என் மலர்tooltip icon

    கர்நாடகா

    • விபத்தில், சம்பவம் இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
    • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்ததில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

    பெங்களூரு வித்ராயண்புராவை சேர்ந்தவர் சாந்தமூர்த்தி (வயது 60) தனது நண்பர்களுடன் சித்ரதுர்கா மாவட்டம் சவதத்தியில் உள்ள எல்லம்மா கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தனர். பிறகு சாமி தரிசனம் முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    அப்போது, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியதுடன், உள்ளிருந்த 5 பேர் படுகாயம் சம்பவம் இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

    விரைந்து வந்த போலீசார் 5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த டிசம்பர் மாதம் 24-ந் தேதி துபாய் சென்ற ரன்யா ராவ் அங்கு 3 நாட்கள் தங்கி இருந்துள்ளார்.
    • தங்கம் கடத்தல் வழக்கில் டெல்லி, மும்பையை சேர்ந்த கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகிறார்கள்.

    பெங்களூரு:

    துபாயில் இருந்து விமானத்தில் 14 கிலோ 800 கிராம் தங்ககட்டிகளை தனது தொடை பகுதியில் கட்டிவைத்து கடத்தி வந்த கன்னடம், தமிழ் திரைப்பட நடிகையான ரன்யா ராவை டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கடந்த 3-ந்தேதி அதிரடியாக கைது செய்தனர். இவர் ஐ.பி.எஸ்.அதிகாரியும், கர்நாடக வீட்டு வசதித்துறை இயக்குனருமான டி.ஜி.பி. ராமசந்திர ராவின் வளர்ப்பு மகள் ஆவார். மேலும் ரன்யா ராவின் வீட்டில் சோதனை நடத்தி ரூ.4¾ கோடி தங்க நகைகள், ரொக்கப்பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.

    கைதான நடிகை ரன்யா ராவ் விசாரணைக்கு பிறகு 14 நாள் நீதிமன்ற காவலில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே அவரை போலீசார் 3 நாள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் பரபரப்பு தகவல்கள் தெரியவந்துள்ளது.

    அதாவது நடிகை ரன்யா ராவ் துபாய், அமெரிக்காவுக்கு பயணம் செய்தது குறித்த தகவல் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு(2024) டிசம்பர் மாதம் 24-ந் தேதி துபாய் சென்ற அவர் அங்கு 3 நாட்கள் தங்கி இருந்துள்ளார். இதற்கு அடுத்தப்படியாக கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி அமெரிக்கா சென்ற ரன்யா ராவ் அங்கு 7 நாட்கள் தங்கி இருந்துள்ளார். அதேபோல கடந்த மாதம் (பிப்ரவரி) 2-ந் தேதி முதல் மார்ச் 3-ந் தேதி வரை 5 முறை அவர் துபாய்க்கு சென்று வந்ததும் தெரியவந்தது. அவர் தங்கம் கடத்தலுக்காக தான் அமெரிக்காவுக்கும் சென்றாரா? எனவும் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். இந்த விசாரணையில் கிடைக்கும் தகவலை வைத்து அவர் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் தங்கம் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவ் மீது சி.பி.ஐ. தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி, மும்பை, பெங்களூருவிலும் உடனடியாக விசாரணையை தொடங்கிவிட்டனர். அவர்கள் தங்கம் கடத்தல் வழக்கில் டெல்லி, மும்பையை சேர்ந்த கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகிறார்கள்.

    மேலும் சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளிடம் தகவல் பெற முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் வருவாய் நுண்ணறிவு பிரிவு விசாரணை முடிந்ததும் சி.பி.ஐ. அதிகாரிகள் ரன்யா ராவை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரன்யா ராவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே நடிகை ரன்யா ராவின் ஜாமின் மனு மீதான விசாரணை பெங்களூரு பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் நாளை நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தடுக்க வந்த ஆண் சுற்றுலாப் பயணிகள் 3 பேரையும் அந்த கும்பல் துங்கபத்ரா நதியில் தள்ளிவிட்டு தப்பினர்.
    • உள்ளூர் நீச்சல் வீரர்கள், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

    கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் கங்காவதி தாலுகா சனாபூர் பகுதிக்கு இஸ்ரேல் நாட்டை சேர்ந்த சுமார் 27 வயதான இளம்பெண் ஒருவர் சுற்றுலா வந்தார். அவர் ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கி அந்த பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வந்தார்.

    நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) இரவு இஸ்ரேல் பெண் சுற்றுலா பயணி மற்றும் அமெரிக்காவை சேர்ந்த டேனியல், மகாராஷ்டிராவை சேர்ந்த பங்கஜ், ஒடிசாவை சேர்ந்த பிபாஷ் ஆகிய 4 சுற்றுலா பயணிகள், மற்றும் தங்கும் விடுதி நடத்தி வரும் 29 வயதான ஒரு இளம்பெண் ஆகிய 5 பேரும் துங்கபத்ரா ஏரிகரையில் இசையை கேட்டு கொண்டும், நட்சத்திரங்களை ரசித்துகொண்டும் இருந்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர்.

    அவர்கள் சுற்றுலா பயணிகளிடம் பெட்ரோல் எங்கே கிடைக்கும் என்று கேட்டனர். மேலும் அவர்களிடம் பணம் கேடடு மிரட்டியுள்ளனர். தொடர்ந்து அவர்கள் இஸ்ரேல் பெண் சுற்றுலா பயணி மற்றும் தங்கும் விடுதியின் பெண் உரிமையாளரை கூட்டுபாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.

    அப்போது தடுக்க வந்த ஆண் சுற்றுலாப் பயணிகள் 3 பேரையும் அந்த கும்பல் துங்கபத்ரா நதியில் தள்ளிவிட்டு தப்பினர். இதில் அமெரிக்காவை சேர்ந்த டேனியல், மகாராஷ்டிராவை சேர்ந்த பங்கஜ் ஆகியோர் உயிர் தப்பினர். ஆனால் ஒடிசாவை சேர்ந்த பிபாசை காணவில்லை.

    இதுப்பற்றி தெரியவந்ததும் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 2 பெண்களையும் மீட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை, கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொள்ளை பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    இதற்கிடையே துங்கபத்ரா நதியில் தள்ளிவிடப்பட்ட ஒடிசாவை சேர்ந்த சுற்றுலா பயணி பிபாசை தீயணைப்பு துறையினர், உள்ளூர் நீச்சல் வீரர்கள், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

    இந்நிலையில் அவர் இன்று காலை 8 மணியளவில் கங்காவதி தாலுகாவில் உள்ள மல்லப்பூர் அருகே உள்ள ஒரு மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அவர் உடல் கைப்பற்றபட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.  




     


    • ரன்யா ராவை காவலில் எடுத்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • ரன்யா ராவ் செல்போன், மடிக்கணினியை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    பெங்களூரு:

    பெங்களூருவை சேர்ந்த கன்னட நடிகையான ரன்யா ராவ் (வயது 32). இவர் தமிழ் படத்திலும் நடித்துள்ளார். இவர் கர்நாடக வீட்டுவசித்துறை இயக்குனரான டி.ஜி.பி. ராமசந்திரா ராவின் வளர்ப்பு மகள் ஆவார். இந்த நிலையில், கடந்த 3-ந் தேதி இரவு துபாயில் இருந்து 14 கிலோ 800 கிராம் தங்கத்தை பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்தி வந்த போது, டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளால் ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார்.

    அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது, ரூ.4¾ கோடிக்கு தங்க நகைகள், பணம் சிக்கி இருந்தது. இதுதொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ரன்யா ராவிடம் விசாரணை நடத்தி விட்டு, 14 நாள் நீதிமன்ற காவலில் அவரை அதிகாரிகள் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே தங்கம் கடத்தல் வழக்கில் ஜாமின் கோரி ரன்யா ராவும், இதே வழக்கில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளும் பெங்களூரு பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் நடந்த விசாரணையின்போது, அந்த மனுக்கள் மீதான விசாரணையை நேற்று நீதிபதி ஒத்திவைத்திருந்தார். அதன்படி, நேற்று நீதிபதி முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. இதையொட்டி நடிகை ரன்யா ராவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி இருந்தனர்.

    அப்போது தங்கம் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதே நேரத்தில் ரன்யா ராவின் ஜாமின் மனு மீதான விசாரணையையும் வருகிற 10-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    அதைத்தொடர்ந்து ரன்யா ராவை காவலில் எடுத்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். துபாயில் இருந்து தங்கம் கடத்தி வருவதற்காக தன்னை சிலர் மிரட்டியதாக அவர் அதிகாரிகளிடம் கூறி இருந்தார். இதனால் மிரட்டல் விடுத்த நபர்கள் யார்? கடத்தலுக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதே நேரத்தில் ரன்யா ராவ் யார், யாருடன் எல்லாம் தொடர்பில் இருந்து வந்தார் என்பதை கண்டுபிடிக்க, அவரது செல்போன், மடிக்கணினியையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ரன்யா ராவிடம் விசாரணை நடந்து வருவதால், இந்த வழக்கில் பின்னணியில் இருக்கும் முக்கிய குற்றவாளிகள் சிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

    ஏனெனில் தங்கம் கடத்தலின் பின்னணியில் பெங்களூரு, ஆந்திராவை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் வாரிசுகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் துபாயில் இருந்து இதுவரை எத்தனை கோடி ரூபாய்க்கு தங்கத்தை கடத்தி வந்தார்?, அவற்றை யாரிடம் எல்லாம் கொடுத்தார்? என்பதும் அம்பலமாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தங்கம் கடத்தல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    இதற்கிடையில், கடந்த 6 மாதத்தில் 27 முறை நடிகை ரன்யா ராவ் துபாய்க்கு சென்று வந்திருப்பதாக கோர்ட்டில் நடந்த விசாரணையின்போது வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சார்பில் ஆஜராகி இருந்த வக்கீல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • 14 வீட்டுமனைகளை சித்தராமையா மனைவி பெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக பாஜக குற்றம் சாட்டியது.
    • இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது.

    கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மைசூரு நகர்ப்புற வளர்ச்சி அமைப்பின் (MUDA) நிலம் தொடர்பான மோசடி வழக்கை எதிர்கொண்டு வந்தார்.

    14 வீட்டுமனைகளை சித்தராமையா மனைவி பார்வதி பெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது. அதாவது, பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் வளர்ச்சியடையாத பகுதியில் உள்ள நிலத்துக்கு பதிலாக நன்கு வளர்ச்சியடைந்த நகர்ப் பகுதியில் 38,284 சதுர அடி நிலம் வழங்கப்பட்டது என்றும் இதனால் அரசுக்கு ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக லோக்ஆயுக்தா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வந்தது.

    இந்நிலையில், நில ஒதுக்கீடு நடந்ததில் முறைகேடு வழக்கில் இருந்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் அவரது மனைவியை லோக் ஆயுக்தா நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. முறையான ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து, சித்தராமையாவின் மனைவிக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

    நில ஊழல் வழக்கில் ஆதாரமில்லை என லோக் ஆயுக்தா கூறிவிட்ட நிலையில், கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

    • பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மை சமூகத்தினரிடையே எளிய திருமணங்களை ஊக்குவிக்க ரூ. 50 ஆயிரம்.
    • பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அதிக மாணவ-மாணவிகள் கொண்ட உருது வழி பள்ளிகள் மேம்படுத்தப்படும்.

    கர்நாடக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்-மந்திரி சித்தராமையா தாக்கல் செய்தார்.

    இந்த பட்ஜெட்டில் சிறுபான்மை பெண்களுக்காக 2024-25 ஆம் ஆண்டில் காலியாக உள்ள வக்ஃப் நிலத்தில் 15 மகளிர் கல்லூரிகளையும், 2025-26 ஆம் ஆண்டில் மேலும் 16 கல்லூரிகளையும் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது.

    பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மை சமூகத்தினரிடையே எளிய திருமணங்களை ஊக்குவிக்க, மிகப்பெரிய அளவில் திருமண விழாவிற்கு ஏற்பாடு செய்யும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு ஒரு ஜோடிக்கு 50 ஆயிரம் ரூபாய் அளவில் வழங்கப்படும்.

    எல்.கே.ஜி, யு.கே.ஜி முதல் பியு (PU) வரை 250 மௌலானா ஆசாத மாதரி ஆங்கில வழி பள்ளிக்கூடங்கள் படிப்படியாக 500 கோடி ரூபாய் செலவில் அறிமுகப்படுத்தப்படும். இந்த நிதியாண்டில் இதற்காக 100 கோடி ரூபாய் வழங்கப்படும். பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.

    பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அதிக மாணவ-மாணவிகள் கொண்ட உருது வழி பள்ளிகள் மேம்படுத்தப்படும். முக்கியமான வசதிகள் வழங்குவதற்கான 400 கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்துள்ளது. இந்த வருடம் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    முதலமைச்சரின் சிறுபான்மையினர் காலனி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1,000 கோடி மதிப்பிலான செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் 2025-26 நிதியாண்டில் செயல்படுத்தப்படும்.

    கர்நாடக சிறுபான்மை மேம்பாட்டுக் கழகம் மூலம் சிறுபான்மை இளைஞர்கள் ஸ்டார்ட்-அப்ஸ் தொடங்க ஊக்குவிக்கப்படுவார்கள்.

    வக்ஃப் சொத்துக்களை பழுதுபார்த்தல் மற்றும் புதுப்பித்தல், முஸ்லிம்கள் அடக்கம் செய்யும் இடங்கள் மேம்பாடு மற்றும் பாதுகாப்பிற்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சிறுபான்மையினர் இயக்குநரகத்தால் நடத்தப்படும் 169 உண்டு உறைவிட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் 25,000 மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றது.

    சிறுபான்மையினரை மனதில் வைத்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பாஜக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக பாஜக வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதவில் "கர்நாடகாவில் ஊழல் முதல்வர் சித்தராமையா ஒரு ஹலால் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதன் உச்சத்தில் திருப்திப்படுத்தல்!" எனக் குறிப்பிட்டுள்ளது.

    • முதல்-மந்திரி சித்தராமையா இன்று தாக்கல் செய்த 16-வது பட்ஜெட் ஆகும்.
    • 2025-2026-ம் ஆண்டுக்கு ரூ.4.09 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    மத்திய அரசு நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் செய்தது. இந்த நிலையில் கர்நாடக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) 7-ந்தேதி (இன்று) தாக்கல் செய்யப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன்படி கர்நாடக பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

    நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்-மந்திரி சித்தராமையா சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்த 16-வது பட்ஜெட் ஆகும்.

    2025-2026-ம் ஆண்டுக்கு ரூ.4.09 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் வெளியான சில அறிவிப்புகள் சில...

    * தமிழகத்தில் உள்ள அம்மா உணவகத்தை போல் கர்நாடகா முழுவதும் அக்கா உணவகம், அக்கா கூட்டுறவு சங்கங்கள் நிறுவப்படும்.

    * சிறுபான்மை பெண்களுக்காக 2024-25 ஆம் ஆண்டில் காலியாக உள்ள வக்ஃப் நிலத்தில் 15 மகளிர் கல்லூரிகளையும், 2025-26 ஆம் ஆண்டில் மேலும் 16 கல்லூரிகளையும் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது.

    * அனைத்து மாவட்ட பஞ்சாயத்து, தாலுகா, பஞ்சாயத்து அலுவலகங்களிலும் அக்கா உணவகங்கள் திறக்கப்படும்.

    * கர்நாடகா முழுவதும் மல்டிபிளெக்ஸ் திரையரங்குகள் அதிகபட்சமாக ரூ.200 டிக்கெட் விலையை வசூலிக்கலாம்.

    * பெங்களூரு மெட்ரோ கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அருகிலுள்ள தேவனஹள்ளி வரை விரிவுபடுத்தப்படும்.

    * பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஹெப்பல் எஸ்டீம் மாலை சில்க் போர்டு சந்திப்பிலிருந்து ரூ.15,000 கோடி மதிப்பீட்டில் இணைக்க 18.5 கி.மீ நீளமுள்ள வடக்கு-தெற்கு சுரங்கப்பாதையை அரசு திட்டமிட்டுள்ளது.

    * பெங்களூரு பல்கலைக்கழகத்தின் பெயரை டாக்டர். மன்மோகன் சிங் பல்கலைக்கழகம் என மாற்றம்.

    * கன்னட மொழி திட்டங்களை ஊக்குவிப்பதற்காக அரசுக்கு சொந்தமாக OTT தளத்தை தொடங்குவதாக முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்தார்.

    • அதிகாரி நஞ்சுண்டப்பா வீட்டில் ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கம், ரூ.56 லட்சத்திற்கு தங்க நகைகள் சிக்கியது.
    • கலபுரகியை சேர்ந்த அதிகாரியான ஜெகன்நாத்திற்கு ரூ.4 கோடியே 55 லட்சத்திற்கு சொத்துகள் உள்ளன.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் நேற்று 8 அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தி இருந்தனர். இதுதொடர்பாக லோக் ஆயுக்தா போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அதிகாரி நஞ்சுண்டப்பா வீட்டில் ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கம், ரூ.56 லட்சத்திற்கு தங்க நகைகள் சிக்கியது. அவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ.8 கோடியே 46 லட்சத்து 22 ஆயிரம் ஆகும்.

    பெங்களூருவை சேர்ந்த அதிகாரி கல்லேசப்பா வீட்டில் ரூ.32 லட்சத்து 92 ஆயிரம் ரொக்கம், ரூ.16 லட்சத்து 10 ஆயிரத்திற்கு தங்க நகைகள் சிக்கி இருந்தது. அவரது சொத்து மதிப்பு ரூ.6 கோடியே 50 லட்சத்து 52 ஆயிரம் ஆகும். இதுபோல், மின்வாரிய என்ஜினீயரான நாகராஜின் சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 18 லட்சத்து 85 ஆயிரம் ஆகும். கலபுரகியை சேர்ந்த அதிகாரியான ஜெகன்நாத்திற்கு ரூ.4 கோடியே 55 லட்சத்திற்கு சொத்துகள் உள்ளன.

    தாவணகெரேயை சேர்ந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரியான டாக்டர் நாகராஜிக்கு ரூ.6 கோடியே 14 லட்சத்து 58 ஆயிரத்திற்கு நகை, பணம், வீடுகள், நிலம் உள்ளிட்ட சொத்துகள் இருக்கிறது. இதுபோல், டாக்டர் ஜெகதீசுக்கு ரூ.3 கோடியே 11 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான சொத்துகளும், பாகல்கோட்டையை சேர்ந்த அரசுஅதிகாரி மல்லேஷ் என்ற மல்லப்பாவின் சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 92 லட்சத்து 25 ஆயிரம் ஆகும். விஜயாப்புராவை சேர்ந்த முதல்நிலை ஊழியரான சிவானந்த சிவசங்கரின் சொத்து மதிப்பு ரூ.3 கோடியே 64 லட்சத்து 30 ஆயிரம் ஆகும்.சோதனைக்கு உள்ளான 8 அரசு அதிகாரிகளின் மொத்த சொத்து மதிப்பு ரூ.36 கோடியே 53 லட்சத்து 5 ஆயிரத்து 737 ஆகும். அவர்களது வீடுகளில் இருந்து ரூ.64 லட்சத்து 78 ஆயிரம் ரொக்கம், ரூ.3 கோடியே 73 லட்சத்து 71 ஆயரத்திற்கு தங்க, வெள்ளி நகைகள் சிக்கியுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேஜஸ்வி சூர்யாவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகினறன
    • பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தின் கன்னட மொழி பதிப்பில் சிவஸ்ரீ ஒரு பாடல் பாடினார்.

    பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா, சென்னையை சேர்ந்த பாடகியும் பரதநாட்டிய கலைஞருமான சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

    பெங்களூரில் நடைபெற்ற தேஜஸ்வி சூர்யாவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகினறன.

    பாஜக தலைவர்கள் அண்ணாமலை, பிரதாப் சிம்ஹா, அமித் மாளவியா, பி.ஒய்.விஜயேந்திரா, மத்திய அமைச்சர் வி.சோமன்னா ஆகியோர் தேஜஸ்வி சூர்யாவின் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

    சென்னை பல்கலைக்கழகத்தில் பரதநாட்டியத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றுள்ள சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத் சென்னை சமஸ்கிருத கல்லுாரியில் சமஸ்கிருதத்தில் எம்.ஏ. பட்டமும் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் பயோ இன்ஜினியரிங் படிப்பில் பி.டெக். பட்டமும் முடித்துள்ளார்.

    மேலும், சிவஸ்ரீ சொந்தமாக ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவரது சேனலை, 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தின் கன்னட மொழி பதிப்பில் இவர் ஒரு பாடலும் பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 8 அதிகாரிகளின் வீடுகளில் லோக்ஆயுக்தா போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
    • கர்நாடகாவில் அடிக்கடி தொடரும் இந்த சோதனையால் அரசு அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    பெங்களூரு:

    பெங்களூரு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்ததுறை குரூப் ஏ தலைமை பொறியாளர் டி.டி.நஞ்சுண்டப்பா, பெங்களூரு தரக்கட்டுப்பாடு மற்றும் தர உறுதி மற்றும் நெடுஞ்சாலை கிரேடு-1 பொறியாளர் எச்.பி.காலேஷப்பா, கோலார் உதவி நிர்வாக பொறியார் நாகராஜ், கலபுரகி திட்ட அமலாக்க பிரிவின் ஜெகநாத் உள்பட 8 அதிகாரிகளின் வீடுகளில் லோக்ஆயுக்தா போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

    கர்நாடகாவில் அடிக்கடி தொடரும் இந்த சோதனையால் அரசு அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    • நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சரவையில் கர்நாடக அரசு சமர்ப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    • காங்கிரஸைப் பொறுத்தவரை, சிறுபான்மையினர் என்றால் முஸ்லிம்கள் மட்டுமே.

    கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் அரசு ஒப்பந்தங்கள் மற்றும் டெண்டர்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே அரசு டெண்டர்களில் பட்டியல் சாதியினர், மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு இருந்து வருகிறது.

    இதற்கிடையே கடந்த மாதம், முஸ்லிம் எம்எல்ஏக்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் அடங்கிய குழு, அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கோரி முதல்வர் சித்தராமையாவிடம் ஒரு மனுவை சமர்ப்பித்தது. இந்த திட்டத்தை பரிசீலித்து வரும் அரசு நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சரவையில்  சமர்ப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதை குறிப்பிட்டு கர்நாடக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

    கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், மாநிலம் முழுவதும் அனைத்து வளர்ச்சிப் பணிகளும் முடங்கியுள்ள நிலையில், மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு ஒப்பந்தங்களில் சிறுபான்மையினருக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான திட்டத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளது.

    பாஜக இந்த நடவடிக்கையை எதிர்க்கும், இது திருப்திப்படுத்தும் அரசியல். எஸ்சி மற்றும் எஸ்டிக்கு இடஒதுக்கீடு உள்ளது, ஆனால் கர்நாடகாவில் வளர்ச்சி என்ன? காங்கிரஸைப் பொறுத்தவரை, சிறுபான்மையினர் என்றால் முஸ்லிம்கள் மட்டுமே. பாஜக இதை அவையில் எதிர்க்கும் என்று தெரிவித்தார்.

    • பெங்களூரில் வைத்து கைது செய்த அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.
    • பணமோசடி தடுப்புச் சட்டங்களை மீறியதாக விசாரணையில் கண்டறியப்பட்டதை அடுத்து ஃபைசி கைது செய்யப்பட்டார்.

    தடை செய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் தேசியத் தலைவர் எம்.கே. ஃபைசியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள காந்தபுரத்தை சேர்ந்தவரான ஃபைசியை நேற்று இரவு பெங்களூரில் வைத்து கைது செய்த அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.

    சந்தேகத்திற்குரிய நிதி பரிவர்த்தனைகளை நடத்துவதன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டங்களை மீறியதாக விசாரணையில் கண்டறியப்பட்டதை அடுத்து ஃபைசி கைது செய்யப்பட்டார்.

    பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் அமைப்புகளின் நிதி ஆதாரங்களை சீர்குலைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

    ×