என் மலர்tooltip icon

    இந்தியா

    Rahul Gandhi
    X

    3 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா செல்லும் ராகுல் காந்தி

    • ராகுல் காந்தி 8-ந்தேதி டல்லாஸ் நகரிலும், 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் வாஷிங்டன்னிலும் இருப்பார்.
    • ராகுல் காந்திக்காக நிறைய நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி வருகிற 8 முதல் 10-ந் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

    இந்த பயணத்தின்போது டல்லாஸ் மற்றும் வாஷிங்டன் ஆகிய நகரங்களுக்கு செல்லும் ராகுல் காந்தி மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுடனும், இந்திய வம்சாவளி மக்களுடனும் உரையாடல்களை நடத்த உள்ளார்.

    இது குறித்து காங்கிரஸ் சர்வதேச பிரிவின் தலைவர் சாம் பிடோர்டா கூறியதாவது:-

    32 நாடுகளில் இருக்கும் காங்கிரஸ் சர்வதேச பிரிவின் தலைவர் என்கிற முறையில் என்னிடம் அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினர், தூதர்கள், கல்வியாளர்கள், தொழில் அதிபர்கள், தலைவர்கள், சர்வதேச ஊடகங்கள் மற்றும் பலரிடம் இருந்து ஏராளமான கோரிக்கைகள் குவிந்தன. எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கை.

    அதை நிறைவேற்றும் விதமாக ராகுல் காந்தி மிக குறுகிய பயணமாக அமெரிக்கா வருகிறார். அவர் 8-ந்தேதி டல்லாஸ் நகரிலும், 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் வாஷிங்டன்னிலும் இருப்பார்.

    டல்லாசில், டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் ராகுல் காந்தி, கல்வியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களையும் சந்திப்பார். இந்திய வம்சாவளியினருடன் மிகப்பெரிய சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அடுத்த நாள் ராகுல் காந்தி வாஷிங்டன் நகருக்கு செல்வார். அங்கு சிந்தனை குழுக்கள், பத்திரிகையாளர் அமைப்பு மற்றும் பிற அமைப்புகளுடன் அவர் கலந்துரையாடல்களை நடத்துவார்.

    ராகுல் காந்திக்காக நிறைய நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த வருகையை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். டல்லாஸ் மற்றும் வாஷிங்டனில் உள்ள அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த இந்திய வம்சாவளியினர் ராகுல் காந்தியை வரவேற்கவும், அவருடன் உரையாடவும் ஆர்வமாக உள்ளனர்.

    இவ்வாறு சாம் பிடோர்டா கூறினார்.

    Next Story
    ×