம்படுத்துதல், இந்திய மொழிப் பாடங்கள் அனைத்தும் விரைவில் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்பது, குழந்தைகள் மற்றும் இளம் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து வழங்குவது, மருத்துவ கல்லூரியில் இந்தியா முழுவதும் 10 ஆயிரம் இடங்கள் அடுத்த ஆண்டில் இருந்து உயர்த்தப்படும் என்பது, அதே மாதிரி மூன்று ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்பது போன்ற திட்டங்கள் வரவேற்கப்படுகிறது.

    ஆனாலும் இந்த பட்ஜெட் "யானைப் பசிக்கு சோளப்பொறி" என்ற பழமொழிக்கு ஏற்ப அமைந்துள்ளது.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • 2025- 26ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்.
    • விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திய உரிய அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்.

    பாராளுமன்றத்தில் இன்று 2025- 26ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    இந்நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.

    இந்நிலையில், மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பட்ஜெட் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சனம் செய்துள்ளார்.

    மேலும், பட்ஜெட்டில் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திய உரிய அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என்றார்.

    • 2025-26 நிதிநிலை அறிக்கையில் திட்டங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
    • நிதி நிலை அறிக்கையில் வருமான வரி விலக்கு கணிசமாக உயர்த்தப்பட்டது வரவேற்கத்தக்க அம்சமாகும்.

    பாராளுமன்றத்தில் இன்று 2025- 26ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    இந்நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மாயாஜால பட்ஜெட் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    2024-25 பொருளாதார ஆண்டறிக்கையில், குறிப்பிட்ட பொருளாதார வளர்ச்சியை எட்ட, முதலீட்டு மூலதனத்தை ஊக்கப்படுத்தவும், உள்நாட்டு நுகர்வை அதிகரிக்க வேண்டிய அவசியம் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏழைகள், பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் ஆகியவர்களை மையமாக கொண்டு 2025-26 நிதிநிலை அறிக்கையில் திட்டங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிதி நிலை அறிக்கையில் வருமான வரி விலக்கு கணிசமாக உயர்த்தப்பட்டது வரவேற்கத்தக்க அம்சமாகும்.

    உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்த அடிப்படை சுங்கவரிகளில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதும் வரவேற்கத்தக்கது.

    பீகார் மாநிலத்திற்கு விரைவில் தேர்தல் வருவதை கருத்தில் கொண்டு அம்மாநிலத்திற்கு மட்டும் பல வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளதால், மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை என கூறுவதை விட, பீகார் மாநில வரவு - செலவு நிதிநிலை அறிக்கை என கருதும்படி அமைந்துள்ளது.

    தமிழ்நாடு போன்ற மாநிலத்திற்கு எந்தவிதமான சிறப்பு திட்டங்களும் இல்லை.

    விவசாயத்துறையை பொருத்தவரை 100 மாவட்டங்களுக்கு சிறப்பு திட்டங்கள் உள்பட சில திட்டங்களை அறிவித்துள்ளார்கள். இந்த திட்டங்களில் விவசாயிகளுக்கு உற்பத்தியை பெருக்கவும், இடுபொருள் விலையை கட்டுப்படுத்தவும், விளைப்பொருட்களை நியாயமான விலையில் விற்பனை செய்யவும், அதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவும் தமிழ்நாட்டிற்கு எவ்வாறு உதவும் என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

    தமிழ்நாடு மாநிலம் நீர் பற்றாக்குறை மாநிலமாகும். விவசாய வளத்தை பெருக்கவும், விரையமாகும் நீரை பயன்படுத்த உதவும் நதி நீர் இணைப்பு திட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.

    அதேபோல் சிறு குறு தொழில்களுக்கும், ஏற்றுமதிக்கும் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவும், திறன் மேம்பாட்டு பயிற்சியுடன் புதிய வேகத்தை கொடுக்கவும் திட்டங்கள் ஏதும் இல்லை.

    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரயில்வே திட்டங்கள் மற்றும் கோவை, மதுரை ஆகிய நகரங்களின் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு எவ்வித அறிவிப்பும் நிதி நிலை அறிக்கையில் இல்லாதது தமிழ்நாட்டிற்கு ஏமாற்றம் அளிக்கிறது.

    10 ஆண்டுகளுக்கு மேல் 8 சதவீதத்திற்கு குறையாத பொருளாதார வளர்ச்சியை அடைந்தால்தான் 2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை அடைய முடியும் என பொருளாதார அறிக்கை கூறுகிறது. இந்நிதி நிலை அறிக்கையில் தனிநபர் வருமான வரம்பை மட்டும் உயர்த்தியுள்ளதால் ,

    இது ஒரு மாயாஜால அறிக்கையாக, வார்த்தை ஜாலங்கள் நிறைந்த அறிக்கையாக தோன்றுகிறது.

    பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 8% எப்படி உயர்த்தப்படும் என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வேளாண்துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டும் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    • பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீதான மறைமுக வரிகள் குறைக்கப்படாதது வருத்தமளிக்கிறது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் 2025-26ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் வருமான வரி விலக்கிற்கான வருவாய் வரம்பு ரூ.12 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டிருப்பதும், மக்களின் நலன் சார்ந்து மேலும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதேநேரத்தில் தமிழ்நாட்டுக்காக சிறப்புத் திட்டம் எதுவும் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

    2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்திருக்கிறார். நாடு முழுவதும் உள்ள மக்களால் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த வருமான வரி விகிதங்கள் பெருமளவில் மாற்றியமைக்கப்பட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. புதிய வருமானவரி முறையின்படி ரூ.12 லட்சம் வரையிலான வருவாய்க்கு வரி செலுத்தத் தேவையில்லை. இதன் மூலம் மாதம் ரூ.1 லட்சம் வரை வருவாய் ஈட்டும் நடுத்தர வர்க்கத்தினர், இதுவரை வரியாக செலுத்தி வந்த தொகையை கல்வி உள்ளிட்ட செலவுகளுக்காக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    தொழில்நுட்பக் கல்விக்கும், மருத்துவக் கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கவை ஆகும். 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கப்பட்ட 5 ஐஐடிகளில் கூடுதலாக 6500 மாணவர் சேர்க்கை இடங்களை ஏற்படுத்தப்படும்; ரூ.500 கோடியில் கல்விக்காக செயற்கை அறிவுத்திறன் உயர்சிறப்பு மையம் ஏற்படுத்தப்படும்; அடுத்த ஐந்தாண்டுகளில் மருத்துவப் படிப்புக்கு 75 ஆயிரம் கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும்; நடப்பு நிதியாண்டில் மருத்துவப் படிப்புக்கு கூடுதலாக 10 ஆயிரம் இடங்கள் உருவாக்கப்படும்; 36 வகையான உயிர்காக்கும் மருந்துகளுக்கு சுங்கவரி முற்றிலுமாக ரத்து செய்யப்படும்; அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கவை.

    வேளாண்துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டும் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் 100 மாவட்டங்களில் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்குவதற்கும், முதலீடுகள், தொழில்நுட்பம், திறன் மேம்பாடு ஆகியவற்றின் வாயிலாக 100 மாவட்டங்களில் வேளாண்மை சார்ந்த வேலைவாய்ப்புகளின் தன்மையையும், ஊதியத்தையும் அதிகரிக்கச் செய்வதற்கான திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமப்புற மக்கள் வேலைவாய்ப்புகளைத் தேடி நகர்ப்புறங்களுக்கு இடம் பெயருவது தவிர்க்கப்படும். அந்த வகையில் இத்திட்டமும் வரவேற்கத்தக்கது.

    காய்கறிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவும், அவற்றின் சாகுபடியை பெருக்கவும், வினியோகத்தை மேம்படுத்தவும், மதிப்புக் கூட்டவும் மாநிலங்களுடன் இணைந்து சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட 6.65% அதிகமாக ரூ.1.28 லட்சமாகவும், மருத்துவத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.95,958 கோடியாக அதிகரிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கவை. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் பாதுகாப்புத் துறைக்கு அடுத்தபடியாக ஊரக வளர்ச்சித் துறைக்கு மிக அதிகமாக ரூ.2.66 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கதாகும். 2024-25ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு ரூ.86 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டதால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கோடிக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பும், ஊதியமும் வழங்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்காக 2025-26ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்கான நிதியை அதிகரிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களும் கோரிக்கை விடுத்த நிலையில், அது குறித்து நிதியமைச்சரின் உரையில் எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை என்பதும் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

    மறைமுக வரிகளைப் பொறுத்தவரை செல்பேசிகள், மின்சார வாகனங்களில் பயன்படுத்துவதற்கான லித்தியம் பேட்டரிகள் ஆகியவற்றின் மீதான வரிகள் குறைக்கப்பட்டிருப்பது சாதகமான பயன்களை வழங்கும். அதேநேரத்தில் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீதான மறைமுக வரிகள் குறைக்கப்படாதது வருத்தமளிக்கிறது. பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பல புதிய திட்டங்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்தத் திட்டமும் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது எனக் கூறியுள்ளார். 

    • மாவட்டக் கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
    • பிற மாநிலக் கழக நிர்வாகிகள் அனைவரும் ஆங்காங்கே அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. தொண்டர்களின் உரிமை மீட்பு குழுவின் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 56-ம் ஆண்டு நினைவு நாளான (3-ந்தேதி திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மலர் தூவி அஞ்சலி செலுத்த உள்ளார்.

    இந்நிகழ்ச்சியில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி கொண்டிருக்கும் கழகத் தொண்டர்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி, வட்ட, கிளை அளவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி கொண்டிருக்கும் நிர்வாகிகள் மற்றும் கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலக் கழக நிர்வாகிகள் அனைவரும் ஆங்காங்கே அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கொடிக் கம்பங்கள் அனைத்தையும் வரும் ஏப்ரல் 28-ந்தேதிக்குள் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
    • சிறப்பு சட்டம் நிறைவேற்றி குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் நிலை நாட்ட வேண்டும்.

    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் அமர்வு நீதிமன்றம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்களின் கொடிக் கம்பங்கள் அனைத்தையும் வரும் ஏப்ரல் 28-ந்தேதிக்குள் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

    பொது இடங்களில் கொடிக் கம்பங்கள் இருக்கக் கூடாது என்பதும், அப்படி இருந்தால் அதற்கு கட்டணம் வசூலிக்க வேண்டும். அபராதம் விதிக்க வேண்டும் என்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாகும்.

    தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பொது நல அமைப்புகளின் ஜனநாயக செயல்பாடுகளை உறுதி செய்ய, மதுரைக் கிளை நீதிமன்ற உத்தரவின் மீது தமிழக அரசு மேல்முறையீடு செய்து, சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் இது தொடர்பாக சிறப்பு சட்டம் நிறைவேற்றி குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் நிலை நாட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி 25,30,950 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம்.
    • அதிகபட்சமாக 10.01.2025 அன்று 3,60,997 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த ஜனவரியில் மட்டும் 86,99,344 பேர் பயணம் செய்துள்ளனர் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது.

    அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    அதிகபட்சமாக 10.01.2025 அன்று 3,60,997 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    2025, ஜனவரி மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 23,78,989 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 1,800 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 7,219 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 37,80,386 பயணிகள் (Online QR 1,59,162; Paper QR 18,94,376; Static QR 2,64,321; Whatsapp - 5,89,305; Paytm 4,20,389; PhonePe – 3,28,755; ONDC – 1,24,078), சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 25,30,950 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), Whatsapp, Paytm App,PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.

    சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்றுகொள்ளலாம்.

    மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • எங்களின் மூதாதையர் காலத்தில் இருந்து தவிட்டு பழங்கள் வனப்பகுதியில் காய்த்து வருகிறது.
    • தவிட்டு பழத்தை சாப்பிட்டால் செரிமானம் அதிகரிப்பதுடன், ரத்தத்தை சுத்திகரித்து சோர்வை போக்கும்.

    குன்னூர்:

    மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி வனப்பகுதியில் நூற்றாண்டுகளுக்கும் மேலாக அரிய வகை தவிட்டு பழங்கள் விளைகின்றன. கோலிக்குண்டு வடிவில் காட்சி அளிக்கும் இந்த பழத்தில் துவர்ப்பு குறைவாகவும், இனிப்பு அதிகமாகவும் இருக்கும்.

    வனப்பகுதிகளில் அதிகமாக காய்த்து தொங்கும் தவிட்டு பழங்களை பழங்குடி மக்கள் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு கொடுத்து உபசரிப்பர். மேலும் அந்த பழங்களை நகர பகுதிக்கு கொண்டு சென்று ஒரு கிலோ ரூ.300 முதல் 500 வரை விற்பனை செய்து வருகின்றனர்.

    மற்ற பகுதிகளில் இந்த பழம் கிடைக்காது என்பதால் உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளும் இதனை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

    தவிட்டு பழங்களின் சிறப்பம்சம் குறித்து பழங்குடி மக்கள் கூறியதாவது:-

    எங்களின் மூதாதையர் காலத்தில் இருந்து தவிட்டு பழங்கள் வனப்பகுதியில் காய்த்து வருகிறது. இது கடந்த காலங்களில் குரங்குகளுக்கு மட்டுமின்றி பழங்குடி மக்களுக்கும் உணவாக இருந்தது. தவிட்டு பழத்தை சாப்பிட்டால் செரிமானம் அதிகரிப்பதுடன், ரத்தத்தை சுத்திகரித்து சோர்வை போக்கும்.

    இதிகாச வனப்பருவத்தின் பசிதீர்த்த அமுத சொட்டு பழமே இந்த தவிட்டு பழம். இதற்கு புராண கதைகளும் உண்டு. 5 கணவர்களை தேடி கண்டுபிடித்து காட்டும் பழம் தான் 5 அல்லிராணிகள் எனவும் அழைக்கப்படுகிறது.

    குன்னூர் அடுத்த யானை பள்ளம், சடையன் கோம்பை, பம்பள கோம்பை, சின்னாள கொம்பை, டால்பின்நோஸ், லேம்ஸ்ராக், பக்கா சூரன் மலை, தைமலை, கோட்டக்கல், சாம்பூர், பால்மரா உள்ளிட்ட பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் தவிட்டு பழங்கள் அதிக அளவில் உள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு ஜோராக இருப்பது போல் முதலமைச்சர் பேசுகிறார்.
    • அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் 5 வயது முதல் மூதாட்டி வரை அனைவரும் பாதுகாக்கப்படுவர்.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அமைச்சர், முதல்வரை அழைத்து வந்தும், அண்ணாமலை, மத்திய அமைச்சரை அழைத்து வந்தும் பாராட்டு விழா நடத்துகின்றனர்.

    * எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் கேள்வி கேட்ட பின்பு தான் டங்ஸ்டன் விவகாரத்தில் முடிவு கிடைத்தது.

    * தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு ஜோராக இருப்பது போல் முதலமைச்சர் பேசுகிறார்.

    * சமூக வலைதளங்களில் குரல் கொடுப்போர் எல்லாம் தற்போது எங்கே போனார்கள் என தெரியவில்லை.

    * அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் 5 வயது முதல் மூதாட்டி வரை அனைவரும் பாதுகாக்கப்படுவர். பாலியல் வன்கொடுமை இருக்காது என்று அவர் கூறினார்.

    • எங்கள் பகுதி முழுவதும் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படாததால்தான் செப்டிக் டேங்க் கட்டியுள்ளோம்.
    • மனுதாரர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒரு தனி நபரின் இறப்புக்கு பொறுப்பாகியுள்ளார்.

    சென்னை:

    சென்னை விநாயகபுரத்தை சேர்ந்தவர் யோகேஷ்பாபு. இவர், ஐகோர்ட்டில், தாக்கல் செய்து உள்ள மனுவில், "எங்களது பகுதியில் கழிவு நீர் இணைப்பு இல்லை. பல முறை சென்னை மாநகராட்சிக்கு மனுக்கள் அனுப்பியும் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படவில்லை.

    இதையடுத்து, எனது வீட்டில் செப்டிக் டேங்க் கட்டினேன். இந்த செப்டிக் டேங்க் நிறைந்துவிட்டது. கழிவுகளை அகற்றுவதற்காக கடந்த 2013-ம் ஆண்டு செம்டம்பர் 30-ந்தேதி மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது, முனுசாமி என்ற ஊழியர் செப்டிக் டேங்கில் இறங்கினார். அப்போது அவர் விஷவாயு தாக்கி இறந்துவிட்டார். தகவல் கிடைத்ததும் வேலை செய்த இடத்தில் இருந்து நான் வீட்டுக்கு சென்றேன். மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தேன். முனுசாமி உடலை வெளியே எடுத்து அவரது குடும்பத்திற்கு ரூ.55 ஆயிரம் வழங்கினேன்.

    இந்த நிலையில், முனுசாமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தொகையை வழங்குமாறு சென்னை மாநகராட்சி 3-வது மண்டல அதிகாரி எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    எங்கள் பகுதி முழுவதும் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படாததால்தான் செப்டிக் டேங்க் கட்டியுள்ளோம். முனுசாமியின் இறப்பு துரதிஷ்டவசமானது. அதனால்தான் எனது சொந்த பணத்தை அவரது மனைவிக்கு ரூ.55 ஆயிரம் கொடுத்தேன். இந்த நிலையில் முழு இழப்பீடையும் தருமாறு மண்டல அதிகாரி நோட்டீஸ் அனுப்பியது விதிகளுக்கு முரணானது. எனவே, மண்டல அதிகாரியின் நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. சென்னை மாநகராட்சி தரப்பில், "தனியார் செப்டிக் டேங்கில் விபத்து ஏற்பட்டால் அதற்கு அந்த வீட்டின் உரிமையாளர்தான் பொறுப்பாவார். வீட்டு உரிமையாளர்தான் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு இழப்பீடு தரவேண்டும்.

    மாநகராட்சி அந்த தொகையை தந்துவிட்டால் வீட்டு உரிமையாளர் அந்த தொகையை மாநகராட்சியிடம் தர வேண்டும்.

    இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை அரசாணை பிறப்பித்து உள்ளது. உரிய விதிகளின் அடிப்படையில்தான் மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று வாதிடப்பட்டது.

    வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒரு தனி நபரின் இறப்புக்கு பொறுப்பாகியுள்ளார். உரிய விதிகளின் அடிப்படையில்தான் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை மாநகராட்சி இழப்பீடு தொகையை பாதிக்கப்பட்டவரின் மனைவியிடம் கொடுத்து உள்ளது. எனவே, அந்த தொகையை மனுதாரரிடம் வசூலிக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கலாம்" என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தார்.

    ×