என் மலர்
டெல்லி
- 400 சீட் கிடைக்காவிட்டால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெற மாட்டீர்களா?
- ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டது பற்றி அமித் ஷா ஏன் கவலைப்படுகிறார்?
புதுடெல்லி:
மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வக்கீலுமான கபில் சிபில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாங்கள் 400 இடங்களை வென்றால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெறுவோம் என உள்துறை மந்திரி அமித் ஷா கூறுகிறார். இவ்வளவு சீட் கிடைக்காவிட்டால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப்பெற மாட்டீர்களா? நீங்கள் அதை திரும்பப்பெற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ஆனால், முதலில் சீனா எடுத்துச்சென்ற அந்த 4,000 கி.மீ. தூரத்தை நீங்கள் திரும்பப்பெற வேண்டும்.
ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு பற்றி அமித் ஷா ஏன் கவலைப்படுகிறார்? இது ஆம் ஆத்மி கட்சியின் உள் விவகாரம்.
பிரஜ்வலைப் பற்றி யோசிக்கிறீர்களே, அதுபற்றி நீங்கள் ஏன் அறிக்கை கொடுக்கக் கூடாது. இது மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் உள் விவகாரம் என தெரிவித்தார்.
#WATCH | Rajya Sabha MP and Senior Advocate Kapil Sibal says, "He (Union HM Amit Shah) says if we win 400 seats, we will take back PoK. What if you don't get that many seats, won't you take back the PoK? We want you to take it back. But, firstly you should take back those 4000… pic.twitter.com/B0YLzjeBwy
— ANI (@ANI) May 16, 2024
- ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் பிகோவை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.
- ராபர்ட் பிகோ சுடப்பட்டதற்கு அந்நாட்டு அதிபர் ஜுஜானா கேபுடோவா கண்டனம் தெரிவித்தார்.
புதுடெல்லி:
ஸ்லோவாக்கியா பிரதமராக ராபர்ட் பிகோ இருந்து வருகிறார். 59 வயதான இவர் தலைநகரில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹேண்ட்லோவா நகரத்தில் உள்ள கலாச்சார மாளிகைக்கு வெளியில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது சந்தேகத்திற்குரிய நபர் ராபர்ட் பிகோ நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
துப்பாக்கியால் சுட்டதில் ராபர்ட் பிகோ வயிற்றில் குண்டு பாய்ந்தது. இதனால் சுருண்டு விழுந்த அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். துப்பாக்கியால் சுட்ட மர்ம நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிரதமர் ராபர்ட் பிகோ தாக்கப்பட்டதற்கு அந்நாட்டு அதிபர் ஜுஜானா கேபுடோவா கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராபர்ட் பிகோ கட்சி கடந்த செப்டம்பர் மாதம் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் 3-வது முறையாக பிரதமர் ஆனார். ரஷியாவுக்கு ஆதரவான மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில், ஸ்லோவாக்கியா பிரதமர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஸ்லோவாக்கியாவின் பிரதமர் ராபர்ட் பிகோ மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கோழைத்தனமான மற்றும் கொடூரமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன். பிரதமர் பிகோ விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். ஸ்லோவாக்கியா மக்களுடன் இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது என பதிவிட்டுள்ளார்.
இதேபோல், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
- யுனெஸ்கோவின் ஆசிய மற்றும் பசிபிக் உலகக்குழுவின் 10-வது கூட்டம், மங்கோலிய தலைநகர் உலான்பாதரில் நடைபெற்றது.
- பேராசிரியர் ரமேஷ் சந்திர கவுர், ராமசரிதமனாஸ், பஞ்சதந்திர கதைகள் குறித்து விளக்கி இந்த நூல்களை பரிந்துரை செய்தார்
புதுடெல்லி:
பாரம்பரிய சின்னங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் அமைப்பான யுனெஸ்கோவின் ஆசிய மற்றும் பசிபிக் உலகக்குழுவின் 10-வது கூட்டம், மங்கோலிய தலைநகர் உலான்பாதரில் நடைபெற்றது.
இதில் இந்தியாவின் துளசி தாசர் எழுதிய ராமசரித மனாஸ், விஷ்ணு சர்மாவின் பஞ்சதந்திர கதைகளின் கையெழுத்து பிரதிகள் உள்பட ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இருந்து 20 பொருட்கள் பரிந்துரைக்கப்பட்டன.
இந்தியா சார்பில் பேசிய இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் கலாநிதி பிரிவின் டீன் மற்றும் துறைத்தலைவரான பேராசிரியர் ரமேஷ் சந்திர கவுர், ராமசரிதமனாஸ், பஞ்சதந்திர கதைகள் குறித்து விளக்கி இந்த நூல்களை பரிந்துரை செய்தார். பின்னர் விவாதங்களுக்கு பிறகு ராமசரிதமனாஸ், பஞ்சதந்திர கதகைள் ஆகியவை யுனெஸ்கோ அமைப்பின் ஆசிய பசிபிக் நினைவு உலகப் பதிவேட்டில் இடம்பெறுவதற்கு (அங்கீகாரம்) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சுப்ரீம் கோர்ட் கடந்த 10-ம் தேதி முதல் மந்திரி கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது.
- ஜாமினில் வெளிவந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
புதுடெல்லி:
டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் கடந்த 10-ந்தேதி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து டெல்லியில் மக்களவை தேர்தலைச் சந்திக்கின்றன.
இந்நிலையில், டெல்லி சாந்தினி சவுக் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜே.பி.அகர்வாலை ஆதரித்து அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
நான் சிறையிலிருந்து நேராக உங்களிடம் வந்துள்ளேன். பா.ஜ.க.வினர் என்னை சிறையில் அடைத்தபோது உங்களைப் பிரிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.
நான் ஒரு சாதாரண நபர். நமது ஆம் ஆத்மி கட்சியானது டெல்லி மற்றும் பஞ்சாபில் மட்டுமே ஆட்சி செய்துவரும் சிறிய கட்சியாகும். என்னை எதற்காக கைது செய்தார்கள் என்று நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். நான் செய்த தவறு என்ன?
பா.ஜ.க.வைப் பொறுத்தவரை நான் ஏழை மக்களுக்காக தரமான பள்ளிகள், இலவச கல்வி, 24 மணி நேர மின்சாரம் உள்ளிட்டவற்றை கொடுத்ததுதான் நான் செய்த தவறாகும். இப்பொழுது நான் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
நீங்கள் வாக்கு செலுத்தும்போது கெஜ்ரிவால் மீண்டும் சிறைக்கு செல்லவேண்டுமா? என சிந்தித்து வாக்களியுங்கள். நான் மீண்டும் ஜூன் 2-ம் தேதி சிறைக்கு செல்லவேண்டுமா, இல்லையா என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. நீங்கள் தாமரை சின்னத்தை அழுத்தினால் நான் சிறைக்கு செல்வேன். நீங்கள் இந்தியா கூட்டணி வேட்பாளரை தேர்ந்தெடுத்தால் நான் சிறைக்கு செல்ல வேண்டியிருக்காது. எனவே சிந்தித்து வாக்களியுங்கள் என தெரிவித்தார்.
- அரவிந்த் கெஜ்ரிவாலின் பேச்சு முற்றிலும் உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதாக நான் நம்புகிறேன்.
- ஒருவர் வெற்றி பெற்றால், அவர் குற்றவாளியாக இருந்தாலும் உச்சநீதிமன்றம் அவரை ஜெயிலுக்கு அனுப்பாது என சொல்ல முயற்சிக்கிறார்.
மத்திய உள்துறை மந்திரியான அமித் ஷா இன்று ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது, அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமின் குறித்தும், அவரது கட்சிக்கு ஆதவாக போதுமான வாக்குகள் விழுந்தால் மீண்டும் ஜெயிலுக்கு போக வேண்டியிருக்காது எனக் கூறியிருக்கிறாரே? அதைப் பற்றியும் தங்களது கருத்து என்ன என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அமித் ஷா அளித்த பதில் பின்வருமாறு:-
அரவிந்த் கெஜ்ரிவாலின் பேச்சு முற்றிலும் உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதாக நான் நம்புகிறேன். ஒருவர் வெற்றி பெற்றால், அவர் குற்றவாளியாக இருந்தாலும் உச்சநீதிமன்றம் அவரை ஜெயிலுக்கு அனுப்பாது என சொல்ல முயற்சிக்கிறார். அவருக்கு ஜாமின் வழங்கிய நீதிபதிகள் தங்கள் தீர்ப்பு எப்படி பயன்படுத்தப்படுகிறது அல்லது தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதை சிந்திக்க வேண்டும்.
சட்டத்தை விளக்குகின்ற உரிமை உச்சநீதிமன்றத்திற்கு உண்டு. இது ஒரு சாதாரண அல்லது வழக்கமான தீர்ப்பு அல்ல என நான் நம்புகிறேன். சிறப்பு கவனிப்பு வழங்கப்பட்டுள்ளது என நாட்டின் பெரும்பாலானோரால் நம்பப்படுகிறது.
திகார் சிறையில் கேமரா அமைக்கப்பட்டு, அது பிரதமர் மோடி ஆலவலகத்திற்கு காண்பிக்கப்படுகிறது என்ற கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். கெஜ்ரிவால் கட்சி 22 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. ஒட்டுமொத்த நாட்டின் மின்சார கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என உத்தரவாதம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். 22 இடங்களில் மட்டுமே போட்டியிடும்போது, எப்படி ஆட்சியமைக்க முடியும்.
உச்சநீதிமன்றத்தில் அவரது கைது முறைகேடு என வழக்கு தொடர்ந்துள்ளார். அதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதன்பின் ஜாமின் கேட்டார். நீதிமன்றம் ஜாமினும் வழங்கவில்லை. இரண்டையும் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.
அதன்பின் தேர்தல் பிரசாரத்திற்காக அனுமதி கேட்டார். நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. ஜூன் 2-ந்தேதி அவர் மீண்டும் திகார் ஜெயல் செல்ல வேண்டும். இது எப்படி அவருக்கு சாதகமாகும்.
இவ்வாடி அமித் ஷா தெரிவித்துள்ளார்.
- வாரணாசி தொகுதிக்கு வருகிற 1-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.
- நேற்றோடு வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார். தமிழகத்தில் போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணு, பின்னர் விவசாயிகளை திரட்டி டெல்லியில் போராட்டம் நடத்தினார். அரை நிர்வாண போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை கையில் எடுத்தார். என்றபோதிலும் மத்திய அரசு இவரது தலைமையிலான போராட்டத்தை கண்டு கொள்ளவில்லை.
இருந்தபோதிலும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில்தான் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட விரும்பினார்.
வாரணாசி தொகுதிக்கு வருகிற 1-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் நேற்று (மே 14-ந்தேதி) ஆகும்.
கடைசி நாளில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார். அய்யாக்கண்ணு கடந்த 10-ந்தேதி வாரணாசி செல்லும் ரெயில் பயணம் செய்தார். அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அவரை ரெயிலில் இருந்து இறக்கிவிட்டதாக தெரிகிறது.
இதனால் தன்னால் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான நேரத்தை நீட்டிக்க வலுயுறுத்தி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என அய்யாக்கண்ணு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விக்ரம் நாத் மற்றும் சதீஷ் சந்திரா சர்மா ஆகிய நீதிபதிகள் "இந்த மனு சுயநலத்தை கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் விரும்பினால், இந்த மனுவை வாபஸ பெற எங்களால் அனுமதிக்க முடியும். நாங்கள் டிஸ்மிஸ் செய்ய நீங்கள் விரும்பினால், எங்களால் டிஸ்மிஸ் செய்ய முடியும்" எனத் தெரிவித்தனர்.
மேலும், அய்யாக்கண்ணு ஏன் வாரணாசி தொகுதியில் இருந்து போட்டியிட விரும்புகிறார்? என இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் கேள்வி எழுப்பிய நிலையில், இந்த மனு விளம்பரத்தை பெறுவதற்கானது என பார்க்கப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
அத்துடன் அய்யாக்கண்ணு மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது.
- மேற்கு வங்காளத்தில் 24 முதல் 30 வரையிலான இடங்களில் வெற்றி பெறுவோம்.
- உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த முறை 65 இடங்களில் வெற்றி பெற்றோம். இந்தமுறை அதைவிட இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா இன்று ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டியளித்தார்.
அப்போது அமித் ஷா கூறியதாவது:-
ஜூன் 4-ந்தேதி தென்இந்தியாவில் பா.ஜனதா மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும். என்னுடைய கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள தொகுதிகளை இணைத்தால் பா.ஜனதா தனியாக மிகப்பெரிய கட்சியாக பா.ஜனதா உருவெடுக்கும்.
மேற்கு வங்காளத்தில் 24 முதல் 30 வரையிலான இடங்களில் வெற்றி பெறுவோம்.
உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த முறை 65 இடங்களில் வெற்றி பெற்றோம். இந்தமுறை அதைவிட இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
- வழக்கை வேறு தேதிக்கு மாற்றவேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
- செந்தில் பாலாஜி தரப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
புதுடெல்லி:
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராகவும், தனக்கு ஜாமீன் வழங்க கோரியும் செந்தில் பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.
இந்த வழக்கு கடந்த 6-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது அமலாக்கத்துறை சார்பில் வழக்கை ஒத்தி வைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் வழக்கை ஒத்தி வைக்கக்கூடாது என்று செந்தில் பாலாஜி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் வழக்கை ஒத்தி வைத்த நீதிபதிகள் மே 15-ம் தேதி விசாரணை நடைபெறும் என்றனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை வேறு தேதிக்கு மாற்றவேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு செந்தில் பாலாஜி தரப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
செந்தில் பாலாஜி 330 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறார். வழக்கை காலதாமதப் படுத்துவதற்காகவே அமலாக்கத்துறையினர் தொடர்ந்து கால அவகாசம் கோருகிறார்கள் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வழக்கை தள்ளி வைப்பதாக இருந்தால் செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.
- பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய தேசியக் கொடியை ஏந்தி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்பட்டு இந்தியாவுடன் சேர்க்கப்படும் என்றார் அசாம் முதல் மந்திரி.
புதுடெல்லி:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மின் கட்டண உயர்வு, வரி விதிப்பு உள்ளிட்டவற்றை எதிர்த்து அப்பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் ஒரு சிலர் இப்பகுதியை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் எனக்கூறி போஸ்டர் ஒட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜார்க்கண்டில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா பேசியதாவது:
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 300 இடங்களில் வெற்றி பெற்றபோது அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டது.
இந்த முறை பா.ஜ.க. 400 இடங்களைக் கைப்பற்றினால் மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமியிலும், வாரணாசியில் ஞானவாபி மசூதி இருக்கும் இடத்திலும் கோவில் கட்டப்படும்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்பட்டு பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவுடன் சேர்க்கப்படும்.
காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பாக பாராளுமன்றத்தில் எந்த விவாதமும் நடைபெறவில்லை. அது உண்மையில் நம்முடையது. தற்போது, அங்கு போராட்டம் நடந்துவருகிறது.
ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய தேசியக் கொடியை ஏந்தி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இடஒதுக்கீட்டிற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. எஸ்சி, எஸ்டி, ஓபிசி இட ஒதுக்கீடுகளை முடிவுக்கு கொண்டு வந்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் விரும்புகிறது என தெரிவித்தார்.
- நிமோனியாவால் அவதிப்பட்ட மாதவி ராஜே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
- இன்று காலை 9.28 மணிக்கு மாதவி ராஜே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதுடெல்லி:
மத்திய விமானப் போக்குவரத்துத் துறை மந்திரியாக பதவி வகித்து வருபவர் ஜோதிராதித்ய சிந்தியா. இவரது தாயார் மாதவி ராஜே சிந்தியா.
நிமோனியாவால் அவதிப்பட்டு வந்த மாதவி ராஜே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வந்த மாதவி ராஜே இன்று காலை 9.28 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்குகள் குவாலியரில் நடைபெற உள்ளன.
மத்திய மந்திரி ஜோதிராதித்யா சிந்தியாவின் தாயார் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மாதவி ராஜே சிந்தியா பல்வேறு தொண்டு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தலைமை பயிற்சியாளர் டிராவிட்டின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது.
- விருப்பம் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை வரும் 27-ம் தேதி வரை அனுப்பலாம் என பிசிசிஐ தெரிவித்தது.
புதுடெல்லி:
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இருந்து வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியுடன் அவரது ஒப்பந்தம் முடிவடைந்தது. ஆனாலும் ஜூன் 1-ம் தேதி தொடங்கும் டி20 உலகக் கோப்பை போட்டியை கருத்தில் கொண்டு அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது.
டிராவிட்டின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதற்கான வேலையை பி.சி.சி.ஐ. தற்போது தொடங்கியது.
இதற்கிடையே, தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை வரும் 27-ம் தேதி வரை அனுப்பலாம் என பி.சி.சி.ஐ. நேற்று தெரிவித்தது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 60 வயதிற்கு உட்பட்டவர்களாகவும், குறைந்தபட்சம் 30 டெஸ்ட் அல்லது 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கவேண்டும் என்ற நிபந்தனையும் விதித்துள்ளது.
புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுபவர் ஜூலை 1 முதல் பொறுப்பேற்பார் என்றும், அவரது பதவிக்காலம் டிசம்பர் 31, 2027 அன்று முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அல்லது நியூசிலாந்து முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் ஆகியோரில் ஒருவருக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
- நடப்பு ஐ.பி.எல். தொடரில் சிக்சர் மழை அதிகளவில் பொழியப்பட்டுள்ளது.
- நேற்றைய 64-வது போட்டிக்கு பிறகு 1125 சிக்சர்கள் இது அடிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் 17-வது தொடரில் சிக்சர் மழை அதிக அளவில் பொழியப்பட்டுள்ளது.
நேற்றைய 64-வது லீக் போட்டிக்குப் பிறகு நடப்பு தொடரில் இதுவரை 1,125 சிக்சர்கள் அடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு போட்டியை தாண்டி சிக்சர்களில் புதிய சாதனை நிகழ்த்தப்பட்டது. இன்னும் 6 லீக் உள்பட 10 ஆட்டங்கள் இருப்பதால் சிக்சர்களின் எண்ணிக்கை அதிகமாக உயரும்.
கடந்த ஐ.பி.ல். தொடரில் 1,124 சிக்சர்கள் எடுக்கப்பட்டது. 2022-ல் 1,062 சிக்சர்களும், 2018-ல் 872 சிக்சர்களும், 2019-ல் 784 சிக்சர்களும் அடிக்கப்பட்டன.
நடப்பு சீசனில் ஐதராபாத் அணி அதிகபட்சமாக 12 ஆட்டத்தில் 146 சிக்சர்களை விளாசியுள்ளது. அந்த அணி ஏற்கனவே ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர்களை அடித்து சாதனை படைத்து இருந்தது.
அதைத்தொடர்ந்து, பெங்களூரு அணி 13 போட்டிகளில் 141 சிக்சர்களையும், டெல்லி கேப்பிடல்ஸ் 135 சிக்சர்களையும் அடித்துள்ளன.
கொல்கத்தா (125 சிக்சர்கள்), மும்பை (122), பஞ்சாப் (102), ராஜஸ்தான் (100) சென்னை (99), லக்னோ (88), குஜராத் (67) ஆகிய அணிகள் அதற்கு அடுத்த நிலைகளில் உள்ளன.
ஐதராபாத் வீரர் அபிஷேக் சர்மா 35 சிக்சர்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். பெங்களூருவின் விராட் கோலி 33 சிக்சர்களுடன் 2-வது இடத்திலும், கொல்கத்தாவின் சுனில் நரேன் 32 சிக்சர்களுடன் 3-வது இடத்திலும், டிராவிஸ் ஹெட், கிளாசன் (இருவரும் ஐதராபாத்) தலா 31 சிக்சர்களுடன் 4-வது, 5-வது இடங்களில் உள்ளனர்.






