என் மலர்tooltip icon

    கேரளா

    • வயநாடு தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
    • பொதுமக்களை பார்த்து ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் உற்சாகமாக கைகளை அசைத்தனர்.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடந்தபோது ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு, உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.

    அந்த 2 தொகுதிகளிலும் ராகுல்காந்தி வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.

    ரேபரேலி தொகுதியில் அவர் மொத்தம் 6 லட்சத்து 87 ஆயிரத்து 649 வாக்குகள் பெற்றார். சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்று இருந்தார். அதுபோல வயநாடு தொகுதியில் 6 லட்சத்து 47 ஆயிரத்து 444 வாக்குகள் பெற்று இருந்தார். அந்த தொகுதியில் அவர் 3 லட்சத்து 64 ஆயிரத்து 422 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    ஆனால் ஏதாவது ஒரு தொகுதியில் எம்.பி. பதவியில் நீடிக்க முடியும் என்பதால் ராகுல்காந்தி வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எழுச்சி ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் ரேபரேலி தொகுதி எம்.பி. பதவியை தக்க வைத்துக்கொண்டார்.

    வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல் ராஜினாமா செய்ததால் அந்த தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விதியின் கீழ் தற்போது அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 13-ந்தேதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று ஏற்கனவே காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. பா.ஜனதா சார்பில் நவ்யா அரிதாஸ், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் சத்யன் மொகேரி போட்டியிடுகின்றனர்.

    வயநாடு தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய பிரியங்கா காந்தி நேற்று கேரளா வந்தார். அவர் மைசூருவில் இருந்து கார் மூலமாக வந்தார்.

    அவருடன் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற தலைவரான சோனியா காந்தி, பிரியங்காவின் கணவர் ராபர்ட் வரோதா, குழந்தைகள் ரைஹான், மராயா ஆகியோரும் வந்தார்கள். அவர்கள் சுப்தான் பத்தேரி பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் இரவில் தங்கினர். வயநாடு வரும் வழியில் பிரியங்கா காந்தி அவரை வரவேற்க திரண்டிருந்த பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

    பிரியங்கா இன்று வயநாடு தொகுதியில் உள்ள கல்பெட்டா பகுதியில் தனது சகோதரர் ராகுல்காந்தி எம்.பி.யுடன் ரோடு-ஷோ நடத்தினார். அவருடன் கணவர் ராபர்ட் வரோதா, குழந்தைகள் ரைஹான், மராயா ஆகியோரும் பங்கேற்றனர்.

    அவர்கள் கல்பெட்டா பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 1.4 கிலோ மீட்டர் தூரம் திறந்தவெளி வாகனத்தில் ரோடு-ஷோ நடத்தினார்கள். அவர்கள் சென்ற சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டிருந்தனர். அவர்களை பார்த்து ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் உற்சாகமாக கைகளை அசைத்தனர்.

    ரோடு-ஷோ நிறைவடைந்த இடத்தில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மட்டுமின்றி, சோனியாகாந்தி, மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

    பொதுக்கூட்டம் முடிந்ததும் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் வயநாடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு தேர்தல் அதிகாரியிடம் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி முன்னிலையில் பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    பிரியங்கா காந்தி இன்று டெல்லிக்கு செல்கிறார். அவர் தேர்தல் பிரசாரத்துக்காக அடுத்த வாரம் வயநாட்டிற்கு மீண்டும் வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காருக்குள் இருந்தவர்கள் படுகாயமடைந்து பலியாகினர்.
    • விபத்தில் சிக்கிய வாகனங்கள் கிரேன் முலமாக சாலையில் இருந்து அகற்றப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ளது கல்லடிக்கோடு. இந்த பகுதி பாலக்காடு-கோழிக்கோடு தேசிய நெடுஞ்சாலையில் இருக்கிறது. இந்த சாலையில் நேற்று நள்ளிரவு 11 மணியளவில் பாலக்காட்டில் இருந்து ஒரு கார் வந்தது.

    அந்த காரும், எதிர் திசையில் கோவை நோக்கி சென்ற சரக்கு லாரியும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் காரின் முன்பகுதி முற்றுலுமாக சேதமடைந்தது. காருக்குள் இருந்தவர்கள் படுகாயமடைந்து பலியாகினர்.

    இந்த விபத்தில் காரில் இருந்த கேரளா கோங்காடு மண்ணாறு பகுதியை சேர்ந்த விஜேஷ்(வயது35), விண்டபாறையை சேர்ந்த ரமேஷ்(31), விஷ்ணு(30), முகம்மது அப்சல்(17), பாலக்காடு தச்சம்பாறையை சேர்ந்த மகேஷ் ஆகிய 5 பேர் பலியானார்கள்.

    இந்த பயங்கர விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு வந்தனர். காருக்குள் சிக்கியிருந்தவர்களின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.

    பின்பு அதனை பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கிய வாகனங்கள் கிரேன் முலமாக சாலையில் இருந்து அகற்றப்பட்டது.

    கனமழையால் கட்டுப்பாட்டை இழந்த கார், லாரியில் மோதி விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நள்ளிரவில் நடந்த இந்த கோர விபத்து பாலக்காடு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் பாலக்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தை அரசியல் கட்சியினர் இன்று ரத்து செய்தனர்.

    • திரிச்சூரில் இருந்து பள்ளி மாணவர்களை மூணாறுக்கு பள்ளி நிர்வாகம் சுற்றுலா அழைத்து வந்துள்ளது.
    • மாணவர்களிடம் இருந்து 5 கிராம் கஞ்சா பறிமுதல்.

    கேரளாவில் கஞ்சா புகைக்க தீப்பெட்டி கேட்க போதைப்பொருள் தடுப்புப்பிரிவு காவல்நிலையத்திற்கு வந்த மாணவர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திரிச்சூரில் இருந்து பள்ளி மாணவர்களை மூணாறுக்கு பள்ளி நிர்வாகம் சுற்றுலா அழைத்து வந்துள்ளது. மூணாறுக்கு முன்பாக உணவு ப்ரேக்கிற்காக பள்ளி பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது 4 மாணவர்கள் தீப்பெட்டி தேடி அழைத்துள்ளனர்.

    அப்போது பக்கத்தில் போதைப் பொருள் தடுப்புப்பிரிவு காவல் நிலையத்திற்கு வெளியே பழைய கார், பைக் நிறுத்தப்பட்டிருந்ததை மாணவர்கள் பார்த்துள்ளனர். 'கலால்துறை அலுவலகம்' என்ற பெயர்ப் பலகையை பார்க்காமல் இந்த இடத்தை ஒர்க் ஷாப் என நினைத்து வந்த மாணவர்கள் உள்ளே சென்று மப்டியில் இருந்த ஒரு போலீசாரிடம் தீப்பெட்டி கேட்டுள்ளனர்.

    அப்போது உள்ளே சீருடையில் போலீஸ் இருப்பதை பார்த்து 2 மாணவர்கள் பயந்து ஓடியுள்ளனர். மற்ற 2 மாணவர்களை போலீசார் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது ஒரு மாணவரிடம் இருந்து 5 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதனையடுத்து பள்ளி ஆசியர்களை அழைத்து விசாரித்து, பள்ளி வாகனத்தை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர் . அப்போது 1 கிராம் அளவுள்ள 'ஹாசிஸ் ஆயில்' என்ற போதைப்பொருளை போலீசார் கைப்பற்றினர்.

    பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்றவரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • விசாரணையில் முடிவில் நடிகர் முகேசை, சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர்.
    • முகேஷூக்கு எர்ணாகுளம் கோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக விசாரித்த நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டியும் குற்றச்சாட்டை உறுதி செய்தது. அதன்பின்னர் பல்வேறு நடிகர்கள் மீதும், பாலியல் புகார்களை நடிகைகள் கூறி பரபரப்பை ஏற்படுத்தினர்.

    குற்றச்சாட்டு கூறப்பட்டவர்களில் நடிகர்கள் முகேஷ், சித்திக், டைரக்டர் ரஞ்சித் ஆகியோர் முக்கியமானவர்கள். அவர்கள் மீது போலீஸ் நிலையங்களில் வழக்கு தொடரப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனை தவிர்க்க சித்திக், முகேஷ் ஆகியோர் கோர்ட்டுகளில் முன்ஜாமீன் பெற்றனர்.

    தொடர்ந்து அவர்கள் புகார்களை விசாரிக்க அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) முன்பு ஆஜராகி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு வடக்கஞ்சேரியில் உள்ள ஓட்டல் அறையில் நடிகர் முகேஷ், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எர்ணாகுளத்தை சேர்ந்த பெண் ஒருவர் கொடுத்த புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி முகேசுக்கு சிறப்பு புலனாய்வு குழு சம்மன் அனுப்பியது.

    இதனை தொடர்ந்து நேற்று நடிகர் முகேஷ், சிறப்பு புலனாய்வு குழு முன்பு ஆஜரானார். அவரிடம், போலீஸ் சூப்பிரண்டு ஐஸ்வர்யா டோங்ரே தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை இரவு 7 மணி வரை நீடித்தது.

    விசாரணையில் முடிவில் நடிகர் முகேசை, சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர். அவரை வடக்கஞ்சேரி தாலுகா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சிறிது நேரத்தில் நடிகர் முகேஷ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    கொல்லம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் உள்ள நடிகர் முகேஷ், கடந்த மாதம் மற்றொரு பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவருக்கு எர்ணாகுளம் கோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது. காலை 9 மணிக்கு விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும். விசாரணை தொடர்பான நடை முறைகளை முடிக்க தேவைப்படும் வரை இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.
    • பத்தனம் திட்டா மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    மத்திய கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது நாளை புயலாக வலுவடைய உள்ளதால், கேரளாவில் வருகிற 25-ந் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இன்று பத்தனம் திட்டா மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    • வயநாடு தொகுதியில் 10 நாட்கள் வரை பிரியங்கா காந்தி பிரசாரத்தில் ஈடுபடலாம் என்று கூறப்படுகிறது.
    • பிரியங்கா காந்தியுடன் ராகுல் காந்தியும் வந்து பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    திருவனந்தபுரம்:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி எம்.பி. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். அவர் இரு தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

    அவர் ரேபரேலி தொகுதி எம்.பி.யாகவே பதவியேற்றார். வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு மக்களவை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதிக்கு வருகிற நவம்பர் 13-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

    இதற்கான அறிவிப்பு கடந்த 15-ந்தேதி வெளியானது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் போட்டியிடுகின்றன.

    காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்யன் மொகேரியும், பாரதிய ஜனதா சார்பில் நவ்யா ஹரிதாஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    இந்தநிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் தனது தேர்தல் பிரசாரத்தை அடுத்த வாரம் தொடங்குகிறார். இதற்காக அவர் இன்று கேரளா வருகிறார். நாளை (23-ந்தேதி) வேட்பு மனுவை தாக்கல் செய்யும் அவர், பின்பு பிரசாரத்தை தொடங்க உள்ளார்.

    அவர் வயநாடு தொகுதியில் 10 நாட்கள் வரை பிரசாரத்தில் ஈடுபடலாம் என்று கூறப்படுகிறது. அப்போது பிரியங்கா காந்தியுடன் ராகுல் காந்தியும் வந்து பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தேர்தல் பிரசாரத்துக்காக ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வர இருப்பதால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • ஆன்லைன் ரேடியோ ஒலிபரப்பு சன்னிதானத்தில் இருந்து செய்யப்படும்.
    • வானொலி நிலையத்தை நடத்துவதற்கான டெண்டர் தொடர்பான அறிவிப்பு வெளியீடு.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் அடுத்தமாதம் (நவம்பர்) 16-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை தேவசம்போர்டு செய்து வருகிறது.

    பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக ஆன்லைன் ரேடியோ சேவையை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தொடங்க உள்ளது. 

    "ரேடியோ ஹரிவராசனம்" என்ற பெயரில் அந்த ஆன்லைன் ரேடியோ தொடங்கப்படுகிறது. இது 24 மணி நேரமும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அய்யப்ப பக்தர்கள் உலகம் முழுவதும் எங்கிருந்தாலும் கேட்கக்கூடிய வகையில் இந்த ஆன்லைன் ரேடியோ தொடங்கப்படுகிறது.

    ஆன்லைன் ரேடியோ ஒலிபரப்பு சன்னிதானத்தில் இருந்து செய்யப்படும். இதில் வழிபாடுகள், பக்தி பாடல்கள், கோவில் விழாக்களின் நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் சபரிமலையின் வரலாறு பற்றிய சிறப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படும்.

    மேலும், கோவில் மற்றும் அதன் பாரம்பரியங்கள் தொடர்பான நேர்காணல்கள் மற்றும் பேச்சுகளும் ஒலிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வானொலி நிலையத்தை நடத்துவதற்கான டெண்டர் தொடர்பான அறிவிப்பை திருவிதாங்கூர் தேவசம்போர்டு வெளியிட்டிருக்கிறது.

    • காரில் கட்டிப்போட்டு, இருக்கையில் மிளகாய் பொடி தூவியதாகவும் அவர் தெரிவித்தார்.
    • தன்னை காரில் கட்டிப்போட்டு, இருக்கையில் மிளகாய் பொடி தூவியதாகவும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பையோலி பகுதியைச் சேர்ந்தவர் சுகைல் (வயது 25). இவர் தனியார் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று முன்தினம் கோழிக்கோடு அரிக்குளம் பகுதியில் சுகைல் காரில் பணத்துடன் சென்றபோது, பர்தா அணிந்த 2 பேர் வழிமறித்து தாக்கியதோடு ரூ.25 லட்சத்தை பறித்துச் சென்றதாக போலீசாரிடம் புகார் கூறினார்.

    மேலும் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள், தன்னை காரில் கட்டிப்போட்டு, இருக்கையில் மிளகாய் பொடி தூவியதாகவும் அவர் தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து சுகைலை மருத்துவமனையில் சேர்த்த போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

    முதலில் ரூ.25 லட்சம் பறிபோனதாக கூறிய அவர், பின்னர் ரூ.75 லட்சம் என்று கூறினார். பெரிய தொகை கொண்டு செல்லும் போது அவர் ஏன் துணைக்கு யாரையும் அழைத்துச் செல்லாமல் தனியாக சென்றார் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் சுகைல், திட்டமிட்டு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஏ.டி.எம். பணத்தை கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சுகைல், அவனது கூட்டாளிகள் தாஹா மற்றும் யாசர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.37 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கோழிக்கோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிதின்ராஜ் கூறுகையில், ஏ.டி.எம். எந்திரங்களில் பணத்தை நிரப்ப, ஒரு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட சுகைல், சில காலமாகவே பணத்தை மோசடி செய்து வந்துள்ளார். தற்போது போலீசாரின் கவனத்தை திசைதிருப்பி முதலில் அவர் நாடகமாடினார். ஆனால் தீவிர விசாரணையில் அவரது குட்டு அம்பலத்திற்கு வந்துள்ளது என்றார்.

    • பாலஸ்தீனத்தில் நடப்பது போர் அல்ல, இனப்படுகொலை.
    • இஸ்ரேல் விரும்பும் ஆயுதங்களை தயாரிக்கும் பூமியாக இந்தியா மாறியுள்ளது.

    பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததாக இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டுவரும் ஹமாஸ் அமைப்பு கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி முன்னெப்போதும் இல்லாத மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலை நோக்கி ஆயிரக்கணக்காக ராக்கெட்டுகள் சரமாரியாக பாய்ந்தன. தரைவழியாக ஊடுருவியும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

    மேலும் சுமார் 250 பேர் பணய கைதிகளாக பிடிப்பித்துச்செல்லப்பட்டனர். இதனைத்தொடர்ந்து பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேல் கடந்த ஒரு வருடமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பெண்கள் குழந்தைகள் உட்பட 41 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

    பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்கு பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இஸ்ரேலின் தாக்குதலை பெயரளவில் கண்டித்தாலும் இந்த விவகாரத்தில் இந்தியா எந்த நாட்டிற்கும் ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலைமை வகிக்கிறது.

    இந்நிலையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை திருப்திப்படுத்தவே பாலஸ்தீனத்திற்கு பதிலாக இஸ்ரேல் நாட்டை இந்திய அரசு ஆதரித்து வருகிறது என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

    கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்ற சி.எச்.கனராம் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தை நேற்று தொடங்கி வைத்துப் பேசிய பினராயி விஜயன் இவ்வாறு தெரிவித்தார்.

    பொதுக்கூட்டத்தில் பேசிய பினராயி விஜயன், "இஸ்ரேல் மற்றும் நம் நாட்டில் அதிகாரத்தில் இருப்பவர்களும் உடன் பிறந்தவர்கள் போன்றவர்கள். இருவரில் ஒருவரின் பெயர் சியோனிஸ்டுகள் மற்றொருவரின் பெயர் சங் பரிவார். இந்த 2 பேருக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.

    இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை நிறுத்த சொல்லி ஐநா சபையில் உள்ள பெரும்பாலான நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. அமெரிக்கா போன்ற சில நாடுகள் மட்டுமே இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளன.

    இதில் மகத்தான வரலாற்றை கொண்ட நம் நாடு எங்கே இருக்கிறது? இப்பிரச்சனையில் ஐநா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நாம் நடுநிலைமை வகிக்கிறோம். நாம் பாலஸ்தீனத்தின் பக்கம் இல்லை. பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை நிறுத்தக் கோரும் குழுவில் நாம் இல்லை. அதன் பொருள் நாம் இஸ்ரேல் பக்கம் நிற்கிறோம்.

    இத்தாலி போன்ற பல நாடுகள் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்த முடிவு செய்தாலும், இந்தியா இன்னும் அதை நிறுத்தவில்லை. இஸ்ரேலுடன் அதிக ஆயுத வியாபாரம் செய்யும் நாடு இந்தியா தான். இஸ்ரேல் விரும்பும் ஆயுதங்களை தயாரிக்கும் பூமியாக இந்தியா மாறியுள்ளது

    பாலஸ்தீனத்தில் நடப்பது போர் அல்ல, இனப்படுகொலை. 2 தரப்பினரிடமும் போதுமான ஆயுதங்கள் இருந்தால் தான் அதை போர் என்று அழைக்க முடியும். இஸ்ரேல் எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்துகிறார்கள், இது ஒருதலைபட்சமான தாக்குதல்" என்று தெரிவித்தார்.

    • காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.
    • 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.

    வயநாடு மக்களவை தொகுதிக்கு நவம்பர் 13-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி களம் இறக்கப்பட்டுள்ளார். முதன்முறையாக பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிடுகிறார்.

    அவருக்கு ஆதரவாக அவரது தாயாரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவருமான சோனியா காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

    பலவருடங்கள் கழித்து பிரியங்கா காந்திக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள சோனியா காந்தி கேரள வர இருப்பதாக, மாநில காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

    வரும் செவ்வாய்க்கிழமை பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் ரோடு ஷோவில் கலந்து கொள்கிறார்கள். இதில் சோனியா காந்தியும் பங்கேற்கிறார்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். எதாவது ஒரு தொகுதியை விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம் என்பதால் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் பாலக்காடு மற்றும் செலக்காரா சட்டமன்ற தொகுதிகளுடன் வயநாடு தொகுதிக்கு நவம்பர் 23-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

    ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் சுமார் 3,64,422 வாக்கு வித்தியாசத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக ஆனி ராஜாவை வீழ்த்தினார்.

    வயநாட்டில் பிரியங்கா காந்தியை சுமார் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் பணியாற்றி வரகிறார்கள்.

    காஙகிரஸ் கட்சியின் பொது செயலாளரும், அமைப்பாளருமான கே.சி. வேணுகோபால், பிரியங்கா காந்தியின் தேர்தல் பிரசார ஒருங்கிணைப்பாளராக செயல்பட இருக்கிறார்.

    • கண்ணில் மிளகாய் பொடி தூவி கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
    • சம்பவ இடத்தில் கொள்ளை நடந்ததற்கான அறிகுறிகள் இல்லை என தகவல்.

    கேரள மாநிலம், கோழிக்கோட்டில் ஏடிஎம்மில் பணம் நிரப்ப காரில் கொண்டு சென்ற ரூ.25 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காரில் பணத்துடன் சென்றவரை கட்டி வைத்து, கண்ணில் மிளகாய் பொடி தூவி கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

    ஆனால், சம்பவ இடத்தில் கொள்ளை நடந்ததற்கான அறிகுறிகள் இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால், இந்த சம்பவத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகித்த போலீசார், பாதிக்கப்பட்ட நபர் உள்பட 2 ஊழியர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர், "பர்தா அணிந்திருந்த பெண் கும்பல், காரில் லிப்ட் கேட்டு ஏறியதாகவும், தன் மீது மிளகாய் பொடியை தூவி, ரூ.25 லட்சத்தை கொள்ளையடித்து சென்றதாகவும்" போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
    • அலட்சியமாக இருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கமுடிவு.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் ஸ்ரீபத்ம நாபசுவாமி கோவிலுக்கு தினமும் ஏராளமானோர் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். சம்பவத் தன்றும் வெளிநாட்டினர் உள்பட ஏராளமானோர் கோவிலுக்கு வந்திருந்தனர். தரிசன நேரம் முடிந்ததும் கோவில் பணியாளர்கள் நடை சாத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கோவிலின் கருவறையில் இருந்த நைவேத்ய உருளி (வெண்கல பாத்திரம்) மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள், சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதில் 3 பெண்கள் உள்பட 4 பேர் உருளியை எடுத்துச் செல்வது தெரிய வந்தது. கோவிலை சுற்றி வந்த போது அவர்கள் அதனை எடுத்து உடைக்குள் மறைத்து கொண்டு சென்ற தும் உறுதியானது.இது குறித்து கோட்டை போலீசில் புகார் கொடுத்தனர்.

    போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தியபோது, அந்தக் கும்பல், திருவனந்த புரத்தில் இருந்து உடுப்பி சென்றதும், அங்கிருந்து விமானம் மூலம் ஹரியானா சென்றதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அரி யானா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், 3 பெண்கள் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். கைதானவர்களில் ஒருவர், ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற டாக்டர் ஜெகனேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

    கைதானவர்கள் கூறுகையில், கோவிலில் இருந்து கப்பலை (வெண்கல பாத்திரம்) திருடியது பண ஆதாயத்திற்காக அல்ல. பூஜை அறையில் வைத்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என நம்பியதால் தான் எடுத்து வந்ததாக கூறினர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் திருவனந்தபுரம் அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    பத்மநாபசுவாமி கோவிலில் குறிப்பிடத்தக்க பொக்கிஷங்கள் உள்ளதால், 2011-ம் ஆண்டு முதல் அங்கு 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமலில் உள்ளது. இந்த நிலையில் கோவிலில் திருட்டு நடைபெற்றுள்ளது பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே பாதுகாப்பில் அலட்சியமாக இருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது.

    ×