என் மலர்
டெல்லி
- மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவு அளித்து வருகிறது.
- மத்திய பா.ஜ.க. அரசை அக்கட்சியின் மூத்த தலைவரான கே.சி.தியாகி கடுமையாக விமர்சித்தார்.
புதுடெல்லி:
மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவு அளித்து வருகிறது.
பா.ஜ.க. அரசு கொண்டு வந்த பொதுசிவில் சட்ட விவகாரம், வக்பு வாரிய மசோதா ஆகிய விவகாரங்களில் ஐக்கிய ஜனதாதள கட்சியின் மூத்த தலைவரான கே.சி.தியாகி கடுமையாக விமர்சித்தார்.
இதற்கிடையே, கே.சி.தியாகி விமர்சனத்துக்கு ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவரும், பீகார் முதல் மந்திரியுமான நிதிஷ்குமார் கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.
இதனால் தம்மை கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும் என நிதிஷ்குமாருக்கு கே.சி.தியாகி கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், கட்சியின் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து கே.சி.தியாகி தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால் கட்சியில் தொடர்ந்து நீடிக்கிறேன் என தெரிவித்தார்.
இதையடுத்து, கட்சியின் செய்தி தொடர்பாளராக ராஜீவ் ரஞ்சன் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
- பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 5 பதக்கங்களை வென்றுள்ளது.
- இதில் 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் ஆகியவை அடங்கும்.
புதுடெல்லி:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்று விளையாடி வருகிறது.
துப்பாக்கிச் சுடுதலில் பெண்கள் பிரிவில் இந்தியாவின் அவனி லெகரா தங்கமும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்றுள்ளனர்.
ஆண்கள் பிரிவில் மணீஷ் நர்வால் வெள்ளி வென்றார். தடகளத்தில் பிரீத்தி பால் ஒரு வெண்கலம் வென்றார். நேற்று ரூபினா பிரான்சிஸ் வெண்கலம் வென்றார்.
இதையடுத்து, பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் இன்று உரையாடினார்.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பதக்கம் வென்ற மோனா அகர்வால், பிரீத்தி பால், மணீஷ் நர்வால் மற்றும் ரூபினா பிரான்சிஸ் ஆகியோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர்களுக்கு தனித்தனியாக வாழ்த்து தெரிவித்தார். தங்கம் வென்ற அவனி லெகராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். ஆனால் அவனி லெகரா இந்த உரையாடலில் பங்கேற்கவில்லை என தெரிவித்துள்ளது.
- விராட் கோலி கடந்த 16 ஆண்டுக்கு மேலாக விளையாடி, பல்வேறு சாதனை படைத்து வருகிறார்.
- உலக கிரிக்கெட்டில் விராட் கோலிதான் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என டோனி பாராட்டினார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக விளையாடி, பல்வேறு சாதனை படைத்து வருகிறார்.
விராட் கோலி இதுவரை 26,000-க்கும் அதிகமான ரன்களையும், 80 சதங்களையும் அடித்து இந்தியாவின் வெற்றிகளில் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறார்.
இவருடைய வளர்ச்சிக்கு முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார்.
ஆரம்ப காலங்களில் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் தடுமாறினார். அதனால் அவரை நீக்குவதற்கு பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு முடிவெடுத்ததாக கூறப்பட்டது. அப்போது தேர்வுக் குழுவை எதிர்த்து தொடர்ந்து வாய்ப்பு கொடுத்ததாக அப்போதைய துணை கேப்டன் சேவாக் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
2019-ம் ஆண்டுக்குப் பின்னர் சதமடிக்காமல் தடுமாறிய காலங்களில் டோனிதான் தமக்கு மெசேஜ் செய்து ஆதரவு கொடுத்ததாக விராட் கோலி தெரிவித்ருந்தார்.
இந்நிலையில், சமீபத்திய நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விராட் கோலிக்கும் உங்களுக்கும் எம்மாதிரியான உறவு இருக்கிறது? என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
சமீபத்திய நிகழ்ச்சியில் விராட் கோலிக்கும் உங்களுக்கும் எம்மாதிரியான உறவு இருக்கிறது? என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த டோனி, நாங்கள் 2008 -ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறோம். எங்களுக்கு இடையே வயது வித்தியாசம் இருக்கிறது. எனவே அவருக்கு நான் பெரிய அண்ணன் போன்றவரா அல்லது சக வீரரா என்பது தெரியவில்லை. நாளின் இறுதியில் நாங்கள் நாட்டுக்காக விளையாடிய சக வீரர்கள். நாங்கள் இந்தியாவுக்காக நீண்ட காலம் ஒன்றாக விளையாடினோம் என்பது உங்களுக்கு தெரியும். உலக கிரிக்கெட் என வரும்போது விராட் கோலி மிகவும் சிறந்தவர் என தெரிவித்தார்.
- ராகுல் காந்தி 8-ந்தேதி டல்லாஸ் நகரிலும், 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் வாஷிங்டன்னிலும் இருப்பார்.
- ராகுல் காந்திக்காக நிறைய நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
புதுடெல்லி:
மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி வருகிற 8 முதல் 10-ந் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
இந்த பயணத்தின்போது டல்லாஸ் மற்றும் வாஷிங்டன் ஆகிய நகரங்களுக்கு செல்லும் ராகுல் காந்தி மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுடனும், இந்திய வம்சாவளி மக்களுடனும் உரையாடல்களை நடத்த உள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் சர்வதேச பிரிவின் தலைவர் சாம் பிடோர்டா கூறியதாவது:-
32 நாடுகளில் இருக்கும் காங்கிரஸ் சர்வதேச பிரிவின் தலைவர் என்கிற முறையில் என்னிடம் அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினர், தூதர்கள், கல்வியாளர்கள், தொழில் அதிபர்கள், தலைவர்கள், சர்வதேச ஊடகங்கள் மற்றும் பலரிடம் இருந்து ஏராளமான கோரிக்கைகள் குவிந்தன. எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கை.
அதை நிறைவேற்றும் விதமாக ராகுல் காந்தி மிக குறுகிய பயணமாக அமெரிக்கா வருகிறார். அவர் 8-ந்தேதி டல்லாஸ் நகரிலும், 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் வாஷிங்டன்னிலும் இருப்பார்.
டல்லாசில், டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் ராகுல் காந்தி, கல்வியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களையும் சந்திப்பார். இந்திய வம்சாவளியினருடன் மிகப்பெரிய சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த நாள் ராகுல் காந்தி வாஷிங்டன் நகருக்கு செல்வார். அங்கு சிந்தனை குழுக்கள், பத்திரிகையாளர் அமைப்பு மற்றும் பிற அமைப்புகளுடன் அவர் கலந்துரையாடல்களை நடத்துவார்.
ராகுல் காந்திக்காக நிறைய நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த வருகையை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். டல்லாஸ் மற்றும் வாஷிங்டனில் உள்ள அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த இந்திய வம்சாவளியினர் ராகுல் காந்தியை வரவேற்கவும், அவருடன் உரையாடவும் ஆர்வமாக உள்ளனர்.
இவ்வாறு சாம் பிடோர்டா கூறினார்.
- அரியானா சட்டசபை தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளது.
- அக்டோபர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
புதுடெல்லி:
அரியானா மாநிலத்தில் முதல் மந்திரி நயாப் சிங் சைனி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் அக்டோபர் 1-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4-ம் தேதி எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அரியானா சட்டசபை தேர்தல் தேதி மாற்றப்படுகிறது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
அதன்படி, அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 5-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
அரியானாவில் பிஜோனி சமுதாய மக்களின் முக்கிய பண்டிகை தேர்தல் நடைபெறவிருந்த நாளன்று வருவதால் அக்டோபர் 1-ம் தேதிக்கு பதில் அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதேபோல, 90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய நாட்களில் 3 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
ஜம்மு காஷ்மீரில் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4-ம் தேதி எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தேதியும் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, ஜம்மு காஷ்மீரில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- இந்தியாவில் தற்போது டெல்லி பிரீமியர் லீக் டி20 தொடர் நடந்து வருகிறது.
- முதலில் ஆடிய தெற்கு டெல்லி அணி 20 ஓவரில் 308 ரன்களைக் குவித்தது.
புதுடெல்லி:
இந்தியாவில் தற்போது டெல்லி பிரீமியர் லீக் டி20 தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று வடக்கு டெல்லி, தெற்கு டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற தெற்கு டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தெற்கு டெல்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 308 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் ஷர்தாக் ரேய் 11 ரன்னில் அவுட்டானார். அடுத்து ஜோடி சேர்ந்த ஆயுஷ் பதோனி, பிரியன்ஷ் ஆர்யா இருவரும் சூறாவளியாக சுழன்று அடித்தனர்.
ஆயுஷ் பதோனி அதிரடியாக ஆடி 55 பந்தில் 19 சிச்கர், 8 பவுண்டரி உள்பட 165 ரன்கள் குவித்தார். பிரியன்ஷ் ஆர்யா 55 பந்தில் 10 சிக்சர், 10 பவுண்டரி உள்பட 120 ரன்கள் குவித்தார். தெற்கு டெல்லி அணி பேட்டிங் மொத்தமாக 31 சிக்சர்கள் அடித்துள்ளது.
பிரமாண்ட இலக்கை நோக்கி ஆடிய வடக்கு டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் தெற்கு டெல்லி அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், 19 சிக்சர்கள் அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த கிறிஸ் கெயிலின் சாதனையை ஆயுஷ் பதோனி முறியடித்துள்ளார்.
வங்கதேச டி20 லீக் தொடரில் கிறிஸ் கெயில் அதிகபட்சமாக 18 சிக்சர் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாராளுமன்ற தேர்தலில் மணிப்பூரில் பா.ஜ.கவை காங்கிரஸ் வீழ்த்தியது.
- மணிப்பூர் முதல் மந்திரி பைரேன் சிங் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார் என்றார்.
புதுடெல்லி:
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் மெய்டி மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையிலான இனக்கலவரத்தில் 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
கலவரம் ஏற்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் மோடி நேரில் செல்ல வேண்டும் என பல்வேறு கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் ஆங்கில செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். உலகம் முழுவதும் பிரதமர் சென்றுவிட்டார். கிட்டத்தட்ட 16 மாதங்கள் கடந்துவிட்டன. மணிப்பூரில் அமைதி இல்லை. நல்லிணக்கம் இல்லை. இயல்பு நிலை இல்லை.
முதல் மந்திரி பைரேன் சிங் எந்த உலகில் வாழ்கிறார் என தெரியவில்லை. அவர் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். அவர் எதன் அடிப்படையில் இயல்பு நிலை நிலவுவதாக கூறுகிறார் என தெரியவில்லை.
பிரதமர் உக்ரைனுக்குப் போயிருக்கிறார். ரஷ்யாவுக்குப் போயிருக்கிறார். போலந்துக்குப் போயிருக்கிறார். அவர் நாடுமுழுவதும் சென்றிருக்கிறார்.
உலகின் பிற நாடுகளுக்குச் சென்றாலும் மணிப்பூருக்குச் செல்ல சில மணிநேரம் கூட அவருக்கு நேரமோ விருப்பமோ கிடைக்கவில்லை. பாராளுமன்ற தேர்தலில் மணிப்பூரில் பா.ஜ.கவை காங்கிரஸ் வீழ்த்தியது. அவர்கள் நல்ல வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர். பிரதமர் மணிப்பூர் செல்லவேண்டும் என நான் நினைக்கிறேன். அதுதான் மிக முக்கியமான தேவை.
பிரதமர் மோடி 16 மாதமாக மணிப்பூர் செல்லாதது ஏன்? மாநிலத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை காங்கிரஸ் விரும்புகிறது என தெரிவித்தார்.
- வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய பயணத்திற்கு புதிய வந்தே பாரத் ரெயில் சேவைகள் உதவும்.
- கோவில் நகரம் மதுரை, ஐடி நகரம் பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயில் சேவை.
வந்தே பாரத் ரெயில்கள் தொடக்க விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய பயணத்திற்கு புதிய வந்தே பாரத் ரெயில் சேவைகள் உதவும்.
புதிய வந்தே பாரத் ரெயில் சேவையால் தொழில்கள் வளரும். வேலைவாய்ப்புகள் பெருகும்.
கோவில் நகரம் மதுரை, ஐடி நகரம் பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயில் சேவை பெருமிதம் என கூறினார்.
இதைத்தொடர்ந்து சென்னை-நாகர்கோவில், மதுரை-பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
- சீனாவைப் பொறுத்தவரை, உங்களுக்கு இரட்டை புதிர் உள்ளது.
- நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் நாங்கள் அமைதியாக இருப்பவர்கள் அல்ல.
புதுடெல்லி:
இந்திய வெளியுறவு கொள்கைகள் தொடர்பாக முன்னாள் தூதர் ராஜீவ் சிக்ரி எழுதியுள்ள புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பங்கேற்ற மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவு குறித்து வெளிப்படையாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
உலகின் எந்த நாட்டிற்கும், அண்டை நாடுகள் எப்போதும் ஒரு புதிராகவும், அதே வேளையில் பெரிய சக்திகளாகவும் விளங்குகின்றன.
சீனாவைப் பொறுத்தவரை, உங்களுக்கு இரட்டை புதிர் உள்ளது. ஏனெனில் அது ஒரு அண்டை நாடு மற்றும் ஒரு பெரிய சக்தி. எனவே, சீனாவுடனான சவால்கள் இந்த இரட்டை வரையறைக்கு பொருந்தும்.
பாகிஸ்தானுடனான இடைவிடாத பேச்சுவார்த்தையின் சகாப்தம் முடிந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். பாகிஸ்தானின் செயல்களுக்கு விளைவுகள் உண்டு. காஷ்மீரைப் பொறுத்தவரை, சட்டப்பிரிவு 370 நிறைவேற்றப்பட்டுவிட்டது. அதில் மாற்றமில்லை. எனவே, பாகிஸ்தானுடன் என்ன வகையான உறவைப் பற்றி சிந்திக்கலாம் என்பதுதான் இன்றைய பிரச்சினை.
நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் நாங்கள் அமைதியாக இருப்பவர்கள் அல்ல. நிகழ்வுகள் நேர்மறையாக இருந்தாலும் எதிர்மறையாக இருந்தாலும் அதற்கு நாங்கள் எதிர்வினையாற்றுவோம்.
ஆப்கானிஸ்தானை பொறுத்தமட்டில், இந்திய-ஆப்கானிய மக்களுக்கு இடையேயான உறவு வலுவானதாக இருக்கிறது. ஆப்கான் சமூகத்தின் மீது இந்தியாவுக்கு நல்லெண்ணம் உள்ளது.
வங்காளதேசத்தைப் பொறுத்தவரை, அந்த நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து, அந்த நாட்டுடனான நமது உறவு மேலும் கீழுமாகவே இருந்துள்ளது.
தற்போது அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது பாதிப்பை ஏற்படுத்தலாம். அதேநேரத்தில், பரஸ்பர நலன்களை கண்டறிவதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.
இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.
- பாராளுமன்ற தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.
- பாஜக-வின் இந்த செயல் பின்வாசம் தந்திரம் என ஆம் ஆத்மி விமர்சித்துள்ளது.
டெல்லி அரசின் மதுபான கொள்கையை வகுத்ததிலும், அதை நடைமுறைப்படுத்தியதிலும் முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த புகார்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து சிறையில் அடைத்தது. இதை அடுத்து அவருக்கு பலமுறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.
இடையில் பாராளுமன்ற தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. மே மாதம் 10-ந்தேதி சிறையிலிருந்து வெளியே வந்த கெஜ்ரிவால், ஜூன் மாதம் 2-ந்தேதி மாலை திகார் சிறையில் சரணடைந்தார். முன்னதாக தனது இடைக்கால ஜாமினை நீட்டிக்க வேண்டும் என்றும் அவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். ஆனால், நீதிமன்றம் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது.
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு ஊழலில் சிக்கியிருப்பதாகவும், நிர்வாக சீர்கேடுகள் அதிகரித்துள்ள என்றும், இதன் மூலம் டெல்லியில் அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டு இருப்பதாக டெல்லி பா.ஜ.க. குற்றம்சாட்டியது.
இந்நிலையில் கெஜ்ரிவால் சிறையில் இருக்கும் நிலையில், "அரசியலமைப்பு நெருக்கடி" தொடர்பாக ஆம் ஆத்மி அரசை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லி பாஜக எம்எல்ஏக்கள் குழு நேற்று மாலை ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
இதற்கிடையே பாஜக-வின் இந்த செயல் பின்வாசம் தந்திரம் என ஆம் ஆத்மி விமர்சித்துள்ளது.
- எமர்ஜென்சி படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா நடித்துள்ளார்.
- வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி எமெர்ஜென்சி படம் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1975 ஜூன் 21 ஆம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடமானது 1977 மார்ச் 21 ஆம் தேதி வரை நீடித்தது. இந்த காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை மையாக வைத்து பாஜக எம்.பி கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள படம் எமர்ஜென்சி.
இதில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா நடித்துள்ளார். வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது.
இப்படத்தில் சீக்கியர்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதால் இப்படத்திற்கு வழங்கப்பட்ட சென்சார் சான்றிதழை ரத்து செய்து படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று சிரோன்மணி அகாலிதளம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் டெல்லி பிரிவு தலைவர் பரம்ஜித் சிங் சர்னா, மத்திய சென்சார் போர்டு தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்
மேலும் எமர்ஜென்சி படத்தின் தயாரிப்பு நிறுவனமான மணிகர்னிகா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சீக்கியர்களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கங்கனா, வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்திய விவசாயிகளை காலிஸ்தான் பிரிவினைவாதிகள் என்று முன்பு விமர்சித்திருந்தார்.
அண்மையில், நாளிதழுக்குபேட்டி அளித்த கங்கனா ரனாவத், விவசாயிகள் போராட்டம் குறித்து மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
அதில், விவசாயிகள் போராட்டத்தை தடுக்க மத்திய அரசு வலுவான நடவடிக்கையை எடுக்காமல் போயிருந்தால் வங்கதேசத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள் இந்தியாவிலும் நடந்திருக்கும். விவசாயிகள் போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தலும், கொலைகளும் அரங்கேறின. படுகொலை செய்து தூக்கிலிட்ட சம்பவங்களும் நடந்தன. அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றிருக்காவிட்டால் அவர்கள் நாட்டில் எதையும் செய்திருக்கக் கூடும் என தெரிவித்திருந்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தீவு நாடான புரூனேவுடன் இந்தியா தூதரக உறவுகளை பேணி வருகிறது.
- இந்திய பிரதமர் ஒருவர் புரூனேவுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.
புதுடெல்லி:
தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தீவு நாடான புரூனேவுடன் இந்தியா தூதரக உறவுகளை பேணி வருகிறது.
குறிப்பாக இரு நாடுகளுக்கு இடையே தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்ட 40-வது ஆண்டு தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி பிரதமர் மோடி அரசு முறை பயணமாக புரூனே செல்கிறார். வருகிற 3 மற்றும் 4-ந்தேதிகளில் புரூனேயில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இந்திய பிரதமர் ஒருவர் புரூனேவுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.
புரூனே பயணத்தை முடித்து விட்டு 4-ந்தேதி பிரதமர் மோடி சிங்கப்பூருக்கும் செல்கிறார்.
5-ந்தேதி வரை சிங்கப்பூரில் இருக்கும் பிரதமர் மோடி அந்த நாட்டு அதிபர் மற்றும் பிரதமரை சந்தித்து பல்வேறு துறை சார்ந்த உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.






