என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஆமதாபாத் செல்லும் ரெயிலிலும் (20953) இன்று முதல் வருகிற 22-ந்தேதி வரை கூடுதலாக ஒரு 3-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டி இணைக்கப்படுகிறது.
    • ஏக்தா நகர் செல்லும் ரெயிலிலும் (20919) வருகிற 5-ந்தேதி முதல் 26-ந் தேதி வரை கூடுதலாக ஒரு 3-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டி இணைக்கப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து சென்னை சென்டிரலுக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் (வண்டி எண்-20954), சென்டிரலில் இருந்து ஆமதாபாத் செல்லும் ரெயிலிலும் (20953) இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 22-ந்தேதி வரை கூடுதலாக ஒரு 3-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டி இணைக்கப்படுகிறது.

    அதே போல, குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் இருந்து சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் (20920), சென்டிரலில் இருந்து ஏக்தா நகர் செல்லும் ரெயிலிலும் (20919) வருகிற 5-ந்தேதி முதல் 26-ந் தேதி வரை கூடுதலாக ஒரு 3-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டி இணைக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடக்க உள்ளது.
    • விஜய் தனது சுற்றுப்பயண விவரத்தை அறிவிக்க இருக்கிறார்.

    சென்னை:

    நடிகர் விஜய் கடந்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் பிரமாண்டமான மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டில், கட்சியின் கொள்கை தலைவர்களாக தந்தை பெரியார், அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் பெயர்களை அவர் அறிவித்தார்.

    இதற்கிடையே கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடக்க உள்ளது. இதில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார்.

    தொடர்ந்து, கட்சியின் கொள்கை தலைவர்களாக அறிவிக்கப்பட்ட பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் சிலைகளையும் அலுவலகத்தில் விஜய் திறந்து வைக்கிறார். நல உதவிகளையும் அவர் வழங்க இருக்கிறார். அதனைத்தொடர்ந்து விஜய் தனது சுற்றுப்பயண விவரத்தை அறிவிக்க இருக்கிறார்.

    • விழாவை கடந்த 28-ந்தேதி தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி இன்று மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண-சாரணியர் இயக்கத்தின் வைர விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பெருந்திரளணி `ஜாம்புரி' என்ற பெயரில் மாநாடு போல் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் இந்தியாவின் 25 மாநிலங்கள் மற்றும் 4 வெளிநாடுகளில் இருந்து சுமார் 20 ஆயிரம் சாரண-சாரணியர்கள் மற்றும் அவர்களின் வழிகாட்டிகள் கலந்து கொண்டு உள்ளனர். இந்த விழாவை கடந்த 28-ந்தேதி தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    விழாவில் ஒவ்வொரு நாளும் இதில் பங்கேற்றுள்ள மாணவ- மாணவியர்கள் தங்களது மாநிலத்தின் கலை, பண்பாடு தொடர்பான கலாசார நிகழ்ச்சிகளிலும், குழு மற்றும் தனிநபர் திறன் தொடர்பான போட்டிகளிலும் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். மேலும் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளையும் நடத்தி உள்ளனர்.

    இந்நிலையில் விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி இன்று மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் இன்று மதியம் 2 மணி அளவில் திருச்சிக்கு வருகிறார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனியார் ஓட்டலுக்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.

    இதைத்தொடர்ந்து சாரண-சாரணியர் இயக்க வைர விழா நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்க புறப்பட்டு செல்கிறார். விழா முடிந்த பின்னர் கார் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

    முதலமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக திருச்சி விமான நிலையம் மற்றும் அவர் பயணம் செய்ய உள்ள வழித்தடங்களில் `டிரோன்'கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. விமான நிலையத்தில் இருந்து அவர் தங்க உள்ள ஓட்டல் வரையும் சாலைகள் சீரமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர்.

    • சுயேச்சை வேட்பாளர்களும் ஆட்டோ, சரக்கு வாகனங்களில் தொகுதி முழுக்க சென்று வாக்குகள் கேட்டு வருகிறார்கள்.
    • வருகிற 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வின் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சு.முத்துசாமி தலைமையில் தி.மு.க.வினர் தொகுதிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தனர்.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்காக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோட்டில் முகாமிட்டு தினந்தோறும் பிரசார பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். தொண்டர்களும் வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து வருகிறார்கள். சுயேச்சை வேட்பாளர்களும் ஆட்டோ, சரக்கு வாகனங்களில் தொகுதி முழுக்க சென்று வாக்குகள் கேட்டு வருகிறார்கள்.

    இதனால் இடைத்தேர்தல் பிரசாரம் களைகட்டியிருந்தது. இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. அதைத்தொடர்ந்து வெளியூர்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    வருகிற 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    • இந்த நிதியாண்டில் 2-வது முறையாக அதிக வசூல் செய்து புதிய மைல்கல்லை பதிவுத்துறை எட்டியுள்ளது.
    • விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப்பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப்பதிவிற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படும்.

    சென்னை:

    தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஆண்டு (2024) டிசம்பர் மாதம் 5-ந் தேதியன்று ஒரே நாளில் இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ.238 கோடியே 15 லட்சம் வருவாய் பதிவுத்துறையில் ஈட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து, கடந்த 31-ந்தேதி 23 ஆயிரத்து 61 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, ரூ.231 கோடியே 51 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் 2-வது முறையாக அதிக வசூல் செய்து புதிய மைல்கல்லை பதிவுத்துறை எட்டியுள்ளது.

    மேலும், பொதுமக்களின் நலன் கருதி அசையா சொத்துக்கள் குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புவதால் பொது விடுமுறை நாளான இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    எனவே ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள பதிவு அலுவலகங்களை காலை 10 மணி முதல் ஆவணப்பதிவு முடியும் வரை செயல்பாட்டில் வைத்திட அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப்பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப்பதிவிற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த கேரள பதிவு எண் கொண்ட லாரி, அதில் வந்த 3 பேரை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
    • அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே வேலப்பக்கவுண்டம் பாளையத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் தோட்டத்தில் தொடர்ச்சியாக கேரள மருத்துவக் கழிவுகள் எரியூட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


    இந்த நிலையில், மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த கேரள பதிவு எண் கொண்ட லாரியையும், அதில் வந்த 3 பேரையும் பொதுமக்கள் சிறை பிடித்தனர்.


    மேலும், குடோனில் உள்ள அனைத்து கழிவுகளையும் உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் கட்சி பொறுப்பாளர்கள் நியமனம்.
    • 19 மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் என்ற அடிப்படையில் ஒவ்வொரு கட்டமாக அறிவித்து வருகிறார்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது கட்சியை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். கட்சி தொடங்கி ஒர் ஆண்டு நிறைவு பெற இருப்பதை ஒட்டியும், 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகும் வகையிலும் கட்சி பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்.

    தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் கவனம் செலுத்தும் வகையில், 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் கட்சி பொறுப்பாளர்களை நியமனம் செய்யும் பணிகளை மேற்கொண்டார். அதன்படி மாவட்ட அளவில் கட்சி பணிகளை செய்வதற்கு மாவட்ட செயலாளர் தலைமையில் வலுவான அணியை விஜய் உருவாக்கி வருகிறார்.

    மாவட்ட செயலாளர் தலைமையில் இணைச் செயலாளர், பொருளாளர், 2 துணை செயலாளர்கள் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் மாவட்ட கட்சிப் பணிகளை மேற்கொள்வார்கள். இந்த அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வாகி வருகிறார்கள்

    அதனடிப்படையில் கடந்த மாதம் 19-ந்தேதியில் இருந்து நேற்று வரை 3 கட்டங்களாக தலா 9 மாவட்டங்களுக்கு செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களை நியமித்தார்.

    இந்த நிலையில் இன்று 4-வது 19 மாவட்ட செயலாளர்களை நியமித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தமிழக வெற்றிக் கழகத்தில் நான்காம் கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மாவட்ட நிர்வாகிகளின் விவரங்களை அறிய... https://dropbox.com/scl/fo/w3uvc48ljnlniyrqc5x0v/AO_PD9HpX94MhMeZjuNa7JM?rlkey=927a55eupvh0nocq4hi52dmvw&st=75kfq593&dl=0 இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

    புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    திருவண்ணாமலை மேற்கு, திருவண்ணாமலை வடக்கு, தென்காசி வடக்கு, திண்டுக்கல் மேற்கு, விருதுநகர் வடமேற்கு உள்ளிட்ட 19 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • புதிய வருமான வரிச் சட்டம் இந்தக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.
    • ஆண்டில் 10,000 கூடுதல் மருத்துவ இடங்கள், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் புற்று நோய் மையங்கள் அறிவிப்பு வரவேற்கத்தக்கவை.

    அ.தி.மு.க. கழக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 2025-2026-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிதிநிலை அறிக்கை அனைத்து மக்களுக்குமான நிதிநிலை அறிக்கையாக குறிப்பாக ஏழை, எளிய நடுத்தர மக்களின் சுமையை குறைக்கும் அறிக்கையாக விளங்குகிறது.

    இந்த நிதிநிலை அறிக்கை வேளாண்மை, குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள், முதலீடு, ஏற்றுமதி, வேலைவாய்ப்பு, கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை ஊக்குவிக்கப்பதாக அமைந்துள்ளது.

    நாட்டின் பருப்பு உற்பத்தியை அதிகரிக்கவும், ஆறு ஆண்டுகளில் பருப்பு உற்பத்தியில் தன்னிறைவை அடையவும் தன் தான்ய க்ரிஷி திட்டம்; வேளாண் கடன் அட்டைகளுக்கான (Kissan Credit Cards) வரம்பு ஐந்து லட்சமாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு, 7.7 கோடி விவசாயிகளுக்கு கடன் அட்டை (Credit Card) செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மூலம் விவசாயத் துறையில் உற்பத்தியைப் பெருக்குவதற்கான திட்டம் ஆகியவை வேளாண் தொழிலில் மத்திய அரசுக்கு உள்ள அக்கறையை படம் பிடித்து காட்டுகிறது.

    இந்திய நாட்டின் முதுகெலும்பாக, வேலைவாய்ப்பினை வழங்கும் அட்சய பாத்திரமாக, அரசுக்கு வருமானத்தை தரக்கூடிய அமுதசுரபியாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் விளங்குகின்றன. இதனை நன்கு புரிந்துள்ள மத்திய அரசு, ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு 20 கோடி ரூபாய் வரை கடன் மானியம், புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வண்ணம் 10,000 கோடி ரூபாய், தோல் பொருட்கள் துறையில் 22 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் திட்டம் போன்ற அறிவிப்புகளை நிதிநிலை அறிக்கையில் இடம் பெறச் செய்துள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்கது.

    இதேபோன்று அடுத்த ஆண்டில் 10,000 கூடுதல் மருத்துவ இடங்கள், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் புற்று நோய் மையங்கள், Gig தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை இலவச காப்பீடு, 500 கோடி ரூபாய் மதிப்பில் கல்விக்கான செயற்கை நுண்ணறிவு சிறப்பின மையம், மாணவ, மாணவியருக்கு தாய் மொழியில் டிஜிட்டல் முறையில் பாடங்கள், நகரங்கள் மறு சீரமைப்பு பணிகளுக்கு ஒரு இலட்சம் கோடி ரூபாய், மாநிலங்களுக்கு 1.5 இலட்சம் கோடி ரூபாய் வட்டியில்லா கடன், நாடு முழுவதும் 120 புதிய விமான நிலையங்கள், ஏற்றுமதியை ஊக்குவிக்க புதிய அமைப்பு, கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் இலவச Broadband வசதி, உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு, செல்போன் மற்றும் மின் வாகனங்களுக்கான லித்தியம் பேட்டரிக்கு சுங்க வரி ரத்து ஆகியவை மிகவும் வரவேற்கத்தக்கவை.

    இவை எல்லாவற்றிற்கும் மேலாக, வருமான வரி உச்சவரம்பு 7 லட்சம் ரூபாயிலிருந்து 12 லட்சமாக உயர்த்தப்பட்டு இருப்பது நடுத்தர மக்களிடையே நல்ல வரவேற்பினை பெறும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.

    இதேபோன்று, வரி அடுக்கு குறைக்கப்பட்டு இருப்பது மூத்த குடிமக்களுக்கான வருமான வரி பிடித்தம் 50,000 ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு இருப்பது, வாடகைக் கழிவு 2,40,000 ரூபாயிலிருந்து 6,00,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருப்பது, வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால வரம்பு இரண்டு ஆண்டிலிருந்து நான்கு ஆண்டாக உயர்த்தப்பட்டு இருப்பது ஆகியவை பாராட்டுக்குரிவை.

    மேலும், வருமான வரியை எளிமைப்படுத்தும் விதமாக, புதிய வருமான வரிச் சட்டம் இந்தக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. இதேபோன்று, நாட்டின் வருவாய் அதிகரித்து, நிதிப் பற்றாக்குறை குறைந்து வருவது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.

    மொத்தத்தில், மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் விதமாக, நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் விதமாக, வேலைவாய்ப்பினை பெருக்கும் விதமாக 2025-2026-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அமையும்.

    இந்த நிதிநிலை அறிக்கையினை அதிமுக கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வரவேற்கிறேன்.

    இவ்வாறு ஓ. பன்னீர் செல்வம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் வருமான வரி விலக்கு என்பதை உளமார வரவேற்கிறேன்.
    • தமிழ்நாட்டுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுக்கு எந்த ஓர் அறிவிப்பும் இடம்பெறவில்லை.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மீண்டும் புறக்கணிக்கப்படும் தமிழகம்

    2025-26-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை ஒன்றிய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

    இந்த நிதிநிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க அம்சங்கள் ஒரு சில மட்டுமே இடம்பெற்றுள்ளன. ஆண்டிற்கு 12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி விலக்கு அளித்திருப்பதை நான் உளமார வரவேற்கிறேன். இதன் மூலம் நடுத்தர மக்களுக்குக் குறிப்பிடும்படியான நிவாரணம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    அதே சமயம் நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய பெட்ரோல் / டீசல் வரிக்குறைப்பு மற்றும் GST வரிக் குறைப்பு/ எளிமைப்படுத்துதல் பற்றி எந்த ஓர் அறிவிப்பும் இல்லாதது மிகப் பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது.

    முதல்முறையாகத் தொழில்முனைவோராக உருவாகும் பெண்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் உள்ளடங்கிய முதல் 5 லட்சம் பேர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ரூ.2 கோடி வரை கடன் வழங்கப் புதிய திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்திருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் உளமார வரவேற்கிறது.

    அதே சமயம் விலைவாசியைக் கட்டுப்படுத்தவும், வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் போதிய அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

    குறிப்பாக, சிறு குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வாயிலாக இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையிலான திட்டங்கள் ஏதும் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை.

    புதிய ரயில் தடங்கள், சாலைகள், கோயம்புத்தூர், மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் போன்ற தமிழ்நாட்டுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுக்கு எந்த ஓர் அறிவிப்பும் இடம்பெறவில்லை.

    தமிழகத்தில் மிகத் தொன்மையான இரும்பு நாகரிகம் இருந்தது அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கின்ற கண்டுபிடிப்பாகும். இதற்கு உரிய அங்கீகாரமும் சுற்றியுள்ள பகுதிகளில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள நிதியும் வழங்காதது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.

    அணுஉலை மின் உற்பத்தி PPP (Public Private Partnership) மூலம் தனியார் மயமாக்கப்படுதலுக்கு இந்த நிதிநிலை அறிக்கை முக்கியத்துவம் வழங்கி இருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்திக்கான தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்தக் காலக்கட்டத்தில் மீண்டும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து விளைவிக்கும் அணுமின் உற்பத்தி தொடர்பான அறிவிப்பை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

    Asset Monetization வாயிலாகப் பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகள், ஒரு சில பெரும் தனியார் நிறுவனங்களின் கைகளுக்குச் சென்று விடுமோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

    ஒவ்வோர் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போதும், சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களைக் கருத்தில் கொண்டு, அந்த மாநிலத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து அதிக நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவது மற்ற மாநிலங்களையும் அந்த மாநில மக்களையும் அவமதிப்பதாக உள்ளது. இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானதாகும்.

    வழக்கம் போல் இந்த ஆண்டும் ஒன்றிய அரசானது தமிழகத்திற்குப் புதிய திட்டங்களை அறிவிக்காமலும் போதிய அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலும் புறக்கணித்துள்ளது.

    அனைத்து மாநிலங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டே ஒன்றிய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். மாறாக, பாரபட்சத்தோடு நடந்துகொள்வது சரியான அணுகுமுறை இல்லை.

    இவ்வாறு அறிக்கையில் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

    • 2025- 26ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்.
    • துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    பாராளுமன்றத்தில் இன்று 2025- 26ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    இந்நிலையில், பட்ஜெட் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது கருத்தை முன்வைத்துள்ளார்.

    இதுகுறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஒன்றிய நிதி நிலை அறிக்கையில் இந்த முறையும் தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் இல்லாததும், தமிழ்நாடு என்ற பெயர் கூட இடம்பெறாததும் பாசிஸ்ட்டுகளுக்கு தமிழ்நாட்டின் மீது இருக்கின்ற வன்மத்தையும் அவர்களின் மாற்றாந்தாய் மனப்பான்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

    அதிக வரி செலுத்தும் தமிழ்நாட்டை கண்டுகொள்ளாமல், நாற்காலியை காப்பாற்றிக்கொள்ளவும் தேர்தல் கணக்குகளோடும் குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டும் வாரி வழங்கும் ஒன்றிய பாஜக அரசின் வஞ்சகப் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.

    நிதி ஒதுக்கீட்டில் மீண்டும் மீண்டும் தமிழ்நாட்டை புறக்கணிக்க, புறக்கணிக்க தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் பாசிஸ்ட்டுகளை நிராகரித்துக் கொண்டே இருப்பார்கள்!

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈ.சி.ஆர். சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
    • பறிமுதல் செய்யப்பட்ட கார் அதிமுக-வின் நெருங்கிய உறவினருக்கு சொந்தமானது.

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * பொய்யை பலமுறை சொன்னால் அது உண்மையாகிவிடும் என்ற நோக்கில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

    * திமுக ஆட்சியில் குற்றம் எங்கேயினும் நடைபெற்றால் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    * ஈ.சி.ஆர். சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அதிமுக-வை சேர்ந்தவர். அவருடைய கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்னொரு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் நீலகிரி அதிமுக செயலாளரின் நெருங்கிய உறவினருக்கு சொந்தமானது.

    * அதிமுக-வினர் செய்யும் ஒவ்வொரு குற்றச்சாட்டையும் திமுக மீது எடப்பாடி பழனிசாமி போட்டுக் கொண்டிருக்கிறார்.

    * அண்ணாநகர் சிறுமி விவகாரத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என எடப்பாடி பழனிசாமி வானத்திற்கும் பூமிக்கும் குதித்தார். ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர் அதிமுக வட்ட செயலாளர்.

    * தமிழ்நாட்டில் தொடர்ந்து குற்றங்கள் நடைபெற்று இருக்கிறது என்றால், குற்றம் புரிந்தவர்கள் எல்லாம் அதிமுக-வைச் சேர்ந்தவர்கள்தான்.

    * நான் சொல்வது தவறாக இருந்தால் எடப்பாடி பழனிசாமி என்மீது வழக்கு போடலாம். திமுக ஒரு குற்றச்சாட்டை சொல்கிறது என்றால் ஆதாரத்துடன்தான் சொல்லி பழக்கம்.

    * ஸ்டாலின் தலைமையில் திமுக வெற்றிக்குமேல் வெற்றி பெற்று வருகிறது. பாராளுமன்றத்தில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.

    * இதை திசைதிருப்ப வேண்டும் என்பதற்காகவே, திட்டமிட்டு திமுக கொடியை பயன்படுத்துவது, அதிமுக-வினர் திமுக-வினர் என்ற மாறுவேடத்தில் புகுந்து தீய செயல்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளனரோ என்ற சந்தேகப்பட வைக்கிறது.

    * இரு கார்கள் தொடர்பாக டீம் அமைத்து விசாரிக்கும் காவல்துறை கண்காணிப்போடு இருக்க வேண்டும் என திமுக அமைப்பு செயலாளர் என்ற முறையில் கேட்டுக் கொள்கிறேன்.

    • 2025- 26ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்.
    • பட்ஜெட் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

    பாராளுமன்றத்தில் இன்று 2025- 26ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    இந்நிலையில், பட்ஜெட் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஒன்றிய நிதிநிலை அறிக்கை என்றாலே தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஓரவஞ்சனைதானா? தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து இடம்பெறுவதில்லையே?

    எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்தோமே, அதில் ஒன்றைக்கூடவா உறுதிசெய்து அறிக்கையில் சேர்க்க மனம் வரவில்லை?

    நெடுஞ்சாலைகள் - இரயில்வே திட்டங்கள் - கோவை, மதுரை மெட்ரோ இரயில் எதையுமே கொடுக்காதது ஏன்? எது தடுக்கிறது?

    பொருளாதார ஆய்வறிக்கை, உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை அறிக்கை, நிதி ஆயோக் அறிக்கை என ஒன்றிய அரசின் அனைத்து அறிக்கைகளிலும் முதன்மையான இடத்தைப் பிடிக்கிறது தமிழ்நாடு.

    பக்கத்துக்குப் பக்கம் தமிழ்நாட்டின் செயல்பாடுகளுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கப்படுகிறது. ஆனால், நிதிநிலை அறிக்கையில் மட்டும் இந்த ஆண்டும் தமிழ்நாடு முழுமையாகப் புறக்கணிக்கப்படுவது ஏன்?

    தமிழ்நாடு ஏற்காத கொள்கைகளையும் மொழியையும் திணிப்பதில் காட்டும் ஆர்வத்தில் சிறு துளியையாவது நிதி ஒதுக்கீட்டில் காட்ட வேண்டாமா?

    ஒன்றிய அரசானது தன்னுடைய திட்டங்களில் தன்னுடைய பங்குத் தொகையைக் குறைத்து கொண்டே வருவதால், மாநில அரசின் நிதிச்சுமை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

    பல்வேறு திட்டங்களில் மிகவும் குறைவாக மானியத் தொகையை வழங்கும் ஒன்றிய அரசு, அதிலும் பல்வேறு கட்டுப்பாடுகளைத் தமிழ்நாட்டிற்கு மட்டும் விதித்துள்ளது. விளம்பர மோகம் கொண்ட ஒன்றிய அரசு, திட்ட விளம்பரங்களில் ஒன்றிய அரசின் முத்திரை இடம் பெறாவிட்டால், திட்டம் சரியாகவும் செம்மையாகவும் செயல்படுத்தப்பட்டிருப்பினும், நமக்குச் சேரவேண்டிய திட்ட நிதியை விடுவிப்பதில்லை. விளம்பரம் ஒன்றையே பாராட்டும் ஒன்றிய அரசு, மக்கள் நலனில் எந்தவொரு அக்கறையையும் காட்ட மறுக்கிறது.

    வெற்றுச் சொல் அலங்காரங்களும், வஞ்சனையான மேல் பூச்சுகளும் கொண்ட அறிக்கையின் மூலமாக இந்திய நாட்டு மக்களை வழக்கம் போல் ஏமாற்றும் பா.ஜ.க.,வின் பம்மாத்து நாடகம் தொடர்கிறது.

    எந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதோ, எங்கு பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் உள்ளதோ அந்த மாநிலத்துக்கு மட்டும்தான் திட்டங்களும் நிதியும் அறிவிக்கப்படும் என்றால் 'ஒன்றிய' நிதிநிலை அறிக்கை என இதனை அழைக்க வேண்டிய அவசியம் என்ன?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×