என் மலர்
வழிபாடு
சபரிமலையில் சீசன் காலத்தில் `ஸ்பாட் புக்கிங்'கில் தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி
- மண்டல பூஜை அடுத்தமாதம் 26-ந்தேதி நடக்கிறது.
- ஸ்பாட் புக்கிங் மூலமாகவும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை அடுத்தமாதம் (டிசம்பர்) 26-ந்தேதி நடக்கிறது.
இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 15-ந்தேதி மாலை திறக்கப்படுகிறது. மறுநாள்(16-ந்தேதி) முதல் நெய் அபிஷேகம் உள்ளிட்ட அனைத்து பூஜைகளும் நடைபெறும். பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை தேவசம் போர்டு செய்தது.
அதன் ஒரு பகுதியாக சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டும் தான் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.
அரசின் இந்த முடிவால் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்று கூறி ஸ்பாட் புக்கிங் அடிப்படையிலும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத் தப்பட்டது.
பக்தர்களின் இந்த கோரிக்கை தொடர்பாக கேரள மாநில அரசு ஆலோசித்து வந்தது. இந்நிலையில் ஸ்பாட் புக்கிங் மூலமாகவும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் 70ஆயிரம் பேர், ஸ்பாட் புக்கிங் அடிப்படையில் 10 ஆயிரம் பேர் என தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஸ்பாட் புக்கிங் மூலமாக சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அனுமதி வழங்குவதற்காக பம்பை, எரிமேலி, பீர்மேடு உள்ளிட்ட இடங்களில் சிறப்பு மையங்கள் செயல்படும் என்றும், அந்த மையங்களில் ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள சான்றுகளை காண்பித்து அனுமதி பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.