என் மலர்tooltip icon

    கேரளா

    • குடிபோதையில் டெப்போ ஊழியர்களுடன் ரகளையில் ஈடுபட்டார்.
    • அரசு பஸ்சை கடத்த முயன்றதாக அவரின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டம் திருவல்லா பகுதியில் அரசு போக்குவரத்து கழக டெப்போ இருக்கிறது. இந்த டெப்போவில் வெளியூர்களுக்கு இயக்கப்படும் டவுன் பஸ்கள் தினமும் இரவில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது வழக்கம்.

    அதேபோல் சம்பவத்தன்று இரவும் ஏராளமான பஸ்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது இரவு 10 மணியளவில் ஒரு வாலிபர் டெப்போவுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு சாவியுடன் நின்றுகொண்டிருந்த ஒரு பஸ்சில் ஏறினார். பின்பு அதனை அங்கிருந்து ஓட்டிச் செல்ல முயன்றார்.

    இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த டெப்போ ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். குடிபோதையில் இருந்த வாலிபர், அதற்கு மறுப்பு தெரிவித்து டெப்போ ஊழியர்களுடன் ரகளையில் ஈடுபட்டார்.

    தனது ஊருக்கு இரவு 8 மணிக்கு செல்லக் கூடிய பஸ்சை தவறவிட்டு விட்டதாகவும், ஆகவே இந்த பஸ்சை எடுத்துக்கொண்டு தனது ஊருக்கு செல்ல இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

    மேலும் பஸ்சை அங்கிருந்து ஓட்டிச்செல்வதில் குறியாக இருந்தார். இதனால் அதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப் பட்டது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் அரசு பஸ்சை எடுத்துச் செல்ல முயன்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் மல்லப் பள்ளி பகுதியை சேர்ந்த ஜெபின்(வயது34) என்பது தெரியவந்தது. குடிபோதை யில் டெப்போவுக்குள் புகுந்து அரசு பஸ்சை எடுத்துச்செல்ல முயன்று ரகளையில் ஈடுபட்ட அவரை போலீசார் கைது செய்தனர். அரசு பஸ்சை கடத்த முயன்றதாக அவரின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

    வாலிபர் ஜெபின் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட போது, அவர்களது நண்பர்கள் சிலரும் அவருடன் இருந்துள்ளனர். போலீசார் வந்ததும் அவர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பயன்படுத்துவதற்கு முன்பு பழங்களை நன்கு கழுவவும்.
    • நேரடியாக தொடும் நிலை ஏற்பட்டால் உடனடியாக சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவவும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஏதாவது ஒரு தொற்று நோய் பரவியபடி இருக்கிறது. பருவமழை காலத்தில் டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்களால் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர்.

    இந்தநிலையில் தற்போது அங்கு நிபா வைரஸ் பரவுவதற்கு சாதகமான பருவம் தொடங்கியிருப்பதாவும், ஆகவே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டங்களுக்கும் மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    * பறவைகள்-விலங்குகளால் பகுதியளவு உண்ணப்பட்ட அல்லது தரையில் விழுந்த பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

    * பயன்படுத்துவதற்கு முன்பு பழங்களை நன்கு கழுவவும்.

    * திறந்த கொள்கலன்களில் சேமித்து வைக்கப்பட்ட கள் அல்லது அது போன்ற பானங்களை உட்கொள்ள வேண்டாம்.

    * கீழே விழுந்த பழங்கள், பாக்கு அல்லது அதுபோன்ற பொருட்களை கையாளும் போது எப்போதும் கையுறைகளை அணியுங்கள்.

    * வவ்வால்களால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய பழங்கள் அல்லது பழங்களின் மேற்பரப்புகளை தொடும்போது கையுறைகளை பயன்படுத்தவும். நேரடியாக தொடும் நிலை ஏற்பட்டால் உடனடியாக சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவவும்.

    * வவ்வால்களின் வாழ்விடங்களை தொந்தரவு செய்யவோ அல்லது அழிக்கவோ வேண்டாம், ஏனென்றால் இது அவற்றை கிளர்ச்சியடைய செய்து உடல் திரவங்களின் சுரப்பை அதிகரிக்க வழிவகுக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கால்பந்து போட்டி தொடங்குவதற்கு முன்பு மைதானத்தில் பட்டாசுகள் வெடித்துள்ளனர்.
    • பட்டாசுகள் வெடித்து, மைதானத்திற்குள் போட்டியைப் பார்க்க மக்கள் அமர்ந்திருந்த பகுதியில் சிதறி வெடித்தது.

    கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள கால்பந்து மைதானத்தில் நேற்று முன்தினம் பட்டாசுகள் வெடித்ததில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    மலப்புரத்தில் உள்ள அரிக்கோடு அருகே உள்ள கால்பந்து மைதானத்தில் யுனைடெட் எப்சி நெல்லிக்குத் மற்றும் கேஎம்ஜி மாவூர் அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நடந்துள்ளது.

    கால்பந்து போட்டி தொடங்குவதற்கு முன்பு மைதானத்தில் பட்டாசுகள் வெடித்துள்ளனர். பட்டாசுகள் வெடித்து பார்வையாளர்கள் இருந்த பகுதியில் சிதறின. இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில்,

    கால்பந்து போட்டி தொடங்குவதற்கு முன்பு பட்டாசுகள் வெடித்ததால் இந்த சம்பவம் நடந்தது.

    பட்டாசுகள் வெடித்து, மைதானத்திற்குள் போட்டியைப் பார்க்க மக்கள் அமர்ந்திருந்த பகுதியில் சிதறி வெடித்தது. இதில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை.

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

    • 6 ஆண்டு காலக்கட்டத்தில் கேரளாவில் 52,694 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
    • 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் தான் கேரளாவில் அதிகமானோருக்கு டெங்கு காய்ச்சல் பரவி உள்ளது

    கோவிட்-19, எச்1என்1 தொற்று, பறவை காய்ச்சல் ஜிகா வைரஸ் போன்ற நோய்கள் தோன்றுவதுடன், பிளேக், ஸ்க்ரப் டைபஸ், லெப்டோஸ்பிரோசிஸ் போன்ற தொற்றுகள் மீண்டும் தோன்றுவதும் நாட்டில் தொடர்ச்சியான தொற்று நோய் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளன.

    இதுபோன்ற எல்லா நிகழ்வுகளிலும் தொற்று நோயியல் விசாரணையை மேற்கொள்வதிலும், தொற்று நோய்களை கட்டுப்படுத்துவதிலும் தேசிய தொற்று நோய்களுக்கான மையம் எப்போதும் முன்னணியில் இருந்து வருகிறது. அது பொது சுகாதார முக்கியத்துவம் வாய்ந்த பல நோய்களை ஒழிப்பதில் குறிப்பிடத்தக்க சாதனைகளையும் செய்திருக்கிறது.

    இந்த மையம் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில் டெங்கு காய்ச்சல் உயிரிழப்பு அதிகம் உள்ள மாநிலமாக கேரளா திகழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் ஆராய்ச்சி பிரிவு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவன் கூறியிருப்பதாவது:-

    தேசிய தொற்று நோய்கள் கட்டுப்பாட்டு மையத்தின் அறிக்கையின் படி 2019 முதல் 2024 வரையிலான கடந்த 6 ஆண்டுகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் இந்த 6 ஆண்டுகளில் 11,04,198 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 1,516 பேர் இறந்துள்ளனர். இறந்தவர்களின் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த 6 ஆண்டு காலக்கட்டத்தில் கேரளாவில் 52,694 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர்களின் 301 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் டெங்கு காய்ச்சலில் அதிக உயிரிழப்பு ஏற்பட்ட மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது.

    2023 மற்றும் 2024 ஆண்டுகளில் தான் கேரளாவில் அதிகமானோருக்கு டெங்கு காய்ச்சல் பரவி உள்ளது. 2023-ம் ஆண்டில் 17,426 பேருக்கும், 2024-ம் ஆண்டில் 18,534 பேருக்கும் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு 2023-ல் 153 பேரும், 2024-ல் 71 பேரும் டெங்கு காய்ச்சலுக்கு இறந்துள்ளனர்.

    டெங்கு காய்ச்சல் உயிரிழப்பில் கேரளாவுக்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது. அங்கு கடந்த 6 ஆண்டுகளில் 189 பேர் டெங்குவுக்கு இறந்துள்ளனர். மூன்றாம் இடத்தில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் 171 பேர் இறந்திருக்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தானில் 147 பேரும், உத்தரபிரதேசத்தில் 132 பேரும் டெங்குவுக்கு இறந்துள்ளனர்.

    அதே நேரத்தில் இந்த காலக்கட்டத்தில் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், லட்சத்தீவு, மேகாலயா, திரிபுரா ஆகிய 5 மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் இறப்பு எதுவும் பதிவாகவில்லை. மேலும் 2024-ம் ஆண்டில் 21 மாநிலங்களில் டெங்கு இறப்புகள் பதிவாகவில்லை. இந்த ஆண்டில் கூட கடந்த ஒன்றரை மாதத்தில் அங்கு 4 டெங்கு இறப்புகள் நடந்துள்ளன.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    டெங்கு காய்ச்சல் பரவலுக்கு மூல காரணம் ஏடிஸ் வகை கொசுக்கள் ஆகும். அவற்றை அழிக்கவும், அதன் உற்பத்தியை கட்டுப்படுத்தவும் சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தபோதிலும் கேரளாவில் டெங்கு காய்ச்சல் அனைத்து காலக்கட்டங்களிலும் பரவியபடி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மலாபுரத்தில் முகமது ஆஷிர் என்ற சிறுவனை 7 தெருநாய்கள் தாக்க முயன்றது.
    • இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

    கேரள மாநிலம் மலப்புரம் அருகே 7 வயது சிறுவனை கடிக்க தெரு நாய்கள் துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தெரு நாய்களின் தாக்குதலில் இருந்து சித்திக் என்பவரின் மகன் முகமது ஆஷிர் என்பவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார்

    முகமது ஆஷிர் தனது பக்கத்து வீட்டுக்காரரின் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது, 7 தெருநாய்கள் சிறுவனை தாக்க முயன்றது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. 

    • வயநாடு சீரமைப்பு பணிக்காக மத்திய அரசு 529.90 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது.
    • கொடுத்த கடன் தொகை முழுவதையும் மார்ச் 31-ந்தேதிக்குள் பயன்படுத்த கண்டிசன் விதித்துள்ளது.

    வயநாட்டில் கடந்த வருடம் ஜூலை மாதம் திடீரென பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 200 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் வீடுகளை இழந்தனர். நிலச்சரிவால் மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவை தேசிய பேரிடர் என அறிவித்து சீரமைப்பு பணிக்காக நிதி வழங்க வேண்டும் கேரள அரசு பலமுறை மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. ஆனால் தேசிய பேரிடர் என அறிவிக்க முடியாது என மத்திய அறிவித்ததுடன் நிதி ஒதுக்கவில்லை.

    இந்த நிலையில் சீரமைப்பிற்காக 529.90 கோடி ரூபாய் கேரள மாநில அரசுக்கு மத்திய அரசு கடன் வழங்கியது. ஆனால் மத்திய அரசு விதித்துள்ள கண்டிசன் பயங்கரமானது, கொடூரமான நகைச்சுவையானது என கேரள மாநில வருவாய் அமைச்சர் கே. ராஜன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கே. ராஜன் கூறுகையில் "கடனின் ஒரு பகுதியாக விதிக்கப்பட்டுள்ள கண்டிசன் பயங்கரமானவை. அடுத்த 45 நாட்களுக்குள் மொத்த பணத்தையுடம் பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது மார்ச் 31-ந்தேதிக்குள் பயன்படுத்த வேண்டும். இது கொடூரமான நகைச்சுவை.

    பிரதமர் மோடி வயநாடு வருகை தந்து பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். அப்போது மறுசீரமைப்பு பணிக்காக மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என பிரதமர் மோடி கூறியபோது, எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருந்தது. ஆனால் கடன் மட்டுமே மத்திய அரசால் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. போராட்டங்கள் நடத்துவதைவிட எங்களுக்கு வேறு வழியில்லை" என்றார்.

    நிதியமைச்சர் கே.என. பாலகோபால் "மார்ச் 31-ந்தேதிக்குள் அனைத்து பணத்தையும் பயன்படுத்துவது என்பது மிகப்பெரிய செயல்முறை சிக்கலாகும்" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • மோனலிசா மலையாளத்தில் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இன்றைய சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் பல வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. அவற்றில் சில விமர்சனத்தையும், சில வரவேற்பையும் பெறும். அப்படி வரவேற்பை பெற்ற இளம்பெண்ணின் வீடியோ அவரது வாழ்க்கையை மாற்றியுள்ளது என்று சொன்னால் மிகையாகாது.

    உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் கும்பமேளா நிகழ்ச்சியில் ருத்ராட்ச மாலைகளை விற்க வந்த மோனலிசா என்ற பெண் காந்த கண்ணால் ஒரே நாளில் சமூக வலைத்தளங்களில் வைரலானார். இதையடுத்து மோனலிசாவை சினிமாவில் நடிக்க வைப்பதாக இயக்குநர் ஒருவர் பொதுவெளியில் அறிவித்தார்.

    இந்த நிலையில், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மோனலிசா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நகைக்கடையை திறந்து வைத்துள்ளார்.

    தொழிலதிபர் பாபி செம்மனூர் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையை மோனலிசா திறந்து வைப்பதாக வெளியான தகவலை அடுத்து நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நகைக்கடை திறப்பு விழாவில் மோனலிசாவுக்கு விலை உயர்ந்த நெக்லஸை அணிவித்து அழகு பார்த்த நிகழ்வு தற்போது பேசு பொருளாகி உள்ளது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் மோனலிசா மலையாளத்தில் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராகிங் செய்த மாணவர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • விடுதியில் தங்கியிருந்த மாணவன் கடந்த 3 மாதங்களாக சித்ரவதைகளை அனுபவித்தபடி இருந்திருக்கிறான்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயத்தில் அரசு நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் முதலாமாண்டு மாணவரை, மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 5 பேர் கொடூரமாக சித்ரவதை செய்து ராகிங் செய்தனர்.

    அதாவது அந்த மாணவரை கட்டிலில் கட்டி வைத்தும், ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கியும், அந்தரங்க உறுப்பின் மேல் எடை தூக்கும் கருவியை வைத்தும், கூர்மையான திசைகாட்டியால் உடலில் பல இடங்களில் குத்தி காயப்படுத்தியும் சித்ரவதை செய்தார்கள்.

    இதுகுறித்த புகாரின் பேரில் முதலாமாண்டு மாணவரை கொடூர சித்ரவதைக்கு உள்ளாக்கி ராகிங் செய்த மாணவர்கள் சாமுவேல் ஜான்சன், ராகுல்ராஜ், ஜீவ், ரிஜில் ஜித், விவேக் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களின் மீது ராகிங் தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    மாணவர்கள் 5 பேரையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டும் செய்தது. இந்தநிலையில் முதலாமாண்டு மாணவனை, பிற மாணவர்கள் சித்ரவதைக்கு உள்ளாக்கி ராகிங் செய்த வீடியோ காட்சி வெளியானது. மாணவன் கதறும் நிலையில், இவ்வளவு கொடூரமாக சித்ரவதை செய்ய முடியுமா? என்ற கேள்வி எழும்பும் வகையில் அந்த வீடியோ மிகவும் பயங்கரமாக இருந்தது.

    விடுதியில் தங்கியிருந்த அந்த மாணவன் கடந்த 3 மாதங்களாக சித்ரவதைகளை அனுபவித்தபடி இருந்திருக்கிறான். அரசு நர்சிங் கல்லூரியில் நடந்திருக்கும் இந்த ராகிங் கேரள மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியதால், அந்த சம்பவம் குறித்து மருத்துவக்கல்வி இயக்குனர் நேரடியாக விசாரணை நடத்தினார்.

    இந்தநிலையில் மாணவன் சித்ரவதைக்குள்ளான நர்சிங் கல்லூரியின் முதல்வர் சுலேகா, விடுதியின் உதவி வார்டனாக இருந்த உதவி பேராசிரியர் அஜீஷ் மணி ஆகிய இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    மருத்துவக்கல்வி இயக்குனர் விசாரணையை தொடர்ந்து மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை கூடுதல் தலைமை செயலர் ராஜன் கோப்ரகடே இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.

    • யானைகள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டன.
    • இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கொயிலாண்டி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் நேற்று திருவிழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு கோகுல், பீதாம்பரம் ஆகிய வளர்ப்பு யானைகள் நெற்றிப்பட்டம் கட்டியவாறு ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

    சுவாமி வீதி உலா நடைபெற்றதை தொடர்ந்து பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அப்போது வளர்ப்பு யானைகளான கோகுல், பீதாம்பரம் இடையே திடீரென ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன.

    இதைக்கண்ட பக்தர்கள் அங்குமிங்கும் அலறியடித்து ஓடினர். யானைகளைக் கட்டுப்படுத்த பாகன்கள் முயன்றனர். யானைகள் இடையிலான மோதலில் கோவில் அலுவலகத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

    இந்நிலையில், யானைகளுக்கு இடையே நடந்த சண்டையில் சிக்கி கெயிலாண்டி பகுதியைச் சேர்ந்த லீலா (65), அம்மு குட்டியம்மா (70), ராஜன் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். மேலும் 30-க்கும் அதிகமானோர் படுகாயம் டைந்தனர்.

    தகவலறிந்து வந்த கோழிக்கோடு போலீசார் மற்றும் வனத்துறையினர் பலியானோர் உடல்களைக் கைப்பற்றி கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதுகுறித்து கோழிக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவில் திருவிழாவில் யானைகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டதில் 3 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
    • போலீசாருக்கும் இடையே வாக்கு வாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏராளமான பகுதிகள் வனப்பகுதியை ஒட்டியுள்ளன. இயற்கை எழில் சூழ்ந்து காணப்படும் இந்த பகுதிகளுக்குள் யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி புகுந்து விடுகின்றன.

    இதனால் மனித உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தலான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் வயநாட்டில் சமீப காலமாக வன விலங்குகள் அட்டகாசம் அதிகளவில் நடந்து வருகிறது. புலி, சிறுத்தை, காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து தாக்கியதில் உயிர் பலியும் ஏற்பட்டது.


    வயநாடு மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் காட்டு யானைகள் தாக்கி 4 பேர் பலியாகி விட்டனர். வனவிலங்குகள் தாக்குதலுக்கு உள்ளாகி மனிதர்கள் பலியாவதை தடுக்க அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

    இந்தநிலையில் அந்த கோரிக்கையை வலியுறுத்தியும், வனவிலங்குகள் தாக்குதலுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும் வயநாடு மாவட்டத்தில் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கேரள மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இயங்கும் ஐக்கிய ஜனநாயக முன்னணி அறிவித்தது.

    அதன்படி இன்று வயநாடு மாவட்டத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் முழு அடைப்பு போராட்டம் இன்று நடந்தது. இந்த போராட்டம் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


    இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வயநாடு மாவட்டத்தில் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அதேநேரத்தில் பெரும்பாலான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. பல இடங்களில் போராட்டக்காரர்கள் திரண்டனர். அவர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களை போலீசார் தடுத்துநிறுத்தி கைது செய்தனர். அப்போது சில இடங்களில் போராட்டக் காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்கு வாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாவட்டத்தின் நுழைவு பகுதிகளில் போராட்டக்காரர்கள் வாகனங்களை தடுத்து நிறுத்தினர்.

    அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது போராட்டக் காரர்களுக்கும், போலீ சாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். இதன் காரணமாக வயநாடு மாவட்டத்தில் பல இடங் களில் பதட்டமாக சூழல் நிலவியது.

    போராட்டக்காரர்கள் திரண்ட இடங்களில் ஏராள மான போலீசார் குவிக்கப் பட்டனர். ஐக்கிய ஜனநாயக முன்னணி முழு அடைப்பு போராட்டம் நடந்ததால் வயநாட்டில் தனியார் பஸ்கள் இன்று இயக்கப்பட வில்லை. சில இடங்களில் போராட்டக்காரர்கள் அரசு பஸ்களையும் மறித்து நிறுத்தினர்.

    இதனால் வயநாடு மாவட்டத்தில் பஸ் போக்குவரத்து இன்று பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கல்வி நிலையங்களுக்கு சென்ற மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    • மாணவர்களின் அந்தரங்க உறுப்பில் எடைதூக்கும் கருவியை தொங்கவிட்டு சித்ரவதை.
    • 5 மாணவர்களையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் காந்திநகர் பகுதியில் அரசு நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் அந்த கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த மாணவர்களை, மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் கொடூரமான முறையில் சித்ரவதை செய்து ராக்கிங்கில் ஈடுபட்டிருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.

    முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள் சிலரை, அவர்கள் கல்லுரியில் சேர்ந்ததில் இருந்தே மூன்றாம் ஆண்டு படிக்கும் 5 மாணவர்கள் ராக்கிங் செய்திருக்கின்றனர்.

    அவர்கள் முதலாமாண்டு மாணவர்களின் அந்தரங்க உறுப்பில் எடைதூக்கும் கருவியை (டம்பில்ஸ்) தொங்கவிடுதல், விரல் நகங்களுக்கு இடையே ஊசியால் குத்துதல் என பல்வேறு சித்ரவதைக்கு உள்ளாக்கி இருக்கின்றனர்.

    சித்ரவதை காரணமாக ஏற்பட்ட காயங்களில் முகப்பொலிவு மற்றும் தோல் சுருக்கங்களுக்கு பயன்படுத்தம் லோசன்களை அதிகளவில் தடவி விட்டிருக்கின்றனர். அந்த லோசனை முகம், தலை மற்றும் வாய் உள்ளிட்ட இடங்களிலும் தேய்த்துவிட்டு ராக்கிங் செய்திருக்கின்றனர்.

    மேலும் சில மாணவர்களுக்கு வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்திருக்கின்றனர். மாணவர்கள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட அனைத்தையும் வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டியிருக்கின்றனர்.

    சீனியர் மாணவர்கள் ராக்கிங் என்ற பெயரில் தொடர்ந்து கொடூரமாக சித்ரவதை செய்தபடி இருந்தால், அதுபற்றி முதலாமாண்டு மாணவர்கள் சிலர், தங்களின் பெற்றோரிடம் தெரிவித்தனர்.

    அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், முதலாமாண்டு மாணவர்கள் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியபிறகே, முதலாமாண்டு மாணவர்களை சீனியர் மாணவர்கள் மிகவும் கொடூரமாக சித்ரவதை செய்து ராக்கிங்கில் ஈடுபட்ட தகவல் வெளியானது.

    விசாரணையில் முதலாமாண்டு மாணவர்கள் கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டது உறுதியானதால் அது தொடர்பாக வழக்கு பதிந்தனர்.

    ராக்கிங்கில் ஈடுபட்ட மூன்றாம் ஆண்டு மாணவர்களான கோட்டயத்தை சேர்ந்த சாமுவேல், விவேக், வயநாட்டை சேர்ந்த ஜீவா, மலப்புரத்தை சேர்ந்த ரிஜில்ஜித், ராகுல்ராஜ் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 5 மாணவர்களையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்தது. அரசு நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை சீனியர் மாணவர்கள் கொடூரமாக சித்ரவதை செய்து ராக்கிங்கில் ஈடுபட்ட சம்பவம் கோட்டயத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • ஓட்டலில் பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் கலூர் பகுதியில் ஜவகர்லால் நேரு சர்வதேச மைதானம் இருக்கிறது. இந்த மைதானத்தை சுற்றிலும் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு அஸ்வின் தீபக் என்பவர் 'இ-டெலி காபே' என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

    அவரது ஓட்டல் அந்த பகுதியில் பிரபலமான ஓட்டல் ஆகும். இதனால் எப்போதும் அங்கு வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் நேற்று மாலை ஓட்டலில் இருந்த பாய்லர் திடீரென வெடித்து சிதறியது. இதில் அந்த ஓட்டலில் இருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்தன.

    மேலும் ஜன்னல்கள் மற்றும் கண்ணாடிகள் உடைந்தன. இதையடுத்து ஓட்டலில் இருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அலிறயடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடினர். இருந்த போதிலும் இந்த சம்பவத்தில் அந்த ஓட்டலில் வேலை பார்த்து வந்த மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளியான சுமித் என்பவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மேலும் நாகாலாந்தை சேர்ந்த கைபோ நுபி, லுலு, அசாமை சேர்ந்த யஹியன் அலி, ஒடிசாவை சேர்ந்த கிரண் ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் 4 பேரும் எர்ணாகுளம் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

    கவலைக்கிடமான நிலையில் இருக்கும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஓட்டலில் பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முதலில் ஏதோ குண்டு வெடிப்பு நடந்து விட்டதோ? என்று பொதுமக்கள் மத்தியில் அச்சம் உருவானது.

    அதன்பிறகே பாய்லர் வெடித்து தீப்பிடித்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×