என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக, சர்வசே பிளாஸ்டிக் ஒழிப்பு தினம் நடைபெற்றது.
    • பிளாஸ்டிக் பையை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளையும், துணிப்பை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்து ரைத்தார்.

    புதுச்சேரி:

    காரைக்காலில் மாணவர் களுக்கான மத்திய சமையல் கூடத்தை, மிகவும் தூய்மையாக பராமரிக்கவேண்டும். என, மாவட்ட கலெக்டர் குலோத் துங்கன் உத்தரவிட்டுள்ளார். காரைக்கால் அரசு மேல் நிலைப் பள்ளியில், நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக, சர்வசே பிளாஸ்டிக் ஒழிப்பு தினம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத் துங்கன் தலைமை தாங்கினார். துணை கலெக்டர் பாஸ்கரன், மாவட்ட கல்வித்துறை துணை இயக்குனர் ராஜேஸ்வரி, பள்ளி துணை முதல்வர் ஜெயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கலெக்டர் குலோத்துங்கன் பேசுகையில், பிளாஸ்டிக் பையை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளையும், துணிப்பை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்து ரைத்தார். மேலும் பள்ளி மாணவர்கள் பிளாஸ்டிக் பைகளை அறவே ஒதுக்கிவிட்டு, துணிப்பையை பயன்படுத்த வேண்டும். உங்களுடைய பெற்றோர்களுக்கும், உங்கள் நண்பர்களுக்கும் நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். தொடர்ந்து, கலெக்டர் தலைமையில், மாணவர்கள் அனைவரும் பிளாஸ்டிக் பையை பயன்படுத்த மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாணவர்கள் அனைவருக்கும் துணிப்பை களை கலெக்டர் வழங்கினார். முடிவில் உடற்கல்வி ஆசிரி யரும் பள்ளி நாட்டு நலப் பணித் திட்ட அலுவலருமான விசுவேஸ்வரமூர்த்தி நன்றி கூறினார்.

    மேலும் பள்ளி அருகில் உள்ள, மாணவர்களுக்கான மத்திய சமையல் கூடத்தை, கலெக்டர் குலோத்துங்கன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாணவர்களுக்கு சமைக்கும் இடங்களை பார்வை யிட்ட கலெக்டர், அங்குள்ள அரிசி, மளிகை, காய்கறி பொருட்களின் தரத்தை ஆய்வு செய்தார். பின்னர், மாண வர்களுக்கான மத்திய சமையல் கூடத்தை, தூய்மையாக பரா மரிக்கவேண்டும். தினசரி சரியான நேரத்தில், சரியான எடையுடன் காய்கறிகள், மளிகை பொருட்கள் வருகிறதா என்பதை சரிபார்க்கவேண்டும். மாணவர்களுக்கு சுத்தமான உணவை, சத்தாக சமைத்து வழங்கவேண்டும். மேலும் சமைத்த உணவுகளை வண்டி யில் ஏற்றி பள்ளிகளுக்கு எடுத்து செல்லும் போது, சுத்த மாக மூடி எடுத்துச் செல்ல வேண்டும் என்றார். இந்நிகழ்வில் மேல்நிலைக் கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி, முதன்மை கல்வி அதிகாரி ராஜசேகரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • பெண்கள் அமைச்சரை பார்த்து, சார்... சிலிண்டர் விலை 1,200 ரூபாவாக உயர்ந்துவிட்டது. எப்போது விலையை குறைக்க போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.
    • பூஜையை முடித்த அமைச்சரிடம் பெண்கள், சிலிண்டர் விலையை எப்போது குறைப்பீங்க என்று மீண்டும் கேள்வியை எழுப்பினர்.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பாகூர் தொகுதிக்குட்பட்ட மணப்பட்டு புதிய தாங்கல் ஏரி தூர்வாரி ஆழப்படுத்தப்படுகிறது.

    இதற்கான தொடக்க விழா நடைபெற்றது. இதில் பா.ஜ.க. அமைச்சர் சாய்.ஜெ. சரவணகுமார், செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர்.

    விழாவில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் அங்கிருந்த பெண்களிடம் 100 நாள் வேலைவாய்ப்பு 200 நாட்களாகவும் அதற்கான கூலியையும் பிரதமர் மோடி உயர்த்திருக்கிறார்.

    மேலும் மக்களுக்கு வருகின்ற நிதியை உயர்த்தி கொடுக்க சொல்லியும் கூறி இருக்கிறார் என்றார். அப்போது பெண்கள் இதனை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர். இதற்கு ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் நீங்கள் கைதட்டுங்கள் என்று அமைச்சர் கூறினார். அங்கிருந்த பெண்கள் சிரித்துக்கொண்டே கைதட்டினர்.

    இதையடுத்து அங்கிருந்து பெண்கள் அமைச்சரை பார்த்து, சார்... சிலிண்டர் விலை 1,200 ரூபாவாக உயர்ந்துவிட்டது. எப்போது விலையை குறைக்க போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.

    இதையடுத்து அமைச்சர் அங்கிருந்த பூஜை தட்டை எடுத்து வானத்தில் காட்டி மந்திரம் ஓதினார். இதை பார்த்த பெண்கள் சிரித்தனர். பூஜையை முடித்த அமைச்சரிடம் பெண்கள், சிலிண்டர் விலையை எப்போது குறைப்பீங்க என்று மீண்டும் கேள்வியை எழுப்பினர்.

    இதற்கு அவர் பதில் அளிக்காமல் அங்கிருந்து சென்று விட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • பெரிய கடை போலீசார் சபிதாவை அழைத்துச் சென்று விசாரித்தனர்.
    • போலீசார் சபிதா, சந்தோஷ்குமார் ஆகியோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் கதிரவன் மகள் சபிதா(20). சென்னையில் தனியார் கல்லூரியில் பி.ஏ. இறுதி யாண்டு படித்து வருகிறார்.

    இவர் நேற்று மாலை 5 மணிக்கு புதுவை டி.ஜி.பி. அலுவலகம் எதிரே அமர்ந்து தர்ணா செய்தார். பெரிய கடை போலீசார் சபிதாவை அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    அப்போது 2 ஆண்டுக்கு முன் சின்ன காலாப்பட்டை சேர்ந்த சந்தோஷ்குமார்(22) என்பவரோடு பழக்கம் ஏற்பட்டு, காதலித்தோம். திருமணம் செய்துகொள்வ தாகக்கூறி அவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

    என்னை சென்னையில் தங்க வைத்து படிப்பு, விடுதி செலவுகளை செய்தார்.

    சில மாதம் முன் இருவரும் தனி வீடு வாடகை எடுத்து தங்கினோம். திருமணத்திற்காக கிறிஸ்தவ மதத்திற்கு மாறினேன். திடீரென கடந்த 29-ந் தேதி என்னை திருமணம் செய்ய முடியாது, வீட்டை விட்டு வெளியேறும்படி துரத்தினார்.

    மன உளைச்சலால் விஷம் குடித்து சிகிச்சை பெற்று திரும்பினேன். அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. தன்னை ஏமாற்றிய காதலனோடு சேர்த்து வைக்க வேண்டும் என்றார்.

    போலீசார் சபிதா, சந்தோஷ்குமார் ஆகியோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதைதத்தொடர்ந்து சபிதா, சந்தோஷ்குமார் போலீசார் முன்னிலையில் மாலை மாற்றிக்கொண்டு மணமக்களாக வீட்டுக்கு புறப்பட்டனர்.

    • பஸ்களில் தானியங்கி கதவுகள், வழித்தடங்களை தெரிந்து கொள்ள ஜி.பிஎஸ். மற்றும் குளிர்சாதன வசதி உள்ளது.
    • 41 சொகுசு இருக்கைகள் கொண்ட இந்த பஸ்சில் முன்பதிவு வசதிக்கு தனி செயலி உள்ளது.

    புதுச்சேரி:

    சுற்றுச்சூழல் மாசுவை கட்டுப்படுத்த பேட்டரி வாகனங்களுக்கு மத்திய அரசு ஊக்கமளித்து வருகிறது.

    இந்தநிலையில் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு கடற்கரை (இ.சி.ஆர்.) சாலை வழியாக முதல்முறையாக மின்சார பஸ் சேவையை தனியார் நிறுவனம் தொடங்கி உள்ளது.

    புதுச்சேரி பஸ் நிலையம் மறைமலையடிகள் சாலையில் இருந்து தினமும் காலை 7, மாலை 4, இரவு 11.30, அதிகாலை 2 மணி என சென்னைக்கு இந்த பஸ் இயக்கப்படுகிறது.

    மறுமார்க்கத்தில் சென்னை மதுரவாயல், கோயம்பேடு வழியாக காலை 6, காலை 7, பிற்பகல் 2, மாலை 4, இரவு 7, இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரி வருகிறது.

    ஒரு நபருக்கு கட்டணம் ரூ.380 ஆகும். 3 மணி நேரத்திற்குள் நிர்ணயித்த இடத்தை சென்றடையும் வகையில் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஒரு முறை சார்ஜ் செய்தால் தொடர்ந்து 300 கிலோ மீட்டர் வரை இயக்க முடியும். இந்த பஸ்களில் தானியங்கி கதவுகள், வழித்தடங்களை தெரிந்து கொள்ள ஜி.பிஎஸ். மற்றும் குளிர்சாதன வசதி உள்ளது. மேலும் 6 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு டிரைவர் மற்றும் பயணிகளை தலைமை இடத்தில் இருந்து கண்காணிக்கப்படுகிறார்கள்.

    41 சொகுசு இருக்கைகள் கொண்ட இந்த பஸ்சில் முன்பதிவு வசதிக்கு தனி செயலி உள்ளது. அடுத்த கட்டமாக புதுச்சேரியில் இருந்து திருப்பதி, பெங்களூருவுக்கும் மின்சார பஸ் சேவை தொடங்கப்பட உள்ளது.

    • மாணவி ஒருவரை கடந்த ஓராண்டாக ஆனந்த் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
    • கடந்த 2 வாரமாக காதலர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை பூமியான் பேட்டை பாவாணர் நகர் 5-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி தையல்நாயகி. இவர்களது மகன் ஆனந்த் (வயது 22). கடந்த 4 ஆண்டுக்கு முன்பு சரவணன் இறந்து விட்டார். ஆனந்த் நெல்லித்தோப்பில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் டி.எம்.எல்.டி டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் அதே கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவி ஒருவரை கடந்த ஓராண்டாக ஆனந்த் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் கல்லூரி முடிந்து வீடு திரும்பிய பின்னர் தினமும் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர்.

    கடந்த 2 வாரமாக காதலர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஆனந்திடம் அந்த மாணவி பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆனந்த் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

    இந்தநிலையில் நேற்று மதியம் வீட்டுக்கு வந்த ஆனந்த் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது தாயார் ரெட்டி யார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து ஆனந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காதலி பேசாததால் மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மாணவிக்கு அவரது தாய் மற்றும் உறவினர்கள் சேர்ந்து கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.
    • சம்பவம் குறித்து மாணவியின் தந்தை பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    புதுச்சேரி:

    புதுவை அருகே பாகூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி பிளஸ்-1 படித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவிக்கு அவரது தாய் மற்றும் உறவினர்கள் சேர்ந்து கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.

    இதுபற்றி மாணவியின் தந்தை பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்திய போது அந்த சிறுமிக்கு அவரது தாய், சித்தி, சித்தப்பா உள்ளிட்ட உறவினர்கள் சேர்ந்து கடப்பேரிகுப்பத்தை சேர்ந்த உறவுக்கார வாலிபருக்கு திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.

    இதையடுத்து சிறுமியின் தாய் லட்சுமி, மணமகன் பூபதி மற்றும் சிறுமியின் சித்தப்பா மற்றும் சித்தி உள்பட 6 பேர் மீது குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஊர் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர்.
    • பயிற்சியினை நிறைவு செய்த பயனாளிகளுக்கு, சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டத்தில், புதுவை அரசு தொழி லாளர் துறை திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ், வடிவமைப்பு மற்றும் தொழில் நுட்ப மேம்படுத்துதல் முகாமின் ஒரு பகுதியாக, புதுச்சேரி மாநில கூட்டுறவு கைவினை மற்றும் கைத்தறி இணையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காகிதப்பை தயாரிக்கும் பயிற்சி முகாம் நிறைவு பெற்றதை முன்னிட்டு, பயிற்சியினை நிறைவு செய்த பயனாளிகளுக்கு, சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு, புதுச்சேரி போக்குவரத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா தலைமை தாங்கினார். இணை தொழிலாளர் ஆணையர் ராகினி, தொழிலாளர் துறை அதிகாரி மேரி ஜோஸ்பின், மேலாண் இயக்குனர் ஷ்யாம் சுந்தர் மற்றும் துறையின் அதிகாரிகளும் பயிற்சி பெற்ற கைவிணை கலைஞர்களும் கலந்து கொண்டார்கள். பயிற்சி பெற்றவர்களுக்கு அமைச்சர் சந்திரபிரியங்கா சான்றிதழ் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இதுவரை இந்த முகாமில், 130 மகளிர் கலந்து கொண்டு பயன் பெற்றுள்ளார்கள். நிரவி திரு.ட்டினம் பகுதியிலும் இது போன்ற நிகழ்வுகள் நடத்தப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. பயிற்சி வகுப்பில் தினமும் 300 ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் புதுவையிலேயே காரைக்கால் பெண்கள்தான் இந்த பயிற்சியில் மிகுந்த ஆர்வமுடன் கற்றுக் கொள்கிறார்கள்.

    தொழிலாளர் துறை மூலம் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்பில் உங்கள் பங்களிப்பு மிகவும் சிறப்பானது. இந்த பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்ற 3 பேர் சொந்தமாக கடை வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உங்களுக்கு உதவுவதற்காக மாங்கனி திருவிழாவில் மாவட்ட நிர்வாகத்திடம் கலந்து பேசி இவர்களுக்கு ஒரு கடை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, உங்கள் திறமைகளை மற்றவர்களுக்கு கற்றுத் தர முன்வரவேண்டும். முக்கியமாக, பெண்கள் எப்போதும் தங்களது சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்றார்.

    • புதுவையில் கடல் அரிப்பை தடுக்க திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
    • இந்தியாவிலேயே முதல் முறையாக புதுவை அரசு நீல புரட்சிக்காக கையெழுத்திட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை கம்பன் கலையரங்கத்தில் மீன்வளத்துறை சார்பில் விழா நடந்தது. இதில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    புதுவையில் கடல் அரிப்பை தடுக்க திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. தமிழக பகுதியில் கற்கள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் இருமாநில அரசுகளும் பேச்சு வார்த்தை மூலம் கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே முதல் முறையாக புதுவை அரசு நீல புரட்சிக்காக கையெழுத்திட்டுள்ளது.

    42 கி.மீ. கடற்கரையை நீல பொருளாதார மண்டலமாக மாற்ற புதுவையை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. அந்தளவு மத்திய அரசு புதுவை மீது அக்கறையும், பாசமும் கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கவர்னர் தமிழிசை பேசும்போது, முட்டை அசைவமா? சைவமா? என்ற சர்ச்சை நீடித்து வருகிறது.

    அதேபோல மீனை சாப்பிடாதோர் அசைவம் என்றும், சாப்பிடுவோர் சைவம் என்றும் சொல்கின்றனர். எனக்கு பிடித்த உணவு மீன். என்னை பொருத்த வரை மீனை சைவத்தில் சேர்க்கலாம். இதனால் மீனவர்களின் வாழ்வு மேம்படும் என்றார்.

    • மனைவி மற்றும் குடும்பத்தினர் கண் எதிரே மின்னல் தாக்கி அபி‌‌ஷேக் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    • புகாரின்பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 30). இவர் சொந்தமாக உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார்.

    இவர் தனது மனைவி சுஷ்மிதா மற்றும் குடும்பத்தினர்-உறவினர்கள் 10 பேருடன் புதுவைக்கு நேற்று முன்தினம் சுற்றுலா வந்தார்.

    இவர்கள் புதுவையை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில் பகுதியில் தனி வீடு எடுத்து தங்கி புதுவையில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு சென்று வந்தனர். நேற்று மாலை அவர்கள் தங்களது 2 கார்களில் புதுவை அருகே பூ.புதுக்குப்பம் கடற்கரைக்கு சென்றனர்.

    கடற்கரையில் அபிஷேக் தனியாக நடைபயிற்சி சென்றார். மற்றவர்கள் கடல் அலையில் காலை நனைத்து விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்தது.

    அப்போது எதிர்பாராதவிதமாக அபிஷேக் மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் சுருண்டு விழுந்தார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி மற்றும் குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அபிஷேக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மனைவி மற்றும் குடும்பத்தினர் கண் எதிரே மின்னல் தாக்கி அபிஷேக் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அனைவரும் சரியான நேரத்தில் பணிக்கு வரவேண்டும்.
    • இனி பொதுமக்களை ஒருபோதும் அலைக்கழிக்க கூடாது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன் குமார் , காரைக்கால் மதகடியில் அமைந்துள்ள குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில், திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் வருகை பதிவேட்டை பார்வையிட்ட அமைச்சர், ஒரு சிலர் காலதாமத்துடன் வருகை தருவதாக கூறப்படுகிறது. இனி, அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அனைவரும் சரியான நேரத்தில் பணிக்கு வரவேண்டும். காலதாமதத்துடன் வந்தால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.

    மேலும், அலுவலகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், பொதுமக்கள் சிலர் நிற்பதை பார்த்த அமைச்சர், அவர்கள் ஏன் காத்துகிடக்கிறார்கள்? அவர்களது குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்து உடனுக்குடன் அவர்களை அனுப்பி வைக்கவேண்டும். இனி பொதுமக்களை ஒருபோதும் அலைக்கழிக்க கூடாது. முக்கியமாக, பொதுமக்களிடமிருந்து எனக்கு எந்தவித குறைகளும் வராத வண்ணம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணி செய்ய வேண்டும் என்றார்.

    • குழந்தையை மர்ம கும்பல் யாரோ கடத்தி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி நேதாஜி நகரை சேர்ந்தவர் வீரபிரதாப். இவரது மனைவி சோனியா. இவர்கள் கடற்கரை மற்றும் சாலையோரம் இளநீர், சோளம், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

    இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 3 வயதில் பெண் குழந்தையும், 2½ மாதங்களே ஆதித்யா என்ற ஆண் குழந்தையும் உள்ளது.

    இவர்கள் மிஷின் வீதியில் உள்ள ஜென்மராகினி கோவில் அருகே சாலையோர உள்ள பைக் வாடகை விடும் கடை வாசலில் படுத்து தூங்குவது வழக்கம். அதுபோல் நேற்று இரவு தனது குழந்தையுடன் சாலையோரம் படுத்து தூங்கினர். ஆனால் காலையில் பார்த்த போது குழந்தை ஆதித்யாவை காணவில்லை. இதனால் அவர்கள் திடுக்கிட்டனர். அங்குள்ள இடங்களில் தேடி பார்த்தனர். எங்கும் குழந்தை கிடைக்கவில்லை. குழந்தையை மர்ம கும்பல் யாரோ கடத்தி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து சோனியா பெரியகடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சுஷ்மிதா புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.எஸ்.சி. நர்சிங் படித்து வருகிறார்.
    • சுஷ்மிதாவின் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகி உள்ளது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பகுதியை சேர்ந்தவர் மனோகர், விவசாயக் கூலி. இவரது மகள் சுஷ்மிதா (வயது 21). இவர் புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.எஸ்.சி. நர்சிங் படித்து வருகிறார். விடுமுறைக்கு காரைக்கால் வந்த சுஷ்மிதா கடந்த 26-ந் தேதி காலை புதுச்சேரி புறப்பட்டு சென்றுள்ளார். புதுச்சேரி சென்றவுடன் தந்தைக்கு போன் செய்து புதுச்சேரி வந்து விட்டதாக கூறியுள்ளார். அதன் பிறகு சுஷ்மிதாவின் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகி உள்ளது. பல மணி நேரம் முயற்சி செய்த தந்தை, சுஷ்மிதாவின் தோழிகளுக்கு போன் செய்து விசாரித்தார். அப்போது, சுஷ்மிதா கல்லூரிக்கும் மற்றும் ஹாஸ்டலுக்கும் வரவில்லை. என கூறியதாக தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த மனோகர், திருநள்ளாறு போலீசில் புகார் செய்து, உடனடியாக தனது மகளை கண்டுபிடித்து தருமாறு வலியுறுத்தியுள்ளார்.

    ×