என் மலர்
புதுச்சேரி
- கோவில் கோபுரத்தில் பொருத்தப்பட்டு இருந்த செப்பு கலசம் உடைத்து திருடப்பட்டு இருப்பதை கண்டார்.
- நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் கோவில் கோபுர கலசத்தை உடைத்துள்ளனர்.
வில்லியனூர்:
புதுச்சேரி வில்லியனூர் அருகே கோர்க்காடு ஏரி பகுதியில் பாலமுருகன் கோவில் உள்ளது.
பிரசித்தி பெற்ற இக்கோவிலில் விசேஷ நாட்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்தநிலையில் கோவில் பூசாரி கந்தன் நேற்று முன்தினம் இரவு கோவிலில் வழக்கமான பூஜைகளை செய்து கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.
நேற்று காலை கோவிலை திறக்க பூசாரி கந்தன் வந்தபோது, வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவர் கோவிலுக்குள் சென்று பார்த்தபோது கோவில் கோபுரத்தில் பொருத்தப்பட்டு இருந்த செப்பு கலசம் உடைத்து திருடப்பட்டு இருப்பதை கண்டார்.
இதுபற்றி கோவில் நிர்வாகி வைத்தியநாதன் வில்லியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் கோவில் கோபுர கலசத்தை உடைத்துள்ளனர். அதில் ஒரு பகுதி கீழே விழுந்த நிலையில் மற்ற பகுதியை திருடியுள்ளனர். மேலும் கொடிமரத்தில் இருந்த 3 சிறிய கலசங்களையும் உடைத்து திருடிச்சென்றது தெரியவந்தது.
தங்களை பற்றி அடையாளம் தெரியாமல் இருக்க கோவிலில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை உடைத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
கோபுர கலசம் திருடப்பட்டது பற்றி அறிந்த கிராம மக்கள் கோவிலுக்கு திரண்டு வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதே கோவிலில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பஞ்சலோக முருகன் சிலை திருடு போனதும் இதுதொடர்பாக இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
- அலியா நாயக் ஜிப்மர் ஆஸ்பத்திரி கட்டுமான பணியில் வேலை செய்துவந்தார்.
- சக தொழிலாளிகள், அலியாநாயக்கை, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக தூக்கிச் சென்றனர்.
புதுச்சேரி:
ஒரிசா மாநிலத்தைச்சேர்ந்தவர் அலியா நாயக் (வயது25). இவர், காரைக்கால் மேற்கு புறவழிச்சாலை அருகே நடைபெற்று வரும் ஜிப்மர் ஆஸ்பத்திரி கட்டுமான பணியில் வேலை செய்துவந்தார். இரவு வேலைகள் முடிந்த நிலையில், கட்டுமான பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருந்தார். அப்போது அலியாநாயக் தவறி கீழே விழுந்தார். உடனே அங்கிருந்த சக தொழிலாளிகள், அலியாநாயக்கை, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக தூக்கிச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அலியாநாயக் பலியானார். இது குறித்து, காரைக்கால் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- புதுச்சேரி ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் இரவு வில்லியனூர் மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- கைதான 2 பேருக்கும் திருடுவதற்கு உதவியாக இருந்த சிதம்பரத்தை சேர்ந்த கார்த்திக் மாரியப்பன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் சாலையோரம், கடை வீதிகள், பூங்கா மற்றும் வீடு அருகே நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள்கள் திருடுபோய் வந்தன. அதிலும் குறி வைத்து புத்தம் புதிய விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டன. இதுதொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலானது.
இந்தநிலையில் புதுச்சேரி ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் இரவு வில்லியனூர் மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பிடிபட்டவர்கள் சிதம்பரம் கே.என்.தோட்டம் சங்கர் நகர் பகுதியை சேர்ந்த ஸ்ரீராம் (வயது 19), உசுப்பூர் நாயகபுரம் பகுதியை சேர்ந்த தமிழ் என்ற தமிழரசன் (19) என்பதும், அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது என்பதும் தெரியவந்தது. இவர்களில் தமிழரசன் சிதம்பரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் புதுவையில் மேலும் 8 இடங்களில் மோட்டார் சைக்கிள்களை அவர்கள் திருடியது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் ஓட்டி வந்தது உள்பட மொத்தம் 9 மோட்டார் சைக்கிள்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு சுமார் ரூ.15 லட்சமாகும். கைதான 2 பேருக்கும் திருடுவதற்கு உதவியாக இருந்த சிதம்பரத்தை சேர்ந்த கார்த்திக் மாரியப்பன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- மாதம் 2 முறை கடையில் உள்ள நகைகளை சரி பார்ப்பது வழக்கம்.
- நகை வாங்குவது போல் கடைக்கு வந்து, அரை பவுன் தங்க மோதிரத்தை திருடி சென்றது தெரியவந்தது.
புதுச்சேரி:
காரைக்கால் புதுத்துறையை சேர்ந்தவர் சித்ரா. இவர், காரைக்கால் மாதா கோவில் வீதியில் உள்ள நகைக்கடையில் வேலை செய்து வருகிறார். கடை உரிமையாளர் மற்றும் இவரது மகன் ஆகியோர் மாதம் 2 முறை கடையில் உள்ள நகைகளை சரி பார்ப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த 10-ந் தேதி நகைகளை சரிபார்த்து விட்டு நேற்று முன்தினமும் சரி பார்த்தனர். அப்போது, அரை பவுன் தங்க மோதிரம் குறைவது தெரியவந்தது.
மோதிரம் குறைவதால் கடையில் உள்ள சி.சி.டிவி கேமரா பதிவுகளை பார்த்தனர். அப்போது, கடையில் இருந்த சித்ராவிடம், 45 வயது மதிக்கத்தக்க நபரும், ஒரு பெண்ணும் நகை வாங்குவது போல் கடைக்கு வந்து, அரை பவுன் தங்க மோதிரத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து காரைக்கால் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து திருடி சென்ற நபர்களை தேடி வந்த நிலையில் மோதிரத்தை திருடிசென்ற திருவாரூர் அய்யம்பேட்டையைச் சேர்ந்த தனலட்சுமி (வயது 45) நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் புருசோத்தமன், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இவருடன் வந்த குபேரனை போலீசார் தேடி வருகின்றனர்.
- பெண்களை கர்ப்பம் ஆக்கினால் மாதம் ரூ.25 லட்சம் வரை சம்பளம் பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
- இன்ஸ்பெக்டர் மனோஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலம் மாகே பிராந்தியத்தில் உள்ள கெஸ்ட் ஹவுசில் நேபாளத்தைச் சேர்ந்த ஷாஜன் பட்டாராய் (வயது34) என்பவர் தங்கி வேலை செய்து வருகிறார்.
இவரை கடந்த மாதம் செல்போனில் ஒரு மர்ம நபர் தொடர்பு கொண்டு தன்னிடம் ஒரு சிறந்த ஆபர் உள்ளது. தாங்கள் ஒத்துழைத்தால் அதிக சம்பளம் பெறலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.
அதாவது தான் ஒரு குழந்தை பேறு வைத்திய சாலை நடத்தி வருகிறேன். அங்கு வரும் பெண்களை கர்ப்பம் ஆக்கினால் மாதம் ரூ.25 லட்சம் வரை சம்பளம் பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
இதற்கு அட்வான்சாக ரூ.2 லட்சம் தரப்படும் என கூறவே ஷாஜன், தனது அடையாள அட்டை, ஆதார் கார்டு, வங்கி கணக்கு எண் உள்ளிட்டவற்றை அனுப்பி வைத்துள்ளார்.
பின்னர் அவரது செல்போனுக்கு மர்ம நபரிடமிருந்து குறுந்தகவல் வந்துள்ளது. அதில் இவர் ஒரு பெண்ணுடன் பாலியல் ரீதியான தொடர்பு கொள்வதற்காக ரூ.5.5 லட்சம் மற்றும் ரூ.1000 ஆகியவற்றை ஷாஜனின் வங்கிக் கணக்கில் செலுத்தியதற்கான போலி ஆவணங்களை அனுப்பி விட்டு விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்தல் கட்டணம் உள்ளிட்ட செலவினங்களுக்காக கியூ.ஆர். கோர்டை அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து அந்த கியூ.ஆர். கோர்டை ஸ்கேன் செய்து ரூ.50 ஆயிரம் வரை பணத்தை செலுத்தி உள்ளார்.
பின்னர் அந்த மர்ம நபரை ஷாஜன் தொடர்பு கொள்ள முடியவில்லை. கெஸ்ட் அவுஸில் வேலை செய்து சேமித்து வைத்திருந்த பணத்தை இழந்த சோகத்தில் புலம்பியபடி இருந்துள்ளார்.
இது குறித்து புகாரின் பேரில் மாகே இன்ஸ்பெக்டர் மனோஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் வாலிபர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.
- போதை வாலிபரை ஆட்டோவில் ஏற்றி போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
புதுச்சேரி:
புதுவையில் ஜீவா நகர் பகுதியில் புதிதாக கட்டி வரும் பாலத்தின் கீழே 3 வாலிபர்கள் கஞ்சா அடித்து கொண்டு கூச்சலிட்டு வருவதாக போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் வாலிபர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். இதில் 2 வாலிபர்களை போலீசார் துரத்தி பிடித்தனர். ஒருவர் போலீஸ் பிடியில் சிக்காமல், அரைமணி நேரமாக ஆட்டம் காட்டினார்.
மேலும் அங்கிருந்த வாய்க்காலில் குதித்து சேறும், சகதியுடன் தப்பியோடினார். பின்னர் வெங்கட்டா நகரில் உள்ள ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டின் வாசலில் சேறும், சகதியும் சிந்தி கிடப்பதை அடையாளமாக கொண்டு அங்கு வாலிபர் பதுங்கியிருப்பதை கண்டுபிடித்தனர்.
அவரை வெளியே வருமாறு அழைத்தனர். அவர் வர மறுத்ததோடு, கஞ்சா போதையில் தன்னை விட்டு விடும்படி கதறி அழுதார். அங்கும் இங்குமாக ஆட்டம் காட்டி, கடைசியில் நீதிபதி வீட்டுக்கு நேரடியாக வந்துட்டியா. ஒழுங்கா வெளியே வந்துடுப்பா... என போலீசார் மன்றாடினர். அவர் வெளியே வர மறுத்ததால், உள்ளே சென்று தரதரவென வெளியே இழுத்து வந்து அவர் மீது தண்ணீர் ஊற்றி சேறும் சகதியை கழுவி குளிக்க வைத்தனர்.
பின்னர் போதை வாலிபரை ஆட்டோவில் ஏற்றி போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில், பெரியார் நகரை சேர்ந்த அரவிந்த் என்பதும், அவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது, கஞ்சா வாலிபரை போலீசார் பிடிக்க சென்றபோது அவர் செய்த ரகளையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
- ஓட்டல்களில் தக்காளி சட்னியும் நிறுத்தி விட்டனர்.
- மாப்பிள்ளையின் நண்பர்கள் 2கிலோ தக்காளியை மணமகனுக்கு பரிசாக வழங்கினர்.
புதுச்சேரி:
பொதுவாக எந்த மதத்தில் திருமணம் நடந்தாலும் மணமக்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் பரிசு வழங்குவது வழக்கம்.
தற்போது தக்காளி விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. விலை உயர்வால் குடும்ப தலைவிகள் தக்காளி வாங்குவதையே தவிர்த்து வருகின்றனர். மேலும் ஓட்டல்களில் தக்காளி சட்னியும் நிறுத்தி விட்டனர்.
இந்த நிலையில் தக்காளி விலை உயர்வை சுட்டி காட்டும் வகையில் மணமகனுக்கு அவரது நண்பர்கள் 2 கிலோ தக்காளி பரிசாக வழங்கிய சம்பவம் நடந்துள்ளது.
காரைக்கால் மாவட்டம் கருக்கங்குடி பகுதியைச் சேர்ந்த நசீர் என்பவருக்கும் திருப்பட்டினம் பகுதியை சேர்ந்த ரஹமத் நிஷா என்பவருக்கும் திருமணம் நடந்தது.
திருமணத்தில் பங்கேற்ற கருக்கங்குடியைச் சேர்ந்த மாப்பிள்ளையின் நண்பர்கள் 2கிலோ தக்காளியை மணமகனுக்கு பரிசாக வழங்கினர். ஆப்பிளுக்கு பதிலாக தக்காளியை பரிசளித்ததாக அவர்கள் தெரிவித்தனர். தக்காளியை மண மகனுக்கு பரிசு அளிக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- புதுச்சேரி அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.
- அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை, கல்வித்துறை செயலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, ஒப்புதலுக்கான கோப்பை துணைநிலை ஆளுநருக்கு அனுப்ப உள்ளதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் 37 எம்.பி.பி.எஸ் இடங்கள் மற்றும் 11 பல் மருத்துவ இடங்களில் படிக்க மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வழக்கு பதிவு செய்யப்படாமல் 15-க்கும் மேற்பட்ட திருட்டு புகார்கள் நிலுவையில் உள்ளது.
- பைக் திருடிச்செல்லும் மர்ம நபர்களின் முழு உருவ படமும் சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் தெளிவாக தெரிகிறது.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த 10 நாட்களில் நகர பகுதியில் தொடர்ச்சியாக விலை உயர்ந்த பைக்குகள் திருடப்பட்டு வருகிறது. 'வீடு மற்றும் கடை வாசலில் நிறுத்தி வைக்கப்படும் பைக்குகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடி வருகின்றனர்.
கடந்த 10 நாட்களில் அரியாங்குப்பம், பாகூர், பெரியக்கடை, காலாப்பட்டு, கிருமாம்பாக்கம், முத்தியால்பேட்டை, ரெட்டியார்பாளையம், சேதராப்பட்டு, திருபுவனையில் தலா ஒரு பைக், உருளையன்பேட்டை, தவளக்குப்பத்தில் தலா 2 பைக்குகள் திருடப்பட்டுள்ளதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுதவிர வழக்கு பதிவு செய்யப்படாமல் 15-க்கும் மேற்பட்ட திருட்டு புகார்கள் நிலுவையில் உள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் புதுச்சேரி முழுவதும் 25-க்கும் மேற்பட்ட பைக்குகள் திருடப்பட்டுள்ளது.
ரெட்டியார்பாளையம் மற்றும் பெரியக்கடை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பைக்குகளை 3 பேர் சேர்ந்து பூட்டை லாவகமாக உடைத்து திருடிச்செல்லும் சி.சி.டி.வி., காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் விசாரித்து வரு கின்றனர். பைக் திருடிச் செல்லும் மர்ம நபர்களின் முழு உருவ படமும் சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் தெளிவாக தெரிகிறது. பைக் திருட்டில் வெளிமாநில கும்பல் களம் இறங்கி உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர் களும் வருகை தந்த சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
- பாதுகாப்பு பணியில், கோவில் ஊழி யர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில், புகழ்பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சனிக் கிழமை தோறும் ஆயிரக் கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர் களும் வருகை தந்த சாமி தரிசனம் செய்வது வழக்கம். வருகிற 20.12.23 அன்று மாலை 05.20 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா விமரி சையாக நடைபெறவுள்ளது.
அதுசமயம், மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனி பகவான் பிரவேசிக்கிறார். இந்நிலையில், ஆடி பூரத்தை முன்னிட்டும், நேற்று சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் திருநள்ளாறு மற்றும் காரைக்கா லில் குவிந்தனர். அதிகாலை 4.30 மணி முதல், புதுச்சேரி, சென்னை, கோவை, திருச்சி, காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும், திரளான பக்தர்கள், கோவில் அருகே உள்ள நளன் குளத்தில், புனித நீராடி, சனீஸ்வரரை நீண்ட வரிசையில் நின்று, அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை கள் செய்து சாமிதரிசனம் செய்தனர். பாதுகாப்பு பணியில், கோவில் ஊழி யர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
- கடந்த 2022-23-ம் ஆண்டிற்கு அறிவிக்கப்பட்ட ரூ.2 கோடியில் முதல் கட்டமாக 33 எம்.எல்.ஏ.க்களுக்கும் 73 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- இந்த தொகையை கொண்டு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 30 பேர், நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் என மொத்தம் 33 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
இவர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக ஆண்டுதோறும் தலா ரூ.2 கோடி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி பதவியேற்றவுடன் அறிவித்தார். அதன்படி கடந்த 2022-23-ம் ஆண்டிற்கு அறிவிக்கப்பட்ட ரூ.2 கோடியில் முதல் கட்டமாக 33 எம்.எல்.ஏ.க்களுக்கும் 73 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் 33 எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியாக மேலும் ரூ.40 கோடியே 59 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் தலா ரூ.1 கோடியே 23 லட்சம் வீதம் வழங்கப்படுகிறது. இதற்கான உத்தரவினை உள்ளாட்சித்துறை சார்பு செயலாளர் கார்த்திகேசன் தெரிவித்துள்ளார்.
இந்த தொகையை கொண்டு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள உள்ளனர். மேலும் புதுவையில் அண்ணாதிடல், பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளுக்காகவும் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ஒரே மாநில அரசு மருத்துவ கல்லூரியான இதில் ஆண்டு தோறும் 180 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படித்து வருகின்றனர்.
- கவர்னர் தமிழிசை, மாணவர்களுக்கு தாமாக முன்வந்து பாடம் எடுக்க திட்டமிட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை கதிர்காமத்தில் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது.
புதுவையில் உள்ள ஒரே மாநில அரசு மருத்துவ கல்லூரியான இதில் ஆண்டு தோறும் 180 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படித்து வருகின்றனர்.
இதற்கிடையே மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு போதிய பேராசிரியர்கள், நூலகம், ஆய்வக வசதிகள் இல்லை என பலவித புகார்கள் எழுந்து வருகிறது.
மேலும் மருத்துவ மாணவர்கள் படிப்புக்கு தேவையான அல்ட்ரா சவுண்ட் பயன்பாடு குறித்த வகுப்புகள் எடுக்க பேராசிரியர்கள் இல்லை. இதுகுறித்து மாணவர்களும் புகார் தெரிவித்திருந்தனர்.
இதனையறிந்த கவர்னர் தமிழிசை, மாணவர்களுக்கு தாமாக முன்வந்து பாடம் எடுக்க திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை அரசு மருத்துவக் கல்லூரியில் அல்ட்ரா சவுண்ட் வகுப்புக்கு ஆசிரியர்கள் இல்லை என மாணவர்கள் தெரிவித்தனர். அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையில் நான் சிறப்பு நிபுணர்.
எனவே அரசு மருத்துவக் கல்லூரிக்கு சென்று அல்ட்ரா சவுண்ட் வகுப்புகள் எடுக்க திட்டமிட்டுள்ளேன். இதற்கான நேரத்தை ஒதுக்கி மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க உள்ளேன்.
என் பணி புதுவை மக்கள் மீது அன்பு வைத்து செய்யும் பணி. தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் தற்போது சொல்ல முடியாது. நான் தற்போது கவர்னர். அந்த பணியை செய்து வருகிறேன். நான் போட்டியிடுவதை ஆண்டவரும், ஆண்டுகொண்டிருப்பவரும் முடிவு செய்வார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






