search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mandal Pooja"

    • மார்கழி மாதங்களில ஐயப்ப பூஜைகளும், பஜனைகளும் நடைபெறும்.
    • கோவிலுக்கு அருகே பாலருவியும், அச்சன்கோவில் ஆறும் உள்ளது.

    கோவில் தோற்றம்

    கார்த்திகை மாதம் பிறந்தாலே 'சுவாமியே சரணம் ஐயப்பா' என்ற சரண கோஷம் ஊர் தோறும், வீடு தோறும் கேட்கும். அனைத்து ஊர்களிலும் ஐயப்ப சுவாமிக்கு மாலை அணிந்த பக்தர்கள், கருப்பு மற்றும் காவி உடை அணிந்து செல்வதையும் அதிக அளவில் காணலாம். கார்த்திகை, மார்கழி மாதங்களில் எங்கு பார்த்தாலும் ஐயப்ப பூஜைகளும், பஜனைகளும் நடைபெறும். அந்த அளவிற்கு சுவாமி ஐயப்பன் மீது பக்தர்கள் பக்தி கொண்டு மாலை அணிந்து, சபரிமலைக்கு சென்று ஐயப்பனை வழிபட்டு வருகிறார்கள்.

     தமிழ்நாட்டில் முருகப்பெருமானுக்கு திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை, திருத்தணி என்று அறுபடை வீடுகள் இருப்பது போல், ஐயப்ப சுவாமிக்கும் கேரளாவில் ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழா, பந்தளம், எரிமேலி, சபரிமலை என அறுபடை வீடுகள் உள்ளன. குளத்துப்புழாவில் பாலகனாகவும், ஆரியங்காவில் பூரண-புஷ்கலையுடன் அய்யனாகவும், அச்சன்கோவிலில் அரசனாகவும், எரிமேலியில் சாஸ்தாவாகவும், சபரிமலையில் ஐயப்பனாகவும் இருந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    சபரிமலைக்கு மாலை அணிந்து செல்கின்ற பக்தர்கள், ஐயப்பனின் இந்த ஆறு கோவில்களுக்கும், தமிழகத்தில் பாபநாசம் மலையில் காரையாற்றில் உள்ள சொரிமுத்து அய்யனார் உள்ளிட்ட பல்வேறு கோவிலுக்கும் சென்று விட்டு சபரிமலை செல்வது வழக்கம்.

    ஐயப்பனின் அறுபடை வீடுகளில் அரசனாக இருந்து ஆட்சி செய்வது, அச்சன்கோவில் திருத்தலமாகும். இந்த அச்சன் கோவில் தர்மசாஸ்தா, மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒருவரான பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். அச்சன் கோவில் திருக்கோவிலானது, தமிழக எல்லையில் தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதியில் அமைந்துள்ளது.

    செங்கோட்டை, பண்பொழி, மேக்கரை வழியாக காட்டுப்பகுதியில் சென்றால் அச்சன்கோவில் செல்லும் வழியில் கோட்டைவாசல் கருப்பசாமி கோவில் உள்ளது. அச்சன்கோவில் செல்லும் பக்தர்கள் இந்த கோவிலில் வழிபட்ட பின்னரே அச்சன்கோவில் செல்வார்கள். கோவிலுக்கு அருகே பாலருவியும், அச்சன்கோவில் ஆறும் உள்ளது.

    அச்சன்கோவிலில் பூரண - புஷ்கலையுடன் தர்மசாஸ்தா மூலவராக உள்ளார். விநாயகர், முருகர், நாகராஜன், நாகக்கன்னி, குருவாயூரப்பன், வனதேவதைகளும் உள்ளன. கோவிலுக்கு எதிரே கருப்பசாமி கோவில் இருக்கிறது. தர்மதாஸ்தா சுவாமிக்குரிய நகைகள் எல்லாம் புனலூரில் அரசு கருவூலத்தில் உள்ளன. இந்த நகைகள் அனைத்தும், மண்டல பூஜையின் போது கோவிலுக்கு கொண்டு வந்து சுவாமிக்கு அணிவிக்கப்படும்.

    இந்த தர்மசாஸ்தா கோவிலுக்கு ஒரு வாள் உண்டு. காந்த மலைப்பகுதியில் இருந்து இறைவனே இதை வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த வாள் இடத்துக்கு இடம், நிறம், எடை மாறும் அதிசயவாள் என்று சொல்லப்படுகிறது.

    சுவாமி தர்மசாஸ்தா இங்கே அரசனாகவும், ஆண்டவனாகவும் இருப்பதால், அவரிடம் வைக்கின்ற கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.

    குழந்தை இல்லாத தம்பதியர்கள் சுவாமியை வழிபட்டு நாகராஜா கோவில் வளாகத்தில் உள்ள மரத்தில் முந்தானை சேலையை கிழித்து தொட்டில் கட்டி ஆட்டினால், மறு ஆண்டுக்குள் குழந்தை பாக்கியம் கிடைத்து வீட்டில் தொட்டிலாடும் என்பது அவர்களின் நம்பிக்கையாகும்.

    நாக தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள நாகராஜா கோவிலில் வந்து வழிபடுவார்கள். அங்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த வீணை வாசிப்போர் தங்கள் கையில் வைத்திருக்கும் வீணையை இசைத்து நாகராஜன் பற்றி பாடல்களை பாடினாலும், தோஷம் உள்ளவர்களின் ராசி, நட்சத்திரம் பற்றி பாடினாலும் தோஷம் நீங்குவதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அப்பகுதி பக்தர்கள் கூறுகையில், `அச்சன்கோவில் வனப்பகுதியாகும். இந்த கோவிலில் உள்ள தர்மசாஸ்தா அரசனாகவும், மருத்துவராகவும் இருந்து மக்களை பாதுகாத்து வருகிறார். அவருடைய கையில் வைத்துள்ள வெள்ளை சந்தனத்தையும், தண்ணீரையும் பாம்பு கடித்தவர்களுக்கு கொடுத்து உயிரை காப்பாற்றி வருகிறார். இந்த சிலை பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. '

    இந்த சிலையை வடித்த சிற்பி தர்மசாஸ்தாவின் கட்டளைப்படி அந்த மலைப்பகுதியில் உள்ள ராஜநாகத்தின் விஷத்தை போக்கும் மருந்தை எடுத்து வைத்து சிலையை செதுக்கி உள்ளார். சிலையை செதுக்கிய இரும்பு உளியை தண்ணீரில் தோய்த்து அடிப்பதற்கு பதிலாக அந்த மருந்தில் நனைத்து செதுக்கியதாக கூறப்படுகிறது.

    இதனால் சிலையில் சுவாமிக்கு அபிஷேகம் செய்த தண்ணீரும், வெள்ளை சந்தனமும் அப்படியே இருக்கும். பாம்பு கடித்தவருக்கு அந்த தண்ணீரையும், சந்தனத்தையும் கொடுத்தவுடன் குணம் கிடைத்து விடுகிறது. நடை மூடிய பிறகும் எந்த நேரமாக இருந்தாலும் கோவில் மணியை அடித்த உடனே பூசாரி வந்து நடையை திறந்து பரிகாரமாய் இந்த சிகிச்சை அளிக்கிறார்' என்றார்கள்.

    இத்தனை சிறப்பு மிக்க அச்சன்கோவிலில் மார்கழி மாதம் நடைபெறுகின்ற மண்டல பூஜை வருகிற 16-ந் தேதி (சனிக்கிழமை) தொடங்குகிறது. அன்றைய தினமே ஆபரணப்பெட்டி ஊர்வலம் நடைபெறும். தொடர்ந்து 17-ந் தேதி கொடியேற்றம், 25-ந் தேதி காலை 11 மணிக்கு தேரோட்டம், 26-ந் தேதி ஆராட்டும் நடக்கிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் `நிறைப் புத்தரிசி பூஜை' நடைபெறும். இந்த பூஜையில் பல்வேறு இடங்களில் இருந்து வயல்களில் விளைந்த நெற்கதிர்களை கொண்டு வந்து கொடுத்து பூஜை நடத்தி அதனை பக்தர்களுக்கு கோவிலிலிருந்து வழங்குவார்கள். இதனைப் பெற்று வீட்டில் வைத்தால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

    இதேபோல் அச்சன்கோவிலுக்கு சொந்தமான வயல்களில் தனியாக நெல் பயிரிடப்பட்டு அந்த நெற்கதிர்களை அறுவடை செய்து அச்சன்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் சபரிமலையில் நடைபெறும் நிறைப்புத்தரிசி விழாவிற்காக விரதம் இருந்த 51 பக்தர் களுடன், 51 நெற்கதிர் கட்டுகளை சபரிமலை கோவில் நிர்வாகத்தினா் சபரிமலைக்கு எடுத்துச் செல்வார்கள்.

    அச்சன்கோவில் தர்மசாஸ்தா கோவிலில் தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறந்து பூஜைகள் நடக்கும். மதியம் 12 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை கோவில் திறந்திருக்கும். ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் மண்டல பூஜை தேரோட்டம் நடைபெறும். ஐயப்பன் கோவில்களில் தேரோட்டம் நடைபெறும் ஒரே கோவில் இந்த அச்சன்கோவில் ஆகும்.

    ஒவ்வொரு கோவிலிலும் தேரை பக்தர்கள் வடம் (கயிறு), இரும்புச் சங்கிலி ஆகியவற்றால் இழுப்பார்கள். ஆனால் தர்மசாஸ்தா தேரை மட்டும் மூங்கில் பிரம்புகள் வைத்து தான் பக்தர்கள் இழுப்பார்கள். இந்த அதிசயம் இந்தக் கோவிலில் மட்டும் தான் நடைபெறுகிறது.

    தேரோட்டத்தின் போது தமிழக மக்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். தேரோட்டத்தின் போது கருப்பன் துள்ளல் நிகழ்ச்சி நடக்கும். இதேபோல் மண்டல பூஜை நாட்களிலும் இந்த கருப்பன் துள்ளல் (அதாவது கருப்பசாமி வல்லயம் அரிவாள் வைத்து ஆடுவது) சிறப்பு வாய்ந்ததாகும்.

    அச்சன்கோவில் பகுதியில் யாருக்கு பாம்பு கடித்தாலும், உடனே கோவிலுக்கு அந்த நபரை கொண்டு வருவார்கள். அவரை கொடிமரத்தின் அருகில் படுக்க வைத்து விட்டு கோவில் மணி அடித்தவுடன் கோவில் பூசாரி வந்து கோவிலைத் திறந்து சுவாமியின் சிலையில் உள்ள சந்தனத்தையும், தீர்த்தத்தையும் (தண்ணீர்) எடுத்து மருந்தாக கொடுக்கிறார். அதை குடித்த உடன் பாம்பின் விஷம் இறங்கி அந்த நபர் உயிர் பிழைத்து விடுவார். அந்த அதிசயம் இன்றும் இங்கு நடைபெறுகிறது.

    கோவில் உள்ள இடம் அடர்ந்த வனப்பகுதியாகும். அங்கிருந்து ஆஸ்பத்திரிக்கு வர வேண்டுமானால் செங்கோட்டை, புனலூருக்கு தான் செல்ல வேண்டும். அதற்குள் பாம்பு கடித்தவர் இறந்துவிட வாய்ப்புள்ளது. எனவே இந்த கோவிலில் சுவாமியின் சந்தனத்தையும், தீர்த்தத்தையும் கொடுத்தால் விஷம் இறங்கி விடுகிறது என்று பக்தர்கள் தெரிவித்தனர்.

    • 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும். அதன் பிறகு மகர விளக்கு பூஜை காலம் தொடங்கும்.
    • ராஜா அண்ணாமலை புரத்தில் 18 படிகளுடன் கோவில் அமைந்துள்ளது. இங்கு காலை 6 மணிக்கு நடை திறக்கிறது. அது முதல் மாலை அணியலாம்.

    சென்னை:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்பட்டது. நாளை (கார்த்திகை 1) மண்டல பூஜை காலம் தொடங்குகிறது. 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும். அதன் பிறகு மகர விளக்கு பூஜை காலம் தொடங்கும்.

    இந்த காலத்தில் மாலை அணிந்து விரதம் இருந்து லட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் சபரி மலைக்கு செல்வார்கள்.

    மண்டல பூஜை காலத்தில் சபரிமலைக்கு செல்பவர்கள் பம்பை வரை வாகனங்களில் செல்வார்கள். அங்கிருந்து சின்னப் பாதை எனப்படும் நீலிமலை வழியாக கால்நடையாக அய்யப்பன் சன்னிதானம் செல்வார்கள்.

    மகரவிளக்கு காலத்தில் செல்லும் பக்தர்களில் பலர் எரிமேலி வரை வாகனங்களில் செல்வார்கள். அங்கு பேட்டை துள்ளிவிட்டு அடர்ந்த காட்டுப் பகுதியான பெருவழி பாதையில் நடந்து செல்வார்கள். பேரூர்தோடு, காளைகட்டி, அழுதாமலை, கல்லிடும் குன்றம், கரிமலை, பெரியானை வட்டம் வழியாக பம்பை சென்றடைவார்கள் அங்கிருந்து நீலிமலை வழியாக சன்னிதானம் செல்வார்கள்.

    நாளை விரதத்தை தொடங்கும் அய்யப்ப பக்தர்கள் அதிகாலையில் துளசி மாலை அணிவார்கள். அன்றாட வாழ்வியலில் இருந்து மாறுபட்டு துறவு வாழ்க்கை போல் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றி கொள்வார்கள். கருப்பு, நீலம், காவி ஆடைகள் அணிந்து, காலில் செருப்பு அணியாமல் இருப்பார்கள். தினமும் காலையிலும், மாலையிலும் குளிர்ந்த நீரில் குளித்து சரணம் சொல்லி பூஜை செய்வார்கள்.

    விரத காலம் முழுவதும் உணவு கட்டுப்பாடு, மனக்கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். புனிதமான மாலை அணியும் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. இதற்காக சென்னையில் உள்ள முக்கியமான அய்யப்பன் கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    கோடம்பாக்கம் மகாலிங்க புரத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஏராளமானவர்கள் மாலை அணிவார்கள். கடந்த ஆண்டு சுமார் 15 ஆயிரம் பேர் மாலை அணிந்ததாகவும் இந்த ஆண்டு அதைவிட அதிகமாக இருக்கும் என்று கருதுவதால் கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக கூறினார்கள்.

    அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கிறது. அதுமுதல் மாலை அணியலாம். கோவிலிலேயே மாலை மற்றும் நீலவேஷ்டிகள் விற்பனைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். டிக்கெட் கட்டணமாக ரூ.10 வசூலிக்கிறார்கள்.

    ராஜா அண்ணாமலை புரத்தில் 18 படிகளுடன் கோவில் அமைந்துள்ளது. இங்கு காலை 6 மணிக்கு நடை திறக்கிறது. அது முதல் மாலை அணியலாம். டிக்கெட் கட்டணம் ரூ.10 செலுத்தி மாலை அணிந்து கொள்ளலாம். மாலை, வேட்டிகள் விற்பனைக்காக தனியாக கடைகள் உள்ளன.

    மடிப்பாக்கம் அய்யப்பன் கோவிலில் 18 படிகள் அமைந்துள்ளது. மாலை அணிந்து இருமுடி கட்டி செல்பவர்கள் மட்டும் படிகள் வழியாக ஏறி செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

    இன்று சுத்தி பூஜை நடந்தது. நாளை காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டதும் பக்தர்கள் மாலை அணியலாம். இங்கும், மாலை, வேஷ்டி, விற்பனைக்கு உள்ளது. அர்ச்சனை கட்டணமாக ரூ.10 செலுத்த வேண்டும். காலை 9 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து பறை எடுப்பு (நெல் அளப்பது) நடைபெறுகிறது. ஊர்வலமாக அய்யப்பா நகர் தெருவில் அழைக்கப்பட்ட வீடுகளுக்கு சென்று நெல் அளப்பார்கள்.

    மாலையில் படி பூஜை நடக்கிறது. தொடர்ந்து 18 நாட்கள் படி பூஜை நடக்கிறது.

    மேடவாக்கம் அருகில் உள்ள வெள்ளக்கல்லில் 18 படியுடன் கூடிய அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. இங்கு அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டதும் பக்தர்கள் மாலை அணியலாம். தினமும் சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறுவது போல் பூஜைகள் நடைபெறும்.

    திருவொற்றியூர் ஹைரோடு டோல்கேட் அருகே வடசென்னை அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நாளை காலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. நிர்மால்ய தரிசனம், அபிஷேகம் முடிந்ததும் அய்யப்பனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் நடைபெறும். மணலி, காசிமேடு, திருவொற்றியூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ளவர்கள் ஏராளமானோர் மாலை அணிந்து கொள்வார்கள்.

    அண்ணாநகர் அய்யப்பன் கோவில் நாளை காலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. உடனே பக்தர்கள் மாலை அணிய தொடங்குவார்கள் என்றனர்.

    இந்த அய்யப்பன் கோவில்கள் அனைத்திலும் மாலை அணிவதோடு, மாலை அணிந்த பக்தர்கள் இருமுடி கட்டவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • 16-ந்தேதி மாலையில் கோவில் நடை திறக்கப்படுகிறது.
    • வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு முறையே பின்பற்றப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் பல லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக வருகிற 16-ந்தேதி மாலையில் கோவில் நடை திறக்கப்படுகிறது. மறுநாள் முதல் நெய் அபிஷேகம் உள்ளிட்ட அனைத்து வழக்கமான பூஜைகளும் தொடங்கும். பக்தர்கள் அன்று முதல் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.

    சாமி தரிசனத்துக்கு வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு முறையே பின்பற்றப்படுகிறது. சபரிமலையில் மண்டல பூஜை தொடங்க ஒரு வாரமே உள்ளதால், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    இந்நிலையில் சபரி மலைக்கு யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் வகையில் அய்யன் என்ற செயலி அறிமுகப்படுத்ததப்பட்டு உள்ளது. பெரியார் வன விலங்கு சரணாலயம் மேற்கு பிரிவு சார்பில் தனியார் நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியை வனத்துறையினர் நேற்று வெளியிட்டனர்.

    இந்த செயலியில் பம்பை, சன்னிதானம், சுவாமி ஐயப்பன் சாலை, பம்பை-நீலிமலை, சன்னிதானம், எரிமேலி-அழுதைமலை-பம்பை உள்ளிட்ட சன்னிதான வழித்தடங்களில் உள்ள சேவைகள், யாத்திரையின் அனைத்து அம்சங்கள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, சபரிமலைக்கு செல்லும் பாரம்பரிய வழத்தடங்களில் உள்ள சேவை மையங்கள், மருத்துவ அவசர சிகிச்சை பிரிவுகள், தங்குமிடங்கள், யானைப்படை குழுக்கள், பொது கழிப்பறைகள், ஒவ்வொரு தளத்தில் இருந்தும் சன்னிதானம் வரை உள்ள தூரம், இலவச குடிநீர் வினியோகிக்கப்படும் இடங்கள் உள்ளிட்ட தகவல்களை இந்த செயலி வழங்குகிறது.

    யாத்திரையின் போது பக்தர்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்களும் அய்யன் செயலியில் இடம் பெற்றிருக்கிறது. இந்த செயலியை தமிழ், மலை யாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கும் செய்து கொள்ளலாம்.

    மேலும் சபரிமலை யாத்திரை செல்லக்கூடிய காட்டுப்பகுதியில் ஆங்காங்கிகே கியூ-ஆர் கோர்டு வைக்கப்பட்டு இருக்கிறது. அதனை ஸ்கேன் செய்தும் செல்போன்களில் அய்யன் செயலியை பதிவிறக்கம் செய்யலாம். ஆப்லைன் மற்றும் ஆன்லைனில் இந்த செயலி வேலைசெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி சந்தைப்பேட்டை விளையாட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 24-வது நாள் முடிவடைந்ததையொட்டி மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது.

    இதில் விநாயகர், மாரியம்மன் மற்றும் முருகனுக்கு நவ திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    மதியம் 12 மணியளவில் மாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை விளையாட்டு மாரியம்மன் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தார்கள்.

    • கோவில் முன் யாகசாலை அமைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க மண்டல பூஜை செய்யப்பட்டது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நத்தம்:

    செந்துறை அருகே பெரியூர்பட்டியில் உள்ள பூமாரியம்மன் கோவிலில் 48 நாட்களுக்கு முன்னர் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தினமும் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகளும் நடந்தது. நேற்று 48வது நாள் மண்டல பூஜை விழா நடந்தது.

    முன்னதாக பூமாரியம்மனுக்கு எண்ணெய், பால், பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. கோவில் முன் யாகசாலை அமைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க மண்டல பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

    இவ்விழாவில் நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், செந்துறை ஊராட்சி தலைவர் சபரிமுத்து உள்ளிட்ட சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மண்டல பூஜை நடந்தது.
    • மண்டல பூஜை விழாவில் கமுதி மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து பலர் கலந்து கொண்டனர்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் தேவர் சிலை, முருகன் கோவில், விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 28-ந் தேதி நடந்தது.

    இதையடுத்து 48 நாட்கள் தேவர், முருகன், விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடந்தன. 48 -வது மண்டல பூஜை தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன், தங்கவேல், பழனி ஆகியோர் தலைமையில் நடந்தது. பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் குழுவினரால் யாக சாலை பூஜை நடத்தப்பட்டு தேவர், முருகன், விநா யகர் சிலைகளுக்கு 22 வகையான அபிஷேகங்கள் நடந்தன.

    அக்டோபர் மாதம் நடந்த தேவர்குருபூஜையின் போது முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வழங்கிய வெள்ளி கவசத்தை அவரது மகன் ஜெயபிரதீப், அ.தி.மு.க. எம்.பி. ஆர்.தர்மர் முன்னிலையில் தேவர் சிலைக்கு அணிவித்தார். அப்போது அவருக்கு மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் வினோதினி சீனிவாசகம் சார்பில் 2 அடி வேல் பரிசாக வழங்கப்பட்டது. பொதுமக்களின் பார்வைக்காக வைக்க ப்பட்ட தேவரின் வெள்ளி கவசத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    மண்டல பூஜை விழாவில் கமுதி மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து பலர் கலந்து கொண்டனர்.

    • அய்யப்பசுவாமி திருவீதி உலா பல்லடம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்றது.
    • அய்யப்பசுவாமி கோவிலில் 63ம் ஆண்டு விழாவை முன்னிட்டு மண்டல பூஜை நடைபெற்றது.

    பல்லடம் : 

    பல்லடம் சந்தைப்பேட்டை அய்யப்பசுவாமி கோவிலில் 63ம் ஆண்டு விழாவை முன்னிட்டு மண்டல பூஜை நடைபெற்றது. விழாவில் விநாயகர் பூஜை, சூக்தபாராயணம், மகாலட்சுமி ஹோமம், மகா சங்கல்பம், மற்றும் அய்யப்ப சுவாமிக்கு லட்சார்ச்சனை,மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யப்ப சுவாமியை வழிபட்டனர். மண்டல பூஜையை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மண்டல பூஜை சங்காபிசேக விழா நிறைவாக தங்க முலாம் பூசிய யானை வாகனத்தில் அய்யப்பசுவாமி திருவீதி உலா பல்லடம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

    • ஸ்ரீ அய்யப்பன் கோவிலில் 63-ம் ஆண்டு மண்டல பூஜை விழா கடந்த 14-ந் தேதி தொடங்கியது.
    • 15ந் தேதி நவகலச அபிஷேகம், 108 வலம்புரி சங்காபிஷேகம் , பறையெடுப்பு நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள ஸ்ரீ அய்யப்பன் கோவிலில் 63-ம் ஆண்டு மண்டல பூஜை விழா கடந்த 14-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி 14ந் தேதி மஹா கணபதி ஹோமம், பிரம்ம ஸ்ரீ கண்டரு மோகனரு தந்திரி சபரிமலை பிரதம அர்ச்சகர் தலைமையில் கொடியேற்றம், உற்சவத்துடன் விழா தொடங்கியது. 15ந் தேதி நவகலச அபிஷேகம், 108 வலம்புரி சங்காபிஷேகம் ,பறையெடுப்பு நடைபெற்றது. 16ந்தேதி மகா விஷ்ணுபூஜை, நவகலச அபிஷேகம் நடந்தது. 17ந் தேதி மஹா கணபதி ஹோமம், மண்டல பூஜை ஆரம்பம், நவகலச அபிஷேகம், உற்சவ பலி பூஜை, பறையெடுப்பு நடைபெற்றது.

    நேற்று 18ந் தேதி பகவதி சேவை, பறையெடுப்பு, தாயம்பகை மேளம் நடைபெற்றது. மேலும் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் கொடியேற்று ஆராட்டு உற்சவத்தில் ஸ்ரீ பூதபலி என்கிற பூஜையை சபரிமலை பிரதான தந்திரி செய்தார். இரவு 10 மணிக்கு பள்ளிவேட்டை நிகழ்ச்சி தொடங்கியது. இதில் அய்யப்ப சுவாமி வேட்டைக்கு செல்லுதல் நடந்தது.

    ஆராட்டு நாளான இன்று(19-ந்தேதி) அதிகாலை 4.30 மணிக்கு மஹா கணபதி ஹோமம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அய்யப்ப சுவாமி திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்கு ஆராட்டு நிகழ்ச்சிக்கு புறப்பட்டார். பின்னர் சபரிமலை பிரதம தந்திரி கண்டரு பிரம்ம ஸ்ரீ மகேஷ் மோகனரு தலைமையில் பெருமாள் கோவில் தெப்பக்குளத்தில் மேள தாளங்கள் முழங்க அய்யப்ப சுவாமிக்கு ஆராட்டு நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாலையணிந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலை 6-30மணிக்கு ஈஸ்வரன் கோவிலில் இருந்து அய்யப்பன் ரதத்தில் முக்கிய வீதிகள் வழியாக அய்யப்பன் கோவிலை சென்றடையும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9-30மணிக்கு கொடி இறக்குதலுடன் உற்சவம் நிறைவடைகிறது.

    மண்டல பூஜையையொட்டி நன்கொடையாளர்கள் சார்பில் 14ந் தேதி முதல் இன்று வரை இரவு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீதர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர். சபரிமலையில் மகர விளக்கு பூஜை முடியும் வரை அய்யப்பன் கோவிலில் இருந்து சபரிமலைக்கு செல்ல பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • கோவில் கும்பாபிஷேகம் கடந்த செப்டம்பர் மாதம் 9ம் நாள் சிறப்பாக நடைபெற்றது .
    • மண்டல பூஜையின் இறுதி நாளான 48ம் நாள் பூஜை நேற்று நடைபெற்றது.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் கரைப்புதூர் கிராமம் அல்லாளபுரத்தில்800 ஆண்டுகளுக்கு முன்னதாக சேர சோழ பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட உண்ணாமுலை அம்மன் உடனமர் ஸ்ரீ உலகேஸ்வர சுவாமி மற்றும் ஸ்ரீ கரிய காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த செப்டம்பர் மாதம் 9ம் நாள் சிறப்பாக நடைபெற்றது .அதனைத் தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜை நடைபெற்றது. மண்டல பூஜையின் இறுதி நாளான 48ம் நாள் பூஜை நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி மாலை 5.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் விக்னேஸ்வர பூஜை ,புண்யாஹவாசனம் அதனை தொடர்ந்து உண்ணாமுலை அம்மனுக்கும் உலகேஸ்வர சுவாமி, கரியகாளியம்மனுக்கு 108 கலசபூஜையுடன் முதல்காலயாக பூஜை நிறைவுற்றது.

    இன்று காலை 7.35மணிக்கு இரண்டாம் காலபூஜை தொடங்கி உண்ணாமுலை அம்மனுக்கு 108 கலசாபிஷேகமும் உலகேஸ்வர சுவாமிக்கு 108 சங்காபிஷேகமும் , கரியகாளியம்மனுக்கு 108 கலசாபிஷேகமும் நடைபெற்று இறுதியாக தீபாராதனை நடைபெற்றது. பின்னர் வழங்கப்பட்டது.

    • பெரிய அக்கிரமேசி கிராமத்தில் வாலேஸ்வரி அம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகத்துடன் மண்டல பூஜை நடந்தது.
    • 48 நாட்கள் மண்டல பூஜை தொடங்கி நடந்து வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பெரிய அக்கிரமேசி கிராமத்தில் வாலேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 5-ந்தேதி நடந்தது. இதனைத் தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்து வருகிறது.

    மண்டல பூஜை விழாவை முன்னிட்டு அம்மன் சன்னதி முன்பு யாகசாலை பூஜை நடத்தப்பட்டது. 108 சங்காபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்த பின்பு அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள், திரவிய பொடிகள் உள்ளிட்ட 11 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து சோனையா, கருப்பண சாமி, இருளன், ராக்கச்சி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகங்கள் செய்து தீபாராதனை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

    விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகிகள் அருணாச்சலம், குமார், தங்கராஜ், பாண்டி வேல், கல்யாணசுந்தரம், பாலு, ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் செய்தி ருந்தனர். மண்டல பூஜை விழாவை சிவாச்சா ரியார்கள் மனோகர குருக்கள், மகேஷ் குருக்கள் நடத்தினர்.

    • மண்டலபூஜை தினத்தோறும் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
    • 48 நாட்களுக்கு மண்டலபூஜை நடைபெறுகிறது.

    வீரபாண்டி :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் கரைப்புதூர் கிராமம் அல்லாளபுரத்தில் அமைந்துள்ள உண்ணாமுலை அம்மன் உடனமர் உலகேஸ்வர சுவாமி மற்றும் ஸ்ரீ கரியகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 8-ந்தேதி நடைபெற்றது.

    நேற்று முதல் 48 நாட்களுக்கு மண்டலபூஜை நடைபெறுகிறது. மண்டலபூஜை தினத்தோறும் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. நேற்று வெள்ளிக்கிழமை முதல் நாள் மண்டலபூஜை நடைபெற்றது. இதில் சுமார் 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • கோம்பைபட்டியில் முத்தாலம்மன் கோவிலில் மண்டல பூஜை நடைபெற்றது
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    குள்ளனம்பட்டி:

    சாணார்பட்டி அருகே கோம்பைபட்டியில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 48 வது மண்டல பூஜை இன்று நடைபெற்றது.

    இதில் யாக பூஜை, விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் கோம்பைபட்டி ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி கார்த்திகை சாமி, துணைத் தலைவர் ராசு, ஒன்றிய கவுன்சிலர் ஹரிஹரன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதில் கோபால்பட்டி, வேம்பார்பட்டி, கணவாய்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். நிறைவாக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×