என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • இந்தியாவில் ஏ.கே 74 துப்பாக்கியை சுட்ட முதல் ஆள் நான் தான்.
    • மாற்று அரசியலுக்கான போராட்டத்தை முன்னெடுக்கிறோம்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சு மியை ஆதரித்து வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே நடந்த பிரசாரக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    உலகு எங்கிலும் உரிமை இழந்து அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் தங்களின் இனத்தின் பாதுகாப்பு எழுச்சிக்காக விடுதலை பெற்று இருப்பது வரலாறு. அதே போல நமது நிலத்தில் உரிமைகளை இழந்தும் உடமைகளை இழந்தும் இறுதியாக உயிரை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

    கடந்த 14 ஆண்டுகளாக தாய் நிலத்தில் நாம் அடிமைகள். நம் நிலத்தில் தாய்மொழியிலே கல்வி கற்றால் வேலை வாய்ப்பு இல்லை. நதிநீர் உரிமை பெற முடியவில்லை.

    இந்திய பெருங்கடலில் மீன் பிடித்து திரும்ப முடியவில்லை. வேளாண்மை செய்ய முடியவில்லை. வேலை செய்ய முடியவில்லை. இதனால் அதிகார வலிமை தான் என்று பேசி பேசி 36 லட்சம் வாக்குகள் பெற்று தமிழகத்தில் 3-வது கட்சியாக அங்கீகாரம் பெற்று நிற்பது தான் புரட்சி.

    போராட வேண்டும், இல்லையென்றால் நீயும் நானும் பலிகடா தான். இதனால் போராடு. போராட்டத்தினால் பல மாற்றங்களை பெற்றுள்ளோம். போராட்டம் இல்லையென்றால் உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டு இருக்காது. மாற்று அரசியலுக்கான போராட்டத்தை முன்னெடுக்கிறோம்.

    ஒவ்வொருவரின் மனதில் மாற்றம் சிந்தனை வந்து விட்டால் மாற்றம் வந்து விடும். இப்படிப்பட்ட மாற்றம் வருவதற்கு அரிய வாய்ப்பு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தந்துள்ளது. நாம் தமிழர் கட்சி பயம் என்பது இல்லை என்பதால் துணிந்து நிற்கி றோம்.

    நாங்கள் வீரர்கள். அதனால் துணிந்து தனித்து நிற்கிறோம். நாங்கள் கையேந்தி வாக்கு கேட்பது உங்கள் இடத்தில். எங்கள் இனத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து வருகிறோம். இந்த நிலைமை எங்கள் பின்னால் வரும் பிள்ளைகளுக்கு இருக்க கூடாது என்பதற்காக வாக்கிற்கு ரூ.500, ரூ.1000-க்கு கையேந்த கூடாது என்று கத்திக் கொண்டு இருக்கிறோம்.

    நானே பீகார், கர்நாடக, கேரளாவில் இருந்து வந்து இருந்தால் 10 ஆண்டுகளுக்கு முன்பு என்னை முதல்வ ராக்கி இருப்பார்கள். இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற பழமொழியில் தான் தமிழன் தோற்று போய்விட்டான்.

    ஆங்கிலம் அறிவு இல்லை, ஒரு மொழி. வெள்ளை என்பது அழகு இல்லை ஒரு நிறம், தமிழில் எல்லா சாமிகள் கருப்பு தான். முருகன் கருப்பாக தான் இருப்பான்.

    பிறந்த நாட்டுக்காக பிரபாகரன் பின்னால் சென்று 50 ஆயிரம் பேர் இறந்தார்கள். பணத்தை கொடுத்து நீ பொருளை வாங்குவாய், நாங்கள் உயிரை கொடுத்து வாங்குவோம். பிரபாகரன் துப்பாக்கி ஆயுதம் தூக்கியது போல நாம் தமிழர் கட்சி பிள்ளைகள் வாக்கினை ஆயுதங்களை தூக்கி வெல்வோம்.

    அப்போது சீமான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை சந்தித்த அனுபவம் குறித்து பேசினார். சினிமாவில் என்கவுண்டர் செய்யுற இங்கே வந்து ஏன் தடுமாறுகிற என்று பிரபாகரன் என்னிடம் கேட்டார்.

    அப்போது ஏ.கே 74 ரக துப்பாக்கி குறித்தும் அதன் செய்முறை குறித்தும் எனக்கு அவர் பயிற்சி அளித்தார். அப்போது ஏ.கே 74 துப்பாக்கி ரஷ்யா இடமும், நம்மிடம் (விடுதலை புலிகள்) தான் உள்ளது என்றார்.

    அப்போது நான் ஏ.கே 74 துப்பாக்கியை அவரிடம் சுட்டு காண்பித்தேன். பிரபாகரன் எனக்கு துப்பாக்கி பயிற்சி அளித்தது உண்மை தான். இந்தியாவிலேயே ஏ.கே 74 ரக துப்பாக்கி சுட்ட முதல் ஆள் நான்தான். உங்களை மாதிரி பொய் சொல்லி பிழைப்பு செய்யவில்லை.

    ஒருநாள் வரலாற்றில் வாழ்ந்தவர்களை உரிமையோடு பெருமையோடு நான் திட்டுவது போல நீ என்னை ஒரு நாள் திட்டுவதை கைவிட வேண்டும் என்றால் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுங்கள்.

    நீ எனக்கு ஓட்டு போட்டு தான் ஆக வேண்டும், என க்கு உன்னை விட்டால் வேறு வழியில்லை, அதே போல எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் ஓட்டு போட்டால் கடைசியில் பிரச்சனை என்றால் என்னிடம் தான் வரவேண்டும்.

    தலை நிமிர்ந்து தமிழ் இனம் சிறந்து வாழ கடைசி விடுதலை அரசியல் விடுதலை தான் என்பதை சிந்தித்து மக்கள் மைக் சின்னத்திற்கு வாக்கு அளியுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டில் உள்ள ராம்சர் தளங்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
    • நமது திராவிட மாடல் அரசாங்கம் ஈரநிலங்களைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் மேலும் ராம்சர் தளங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது:-

    இந்த உலக ஈரநில தினத்தன்று, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சக்கரக்கோட்டை மற்றும் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயங்கள் என இரண்டு ராம்சர் தளங்களின் பெயரைப் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

    இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ராம்சர் தளங்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இது நாட்டிலேயே மிக உயர்ந்ததாகும். 2021 ஆம் ஆண்டில் தமிழ்நாடு ஈரநிலங்கள் திட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 19 தளங்கள் தொடங்கப்பட்டன.

    நமது திராவிட மாடல் அரசாங்கம் ஈரநிலங்களைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது மற்றும் நமது வளமான இயற்கை பாரம்பரியத்தைப் பாதுகாக்க தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் என கூறியுள்ளார். 



    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 45.30 அடியாக உள்ளது. 21 கனஅடி நீர் வருகிறது. 75 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
    • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 106.27 அடியாக உள்ளது. 5 கனஅடி நீர் வருகிறது. 25 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    கூடலூர்:

    கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணையின் நீர்மட்டம் 120.40 அடியாக குறைந்துள்ளது. 219 கனஅடி நீர் வருகிறது. 556 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 2707 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. பருவமழை கைகொடுத்ததால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டது.

    அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 519 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு 427 கனஅடி நீர் வருகிறது.

    அணையின் நீர்மட்டம் 65.37 அடியாக உள்ளது. 4713 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 45.30 அடியாக உள்ளது. 21 கனஅடி நீர் வருகிறது. 75 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 106.27 அடியாக உள்ளது. 5 கனஅடி நீர் வருகிறது. 25 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 37.30 அடியாக உள்ளது. 6 கனஅடி நீர் வருகிறது. 14.47 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்கு வாதம்.
    • கூடுதல் பேருந்துகளை ஏற்பாடு செய்யாததால் பயணிகள் தவிப்பு.

    சென்னை:

    கோயம்பேட்டில் இருந்து வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்திற்கு பஸ் நிலையம் மாற்றப்பட்ட பிறகு பயணிகள் தொடர்ந்து பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள்.

    பண்டிகை காலங்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் அதிக அளவில் கூடுகிறார்கள். இப்படி அதிக எண்ணிக்கையில் பெறலாம். பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது.

    முகூர்த்த நாளான இன்று தமிழகம் முழுவதும் திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் பங்கேற்பதற்காக கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்காக பயணிகள் பலர் தங்களது குடும்பத்தினரோடு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு திரண்டனர்.

    இதுபோன்று அதிக அளவில் கூடிய பொது மக்கள் தங்களுக்கு தேவையான பேருந்து கிடைக்காததால் மிகுந்த அவதிக்குள்ளானார்கள். இதை தொடர்ந்து பஸ்நிலையத்தில் பணியில் இருந்த அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் இது போன்று வாக்குவாதத்தில் ஈடுபடுவது இது முதல் முறை அல்ல. ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் இதுபோன்ற பிரச்சனைகள் அங்கு நீடித்து வருவதாக பயணிகள் குற்றம் சாட்டினார்கள்.

    முகூர்த்த நாளை கணக்கில் கொண்டு வெளியூர்களுக்கு கூடுதல் பேருந்துகளை ஏற்பாடு செய்யாதது பயணிகள் தவிப்புக்கு உள்ளானதற்கு காரணமாக அமைந்திருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    எனவே வரும் காலங்களில் இது போன்ற பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • த.வெ.க. கட்சியின் 2-ம் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.
    • கட்சி அலுவலகத்தில் சிலைகள் திறப்பு.

    நடிகர் விஜய் கடந்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி தொடங்கப்பட்டாத அறிவித்தார். இதைத் தொடர்ந்து கட்சியின் கொடி, பாடல் மற்றும் கொள்கைகள் என கட்சி சார்ந்த அறிவிப்புகள் வெளியாகி வந்தன.

    மேலும், கடந்த அக்டோபர் மாதம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநில மாநாட்டை த.வெ.க. தலைவர் விஜய் பிரமாண்டமாக நடத்தினார். இந்த மாநாட்டில், கட்சியின் கொள்கை தலைவர்களாக தந்தை பெரியார், அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் பெயர்களை அவர் அறிவித்தார்.

     


    நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி அறிவிக்கப்பட்டு இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று (பிப்ரவரி 2) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்திற்கு வந்த த.வெ.க. தலைவர் விஜய் த.வெ.க. கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

    தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள த.வெ.க. கொள்கை தலைவர்களான தந்தை பெரியார், அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் சிலையை த.வெ.க. தலைவர் விஜய் திறந்து வைத்தார். மேலும், சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

    • கூடுதல் கட்டணமாக ரூ.1000 சேர்த்து வசூலிக்கப்பட்டது.
    • ‘தட்கல்’ டோக்கன்களும் பெற்றுக் கொள்ளலாம்.

    சென்னை:

    இன்று மங்களகரமான முகூர்த்த நாள் என்பதால் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்ய பொது மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    வீடு, நிலம் வாங்கு பவர்கள் நல்ல நாள் பார்த்து பததிரப்பதிவு செய்வதால் இன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் முகூர்த்த நாள் என்பதால், இன்றைய நாளில் பத்திரப்பதிவு செய்ய பொதுமக்களுக்காக பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

    இதனால் ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் காலையில் இருந்தே கூட்டம் அதிகம் காணப்பட்டது. இதை கருத்தில் கொண்டு முன்கூட்டியே கூடுதலாக டோக்கன் வழங்கப்பட்டிருந்தது. இது தவிர 'தட்கல்' டோக்கனும் கொடுக்கப்பட்டது.

    இன்று விடுமுறை நாளில் பத்திரப்பதிவு நடைபெற்றதால் ஒவ்வொரு ஆவணப்பதிவுக்கும் கூடுதல் கட்டணமாக ரூ.1000 சேர்த்து வசூலிக்கப்பட்டது. இன்று பணியாற்றும் அதிகாரிகள் ஊழியர்களுக்கு வேறொரு நாளில் மாற்று விடுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

    நாளையும் (3-ந்தேதி) மங்களகரமான நாள் என்பதால் அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடை பெறும் என்பதை கருத்தில் கொண்டு கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. 'தட்கல்' டோக்கன்களும் பெற்றுக் கொள்ளலாம் என்று பத்திரப்பதிவுத் துறை தலைவர் அறிவித்துள்ளார்.

    2024-25-ம் நிதியாண்டில் கடந்தாண்டு டிசம்பர் 5-ந் தேதி ஒரே நாளில் அரசுக்கு ரூ.238.15 கோடி வருவாய் பதிவுத் துறையில் ஈட்டப்பட்டது.

    அதைத் தொடர்ந்து ஜனவரி 31-ந்தேதி 23,061 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு இதே நிதியாண்டில் 2-வது முறையாக அரசுக்கு ரூ.231.51 கோடி வருவாய் ஈட்டப்பட்டிருந்தது. இப்போது இன்றும், நாளையும் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மத உணர்வை தூண்டும் வகையில் வாசகம் இடம் பெற்றதாக தெரிகிறது.
    • பா.ஜ.க. நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் காவல் நிலையம் முன்பு திரண்டனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் நேற்று முன்தினம் இரவு இந்து முன்னணி மாவட்ட செயலாளரான தேன்கனிக்கோட்டையை சேர்ந்த குருபிரசாத் (எ)கார்த்திக் (வயது29), மற்றும் அரிஷ் (29), சேசாத்திரி (19), வசந்தகுமார் (20), ஜெய குமார் (23), பவன்குமார் (22), சதீஷ் (29), பிரபு (19), ரவிக்குமார் (31), யஷ்வந்த குமார் (28) உள்ளிட்ட 10 பேர் திருப்பரங்குன்றத்தில் வரும் 4-ந்தேதி நடைபெறும் போராட்டம் குறித்து போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்.

    அதில் மத உணர்வை தூண்டும் வகையில் வாசகம் இடம் பெற்றதாக தெரிகிறது.

    நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆய்வாளர் கணேஷ் குமார், எஸ்.ஐ. நாகராஜ் ஆகியோர் போஸ்டர் ஓட்டிக் கொண்டிருந்த 10 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

    அதை அறிந்த இந்து முன்னணி மாவட்ட தலைவர் கலைகோபி, பா.ஜ.க. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் நாராயணன், முன்னாள் மாவட்ட தலைவர் நாகராஜ் மற்றும் இந்து முன்னணி, பா.ஜ.க. நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை காவல் நிலையம் முன்பு திரண்டனர்.

    அப்போது தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி ஆனந்தராஜ் அவர்களிடம் பேச்சுவார்தை நடத்தினர். பின்னர் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாக தெரிவித்தனர்.

    பின்னர் கைது செய்யப்பட்ட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தேன்கனிக்கோட்டை நீதி மன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்து மேஜிஸ்திரேட் தினேஷ் 10 பேரையும் பிப்ரவரி 13-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தர விட்டார். 

    • சண்முகர் ஆண்டு விழா வருகிற 10-ந்தேதி நடக்கிறது.
    • சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்டு 370 வருடங்கள் ஆகிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திருச்செந்தூர் கோவில் உற்சவரான சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்டு 370 வருடங்கள் ஆகிறது. அதை கொண்டாடும் வகையில் சண்முகர் ஆண்டு விழா வருகிற 10-ந்தேதி நடக்கிறது. அதை முன்னிட்டு அன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

    4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம்,10 மணிக்கு சண்முகர் அபிஷேகம்,மாலை 3 மணிக்கு பிரதோஷ அபிஷேகம், 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மாலை 5 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதியுலா வந்து கோவில் சேர்தல், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    வருகிற 11-ந் தேதி (செவ்வாய் கிழமை) தைப்பூச திருவிழா நடக்கிறது. தைப்பூசத்தை முன்னிட்டு அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம்,காலை 6 மணியில் இருந்து 6.30 மணிக்குள் தீர்த்தவாரி நடக்கிறது.

    10 மணிக்கு சண்முகர் அபிஷேகம், பகல் 1 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் தைப்பூச மண்டபத்துக்கு புறப்படுதல், மாலை 5 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளது.
    • அனைத்து மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் வருகிற வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெறவுள்ளது.

    வருகிற 12-ந்தேதி 25 வது ஆண்டு கொடி நாள் விழாவை முன்னிட்டு முக்கிய ஆலோசனை மற்றும் கழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளது.

    எனவே அனைத்து மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    • தி.மு.க. வேட்பாளரை எதிர்க்க முடியாததால் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளன.
    • திமுக அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் பொய், அவதூறுகள் பொழுது சாய்வதற்குள் பொடிப்பொடியாகிவிடுகின்றனர்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவு பெறுகிறது.

    இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒட்டி தி.மு.க. தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    திராவிட மாடல் ஆட்சியில் ஈரோடு மாவட்டத்தின் நலன் சார்ந்த பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதி ஆர்கேவி சாலையில் ரூ.29 கோடியில் நவீன காய்கறி சந்தை வளாகம் திறக்கப்பட்டது. ஈரோடு ஈகேஎம் அப்துல் கனி மதரஸா ஆரம்பப் பள்ளியில் புதிதாக 5 வகுப்பறை, ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் திறக்கப்பட்டுள்ளன.

    அரசு மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை, ஆதரவை சிதைக்க எதிர்க்கட்சிகளின் அவதூறு, பொய்கள் மக்கள் மன்றத்தில் எடுபடவில்லை. திமுக அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் பொய், அவதூறுகள் பொழுது சாய்வதற்குள் பொடிப்பொடியாகிவிடுகின்றன.

    தி.மு.க. வேட்பாளரை எதிர்க்க முடியாததால் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளன. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசையும், தமிழ்நாட்டு மக்கள் சரியாக அடையாளம் கண்டு வைத்திருக்கிறார்கள்.

    ஈரோடு கிழக்கு வாக்காளர்கள் இடைத்தேர்தலில் உதயசூரியனுக்கு அளிக்கும் மகத்தான வெற்றியின் வாயிலாக நிரூபிப்பர். பெரியார் பிறந்த மண்ணின் இடைத்தேர்தலில் நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்ணாக நம்முடைய வெற்றி அமையட்டும். 2026-ல் வெல்வோம் 200 படைப்போம் வரலாறு என்பதற்கு முன்னோட்டமாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி அமையட்டும்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.கழகத்தின் மாபெரும் வெற்றியை எதிர்நோக்குகிறேன், உடன்பிறப்புகளின் உழைப்பினாலும், மக்கள் மீது உள்ள நம்பிக்கையினாலும்!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அம்மன் மர கேடயத்தில் மேளதாளங்கள் முழங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.
    • காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று கொடிமரத்திற்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

    மண்ணச்சநல்லூர்:

    சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். தமிழ்நாட்டு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் வந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர்.

    இந்நிலையில் இக்கோயில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாகள் கொண்டாடபடும். அதில் தைப்பூச திருவிழா, பூச்சொரிதல் விழா, சித்திரை தேரோட்டம், ஆகியவை வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் இந்த தைப்பூச திருவிழாவை யொட்டி இன்று காலையில் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் மர கேடயத்தில் மேளதாளங்கள் முழங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.

    பின்னர் அம்மனின் திருஉருவப்படம் வரையப்பட்ட துணியாலான கொடியை தங்க கொடிம ரத்தில் கோவிலின் குருக்கள் காலை 7.30 மணிக்கு ஏற்றினர். அதைத்தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று கொடிமரத்திற்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

    இந்த நிகழ்வில் கோயிலின் அறங்காவல் குழு தலைவர் இளங்கோவன், இணை ஆணையர் பிரகாஷ், உறுப்பினர்கள் சுகந்தி, லட்சுமணன் பிச்சை மணி மற்றும் கிராம முக்கிய ஸ்தர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • அரசியல் பயணத்தின் ஒவ்வோர் அடியையும் அளந்து, நிதானமாக வைத்து முன்னேறி வருகிறோம்.
    • மக்கள் பிரச்சனைகளை மட்டுமே மையமாக வைத்து அரசியல் செய்து வருகிறோம்.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி அதன் தலைவர் விஜய் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம்.

    இதயம் மகிழும் தருணத்தில், உங்களோடு பேசவே இக்கடிதம்.

    இன்று ஒரு வெற்றிப் பெரும்படையின் இரண்டாம் ஆண்டுத் தொடக்கம். ஆம். தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் பெரும்படையைக் கட்டமைத்தது பற்றி அறிவித்து, இந்த ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதியோடு ஓராண்டு நிறைவுறுகிறது. மக்கள் இயக்கமாக, மக்களுக்கான நலத்திட்டங்களைச் செய்து வந்த நாம் அரசியல் களத்தைக் கையாளத் தொடங்கி இதோ இப்போது இரண்டாம் வருடத்தின் வாயிலில்,

    கட்சி தொடங்கியதற்கான அறிவிப்பு, உறுப்பினர் சேர்க்கை என நமது அரசியல் பயணத்தின் ஒவ்வோர் அடியையும் அளந்து, நிதானமாக வைத்து முன்னேறி வருகிறோம்.

    மக்களுக்கான அரசியலை மக்களோடு மக்களாக நிற்பதை, மக்களுடன் நின்றே அறிவித்தோம். அதுதான் நமது முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவானது. அதில்தான் கழகத்தின் ஐம்பெரும் கொள்கைத் தலைவர்களை, மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகளை, மாபெரும் செயல்திட்டங்களை அறிவித்தோம். அதன் வாயிலாக, அரசியல் களத்தின் அத்தனை திசைகளையும் அதிர வைத்தோம்.

    இதோ, இந்த ஓராண்டுக்குள் எத்தனை எதிர்ப்புகளை, ஏகடியங்களைக் கடந்திருப்போம்? எதற்கும் அஞ்சாமல், எதைக் கண்டும் பதறாமல் நம் கருத்திலும் கருத்தியலிலும் நின்று, நிதானித்து, நேர்மையாக நடைபோட்டு வருகிறோம்.

    குடியுரிமைச் சட்டத் திருத்தம் தொடங்கி, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு வரை, மக்கள் பிரச்சனைகளை மட்டுமே மையமாக வைத்து அரசியல் செய்து வருகிறோம். தனி மனிதர்களுக்கு எதிரான அரசியலைத் தவிர்த்தே வருகிறோம். இனியும் இப்படியேதான் தொடர்வோம். காரணம், தனி மனிதர்களைவிடத் தனித்து உயர்ந்தது மக்களரசியல் மட்டுமே.

    தொடரும் இப்பயணத்தில், கழகத்தின் உட்கட்டமைப்பை உறுதிப்படுத்தி விரிவாக்கும் பணிகள் இப்போது நடந்து வருகின்றன. அதன் வெளிப்பாடாகத்தான் நம் தோழர்கள் தேர்ந்தெடுத்த கழகத்தின் மாவட்ட நிர்வாகிகளை அறிவித்து வருகிறோம். தலைமைக் கழகத்துக்கான புதிய பொறுப்பாளர்களையும் நியமித்து வருகிறோம்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் ரத்த நாளங்களான நம் கழகத் தோழர்களை அரசியல்மயப்படுத்தி, மக்கள் மத்தியில் அவர்களுக்கெனத் தனிப்பெரும் மரியாதையை மக்கள் பணிகள் மூலம் உருவாக்குவதே எப்போதும் நமது இலக்காக இருக்கும். அந்த இலக்கின் முதல் படிதான் வருகிற 2026 தேர்தல்.

    இந்த வேளையில், கழகத்தின் இரண்டாம் ஆண்டுத் தொடக்க விழாவைக் கொண்டாடும் பொருட்டு, தமிழகமெங்கும் மக்கள் நலத்திட்டப் பணிகளை நம் தோழர்கள் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

    மக்கள் பணி வாயிலாக, நம் மக்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி ஒரு வீடு விடாமல், தமிழக அனைவரின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் கழகத்தின் மணித்திருக்கொடியை ஏற்றி வைக்க வேண்டியது நம் தோழர்கள் ஒவ்வொருவரின் கடமை. இதை நீங்கள் அனைவரும் நிறைவேற்றுவீர்கள் என்று எனக்குத் தெரியும். இருந்தும் உங்களுக்கு நினைவூட்டவே இங்கு சொல்கிறேன்.

    அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கான தேர்தலில், மக்கள் சக்தியுடன் நாம் கரம் கோத்து, நமது வலிமையை நாட்டுக்குப் பறைசாற்றி, அதிகாரப் பகிர்வுடன் கூடிய ஆகப்பெரும் ஜனநாயகப் பெருநிகழ்வைத் தமிழகத்தில் உருவாக்கிக் காட்டப் போகிறோம். அந்த அரசியல் பேரிலக்கை நோக்கி, நீங்கள் இப்போதே உழைக்கத் தொடங்க வேண்டும்.

    மக்களோடு சேர்ந்து, மக்களோடு மக்களாகத் தொடர்ந்து உழைத்தால்தான், தமிழக அரசியலின் கிழக்குத் திசையாகவும், கிளர்ந்தெழும் புதிய விசையாகவும் நம் தமிழக வெற்றிக் கழகம் மாறும். அதை நாம் நிறைவேற்றியே காட்ட வேண்டும். வேறு யாரையும் போல வாயாடலில் மட்டுமே மக்களுடன் நிற்காமல், உள்ளத்தில் இருக்கும் உண்மையான உணர்வுடன் மக்களுடன் களத்தில் நிற்பதுதான் நாம் செய்ய வேண்டிய ஒரே பணி.

    1967இல் தமிழக அரசியலில் ஆகப்பெரும் அதிர்வுடன் ஒருபெரும் மாற்றம் தொடங்கியது. அதன் பின்னர், 1977இல் மீண்டும் ஓர் அரசியல் அதிர்வு ஏற்பட்டது. மக்கள் சக்தியின் மாபெரும் வலிமை நிரூபிக்கப்பட்டது. இவ்விரண்டு தேர்தல் அரசியல் முடிவுகளிலும்தான். அப்போது இருந்தோரின் பெரும் உழைப்பே. இந்தப் பெருவெற்றிகளுக்கான அடிப்படைக் காரணமாகும். அத்தகைய ஓர் அரசியல் பெருவெளிச்சத்தைக் கொண்ட ஒரு புதிய அரசியல் அதிகாரப் பாதையை 2026 தேர்தலில் நாம் உருவாக்கிக் காட்டுவோம். நம்மோடு இணைந்து மக்களும் மனத்தளவில் அதற்குத் தயாராகி வருகின்றனர்.

    தோழர்களே, தமிழக மண்ணைச் சேர்ந்த இந்த மகன் உங்களோடு நிற்கிறேன். நாம், நமது மக்களோடு சேர்ந்து களத்தில் நிற்போம். மாபெரும் அரசியல் மாற்றத்தை நிகழ்த்துவோம்.

    இரட்டைப் போர் யானைகள் பலத்தோடு எதிரிகளை வெல்வோம்.

    வாகைப் பூ மாலை சூடுவோம்.

    இவ்வாறு தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் விஜய் குறிப்பிட்டுள்ளார். 



    ×