என் மலர்tooltip icon

    கேரளா

    • கடல் விமானம் நீர்நிலைகளில் தரையிறங்கி, அதன் பிறகு நீர்நிலை பரப்பில் ஓடி வானில் பறக்க தொடங்கும்.
    • கேரளாவுக்கு 5 பேர் பயணிக்கக்கூடிய கடல் விமானமே சோதனை ஓட்டத்திற்கு வந்திருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    சுற்றுலா பயணிகளை கவருவதற்காக மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை கடல் விமான சுற்றுலாவை அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இந்த சேவையின் சோதனை ஓட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது.

    அதன் தொடர்ச்சியாக கேரள மாநிலத்திலும் கடல் விமான சுற்றுலா சேவை தொடங்கப்பட உள்ளது. கேரளாவில் கடல் விமான சுற்றுலா கொச்சியில் இருந்து மூணாறுக்கு இடையே தொடங்கப்பட உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெறுகிறது.

    இதற்காக 5 பேர் பயணிக்கக்கூடிய கடல் விமானம் நேற்று கொச்சி வந்தது. கொச்சி போல் காட்டி காயல் பகுதியில் தரையிறக்கப்பட்டது. அங்கிருந்து இன்று புறப்படும் விமானம், மூணாறு அருகே உள்ள மாட்டுப்பெட்டி நீர்த்தேக்கத்தில் தரையிறக்கி சோதனை செய்யப்படுகிறது.

    இந்த சோதனை ஓட்டத்தை கேரள மாநில சுற்றுலாத்துறை மந்திரி முகம்மது ரியாஸ் தொடங்கி வைக்கிறார். மூணாறில் தரையிறங்கும் கடல் விமானத்தை அந்த மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் வரவேற்கின்றனர்.

    கடல் விமானம் நீர்நிலைகளில் தரையிறங்கி, அதன் பிறகு நீர்நிலை பரப்பில் ஓடி வானில் பறக்க தொடங்கும். அவ்வாறு பறக்கும் போது நிலப்பரப்பில் உள்ள இயற்கை அழகை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க முடியும்.

    கேரள மாநிலத்தில் கடல் விமான சேவை சுற்றுலாவுக்கு மட்டுமின்றி அவரச காலங்களிலும் பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறது. 9 முதல் 30 பேர் வரை பயணிக்கக்கூடிய வகையில் கடல் விமானங்கள் இருக்கின்றன. ஆனால் கேரளாவுக்கு 5 பேர் பயணிக்கக்கூடிய கடல் விமானமே சோதனை ஓட்டத்திற்கு வந்திருக்கிறது.

    கேரளாவில் கொல்லம்-ஆலப்புழா இடையே கடல் விமான சேவை தொடங்க பல ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டது.கொல்லம் அஷ்டமுடி ஏரியில் கடல் விமான திட்டத்தை கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கியும் வைத்தார்.

    ஆனால் மீனவர்களின் போராட்டம் காரணமாக அந்த திட்டம் அப்போது கைவிடப்பட்டது. கேரளாவில் தற்போது அந்த திட்டம் மீண்டும் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • கடையின் முன்புள்ள கால்வாயில் பராமரிப்பு பணி நடந்து வந்துள்ளது.
    • அக்கம் பக்கத்தினரும் விரைந்து செயல்பட்டு கர்ப்பிணி பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    திருவனந்தபுரம்:

    நவீன காலமான தற்போது எந்த ஒரு செயலும் சமூகவலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறது. அப்படி ஒரு வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

    கர்ப்பிணி பெண் ஒருவர், கட்டுமான பணி நடைபெறும் கால்வாயில் தவறி விழுவது தான் அது. இந்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர், தனது கணவருடன் மண்ணஞ்சேரி இந்திரா சந்திப்பு-திருவேணி சாலையில் உள்ள துணிக்கடைக்கு சென்றுள்ளார்.

    அந்தக் கடையின் முன்புள்ள கால்வாயில் பராமரிப்பு பணி நடந்து வந்துள்ளது. இதற்காக கால்வாயின் மேல் பகுதியில் தற்காலிகமாக மரப்பலகை போடப்பட்டு இருந்தது. அதனை கணவர் தாண்டிச் சென்று விட, கர்ப்பிணி பெண் மரப்பலகையில் கால் வைத்து செல்ல முயன்றார்.

    அப்போது தான் எதிர்பாராதவிதமாக அந்தப் பலகை உடைந்து கர்ப்பிணி பெண் கால்வாய்க்குள் விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் கணவரும், அக்கம் பக்கத்தினரும் விரைந்து செயல்பட்டு கர்ப்பிணி பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் அந்த பெண்ணுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. கால்வாயின் மறுபகுதியில் இரும்பு கம்பிகள் உள்ளன. அதில் விழுந்து இருந்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் என்று பலரும் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் இதுபோன்ற விபத்துக்கள் இந்த பகுதியில் அடிக்கடி நடப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் கர்ப்பிணி பெண் கால்வாயில் விழுந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த கேரள மந்திரி முகமது ரியாஸ் உத்தரவிட்டுள்ளார்.

    • தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம், நடிப்புதான் முக்கியம் என்று சுரேஷ் கோபி தெரிவித்தார்
    • புது லுக்குடன் முழு நேர அரசியல்வாதியாக தனது பதவியின் கடமைகளை சிரம் மேற்கொண்டு செய்ய உள்ளாராம்.

    கேரளாவில் முதல் முறையாகக் கடந்த மக்களவை தேர்தலில் கேரளாவில் பாஜக ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. பாஜக சார்பில் திருச்சூர் தொகுதியில் நின்ற மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்று எம்.பி. ஆனார். இந்த வெற்றியைத் தக்கவைக்கும் விதமாக சுரேஷ் கோபிக்கு மத்திய பெட்ரோலியம், எரிவாயு மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

     

    அமைச்சரானாலும் நடிப்பைக் கைவிட மறுக்கும் சுரேஷ் கோபி ஏற்கனவே சிலபடங்களில் கமிட்டாகி உள்ளார். தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம், நடிப்புதான் முக்கியம், என்று சில மாதங்கள் முன்னர் சுரேஷ் கோபி தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிப்பதற்கு மேலிட உத்தரவை எதிர்பார்த்து பாஜக தலைமை அலுவலகத்தின் வழிமேல் விழிவைத்துக் காத்திருந்த சுரேஷ் கோபிக்கு அதிர்ச்சி அளிக்கும் உத்தரவு ஒன்று வந்துள்ளது.

     

    அதாவது, நடிப்பை மொத்தமாக ஒதுக்கிவிட்டு அமைச்சர் பதவியில் கவனம் செலுத்த சுரேஷ் கோபிக்கு கட்சி மேலிடம் கறாரான கண்டிஷன் போட்டுள்ளது. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தனிப்பட்ட முறையில் சுரேஷ் கோபியிடம் இவ்வாறு அறிவுறுத்தியதாகக் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    மேலிடத்தின் உத்தரவை வேத வாக்காக எடுத்துக்கொண்ட சுரேஷ் கோபி தனது 250 வது படமான ஒற்றைக் கொம்பன் படத்துக்காக தான் வளர்த்து வந்த தாடியை சேவ் செய்துவிட்டாராம். மேலும் இனி வாரத்தில் 3 நாட்கள் டெல்லியில்தான் இருக்க வேண்டும் என்ற கண்டிஷனும் சுரேஷ் கோபிக்கு போடப்பட்டதாகத் தெரிகிறது.

    எனவே சேவ் செய்த புது லுக்குடன் முழு நேர அரசியல்வாதியாக தனது பதவிக்கான கடமைகளை சிரம் மேற்கொண்டு செய்ய சுரேஷ் கோபி ஆயத்தமாகி வருகிறார். இதற்கிடையே திருச்சூர் பூரம் விழாவுக்கு ஆம்புலன்சில் வந்தது அமளி செய்ததால் சுரேஷ் கோபி CASE வாங்கியதும் குறிப்பிடத்தக்கது. 

    • குட்டி யானை சாலையில் வந்த ஒவ்வொரு வாகனத்தின் முன்பும் சென்று வழிமறித்தது.
    • குட்டி யானை அடிக்கடி பிளிறியடி சாலையில் அங்கும் இங்கும் ஓடியது.

    திருவனந்தபுரம்:

    குழந்தைகள் செய்யக் கூடிய சுட்டித்தனம் பார்ப்பதற்கு அழகாகவும், ரசிக்கும் விதமாகவும் இருக்கும். அது மனித இனத்தில் மட்டு மல்லாது, விலங்கிலத்திலும் நடக்கும். அதுவும் பார்ப்பதற்கு ரசிக்கும் விதத்தில் இருக்கும்.

    இதன் காரணமாகத்தான் பலர் தங்களின் வீட்டில் நாய், பூனை உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை வளர்க்கிறார்கள். சிறிதாக இருக்கும் போது அவை செய்யக்கூடிய சுட்டித தனத்தை ரசித்து பார்ப்பது மட்டுமின்றி, அவற்றின் மீது அளவுக்கு மீறிய பாசத்தை வைத்து வளர்க்கிறார்கள்.

    என்னதான் சுட்டித்தனம் செய்தாலும் தாயை தேடும் குழந்தைகள் போன்று, விலங்கினங்களும் தாயின் அரவணைப்பைத் தான் விரும்பும். இதனால் தான் விலங்கினங்கள் சிறிதாக இருக்கும் போது தாயை சுற்றிச்சுற்றி வந்தபடி இருக்கும். அப்படி இருக்கும் போது தாய் எங்காவது சென்றுவிட்டால் குட்டிகள் தவித்து விடும். அதனைப் போன்ற ஒரு சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

    கேரள மாநிலம் வயநாடு திருநெல்லி தோள்பேட்டை பகுதியில் வனப்பகுதி இருக்கிறது. இந்த வனத்தில் இருந்து நேற்று ஒரு குட்டி யானை, தாயை பிரிந்து வழி தவறி அந்த பகுதியில் உள்ள சாலைக்கு வந்து விட்டது. அந்த குட்டி யானை சாலையில் வந்த ஒவ்வொரு வாகனத்தின் முன்பும் சென்று வழிமறித்தது.

    பின்பு அந்த வாகனத்தை சுற்றிச்சென்று தனது தாயை தேடியபடி இருந்தது. பஸ், கார், உள்ளிட்ட எந்த வாகனத்தையும் அந்த குட்டி யானை விடவில்லை. அனைத்து வாகனங்களையும் வழிமறித்து நிறுத்திவிட்டு, வாகனத்ததை சுற்றிச்சென்று தனது தாயை தேடியபடி இருந்தது.


    மேலும் அந்த வாகனங்கள் கிளம்பி சென்ற போது, பின்னால் வெகு தூரம் துரத்திக் கொண்டு ஓடியது. தான் இருப்பதை தாய்க்கு காண்பிப்பதற்காக அந்த குட்டி யானை அடிக்கடி பிளிறியடி சாலையில் அங்கும் இங்கும் ஓடியது.

    அதனை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் குட்டி யானையின் தவிப்பை பார்த்து பரிதாபப் பட்டனர். சிலர் அதற்கு சாப்பிட உணுவ பொருட்களை கொடுத்தனர். ஆனால் அந்த குட்டி யானை அதனை சாப்பிடாமல் தனது தாயை தேடியபடியே இருந்தது.

    குட்டி யானை ஒன்று சாலையில் அங்கும் இங்கும் ஓடியபடி இருந்ததை பார்த்த வாகன ஓட்டிகள், அந்த பகுதியில் வாகனத்தை நிறுத்தி நிதானமாக ஓட்டிச் சென்றனர். வெகு நேரத்திற்கு பிறகு அந்த குட்டி யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

    குட்டி யானை ஒன்று தாயை பிரிந்து தவித்து வருவது பற்றி வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் தாயை பிரிந்து தவித்துவரும் குட்டி யானையை கண்காணித்து வருகின்றனர். அந்த குட்டி யானையை தாய் யானையுடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    தாய் யானையை பிரிந்து வந்த குட்டி யானை, சாலையில் வாகனங்களை மறித்து தாயை பரிதவிப்புடன் தேடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை ஏராளமானோர் பார்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


    • சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவிற்கு இதுவரை 35 சதவீதம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர்.
    • நடப்பு மண்டல சீசனையொட்டி தினசரி 18 மணி நேர தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    திருவனந்தபுரம்:

    திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் பத்தனம்திட்டாவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 70 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் 10 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படும். இதற்காக பம்பை, எருமேலி, வண்டிப் பெரியார் (சத்ரம்) ஆகிய இடங்களில் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சபரிமலை வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

    சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவிற்கு இதுவரை 35 சதவீதம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர். முன்பதிவு செய்த அய்யப்ப பக்தர்கள் தங்களது முன்பதிவை ரத்து செய்தால் அந்த தரிசன காலி இடத்திற்கு ஏற்ப உடனடி முன்பதிவின்படி கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    நடப்பு மண்டல சீசனையொட்டி தினசரி 18 மணி நேர தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதாவது, தினசரி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து மதியம் 1 மணிக்கு அடைக்கப்படும். மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

    சன்னிதானம்-பம்பை இடையேயான ரோப் கார் இணைப்பு திட்ட பணிகளை நடப்பு சீசனிலேயே தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இடது ஜனநாயக முன்னணி ( LDF ) சார்பில் சத்யன் மொகேரி போட்டியிடுகிறார்.
    • ரேபரேலிக்காக ராகுல் காந்தி வயநாட்டை விட்டுச் சென்றவர் என்று பேசிக்கொண்டிருந்தார்

    மக்களவை தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி பதவி விலகியதை அடுத்து அங்கு வரும் 13 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுலின் சகோதரி பிரியங்கா காந்தி தனது முதல் தேர்தல் அரசியல் பிரவேசத்தை வயநாட்டில் வேட்பாளராக நின்று தொடங்கியுள்ளார்.

    பிரியங்காவை எதிர்த்து ஆளும் கம்யூனிஸ்டு கட்சியின் இடது ஜனநாயக முன்னணி ( LDF ) சார்பில் சத்யன் மொகேரி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் உட்பட 16 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரம் நடத்தி வருகின்றனர்.

    பிரியங்கா காந்தியும் பல்வேறு இடங்களுக்குப் பயணித்து பிரச்சாரம் செய்து வருகிறார். இதற்கிடையே அவரை எதிர்த்து போட்டியிடும் இடதுசாரி வேட்பாளர் சத்யன் மொகேரி இன்று தனது பிரசாரத்தின்போது ராகுல் காந்தியை விமர்சித்துக்கொண்டிருந்தார்.

    ரேபரேலிக்காக ராகுல் காந்தி வயநாட்டை விட்டுச் சென்றவர், மக்கள் மீண்டும் ஏமாற மாட்டார்கள் சத்யன் ஆக்ரோஷமாக பேசிக்கொண்டிருந்தபோது திடீரென நேரில் வந்த பிரியங்கா காந்தி அவர் பேசுவதை பொறுமையாக கேட்டுவிட்டு சத்யன் மொகேரிக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

    • எந்தவிதமான ஜனநாயக ஆட்சியையும் அவர்கள் ஏற்கவில்லை.
    • ஜமாத்-இ-இஸ்லாமிய அமைப்பு ஆதரவு கொடுத்திருப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் மதசார் பற்ற நிலைப்பாடு அம்பலமாகியுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் வருகிற 13-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சி சார்பில், ஏற்கனவே அந்த தொகுதியில் எம்.பியாக இருந்த ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.

    அவர் தனது இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்தை கடந்த 2-ந்தேதி தொடங்கினார். அவர் வயநாடு தொகுதி முழுவதும் சுற்றுப் பயணம் சென்று வாக்காளர்களை நேரடியாக சந்தித்து ஆதரவு திரட்டினார். மேலும் பல பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று பேசினார்.

    பிரசாரத்தின் போது அவர் கல்லூரி மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். வயநாடு தொகுதியில் தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் தனது பிரசாரத்தை பிரியங்கா காந்தி நேற்றுடன் முடித்துக் கொண்டார். அவருக்கு ஆதரவாக கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி இஸ்லாமிய அமைப்பின் ஆதரவுடன் போட்டியிடுகிறார் என்றும், இதன் மூலமாக காங்கிரஸ் கட்சியின் மதசார்பற்ற நிலைப்பாடு அம்பலமாகியுள்ளது எனவும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

    அவர் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:-

    வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் ஜமாத்-இ-இஸ்லாமியின் ஆதரவுடன் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். எனவே மதசார்பற்ற கட்சி என்ற விவகாரத்தில் காங்கிரசின் நிலைப்பாடு என்ன? ஜமாத்-இ-இஸ்லாமிய அமைப்பை பற்றி நம் நாடு அறியாமல் இல்லை. அந்த அமைப்பின் சித்தாந்தம் ஜனநாயக கருத்துக்களுடன் ஒத்துப்போகிறதா?

    ஜமாத்தே இஸ்லாமிக்கு ஒரே கொள்கைதான். எந்தவிதமான ஜனநாயக ஆட்சியையும் அவர்கள் ஏற்கவில்லை. அதுதான் அவர்களின் சித்தாந்தம். இப்போது அவர்கள் காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு உதவ விரும்புவதாகத் தெரிகிறது.

    மதச்சார்பின்மையின் பக்கம் நிற்பவர்கள் அனைத்துவிதமான மத வெறியையும் எதிர்க்க வேண்டாமா? ஜமாத்தே இஸ்லாமியின் ஓட்டை காங்கிரஸால் வேண்டாம் என்று சொல்ல முடியுமா? ஜமாத்-இ-இஸ்லாமிய அமைப்பு ஆதரவு கொடுத்திருப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் மதசார் பற்ற நிலைப்பாடு அம்பலமாகியுள்ளது.

    இவ்வாறு பினராயி விஜயன் கூறியிருக்கிறார்.

    • முன்பதிவு செய்த நாட்களில் சரியாக வர வேண்டும்.
    • தேதியை மாற்ற முடிவு செய்தால், தங்களின் முன்பதிவை ரத்து செய்ய வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்) 26-ந்தேதி நடை பெறுகிறது. இதற்காக கோவில் நடை வருகிற 15-ந்தேதி மாலை திறக்கப்படுகிறது.

    பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்கு பல்வேறு புதிய நடைமுறைகள் கடைபிடிக்கப்பட உள்ளன.

    அதன்படி மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் 'ஆன்லைன் முன்பதிவு' மற்றும் 'ஸ்பாட் புக்கிங்' அடிப்படையில் தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.

    அது மட்டுமின்றி பக்தர்கள் தங்களின் இருமுடி கட்டுகளில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீர் ஆகியவற்றை எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் சபரிமலை வரக்கூடிய பக்தர்களுக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    அதன்படி சாமிதரிசனம் செய்வதற்கு ஆன்லைன் மூலமாக மெய்நிகர் வரிசையில் முன்பதிவு செய்த பக்தர்கள், முன்பதிவு செய்த நாட்களில் சரியாக வர வேண்டும்.

    முன்பதிவு செய்த பக்தர்கள் யாத்திரை தேதியை மாற்ற முடிவு செய்தால், தங்களின் முன்பதிவை ரத்து செய்ய வேண்டும். வாட்ஸ்-அப்பில் பெறப்பட்ட இணைப்பு அல்லது ஆன்லைன் முன்பதிவு அமைப்பு மூலம் முன்பதிவுகளை ரத்து செய்யலாம். அப்படி செய்ய வில்லை என்றால், அது போன்ற பக்தர்களால் யாத்திரை காலத்தில் மீண்டும் முன்பதிவு செய்ய முடியாது.

    திட்டமிட்ட தரிசனத்தை தவறவிடுபவர்களின் இடங்கள் ஸ்பாட் புக்கிங் செய்யக்கூடிய பக்தர்களுக்கு மாற்றப்படும். பம்பை, எருமேலி, வண்டிப் பெரியார்-சத்திரம் உள்ளிட்ட நுழைவு வாயில் களில் ஸ்பாட் புக்கிங்கை பயன்படுத்தும் பக்தர்கள், 12 மணி நேரத்திற்குள் தங்க ளின் தரிசனத்தை முடிக்க வேண்டும்.

    ஸ்பாட் புக்கிங்கில் முன்பதிவு மற்றும் நுழைவு சரிபார்ப்புக்கு 2 நிமிடங்கள் ஆகும். அப்போது கியூ-ஆர் குறியீடு ஸ்கேன் மூலம் பத்தர்களின் தகவல்கள் மற்றும் புகைப்படம் அங்கீ கரிக்கப்படும். ஆனால் அவர்களுக்கான டிக்கெட் டில் பக்தர்களின் புகைப் படம் இருக்காது.

    ஸ்பாட் புக்கிங்கிற்கு ஆதார் அட்டை கட்டாய மாகும். புதிய வழிகாட்டு தல்களின் படி எதிர் காலத்தில் அனைத்து மெய் நிகர் வரிசை முன்பதிவுகளும் ஆதார் அட்டையின் அடிப் படையில் மட்டும் இருக்கும் என்று தகவல் வெளியாகி யிருக்கிறது.

    • பாரசிட்டமால் மற்றும் பான்டோபிரசோல் மாத்திரைகள் தரமற்றதாக இருப்பதாக புகார் எழுந்தது.
    • மாத்திரைகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்காக மாநில மருந்தக கட்டுப்பாட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டன.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு கேரள மருத்துவ சேவை கழகம் மூலமாக மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வழங்கப்படும் பாரசிட்டமால் மற்றும் பான்டோபிரசோல் மாத்திரைகள் தரமற்றதாக இருப்பதாக புகார் எழுந்தது.

    அதன்பேரில் சில மாத்திரைகளை கவரை பிரித்து பார்த்தபோது தூளாகவும், பூஜ்ஜையுடனும் இருந்தது. இதையடுத்து ஒவ்வொரு தொகுதியில் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்காக மாநில மருந்தக கட்டுப்பாட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டன. மேலும் 65 லட்சம் மாத்திரைகள் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

    • சம்பந்தப்பட்டவர்கள் தங்களைப் பற்றிய தனிப்பட்ட விஷயங்கள் வெளியாகி அவமானமாகி விடும் என்று அச்சப்படுகின்றனர்.
    • மோசடி கும்பலிடம் சிக்காமல் இருக்க விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று கேரள காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    ஒரு தனிப்பட்ட நபருக்கு சமூக வலைதளங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் ஆசையை தூண்டி, அவரை பற்றிய ரகசியங்களை அறிந்தும், அது தொடர்பான விவரங்களை கூறியும் மிரட்டி பணம் பறிப்பு உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபடுவதே "ஹனி டிராப்" மோசடி ஆகும்.

    செல்போன் மற்றும் சமூக வலைதளங்கள் பயன்பாடு அதிகமுள்ள தற்போதைய காலக் கட்டத்தில், "ஹனி டிராப்" மோசடியும் அதிகமாக நடந்து வருகிறது. இந்த மோசடி கும்பலிடம் வாலிபர்கள், முதியவர்கள் என வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பு வயதினரும் சிக்கிவிடுகிறார்கள்.

    இதுபோன்ற மோசடி கும்பலிடம் வியாபாரிகள், தொழிலதிபர்கள் என அனைத்து தரப்பினரும் சிக்கி பணத்தை இழக்கிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் தங்களைப் பற்றிய தனிப்பட்ட விஷயங்கள் வெளியாகி அவமானமாகி விடும் என்று அச்சப்படுகின்றனர்.

    அவர்களது அந்த மனநிலையை பயன்படுத்தி தங்களிடம் சிக்கும் நபர்களை மோசடி கும்பல் தைரியமாக மிரட்டி பணம் பறிக்கிறது. "ஹனி டிராப்" மோசடியில் சிக்கி பணத்தை இழக்கும் நபர்கள் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்த போதிலும், மோசடி கும்பலிடம் பலர் சிக்குவது தொடர் கதையாக நடந்து வருகிறது.

    சர்வதேச சுற்றுலா தலங்கள் நிறைந்த கேரள மாநிலத்தில் "ஹனி டிராப்" மோசடி சம்பவங்கள் அதிகளவில் நடந்துவருகிறது. இந்நிலையில் அங்கு மேலும் ஒரு "ஹனி டிராப்" மோசடி நடந்திருக்கிறது. திருச்சூர் பூங்குன்றம் பகுதியை சேர்ந்த முதியவரான தொழிலதிபர் ஒருவருக்கு, சமூக வலைதளங்களின் மூலமாக கொல்லம் அஞ்சலம்மூடு பகுதியை சேர்ந்த ஷெமி (வயது38) என்ற இளம்பெண் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமாகியிருக்கிறார்.

    தனக்கு திருமணமாகவில்லை என்று கூறி அறிமுகமான ஷெமி, அந்த தொழிலதிபருக்கு செல்போனில் வீடியோ காலில் வந்து தனது நிர்வாண உடலை காண்பிப்பது உள்ளிட்ட செயலில் ஈடுபட்டு அவருடன் தொடர்பில் இருந்து வந்திருக்கிறார்.

    அவ்வாறு வீடியோ காலில் நிர்வாண போஸ் காண்பித்து தொழிலதிபரிடமிருந்து பணமும் பெற்றபடி இருந்துள்ளார். அது மட்டுமுன்றி நகைகள் மற்றும் பல விலையுயர்ந்த பொருட்களையும் வாங்கிக் கொண்டார். இவ்வாறாக அந்த தொழிலதிபரிடம் ரூ.2.5கோடி வரை பணத்தை பறித்துக் கொண்டார்.

    இருந்தபோதிலும் தொழிலதிபரை ஷெமி விடுவதாக இல்லை. தொடர்ந்து மிரட்டி பணம் கேட்டபடி இருந்திருக்கிறார். இதனால் அந்த தொழிலதிபர், ஷெமி மீது திருச்சூர் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ஷெமியை கைது செய்தனர்.

    மேலும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது கணவர் சோஜன்(32) என்பவரும் கைது செய்யப்பட்டார். தொழிலதிபரிடம் இருந்து பறித்த பணத்தை வைத்து தேவையான பொருட்களை வாங்கி பங்களா, சொகுசு கார்கள் என வாங்கி மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்துள்ளனர். அவர்களிடமிருந்து 60 பவுன் தங்க நகைகள், 3 சொகுசு கார்கள், ஒரு ஜீப் மற்றும் மோட்டார்சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

    கேரளாவை பொறுத்தவரை தொழிலதிபர்கள், வியாபாரிகள் என வசதி படைத்தவர்களே அதிகளவில் "ஹனி டிராப்" மோசடியில் சிக்கி பணத்தை இழக்கிறார்கள். அவர்களை குறி வைத்தே மோசடி கும்பலும் வலை விரிக்கிறது. அந்த கும்பல் சமூக வலைதளங்களில் கவர்ச்சிகரமான ஆபாசம் கலந்த விளம்பரங்களை வெளியிடுகிறது.

    சபலம் காரணமாக அதில் சிலர் சிக்கிவிடுகின்றனர். அவ்வாறு சிக்குபவர்களை மோசடி கும்பல் பிடித்துக் கொள்கிறது. அவர்களுக்கு தகுந்தாற் போல் பேசத் தொடங்கி, பின்பு அவர்களது விருப்பங்களை தெரிந்துகொண்டு தங்களது இடத்துக்கு வரவழைத்துவிடுகிறார்கள்.

    தேன் ஒழுக பேசும் மோசடி பெண்களின் வார்த்தைகளை உண்மை என நம்பி அவர்களுடன் பழகுகிறார்கள். அதன் பிறகே மோசடி கும்பல் தனது வேலையை காட்ட தொடங்குகிறது. தங்களது வலையில் சிக்கும் நபர்களின் அந்தரங்க விஷயங்களை வீடியோ அல்லது புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி பணம் பறிப்பதையே "ஹனி டிராப்" மோசடி கும்பல் இலக்காக வைத்து செயல்படுகிறது.

    இது போன்ற மோசடி கும்பலிடம் சிக்காமல் இருக்க விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று கேரள காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. 

    • வயநாட்டு மக்களுக்காக பாராளுமன்றத்தில் மட்டுமல்ல, ஒவ்வொரு தளத்திலும் போராடுவேன்.
    • பா.ஜ.க. அரசால் விவசாயிகள், சிறு தொழில் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வயநாடு மக்களவை தொகுதி இடைத் தேர்தல் வருகிற 20-ந்தேதி நடைபெறுகிறது. ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். நேரடியாக முதன்முறையாக அரசியலில் களம் இறங்கியுள்ள பிரியங்கா காந்தியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க காங்கிரஸ் கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    இதுவரை மற்ற தலைவர்களுக்காக பிரசாரம் மேற்கொண்ட பிரியங்கா காந்தி முதன்முறையாக அவருக்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்துள்ள அவர், தற்போது 2-ம் கட்ட தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில் இன்றைய 2-வது கட்ட பிராசார கடைசி நாள் பிரசாரத்தில் வயாநாட்டு மக்களுக்கு அம்மா குழந்தைகளை பார்த்துக் கொள்வது போல் பணியாற்ற விருப்பம் எனத் தெரிவித்துள்ளார்.

    அத்துடன் எனக்கு வாய்ப்பு வழங்கினால் வயநாட்டு மக்களுக்காக பாராளுமன்றத்தில் மட்டுமல்ல, ஒவ்வொரு தளத்திலும் போராடுவேன். எங்கள் குடும்பத்தின் மீது காட்டிய பாசம் மற்றும் ஆதரவிற்காக வயநாடு மக்களுக்கு உதவ முடியும். பா.ஜ.க. தலைமையிலான பா.ஜ.க. அரசால் விவசாயிகள், சிறு தொழில் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறினார்.

    • என் இனிய நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
    • கமல் தனது கலை மற்றும் பொது தலையீடுகள் மூலம் நம் இதயங்களில் ஒரு தனித்துவமான இடத்தை செதுக்கியுள்ளார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு இன்று 70-வது பிறந்தநாள் ஆகும்.

    இதையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியினரும், கமல்ஹாசன் ரசிகர்களும் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்கள்.

    இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    என் இனிய நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

    சினிமாவின் உண்மையான அடையாளமாகவும், மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக விழுமியங்களில் ஆர்வமுள்ள வக்கீலாகவும், கமல் தனது கலை மற்றும் பொது தலையீடுகள் மூலம் நம் இதயங்களில் ஒரு தனித்துவமான இடத்தை செதுக்கியுள்ளார்.

    கேரளா மற்றும் கேரள மக்கள் மீதான அவரது அபிமானம் ஊக்கமளிக்கிறது. அவர் எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சியடைய வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

    ×