என் மலர்
இந்தியா

கொல்லம் கடற்கரையில் கரை ஒதுங்கும் ரசாயன கண்டெய்னர்கள் - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
- கரை ஒதுங்கியுள்ள கண்டெய்னர்கள் அனைத்தும் காலியாக இருக்கின்றன.
- கடலில் மிதக்கும் பொட்களை யாரும் தொடக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருப்பதால் மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று அரபிக்கடலில் பயங்கரமாக காற்று அடித்தபடி இருந்தது.
அப்போது கேரள மாநிலம் விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து சென்ற லைபீரியா நாட்டு சரக்கு கப்பல் கொச்சி அருகே நடுக்கடலில் கவிழ்ந்தது. 630 கண்டெய்னர்களுடன் அந்த கப்பல் கடலில் கவிழ்ந்தது. இதுகுறித்து தகவலறிந்த கடற்படையினர் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து அந்த கப்பலில் இருந்த கேப்டன், 20 ஊழியர்கள் என 24 பேரையும் பத்திரமாக மீட்டனர்.
இந்தநிலையில் கடலில் கவிழ்ந்த கப்பல் கடலுக்குள் முழுவதுமாக மூழ்கியது. அதில் இருந்த 630 கண்டெய்னர்களும் கடலுக்குள் விழுந்தன. அவற்றில் 73 கண்டெய்னர்கள் பொருட்கள் எதுவும் இல்லாமல் வெற்றாகவும், 13 கண்டெய்னர்களில் தீங்கு விளைவிக்கும் ரசாயன பொருட்களும், 12 கண்டெய்னர்களில் கால்சியம் கார்பைடும் இருந்திருக்கிறது.
மேலும் அந்த கப்பலில் 84.44 மெட்ரிக் டன் டீசல், 367.1 மெட்ரிக் டன் உலை எண்ணையும் இருந்திருக்கிறது. அவை அனைத்துடன் கப்பல் முழுமையான மூழ்கியதால் அவை கடலில் கசிந்து ஆபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டது. கடலில் சுமார் 3.7 கிலோமீட்டர் அகலம் மற்றும் நீள பரப்பில் எண்ணெய் பரவியது.
கடலில் பரவியிருக்கும் எண்ணெய் படலத்தை நீக்கும் பணி அகச்சிவப்பு கேமராக்களின் உதவியுடன் கண்டு பிடிக்கப்பட்டு அகற்றும் பணி கடலோர காவல் படையினரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடல் பகுதியில் தொடர்ந்து பலத்த காற்று அடித்து வருவதால் இந்த பணிகள் மிகவும் சிரமத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் கடலுக்குள் விழுந்த கண்டெய்னர்கள் கடற்கரைகளில் கரை ஒதுங்கி வருகின்றன. கொல்லம் மற்றும் ஆலப்புழா கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கொல்லம் மற்றும் ஆலப்புழாவில் 4 இடங்களில் கண்டெய்னர்கள் குவிந்து கிடக்கின்றன.
கரை ஒதுங்கியுள்ள கண்டெய்னர்கள் அனைத்தும் காலியாக இருக்கின்றன. தொடர்ந்து கண்டெய்னர்கள் கரை ஒதுங்கியபடி இருப்பதால் கொச்சி மற்றும் ஆலப்புழா கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதிகளில் வசித்துவரும் கடலோர கிராம மக்கள் வெளியேறவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
கால்சியம் கார்பைட் தண்ணீருடன் வினைபுரிந்து அசிட்டிலின் வாயுவை உருவாக்கும். அது எரியும் தன்மை கொண்டது என்பதால் கடற்கரைகளில் ஒதுங்கி கிடக்கும் கண்டெய்னர்களின் அருகாமையில் யாரும் செல்லக்கூடாது எனவும், கடலில் மிதக்கும் பொட்களை யாரும் தொடக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.
கப்பலில் இருந்து கடலுக்குள் விழுந்த கண்டெய்னர்கள் எங்கெல்லாம் ஒதுங்குகின்றன? அவற்றில் இருக்கும் ஆபத்தான பொருட்கள் எதுவும் கடலில் மிதக்கிறதா? என்று சுங்கத்துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
அவர்கள் கடலோர பகுதிகளில் தொடர்ந்து உஷார் நிலையில் இருந்து கண்காணித்து வருகிறார்கள். மேலும் கப்பல் மூழ்கிய பகுதியில் இருந்து 20 கடல்மைல் தொலைவு, அதாவது 37 கிலோமீட்டர் தூரத்துக்கு மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






